ஆயிரங்காய்ச்சி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 27, 2023
பார்வையிட்டோர்: 1,672 
 
 

தை மாத காலை பனியோடு, மஞ்சள் வாசனை கலந்து நாசியில் ஏறியது. ஒருமுறை மூச்சை ஆழ இழுத்து நுரையீரலை நிரப்பிக் கொண்டான். மஞ்சள் பிடுங்கிய காட்டில் வெறும் காலில் நடப்பது அவனுக்கு பிடித்தமானது. மஞ்சள் பிடுங்கிய பூமியிலிருந்து, மிக மெல்லிய வெப்பம் வெளியேறிக் கொண்டிருந்தது. வாயில் வைத்திருந்த ஆலங்குச்சியின் துவர்ப்பு தொண்டை வரை இறங்கியது. தூரத்தில் மணி ஓடி வருவது தெரிந்தது. எப்படியும் ஆயிரங்காய்ச்சியைப் பற்றிய தகவலாகத்தான் இருக்கும்.

‘பாத்துடா மொல்ல வா’

‘மாமா… மாமா…’ இன்னும் மூச்சிரைப்பு நின்றபாடு இல்லை.

‘மொல்ல பாத்துவான்னுதான சொன்னேன். அப்படி என்ன அவசரம்?’

‘மா…மா… ஆயிரங்காய்ச்சி கொலை தள்ள போகுது. இப்பதான் பார்த்தேன்’

அவனுக்கு ஆயிரங்காய்ச்சியின் மேல் அப்படி ஒரு பிரியம். போன தையில்தான் ஆரம்பித்தான்.

“மாமா, வாங்க மாமா, அந்த முக்கு ஊட்டுல ஆயிரங்காய்ச்சி இருக்காமாம். நாம போய் கேட்டு வாங்கியாரலாம்.’

அது ஒரு அக்ரிகல்ச்சர் ஆபிசர் வீடு. விதவிதமாய் மரங்கள் சூழ, நடுவே வீடு ஒய்யாரமாய் வீற்றிருக்கும். வாசலில் செண்பக பூ மரங்கள் வரவேற்கும். நாவல் பழத்திலேயே மூன்றுவகை இங்கே பார்க்கலாம். அதில் ஒருவகைக்கு கொட்டை இருக்காது. பருவத்திற்கு ஏற்ப விளையும் பழங்களையும் விற்பார்கள்.

ஒருவழியாய் பங்குனி மாத ஆரம்பத்தில் முருகேசன் மனமிறங்கி வந்தான். என்னவோ முருகேசனுக்கு அவர்களின் வீட்டிற்குப் போகத் தயக்கம். சிறு பையன் என்றெல்லாம் பார்க்க மாட்டார்கள். எப்படியும் பணம் வாங்கிக்கொண்டுதான் வாழைக் கன்றைத் தருவார்கள் என அவனுக்குத் தெரியும். அதனாலேயே சுற்றுவட்டாரத்தில் ஆயிரங்காய்ச்சியை அலசி பார்த்தான். மலைமேல் ஆசனூரில் ஆயிரங்காய்ச்சி உண்டு எனக் கேள்விப்பட்டான். கீழே எங்கும் அகப்படவில்லை என்றுதான் இறங்கி வந்தான். மணி கன்றை எடுக்கப் போகும் போது ஏகப்பட்ட கேள்விகள் கேட்டுக் கொண்டே வந்தான்.

‘மாமா, நெசமாவே ஆயிரம் பழம் காய்க்குமா?’

‘அது தெரியலடா, ஆயிரங்காய்ச்சின்னு ஒரு தென்னை வகை இருக்கு. விவசாய பண்ணையில பாத்திருக்கேன். நிறைய காய் பிடிக்கும் அதனால அப்படி பேரு. ஒருவேளை இதுவும் அப்படி நிறைய காய் பிடிக்குமா இருக்கும். ஆயிரம் காயின்னு எல்லாம் சொல்ல முடியாது.’

‘உசரமா வளருமா?’

‘எவ்வளவு உசரம்… நம்ம ஊடு அளவுக்கு உசரம் இருக்குமா?’

‘எலை அறுக்கக் கூடாதா?’

முருகேசனுக்கு சிரிப்பும், அதிசயமுமாய் இருந்தது. ஐந்தாவது படிக்கும் பையனுக்கு இவ்வளவு ஆர்வமா, ஒரு வாழைக் கன்றின் மீது! பொருள் மீது நாம் கொண்ட பற்று எல்லாம் பொருள் இல்லாத பற்றுதானோ…

‘டேய் மணி, நீயும் படிச்சு அந்த அக்ரிகல்சர் ஆபீசர் மாதிரியே, பெரிய ஆபிஸர் ஆயிடறியா? நீயும் இப்படி நிறைய மரம் வச்சு வீடு கட்டலாம்.’

‘ஆமாம் மாமா பெரியவனாயி, ஒரு தோட்டத்துக்கு நடுவுல ஊடு கட்டணும். சுத்தி எல்லாம் மரமும் வேணும். இந்த ஆயிரங்காய்ச்சிதான் முதல் மரம்.’

பேச்சு எந்த வகையிலும் ஆயிரங்காய்ச்சியை விட்டு விலகுவதாயில்லை. நினைத்த மாதிரியே 350 ரூபாய் வாங்கிக் கொண்டுதான் ஆயிரங்காய்ச்சி கன்றைக் கொடுத்தார்கள்.

மணி, சைக்கிளில் குரங்கு பெடல் அடித்துக்கொண்டு, எங்கிருந்தோ செம்மண்ணைக் கொண்டு வந்து கொட்டினான். மாதத்துக்கு ஒரு முறை ஏதாவது ஒரு உரத்தைக் கொடுப்பதும் அவனது வழக்கமாகிப் போயிற்று. மணியும் முருகேசனும் எதிரெதிர் வீடுதான். மணிக்கு ஆயிரங்காய்ச்சியை விடவும் ஒரு படி மேல் பிரியம் முருகேசன் மீது. அவன் கம்ப்யூட்டரில் வரையும், துணிகளுக்கான டிசைனை ஆர்வமாகப் பார்ப்பான். பள்ளிக்கூட நேரம், படிப்பு போக ‘மாமா’ என முருகேசன் பின்னாடியே சுற்றிக் கொண்டிருப்பான். முருகேசனுக்கும் அவனென்றால் தனி பாசம். எல்லாவற்றுக்கும் மணிதான் வேண்டும். மணியைக் கூட்டிக்கொண்டு வெளியே செல்லாத நாட்களே கிடையாது. மணியின் வீட்டுக்குப் பக்கத்தில் ஒரு காலி வீட்டு மனையில்தான் ஆயிரங்காய்ச்சியை நட்டிருந்தான். மணியின் வீட்டுசுற்றுச் சுவற்றின் ஓரமாக ஆயிரங்காய்ச்சி தழைத்து நின்றது.

நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக ஆயிரங்காய்ச்சி வளர்ந்து சிறு வாழையாகி நின்றது.

அன்று அமாவாசை. மணியின் ஆயா சிறு இலையை அறுத்து படையல் போட்டு விட்டார். சாயங்காலம் மணி வந்ததிலிருந்து ஓரியாட்டம்தான்.

‘ஏண்டா, ஒத்த இலைய அறுத்ததுக்கா, இப்படி எச்சங்கட்டிட்டு இருக்குற…’ மணியின் அம்மா சமாதானத்தை மீறி புலம்ப ஆரம்பித்திருந்தார்.

‘தாத்தாவுக்கு படசல் போடத்தானே கண்ணு அறுத்தேன். தாத்தா நல்லபடியா ஆயிரங்காய்ச்சிய பாத்துப்பாரு கண்ணு. வெறும் வவுத்தோட படுத்தா, உடம்புக்கு ஆவாது கண்ணு. ஒரு வாய் சாப்புடு சாமி. எஞ்ஞாமில்ல…’

நள்ளிரவு வரை சமாதானம் செய்து கொண்டிருந்தார் ஆயா.

அந்த ஆயிரங்காய்ச்சிதான் இப்பொழுது குலை தள்ளியிருந்தது.

‘மாமா, எப்போ பூ வெளில தெரியும்?’ என வழக்கம்போல முருகேசனை கேள்விகளால் துளைத்துக் கொண்டிருந்தான்.

பூ வெளியே தள்ளி மலரத் தொடங்கியது. ஆயிரங்காய்ச்சியின் அருகில் போனாலே துவர்ப்பு வாசனையை உணர முடிந்தது. வாழைப்பூ காயாக மாறத் தொடங்கிய அதிசயத்தைக் கண்ட மணிக்கு கால்கள் தரையிலேயே படவில்லை. பள்ளிக்கூடத்து பசங்களை எல்லாம் கூட்டி வந்து காட்டினான். பெருமைக்கு அளவே இல்லை. தினமும் கொஞ்ச நேரம் ஆயிரங்காய்ச்சியை கட்டிப்பிடித்து ஏதோ ரகசியம் பேசினான். சில சமயம் தடவி கொடுத்துக்கொண்டே இருப்பான். முருகேசனுக்கு குழந்தைகள் போல அன்பு செலுத்த பெரியவர்களால் முடியவே முடியாது எனத் தோன்றியது. பாதி காயும் மீதி பூவுமாய் செழித்து நின்றது ஆயிரங்காய்ச்சி. பூக்களில் இருந்து தேன் சொட்டத் தொடங்கி இருந்தது. சிறு வண்டுகளும், தேனீக்களும், தேனெறும்பும் மொய்த்துக் கொண்டிருந்தன. ஒரு மலர்தல் எத்தனை உயிர்களை ஈர்த்து விடுகின்றன! அகம் மலர்ந்தாலும் இப்படித்தானே இருக்கும். மணியின் உள்ளங்கையைப் பிடித்து பூவுக்கு நேர் கீழே நீட்டினான். சில தேன் சொட்டுக்கள் விழுந்தன.

‘தேன்தான். சாப்பிட்டு பாரு எப்படி இருக்குன்னு சொல்லு’

தேனின் நிறம் இல்லாமல், தண்ணீரைப் போல இருந்தது. நுனி நாக்கில் சுவைத்தவன்,

‘இனிப்பாவும் இருக்கு, எப்படியோவும் இருக்கு மாமா. தேன் மாதிரியே இல்லையே…’

‘அது எப்படியோ இல்லடா. சிறுங்கசப்பு, வாழையோட சிறுந்துவர்ப்பு வாசனை, லேசா இனிப்பு இதெல்லாம் கலந்து இருக்கும். இப்படித்தான் ஒவ்வொரு பூவோட தேனும் அதோட தனித்தன்மையோட இருக்கும். இந்த தேனீ அதை எடுத்துட்டு போயி நொதிக்க வச்சு, கூட்டில வைக்கறதுனாலதான், அந்த தேன் வேற மாதிரி இருக்கு.’

‘அப்போ இதுதான் உண்மையான தேனா…’

‘அப்படியும் சொல்லலாம். மனுசப்பயலுகளுக்குக்கூட இப்படித்தான் தனித்தனியான வாசனையும், குணமும் இருக்கு. என்ன… நேரத்துக்கு தக்கன அது மாறிட்டே இருக்கும். ‘

பூ முழுக்க காயாகி நின்றது. வேற எந்த வாழையின் பூவும் பாதியிலேயே நின்றுவிடும். இப்படி பூ முழுக்க காயாகி நின்றிருந்ததை முருகேசன் கூட வாழ்க்கையில் அப்பொழுதுதான் முதன் முறையாகப் பார்த்தான். வழக்கமான வாழைத்தாரை விட கிட்டத்தட்ட இரண்டு மடங்கு பெரிதாக இருந்தது. தாரை வெட்டி நிற்க வைத்தால் மணியின் உயரமே வரும். ஆயிரங்காய்ச்சியின் தனி குணமாக இருக்கலாம். மணி அவ்வப்போது காய்களை எண்ணத் தொடங்குவான். மணியின் அம்மாவோ, ஆயாவோ வந்து சத்தம் போட்டார்கள்.

‘காய எண்ணுனா, காய் கொறஞ்சு போய்டும்டா. தார் அறுத்தவாட்டி எண்ணிக்கலாம்.’

பத்து,பதினோரு மாதம் வாழையின் தவத்தில், காய் திரண்டு தார் வெட்டும் பருவத்தை வந்தடைந்திருந்தது.

‘என்ன மணி, என்னைக்கு தார அறுக்கப் போற…’

‘அமாவாசைக்கு சாமி கும்பிடும் போது அறுத்துக்கலாம்னு ஆயா சொன்னாங்க மாமா. அதுக்குள்ளார அத்தை ஊரு திருவிழாவுக்கும் போயிட்டு வந்துடுவேன்.’

அன்று மாலை முருகேசன் உள்நுழையும்போதே ஒரு சீப்பு ஆயிரங்காய்ச்சி மேசை மேலிருந்தது.

‘அம்மா மணி வந்துட்டானா? எப்ப வந்தான்? அமாவாசைக்குத்தானே அறுக்கறேன்னு சொன்னான்.’

‘அதை ஏண்டா கேக்குற… இன்னிக்கு சாயங்காலம் மணியோட சித்தப்பா வந்து வாழைத்தார அறுத்துட்டு இருந்தாரு. சரி மணியோட அத்தை வீட்டுக்கு எடுத்துட்டு போவாங்க போலன்னு நானும் ஒன்னும் கேட்காம உள்ள வந்துட்டேன். சட்டுனு ஏதோ தோனுச்சு மணி சித்தப்பா இப்படியா இருப்பாருன்னு.’

‘ஏங்க யார் நீங்க? வாழைத்தார அறுத்துட்டு இருக்கீங்க…’

‘ஏம்மா, இப்படி பழம் தெரண்டு நிக்குது. இன்னும் அறுக்காம வைச்சிருக்காங்க. இதுக்கு மேல விட்டா, பழம் பழுத்து குருவிதான் கொத்தி திங்கும்.’

‘அதை மரத்த வெச்சவங்க பாத்துப்பாங்க. நீங்க ஏன் அறுக்கறிங்க? வைச்சவங்க அறுக்கலைன்னா, வரவங்க, போறவங்க எல்லாம் அறுக்கிறதா?’

‘வரவங்க, போறவங்களா… என்னோட நிலத்துல வச்சு ஆரு வளர்க்கச் சொன்னது?’

‘இந்த நிலத்துக்கார தம்பியா… தம்பி, அந்த சின்ன பையன் வச்சு சீராட்டி வளர்த்தான். ஊருக்கு போயிருக்கான். வந்து பார்த்தா பொக்குன்னு போய்டுவான். விட்டுடுங்க தம்பி…’

‘அவனவன் நெலத்தில வச்சு சீராட்டி, பாலூட்டி வளர்க்க வேண்டியதுதான… என் நெலத்துல இருந்தா, நாந்தான் அறுப்பேன்.’

‘நான் எவ்வளவு சொல்லியும் கேக்கலடா. வாழத்தாரக் கொத்தா அறுத்துட்டு, ஒரு சீப்பு வாழைப்பழத்தை கொண்டு வந்து வாசல்ல வச்சுட்டு, “அந்த பையன் வந்தாக் கொடுத்துடுங்க, என் வீட்லயும் சின்ன புள்ளைக இருக்கு”ன்னு போயிட்டான்.’

முருகேசனுக்கு என்ன செய்வது என விளங்கவில்லை. மணி நாளை வந்து விடுவான். முருகேசன் வெளியே வந்து பார்த்தான். ஆயிரங்காய்ச்சி வெற்று மரமாய் நின்றிருந்தது பக்க கன்றுகளோடு.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *