பூக்குளிப்பு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 25, 2024
பார்வையிட்டோர்: 921 
 
 

(2003ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கண்ணுக்குத் தெரியாத சாட்டைகள் தமிழனையே இலக்காகக் கொண்டு வீசப்பட்டன. அவற்றில் ஒன்றுதான் அந்தப் பொருளாதாரத் தடை! 

எறும்பு போல இவள் தபாற் கந்தோரில் ஒவ்வொரு ரூபாயாய்ச் சேமித்து வைத்து என்ன பயன்? தபாற்கந்தோர் திறப்பதில்லை. அத்தி பூத்தாற் போலத் திறந்தாலும் “காசில்லை” என்று கை விரிக்கிறார்கள். முத்திரையே இல்லாதவர்களிடம் காசு எப்படி இருக்கும்? 

இரவு முழுவதும் ஒரே அட்டகாசம்… பதினாறு திக்கிலும் கேட்ட பொம்மர் குண்டு வீச்சுக்கள்… ஹெலி தீர்த்துக் கட்டிய கலிபர் தாக்கு தல்கள்! 

இரவு முடிந்து வருகிற இந்த விடிகாலைப் பொழுதில் கூட ஒரு கண்தூங்க முடியவில்லை. இறக்கை அடித்துச் சேவல் கூவும் சத்தத் திற்குக் கூட இதயம் ஒரு முறை உறைந்து மீளுகிறது. சத்தம் இன்றி இடைவெளியாகும் ஓரிரு நிமிடங்களில் கூட, நிசப்தமே பேரொலியாய் உள்ளத்தை ஊடறுக்கிறது. காற்றின் ஒவ்வொரு அசைவிலும் காலன் வருவதாய்க் கனவு வருகிறது. பயம்… பயம்… விபரிக்க முடியாத பயம்! 

இரவில் விடிவிளக்கு வைத்துக் கொண்டு தூங்குவதே சிறு குழந்தைக்காலம் முதல் இவளுடைய பழக்கம். பயங்கரக்கனவு கண்டு கண் விழிக்கும் போதும், மினுக்கு மினுக்கென்று ஒரு சிறு வெளிச்சம் தெரிந்தால் நிம்மதியாக இருக்கும். கிராமத்திற்கு எழுபதுகளின் பிற் பகுதியில் மின்சாரம் வந்த பிறகு, அவள் அறையில் நீல நிறத்தில் ஒரு “பெட்றூம் லைற்” கட்டாயம் எரியும். மின்சாரம் முற்றாகக் கொலை செய்யப்பட்டு, மண்ணெய்யும் இருநூற்று நாற்பது ரூபா விற்கிற இந்த நேரத்தில்…..இரவு முழுவதும் இருள் மயம்! இருளில் பல உருவங்கள் நடமாடுவது போல இருக்கும். இருட்டில் நிறம் தெரியாதாயினும் அவை பச்சை உடை போட்டது போலத் தோன்றும். 

இரவின் தனிமை பயங்கரமாக மனதை அறுக்கும். வாழ்க்கை முழுவதும் அனுபவித்த துக்கங்களும், அவமானங்களும், தோல்வி களும், ஏக்கங்களும் ஒரு சேர இக்கணத்தில் குவிந்து விட்டது போல மனம் பாரம் சுமக்கும். எதுவுமே செய்ய, எதுவுமே நினைக்கக் கூட மனமில்லாத மனச்சோர்வு இதயமெங்கும் பரவும். 

எழுந்து கண்ணாடியில் முகம் பார்த்தாள். ஓ… அவள் எவ்வளவு சோகித்துப் போய்விட்டாள்? கண்கள் வெளிறிப் போய்க்கிடந்தன. அதன் ஒளியை வயதும் துன்பமும் கொண்டு போய் விட்டன. உணவில் இரும்புச் சத்துச் சேர்ந்தும் கன காலம் ஆகி இருக்கலாம். 

நேற்று முழுவதும் தேநீர் அருந்தவில்லை. தேநீர் அருந்துவது ஆங்கிலேயரோடு வந்த பழக்கமாயினும், சீனி அதிகமாய்த் தேவைப் படுகிற அந்தப் பழக்கத்தை விட்டுவிடலாம் என்று முனைகிற போது, ஏதோ சொல்ல முடியாத களைப்பு ஏற்படுவது போல மனம் உணருகிறது. யுத்தம் தருகிற மன அழுத்தம் காரணமாகச் சலரோகம் வந்து…. அதன் பின் சீனியை முற்றாக விட்டு விடும் படி வைத்தியர்கள் சொல்லும் போது, விடவேண்டியது தான்! இப்போது மனம் போராடுகிறது. எல்லாம் மனம் தான். சொர்க்கமும் இந்த மனத்துக்குள்ளே தான் இருக்கிறது. நர கமும் இதற்குள் தான் மறைந்திருக்கிறது. 

சிகரெட்டையும், மதுபானங்களையும், போதைப் பொருள்களை யும் மட்டுமல்ல. தேயிலையையும் குடாநாட்டுக்குள் வராமல் தடுத்தால் நல்லதென்று ஒரு கணம் நினைத்தாள். அப்போது மனம் பழகும்! மோரை, இளநீரை, பழஞ்சோற்று நீரை அல்லது கஞ்சியைக் குடித்துப் பழகும். 

திரும்பிக் கதவை அடையு முன்பே வெடித்துப் பொங்கிச் சரிந்தாள்! மனதிற்குள் தான்! 

மனதில் ஒரு மரம் வேரொடு சாய்ந்திருந்தது. கண்ணுக்குள்ளே அம்பு மாதிரித் துளைக்கிற அந்தப் பார்வையுடன் இருந்த அவனை அப் போது அடைந்திருந்தால் இந்தத் தனிமை வாழ்வு அமைந்திருக்காது என்ற நினைப்புக் கசப்புடன் தவிர்க்க முடியாமல் வந்தது. வெளி அழுத் தம் பல உள் அழுத்தங்களைப் பூத்து எழச் செய்திருந்தது. சிந்திப்ப தற்கு நேரம் கொடுக்காது, வேலைகளில் மூழ்கிப் போய் விட்டால் மன அரிப்பில் இருந்து தப்பலாம் என்று உணர்ந்தவளாய், இருள் விலக முதல், பனங்காணிக்குள் நுழைந்து பனங்காய்களைப் பொறுக்கி எடுத் தாள். நடத்தையில் மாற்றத்தை வலிந்து ஏற்படுத்திய போது, உணர் வுகளிலும் சிறிது முன்னேற்றம் தெரிந்தது. 

மின்சாரம் இல்லை என்பதனால் மின் தறியில் இவள் வேலை செய்யப் போகவில்லை என்பதற்காய், “இவ்வளவு தானா நீ?” என்று மனச்சாட்சி அரிக்க, மூலையில் அமர்ந்துவிட வேண்டுமா என்று உற்சாக மாய் ஒரு சிறு எண்ணம் தலை தூக்கியது. 

மெலிதாய் முளைத்த மனவலிமை மறையான மன உணர்வு களைத் தூக்கி எறிந்தது. “சுப்பர் ஈகோ” மெதுவாய்க் கண் விழித்துப் பார்த்தது. பாணிப்பனாட்டு, பனங்காய்ப் பணியாரம், புழுக்கொடியல் செய் யும் பெருந்திட்டம் ஒன்று மனதில் வந்து போனது. 

மந்தை மேயும் புல் வெளிகளினூடே தன் நினைவுகளுடன் அவள் நடந்து வந்தாள். மாலையில் அவளுடைய ஆடுகளை இங்கே கூட்டி வர வேண்டும். 

அவனுடைய முகம் புகைபோல அழுத்தமில்லாமல் நினைவுக்கு வந்தது. அதை அழுத்தித் துடைத்து எறிந்தாள். 

கோலம், கோபுரம், புடவை, சினிமா, கற்பு, கணவன்… இதைப் போன்ற சொற்களுக்குத் தான் அந்நியமாகிப் போய் விட்டது பற்றி ஏன் இவ்வளவு உணர்ச்சி வசப்படல் என்று ஒரு கணம் வியந்தாள். 

வைரவர் கோயிலைக் கடந்து வந்த போது கோயில் வாசலில் அழுதபடி நிற்கும் ஒரு நடுத்தர வயதுப் பெண் தெரிந்தாள். இவள் அவளை அணுகி விசாரித்த போது அந்தப் பெண்ணின் கணவன் காணாமல் போய் விட்டது தெரிந்தது. ஒரு வருடத்துக்கு மேலாகி விட்ட தால் தகவல் ஒன்றுமில்லையாம். சாத்திரக் காரர்கள் “இருக்கிறார்” என்று தீர்மானமாய்ச் சொல்லுகிறார்களாம். கணவன் செத்த பிறகும் பூவும் பொட்டுமாய் “சீவிச்சிங்காரித்துத் திரியிறா” என்று ஊர் கதைக் கிறதாம். 

வைரவரிடம் சொல்லி அழுது கொண்டிருந்தவள் இவள் கேட்ட வுடன் இவளிடம் சொல்லிச் சொல்லி அழுதாள். அவளது உணர்வு களைப் புரிந்து கொண்டு ஒத்துணர்வுப் பதில்களை வழங்குவது இவளுக்குக் கஷ்டமாக இருக்கவில்லை. ஏனென்றால் இவள் தனது உணர்வு களைப் புரிந்து கொண்டவளாக இருந்தாள். 

அவளைப் புரிந்து கொள்ள முயன்ற போது தனது கவலையும் மனச் சோர்வும் மேலும் குறைந்து போனதைத் தெளிவாக உணர்ந்தாள். அவளை அணைத்துத் தன்னோடு வீட்டுக்கு அழைத்து வந்தாள். 

பகல் பன்னிரண்டு மணி இருக்கும்! 

“படபட” என்று எல்லாத் திசைகளிலும் துவக்கு வெடி! சீ துவக்கு வெடியாய் இருக்க முடியாது. முந்திரிகைக் காவல் வெடிகளோ? எப்படித் திடீரென்று எல்லாத் திசைகளிலும் முந்திரிகைத் தோட்டங்கள் முளைக்கும்? 

“கோட்டையைப் பிடிச்சாச்சா மடா!” யாரோ ஒருவன் சைக்கிளில் வேகமாய்ப் பறந்தான். அவனுக்கு எதிரே பின்னுக்கு மனைவியும் பாரில் இரண்டு பிள்ளைகளுமாய், குடும்ப பாரத்தையே சைக்கிளில் ஏற்றி விளக்கிக் கொண்டு வந்தவர் கூட… சிரித்துக் கொண்டு போவது போலத் தெரிந்தது. 

இவளையும் ஏதோ ஒன்று தொற்றிக் கொண்டது. “மனக் கோட்டை யைப் பிடித்து விட வேண்டும்” என்ற எண்ணம் பல முறை வந்து போனது. காணாமல் போனவனை அவள் மட்டுமல்ல இவளும் தேடியாக வேண்டும். 

அப்பொழுது தான் வடித்தெடுத்த பனங்காய்ப் பணியாரங்களை அவசரமாய் இரண்டு பைகளில் போட்டு எடுத்துக் கொண்டாள். முதலா வதை “வைரவரிடம் சொல்லி அழுதவளிடம்” கொடுத்தாள். 

“அக்கா இதைக் கொண்டு போய்ச் சாப்பிடுங்கோ” காய்ந்த பனாட் டுத் துண்டுகளை இன்னொரு பையில் போட்டு எடுத்துக் கொண்டு, பவ் யம், விசுவாசம், மரியாதை எல்லாம் சேர்ந்தொரு வடிவம் எடுத்தாற் போல, இரண்டு பைகளுடன் வீதிக்கு வந்தாள். 

“தம்பி இதைக் கொண்டு போய்ச் சாப்பிடுங்கோ” சைக்கிளில் போய்க் கொண்டிருந்த போராளி ஒருவரின் கையில் வலுக்கட்டாயமாய்த் திணித்தாள். 

மீண்டும் வீட்டு முற்றத்துக்குத் திரும்பிய போது அவள் முற் றத்தில் குந்தியிருப்பதை அவதானித்தாள். 

“அக்கா எழும்புங்கோ பனங்கிழங்கு அவிப்பம்” என்று அவளுக்கு உற்சாக மூட்டினாள். 

“அவிச்சுப் போட்டுக் காணாமல் போனோர் சங்கக் கூட்டத்துக்குப் போக வேணும். எங்களைப் போலை ஆக்களை எல்லாம் அடிக்கடி ஒண் டாச் சந்திச்சமெண்டால், ஒராள் மற்ற ஆளுக்கு நல்ல ஆறுதலாய் இருப் பம். எல்லாரும் சேர்ந்து எல்லாருக்குமாய் உழைப்பம்… எழும்பி வெளிக் கிடுங்கோ.” 

என்று கூறி அன்புடன் அவள் தோளைத் தொட்டாள். 

அவளது முகத்தில் மெல்லிய முறுவல் தெரிந்தபோது மனம் எல் லாம் சொட்டச் சொட்ட நனைந்து பூவில் குளித்த மாதிரி உணர்ந்தாள். 

அப்போது சொல்லி வைத்தாற் போல அந்தக் கனவு திடீரென நினைவுக்கு வந்தது. கனவிலே அவள் எங்கோ போய்க் கொண்டி ருக்கிறாள். போக வேண்டிய கட்டடத்தைச் சுற்றி வெள்ளம் நிற்கிறது. கட்டடத்தை அடைய வேண்டுமாயின் முழங்காலுக்கு மேல் நிற்கும் வெள்ளத்தில் இறங்க வேண்டும். சேலை நனைந்து விடும் என்று பார்க்க முடியாது. சேலையைத் தூக்கிப் பிடித்தால் கால் தெரியும் என்று நினைக்க முடியாது. சேலையை ஒரு கையால் தூக்கிக் கொண்டு அவள் நீரில் இறங்குகிறாள். அப்போது எங்கிருந்தோ காற்றில் பறந்து வரும் பூ இதழ்கள் அவள் மேல் விழுகின்றன. முழுப் பூக்களும் விழுகின்றன. முழுப் பூக்கள் சிலவற்றில் காம்பில் முள் இருக்கிறது. அந்த முள் தன்னைக் குத்தி விடுமோ என்று இவள் பயப்படுகிறாள். 

“அது கனவு தானே” என்ற தெளிவு வர இவள் மெதுவாய்ச் சிரித்துக் கொண்டாள். 

– வலம்புரி 14-03-2003

– வரிக்குயில்(சிறுகதைத் தொகுதி), முதற் பதிப்பு: நவம்பர் 2016, கலை இலக்கியக்களம், தெல்லிப்பழை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *