கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: July 2, 2023
பார்வையிட்டோர்: 4,543 
 

 (1997ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

குருத்து 1-3 | குருத்து 4-6 | குருத்து 7-9

குருத்து நான்கு 

கல்லூரி ஆண்டு விழா முடிவுற்று ஐந்து நாட்கள் கூட ஆகவில்லை.பாரதியும் ராஜாவும் இதற்குள் மூன்று முறை சந்தித்து விட்டதுமன்றி வெகுநாளைய சிநேகிதர்களைப்போல் பழகவும் தொடங்கிவிட்டனர். 

அவர்களுடைய சந்திப்புகள் முன் கூட்டியே பேசி வைத்துக்கொண்டவை அல்ல. ரகசியமானதும் அல்ல. இயற் கையாக, சகஜமாக அவர்களே எதிர்பாராமல் ஏற்பட்டவை தான். ஒருவரையொருவர் சந்திக்க வேண்டுமென்ற ஆவல் அவர்கள் உள்ளத்தில் இருந்தது என்னவோ உண்மைதான். ஆயினும் அதற்காக அவர்கள் எவ்வித முயற்சியும் எடுத்துக் கொள்ளவில்லை. 

வெள்ளிக்கிழமையன்று கூட வகுப்புக்கு மட்டம் போட்டு விட்டு, வெளியே போக வேண்டுமெனப் பாரதி எண்ண வில்லை. அப்படிச் செல்வது அவள் வழக்கமுமில்லை.அன்று அவளைத் தூண்டி இழுத்தவள் அதே கல்லூரியில் வேறொரு பிரிவில் படிக்கும் அவளுடைய சிநேகிதி மிஸ் டூலிப்தான். அந்த ஆங்கிலோ இந்தியப் பெண்ணுக்கு அன்று பிறந்த தினமாகையால், பாரதியை அவள் ஐஸ் கிரீம் பார்லருக்கு வரவேண்டுமென்று கட்டாயப்படுத்தினாள். 

“இன்று என்னுடைய ‘பர்த்டே’; உனக்கு ஆல்மண்ட் க்ரீம் வாங்கித் தரப்போகிறேன். அப்புறம் இரண்டு பேரு மாகச் சினிமாவுக்குப் போகலாம்” என்றாள் டூலிப் ஐஸ்கிரீம் ஆசை எந்தப் பெண்ணைத்தான் விட்டது? ‘ஆல்மண்ட் க்ரீம்’ என்றதுமே பாரதி நாக்கில் ஜலம் ஊற, “ஹய்யா… வெரிகுட்!” என்றாள். அப்புறம் சினிமாவுக்கும் போகலாம் என்று டூலிப் கூறிய போது, “என்ன பிக்சர்?” என்று கேட்டாள் பாரதி. 

“லவ் ஆன் தி ஹவாய் பிரிட்ஜ்,” என்றாள் டூலிப். 

படத்தின் பெயர் கவர்ச்சிகரமாகத்தான் இருந்தது. ஆனாலும் பிரின்ஸிபாலுக்குத் தெரிந்துவிட்டால் என்பதை எண்ணியபோது பாரதிக்குப் பகீர் என்றது. 

“எனக்கு இப்போது ஜாக்ரபி க்ளாஸ் இருக்கு டூலிப்! எக்ஸ்க்யூஸ்மி” என்றாள் பாரதி. 

“பரவாயில்லை ; ப்ளீஸ் ;… ப்ளீஸ்!” என்று மன்றாடிய படியே பாரதியின் கரங்களைப் பற்றி இழுத்தாள் டூலிப். 

“அப்படியானால் ஒரு கண்டிஷன். சினிமாவுக்கு நான் தான் டிக்கெட் வாங்குவேன்” என்றாள் பாரதி. 

“ஓ எஸ்” என்று ஒப்புக் கொண்டாள் டூலிப். 

இருவரும் பார்லருக்குச் சென்று ஆளுக்கு இரண்டு கப் ஐஸ்க்ரீமைத் தீர்த்துக் கட்டிய பிறகு, அடுத்தாற்போலிருந்த சினிமாத் தியேட்டருக்குள் நுழைந்தார்கள். பாரதிதான் டிக்கெட் வாங்கினாள். 

உள்ளே போனபோது ‘ஏர் கண்டிஷன் குளுமையும், ‘கம் ஸெப்டம்பர்’ கானத்தின் இனிமையும் அவர்களை வர வேற்றன. இருவரும் ஒரு மூலையாகப் போய் அடக்கமாக உட்கார்ந்து கொண்டார்கள். மிஸ் டூலிப் மட்டும் உற்சாக மிகுதியில் தன் கால்களால் தரையைத் தட்டித் தாளம் போட்டபடியே, “ஐ லவ் திஸ் ஸாங் வெரி மச்!” என்றாள். 

யாராவது தன்னைக் கவனித்துவிடப் போகிறார்களே என்ற திகிலில் உட்கார்ந்திருந்த பாரதி, “எனக்கு ரொம்பவும் பயமாயிருக்கு டூலிப்” என்றாள். 

“பயப்படாதே! ஹிச்காக் படம்னா தான் பயப்படணும். மர்டர், மிஸ்டரியெல்லாம் வரும். இது முழுக்க முழுக்க லவ் ஸ்டோரியாச்சே!” என்றாள் டூலிப். 

சற்று நேரத்துக்கெல்லாம் விளக்குகள் அணைக்கப்பட்டுப் படம் ஆரம்பமாயிற்று. இருவரும் ஆளுக்கொரு சுவிங்கத்தை வாயில் போட்டுச் சுவைத்தபடியே படத்தை ரசிக்கத் தொடங்கினர். நேரம் ஆக ஆகத் தியேட்டரில் நிலவிய இருட்டுக்குள்ளேயே ஒரு தெளிவு பிறந்தது. அத்தெளிந்த இருட்டில் தனக்குத் தெரித்தவர்கள் யாராவது வந்திருக்கிறார்களா என்று பாரதி சுற்றுமுற்றும் கண்ணோட்டமிட்ட போது. ஆமாம் – ராஜா சற்றுத் தூரத்தில் உட்கார்ந்திருந்தான்! அவனைக் கண்டதில் அவளுக்கு மகிழ்ச்சிதான். ஆனாலும் தான் படம் பார்க்க வந்திருக்கும் விஷயம் அவனுக்குத் தெரிந்துவிடப்போகிறதே என்று கவலைப்பட்டாள். 

காரணம், இரண்டு நாட்களுக்கு முன்னால் அவன் பாரதியைச் சந்தித்தபோது, ‘படம் பார்க்க வருகிறாயா?’ என்று அழைத்தான். அவள் செல்ல மறுத்துவிட்டாள். இப்போது மட்டும் தான் வந்திருப்பதைக் கண்டால், ராஜா என்ன நினைத்துக் கொள்வான்? 

இடைவேளையில் தற்செயலாகப் பின்புறம் திரும்பிய ராஜா, அங்கே பாரதி உட்கார்ந்திருப்பதைப் பார்த்ததும் வியப்பில் ஆழ்ந்து போனான். ஆயினும் படம் முடியும்வரை அவன் அவளைக் கண்டுகொள்ளவே இல்லை. பாரதிக்கு அது மிகவும் திருப்தியாக இருந்தது. எங்கே தன்னைக் கண்ட பாய்ந்து வந்துவிடுவானோ என்று பயந்த அவளுக்கு, அவடைய பெருந்தன்மையான போக்கு நிம்மதியை அளித்தது. 

பாரதி, லேசாகத் தன் கண் இதழ்களை உயர்த்தி அவன் என்ன செய்கிறான் என்று கவனித்தாள். அவன் தேநீரைச் சுடச்சுடக் குடித்துவிட்டு நாக்கைச் சுட்டுக் கொண்டு திணறினான். ‘ராஜா எதிலுமே கொஞ்சம் அவசரப் புத்திக்காரர். அன்று அவசரப்பட்டு ஆணி அடிக்கும்போது கையை நசுக்கிக் கொண்டார். இன்று அவசரப்பட்டு நாக்கைச் சுட்டுக் கொண்டிருக்கிறார்’ என்று எண்ணியபோது அவளுக்கு அவன் மீது இரக்கமே உண்டாயிற்று. இன்னொரு நாள் அவன் வாணலியில் வெந்து கொண்டிருந்த கோஸ் கறியைப் புகையப் புகைய வாயில் போட்டுக்கொண்டு தவித்த தவிப்பு பாரதிக்குத் தெரியாது. 

படம் சீக்கிரமே முடிந்துவிட்டது. நன்றாயிருக்கிறதோ, இல்லையோ இங்கிலீஷ் படங்களில் இது ஒரு பெரிய சௌகரியம். ராஜா எல்லோருக்கும் முன்னால் எழுந்து வெளியே செல்வதைப் பாரதி கவனிக்கத் தவறவில்லை. அவன் தியேட்டர் வாசலில் போய் ஒரு புறமாக ஒதுங்கி நின்றுகொண்டான். பாரதியாகவே தன்னைக் கண்டுவிட்டுப் பேசினால், தானும் பேசுவது. இல்லையென்றால் பேசாமலேயே வீட்டுக்குப் போய்விடுவது என்ற முடிவுடன் அவன் காத்திருந்தான். வெளியே வந்த டூலிப்பும் பாரதியும் பஸ் ஸ்டாண்டில் போய் நின்று கொண்டனர். டூலிப்பின் சுருள் சுருளான பொன்னிற மயிர்க் கற்றைகள் அவன் கவனத்தை ஈர்த்தன. இந்த ஆங்கிலோ இந்தியப் பெண்களுக்குத்தான் ஆண்டவன் எப்படி ஞாபகமாகப் பொன்னிறக் கூந்தலைப் படைக்கின்றானோ என வியந்துகொண்டான். நல்ல வேளையாக முதலில் டூலிப்பின் பஸ் வந்துவிடவே, “நான் வருகிறேன் பாரதிர பை, பை!” என்று சொல்லிக் கொண்டே அவள் பஸ் ஏறிச் சென்றுவிட்டாள். அடுத்த கணமே பாரதியின் கண்கள் ராஜாவைத் தேடின. 

அவன்தான் அவசரக்காரன் ஆயிற்றே! பாரதி அவனை அழைக்கும் வரை காத்திருப்பானா? 

“என்ன பாரதி! படம் எப்படி இருந்தது! டைடில் பிரமாதம் இல்லையா?” என்று கேட்டுக்கொண்டே அவள் அருகில் நெருங்கி வந்துவிட்டான். 

“டைடில்தான் பிரமாதம். படம் சுமார்தான். ஒரே போர்!… தலைவலி” என்றாள் பாரதி. 

“அதோ அந்த ஓட்டலுக்குள் சென்று காப்பி சாப்பிடலாம், வா. தலைவலி பறந்து விடும்” என்று சற்றுத் தூரத்தில் தெரிந்த ஓட்டலைக் காட்டினான் ராஜா. 

“நேரத்தில் வீட்டிற்குப் போக வேண்டும்” என்றாள் பாரதி.

“டாக்ஸியில் போய் விடலாம், கவலைப்படாதே” என்றான் ராஜா. 

இருவரும் அந்த ஓட்டலுக்குள் புகுந்து திறந்த வெளி மாடிக்குப் போய் ஒரு மூலையில் போடப்பட்டிருந்த வட்ட மேஜைக்கு முன்னால் உட்கார்ந்து கொண்டனர். 

“அதென்ன புத்தகம் ராஜா?” எனக் கேட்டாள் பாரதி. 

“ஏதோ ‘பிலாஸபியாம்’. லைப்ரரியிலிருந்து வாங்கி வரச் சொல்லியிருந்தாள் அத்தை” என்று கூறிச் சலிப்புடன் அப்புத்தகத்தை மேஜைமீது போட்டான் ராஜா. பாரதி அதை எடுத்துப் புரட்டினாள். 

“நாம் இருவரும் சினிமா பார்த்துவிட்டு வருகிறோம் என்று தெரிந்தால், எங்க அப்பாவும் உங்க அத்தையும் என்ன செய்வாங்க தெரியுமா?”

“என்ன செய்வாங்க? படம் எப்படி இருக்கிறது என்று கேட்பாங்க! நன்றாயிருக்கிறது என்று சொன்னால் அவங்களும் போய்ப் பார்ப்பாங்க” என்றான் ராஜா. 

“பார்ப்பாங்க, பார்ப்பாங்க! நம்ம ரெண்டு பேரையும் வீட்டை விட்டே துரத்தப் பார்ப்பாங்க.” 

“நீ கவலைப்படாதே! பிரின்ஸிபால் எங்க அத்தை தானே!”

இச்சமயம், சர்வர் வந்து ‘என்ன வேண்டும்?’ என்று விசாரித்தான். 

“நீ என்ன சாப்பிடுகிறாய் பாரதி?” 

“வெறும் காப்பி போதும்.”

“வேறு ஏதாவது சாப்பிட்டேன். உனக்கு என்ன பிடிக்கும்னு சொல்லு.” 

“உங்களுக்கு எது பிடிக்குமோ, அதையே கொண்டு வரச் சொல்லுங்க” என்றாள் பாரதி, 

“எனக்கா? எனக்குப் பிடிக்காதது இந்த உலகத்திலே ஒன்னே ஒண்ணுதான்” என்றான் ராஜா. 

“என்ன அது?” 

“பயித்தியம் தான் பிடிக்காது” என்றான் அவன். டம்ளரிலிருந்த தண்ணீரைக் குடிக்க இருந்த பாரதி பகீரெனச் சிரித்துவிட்டாள். 

“நல்ல வேளை! இந்த ‘ஜோ’க்கை நீ தண்ணீர் குடிக்கும்போது சொல்லியிருந்தால் என்ன ஆகியிருக்கும்!’ என்றான் ராஜா. 

“கால் டம்ளர் தண்ணீர் நஷ்டமாகியிருக்கும்” என்று சொல்லிச் சிரித்தாள் பாரதி. 

சர்வரைப் பார்த்து, “உனக்குப் பிடித்தமானதைக் கொண்டுவாப்பா!” என்றான் ராஜா. 

“எனக்கு இந்த ஓட்டலில் போடுவது எதுவுமே பிடிக்காது ஸார்!” என்றான் சர்வர். 

“சரி; அப்படியானால் இரண்டு கப் காப்பி மட்டும் கொண்டு வா, போதும்” என்றாள் பாரதி. 

காப்பி வருகிறவரை பாரதியின் ஜாக்ரபி புத்தகத்தை எடுத்துப் புரட்டிக் கொண்டிருந்தான் ராஜா. 

காப்பி வந்ததும் அதை அருந்தியபடியே அவன் வானத்தைப் பார்த்தபோது, வானமெங்கும் கருமேகங்கள் கவிந்து கொண்டிருந்தன. 

“இறுக்கமாக இருக்கிறது. மழை வந்தாலும் வரலாம்” என்றாள் பாரதி. 

“வந்தாலும் என்ன? வந்து கொண்டே இருக்கிறது” என்றான் ராஜா. 

அவன் சொல்லி முடிப்பதற்குள்ளாகவே படபடவென்று மழைத்துளிகள் மேஜை விரிப்பின்மீது சிதறின. இருவரும் அவசரம் அவசரமாகப் புத்தகங்களைத் தூக்கிக்கொண்டு தெருவுக்கு விரைந்து போய் ஒரு டாக்ஸியைப் பிடித்துக் கொண்டனர். 

தான் மட்டும் தனியாகப் பஸ்ஸில் போய்விடலாம் என்றுதான் பாரதி முதலில் திட்டமிட்டிருந்தாள். மழையும் ராஜாவும் சேர்ந்து சதிசெய்ததுபோல் அவள் எண்ணத்தையே மாற்றி விட்டார்கள். 

டாக்ஸி பாரதியின் வீட்டு வாசலில் போய் நின்றபோது மழை சோவெனக் கொட்டிக் கொண்டிருந்தது. நல்ல வேளையாக அவள் ராஜாவுடன் வந்து இறங்கியதை ஒருவரும் கவனிக்கவில்லை. 

அப்போது மணி ஏழு ஆகிவிடவே, நன்கு இருட்டிப் போயிற்று. டாக்ஸியிலிருந்து இறங்கிய பாரதி பங்களாவுக்குள் போவதற்குள் லேசாக நனைந்து விட்டாள். நெஞ்சு பட படக்க அவள் உள்ளே செல்லும்போதே அப்பா அவருடைய அறையில் இருக்கிறாரா என்று கவனித்துக் கொண்டாள். 

அறைக் கதவு ஒரு பென்ஸில் கனத்துக்கு லேசாகத் திறந்திருப்பது தெரிந்தது. திறந்த கதவின் இடுக்கு வழியாக வெளிப்பட்ட மின் ஒளி தாழ்வாரத்தில் படிந்திருந்தது. 

உள்ளே மின் விசிறி சுழன்று கொண்டிருப்பதையும், அப்பா ஏதோ வேலையில் மூழ்கியிருப்பதையும் கண்டபோது அவள் திடுக்கிட்டாள். அப்பாவுக்குக் காது ரொம்பக் கூர்மை. வாசலில் டாக்ஸி வந்து நின்றபோது அவர் கட்டாயாம் அதைக் கவனித்திருப்பார். தன்னை அழைத்து ‘ஏன் இத்தனை நேரம்? எங்கே போயிருந்தாய்?’ என்று விசாரித்தால் என்ன பதில் சொல்லுவது என்ற திகிலுடன் மெதுவாகப் பூனைபோல் நடந்து சென்றாள். 

“பாரதி!” சேதுபதிதான் அழைத்தார். அவர் குரலில் எப்போதுமே நயம் இருந்ததில்லை. இன்று வழக்கத்தைக் காட்டிலும் சற்று கடுமையாகவே ஒலித்தது. 

பரம சாதுவைபோல் அவர் எதிரில் போய் நின்றாள் பாரதி. 

“இத்தனை நேரம் எங்கே போயிருந்தாய்?” சேதுபதி கேட்டார். 

“காலேஜில்தான் இருந்தேன் அப்பா! ஹாஸ்டலில் ஒரு பெண்ணிடம் கணக்குப் பாடம் கற்றுக்கொண்டிருந்தேன்” என்று துணிந்து பொய்யைச் சொன்னாள் பாரதி. 

சேதுபதி ஒரு முறை அவளை ஏற இறங்கப் பார்த்தார். அவள் பொய் சொல்கிறாள் என்பதை அவள் முகம் காட்டிக் கொடுத்து விட்டது. அதைப் புரிந்து கொண்ட சேதுபதி அவளுடைய பொய்யை அம்பலமாக்க விரும்பவில்லை. தான் அதை அறிந்து கொண்டதாகவும் காட்டிக் கொள்ளவில்லை. காரணம், அப்படிச் செய்வதால் தன்னிடம் அவளுக்குள்ள பயமும் மரியாதையும் குறைந்துவிடும் என்பதுதான். 

“கணக்கில் ‘வீக்’ என்றால் என்னிடம் சொல்லுவதற் கென்ன? உடனே டியூஷன் வைப்பதற்கு ஏற்பாடு செய்திருப்பேன் அல்லவா? சரி; இனிமேல் இம்மாதிரி நேரம் கழித்து வீட்டுக்கு வரக்கூடாது, தெரிந்ததா? இதற்கு முன்னால்கூட இரண்டு நாள் நீ நேரம் கழித்து வந்திருக்கிறாய்” என்றார். 

“தான் இரண்டு நாட்கள் ‘லேட்’டாக வந்தது அப்பாவுக்கு எப்படித் தெரிந்தது? இவ்வளவு கணக்காகத் தெரிந்து வைத்துக் கொண்டிருக்கிறாரே!” பாரதி சிந்தித்தாள். 

“சரி; நீ போகலாம்” என்று கூறி அனுப்பினார் சேதுபதி. மறுநாள் காலை, சேதுபதி தம்முடைய அறையில் உட்கார்ந்து பத்திரிகையைப் படித்துக் கொண்டிருந்தபோது, டெலிபோன் மணி அடிக்கவே அவர் பாரதியை அழைத்து, “டெலிபோனில் கூப்பிடுவது யாரென்று பார்” என்றார். 

பாரதி டெலிபோன் ரிஸீவரைக் கையில் எடுத்துக் கேட்டபோது, ‘பிரின்ஸிபால் பார்வதி பேசுகிறேன்’ என்று பதில் வந்தது. 

தன் குட்டு வெளிப்பட்டு விட்டதோ என்று பாரதி நடுங்கிப் போனாள். 

“அப்பா வீட்டில் இருக்கிறாரா?” பார்வதி கேட்டாள். “கொஞ்சம் வேலையாக இருக்கிறார். உங்களுக்கு என்ன வேண்டும்?” என்று அடக்கமாகக் கேட்டாள் பாரதி. 

“நான் இப்போது வந்தால் அவரைச் சந்திக்க முடியுமா என்று கேட்டுச் சொல்”

”கொஞ்சம் இருங்கள் மேடம்! இதோ கேட்டுச் சொல் கிறேன்…” 

பாரதி தன் தந்தையிடம் ஓடிப்போய், “அப்பா, பிரின்ஸிபால் உங்களைச் சந்திக்க வேண்டுமாம். இப்போது வரலாமா என்று கேட்கிறார்…நீங்கள் கொஞ்சம் வேலையாக இருப்பதாகச் சொன்னேன்…”

‘ஆமாம்; இப்போது எனக்கு நேரமில்லை, அப்புறம் பார்க்கலாம்’ என்று அப்பா பதில் கூறிவிடுவார் என்று அவள் எதிர்பார்த்தாள். 

ஆனால் சேதுபதியோ அப்படிக் கூறாமல், “வரச் சொல்லேன்” என்றார். 

ஏதேனும் ஒரு காரணத்தை வைத்துக் கொண்டு சேதுபதியைச் சந்திக்க விரும்பினாள் பார்வதி. 

நேற்று பாரதி ஜாக்ரபி வகுப்புக்கு மட்டம் போட்டு விட்டுப் போனதில் பிரின்ஸிபாலுக்கு ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி! அதையே காரணமாக வைத்துக் கொண்டு அவரைச் சந்தித்து விடலாமல்லவா! 

திருவாளர் சேதுபதியின் உள்ளத்திலும் பார்வதியைக் காண வேண்டும் என்ற ஆவல் உள்ளூறக் கனிந்து கொண் டிருந்தது. பாரதிக்கு டியூஷன் ஏற்பாடு செய்யச் சொல்லும் சாக்கில் பார்வதியை வீட்டுக்கு அழைக்கலாமா என்றுகூட அவர் எண்ணியதுண்டு. ஆனால் எந்த ஒரு எண்ணத்தையும் செயலுக்குக் கொண்டுவருமுன் அதைப்பற்றி ஆயிரம் முறை சிந்திப்பது அவருடைய வழக்கமாயிற்றே! அப்போது பார்வதியே போன் செய்து வரட்டுமா என்று கேட்கவே அவர் மிக்க மகிழ்ச்சியுடன் ‘வரச் சொல்லேன்’ என்று கூறிவிட்டார். 

யாருடைய வரவையும் அவ்வளவு ஆவலுடன் எதிர் பார்க்காத அவருக்கு, பார்வதி வரப் போகிறாள் என்னும் செய்தி மட்டும் பெரும் மகிழ்ச்சியை அளித்தது. அது சேது பதிக்கே வியப்பாக இருந்தது. 

பார்வதி அறைக்குள் நுழையும்போதே “ஓ! வாருங்கள்” என்று வரவேற்று, எதிரிலுள்ள நாற்காலியில் அமரச் சொன்னார். முகத்தில் புன்சிரிப்புத் தவழ, பார்வதி அடக்க மாக அவர் எதிரில் உட்கார்ந்து கொண்டாள். சில விநாடிகள் அந்த அறைக்குள் ஓர் அசாதாரணமான அமைதி நிலவியது. எப்படிப் பேச்சைத் தொடங்குவது என்று பார்வதி யோசித்தாள். எடுத்த உடனேயே பாரதியைப் பற்றி அவரிடம் புகார் கூறுவது அவளுக்கே பிடிக்கவில்லை.எனவே, அவரே முதலில் பேசட்டும் என்று காத்திருந்தாள். எவ்வளவு நேரம்தான் சும்மா உட்கார்ந்திருக்க முடியும்? அந்த அறையில் மாட்டப்பட்டிருந்த அவருடைய மனைவியின் படத்தையே சற்று நேரம் பார்த்துக் கொண்டிருந்தாள். பாரதியின் ஜாடையாகவே காணப்பட்ட அந்த உருவத்தைக் கண்ட போது, பார்வதியின் கண்கள் கூசின. 

சேதுபதி இலேசாகக் கனைத்துக் கொண்டு, “ஏதாவது விசேஷம் உண்டா?” என்று கேட்டார். 

“ஆமாம்” என்று பதிலளித்த பார்வதி, தான் கூறவந்த விஷயத்தைச் சொல்லலாமா வேண்டாமா, என்று சற்றுத் தயங்கி விட்டு, “ஒன்றுமில்லை; பாரதியைப் பற்றிச் சொல்லிவிட்டுப் போகத்தான் வந்தேன். அவள் நேற்று மூன்று மணிக்கு யாருடைய அனுமதியுமின்றி காலேஜிலிருந்து வெளியே போயிருக்கிறாள்…” என்றாள். 

“அப்படியா!” வியப்புடன் ஒலித்தது சேதுபதியின் குரல். 

“ஆமாம்; அனுமதியின்றி அவள் வகுப்பை விட்டுப் போவது இதுதான் முதல் தடவை. ஆகவே, இதை ஒரு பெரிய புகாராகத் தங்களிடம் சொல்ல வேண்டாமென்று தான் முதலில் நினைத்தேன். மாணவிகளின் ஒழுக்கம் மிகவும் முக்கியமானது. ஆகவே இம்மாதிரி தவறுகளை வளர விடாமல் முளையிலேயே கிள்ளி விடுவது நம்முடைய கடமையல்லவா? தங்களுக்கும் தெரிந்திருக்க வேண்டுமென்பதற்காகவே இதைச் சொன்னேன். அவள் நல்ல பெண்தான். யாராவது சிநேகிதிகளுடன் சேர்ந்து கொண்டு சினிமாவுக்குப் போயிருப்பாளோ என்பது என் சந்தேகம்..” என்றாள் பார்வதி. 

“ஆமாம், அப்படித்தான் இருக்கும். அவள் நேற்று நேரம் கழித்து வந்த விஷயம் எனக்கும் தெரியும்.உடனே கூப்பிட்டு விசாரித்தபோது தான் கணக்கில் வீக் என்றும் யாரோ ஒரு ஹாஸ்டல் பெண்ணிடம் கணக்குக் கற்றுக் கொண்டிருந்ததாகவும் என்னிடம் துணிந்து ஒரு பொய்யைச் சொன்னாள்…” என்றார் சேதுபதி. 

தம்முடைய மகள்மீது அவர் கொண்டுள்ள கோபத்தைத் தணிக்க எண்ணிய பார்வதி தமாஷாகச் சிரித்துக் கொண்டே,”இல்லையே, பாரதி கூறியது பொய்யில்லையே?” என்றாள். 

“பொய்யில்லையா? அவள் சினிமாவுக்குப் போயிருப்பாள் என்று தாங்களே சற்றுமுன் கூறினீர்களே!” 

“ஆமாம்; அவள் கணக்கிலே ‘வீக்’ என்று கூறியது பொய்யில்லை என்றுதான் சொல்ல வந்தேன்.” சிரித்தபடியே கூறினாள் பார்வதி. 

தம் மகளிடம் பார்வதி எடுத்துக் கொண்டுள்ள அக்கறையைச் சேதுபதியால் புரிந்து கொள்ள முடிந்தது. எவ்வளவு நாசூக்காகச் சிரித்துக் கொண்டே விஷயத்தைக் கூறிவிட்டாள் என்று தனக்குள்ளாகவே வியந்து கொண்டார். 

“அப்படியானால் அவளுக்கு யாராவது ஒரு புரொபஸரைக் கொண்டு டியூஷன் சொல்லிக்கொடுக்க. ஏற்பாடு செய்ய முடியுமா?” சேதுபதி கேட்டார். 

“யாராவது ஒரு புரொபஸர் என்ன? உங்களுக்கு ஆட்சேபனை இல்லையென்றால் நானே வந்து சொல்லித் தருகிறேன்” என்றாள் பார்வதி. 

“பாரதி விஷயத்தில் இவ்வளவு அக்கறை எடுத்துக் கொண்டு வந்தது பற்றி மிக்க நன்றி. தங்களுக்குள்ள வேலைகளுக்கிடையில் தாங்களே டியூஷனுக்கு வருவது…” என்று இழுத்தார் சேதுபதி. 

“அதனால் பரவாயில்லை; ஒழிவு நேரங்களில்தான் வரப் போகிறேன்.” சேதுபதிக்கு அந்தச் செய்தி மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. பார்வதியை இனி அடிக்கடி சந்திக்கலாம் என்பதை நினைக்கும்போது, அவர் உள்ளம் உற்சாகத்தில் மிதந்தது. அவளைச் சந்திப்பதில், அவளைக் காண்பதில், அவளுடன் பேசுவதில், அவளைப் பற்றியே எண்ணிக் கொண்டிருப்பதில் தனக்கு ஏன் இத்தனைக் குதூகலம்? அதற்கு என்ன காரணம்? அவருக்கே அது விளங்கவில்லை.

குருத்து ஐந்து 

ஓங்கி உயர்ந்து கொண்டிருந்த உதய சூரியனின் அழகைப் பலகணியின் வழியாகப் பார்த்து ரசித்தபடியே சிந்தனையில் மூழ்கியிருந்தாள் பார்வதி. 

நேற்று முன்தினம் சேதுபதியை அவருடைய இல்லத்தில் கண்டு பேசிவிட்டு வந்தது முதலே, அவள் உள்ளப் போக்கு அடியோடு மாறுபட்டிருந்தது. இதற்குமுன் அனுபவித்தறியாத அபூர்வ உணர்வும், ஆனந்தப் பரவசமும் அவளை ஆட்கொண்டிருந்தன. 

தினம் தினம்தான் அவள் சூரியோதயத்தின் அழகைக் காண்கிறாள்; அந்திவேளைச் சூரியனின் அமைதியைப் பார்க்கிறாள். ஆயினும் என்றும் காணாத புதுமையும் கவர்ச்சியும் இன்று மட்டும் தோன்றுவானேன்? எங்கோ, எப்போதோ படித்திருந்த சில வரிகள் அவன் கவனத்துக்கு வந்தன. 

“காலையில் சூரியன் உதிக்கும் அழகைக் கண்டு களிக்கிறேம். மாலையில் அஸ்தமனத்தின் அற்புதத்தைக் கண்டு ஆனந்தமடைகிறோம். அதே சமயத்தில் நம்முடைய வாழ்நாளில் ஓர் ஏடு கிழிந்து விட்டது என்பதை எண்ணிப் பார்க்க மறந்து விடுகிறோம்.” 

இந்தக் கருத்து, பார்வதியின் வயதைச் சுட்டிக் காட்டிச் சிந்திக்க வைத்தது. 

‘நாற்பத்தாறு ஆண்டுகள் வீணாகப் போய்விட்டனவா? இனி எனக்கு வாழ்வே கிடையாதா? இளமைப் பருவத்தின் எல்லையைக் கடந்து விட்டேனா? வயோதிகத்தின் முதல் படியில் காலடி எடுத்து வைத்து விட்டேனா?’ 

தன் உருவத்தை ஒருமுறை பார்த்துக் கொள்ள விரும்பியவளாய் நிலைக்கண்ணாடியின்முன் சென்றாள். அங்கே தலையைச் சாய்த்துச் சாய்த்து, தன் மூக்கினால் கண்ணாடியைக் குத்திக் குத்தி, அதில் தெரிந்த தன் உருவத்தைப் பல கோணங்களில் ரசித்துக் கொண்டிருந்த குருவி ஒன்று பார்வதியைக் கண்டதும் சட்டெனப் பறந்து விட்டது. 

பார்வதியால் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை. தலையில் தெரிந்த நரை தன்னைக் கண்டு பரிகசிப்பதுபோல் தோன் றவே, அந்த எண்ணம் அவள் உள்ளத்தை உறுத்தியது. அவள் சொல்லிக் கொண்டாள்: ‘அப்படி ஒன்றும் எனக்கு வயதாகி விடவில்லை. இதோ என் கழுத்து, தாழங் குருத்து போல் எத்தனை அழகாயிருக்கிறது!’ என்று, பிடரியைத் தன் இரு கைகளாலும் தடவிப் பார்த்துக் கொண்டாள். 

புன்முறுவல் ஒன்றின் மூலமாகத் தன் மனக்குறையை ஜீரணித்துக் கொண்டவளாய் நாற்காலியில் போய் அமர்ந்து, மேஜைமீது கிடந்த புத்தகம் ஒன்றை எடுத்துப் புரட்டினாள். 

“மக்களுக்குத் தொண்டு புரியும் மகான்கள், சமூக சேவையில் ஈடுபட்ட தலைவர்கள், பள்ளிக்கூட ஆசிரியர்கள் ஆகியோர் ‘ஸில்வர் ஓக்’ என்னும் மரங்களுக்கு ஒப்பானவர்கள். இந்த மரம் தனக்கென வாழ்வதில்லை. இதற்கெனத் தனிப்பட்ட ஆசாபாசங்களும் கிடையா. தேயிலைச் செடிகள் வளர்வதற்கு இவற்றின் லேசான இளம் நிழல் பயன்படுகிறது. இந்த மரங்களின் கிளைகள் அடர்ந்து படர்ந்து வளரும்போது நிழல் அதிகமாகிவிடும் என்பதற்காக அவற்றை வெட்டி விடுவார்கள். ‘ஸில்வர் ஓக்’ மரத்தைப் போல், ஆசாபாசங்களை அவ்வப்போது வெட்டிக்கொண்டு வாழ்பவர்கள் தான் சமூக சேவையைச் சரிவரச் செய்ய முடியும்.” 

நானும் ‘ஸில்வர் ஓக்’ மரத்தைப் போல் ஆசாபாசங்களை வெட்டிக் கொண்டு வாழவேண்டியவள் தானா? எனக்கென்று தனி வாழ்க்கை கிடையாதா? 

கீழே ராஜாவின் சீட்டிக் குரல் மணி ஒன்பதாகி விட்டது என்பதை அறிவித்தது. 

‘இன்று திங்கட்கிழமை. சீக்கிரமே கல்லூரிக்குப் போய் அலுவல்களை முடித்துக் கொள்ள வேண்டும். இன்று மாலை கல்லூரி முடிந்ததும் பாரதியின் வீட்டுக்குச் சென்று கணக்குப் பாடத்தைத் தொடங்கிவிட வேண்டியதுதான்.’ 

சனிக்கிழமை மாலையே போக வேண்டுமென்றுதான் முதலில் நினைத்தாள். ஆனாலும் ஒப்புக்கொண்ட உடனேயே அவ்வளவு அவசரப்பட்டுக்கொண்டு போய்விடக்கூடாதென்பதற்காக, இரண்டு தினங்கள் தள்ளிப் போட்டாள். இந்த இரண்டு நாட்களாக எத்தனைக் கெத்தனை அமைதியோடு இருக்க வேண்டுமென்று எண்ணினாளோ, அவ்வளவுக்கு அவள் உள்ளத்தில் ஒருவிதப் பரபரப்பு அலைந்து கொண்டிருந்தது. 

“ஞானம்! சமையலாகி விட்டதா? சாப்பிட உட்காரலாமா?” என்று கேட்டுக் கொண்டே மாடியிலிருந்து கீழே இறங்கி வந்துவிட்டாள் பார்வதி. 

தினந்தோறும், மணை போட்டு, இலை போட்டு, ராஜா வந்து உட்கார்ந்துகொண்டு ‘அத்தை அத்தை’ என்று அலறிய பிறகே கீழே இறங்கி வருவதுதான் பார்வதியின் வழக்கம். வழக்கத்துக்கு மாறாக ராஜாவுக்கு முன்னால் வந்து விட்ட பார்வதி, “ராஜா, சாப்பிட வரவில்லையா?ஏன் லேட் இன்றைக்கு உனக்கு?” என்று கேட்டது, ஞானத்துக்குப் பெரும் வியப்பாயிருந்தது. 

“நான் லேட் இல்லை அத்தை ; நீங்கதான் எர்லி” என்று சிரித்துக் கொண்டே வந்து உட்கார்ந்தான் ராஜா. 

“நான் எர்லியா? நாற்பத்தாறு வயது என்பது எர்லியா?” தனக்குள்ளாகவே எழுந்த கேள்விக்கு விடை தேடிக் கொண்டிருந்தது அவள் உள்ளம். 

“அத்தை! பால்காரச் சின்னையனுக்குக் கல்யாணமாம். அடுத்த மாதம் முகூர்த்தம் வைத்திருக்கிறானாம். இரு நூறு ரூபாய் முன் பணம் வேண்டுமென்கிறான்!” என்றான் ராஜா. “அவனுக்கு இதுவரை கலியாணமே ஆகவில்லையா? வயசு ஐம்பதுக்குமேல் இருக்கும் போலிருக்கிறதே!” 

“நான்கூட அதைத்தான் சொன்னேன். ‘இப்போது என்னடா அவசரம் வந்து விட்டது? வயசு ஐம்பது தானே ஆகிறது? இன்னும் பத்து வருஷம் போகட்டுமே’ என்றேன்” என்று ராஜா சிரித்துக் கொண்டே கூறினான். 

“ராஜா! சின்னையனுக்கு அப்படி என்ன வயசாகிவிட் டது? மிஞ்சினால் ஐம்பது இருக்கும். அது ஒரு வயசா? சாப்பிட்டு முடிந்ததும் செக்குப் புத்தகத்தைக் கொண்டு வா, கையெழுத்துப் போட்டுத் தருகிறேன். உடனே அவனுக்குப் பணத்தைக் கொடுத்தனுப்பு” என்றாள் பார்வதி. 

“வயதாகிவிட்ட பிறகும் கலியாணம் செய்து கொள்ளும் வழக்கம் மேல் நாடுகளில்தான் உண்டு என்று கேள்விப் பட்டிருக்கிறேன். வர வர நம் நாட்டிலும் இது சகஜமாகி விட்டது…” என்று முணுமுணுத்தான் ராஜா. 

“உனக்கு இதில் என்ன ஆட்சேபனை…?” பார்வதி கேட்டாள். 

“எனக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை. தங்களுடைய வயதுக்கேற்ப இன்னொரு வயதான மங்கையாகப் பார்த்து ஜோடி சேர்த்துக் கொள்ளாமல், இளம் பெண்களின் வாழ்வைப் பாழாக்கி விடுகிறார்களே என்பதை எண்ணும் போதுதான்…” 

‘அவரவர்கள் வயதுக்கேற்ற முறையில் ஜோடி சேர்த்துக் கொள்ள வேண்டும்… அவ்வளவுதானே?’ ராஜாவின் பதில் பார்வதிக்குத் திருப்தியை அளித்தது. சேதுபதியின் வயதோடு தன் வயதை ஒப்பிட்டுப் பார்த்துக்கொண்டாள். சரியான பொருத்தம்தான். அவருடைய ஆழ்ந்த அறிவு, கண்ணியமான தோற்றம், அடக்கமான குணம், வார்த்தை ளை நிறுத்துப் போட்டுப் பேசும் தன்மை, குற்றமற்ற குழந்தைச் சிரிப்பு – எல்லாமே தனக்குப் பொருத்தமாக அமைந்திருப்பதாகத் தோன்றியது அவளுக்கு. 

“கல்லூரிக்கு நேரமாகி விட்டது; நான் புறப்படுகிறேன்” என்று சொல்லிக் கொண்டே வாசலுக்குச் சென்ற பார்வதி, பகவான் பரமஹம்சரையும் தேவியையும் வணங்கி விட்டுக் காரை எடுத்தாள். அவள் உள்ளத்தில் பெரும் கொந் தளிப்பு ஏற்பட்டிருந்தது. அதை வெளியே காட்டிக்கொள் ளாமல் அமைதியாக இருக்க முயன்றபோதிலும் அவளால் முடியவில்லை. 

கார், வாசலைத் தாண்டியபோது செவிட்டுப் பெருமாள் வழக்கம்போல எழுந்து நின்று வணக்கம் செலுத்தினான். ஆனால் அவன் ஏதோ மாதிரியாகத் தன்னைக் கவனிப்பது போல் பட்டது அவளுக்கு. 

கார் கல்லூரி காம்பவுண்ட் வாசல் திருப்பத்தை அடைந்தபோது மணி பத்தடிக்க ஐந்து நிமிஷம்! அதோ, காலை விந்தி விந்தி நடந்து வரும் அகாதாவும் வந்துவிட்டாளே! 

“ஹல்லோ, குட் மார்னிங்” என்று புன்சிரிப்போடு கூறினாள் அந்தப் பிரெஞ்சு மாது. அகாதாவின் புன்சிரிப்பில் ஏதோ அர்த்தம் இருப்பதுபோல் தோன்றியது பார்வதிக்கு. கல்லூரி போர்டிகோவில் கொண்டு போய்க் காரை நிறுத்தியதும், அட்டெண்டர் ரங்கசாமி கார்க் கதவைத் திறக்க ஓடிவந்தான். அவன் கூடத் தன்னை ஏதோ மாதிரியாகப் பார்ப்பதுபோல் தோன்றியது அவளுக்கு. 

தினந்தோறும் தன் அறைக்குள் சென்று நாற்காலியில் உட்கார்ந்ததும் மள மளவென்று அலுவல்களை முடிக்கும் பார்வதிக்கு, அன்று ஏனோ எந்த வேலையுமே ஓடவில்லை. எதுவும் முக்கியமாகவும் படவில்லை. ‘சாயந்திரம் எப்போது மணி ஐந்தடிக்கப் போகிறது; கல்லூரி முடியப் போகிறது; சேதுபதியின் வீட்டுக்குப் போகலாம்?’ என்பதையே எண்ணிக் கொண்டிருந்தாள் அவள். 

இதுவரை நேரம் போதவில்லையே என்பதுதான் பார்வதியின் குறை. இன்று நேரம் போகவில்லையே என்பது அவள் குறையாக இருந்தது. 

கெடியாரத்தின் முள் கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து கொண்டிருந்தது. 

பார்வதிக்குத் தன்னுடைய கடந்தகால வாழ்க்கை நினைவுக்கு வரவே, கண்களை மூடியபடியே, தான் கல்லூரியில் படித்த நாட்களை எண்ணிப் பார்த்தாள். அப்போது டியூஷனுக்குச் சென்ற நிலைமைக்கும், இப்போதைய நிலை மைக்கும் எத்தனை வித்தியாசம்! 

அப்போது அவள் குடும்பம் வறுமையின் பிடியில் சிக்கி, முன்னேற முடியாத நிலையில் தத்தளித்துக் கொண்டிருந்தது. இன்டர்மீடியட் வகுப்பில் படித்துக் கொண்டிருந்த பார்வதி, தன் சக மாணவிகள் சிலருக்கு டியூஷன் சொல்லிக் கொடுக்க ஏற்பாடு செய்துகொண்டு, அதில் வந்த வருமானத்தின்மூலம் தன் ஒரே அண்ணனையும், நோய்வாய்ப் பட்டிருந்த தன் தாயாரையும் காப்பாற்ற வேண்டிய தாயிற்று. 

டியூஷன் சொல்லித் தரும் பணியை ஒரு கட்டாயக் கடமையாக ஏற்றுக்கொள்ளவேண்டிய நிலையில் அப்போது அவள் இருந்தாள். 

இன்று முற்றிலும் மாறுப்பட்ட நிலை. வறுமையின் வற்புறுத்தலேர், கடமையின் கட்டாயமோ இப்போது இல்லை. 

எந்தக் கல்லூரிபில் படித்துப் பட்டம் பெற்றாளோ, அதே கல்லூரிக்கு இன்று அவள் தலைவி. பல பட்டங்களைப் பெற்றவள். அந்தக் கல்லூரிக்காகவே தன் வாழ்நாளை அர்ப்பணித்துக்கொண்டு, தன்னையும் தன் எதிர்காலத்தையும் மறந்து வாழ்பவள். தன் உழைப்பின் பயனாக, தான் எடுத்துக்கொண்ட பெருமுயற்சி காரணமாகக் கல்லூரி அடைந்துள்ள உன்னத நிலையைக் கண்டு பெருமிதப்படுபவள். ‘கல்லூரியின் ஐம்பதாம் ஆண்டும் வெற்றிகரமாகப் பூர்த்தியாகி விட்டது.இனி ஒரு குறையுமில்லை’ என்ற திருப்தியுடன், மகிழ்ச்சிப் பெருமிதத்துடன் இருக்கும்போது தானா அவள் அந்தரங்கத்தில் ஒரு சிறு கீறல் தோன்றவேண்டும்? அந்தக் கீறல் சிறிது சிறிதாக வளர்ந்து பெரிதாக வேண்டும்? 

அது தானாகவே அழிந்து போகிற கீறல் அல்ல; அவளாக அழித்துவிடக் கூடியதும் அல்ல; அவள் இதயத்தின் பூவிதழ் போன்ற பட்டுத் துகிலில் அந்தக் கீறலைப் போட்டவர் வேறு யாருமல்ல; திருவாளர் சேதுபதி அவர்கள்தான். 

மணி ஐந்தடித்ததுதான் தாமதம். கல்லூரி மாணவிகள் அனைவரும் பட்டாம் பூச்சிகளைப்போல் தெரு வாயிலை நோக்கிப் பறந்து கொண்டிருந்தார்கள். 

பாரதி மட்டும் உற்சாகமின்றிப் பிரின்ஸிபால் பார்வதியின் அறையை நோக்கிச் சென்று கொண்டிருந்தாள். 

காரணம், கல்லூரி முடிந்ததும், தன்னுடைய அறைக்கு வந்துவிட வேண்டும் என்பது பார்வதியின் கட்டளை. 

பாரதியைக் கண்டதுமே, “என்ன புறப்படலாமா?” என்று கேட்டாள் பிரின்ஸிபால். 

‘கணக்கில் வீக்! கல்லூரி ஹாஸ்டல் தோழியுடன் படித்துக் கொண்டிருந்தேன்’ என்று தந்தையிடம் கூறிய ஒரு சின்ன பொய், இவ்வளவு விபரீதத்தில் கொண்டுவிடும் என்று பாரதி கனவிலும் கருதவில்லை. 

போலீஸ் காவலுடன் சிறைக் கூடத்துக்குச் செல்லும் கைதியைப் போல், மௌனமாகக் காரில் ஏறி உட்கார்ந்து கொண்டாள் பாரதி. அடுத்த சில நிமிடங்களுக்குள்ளாகவே அந்தக் கார் சேதுபதி அவர்களின் பங்களாவில் போய் நின்றது. 

காரை விட்டுக் கீழே இறங்கும்போதே அவ்விருவர் கண்களும் ‘அவர் இருக்கிறாரா’ என்று அறிந்துகொள்ளும் ஆவலில் சேதுபதியின் அறையைத் துழாவின. இருவருடைய ஆவலும் இரு வகையானவை, ‘அவர் இருக்கமாட்டாரா?’ என்ற ஆவலில் பார்த்தாள் பார்வதி. ‘அவர் இருக்கக் கூடாதே!’ என்ற கவலையுடன் நோக்கினாள் பாரதி! வித்தியாசம் அவ்வளவுதான்! 

“அப்பாவின் அறையில் உட்கார்ந்து கொள்ளுங்கள் மேடம். இதோ வந்து விடுகிறேன்…” என்று கூறிச் சென்றாள் பாரதி. 

தனிமையில் அந்த அறைக்குள் காலடி எடுத்து வைத்த போது, ஒரு கோயிலின் கர்ப்பக் கிரகத்துக்குள் செல்வது போல் அச்சம் ஏற்பட்டது பார்வதிக்கு. 

அறைக்குள்ளிருந்த திருவாளர் சேதுபதி அவர்களுடைய மனைவியின் திருவுருவப் படம், அமைதி நிறைந்த அந்த அழகு வடிவம், பார்வதியைப் பார்த்துக் கேட்டது! ‘என்னுடைய கணவரின் அன்புக்குப் பாத்திரமாகப் பார்க்கிறாயா, அம்மா?’

உருவம் பேசவில்லை. அப்படி ஒரு பிரமை பார்வதிக்கு. சட்டென அவ்வறையை விட்டு வெளியேறிய பார்வதியின் முகத்தில் வியர்வைத் துளிகள் முத்து முத்தாக அரும்பியிருந்தன. 

“ஏன் மேடம், உங்களுக்கு இப்படி வியர்த்து விட்டது. விசிறியின் ஸ்விட்சைப் போடட்டுமா” என்று கேட்டுக் கொண்டே வந்தாள் பாரதி. 

“நாம் இருவரும் இங்கேயே இந்த ஹாலிலேயே உட்கார்ந்து கொள்ளலாம்” என்றாள் பார்வதி. 

கணக்குப் பாடம் ஆரம்பமாயிற்று. முதல் நாள் என்பதால் மிகவும் சுலபமான கணக்குகளையே கொடுத்துப் போடச் சொன்னாள் பார்வதி. அரைமணி நேரம் கழிந்தது. 

“சரி, இன்று இத்துடன் நிறுத்திக்கொள்ளலாம்”, என்று கூறிய பார்வதி, அமைதியின்றி அங்குமிங்கும் பார்த்துக் கொண்டே இருந்தாள். அந்தரங்கமாக ஓர் ஆசை, அவர் வேளை வந்தாலும் வரலாமென்று. அதே சமயம் வாசலில் கார் வரும் ஓசை கேட்டது. ஆமாம்; அதிலிருந்து சேதுபதிதான் இறங்கி வந்தார். 

‘அவரை எப்படியும் சந்திக்கலாம்’ என்று பார்வதியின் உள்மனம் சொல்லிக் கொண்டிருந்தது வீண் போகவில்லை. பார்வதி புறப்படுவதற்குத் தயாராக எழுந்து நின்றுகொண்டிருப்பதைக் கண்ட சேதுபதி, “உட்காருங்கள் போகலாம். வந்து வெகு நேரமாயிற்றா? பாரதி, எங்கள் இருவருக்கும் காப்பி கொண்டுவா…” என்று கூறியபடியே சோபாவில் சாய்ந்தவர் “ம்… பாரதி கணக்கில் எப்படி இருக்கிறாள்!” என்று கேட்டார். 

“பரவாயில்லை. நான் வந்து அரை மணி நேரம்தான் ஆயிற்று. முதல் நாளே எல்லாக் கணக்குகளையும் கொடுத்து அவளைத் தொந்தரவுபடுத்த விரும்பவில்லை. எடுத்த எடுப்பிலேயே முளையைக் குழப்பிவிடக் கூடாதல்லவா? பொதுவாகவே குழந்தைகள், தினம் மூன்று மணிநேரம் படித்தால் போதும் என்பதுதான் என் அபிப்பிராயம். ஆடு மாடுகள் புல்லை மேய்கின்றன. மேலோடு மேய்கின்றன. புல் திரும்பவும் செழிப்பாக வளர்கிறது. வேர் வரையில் தின்று விட்டால் என்னவாகும்? புல்லே அழிந்துவிடும் அல்லவா? அதே மாதிரிதான் குழந்தைகளையும் வருத்தக் கூடாது” என்றாள். 

“பேஷ்! என்னுடைய கருத்தும் இதேதான். ஏறக்குறைய நம் இருவருடைய எண்ணங்களும் ஒன்றாகவே இருக்கும் போலிருக்கிறது” என்று சிரித்துக்கொண்டே கூறினார் சேதுபதி. 

“நம்முடைய சிறு வயதில் கொண்டிருந்த அபிப்பிராயங் களுக்கும் இப்போதுள்ளவற்றுக்கும் எவ்வளவோ வித்தியாசம். முன்பெல்லாம் மாணவிகள் ஓயாமல் படித்துக் கொண்டிருக்க வேண்டுமென்ற கருத்துடையவளாயிருந்தேன். இப்போது முற்றிலும் மாறாக எண்ணுகிறேன்.வயது ஆக ஆக, அனுபவம் முதிர்ச்சி அடைய அடைய, நம்முடைய கருத்துக்களும் மாறிக்கொண்டே போகின்றன…” என்றாள் பார்வதி. 

“அதுதான் இயற்கை, அறிவின் வளர்ச்சிக்கு அடையாளம், மாவடுவாக இருக்கும்போது துவர்க்கிறது. அதுவே காயாகும்போது புளிக்கிறது. பின்னர் பழமாகும்போது இனிக்கிறது. ஆகவே, இவை மூன்றும் வெவ்வேறு பழ வகைகள் என்று கூறுவது சரியில்லையல்லவா?” 

சேதுபதி இந்த உவமையைக் கூறியதும் பார்வதி, “மிகப் பொருத்தமான உதாரணத்தின் மூலம் நான் கூறவந்ததைத் தெளிவாக்கி விட்டீர்கள்!” என்று கூறி வியந்தாள். 

அவளால் அதற்குமேல் பேச முடியவில்லை. ஏதேதோ பேச வேண்டும் என்று எண்ணிக்கொண்டிருந்த தெல்லாம், அந்த உவமையைக் கேட்ட வியப்பில் அடிப்பட்டுப் போய் விட்டன. அவரை நேரில் காணும்போது பேச வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்த தெல்லாம், இப்போது பேசத் தகுதியற்ற விஷயங்களாகி விட்டன. அவர் எவ்வளவு பெரிய அறிவாளியாக இருக்கிறார்! 

பாரதி காப்பி கொண்டு வந்து வைத்தாள். காப்பியை அருந்தியபடியே “தாங்கள் தினமும் இங்கு வரப்போவதாகச் சொன்னீர்கள் அல்லவா?” என்று கேட்டார் சேதுபதி. 

“ஆமாம்” என்றாள் பார்வதி. 

“அவசியம் வந்து போய்க் கொண்டிருங்கள். நேரம் கிடைக்கும் நாட்களில் நானும் வந்துவிடுகிறேன்.பொதுவாகச் சில விஷயங்களைப்பற்றி இருவரும் பேசிக் கொண்டிருக்கலாம். உங்களிடம் பேசிக் கொண்டிருப்பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி ஏற்படுகிறது” என்றார் சேதுபதி. 

பார்வதி தலையைக் குனிந்து கொண்டாள். அது அடக்கத்தின் அறிகுறியா? வெட்கத்தின் விளைவா? 

வாசலில் ஸ்கூட்டர் வரும் ஓசை கேட்டது. “பாரதி, யார் என்று பார்த்துவிட்டு வா” என்றார் சேதுபதி. 

பாரதி வெளியே போய்ப் பார்த்தாள். ராஜா வந்து கொண்டிருந்தான். 

அவனைக் கண்டதும் பாரதியின் இதயம் படபடவென்று அடித்துக் கொண்டது. ‘ராஜா இப்போது எதற்காக இங்கே வருகிறார்? அவருடன் ஏதேதோ பேச வேண்டுமெனத் துடித்துக் கொண்டிருத்தாள்,பாரதி. ஆனால் அப்பாவும் பிரின்ஸிபாலும் இருக்கும்போது எப்படிப் பேசுவது?’ 

“எங்கே வந்தீர்கள் ராஜா?” 

அவளுக்கு ராஜா பதில் கூறிக் கொண்டிருக்கும்போதே, அப்பாவும் பிரின்ஸிபாலுமே வாசலுக்கு வந்து விட்டார்கள். 

“அத்தை! எங்கள் கல்லூரி பிரின்ஸிபால் தங்களைச் சந்திக்க வேண்டும்” என்று சொல்லிக் கொண்டிருந்தார் 
அல்லவா! இன்று நம் வீட்டுக்கு வந்து காத்திருக்கிறார்” என்றான் ராஜா. 

“அப்படியா? இதோ வருகிறேன்” என்று ராஜாவுக்குப் பதில் கூறிய பார்வதி, சேதுபதியிடம் விடை பெற்றுக் கொண்டு புறப்பட்டாள். 

சேதுபதிக்கும் பார்வதிக்கும் இன்னும் வெகு நேரம் பேசிக்கொண்டே இருக்கவேண்டும் போலிருந்தது. 

பேசுவதற்கு வேண்டிய விஷயங்களும் அவர்களிடம் இருந்தன. சந்தர்ப்பமும் அதற்கு இடமளித்தது. அவர்கள் பேசினார்கள். ஏதேதோ பேசினார்கள். ஆனால் இருவரும் தங்கள் இதய ஆழத்தில் புதைந்து கிடந்த ஓர் எண்ணத்தை மட்டும் வெளியிட முடியாமல் தவித்துக் கொண்டிருந்தனர். சூழ்நிலையும் சந்தர்ப்பமும் இடமளித்தபோதிலும், ஏதோ ஒரு பெரிய சுவர் அவர்களுக்குக் குறுக்கே நின்றது. வயதாகி விட்டது என்ற காரணமே அந்தச் சுவராயிருக்குமோ? 

குறுத்து ஆறு 

அகத்திக் கீரையைக் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்துப் பசு மாட்டுக்குக் கொடுத்துக்கொண்டே, அதன் கழுத்தைத் தடவியபடி,கடமையற்ற, கல்லூரிக்குச் செல்ல வேண்டிய அவசரமற்ற ஞாயிற்றுக்கிழமையின் விடுமுறை நிதானத் தைச் சாவகாசமாக அசை போட்டுக் கொண்டிருந்தாள் பார்வதி. வாரம் முழுவதும் கல்லூரி அலுவல்களில் ஆழ்ந்து விடும் அவளுக்கு ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் தான் ஓய்வுத் தினம். ஆயினும் விடுமுறை நாட்களில்கூட அவள் வீண் பொழுது போக்குவதில்லை. 

ஓய்வு நாட்களில் வீட்டிலேயே இருந்து கவனிக்க வேண்டிய வேலைகளுக்கு முதல் நாளே திட்டம் போட்டு வைத்துக்கொள்வாள். 

அன்று ஞாயிற்றுக்கிழமை. பத்து மணிக்கெல்லாம் சாப்பாட்டை முடித்துக்கொண்டு மாடிக்குச் சென்று பீரோவில் அடைந்து கிடக்கும் காகிதக் குப்பைகளையும், பழைய கடிதங்களையும் எடுத்து வெளியே போட்டு, வேண்டாத வற்றை ஒதுக்கி, வேண்டியவற்றை மட்டும் ஒழுங்காக அடுக்கி வைக்க வேண்டும் என்று முதல் நாளே திட்டம் போட்டு வைத்திருந்தாள். 

கடந்த மூன்று ஞாயிற்றுக்கிழமைகளாகவே இந்த வேலையை அவள் தள்ளிப் போட்டுக் கொண்டிருந்தாள். காரணம், முப்பது ஆண்டுகளாகச் சேர்ந்துள்ள குப்பைகளைக் கிளறும்போது தன்னுடைய கடந்த கால வாழ்க்கை விநோ தங்களெல்லாம், தான் அனுபவித்த இன்ப துன்பங்களெல்லாம் நினைவில் தோன்றி சஞ்சலப்படுத்துமல்லவா? 

மணி ஒன்பது இருக்கும். கல்லூரி மாணவிகள் இருவர் பிரின்ஸிபால் பார்வதியின் பேட்டிக்காக வாசலில் காத்திருந்தனர். பார்வதி, உள்ளே சமையலறையில், ஞானத்துக்கு உதவியாகக் காய்களைத் திருத்திக் கொடுப்பதில் முனைந்திருந்தாள். அவளுடைய ஞாயிற்றுக்கிழமை திட்டங்களில் அதுவும் ஒன்று! காய்கள் திருத்துவதில் பார்வதிக்கு எப்போதுமெ பிரியம் அதிகம் ! 

வாழைப்பூவின் இதழ்களை ஒவ்வொன்றாகப் பிய்த்து அதன் நீள நீளமான பூக்களைத் தனித்தனியாகப் பிரித்து எடுத்து, அந்தப் பூக்களின் இதயத்தில் ஒளிந்திருக்கும் ‘கள்ளனை’க் கண்டு பிடித்து அகற்றுவது ஒரு பெரிய கலை. அன்று அதை ஒரு விளையாட்டுச் சிறுமிபோல் செய்து மகிழ்ந்து கொண்டிருந்தாள் பார்வதி. 

வாழைப்பூ ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த பார்வதி தன் வாழ்க்கையை எண்ணிப் பார்த்துக் கொண்டாள். 

‘என் இதயத்தில் புகுந்திருக்கும் கள்ளனைக் கண்டு பிடித்து அகற்றும் சக்தி எனக்கு உண்டா?’ இந்தக் கேள்விக்கு அவளால் விடை காண முடியவில்லை. கை, பூவிலுள்ள கள்ளர்களைக் களைந்து கொண்டிருந்தது. அதே சமயத்தில் மனம் தன் இதயக் கள்ளனைக் களையும் மார்க்கம் புரியாமல் தவித்துக் கொண்டிருந்தது. 

“அத்தை! வாசலில் யாரோ இரண்டு மாணவிகள் உங்களைப் பார்க்கக் காத்திருக்கிறார்கள்” என்று ராஜா கூறிய வார்த்தைகள் அவள் சிந்தனையைக் கலைத்தன. 

பார்வதி எழுந்து வாசலுக்குச் சென்றபோது அங்கு உட்கார்ந்திருந்த மாணவிகள் இருவரும் மரியாதையோடு எழுந்து நின்று வணக்கம் செய்தனர். 

“ஓ, நீங்களா !…ஒரு வாரமாக நீங்கள் வகுப்புக்கு வருவதில்லை என்று கேள்விப்பட்டேன்…ஏன்?… சம்பளம் கட்ட முடியவில்லை என்றால் என்னிடம் வந்து சொல்லி யிருக்கலாமே!… நான்கூட ஒரு காலத்தில் உங்களைப்போல் சம்பளம் கட்ட முடியாமல் கஷ்டப்பட்டவள் தான். வறுமை, உங்கள் படிப்புக்குத் தடையாயிருக்கக் கூடாது. உங்கள் தாய் தந்தையரை எனக்குத் தெரியாது. அதனால் பரவாயில்லை… உங்களிருவருடைய சம்பளத்தையும் நான் கட்டி விடுகிறேன். நாளையிலிருந்து வகுப்புக்கு வந்து விடுங்கள். சரி… நீங்கள் போகலாம். இதைச் சொல்லுவதற்குத்தான் உங்களிருவரையும் வரச் சொல்லியிருந்தேன்'” என்றாள் பார்வதி. 

நன்றிப் பெருக்கின் உணர்ச்சியில் அந்தச் சகோதரிகள் இருவரும் கண்களில் கண்ணீர் மல்கப் பேசமுடியாமல் மௌனிகளாக நின்றனர். அந்தப் பெண்களின் மௌனத்தில் ‘கள்ளன்’களைப்போல் மறைந்து கிடந்த ஆயிரம் நன்றிகளைப் பார்வதி கண்டுகொண்டாள். 

‘நீங்கள் போகலாம்’ என்று இதமான மிதமான தனது மொழிகளால் அவர்களுக்கு ஆறுதல் கூறி அனுப்பிய பார்வதி உள்ளே போகும்போது, “பாவம் நன்றாகப் படிக்கிற குழந்தைகளின் குடும்பம் வறுமையால் வாடுகின்றன. வசதியுள்ள குடும்பத்தில் பிறக்கும் குழந்தைகளோ நன்றாகப் படிப்பதில்லை” என்று தனக்குத்தானே வாய்விட்டுச் சொல்லிக்கொண்டு போனாள். 

பார்வதியால் எதையும் பொறுத்துக்கொள்ள முடியும். சம்பளம் கட்ட முடியாமல் எந்த மாணவியும் படிப்பை நிறுத்தி விடுவதை மட்டும் அவளால் சகிக்க முடிவதில்லை. 

சாப்பிட்டு முடிந்ததும் திட்டப்படி மாடி அறைக்குச் சென்று பீரோவைத் திறந்து அதிலிருந்த பழைய குப்பைகளை எடுத்து வைத்துக்கொண்டாள் பார்வதி. 

ஒவ்வொரு காகிதமாக எடுத்துப் படித்துக்கொண்டே வந்தபோது, அவளுடைய கடந்த கால வாழ்க்கையில் நிகழ்ந்த சம்பவங்கள் ஒவ்வொன்றாக நினைவில் தோன்றி அவள் கண்களைப் பனிக்கச் செய்தன. அந்தக் குப்பைகளுக் கிடையே பளிச்சிட்ட திருமண அழைப்பிதழ் ஒன்று அவள் கவனத்தைக் கவர்ந்தது. முப்பது ஆண்டுகளுக்குமுன் அவளுடன் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த அவள் தோழி சரஸ்வதியின் திருமணப் பத்திரிகை அது. பார்வதி ஆவலுடன் அதைப் பிரித்துப் பார்த்தாள். 

சௌபாக்கியவதி சரஸ்வதிக்கும், சிரஞ்சீவி சேதுபதிக்கும் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்ட மேற்படி திருமண சுபமுகூர்த்தம் இனிது நடந்தேறி இன்று முப்பது ஆண்டுகளுக்குமேல் ஆகிவிட்டன. 

சேதுபதி! – அந்தப் பெயரை வாசித்தபோது அவள் நெஞ்சத்தில் ஓர் அதிர்ச்சி ஏற்பட்டது. 

சரஸ்வதி!- சேதுபதியின் அறையில் மாட்டப்பட்டுள்ள அவருடைய மனைவியின் உருவப் படம் இந்தச் சரஸ்வதியினுடையதுதானோ? முப்பது ஆண்டுகளுக்கு முன்பு பழகிய தன்னுடைய கல்லூரித் தோழி சரஸ்வதியின் முகத்தை நினைவுக்குக்கொண்டு வந்து அந்த முகத்துடன் படத்திலுள்ள முகத்தை ஒத்திட்டுப் பார்க்க முயன்றாள். ஊஹூம்; முடியவில்லை. பால்ய சிநேகிதி சரஸ்வதியின் முகம் அவளுக்கு மறந்தே போய்விட்டது!

படத்திலுள்ள சரஸ்வதிக்கு வயது முப்பது அல்லது முப்பத்தைந்துக்கு மேல் இருக்கலாம். கல்லூரித் தோழி சரஸ்வதியை அவள் பதினெட்டு வயது கன்னிப் பெண்ணாயிருந்தபோது கண்டதுதான். எனவே, அடியோடு மறந்து போன ஒரு முகத்தை, முப்பத்தைந்து வயதான ஒரு சுமங்கலியின் முகத்தோடு ஒப்பிட்டுப் பார்த்து, அந்தச் சரஸ்வதிதானா இவள் என்பதை நிச்சயப்படுத்துவது அவளால் இயலாத காரியமாயிருந்தது. 

எண்ணங்கள் சுழன்றன. ஏதேதோ குழப்பங்களும், ஆசைகளும், கவலைகளும் கற்பனைகளும் பார்வதியின் நெஞ்சத்தில் புகுந்து புயலாகப் பரிணமித்துச் சுழன்று கொண்டிருந்தன. 

முப்பத்திரண்டு ஆண்டுகளுக்குமுன் ஒருநாள், பார்வதிக்கு அப்போது பதினெட்டு வயது இருக்கலாம். இதே சாரதாமணிக் கல்லூரியில் இன்டர்மீடியட் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தாள். அவளுடைய தந்தை பலராம வாத்தியார் எலிமென்டரி பாடசாலையில் நீண்ட காலம் ‘எழுத்தறிவிக்கும் இறைவனாக’ இருந்து வயிற்றைக் கழுவி விட்டுத் தன் மகள் பார்வதியையும், மகன் சிவராமனையும் பால்ய வயதிலேயே அநாதைகளாக்கிச் சென்றுவிட்டார். 

பலராம வாத்தியாரின் நண்பர் சாம்பசிவம் பார்வதியையும், அவள் அண்ணனையும் தன் வீட்டோடு அழைத்து வந்து ஆதரவு காட்டி வளர்க்கலானார். 

உரிய காலத்தில் சிவராமனுக்குத் திருமணம் நடந்தது. மறு வருடமே அவன் மனைவி ஓர் ஆண் குழந்தையைப் பெற் றெடுத்துத் தன் வாழ்க்கையை முடித்துக் கொண்டாள். அந்தத் துயரம் தாங்காமல் சிவராமன் பார்வதிக்குக் கடிதம் எழுதி வைத்துவிட்டு யாரிடமும் சொல்லாமல் கொள்ளாமல் வடநாட்டுக்கு யாத்திரை கிளம்பிப் போய்விட்டான். போனவன் போனவன்தான்; அப்புறம் திரும்பவேயில்லை 

அன்றே அண்ணனுக்குப் பிறந்த ஆண் மகவைக் காப்பாற்றும் பொறுப்பு பார்வதியின் தலையில் விழுந்தது. கன்னிப் பருவத்தைக் கட்டிக்காக்க வேண்டிய கடமை, வறுமையின் கொடுமை, இவற்றுக்கிடையே குழந்தையை வளர்க்க வேண்டிய கடமையும் சேர்ந்து நிலை தடுமாறி நின்ற பார்வதிக்கு ஆதரவாக இருந்து பரிவு காட்டியவர் சாம்பசிவம்தான். அவருக்குக் காது சற்று மந்தம். செவிச் செல்வத்தைத் தவிர மற்ற செல்வங்களை யெல்லாம் பெற்று வாழ்க்கையின் இன்பங்களை யெல்லாம் ஆண்டு அனுபவித்து ஏகாங்கியாக வாழ்பவர் அவர். உற்றார் உறவினர்களிடம் ஒட்டுதல் இன்றி, பற்றற்ற ஞானிபோல் தனிமையில் வாழ்ந்து கொண்டிருந்த அந்த வயோதிகருக்கு ஆண்டவன் இப்படி ஒரு பொறுப்பை அளித்திருந்தான். ஆனாலும் பார்வதி அவருக்கு ஒரு பாரமாக இருக்க விரும்பவில்லை. காலையிலும் மாலையிலும் தன் கல்லூரித் தோழிகள் சிலருக்கு டியூஷன் சொல்லித் தந்து அதன்மூலம் கிடைக்கும் பணத்தைக் கொண்டு வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்தாள். விசித்திரமான தன் வாழ்க்கையை எண்ணிப் பார்த்தபோது பார்வதிக்கே வேடிக்கையாக இருந்தது. 

‘எங்கேயோ பிறந்தேன். எங்கேயோ வளர்கிறேன். நான் ஓர் அநாதை. கன்னிப் பெண்; கலியாணமாகாதவள். என்னிடம் இன்னொரு அநாதைக் குழந்தை! இந்தக் குழந்தைக்கும் எனக்கும் ஆதரவு சாம்பசிவம்’. 

‘நான் கன்னிப் பெண்ணாக இருந்து கொண்டே, குழந்தைக்குத் தாயாகவும் இருக்க வேண்டும். படித்துக் கொண்டே பணமும் சம்பாதிக்க வேண்டும். தெருவில் செல்லும் வாலிபர்களின் கண் பார்வையிலிருந்து தப்பி வாழ வேண்டும். படித்துக் கொண்டே, படித்தபடி பணம் சம்பாதித்துக் கொண்டே, அநாதையாக இருந்துகொண்டே, அநாதையை வளர்த்துக் கொண்டே, கன்னியாக இருந்து கொண்டே, கலியாணம் ஆனவளைப் போல் வாழ்ந்து கொண்டே, தேவி!… இதென்ன விசித்திர வாழ்க்கை! யாருக்காக நான் வாழ்கிறேன்? எதற்காக வாழ்கிறேன்?’ 

‘அப்பா, நான் டியூஷனுக்குப் போகிறேன்’ என்று குழந்தையை எடுத்து இடுப்பில் வைத்துக்கொண்டு புறப்பட்டாள் பரர்வதி. 

சாம்பசிவம் சிரித்தார். அந்தச் சிரிப்பிலே வேதனையும் வருத்தமும் கலந்திருந்தன. 

“போகிற இடங்களுக் கெல்லாம் இந்தக் குழந்தையையும் கூடக் கூடத் தூக்கிக்கொண்டு போகிறாயே, இதைத் தொட்டிலில் விட்டுச் சென்றால் நான் பார்த்துக் கொள்ள மாட்டேனா?” சாம்பசிவம் கேட்டார். 

“தங்களுக்கு எதற்குச் சிரமம், அப்பா! கையோடு இந்தக் குழந்தையை எடுத்துக்கொண்டு போவது எனக்கு ஒரு விதத்தில் சௌகரியமாகவே இருக்கிறது. தெருவில் செல்லும் வாலிபர்கள் என்னைப் பார்க்கும்போது ஒரு தாயைப் பார்ப்பதுபோல் மரியாதை காட்டுகிறார்கள். அவர்களுடைய பார்வை குற்றமில்லாமல் இருக்கிறது. ஆகையால், என் ராஜா என் கன்னிப் பருவத்துக்கு ஒரு கவசமாக இருந்து உதவுகிறான்..” 

“நீ ஒரு வேடிக்கையான பெண்!” என்றார் சாம்பசிவம். 

“ஆமாம், இராமலிங்க சுவாமிகள் சரித்திரம் நீங்கள் படித்ததில்லையா? அவர் முற்றும் துறந்த முனிவராகப் பற்றற்று வாழ்ந்த காலத்திலும் தன் இடுப்பில் ஒரு சாவிக் கொத்தைச் செருகி வைத்துக் கொண்டிருப்பாராம். வீடோ, வாசலோ, பெட்டியோ எதுவும் இல்லாமல் வெறும் சாவிக் கொத்தை மட்டும் வைத்துக் கொண்டிருந்ததற்கு என்ன காரணம் தெரியுமா? மற்றவர்கள் தன்னை உயர்வாக, முற்றும் துறந்த முனிவராக எண்ணிவிடக்கூடாது என்பதற் காகத்தான். என் கதையும் ஏறக்குறைய அப்படித்தான். கன்னிப்பெண் என்று என்னை யாரும் எண்ணி விடக்கூடாது என்பதற்காகவே எங்கே போனாலும் இந்தக் குழந்தையைத் தூக்கிக்கொண்டு அலைகிறேன். என்னைப் பார்க்கிறவர்கள், என்னை ஒரு தாயாகப் பார்ப்பார்கள் அல்லவா?” என்று கூறிச் சிரித்தாள். 

“இனிமேல் உனக்கு இந்தக் கஷ்டமெல்லாம் இருக்காது. இன்று மாலை நான்கு மணிக்கு எனக்குத் தெரிந்தவர்கள் உன்னைப் பெண் பார்க்க வரப்போகிறார்கள். நான்தான் ஏற்பாடு செய்திருக்கிறேன். பெரிய பணக்கார இடம். பையன் பி.ஏ. படித்துக் கொண்டிருக்கிறான். ராஜா மாதிரி கண்ணுக்கு லட்சணமாக இருப்பான். நீ என் பேச்சைத் தட்ட மாட்டாய் என்ற நம்பிக்கையில் அவர்களை வரச் சொல்லி யிருக்கிறேன். கலியாணமே வேண்டாம் என்று சொல்லக்கூடாது. சொன்னால் இன்று முதல் நான் உன்னுடன் பேசவே மாட்டேன்”. 

பலமான பீடிகையுடன் பார்வதி மறுத்துக்கூற முடியாத படி விஷயத்தைச் சொல்லி முடித்து விட்டார் சாம்பசிவம். 

அன்று மாலையே சாம்பசிவத்துக்குத் தெரிந்த நண்பரும் அவருடைய மனைவியும் ஒரு வாலிபனுடன் பார்வதியைப் பார்க்க வந்திருந்தார்கள். 

“இவன் என்னுடைய சகோதரியின் மகன் இவனுக்குத் தாயார் தகப்பனார் இல்லை. என் சொத்தெல்லாம் இவனுக்குத்தான் எழுதி வைக்கப் போகிறேன். பி.ஏ.படித்துக் கொண்டிருக்கிறான். பெயர் சேதுபதி…” என்றார் பிள்ளைக்கு மாமா. 

பலகாரங்களையும் தானே தயாரித்த காப்பியையும் கொண்டுவந்து அவர்கள் மூவருக்கும் கொடுத்துவிட்டு நமஸ்காரம் செய்தாள் பார்வதி. 

“இவள் என் வளர்ப்பு மகள். ரொம்பக் கெட்டிக்காரி; பெயர் பார்வதி.” என்று பெண்ணை அறிமுகப்படுத்தி வைத்தார் சாம்பசிவம். 

“பெண் அடக்கமாக இருக்கிறாள்” என்றார் பிள்ளைக்கு மாமா. 

“பிராப்தம் இருந்தால் நடந்துவிடுகிறது” என்றாள் பிள்ளைக்கு மாமி. 

பிள்ளையும் பெண்ணும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். அந்தரங்கமான மௌன மொழியில் பேசிக் கொண்டார்கள். அந்த ஒரு விநாடியிலேயே ஒருவர்மீது ஒருவர் ‘காதல்’ கொண்டார்கள் என்றுகூடக் கூறலாம். 

“காப்பி முதல் தரமாயிருக்கிறது” என்று பையன் நாசுக்காகத் தன் உள்ளத்தைச் சொல்லி விட்டான். 

பார்வதி உள்ளே போய் மறைவாக நின்று கொண்டு அந்த வாலிபனுடைய அழகிய வடிவத்தை, கம்பீரத்தைப் பார்த்து ரசித்தாள். ‘அவன் தனக்குப் புருஷனாக வாய்ப்பானா?’ என்று ஏக்கப் பெருமூச்சு விட்டாள். 

பிள்ளைக்கு மாமா, பார்வதி கொண்டுவந்து வைத்த கோதுமை அல்வாவை ருசித்தபடியே தம் மனைவியைப் பார்த்து, “நீயும் அல்வா செய்கிறாயே! இந்த அல்வாவைப் பார்! எவ்வளவு ருசியாயிருக்கிறது!” என்றார். 

“ஏன், உங்கள் மனைவி செய்யும் அல்வா இவ்வளவு நன்றாக இருக்காதோ?” என்று கேட்டார் சாம்சிவம். 

“என் மனைவி செய்யும் அல்லாவைச் சாப்பிட்டால் அப்புறம் அபிப்பிராயமே கூறமுடியாது” என்றார் பிள்ளைக்கு மாமா கண் சிமிட்டியபடி! 

“அதென்ன அப்படி?” என்று வியந்தார் சாம்பசிவம். 

“அது அப்படித்தான். அந்த அல்வாவைச் சாப்பிட்ட தும் நாக்கும் அண்ணமும் ஒன்றோடு ஒன்றாக ஒட்டிக் கொண்டு பேச முடியாமல் போய்விடும்” என்றார் பிள்ளைக்கு மாமா, பார்வதி உட்பட எல்லோரும் சிரித்து விட்டார்கள்! 

“சரி, நேரமாகிறது; நாங்கள் போய் இரண்டு நாட்களில் தகவல் சொல்லி அனுப்புகிறோம்…” என்று கூறிப் புறப்பட்டனர். அந்தப் பெரியவர்கள். 

அதுவரை தொட்டிலில் உறங்கிக் கொண்டிருந்த குழந்தை, அவர்கள் புறப்படும்போது ‘வீல்’ என்று அழத் தொடங்கியது. 

“இது யாருடைய குழந்தை?” வியப்புடன் கேட்டார் பிள்ளைக்கு மாமா. 

“இந்தப் பெண்ணுக்கு ஓர் அண்ணன் இருக்கிறான். அவனுடைய குழந்தை. அது ஒரு தனிக்கதை” என்றார் சாமசிவம். 

நாலைந்து நாட்கள் கழிந்தன. ஏனோ தெரியவில்லை. இந்தச் சம்பந்தத்தில் எங்களுக்கு இஷ்டமில்லை என்று தகவல் அனுப்பி விட்டார்கள் அந்தப் பெரியவர்கள். 

அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு பார்வதியிடம் கலியாணம் என்ற பேச்சை எடுக்கவே பயந்து விட்டார் சாம்பசிவம். பார்வதியும் தன் திருமணத்தைப்பற்றி அன்றோடு மறந்து விட்டாள். காலம் ஓடிக்கொண்டிருந்தது. திடீரென்று ஒரு நாள் சாம்பசிவமும் கண் மூடிவிட்டார். இதெல்லாம் நிகழ்ந்து இன்று முப்பது ஆண்டுகளுக்குமேல் ஆகிவிட்டன. 

பார்வதி தன் கையிலிருந்த சரஸ்வதி – சேதுபதியின் திருமணக் கடிதத்தை இன்னொரு முறை படித்துப் பார்த்து விட்டு, 

“அன்று தனனைக் காணவந்த வாலிபன்தான் சேதுபதியா? சரஸ்வதிதான் அவருடைய மனைவியா? சேதுபதியின் வீட்டில் மாட்டப்பட்டுள்ள திருவுருவப் படம் என் தோழி சரஸ்வதியினுடையதுதானா?” என்று யோசித்தாள். 

அன்று மாலை சேதுபதியின் வீட்டில் பாரதிக்கு டியூஷன் சொல்லிக் கொண்டிருந்தபோது பார்வதி கேட்டாள்: 

“பாரதி! உன் அம்மா பெயர் என்ன?” 

“சரஸ்வதி!” என்றாள் பாரதி. கன்னியாகவே ஐம்பது வயதைக் கடந்து விட்ட பார்வதிக்கு, என்றுமே, யாரிடமுமே ஏற்படாத பந்தமும் பாசமும் இத்தனை வருடங்களுக்குப் பிறகு சேதுபதியிடம் ஏற்படுவானேன்? விட்ட குறை தொட்ட குறை என்பார்களே, அது தானோ? – பார்வதி நீண்டதொரு பெருமூச் செறிந்தாள்.

– தொடரும்…

– விசிறி வாழை, 12வது பதிப்பு: 1997, சாவி பப்ளிகேஷன்ஸ், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *