கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினகரன் வாரமஞ்சரி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 2, 2022
பார்வையிட்டோர்: 16,493 
 

(1960ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அன்று சனிக்கிழமை. அது, ராயப்பு அம்மானின் முழுக்கு நாள்..

அம்மான் முழுகப்போகிறாரென்றால், வீடு, ‘அமர்க்களப்படப்போகிறது’ என்று அர்த்தம். இந்த முழுக்கு நாளில் தான் சவுந்தரியின் நினைவும் அலைமோதி எழும். இன்றும் அப்படி. அவளை நினைக்க நெஞ்சு நீவிப் பெருமூச்சு எகிறிக் குதிக்கிறது. கண்களில் ஒரு காந்த மயக்கம். உத்தம வேதக்காரராதலால், அது பக்தி மயக்கமாகவுமிருக்கலாம்.

ஒரு வாரத்துக்கு முன்புதான் அந்தச் சம்பவம் நிகழ்ந்தது. அம்மானுக்கோ இன்று நேற்றுமாதிரி இருக்கிறது. அவருள் எழுகிற சுரீரிப்பு ஒரு மின்னற் கீற்றுப்போல் மனத்தைப் பிரளயப்படுத்துகிறது.

‘என்ன கோதாரியெண்டு அந்த மனம் வந்தது?’

அவள் நினைவின் உணர்வூற்றுச் சுணைப்போடுதான் இன்றும் அம்மான் முழுக அடுக்கப்பண்ணுகிறார்.

வெள்ளாப்போடு எழுந்து, கூரையால் இறக்கிய சேவற்கோழி முற்றத்தில் கால் வைக்கவே அப்பிப்பிடித்து. அப்படியே குசினிக் கப்பில் அதன் தலை பறக்க அடித்துக் சகுளோஸ்’ பண்ணிவிட்டு, அதன் உடல் பதற அவரும் கை உதறியவராய்த் “தாவார’ப் பக்கம் சென்று அதை வெகு ‘நீற்’றாக உரித்து மனைவியிடம் கொடுத்தார்.

“றோசு, புளிமுள காய் உறைக்கத்தக்கனதா, ஏதேன் உண்டணப் போட்டுக் காரசாரமாகக் காச்சு.”

சவுந்தரி அழுந்தலில் எழுந்த ஒரு ககமான வீறாய்ப்பு உந்த மனைவியிடம் சமைக்கச் சொன்ன அம்மான், நல்லெண்ணெய்ப் போத்தலை எடுப்பித்துக் கைக் குவளையில் வார்த்துத் தலை சளிக்க வைத்தார். நெஞ்சு, முதுகு, கை, கால், நாரிப்பூட்டு என்று சர்வாங்கமாக உரஞ்சிவிட்டுச் சற்று நேரம் முற்றத்தில் நின்று உலாத்தினார்.

தேகத்தில் சாடையாக முறுக்கேறிற்று.

அந்தவாக்கில் நேரே கொட்டடிக் காத்தான் கள்ளுக் கொட்டிலுக்கு எழுந்தருளினார். போன சுவட்டோடு காத்தான் முட்டியில் மண்டிக் கிடந்த பனையானிலும் தென்னையானிலும் கலந்து புளாவில் வார்க்க, இவர் பனைக்குத்தியில் இருந்து ஒருபாட்டம் அடித்தார்.

அப்பவும் ‘பொச்சம்’ அடங்கவில்லை.

அந்தச் சூட்டோடு உடம்பில் கொஞ்சம் உசார் ஏற்ற, ஒரு அரைப்போத்தல் ‘கறுப்பானை’யும் வேண்டிக் கமக்கட்டுக்குள் வைத்தார். மனங் கேக்கவில்லை. எனவே, அதிலும் ஒரு ‘அரைக்கிளாஸ்’ வாயில் ஊற்றிய பின், மால்வடை ஒன்றை ‘ரேஸ்ற் பண்ணிக்கொண்டு எழுந்த அம்மான், ‘பேசுந் தரமோ காதல் பரவசமானால்?’ என்று “சிந்தாமணி’யில் எம். கே. தியாகராஜபாகவதர் பாடிய பாட்டை முணுமுணுத்து முடிய, இந்த இன்பமே சொந்த மதானால் வானுலகம் வேண்டாம்’ என்று ‘அம்பிகாவதி’ யில் சந்தானலஷ்மியோடு – பாகவதர் பாட்டையும் தொண்டை திறந்து ராகமிழுத்துப் பாடிக்கொண்டு, நாவாந்துறைக் கடற்கரையோரமாக வீட்டுக்கு நடையைக் கட்டினார்.

புசுபுசுத்து வீசுகிற ஆனிச் சோளகக்காற்று இதமாக இருந்தது.

கடற்கரை வெளி தாண்டி மண்புட்டிச் சவக்காலை கழிய, சிறீவள்ளி நாடகத்தில் சங்கீத மேதை கிட்டப்பா பாடிய காயாத கானகத்தே நின்றுலாவும் நற்காரிகையே’ என்ற ராகமாலியைத் தனது சுருதியில் ஆலாவர்ணனை யோடு பாடி அம்மான் வீடு வந்து சேர, பொழுதும் உச்சிக்கு ஏறிவிட்டது.

வந்தவர் அயல் வீடுகள் கேட்கக் கண்டம் திறந்து தாளம் லயம் சுருதி பாராமலே தன்பாட்டில் நாடகம் படங்கள் பாடல்களை உரத்துப் பாடலானார். அப்போது கிட்டப்பா, எம். ஆர். கோவிந்தன், சுந்தராம்பாள். மகாலிங்கம், பி. யு. சின்னப்பா இவரிடம் சங்கீதப்பிச்சை வாங்கிக் கொண்டிருந்தார்கள்.

சினிமா, நாடகப் பாடல்களைப் புரட்டியடித்து வாய் ஆறிய அம்மான் சற்று நேரம் செல்ல, கறுப்பானைத் திறந்து ஒரே மூச்சில் ஒரு வீதுறு அடித்தார். வாங்கில் பலகை ஒன்றை எடுத்து முற்றத்தில் குந்திக் கொண்டு அரை அவியலில் அடுப்பில் கொதிக்கிற இறைச்சிக் கறியை ஒரு குண்டானச் சிரட்டையில் எடுப்பித்து ‘ரேஸ்ற்’ பண்ணத் தொடங்கினார்.

பொழுது சாயச்சாய அம்மான் அடித்த ‘சரக்கு’களும் கொஞ்சங்கொஞ்சமாகத் தலைக்கேறிச் சுமாராக வேலை செய்யத் தொடங்கிவிட்டன.

ஒரு பாட்டம் கச்சேரி ஆரம்பமாகியது.

தியாகராஜபாகவதர், எம். எஸ். சுப்புலக்ஷ்மி ஹொன்னப்பப் பாகவதர், தண்டபாணிதேசிகர் போன்ற சங்கீத மேதைகள் கொஞ்ச நேரம் மறுபாட்டமும் அம்மானிடம் சரணடைந்து மீண்டனர்.

சுச்சேரி முடிய சிவந்து போன அம்மான் கண்கள் றோசம்மாவை விழுங்க ஆரம்பித்தன.

“றோசு, இஞ்ச ஒருக்காக்கிட்ட வாடியாத்தை,” வெள்ளை முழிகள் முற்றாகவே சிவந்து துன்னிட்டன. றோசம்மாவுக்குச் சாடையாக நடுக்கம் எடுத்தது.

‘இண்டைக்கு என்பாடு உத்தரிப்புத்தான்’

அடுக்களையில் அவள் மிகப் பரபரப்போடு சமையற் பாட்டைக் கவனித்துக்கொண்டிருப்பதை அவதானித்த அம்மான், கொஞ்ச நேரம் அலம்பாமல் மீசையில் கை போட்டு முறுக்கிக் கொண்டார்.

கடையடிக் கணேசன், அழுக்கடைச் சண்முகம், காராள முத்தன் போன்ற பிரபல யாழ்ப்பாணத்துச் ‘சண்டியர்’கள் அவர் நினைவில் வந்து போயினர்.

கிறங்கிப் போன அவர் கண்கள் றோசம்மாவைத் திருடுவது போல் கள்ளமாக உற்றுப்பார்த்தன.

“றோசு, நீ இப்ப என்னில நல்ல ‘கரிசனை’தான்”, என்று ‘தக்கு’ வைத்து முணுமுணுத்தது, வாய்.

றோசம்மாவுக்குப் ‘புண்ணில் புளி பற்றின’ சாடை எரிந்தது.

“வயது வந்த கடுக்கண்ட புள்ளையன் இருக்கிறதையும் கவனியாமல், சீத்தல் குடி வாக்கில இதென்ன திலிச செட்ட பேச்சுகள் உந்த நாத்தல் வாயில் வருகுது?”

றோசம்மா சினந்து பொரிந்ததை அவர் கவனித்துக் கொண்டார். அவள் பொச்சரிப்போடு அம்மானைப் பார்த்த போதும், அவர் ரசித்துச் சிரித்து உதடுகளைப் பனாட்டுத்தட்டாட்டம் அப்பிக்கொண்டு மவுனமாகவிருந்தார்.

சவுந்தரிமட்டில் அம்மான் நடந்து கொண்ட விதம்– அந்தத் தவறு – அவர் மனத்தை இப்பவும் உறுத்துகிறது. அதை உணர்ந்தவராய் சற்று நேரம் ஊமையானார். ஆனால், கண்கள் றோசம்மாவையே மேய்ந்தன.

‘றோசு புத்தி யூகம் இல்லாட்டியும் எனக்கு வாய்ச்ச பத்தினி – என்ர ராசாத்தி..’

சொண்டுகளை நன்னிக்கொண்டு அந்த இன்ப மயக் கத்திலே மனைவியைப் பார்த்தபடி, இக்கால ராஜபாட் நடிக கலாமணி சிலுவைராசா பாடிய நாட்டுக்கூத்துப் பாட்டைக் கொஞ்சம் ‘தக்கு’ வைத்துப் பாடலானார்.

“வண்டனெங்கும் குழலாளே – காதல்
மான்விழியே ஒயிலாளோ
செண்டரும்பும் செவ்விதழே – எந்தன்
சித்தினியே பத்தினியே
அண்ணல் நானுன் அருங்கணவன் – உன்மேல்
ஆசை கொண்டேன் தேன்மொழியே
வண்ணமலர்ச் சித்திரமே -ஆசைக்
கண்மணியே விண்ணொளியே!”

சடுதியாக வாங்கில் பலகையைத் தள்ளியவர் கோவணக் கட்டோடு சப்பாணி கட்டி இருந்து கொண்டு, மிஜ்ர சாப்புத் தாளத்தை மூன்று வீச்சு அடியாகப் பிரித்துத் தொடையில் போட்டபடி ஒரு சள்ளைப் பாடாகச் சரிந்து றோசம்மாவைப் பார்த்துக் கண் சிமிட்டினார்.

றோசம்மா வெகு குளிர்த்தியாகப் புல்லாங்குழலிசை யில் இரை மீட்க மறந்த பசுவைப்போல் தனக்குள் ரசித்த வேண்ணம் அவர் பாடுகிற பாடல்களைக் கேட்டுக் கொண்டிருந்தாள்.

றோசம்மா புத்திபேதலித்தவளாயினும், புருஷனை ஓரக்கண்ணால் நாணித்துப் பார்த்தபோது, இளங்கால நினைவுகள் சிலம்பமாடின.

‘மனிசன் என்னில் சரியான ஆசை, எந்த நேரமும் அவருக்கு என்ர நினைவுதான். அதுதான் அவர் படிக்கிற பாட்டிலயும் அப்புடி வருது’

இச்சையோடு அர்த்தப்படுத்திக்கொண்ட றோசம்மா, “உதில இருந்து உப்பிடியே புலம்பிக் கொண்டிருக்காமல் நேர காலத்தோட போய் முழுகிப்போட்டு வந்து கை கால் அலுப்புத்தீர எப்பனுக்குப் படன்” என்று மிகையான பாசத்தோடு சற்றுச் சினப்பாகவே கூறினாள்.

“என்ன, அலுப்புத்தீர வந்து படுக்கட்டோ?”

தேவையற்ற ஒரு ‘தக்கு’ வைத்துத் திரும்பப் பதில் கூறிய அம்மான், மனைவிக்கு ஓர் இன்ப உணர்வை நினைவூட்டினார்.

இன்றைய அவரின் கோலநிலை அவளுக்கு வள்ளீசாகப் புரிந்து விட்டது.

‘இண்டைக்கு எக்கணம் இந்த மனுஷனோட பெரிய சில்லெடுப்புத்தான். முழுக்கு நாளில் எனக்கு ஒரு உத்தரிப்புஸ்தலம்’

“உதென்ன உந்த வாயில வந்த நரகல் பேச்சு?”

“பின்ன என்ன? றோசு சும்மா படுத்தாப்போல அலுப்புத்தீருமே?”

அவர் பேச்சுக்கு மறுபேச்சுக் கொடுத்தால் பிறகு * வம்பில’ வந்து முடியும் என்ற பீதியில் றோசம்மா வாய் திறக்கவில்லை.

அவள் மௌனம் ஒரு சவாலாக – தன் ஆண்மைக்கே இழுக்காக அவருக்குப் பட்டது.

அந்த மௌனத்திற்கும் அம்மான் ‘கரு’ வைத்து ஒரு பாட்டம் விளாசினார்:

“றோசு. நீ இப்ப கடைசியா உன்ர வாயையும் மூடிப் போட்டாய். பொறு வாறன… முழுகிப் போட்டு வந்து, பொலிஸ் சின்னத்தம்பியிட்டப் பழகின சீனடிசிலம்படி விளையாட்டில் ஒண்டு காட்டி வைக்கிறன்.”

ஏதோ ஒரு பாட்டை முணுமுணுத்து ராகமிழுத்தார்.

இந்தக் கட்டத்தில் தெருப்படலையில் ஒரு பையன் குரல் கேட்டது:

“அம்மான்…?”

ஜேக்கப்பர் நிலை குத்தி நின்றார்.

அவர் பார்வை, ‘அதாற்ரா அது?’ என்று கேட்பது போல் முறைத்துக் கிடந்தது.

“எங்கட அப்பு உங்களை ஒருக்கா அவசரமாக வந்திட்டுப் போகட்டாம்.”

“சுவாம்பிள்ளையின்ர பொடியன் – சவுந்தரியின்ர தம்பி”

அது, ஆனந்தம் என்பதை அவன் குரலில் அம்மான் மட்டுக்கட்டிக் கொண்டார்.

“தார், ஆனந்தமே?”

“ஓம்”

“என்ன சங்கதி; அவசரமாமே?”

“ஓமாக்கும். உடன வரட்டாம்.”

பெருமிதத்தில் அம்மான் நெஞ்சு நிமிர்ந்தது.

விசாரிப்பை நிறுத்திவிட்டு சற்று வேளை சிந்தனையிலாழ்ந்தார்.

மனம் குருக்குத்திற்று.

“தம்பி, நீ போ. தலையில் சீயாக்காய் வெந்தயம் வச்சிட்டன். முழுகிப்போட்டு வாறன்”

ஆனந்தம் திரும்பிவிட்டான்.

அம்மான் முகம் “சடாரென்று கறுத்துச் சூம்பிற்று’ காலையிலிருந்து வலு ‘குஷி’யாக அமர்க்களப்பட்டுக் கொண்டிருந்த அம்மான், சகலதையும் இழந்தவராக ஆசுவாசப்படலானார்.

‘சவுந்தரி…’

அவளை நினைக்கவே அவர் நெஞ்சு இப்போது குபீரித்தது.

“அவள் பொடிச்சியின்ர சங்கதியாகத்தான் இருக்கும். அவள் இப்பவும் வாய் துறந்து வெளிய சொல்லாத படியால் தான் நான் இன்னும் ஊரில் ஒரு மனிசனாட்டம் உலாவித்திரியிறன். பொடிச்சி மட்டும் ‘அதை’ச் சொன்னா ளெண்டால், நான் பொலிடோல்’ தான் குடிக்க வேணும்.”

தூங்குகிற கோழியாட்டம் அம்மான் தலை கவிழ்ந்தது.

‘அவள் தான் இனி ஒருத்தனையும் கட்டமாட்ட னெண்டுறாளே. இந்தக் கோலத்தில இப்ப நான் அங்க எதுக்குப் போவான்?’

கணை ஒன்று மனதிற் கொழுவியது.

‘வந்த ஒரு நல்ல சம்பந்தத்தையும் வேண்டா மெண்டிட்டாள். ஒரு வேளை என்னை ஊருக்க காட்டிக் குடுக்க அடுக்குப் பண்ணுறாளோ?’

மனசு துணுக்கிற்று.

‘ஏதோ பாப்பம், வியளத்தை அறிஞ்சு வருவம்’

அசட்டுத் துணிச்சல் அருக்கூட்டிற்று.

பொழுது உச்சி சரிந்து விட்டது. முற்றத்தில் கொம்மாளம் கொட்டிய அம்மான், பையன் வந்து போன பின் மலாரடித்துக் கிடந்தார்.

ஏதோ நினைத்தவராகத் ‘திடீரென்று எழுந்து கிணற்றடிக்குச் சென்ற கையோடு தாக்கற முழுகலானார்.

முழுக்கு முடிந்து திரும்புகையில் கண்கள் மிளகாய்ப் பழம்போல் சிவந்து விட்டன. வெறி துப்பரவாக முறிந்து விட்டது. மனதில் உறைந்திருந்த கொஞ்ச உசார்கூடச் சோர்ந்து விட்டது. இருந்தும் அம்மான் அந்தரபவனியில் தான் நின்றார்.

நிலம் கறுத்து விட்டது. செக்கல் நேரம்.

கிராமத்து ஆசனக் கோயிலில் திருந்தாதி மணி ஒலி அம்மான் நெஞ்சில் இன்று இடியேறாக அதிர்ந்தது.

செக்கற் குளிர் காற்று அவர் உடம்பில் பரவியது. தேகம் புல்லரித்தது.

‘போவோமா விடுவோமா?’

மனம் அங்கலாய்க்க, சார்மனையில் பாடாகக் கிடந்து தலை திருகச் சரிந்து, அரிக்கிற காதுக்குள் ஓர் ஈர்க்கிலால் குடும்பியைக் குடைந்து கொண்டே சிக்கலான அந்தச் சங்கடத்தில் மூழ்கிய அம்மான், நீண்ட நேரம் தனது மனக் குமுறலை மெதுவாக இறக்கிக் கொண்டிருந்தார்.

சம்பவங்கள் கானல் நீர் போல் வெறும் நினைவுச் சுழிகளாகக் கழிந்தன.

‘சிக், துப், தூ’

அடி வயிறு எக்கி ஒரு பாட்டம் காறித்துப்பினார். முகம் அஷ்டகோணமாகியது. குமைந்து வந்த குமட்டலை அருவருத்து வெளியே துப்பினார்,

‘நாய் வாய் நக்குத் தண்ணியாட்டம் எங்க போய்க் குந்தினாலும் அந்தப் பொட்டையால எனக்கு மீளாத உத்தரிப்பு.. ‘

மனங்கனிந்தது. ஒருவித சினப்போடு சகட பாணியில் உன்னி எழுந்தார்.

மணி ஏழு ஏழேகால் ஆயிற்று.

ஒரே தாவில் சார் மனையில் கிடந்த நாரி அவர் உன்னி எழுந்தபோது பாவற்காய் முறிந்த சாடை ‘நறுக்’கென்று *நொறுக் கிட்டது. கரங்கள உயர்த்தித் திமிர்’ மீட்டுச் சோம்பல் முறித்து, வாய் பிளக்கக் கொட்டாவி விட்டவராய் நடந்தார் அம்மான்.

அவர் நடந்தாராயினும் அவரின் இதயத்தைக் கரைக் கின்ற அந்தக் கிலிசகேடு, அம்மான் மனசை விட்டு நகர மறுத்தது. தூண்டில் மீன் மாதிரி உடம்பு தவண்டையடித்தது.

‘ஏதோ கிடக்கிற காலம் மட்டும் நாலு பேரைப் போல இருக்காமல், என்ர திமிர் செய்த வேலை, சும்மா கிடந்த பொடிச்சியிவ தொட்டுப் போட்டு, அவளின்ர கர்மத்தைப் பாக்க முடியாமல் என்னில மாஞ்சு சாகிறன்’

அவர் நெஞ்சில் இப்போது இதுவே சுமையாயிற்று.

அவளைச் சாடையாக மருட்டி ‘அதை’ வெளிய தெரியவிடாமல் ‘சடைஞ்சு’ போட்டு, ஆரேன் ஒருத்தன்ர தலையில் கட்டிவிட்டுச் சும்மா இருக்க அம்மான் மண்டையைப் போட்டு உடைத்தார்.

‘சவுந்தரி…’

காளை இரை மீட்கிறது.

அந்த ஒரு பொழுதின் இன்ப சுகம்…

ஒரு நாள் சாயந்தரம் அம்மான் ஆறுகால் மடத்தில் இருந்து அவளையே நினைத்து ஏதோ திட்டம் வகுத்துக் கொண்டிருந்தார்.

‘தட்டினால் போறன் தடவினால் வாறன்’ என்ற நுளம்பு வாழ்க்கையே தன்னை ஒரு பொறுப்பற்ற மனிதனாக்கியது என்று யோசிக்கவே அவருக்குத் தன் மீது சலிப்பு உண்டாயிற்று.

வேலை வெட்டியின்றி ராஜா வீட்டுப்பிள்ளை போல் ஊர் சுற்றித் திரிந்த காலங்கள் எத்தகைய பாதிப்புகளை உண்டாக்கிவிட்டன. கடமைக்கேனும் பிதா மாதாவைக் கனம் பண்ணாமல் ‘விடுகாலி’ யாய்த் திரிந்த காலம்… ‘பொறுப்பு’க்காக ஒரு கலியாணம்… கலியாணம் பண்ணி யும் பெற்றவர்களை அண்டி உழையாத்தீனில் கொழுத்து தாடோடியான காலத்தில் எதிர் வீட்டு மரியமுத்து வில் மையல் கொண்டு… அவள் அரவணைப்பில் குல விருத்தி கண்டபோது ஊர் சும்மா விடவில்லை. அதன் விளை வாகப் புத்தி பேதலித்த றோசம்மாவைக் கட்டிய மனைவி’ -யாக்கிக் கொண்ட தலையெழுத்து அம்மானுக்கு ‘விதி’யாயிற்று.

இந்த விதியை மாற்ற அவர் பல நாள் தெண்டித்த தன் பயனாக, கிராமத்தில் ‘மக்கள் தொண்டு’ம் ‘சமயத் தொண்டு’ம் இவர் தலையில் சுமத்தப்பட்டன. கேட்பானேன், அம்மான் ஊருக்கே மூப்பரானார்.

ஆனால், அலக்சாந்தனுக்கு அவரால் மூப்பராக முடியவில்லை. இது தான் வில்லங்கம்.

அம்மானுக்கு இவன் சவாலாக முளைக்கவா?

இந்த ‘அநியாயத்தை’ அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை .

‘சவுந்தரியை இவன் கட்டுகிற கெட்டித்தனத்தைப் பாப்பம்’

அம்மான் தீட்டிய திட்டம்…

அவருக்கு இருப்பே கொள்ளவில்லை.

ஒருநாள் தருணம் பார்த்து அவர் அதைச் சாதித்தே விட்டார்.

வெற்றி. அந்த வெற்றிக் களிப்பு இப்பவும் அம்மான் உடம்பில் சிலிர்த்தது.

‘எந்தப் பெரிய சாதனையைச் சாதித்து விட்டேன்.’

ஒரு கணம் திகைத்துப் போயிருந்தார். ஆனால், இந்தத் ‘தொண்டு’ எதில் சேர்த்தி என்பதே அவர் நெஞ்சை இன்றும் சிப்பிலியாட்டிக் கொண்டிருக்கிறது. என்றாலும், தனக்கு எதிரியாக வெளிக்கிட்ட அலக் சாந்தனை மட்டந்தட்டியதில் அவருக்கு ஒரு மன நிறைவு.

பிரிட்டிஷ் சாம்ராஜ்ய அரச கொலு – அந்த ஆளுமையில் அம்மானுக்கு வந்த கவுண்மேந்து உத்தியோகத் தையே உதறித் தள்ளியவர்.

இந்தத் ‘தியாக’த்தால் அம்மானுக்கு ஊருக்குள்ளும் பெருங்கியாதி.

அலக்சாந்தனோ ஏதோ இயக்கம், அணி, சமுதாயம், சமத்துவம், தொழிலாளித்துவம் என்றெல்லாம் அம்மான் கேள்விப்படாத எதையெதையெல்லாமோ வரித்துக் கொண்டு, அம்மானின் இலட்சியத்திற்கே – ஊர்த் தொண்டு சமயத் தொண்டு புரியும் இலட்சியத்திற்கே எதிரியாகி – சவாலாக மல்லுக்கட்டி நிற்கிறான். அது மட்டுமா? அவனுக்குப் பின்னால் ஓர் இயக்க சக்தியான தொழிலாளர் விவசாயக் கூட்டமே பெருகி விட்டது.

இது அம்மான் புகழுக்கு இழுக்கு. அவர் வரித்துக் கொண்ட பிரிட்டிஷ் சாம்ராஜ்ய மன்னர்களுக்கே அவமானம்.

ஆத்திரம் வராதா?

அலக்சாந்தனுக்குப் பின்னால் படைதிரளும் தொழி லாளர் கூட்டத்தைக் காண்கிறபோது, ‘தாக்கை இழுத்துச் செத்தால் என்ன?’ என்றுகூட அம்மான் தன்னுள் அழுந்துவார்.

இப்பவும் அதே அழுந்தல்- அதே புகைச்சல். இவர் மனசுள் இப்போது சுரீரித்தது.

“..தொழிலாள வர்க்கமே சிறந்த போராட்ட சக்தி. அவர்களே அப்பழுக்கற்ற உறுதியுடன் முதலாளித்து வத்தை எதிர்த்துப் போராடத் தகுதி வாய்ந்தவர்கள். தொழிலாள வர்க்கமே முதலாளித்துவத்தின் சுரண்டற் பிடியில் நேரடியாகச் சிக்கித் தவிக்கிறது தொழிலாளர் கள் தங்கள் வீறான கரங்களை ஒரு தடவை ஒன்றாக உயர்த்தினால் அடுத்த கணமே முதலாளித்துவத்தின் விலங்கு பொடிப்பொடியாகி விடும். முதலாளித்து வத்தின் சுரண்டற் கோட்டைகள் தவிடுபொடியாகாத வரை மனித குலத்துக்கு மீட்சி இல்லை…”

‘தொழிலாள வர்க்கம்’ என்றாலே அம்மான், ‘நரகத்தின் பிசாசுகள்’ என்று கருதுபவர். அப்படிப்பட்ட அம்மானால் அவன் போக்கைச் சகித்துக் கொண்டு சும்மா இருக்க முடியவில்லை.

“முதலாளியள் இல்லாமல் தொழிலாளியள் எப்பிடிச் சீவிக்கிறது? இந்த மடையனுக்கு இது தெரியுமா?” என்றும் தன் பாட்டில் பொரிவார்.

‘முந்தா நான் பேஞ்ச மழைக்கு நேத்து முளைச்ச காளான் தனக்கும் ஏதேன் தெரியுமெண்டு ஒருவித எடுப்பு, தொழிலாளர்… முற்போக்கு…. கண்டறியாத முற்போக்கும் மண்ணாங்கட்டியும். இப்பிடிப்பட்ட வங்கள் தான் அமைதியாகச் சும்மா கிடக்கிற ஊரைக் கிண்டி விடுறவங்கள்?

அம்மான் கூற்றிலும் ஒருவகை உண்மையுண்டு. அவரின் ‘ஆசைநாயகி’யோடு அவர் கொண்ட உறவை இவன் ஒருநாள் அவர் மூதாவில்-அதுவும் ‘பப்ளிக்’கில் கண்டித்தே விட்டான். அன்று, அவருக்குப் பிடித்த அட்டமத்துச்சனியன் அவன் மேல் சீறியது

‘ஊரைக் குழப்புகிற பயங்கரப் பிறவி’ என்ற பிரசாரத்தில் அம்மான் இறங்கியே விட்டார்.

ஒரு களத்தில் இரு கன்னைப்போர் களை கட்டிவிட்டது.

அம்மானைத் தட்டிக் கேட்க ஆளில்லை. அவர் மூளை ‘சதி’ என்ற சகதியில் குதித்தது! அவன் மீது அதனை மெல்லப் பாய்ச்சத் தருணம் பார்த்துக் கொண்டேயிருந்தார்.

இதே சிந்தனையில் ஆழ்ந்து போன அவர் மனத் தாக்கம் அவர் சொந்த வாழ்க்கைக்கே ஒரு சவாலாகி விட்டது.

‘அலக்சாந்தனை ஊருக்க தலையெடுக்க விடக்கூடாது.’

விடிந்து பொழுது உறையுமட்டும் அவன் உருவமே அவர் கண்ணில் விஸ்வரூபமெடுக்கிறது.

‘இந்தப் புளுக்கப்பயலை இப்பிடியே நெடுக விட்டால், பிறகு எக்கணம் என்னோட நேரடியாக மோதி என்ர மானத்தையும் கடைசியில் வித்துப் போடுவான். அதுக்கிடையில் ஆளை மட்டத்தட்ட வேணும்.’

அம்மான் சிங்கத்துக்கெதிரே நிற்கும் ‘சேர்க்கஸ்’ காரன் போல் நைந்து சிரித்தார். நெஞ்சு ‘படக்படக்” கென்று குதறியது.

திண்ணையில் வந்து மெதுவாகக் குந்தினார்.

‘அவனை மடக்க வழி என்ன?’

மண்டை பிளக்க யோசிக்கலானார்.

அப்போது அவர் கண்ணில் ஓர் அபூர்வமான காட்சி தெரிந்தது. நன்றாக உற்றுப் பார்த்தார்.

அடுக்களை வாசலோரம் றோசம்மா ஒரு காலை நீட்டி மறுகாலை மடக்கித் தாக்கற இருந்து கொண்டு, எஞ்சிய இறைச்சிக் கறிச் சட்டியில் பழஞ்சோற்றைப் போட்டுக் குழைத்துத் திரணையாக உருட்டி வாய்க்குள் திணித்துக் கொண்டிருந்தாள்.

முற்றத்து வேப்பங்கொப்பில் கரைந்து கொண்டிருந்த அண்டங்காகம் ஒன்று அவள் தலைக்கு மேல் இறாஞ்சி வந்து கதவில் பதுங்கியிருந்து கத்தியது.

‘காலங்காத்தால காகங் கரைந்தால் வீட்டுக்குச் சனியன்’ என்பது றோசம்மாவின் வாகடம்.

அவளுக்கு மனசில எழுந்த அழல் உடல் எல்லாம் புழுங்கியது. சீலம்பாய் கணியம் ‘புறுபுறு’க்கலானாள்:

“ஆ…கொள்ளையில போவான்ர காகம் காலங் காத்தால வந்து வாய்க்க பருக்கையும் வைக்க விடாதாம். ஒரு கண்ட சீருக்குக் கரையுதே… சீ, சனியன்… சூய் சூய், காய் காய்…”

பனை ஓலைச் சருகு ஒன்றை இருக்கி எடுத்து உதறித் துரத்தினாள்.

காகம் பறக்கிறவாக்கில் சொல்லி வைத்தமாதிரி அவள் சாப்பிட்ட சட்டிக்குள் பொழிச்’ சென்று எச்சமிட்டு விட்டுப் பனைக் கூடலுக்குள் மறைந்து போயிற்று.

அவளுக்கு அழுகை வருமாப் போலிருந்தது. வெப்பி சாரத்தோடு சோற்றுச் சட்டியைக் குனிந்து பார்த்தாள். = பொழிச்சிட்ட காக எச்சம் பழஞ்சோற்றுக்குள் சளித்துக் குமிழ்த்துக் கிடந்தது.

அவள் வயிறு குமட்டியது. குடலைப் புரட்டிக் கொண்டு வருவதுபோல் ஓங்காளம் திணறிற்று.

“உஞ்சு … உஞ்சு…” என்று நாயைக் கூப்பிட்டாள்.

அது நாக்கைச் சுருட்டி வளைத்து வாலை ஆட்டிக் கொண்டு அவள் முன்னே வந்து முனங்கியது.

அவள் ஒரு சட்டிச் சோற்றையும் அப்படியே திரட்டி ஒரு தடுக்கில் வைத்தாள்.

அது மூசி மூசி… முகர்ந்து நுகர்ந்து நக்கிய போதும் வாய்க்குள் அடங்க எடுத்து விழுங்குவதாயில்லை. கடைசி யில் நாய் சோற்றைக் கவ்விக்கூடப் பார்க்காமலே முனகிக் கொண்டு திரும்பி விட்டது. –

‘எச்சில் பட்டதை நாயும் தின்னாது…’

ராயப்பு அம்மான் தீர்மானித்துக் கொண்டார், அவர் மனசு அணில் போல் தாவியது.

‘சவுந்தரி…’

‘றோசம்மாவும் சோறும்…’

‘சோற்றில் அண்டங்காகம் போட்ட எச்சம்…’

‘எச்சம் பட்டதை நாய் முகர்ந்தும் பார்க்கவில்லை…’

‘சவுந்தரியை எச்சிற்படுத்தி விட்டால்…. பிறகு அலக்சாந்தன் அவளை ஏறெடுத்தும் பார்க்க மாட்டான்…’

‘இவனை ஒழித்துக்கட்ட, அவளை எச்சமிட வேணும்’

‘சவுந்தரி எச்சிற் பண்டமானால், பிறகு அவன் ஆட்டமெல்லாம் நிக்கும்’

‘வழி…?’

இந்த விதமான நினைவுகளில் அமுங்கிப்போன அம்மான் திண்ணையிலிருந்து எழுந்தபோது, பகல் பதினொரு மணி.

அவர் முகத்தில் புதிய களை கொட்டியது. அதற்கேற்ற வீறு அவர் உடம்பில் அப்போது காணப்பட்டது.

‘இண்டைக்கு வாய்ப்பில்லாட்டி, நாளைக்கெண்டா லும் சவுந்தரியை ஒரு முறை தனியச் சந்திச்சு அலக்சாந்தனைப் பற்றி விளாசித் தள்ளினால், அவள் மனம் பேதலிக்கும். அதுக்குப் பிறகு…?’

மனசில் முதிர்ந்த விபரீத எண்ணங்களைப் பெரும் இலட்சிய வேட்கையாக வரித்துக் கொண்ட அம்மான், மீசையில் கை போட்டு முறுக்கியவராக தன்னாரவாரம் எங்கோ சடுதியில் கிளம்பலானார்.

அவர் உடல் அயர்ந்து உறங்காத நாளும் அதுதான்.

கும்பிடப் போகிற தெய்வம் யாருக்கும் லேசில் குறுக்கே வருவதில்லை; அம்மான் கொடுத்து வைத்தவர். அவரைத் தேடி அந்தத் தெய்வம் அவர் எதிரிலே குடுமியோடு வந்து நிற்கிறது. உள்ளூர்ப் பிரமுகர் கோயில் தொண்டர் — செலவு சித்தாயம் கணக்கு வழக்கு அதிகாரத் தலைவர் அம்மானுக்குத் தரிசனமாகினார்.

“என்ன ராயப்பண்ணை, கோயில் முகாமைக் காரர் உங்களைக் கையோட கூட்டிக் கொண்டு வரட்டாமல்லே” என்றார் அவசரமாக.

தொண்டருடன் எதிர் வீட்டுச் சுவாம்பிள்ளையின் சற்புத்திரன் – சவுந்தரியின் தம்பி ஆனந்தன், ஒரு சேங்கிணி அலுகோசுபோல் பக்கத்தே நிற்பதை அம்மான் கவனித்துக் கொண்டார்.

“தம்பி ஆனந்தம், என்ன சங்கதி?”

அம்மான், ஆனந்தனிடமே விசாரித்தார்.

‘அடிகோலின சங்கதி வாச்சுப் போச்சு. இதைச் சாட்டாக வச்சுக்கொண்டு இந்த ஊரையே ஆட்டலாம்; சவுந்தரியையும் மாட்டலாம்’

அம்மான் தனக்குள் திட்டமிடலானார்.

அவர்கள் கண்கள் ஆனந்தன் பதிலை எதிர் பார்த்து விழித்தன.

“போன கிழமை நடந்து முடிஞ்ச கோயில் பெருநாள் வரவுசிலவு கணக்குப் பாக்கவேணுமாம். அதுக்குப் பாத்தியமாக இந்த வரியம் உங்களைத்தான் பொறுப்பு எடுக்கத் தெரியப் போகினம். அதுக்குத்தான் கையோட கூட்டியரட்டாம்”

‘கணக்குப் பாப்பன், கணக்கும் விடுவன். இப்ப கணக்குத்தான் விட வேணும். கோயிலடியில கூட்ட மெண்டால் வீட்டில பெரியவே இருக்காயினம் போனால் சவுந்தரியைச் சாடைமாடையாக…’

அம்மானின் குயுக்தி மூளை செப்பமாக வேலை செய்தது.

“தம்பி, கொப்பர் வீட்டில் இருக்கிறாரோ கோயிலடிக்குப் போட்டாரோ?”

“வீட்டில்தான் நிக்கிறார்”

‘ஓ…, அப்ப, இப்ப போனால் கரியம் சித்தியாகாது’ என்றது அவர் மனம்.

“நீங்க போங்கோ, அஞ்சு நிமிட்டில கோயிலடிக்கு வாறேன்.”

ஆனந்தன் திரும்பினான். அம்மான் ஏதோ யோசித்தவராகச் சைகை காட்டி அழைத்தார்.

“டே தம்பி, இஞ்ச கிட்ட வா.”

‘என்ன சங்கதி?’ என்று கேட்பது போல் அவர் முகத்தை ஏறெடுத்துப் பார்த்தான்.

“கொக்கா ஏன் போன நாயித்துக்கிழமை கோயிலுக்கு வரேல்ல?”

“சுகமில்லாமலிருந்தவ…”

“ஓ… அப்பிடியே சங்கதி? அது கிடக்க, கொக்கா அவன் அலக்சாந்தனைக் கட்டப்போற தெண்டு ஊரில கதை உலாவுது. உண்மையே?”

“சிக், அந்த விடுகாவாலியையோ?”

“அது என்னவோ எனக்குத் தெரியாது. அக்கா அவரைத்தான் கட்டப்போறாவாம்.”

“அவள் ஒரு விசரி. எக்கணம் அவலப்படப்போறாள்”

ஆனந்தன் ஒன்றும் கூறாமல் நின்றான். ஏதோ யோசனையாக வந்தது.

அக்காவில இம்மட்டு அக்கறையாக இவர் ஏன் கேக்கிறார்

அவன் மனசில் சலிப்புத் தட்டிற்று.

‘நான் பறைஞ்ச விசயத்தை இவன் தமக்கைக்கு எக்கணம் சொல்லிக்கில்லிப் போடுவானோ?’

இப்படி நினைத்த மாத்திரத்தில் அம்மான் முகம் சற்று வெளுறியது.

“சரி தம்பி, நீ போ.”

அவன் திரும்பி நடந்தான்.

‘அக்காவைப் பற்றி ஏன் கேட்டியளெண்டு அம்மானிட்டக் கேக்காமல் வந்திட்டனே?’ என்று ஆனந்தனும், ‘நான் பறஞ்சதுகளைக் கொக்கா அறிஞ்சு ஏதேன் கதைச்சால் அதை எனக்கு வந்து தெரிவி’யெண்டு சொல்லிவிட்டிருக்கலாமே?’ என்று அம்மானும், தத்தமக் குள் கவலைப்பட்டுக் கொண்டே பிரிந்தனர்.

அப்போது நேரம் செக்கலாகிவிட்டது.

ராயப்பருக்கு இப்போது மதியம் திரும்புகிற பருவம். என்றாலும், அம்மான் இப்பவும் முதுமை கொள்ளாத இளங்கோலத்தில் மொழுமொழு’வென்று இருக்கிறார். தேகவாகு கிழமானாலும் முக வாளிப்பில் அம்மான் குமரி எடுப்பு ஆள் நல்லெண்ணெய்க் கறுவல். வாட்ட சாட்ட மாகத் திரண்ட சரீரம். அவரை உற்றுப் பார்த்தால் காலஞ்சென்ற சண்டியன் சரவணமுத்தர் நினைவுக்கு வருவார். காலப்போக்கில் இவர் கப்பங்கேட்டு யாழ்ப் பாணக் கடை முதலாளிகளை அன்றாடம் கலக்கியடித்த அழுக்கடையராகவோ, அநியாயத்தை எதிர்த்து ஆனைக் கோட்டையை உலுப்பியடித்த சுத்த வீரன் சிங்கரா சாவாகவோ தன்னை உவமித்துக் கொண்டார்.

முச்சந்தி வம்பு, சேவற் சண்டை, சின்ன மேளக் கச்சேரி, ரேகைச் சாத்திரம், பந்தடி, வாசிகசாலை, நாடகக் கொட்டகை, சையிக்கிள் ரேஸ்- என்கின்ற பெருங் *கலாசார’ ஆசாரங்களில் ஏதோ ஒரு வகையில் பங்கு கொள்ளாவிடில் அம்மானுக்குப் பொச்சம் தீராது. as

தாய்க்கிழவி பாவம் இந்தத் தள்ளாத வயதிலும் புகழ் பெற்ற இந்தப் புத்திரனுக்காக அம்மானுக்காகத் தன் இதயத்தைச் சிலுவையில் ஏற்றி வைத்திருக்கிறாள்.

‘இவன் ஒரு தொழில் துறையில்லாமல் என்ர சம்பாத்தியத்தில் இப்பவும் திண்டு கொண்டு சோக்குப் பண்ணித் திரியிறான். இவனுக்கு இந்தக் கோயிலில் யெண்டாலும் ஏதேன் ஒரு பொறுப்பைக் குடுத்தால் அந்தப் பிராக்கில கிடப்பான்…’

அம்மானைப் பற்றி பெத்தாச்சி ஏலவே, கோயிற் கட்டளைச் சுவாமியிடம் சொல்லி வைத்த பிரகாரம், கோயிற் பொறுப்பு இந்தக் கோசு அம்மானுக்கே கொடுபட்டிருக்கிறது.

இனி அம்மான் கோயில் தொண்டர்; ஊர்த் தொண்டர்; தேவ தொண்டர்-சமூகசேவையாளர்.

கோயிற் பொறுப்பு எடுத்துத் தேவ தொண்டரான யின்பு ராயப்பரை ஊர் விசுவாசிகள் ‘அம்மான்’ என்று தேவபந்த உரிமையோடு அழைக்கிறார்கள்.

அம்மானோடு அன்று தொட்டுத் தன்னை ஒரு ‘கவுண் மேன் ஏஜண்ட்’டாக எண்ணிக்கொண்டு ‘சேவை’ செய்யலானார். கேட்பானேன், நிர்வாகம் அவர் பொறுப்பு. ஊருக்கும் முன்னோடி அவரே இப்பொழுது ஊருக்கும் உபதேசி.

உபதேசியென்றால் சும்மாவா? சயற்கட்டு விவகாரம் தொட்டு வாழத் துடிக்கின்ற குமர்களைக் கரைசேர்க்கிறது வரை அவரே இங்கே சகலதுக்கும் கர்த்தாவாக விளங்கி வருகிறார்.

காலகெதியில் அவர் நாக்கு அசைந்தால் நாடு அசையும், வாக்கு உதிர்ந்தால் வாழ்க்கை உயரும்.

இப்படியாக ஊருக்கு உபதேசியாய், கோயிலுக்குத் தொண்டராய்ச் சீரும் சிறப்புமாகப் பெருங்கியாதியோடு வாழ்ந்து வருபவர் அம்மான்.

சகட யோகம் சர்வ நிவாரணம். இந்தச் சந்தர்ப் பத்தில் தான் அலக்சாந்தன் அம்மானுடன் மல்லுக் கட்டி நிற்கிறான்.

இந்தக் காலக்கட்டத்தில் தான் சவுந்தரியில் அம்மானின் இதய நாதம் பரீட்சார்த்தமாக இசை மீட்கத் தொடங்கி

‘எச்சில் பண்டத்தை நாயும் தின்னாது’

காமம் தலைக்கேறினால் மூளை கலங்கும் என்பதை இன்று தான் அம்மான் அனுபவ மூலமாக உணர்கிறார்.

அவர் உடம்பின் நரம்புகள் முறுக்கேறிச் சிலிர்க்கின்றன. சர்வாங்கமும் அனல் கக்கிப் புளுங்குகிறது. நெஞ்சுள் ஏதோ பாரச் சுமை.

‘சட்’டென இருக்கை விட்டெழுந்து கண்ணாடியை எடுத்து முகத்தைப் பக்குவமாகப் பார்த்தார்.

வழுக்கல் மண்டை கண்ணாடியில் ‘பளிச்’சிட்டது.

கன்னத்துச் சோணைகளில் கெம்பிய சொற்ப நரை மயிர்களை இடுங்கி, அடர்ந்த கருமயிரைத் தாவ விட்டுத் தன்னாரவாரம் தனக்குள் சிரித்தார். – வெற்றி லையைச் சதுரமாகக் கிள்ளி எடுத்துக் கன்னச் சோணை முனையில் அப்பிக் கொண்டு சவுந்தரி வீட்டுக்குப் புறப்பட அடுக்குப் பண்ணுகையில் – வாசற் படி தாண்டித் தெருப்படலை திறந்து அம்மான் வீதியில் இறங்கும்போது பல்லி சொன்னமாதிரி அவர் காதில் கோயில் ஆராதனை மணி ‘கணீ’ரித்துக் கேட்டது.

கோயில்மணி நல்ல சகுனம் போற காரியம் சித்தியாகும்.

தன்னாட்டம் அருக்கூட்டிக் கொண்டு, மேல் நோக்கி வானத்தைப் பார்த்தபடி, நெஞ்சில் கை வைத்து, யேசுவே என்னை ரட்சியும்’ என்று முணுமுணுத்த அம்மான், பிதா சுதன் இஸ்பிரீத்துச் சாந்து’ என முனகி. நெஞ்சில ஒரு சிலுவை பாவக் கீறினார்.

செக்கல் நேரம் முடுகியது. பொழுது கருகிப் படுவானுக்குள் இறங்கிப் பனைக்கூடலுக்குள் மறைந்து விட்டது.

கிட்டத்தட்ட மணி ஆறு ஆறேகால்;

‘சவுந்தரி ஒருவேளை பிராத்தனைக்காகக் கோயி லுக்குப் போயிருந்தால்….?’

‘அய்மிச்சம்’ எழுந்ததும் அம்மான் நடையில் தானாக ஒரு வேகம் தட்டியது, பிசாசு மாதிரி நாய்ப் பாய்ச்சலில் வலு கெதியாக அம்மான் விரைந்தார்.

வந்தாயிற்று.

தெருவில் – சங்கடம்படலைக்கருகில் கெந்து கால் ஊன்றிப் பெருவிரல்களில் நின்று, உள்ளே எட்டிப் பார்த்தார்,

எந்த அசுமாற்றத்தையும் காணவில்லை.

“புள்ளோய்…?”

நடுங்குங் குரல் வைத்துக் கேருந்தொனியில் அவர் அழைப்பு இதமாக வெளியேறியது.

ஒரு சந்தடியும் இருக்கவில்லை .

‘இண்டைக்கு வீண் எடுப்புத்தான்…’

‘புள்ள, சவுந்தரி…?’

பதில் வரக் காணோம்.

துரு துருத்த குரல் தொண்டைக்குள்ளால் மீண்டு வரப் பஞ்சிப்பட்டது.

வெளிறி உப்பிய முகத்தைச் சால்வையால் துடைத்துக் கொண்டு, ஓசைப்படாமல் படலைடை மெல்லத் திறந்தார்.

வீடு வெறிச்சோடிக்கிடந்தது. ஒரு ‘மனு’ வையுங் காணவில்லை.

நாறல் மீன் வெடிலை முகர்கிற கள்ளப்பூனை மாதிரித் ‘திருதிரு வென்று முழிசிக் கொண்டு மிக மெது வாக வளவுக்குள்ளே கால் வைத்தார்.

‘ஒரு ‘சிலமனை’யும் காணேல்லியே..?’

பட்டாசு வெடித்த மாதிரி நெஞ்ச திடுக்திடுக் கென்று சுடுக்கிற்று.

முற்றம் வரை சென்று அக்கம் பக்கம் பாத்த வண்ணம் அவல கோலத்தில் கேருந்தொனியில் குரல் வைத்தார்.

“புள்ள சவுந்தரி, வீட்டில ஆர் இருக்கிறது?”

“ஏன்… உதாருது?”

சத்த வெடியா, கிளிக்குரலா? அவரால் மட்டுக்கட்ட முடியவில்லை. சற்றுவேளை நிலை குத்து மலைத்து நின்றார்.

வீட்டுக்குள்ளேயிருந்து ‘கதவைச் சடா’ரென்று திறந்து கொண்டு வாசற்படி வரை வந்து கால் முடக்கி நின்று வெளியே எட்டிப் பார்த்துச் சற்றுச் சீற்றமாக விசாரித்தாள் சவுந்தரி.

அவள் மென் குரலில் சொக்கிய அம்மான், இனிய ஒரு நாதத்தை ரசித்து அனுபவிக்கின்ற வித்துவ பாவத்தில் ஒரு கணம் மூழ்கி நின்றார்.

நெஞ்சுப் பதற்றம் சற்றுக் குறைந்தது. நிஷ்டை கலைத்தவராக அம்மான் சவுந்தரியை ஒரு பாட்டம் நோட்டம் விட்டார்.

தூங்கி வழிந்து பளபள’க்கின்ற இரட்டைப் பின்னல் கள், துன்னுகின்ற இளம் திட்டுகளில் நெளிந்து நர்த் தகித்தன. நடு உச்சி பிரித்த இரு கன்னைச் சுருள் மயிர் அவள் வட்ட முகத்துக்கு எடுப்பாக இருந்ததை அம்மான் அவதானித்த போது, அவருக்கு அங்கு நிலை கொள்ள முடியவில்லை. அம்மான் கண்கள் இந்த அற்புதமான ரம்மியக் காட்சியைத் துழாவி அவளையே அரித்து ஊனின. சர்வாங்கம் தகித்து ஒடுங்கியது. ஞானஸ்நானம் பெற்றுத் தபசு பூண்ட கோலத்தில் அம்மான் அசையாமல் வாசலில் நின்றார்.

ஒரே மௌனம். அவரின் இதய நாளங்கள் முற்றாக ஸ்தம்பித்து விட்டன. வாய் பிளக்க மரமாக விறைத்துப் போய் நின்ற அம்மான், அவள் நெஞ்சு முனைகளையே கண்ணனிப் பார்த்தார்.

‘பிறந்தவிடம் தேடுதே பேடை மன நெஞ்சம்
கறந்தவிடம் நாடுதே கண்.’

என்ற பட்டினத்தார் பாடல் நினைவிற்கு வந்தது. –

அவர் மனசு அவரையே தீண்டிய மயக்கத்தில் திணறியது.

‘உண்மையில் பெண் ஒரு சாகசச்காரி. தாயின் பாசமும், சகோதர வாஞ்சையும், தாசியின் ஸ்பரிசமும் சங்கமித்த சுரங்கம். இவற்றைத் தன தாக்கிக் கொண்ட பெண் ஓர் ஆடவன் முன் தோன்றும் போது அவனுக்குப் பக்தியல்ல, பித்துத்தான் பிடிக்கும்.’

அம்மான் சிந்தனை இத்தனை தூரம் போய்க் கொண்டிருந்தது. அப்பவே அவருக்குண்டான மயக்கம் மூடு சன்னியாட்டம் தொட்டுக் கொண்டது

‘வதனமோ சந்திர பிம்பமோ,
மலர்ந்த சரோஜமோ?’

‘சிவகவி’யில் தியாகராஜபாகவதர் பாடிய பாட்டை அவர் மனசு அப்போது மீட்டது.

‘சவுந்தரி’

கற்கண்டை வாயிற்போட்டு அப்படியே கடித்து நொறுக்கிச் சப்புகின்ற அங்கலாய்ப்போடு அம்மான் அவனையே இமை சொடுக்காமல் நோக்கினார்.

‘ஏன். ஆரைத் தேடுறியள்?”

“அ… நான் ஆரைத் தேடினேன், எவரைக் கூப்பிட்டேன்?”

மின்னல் அடித்த திடுக்காட்டம். அம்மானுக்கு, ‘இவள் என்ன கேட்டாள்?’ என்றும் புலனாகவில்லை.

அவர் தனக்குள் ஒரு கணம் வாய்க்குள் புலம்பினார்.

“என்ன பேசுறியளில்லை?”

“ஹி… ஹி… ஹி.”

அம்மானின் முன் வாய்ப் பற்களே அவர் இளிப்பி னூடாக அவர் பதில் போல் வந்தன,

“ஏன் நிக்கிறியள்; உதில இருங்கோ.”

இது போதும். அம்மான் உள்ளமும் உடலும் அலை கக்கிக் கெந்தகித்தன. தேகத்தில் ஏறிய அனற் கொதிப் போடு சவுந்தரியைக் கண்ணூனிப் பார்த்தார்.

ஆவலோடு ரசித்து வாசித்து இடையில் நிறுத்தியதைப் புலப்படுத்துவது போல் சவுந்தரியின் ஆள்காட்டி விரல், ‘நவமணி’ என்ற இலக்கிய சஞ்சிகை ஒன்றைப் பாதியாக விரித்தபடி, ஒரு மெழுகுவர்த்தியாகச் சஞ்சிகையினுள் துழாவி வளைந்திருந்தது.

‘அது கெட்டுது போ. அவன் அலக்சாந்தனுக்குப் பிடிச்ச இலக்கியப் பயித்தியம் இந்தப் பொடிச்சிக்கும் தொத்தியிட்டுது.’

மனசுக்குள்ளே சவுந்தரியைக் கறுவிக் கொண்டு, அவளில் பதிய வைத்த கண்களை மீட்காமல், ”சரி புள்ள, நான் இந்தப் பலகையில் இருக்கிறான்” என்று சொன்ன அம்மான் சளுக்கென்று குந்தினார்.

‘காயாத கானகத்தே நின்றுலாவும் தற்காரிகையே’ யைக் கிட்டப்பாவைப் போல் பாட அவர் மனசு ‘துருதுரு’த்தது; அடக்கிக் கொண்டார்.

முகட்டு வளையில் பல்லி ஒன்று பூச்சியைத் துரத் தியது. முற்றத்தில் கோழி எதையோ கிளறிக் கொண்டிருக் கிறது. எதிரே சேவல் ஒன்று சிறகடித்துக் கொள்கிறது. –

“சூய்…காய்…”

தலைவாசல் வரை வந்து சவுந்தரி கோழியைக் கலைத்த போது… ‘ம்’ என்ற பெருமூச்சு ஒன்று அம்மான் நெஞ்சில் நீவி எழுந்தது.

“அது கிடக்க, கொப்பர் எங்க போட்டார்?”

“யாழ்ப்பாணம் பெரிய கடைக்குச் சாமான் வேண்டப் போட்டார்.”

உச்சியில் பல்லி சொல்லிற்று.

‘உச்சத்திற் பல்லி அச்சமில்லை’ என்று மனசுள திருப்தி கொண்டார்.

“அப்ப, கோச்சி?”

“அவ அடி வளவுக்க இருந்து கிடுகு பின்னுறா”

“ஏன், நுச்சியைச் கூப்பிடுறதோ?”

“வேண்டாம், சும்மா கேட்டனான்”

நிலையைத் தாண்டி உள்ளே சென்று வெளியே பார்த்தபடி நின்ற சவுந்தரி, அறைக்குள்ளிருந்து சஞ்சி கையை வாசிப்பதா, வீட்டுக்கு வந்த மனுஷனுக்கு வெற்றிலை பாக்குத் தட்டம் குடுத்து உபசரிக்கவா என் றெல்லாம் யோசித்துத் தடுமாறிக் கொண்டே, எதையுமே செய்யாமல் அப்படியே நினைவிழந்து முழிசினாள்.

அம்மானுக்கு அவள் நிலை வள்ளீசாகப் புரிந்து விட்டது. இருந்தும் அவர் அப்பவும் கனிவோடு

அவளையே கூர்ந்து பார்த்தார்.

அவர் தொண்டையில் வழிந்த ஊனம் வாயில் குமிழ்த்து அவருள் உறைந்தது.

முக்கோணக் கருந்திலகம், நட்சத்திரம் போல் அவள் நெற்றியில் மின்னியது வாசலை மேவிச் சரீரத்து வந்த பூங்காற்று, அவள் கருங்கூந்தலில் தாவியபோது கன்னத்து மயிர்ச் சுருள்கள் சிலிர்த்தன. காதுக் கமண்டலங்கள் குதறித் தெறித்தன. விரிந்த மலரிதழ்களின் விளிம்பாக அவளின் சொண்டுக்குமிழ்கள் குவிந்துவாளித்துக்கிடந்தன. மதாளித்த பிள்ளைக்கற்றாளைச் சதைப்படிப்பாக அவள் அதரச் சோங்குகள் கோழிமுட்டைக் கணியம் வட்டமாகப் பரந்து தக்காளிப்பழங்கள் போன்றிருந்தன.

‘தக்காளிப்பழங்கள்-கொவ்வைப் பழங்கள்-கொய்யாப் பழங்கள்…’

அம்மான் மனசுள்ளே தீட்டிய ஓவியங்கள் வர்ணனை கள் அவள் அங்கமெல்லாம் வியாபித்துக் கிடந்தன. கண்கள் மேய்ச்சலை நீக்கவில்லை தானே தன்னுள் மயங்கி வெதும்பினார். தொண்டைக்குழியை முடுக் கிட்ட உமிழ் நீரின் ஊனத்தை உள்வாங்கி ஒரு பாட்டம் மீட்டார்.

‘கன்னங்களைக் கிள்ளி…. கடிச்சுத் தீண்டு….. ஆசைப் படுவது போல் இதெல்லாம் உடனே நினைத்த மாத்திரத் தில் கை கூடுகிற காரியமாக இருந்தால் பெண்கள் பட்டி மாடுகளாகத்தான் சீவிப்பார்கள். அவர் நினைவின் – ஆசை களின் பேரிரைச்சல் காதுகளை அடைத்தது; கண்களில் பஞ்சு தாவிற்று.

அப்போது ஒரு பெருமூச்சுக் கிளர்ந்து எழுந்தது.

நேரம் செக்கலைத் தாண்டிவிட்டது. நிலம் நன்றாக இருட்டிக் கொண்டு வந்தது.

அம்மான் இதயம் தந்தி அறுந்த வீணையாட்டம் ‘ணங்’ கிட்டது. சமாளித்துக்கொண்டு விஷயத்தில் வாய், வைத்தார்.

“கையில உதென்ன புத்தகம்?”

“நவமணி”

“நவமணியெண்டா?”

“இலக்கிய சஞ்சிகை”

அம்மானுக்குக் கை கொட்டிச் சிரிக்கவேணும் போலிருந்தது. சிரிக்கவில்லை. முகத்தில் – அநாயாச அசட்டை .

“மெத்தச் சந்தோஷம்….இந்தக் கதைப் புத்தகங்கள் படிக்கிற பயித்தியம் உமக்கும் பிடிச்சிட்டு தாக்கும். கதைப் பயித்தியம், கள்ளுப் பயித்தியம், காதல் பயித்தியம் எல்லாம் ஒண்டு தான். இனிமேல் உமக்குக் கதை படிக்கிற பயித்தியம் போம், கதைகள் எழுதிற பயித்தியம் வர லாம்…அதாவது, பெரிய எழுத்தாளராயும் வரலாம்….”

அம்மான் பாரை மனத்தில் வைத்து இப்படிக் கிண்டல் பண்ணி ‘அடி’ போடுகிறார் என்று புரிந்து கொண்ட சவுந்தரி தனக்குள் சினந்து கொண்டாள்.

எழுத்தாளன் என்றால் நெஷனல் சேட்டு, வேட்டி சால்வை, காலில் செருப்பு, கையில் ஒரு தோற்பை, சாடை யான சிலுப்பா, சந்தனப் பொட்டு, வாய் ததும்பத் தாம்பூலம், கழுத்தில் ஒரு வெந்தயச் சங்கிலி, இடது கையில் ஏதும் ஒரு மட்டைக்கலர்ப் புத்தகம், பொக்கற்றில் ஒரு பவுண்டன் பெண்-இந்த வகையறாக்களைக் கொண்ட கலாசாரத் தோற்றத்தோடு உலாவுவதன் மொத்த உருவ மாயிருந்தாலே ஒரு கணிப்பும் மவுசும் உண்டு என்பது அம்மான் எண்ணம்.

ஆனால், இப்போ பார்த்தால் கொடிச்சுவால் பேய் களாட்டம் ஊர் சுற்றித் திரிகிற வெங்கணாத்திகளும் எழுத்தாளர் கவிஞர்களென்று லேபல் குத்திக் கொண்டு விளம்பரங்காவிகளாகத் திரிவதை அம்மான் அவதானித் துக் கொண்டு வந்தபடியால் அம்மானுக்கு எழுத்தாளர் என்றாலே ஓர் அசூசை.

‘குறைந்தது ஒரு கல்லூரி அல்லது யூனிவர் சிட்டிப் படிகள் ஏறிப் ‘பட்டம்’ தட்ட வேண்டாமா?’ என்ற எண்ணம்.

‘மனித குலத்தின் மூளை கலாசாலைப் பட்டம் என்ற அந்த வட்டத்துக்குள் விளைகிறது’ என்பதை வலு சுளு வாகக் கண்டுபிடித்த பெரும் மேதாவிகளைப் போல் அம்மான் தன்னையும் வரித்துக் கொண்டு அப்படிக் கிண்டல் செய்ததை அவதானித்த சவுந்தரிக்கு உண்மையில் கோபம் தலைக்கேறியது.

‘இந்த ஆளுக்குச் செருப்பால் அடித்தால் என்ன?’ என்று கூட ஆத்திரப்பட்டாள். என்றாலும், அவள் எந்தக் காழ்ப்புணர்வு பாவத்தையும் காட்டிக் கொள்ளாமல் அவர் எதிரே ஒரு மௌன விரதகாரி போலிருந்தாள்.

சவந்தரிக்குச் சினம் வந்துவிட்டதை அவள் முகச் சாயலில் உணர்ந்து கொண்ட அம்மான், ‘நக்கல்’ பண்ணுவதை நிறுத்திவிட்டு, அவள் கையில் வைத்திருந்த இலக்கிய சஞ்சிகையை நூதனமாகப் பார்த்தார்.

அவரின் இயல்பான குணதோஷம் கேலியாகவே பட்டது.

“உது நவமணியோ நவமணமோ?”

அவளும் இறுக்கமாகப் பதில் சொன்னாள்.

“இது இலக்கிய சஞ்சிகையெண்டு அப்பவே சொன்னேன் தானே?”

“ஓ…அப்பிடியே? சரி சரி…”

“ஏன் உப்பிடி ‘விடுத்து விடுத்து’க் கேக்கிறியள்?”

அவள் அடுத்துக் கேட்ட போது அவர் எல்லாம் தெரிந்தவர் கணக்காக அநாயாசமாகச் சிரித்தார்.

“இந்தக் காலத்தில் இலக்கியம், இயக்கம், இலட்சியம் அது இதுவெண்டு சொல்லிச் சில சில்லறைப் பொடியங்கள் தாங்களும் கெட்டு அடுத்தவனையும் கெடுத்துக் கடைசியா ஊரவனையும் – ‘சூய்’க்காட்டிக் குழப்புறாங்கள்…”

“அப்பிடி இந்த ஊருக்க என்ன கெடுதல் நடந்திட்டுது?”

“நடந்திட்டுதோ? இதுவும் ஒரு கண்டறியாத கேள்வி தான். ஏன் அங்க இங்க போவான்? உவன் அலக்சாந்தனை எடுத்துப் பாரன். அவனுக்கு என்ன தெரியும்? நாலு பத்துப் பேரைப் போல ஏதேன் பிற சொல்லுப் படிச்ச வனே? சும்மா றோட்டுவழிய சுத்திக் காவாலியனோட திரிஞ்சு போட்டுத் தானுமொரு ஆளெண்டு ஊருக்க வெட்டிப் புடுங்கிறாராம். அவர் கூடித்திரியிறது களைப் பாத்தாலே போதும். ஒண்டில் கழிக்கப்பட்டதுகளோட இல்லாட்டி ஏதேன் கண்ட நிண்ட எழிய சாதியளோட தான் கூட்டம். தனக்கும் அஞ்சாறு உலக நடபடியன் தெரியுமெண்டு அவனுக்குள்ள ஒரு எண்ணம் ஆனால், ஸ்ரீதேவியை இந்த ஊருக்க ஒரு நாய்கூட மதிக்கிறேல்ல…”

தன்னை மேதாவியாக்க அடுத்தவனை மட்டந்தட்டு வதில் உண்டாகும் ஆனந்தம் எப்படியெல்லாம் அசிங்க மாக வெளிப்படுகிறது என்பதைக் கவனித்தபோது அவள் உடம்பு கூசியது. இந்தப் பெரிய ஊர்த்தொண்டர் வாயில் எப்படியெல்லாம் வசை புராணம் புனருத்தாரணம் செய்கிறது என்பதை நினைக்கவே அவளுக்கு ஊரின் * மகத்தான வளர்ச்சி’ புலனாகியது

‘உலகத்தில் குரோதத்தையும், மோட்சத்தில் சமத்துவம் நாடும் ஆத்துமாக்களை’யும் தரிசிப்பதில் ஒரு மனிதனுக்கு இருக்கிற அனுபவம் எத்துணை ரசமானது?

சவுந்தரிக்கு இந்த அனுபவம் புதிது. வஞ்சகமில்லா மலே சொன்னாள்:

“நீங்கள் சொல்றதைப் பார்த்தால் கொஞ்சமும் கவலைப்படத் தேவையில்லை.”

“என்ன, இந்தக் கிலிசகேடுகளைக் கண்டும் கவலைப் படாமலிருக்க முடியுமே?”

“ஏன் கவலைப்படவேணும்? பரவாயில்லை. நாய்கள் தானே அவரை மதிப்பதில்லை? அவரை நெடுக ஒரே கண்ட சீருக்குக் குறை சொல்லிக் கொண்டிருக்கிறியனல்லா மல், அது என்னெண்டு விளக்கமாகச் சொன்னால்தானே நானும் ஒத்துக்கொள்ளமுடியும்?”

வேலிக்கடப்படியில் சேவல் ஒன்று குப்பை கிளறிக் கொண்டிருந்தது. முற்றத்தில் மையிருட்டுத் தாவிற்று.

அவள் வார்த்தை அம்மானுக்குக் கோபத்தைக் கிளறிளாலும் அதுவே வாசியாகப்பட்டது. ‘விளாசித் தள்ள வேணும்’ என்று நினைத்தார்.

“அவன்ர திருக்கூத்தை எத்தனையெண்டு சொல்றது? அண்டைக்கொரு நாள் கோயில் குத்தகைக் காசு குடுக்கப் படாதெண்டு ஓடிப்போய் சனங்களை மறிக்கிறான். கிராமச் சங்கம் வரி எடுக்க வரேக்க, ‘வரிக்காசு கூடிப் போச்சு. தொழிலாளியள் ஒத்து நிண்டு வரிகொடா இயக்கம் நடத்துங்கோ’ வெண்டு தொழிலாளியளத் தூண்டிவிட்டான். இவன்ர சொல்லைக் கேட்டுச் சில மொக்குக் கழுதையள் வரிகட்டாமல் ‘கோட்டில் குற்றக் காசும் கட்டி மதியலுக்கும் போகப்பாத்தாங்கள். *இதென்னடாப்பா உன்ர கூத்து-சனங்களை இப்பிடிப் போட்டுப் பேய்க்காட்டுறதோ?’ வெண்டு திருப்பிக் கேட்டா, அவன் அதுக்கு, ‘எல்லாத் தொழிலாளியாளும் உறுதியோட ஒற்றுமையாப் போராட முன்வராதபடியால் தான் இப்பிடி வந்த தெண்டு சொல்லித் தப்பப் பாக்கிறான்… இப்பிடி எத்தனையோ அநியாயங்கள்…”

“இதெல்லாம் அநியாயமே? கொஞ்சங்கூட எனக்கு அப்பிடித் தெரியேல.”

“அப்ப, எப்பிடித் தெரியுது?”

“சரியா அலசிப் பாத்தால், அது நீதியான குரல் போலத்தான் தெரியுது.”

தான் விட்ட பாணம் அவளில் ஏறவில்லை என்பதை அம்மான் உணர்ந்தார். பிறகு ஒரு வார்த்தைகூட அவளுக்குமுன்னே இருந்தது கதைக்க அவர் மனசு துணிய வில்லை…. ‘இனி வாய்போட்டால் இருக்கிற சாரமும் கழன்றுவிடும்’ என்று எண்ணிய அம்மான் சாடையாக நைந்து சிரிக்கலானார்.

பல்லி ஒன்று வாசலில் எச்சமிட்டது. அவள் சிந்தனை கலைந்தது.

அம்மான் கை உயர்த்தி விரித்துக் காட்டினார்.

“இந்த அஞ்சு விரலையும் பாரும். இது போலத்தான் உலகத்தில் வீக்க தூக்கம் இருக்கு. அப்பிடி இருக்கேக்க இப்பத்தைப் பொடியங்கள், ‘எல்லாம் சமனாக இருக்க வேணு’ மெண்டு மல்லுக்கட்டு றாங்கள். அது தான்…”

சவுந்தரி இடையில் குறுக்கிட்டாள். –

“அஞ்சு விரல்களும் ஒருமாதிரி இல்லாதபடி யால் தான் வீக்க தூக்கம் இருக்கு. இப்பிடி உலகத்தில் வீக்க தூக்கம் இருக்குமட்டும் போராட்டமும் கொந்தளிப்பும் நடக்கும் தானே? இந்த உண்மையை ஏன் மறைக்கிறியள்?”

“ஏன் போராட்டம்?”

“சமுதாயத்தில் ஏற்றத் தாழ்வு முரண்பாடு வீக்க. தூக்கம் இருந்தால் போராட்ட உணர்வு எவனுக்கும் தானாக வரத்தான் செய்யும். அந்தப் போராட்டம் இருந்தாற்போல் வெடிக்கும்…”

“அப்ப இந்த ஊர் உலகம் இனி அமைதியாகக் கிட வாதோ?”

“அமைதியான அந்தக் காலம் கட்டாயம் வரும்”

“இதென்ன சாத்திரம்?”

“இல்ல, தத்துவம்.”

“அந்தக் காலம் எப்ப வரும்?”

“வர்க்கபேதம் ஒழிஞ்சு சமத்துவமான ஒரு சமுதாய அமைப்பு உலகத்தில் வந்த பிறகு….அது இந்த நாட்டில் வந்தாலும் இஞ்ச அமைதி காணலாம்”.

“உப்பிடித்தான் அவன் அலக்சாந்தனும் சொல்லிக் கொண்டு ஊரெல்லாம் கத்தித் திரியிறவன்.”

கிணற்றுத்தவளை தன் வாயால் கெட்டநிலை. அம்மான் பிறகு வாய் திறக்கவில்லை.

தான் அம்மானோடு இப்படியெல்லாம் அதிகம் வாய் காட்டிப் பேசியிருக்கக் கூடாது என்று அவள் மனத்துள் சற்றுக் கவலை கொண்டாள். மனத்தில் கொஞ்சம் சலிப்புத் தட்டிற்று. ஆனால், அவருக்கு உறைக்கும்படி ஒரு வார்த்தை இறுக்கிக் கூற அவள் மனம் துடித்தது. வாயுன்னும்போது தெருப் பக்கம் ஒரு சந்தடி கேட்டது.

சவுந்தரி ‘திடுக்’ கிட்டு எழுந்தாள்.

அம்மான் விறைத்துப்போய் மலாரடித்து நின்றார்..

‘அக்கா, அக்கா…’

ஆனந்தன் ஓடி வருகின்ற காலதைப்பு முற்றத்தில் நின்ற சவுந்தரியின் நெஞ்சில் இடித்தது. கே அவனுக்குப் பின்னால் சுவாம்பிள்ளை கோபக் கனல் தெறிக்க நிலைகொள்ளாத பரபரப்போடு வந்து கொண்டிருந்தார்.

தகப்பனின் இந்தச் சன்னதத்தைக் கவனித்த சவுந்தரி ‘தறு தறு’த்து முழிசினாள்.

அம்மான் பக்கத்தில் மௌனமாக நின்றார். என்ன சங்கதி என்று கேட்பது போல் அம்மான் பார்வை சுவாம்பில்ளையில் விழுந்தது.

“ராயப்பண்ணை , எங்கட மானக்கேடு ஊருக்க வெளிச்சுப் போச்சு, இனி உனக்குத் தெரிஞ்சாலும் பரவாயில்லை. இந்த நேரமாப்பாத்து நீ ஒரு நீதியான பொது மனிசன் இஞ்ச நிண்டதும் நல்லதாப் போச்சு…”

சுவாம்பிள்ளை உருவேறி ஆடலானார்.

அம்மான் ஒன்றும் புரியாதவர்போல் – உண்மையில் எதுவும் தெரியாமலே கண்களைச் சிமிட்டிக்கொண்டு நமட்டிச் சிரித்தார். என்றாலும், முழிசாட்டம் தான்.

சுவாம்பிள்ளையின் சடலம் பேய் உருக்கொண்டவன் மாதிரிப் படபடத்துக் கொண்டது. பற்கள் முறுக்கு நொறுங்கின மாதிரி தறுமின. குரல் கம்மியது.

“சவுந்தரி…”

“அ…”

“இஞ்ச எனக்கு முன்னால வா”

அவள் மெல்ல நகர்ந்து, தகப்பன் எதிரே தலை கவிழ்த்து நின்றாள்.

“முதல்ல நான் கேக்கிறதுக்கு ஒன்றும் மறைக்காமல் ‘சட்’டெண்டு மறுமொழி சொல்ல வேணும்?”

அவள் தேகம் குல்லிட்டது. அப்பரின் கண்கள் நெருப்புக் கோளமாகச் சிவந்து சிலிர்த்து வருவதைக் கவனித்தபோது அவள் கருங்குடல் கரைந்தது.

‘அப்புக்கு இண்டைக்கு என்னவோ சனியன் பிடிச்சிட்டுது. எதுக்காக இப்பிடித் துள்ளிக் குதிக்கிறார்? ஒருவேளை அந்தக் கடிதம்… இவற்ர கையில் அம்புட்டுப் போச்சோ?’

அவள் இதயம் குலுங்கியது. குடல் தகித்தது. வயிறு குறாவிற்று. ‘படபடக்கின்ற நெஞ்சை அவள் மென் கரங்கள் இறுக அழுத்திப் பிடித்தன. ஏக்க விழிகள் பிதுங்க, பக்கத்துப் பக்கத்து மரக்கப்பைத் தாவிப் பிடித்துக்கொண்டு, தகப்பனின் மூர்க்காவேசத்தை அவதானித்தாள். கண்கள், ‘என்ன?’ என்று கேட்பது போல் இரந்தன.

“இஞ்ச கிட்ட வா.”

அருகில் வந்து நின்றாள்

“எனக்கு உண்மை சொல்லவேணும். இல்லாட்டி வயது வந்த பிள்ளையெண்டும் பாரன். இண்டைக்கு என்ர கையால தப்பமாட்டாய்.”

இப்போது அப்பரின் உடம்பு கோபாக்கினியால் தீய்ந்து சாம்பியது. நரிடிய பற்களும் வெருட்டிய கண் களும் அவளை உறுத்தின.

“ஓம்… உள்ளது சொல்றன்.”

அடித் தொண்டைக்குள்ளிருந்து பதில் கரகரத்து வந்தபோதும், அவளின் கிளிக் குரலில் கீறு இருக்கவில்லை.

“நீ, அவன் அலக்சாந்தனுக்கு எப்பாகிலும் கடிதம் கிடிதம் எழுதினனியோ?”

‘ஆ…!’

தாவணிச் சேலை துளுக் கென்று நழுவி நுளுந்திற்று. தாவணியில் விழுந்த கண்ணீர் சொட்டுச் சொட்டாகத் தெறித்துச் சிதறியது. விரல்களால் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு விறைத்த பிரே தமாக நின்றாள் சவுந்தரி.

‘அம்மாடி… இது எப்பிடி அப்புவுக்குத் தெரிஞ்சுது? – எங்களுக்கு இந்த நெருப்புக் கொள்ளியை வைச்சது ஆர்?’

கோழி அடை காக்க அதன் வெம்பத்தினால் முட்டைக் கருக்கள் முரண்பட்டுக் கலங்கி உருமாறிப் பரிணமித்துக் குஞ்சாகும் போது, கோது வெடித்துச் சிதறுவது போல, இந்தத் தாக்கம் சவுந்தரியின் இதயக்கூட்டைச் சின்னாபின்னமாகச் சிதறடித்தது.

“ஏனடி பேசாமல் நிண்டு நீலிக்கண்ணீர் வடிக்கிறாய்? வாயைத் துறந்து ‘ஓமோ இல்லையோ’ வெண்டு சொல்லன்ரி.”

‘வாய்..?’

தெஞ்சு உக்குருகிக் கரைந்து, சர்வாங்கம் ஊனி, தேகம் மெழுகுவர்த்தியாய் உருகுகின்ற நிலையில் வாய் திறந்து மறுமொழி கூறுவதற்கு அவளுக்குள் சூத்திரப் பாவையா இயங்குகின்றது?

மௌனமான அந்தகாரத்தைக் கிழித்துக்கொண்டு அவள் குரல் கமாரிட்டது.

“அய்யோ … என்ர அம்மா!”

கோடை இடிபோல் சவுந்தரி பெருங்குரல் வைத்துக் கத்தின் தொனி, அடி வளவுக்குள்ளேயிருந்து கிடுகு பின்னுகிற தாய்க்கு அவலமாகக் கேட்டது.

“புள்ளோய், அது என்ன சத்தமடா?”

காதைத் தீட்டியபடி அங்கலாய்த்துக் கொண்டு ஓடி வந்தாள் தாய்.

ஓடி வந்த இளைப்பு ஆறவில்லை. நெஞ்சு மேலும் கீழும் துடித்துப் பிரளயப்படுத்திற்று. புருஷன் கோபா வேசத்தோடு நிற்கிற கோலம் இவள் மனத்தைக் கிலேசப் படுத்தியது.

ராயப்பு அம்மான் முழிசிக் கொண்டு பக்கத்தே அலுக்கோசுபோல் நிற்பதும், சவுந்தரி கண்ணீர் உகுத்துவதும் இவள் சந்தேகத்தைத் தூண்டின.

‘நான் நொந்து பெத்த என்ர ராசாத்திக்கு என்ன கொடுவினை வந்து தோ?’

இடியேக்கம் நெஞ்சைத் தாக்க, புருஷனை நோக்கினாள்.

“இஞ்ச இப்ப என்ன நடந்தது: பிள்ளை ஏன் இப்பிடி விக்கி விக்கி அழுகுது?”

மனிசிக்காரியைச் சுவாம்பிள்ளை இரக்கமாகப் பார்த்தார். அவளின் அ’றியாமை’யைக் கண்டு அவர் தனக்குள்ளே வருந்திய போதும், கெம்பிய கோபம் அவர் கண்களில் புகைந்து கொண்டிருந்தது.

“உனக்குச் சங்கதி தெரியாதே? எடி ஆத்தே, இந்த வீட்டில் நடக்கக்கூடாத அலுவல் நடந்திட்டுதடி..”

அவள் இதயம் கை நெகிழ்ந்த முட்டை போல் நொறுங்கிச் சிதறிற்று. சிலந்தி வலையாட்டம் மனத்துள்

லேடிறறு. ஒவப்பாக as 5. அய்யோ , கரை சேருகிற என்ர குமருக்குக் ‘கதை’ கட்டி இங்கிசைப் படுத்திச்சினமோ…? –

ராயப்பு அம்மானையும் பக்கத்தில் வைத்துக் கொண்டு தன்னை ‘எடிபுடி’ என்று முறைத்துப் பேசுகிற சொற்களை அவளால் தாங்க முடிந்தது. புத்திரியைப் பற்றிக் கதைத்த வார்த்தைகளை இந்தத் தாயால் தாங்கவோ மன்னிக்கவோ முடியவில்லை.

‘ஆ பாதக மனுஷா… ஒரு புறத்தி மனுசனுக்கு முன்னால என்ர குமர்ப் பிள்ளையைப் பேசினால் எப்பிடித் தாங்குவன்…. அது வாய்விடாச் சாதியாட்டம் நிண்டு அழுகுது… என்ர பெத்த வயிறு தாங்குதில்லையே, நான் என்ன செய்ய… ?’

தன் கோலங் கெட்டுத் தலைவாசற் கப்போடு ஒட்டிக் கொண்டு தின்ற புதல்வியை, தாய் சோகமாகப் பார்த்தாள்.

அவள் கண்கள் துருத்திக் கொண்டு அழுகை பீறிட்ட போதும், தாயைக் கண்ட குஞ்சு போல் மனம் தேறி ஒருவாறு சாந்தியடைந்தாள்.

மனிசிக்காரி கேட்ட கேள்விக்கு எந்தவிதமான பதிலும் சொல்லாமல் சுவாம்பிள்ளை ஒரு ‘விடுபேயன்’ போல் நின்று கள்ளனாட்டம் முழிசிக் கொண்டிருந்தார்.

அம்மான் மெளனத்தைக் கலைத்தார்.

“தம்பி சுவாம்பிள்ளை, இது ஒரு குமர் காரியம். பெத்த தேப்பனான நீயே நெத்திக்கு நேர ஒரு அந்நிய னாட்டம் கேட்டால், அது பிள்ளை எப்பிடி வாய் துறந்து சொல்லும்?”

அம்மான் முகத்தில் வறட்டுச் சிரிப்பு நமட்டியது.

பிள்ளையையும் கிள்ளிவிட்டுத் தொட்டிலையும் ஆட்டு சின்ற கலை அப்பட்டமான வேசைத்தனம் என்பதை அம்மான் கசடற அறிவார். அம்மானின் பழக்கதோஷம், ‘நாசகாரச் சதி வேலைகளைத் திறமையாகச் செய்வதே ஒருவனின் மேதாவித்தனத்துக்கு எடுத்துக் காட்டு’ என்ற மேல் நாட்டுத் தத்துவத்தில் வேறு நம்பிக்கை கொண்ட வர் இந்த இக்கட்டான வேளையில் அதை முறையாகப் பாவித்து அதன் பெறுபேறை எதிர் பார்த்துக் கொண்டிருந்தார்.

பரம சாதுபோல் இருந்துவிட்டு அம்மான் வைத்த ‘பொறியில்’ சுவாம்பிள்ளை – எக்கச்சக்கமாக மாட்டிக் கொண்டார்.

“ராயப்பண்ணை . இனி எதை ரகசியமாக மறைச்சுப் பேசுறது? அவன் அலக்சாந்தன் கொஞ்ச நேரத்துக்கு முந்தி, ‘நான் சவுந்தரியம் கட்டப் போறதைத் தடுக்க ஆரோ சதி செய்யிறாங்கள். ஆனால், அவளுக்கு நான் ஒரு தகவல் குடுத்தால் போதும். உடனே அவ என்னோட வந்திடுவா’ளெண்டு நடுச் சந்தியில நிண்டு சொல்றான். நான் விடுவனே… நல்ல வெளுவை குடுத்திட்டுத்தான் இஞ்சமுன்னா வாறன். இப்ப ஊர் – கெய்யோ’ண்டு போச்சு…”

ஆவேசங்கொண்ட தவில் வித்துவான் மாதிரி சுவாம் பிள்ளை ஒரு தடவை சிலுப்பா குலுக்கி விளாசிவிட்டு ஓய்ந்தாராயினும், அவர் சதிரம் அட்டகாசமாக ஆர்ப் பரித்துக் கொண்டேயிருந்தது.

‘திடுக்’கிடுகிற அந்தச் செய்தியை அதுவும் தன் தகப்பன் வாயால் கேட்ட சவுந்தரி அப்படியே சோர்ந்து கப்போடு சாய்ந்தாள்.

உலகம் பிரளயம் எடுத்தமாதிரி அவள் மனத்துள் ஒரு மூடுபடலம் சுழன்றடித்தது.

விறைத்துப் போய் நின்றதாய் கேட்டாள்.

“மெய்யடி புள்ள, கொப்பர் இப்ப சொன்னது உண்மையே?”

சவுந்தரி தலை கவிழ்த்தி நிலத்தைப் பார்த்தாள்.

“நீ கடிதம் எழுதினாலும் காரியமில்லை . பயப்புடாமச் சொல்லு: அவனுக்குக் கடிதம் கிடிதம் எழுதினனியே?”

அவளின் தவறுகளை இவள் தன் தாய்ப்பாசச் சுரங்கத் தில் மறைத்துக்கொண்டு, தானே அவளைக் கண்டிக்கிற பாங்கில், கோழி மிதிச்சுக் குஞ்சு சாகாது’ என்கிற மனோ பாவனையில், குமாரத்தியின் கிரிகையை மனத்துள்ளே நியாயப்படுத்தி, ஒரு நடுத்தீர்வைக்கு ஒப்புவித்து விடுவது போல் பாசாங்கு பண்ணிய தாய், புதல்வியின் முகத்தையே ஏவிப் பார்த்தாள்.

“என்ன புள்ள, சொல்லன்?”

“இல்லை…எனக்கொண்டும் தெரியாது.”

‘கள்ள மூதேவி; படு பொய்காரி’

நெஞ்சு கமறச் செருமிக் காறித் துப்பிய அம்மான், தனக்குள் பொரிந்து கொண்டார்.

பெற்றவளின் வயிறு பகார் பற்றி எரிந்து தகித்தது.

கப்போடு சாய்ந்து கிடக்கின்ற தன் குமாரத்தியை ஓடிச்சென்று தாவி அனைத்துத் தூக்கி, தன் முந்தானைச் சேலையால் அவள் முகத்தை அழுத்தித் துடைத்துக் கொண்டு குவித்து நெற்றியில் ஊதினாள்.

வெயர்வைத் தேம்பலில் ஒட்டியிருந்த அவள் கருங் கூந்தல்கள் தாயின் ஊதுதலில் உலர்ந்து படபடத்தன.

“வல்லூறு இறாஞ்சினாலும் தாய்க்கோழி தன் குஞ்சை விடாது.”

சவுந்தரி இப்போது தாயின் – அந்த இதமான அரவணைப்பில் துவண்டு போயிருந்தாள். அவ

“கடிதம் எழுதினால் இப்ப என்ன கேடு வந்திட்டுது? எழுதாட்டி ஏன் ராசாத்தி பயந்து அழுதனி? இனி அழாதையடா…எழும்பி இஞ்சால வாடாம்மா.”

கைத்தாவாகத் தூக்கி நிறுத்தி ஒரு கையால் அணைத்து, ஒரு மணப்பெண்ணைப்போல் புத்திரியை நடத்திக்கொண்டு உள்ளே சென்ற தாயை இருவரும் ஏககாலத்தில் பார்த்தனர்.

‘நவமணி’ இலக்கிய சஞ்சிகை நிலத்தில் விழுந்து விரித்தபடி அதன் ஒற்றைகள் நலங்கி அவளைப்போல் நாதியற்றுக் கிடப்பதை அவதானித்த அம்மான் தன்னார வாரம் பெருமூச்செறிந்தார். மனங்கேட்கவில்லை சஞ்சிகையை மெதுவாகக் குனிந்து எடுத்து விரித்துப் பார்த்தார்.

‘அலக்சாந்தர்-சவுந்தரியே’

அம்மன் நெஞ்சு குமைந்தது. கண்ணில் ஒரு மின்னல்.

‘இது அவன் அலக்சாந்தான்ர கையெழுத்துத்தான். காதல் தூதுகள் புத்தகங்களில் யாத்திரை செய்கின்றன.’

அம்மான் மனம் புழுங்கியது. எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்ற அவர் மனம் அப்போது துடித்தது. ஆனால், ‘இப்ப நேரம் சரியில்லை’ என்று நினைத்தார்.

தனக்குள் என்னென்னவோ எல்லாம் திட்டம் போட்டுக்கொண்டு உள்ளூறச் சிரித்தவண்ணம், ஏதோ ஒரு மன நிறைவோடு அம்மான் எழுந்து நழுவலானார்.

“தம்பி சுவாம்பிள்ளை, அப்ப நான் போட்டுவாறன். என்ன செய்யிறது சகோத்தியாப் போங்கோ…. நான் வாறன்.”

“ஓ.. ஓ… போட்டு வாண்ணை”

அடுக்களைக் குள்ளிருந்து கடுவன் பூனை ஒன்று கறுமிக்கொண்டு ஓடிற்று.

ராயப்பம்மான் பறதியாகப் போய்க்கொண்டிருக்கும் போது, ‘பொன்னூற் செபமாலை’ நாட்டுக் கூடத்தில் ராட்சதனுக்கு நடித்துக் கியாதிபெற்ற அப்புக்குட்டியப்பா நாய்களுக்கு நலமெடுக்கிற வில்லுக்கத்தி, கத்தரிக்கோல் ஊசிநூல் பொட்டணி சகிதம் எதிரே தென்பட்டார்.

“இண்டைக்கு எந்த வீட்டு நாய்க்கு நலமடிக்கிற தாக்கும்?” என்று பகிடியாகக் கேட்டார்.

“உவன் மிக்கேல் வீட்டு நாய் பெட்டை வளைச்சல்ல திரியுதாம். அதுக்குத்தான்” என்ற அப்புக்குட்டியப்பா, “நீ இந்த நேரத்தில எங்க வெளிக்கிட்டனி?” என்று நகிடதமாகக் கேட்டார்.

அம்மான் சொண்டுக்குள் சிரித்தார்.

“கோயில் பக்கம் போகலாமெண்டு வெளிக்கிட்டனான். அது கிடக்க, அண்ணை, ஆக்களுக்குக் கடிக்கிற நாயொண்டு ஊருக்க உலாவுது. அதுக்கும் நலமடிச்சால நல்லது.”

“எங்க நிக்குது சொல்லு. இண்டைக்கே அலுவல் பாக்கிறன்”.

“அதைப் பிடிக்கப் பாக்கிறன். அம்புடுதில்லை”

“ஏன், அதுக்கென்ன பத்துக்காலே?”

“இல்லை! ரண்டு கால்”

அப்புக்குட்டியப்பா ராட்சத சரீரம் குலுங்கச் சிரித்து ஓய ஒரு நிமிஷம் எடுத்தது.

“தம்பி, நீ சொல்ற அந்த ரண்டுகால் நாய் எதெண்டு எனக்கு இப்ப விளங்குது. உவன் எங்கட சவரிப்பிள்ளை யின்ர அலக்சாந்தனெண்ட பொடியனைத்தானே சொல்றாய்?”

“ஓமோம், கண்டுபுடிச்சிட்டாய்.”

“தம்பி ராயப்பு. நான் ஒண்டு சொல்றன், குறை விளங்காதை. அந்தப் பொடியனோட நீ ஏ தண்டைப் படாதை. அவனுக்குச் சரியெண்டு பட்டதை செய்யிறான் – உனக்குச் சரியெண்டு பட்டதை நீ செய்யிறாய். எது நல்லதோ அதை ஊர் கேட்டு நடக்கும் இதுக்குப்போய் ஒருத்தனை ஒருத்தன் ஏன் வலோற்காரம் பண்ணுவான்?”

அம்மான் முகம் சில்லிட்டது.

“நீ, கூத்தில் – வலோற்காரம் செய்து தானே பொம்புளயச் சிரத்தினனி?”

‘அது கூத்தில் நான் ராச்சதவேஷம் போட்டபடி நடிச்சது. ஆனா, இது சனங்களின்ர விஷயம். ஆனபடியால் சனங்களின்ர சீவியத்தில் ஒருக்காலும் வேஷம் போடக் கூடாது.’

‘இந்தாளோட. பறைஞ்சால் என்ர காரியம் சரி வராது’ என்று கருதிய அம்மான். “அண்ணை – கோயிலடியில் எனக்கு ஊரிப்பட்ட வேலையிருக்கு. பேந்து ஆறு தலாப் பறைவம்” என்றவர், ஏதோ அவசர சோலிக்காரன் போல் நழுவலானார்.

யாரோ தெருவால் சீழ்க்கை அடித்துக் கொண்டு வருகிற சாடை தெரிந்தது.

சவுந்தரி மெல்ல எட்டிப் பார்த்தாள்.

அம்மான் உண்ட வயிறு புடைக்க, அதிகாலையிலேயே வலு உஷாராகப் படலை திறந்து உள்ளே மிலாந்திக் கொண்டு வருவதை அவள் அவதானிந்தாள்.

“தம்பி சுவாம்பிள்ளை …?”

“தார், ராயப்பண்ணையே?”

“ஓம்…உதென்ன செய்து கொண்டிருக்கிறாய், கையில அலுவலே?”

நைஸாக முற்றத்துக்கு வந்துவிட்டார்.

விருந்தையில் நின்ற சவுந்தரி, அடுக்களைக்குள் போய் தாயோடு குந்தியிருந்து தேங்காய் துருவத் தொடங் கினாள்.

“மூதேசி மனுசன்மறுக்காலும் இஞ்ச என்ன சவத்துக்கு வருகுது?”

மனத்தில் நீறுபூத்த புகைச்சல்.

அம்மான் ‘நிலவரத்தை நோட்டம் விட்டும் அதைக் காட்டிக் கொள்ளாமல் சுவாம்பிள்ளையை நோக்கி வந்தார்.

‘அறுந்து போன இந்த மனுசன் அப்புவுக்கு என்ன நஞ்சை ஊட்ட வருகுதோ?’,

அவள் இதயம் சாம்பியது. துருவிய தேங்காயைத் துருவுபலகையில் அப்படியே தொக்கிப் பிடித்த சவுந்தரி, மடக்கிய கெண்டைக்காலில் நாடி குத்தி வைத்து ஏதோ யோசனையில் தீய்ந்து போய்க் கிடந்தாள்.

வீட்டுக்குள் நின்ற தகப்பன் என்ன செய்கிறார் என்பதையும் அவள் கவனிக்கவில்லை.

“அந்த விஷயம் இண்டு ராவைக்குத்தானே?”

அப்பர் அம்மானிடம் மெதுவாக அழுத்திக் கேட்ட இந்த வார்த்தை அவள் காதில் மிகத் தெளிவாகக் கேட்டது.

‘இண்டிரவு என்ன நடக்கப் போகுது?’

அவள் நெஞ்சு பெருமூச்சாய்க் குதறியது.

“அலக்சாந்துக்கு ஏதேன் கொடுவினை நடக்கப் போகுதோ?”

ஏக்கக் கண்கள் கசிந்தன. உள்ளம் வெம்பிச் சாம்பிக் கொண்டிருந்தது.

அம்மானும் தகப்பனும் ஏதோ ‘குசுகுசு’த்தபின் வெளியேறி மறையும் வரை கிடுகுக்கணுக்குகளால் அவள் பார்த்துக்கொண்டிருந்தாள்.

இரவாயிற்று. குளிர் காற்றுப் பூம் பொழிலாகத் தென்னஞ்சோலைக்கூடாக வீசுகிறது.

வெளி விருந்தையில் ஆனந்தன் உறங்கிக் கொண்டிருந் தான், இவள் மெல்ல எழுந்து அவனை எழுப்பினாள்.

“டேய் தம்பி?”

“என்னக்கா?”

“அப்பு அலக்சுக்கு அடிக்கேக்க நீயும் பக்கத்தில் நிண்டனியே?”

“ஓ, கொஞ்சம் எட்ட நிண்டனான்.”

“நல்லா அடிச்சிருப்பார், என்ன?”

“ஓமக்கா நல்லாத்தான் அடிச்சுப்போட்டார்”

“அய்யோ ‘அது’ பாவம்’

ஒரு பெருமூச்சு அவள் சதிரத்தை உலுப்பியது. அந்த வாதைகளெல்லாம் தனது இதயத்தில் உதை படுகிறதான உணர்வில் ஒரு கணம் அவள் முகம் சுண்டிக் கறுத்தது.

“தம்பி, நான் ஒரு சங்கதி சொல்றன். நீ அதை அலக்சாந்தண்ணையிட்டப் போய் ரகசியமாகச் சொல்..”

“புள்ளோய்?”

தாயின் குரல் அப்போது உரத்து ஒலித்தது. அவள் வாய் பிளக்க எழுந்து 7 அங்குமிங்குமாக ஏமலாந்திக் கொண்டிருந்தாள்.

“புள்ள சவுந்தரி?”

“இந்தா வாறன்”.

உள்ளத்தினுள் அழுந்துகின்ற சுமை – இறக்க எத்தனிக்கும் கட்டத்தில் தாயின் குரலையடுத்து. அப்போது சவுந்தரியையே கூப்பிட்டுக் கொண்டு திடீ” ரென்று ராயப்பு அம்மான் படலை திறந்து வருகின்ற சந்தடி அவள் காதில் கேட்டது.

‘என்ன மாயம், கூப்பிட்ட அம்மாவையும் காணல்லியே’

எட்டிப் பார்த்தாள். தூரத்தே தாயின் ஆசாட்டம் அடி வளவு வடலிகளுக்குள் தெரிகிறது.

ஆனந்தன் அக்காவின் தூது கொண்டு சென்று விட்டான்.

பயந்துபோன சவுந்தரி விண்’ அறுந்த மாதிரி நெஞ்சு நெருடி இடிக்க, அம்மானை வெறித்துப் பார்த்தபடி ஊமையாக நின்றாள்.

‘ஆனந்தன் இதுவரை அலக்சாந்துவைக் சந்திச்சு எல்லாம் சொல்லியிருப்பான்’ என்று தனக்குள் சமாதானம் சொல்லிக் கொண்டாள். இருந்தும், அம்மானைக் கண்ட பின் அவள் குதூகலமே சஞ்சலமாக மாறியது

அம்மான் சுற்று முற்றும் பார்த்தார்.

“என்ன பிள்ளை பேசாமல் நிக்கிறாய்?”

மௌனம் கலைந்து துணிவு பிறந்தது.

“உங்களோட நான் என்னத்தைப் பறையிறது?”

தாயைப் பார்த்தாள். சிலமனைக் காண வில்லை.

‘பிறத்தி மனிசர் வந்திருக்கேக்கயும், இவவுக்கு வளவு வாய்க்காலுக்க மாயிறதுதான் வேலை…’

அம்மான் தேகங் குலுங்கச் சிரித்து ஓய்ந்தபோது புளிச்சல் ஏவறை ஒன்று வந்தது. வாயைச் சப்புக் கொட்டினார். கண்கள் சவுந்தரியைக் கனிவோடு நோக்கின.

“பிள்ளை சவுந்தரி, உன்ர மனசில இருக்கிற கவலை எனக்குத் தெரியும். என்ன இருந்தாலும் கொப்பர் பொடி யனுக்கு அந்தப் ‘பப்ளிக்றோட்’டில வைச்சு அடிச்சிருக்கப் படாது பொடியனும் தனக்கு நீர் கடிதம் எழுதின சங்கதியைப் ‘பப்ளிக்’கில சொல்லி உன்னைப் பரிசு கெடுத் திருக்கக் கூடாது. சரி போனது போகட்டும்…. உம்மட விருப்பம் போல நானே முன் நிண்டு உம்மட காரியத்தை ஒப்பேத்தித் தாறன். நீர் இனி விசனப்படாதையும்.”

கடைக் கண்களால் சவுந்தரியைப் பார்த்து அவள் மனோ நிலையைக் கவனித்தார். அவருக்கு ஒரு ‘பிடிப்பு’ உண்டானது.

சவுந்தரியின் முகம் இப்போது சூரியகாந்தியாக மலர் வதை விளக்கு வெளிச்சத்திலும் அவதானித்தார்… இas

‘என்ர விருப்பம் போல்…’

தனது விருப்பத்தை நிறைவேற்றி வைக்க அம்மான் தானே முன் வந்ததை நினைக்க ஒரு கணம் ஆச்சரியமாகவும் மறுபாட்டம் மகிழ்வாகவும் இருந்தது..

‘பெண் புத்தி பின் புத்தி, ராயப்பு அம்மானை நான் தவறாகக் கணித்து விட்டல் போல் தெரியுது எப்பிடியோ அம்மான் ஊர்த்தொண்டு — கோயில் தொண்டு செய் யிறவர்… எண்டாலும் அம்மான் வலு காரியகாரர் தான்…’

“என்ர விருப்பம் போல எனக்கு நீங்கள் என்ன உதவி செய்து வைப்பியள்..?”

‘ஆசை வெட்கம் அறியாது’ என்று குடி போதையிலா சொன்னான்? பெண்கள் நெற்பங் கெட்டவர்கள் சிறு கவலைகளையும் தாங்க முடியாமல் அழுந்தி அழுவார்கள். இந்தப் பலவீனங்களே பெண்களின் வீழ்ச்சிக்கும் காரணம் என்பதைச் சவுந்தரியின் அவசரக் கேள்வி மூலம் அம்மான் மட்டுக்கட்டிக் கொண்டார்.

அவளைக் காட்டிலும் அவரே அப்போது குதூகலித்து காணப்பட்டார்.

“உப்பிடி விருத்துறையாக் – கேளும். முதல்ல உம்முடைய விருப்பத்தை எனக்கு ஒழிக்காமல் சொல்லும்.”

அவள் ஒரு கணம் இனங்காண முடியாத மன அழுந் தலில் புழுங்கினாள். நாணத்தின் இன்ப உணர்வைத் தவிர அவள் வாயில் வார்த்தையே கிளம்ப மறுத்தது.

“நீர் வெக்கப்படுகிறீர். ஓ… குமர்ப்பிள்ளை , ‘டக்’ கெண்டு வாய் திறந்து சொல்ல மனம் ஏவாதுதான். சரி உமது மனசில கிடக்கிற ஆசையை நான் சொல்லட்டோ?”

முகத்தில் பிரமிப்பான ஒரு வெளிப்பு.

“எங்க, சொல்லுங்கோ பாப்பம்”

“பிறகு மழுப்பக்கூடாது?”

“இல்ல, சொல்லுங்கோ.”

“நீர் அலக்சாந்தைக் கலியாணம் செய்யத்தானே விரும்புகிறீர்?”

தேகம் சுரீரித்துக் கூசியது. நெஞ்சினுள் பூரித்த உணர்ச்சி அலைகளை அவள் உடனே வாய் விட்டு ஒப்புச்

கொள்ள வக்கில்லாமல் திமிறிச் சிரித்தாள். ப

“என்ன, அப்பிடித்தானே?”

“ஓம்.”

“படு கள்ளி.”

தாய் முலையில் வாய் வைத்து உலுப்பினால் பால் சுரக்கும் என்ற கலையைப் பசுக்கன்றுக்குக் கற்றுக் கொடுத்த மேதாவி எவனும் இல்லை. ஆனால், அம்மா னுக்கு இந்த வித்தை கை வந்த கலை. அவர் இதில் பழமும் தின்று கொட்டையும் போட்டவர். அவள் இதயத்தைச் சுரப்பிக்க எத்தனிக்கலானார்.

“நீர் உண்மையில் அந்தப் பொடியனைக் கலியாணம் செய்ய விரும்புகிறீர், என்ன?”

‘ஓம்’ என்பது போல தலையசைத்து நாணினாள்.

“பாத்தியே… கள்ளப்பொட்டை. இதை இம்மட்டுக் காலமாக உம்மட நெஞ்சுக்க ஒழிச்சுத்தானே வச்சிருந்தனீர்? கொப்பருக்கும் கோச்சிக்கும்கூட மறைச்சுப் போட்டீர்… சரி. நான் இதை ஒப்பேத்தி வைப்பன். முதல்ல நான் சொல்ற மாதிரி நீர் ஒரு காரியம் செய்ய வேணும். அதுக்கு ஒத்து வருவீரோ?”

“எதுக்கு?”

“உமது நல்ல காரியத்துக்கு.”

“நல்ல காரியமெண்டால்…?”

“அது ஒரு சின்ன விஷயம். அதைத் துணிஞ்சு செய்ய வரவேணும். செய்யிறனெண்டு சொன்னால் சரி …”

“சரி செய்யிறன்.”

“அப்ப, அதைச் செய்ய நீர் சம்மதம்?”

“எதைச் செய்யச் சம்மதம் கேக்கிறியள்?”

“இஞ்ச கிட்ட வாரும், சொல்றன்”

“காது கேக்கும். எட்ட நிக்கிறன் சொல்லுங்கோ”

“இது எட்ட நிண்டு ஒப்பேத்திற விஷயமில்லை.”

“அப்ப …?”

“கிட்ட வாரும்.”

“ஏன் கிட்ட வருவான்?”

“இது பரம ரகசியம்…. அது தான் கிட்டவா வெண்டுறன்.”

“இஞ்ச இப்ப ஒருத்தருமில்லை. இதில் நிக்கிறன். சொல்லுங்கோ”

“இப்ப ஒருத்தருமில்லை …?”

அவள் வீசிய அந்தத் தூண்டலில் அம்மான் தனது மனப் புழுவைக் குத்தினார்.

“சரி, உமது விருப்பம். பருவம் வந்தால் காதல் உணர்ச்சி தானாக மொய்க்கும். இது சகஜம் தான். காதலெண்டால் ஆசை தீக்க ஒரு இளம் பெட்டையெண் டாலும் ஒருத்தனுக்குப் போதும்… தான் விரும்புகிறபடி இன்ப சுகம் அனுபவிக்கத் தூண்டுகிற கிளர்ச்சிதான் காதல் இதை வெளியில் சொல்ல வெகட்ப்பட்டுப் பெரிய மவுசு காட்டி நடிக்கத் தேவையில்லை …”

“உதென்ன பறையிறியள்? உந்தக் கிலிச கெட்ட கதை இந்த நேரத்தில் எதுக்கு?’

அம்மான் கலகலத்து நைந்து சிரித்தார்.

“உமக்கு இப்ப அப்பிடித்தான் தெரியுது. ஆனால், எனக்கு அது தேவையாக இருக்கு?”

அம்மான் எதுக்கு வளைகிறார் என்று சவுந்தரி முற்றாகத் தெரிந்து கொண்டாள். அக்கினி பற்றிய வளாகப் பதறிய சவுந்தரிக்கு ஒருவித பீதி மனத்தில் தோன்றியது. க

“தயவு செய்து குறை நினையாமல் எழும்பி வெளியால போங்கோ.”

அம்மான் முகம் குபீரித்துச் சில்லிட்டது. முகத்தில் நெய் வழிய விறைத்துப்போய் அப்படியே இருந்தார்.

அப்போது அவர் முகத்தில் அடித்த மாதிரி அவள்சடாரென்று கதவை அடித்துச் சாத்திக் கொண்டு உள்ளே சென்றாள்.

“ஆண்மாரி. இந்தச் சிறுக்கி என்னை வெளியால போ வெண்டு நெத்திக்கு நேர சொல்லவோ?”

ஆண்மைக்குச் சவால்! ஆணவத்திற்கு இழுக்கு. அவரால் சகிக்க முடியவில்லை.

‘தாயோளி, இவளை இனி விடப்படாது’

கிளறி அடிக்கக் கெம்புகிற வெள்ள டிச் சேவல் போல் அவர் உடம்பு கமறியது.

‘எச்சில் பட்டதை நாயும் தின்னாது’

கள்ளக் கடுவன் பூனை மாதிரிப் பதுங்கிய அம்மான் ‘சடாரென்று உன்னி எழுந்து ஒரு மின்னற் பாய்ச்சலில் வீட்டுக்குள் ‘விறுக்’ கென்று பாய்ந்தார்

பெரும் எரிந்து கொண்டிருந்த குப்பி விளக்கை எப்படி ஊதி அணைத்தார் என்று அவருக்கே புலனாகவில்லை.

“அய்யோ அம்மா ணேய்… அறுந்து போவானே விடடா சட்டைக் கையை… டேய் விடடா…”

திமிறி மூசுகின்ற ஒலிகள் மூர்க்கமாக விம்மிக் கேட்டன…

தாய்க் கோழிக்குத் தெரியாமல் ஓநாய் ஒன்று கோடிக்குள் பதுங்கி நின்ற குஞ்சைப் பிடித்துக் கொண்டது.

குஞ்சின் கீச்சுக்ருரல் அப்போது எங்குமே கேட்க வில்லை.

தேவதொண்டரும் ஊர்ச் சேவையாளருமான ராயப்பு அம்மான் எதையோ சாதித்து விட்ட திரும்பில் ஒரு வெற்றி வீரன் போல் மிக அமைதியாக வெளியேறிக் கொண்டிருந்தார்,

சற்று வேளையால் கோயில் ஆராதனை மணி அடித்துக் கேட்டது.

கொஞ்சக் காலமாகத் தாய் கண்ணுக்கு இந்த மகள் முந்தின விறுத்தமாயில்லை. நடை உடை பாவனை எல்லாம் வித்தியாசமாகத் தெரிந்தன.

வைத்தால் வைத்தபடி, இருந்தால் இருந்தபடி, தலை வாரச் சீப்பு எடுத்தால் மயிர் வார்வதில்லை. சீப்பைக் கையில் வைத்தபடி எங்கோ ‘மிலாந்தல்’ குளிக்கப் போனால் பொழுது உறையில போகுமட்டும் கிணத்தடிப் பக்கம் தான். காலைச் சாப்பாடு மத்தியானம். அதுவும் ‘அருக்காணியம்’ பண்ணித்தான். ஆனவாகில அன்னந் தண்ணி வென்னி ஆகாரம் இல்லை. விடிஞ்சால் பொழுது பட்டால் தனிமை. ஆரோடும் பேச்சுப் பறைச்சல் இல்லை. சீப்பு, சவுக்காரம். பவுடர், பொட்டு, பின்னல்” உச்சி என்று ஏதும் கிடையாது. ஆளும் வரவர ‘மெலிஞ்சு’ கொண்டு போகுது….

‘எலும்புருக்கி நோயோ?’

மண்டை புழுத்த யோசனையில் பெற்ற வயிறு கொதித்தது. பெருமூச்சு விட்டு நெட்டி முறித்த கையோடு உன்னி எழுப்பிய போது கலண்டரில் கண்

‘பங்குனியோட பங்குனி ஒரு வரியமாகுது. அங்கால தமிழற்ர சித்திரை வரியப்புறப்பும் வரப்போகுது. போன சித்திரை வருசத்தில நல்ல உசாரா ஓடியாடித்திரிஞ்ச புள்ள இந்தக் கோசு ஒரு கண்ட சீருக்கு முடங்கிக் கொண்டு இருக்கு….’

நொந்து பெற்ற வயிறும் பாலூட்டிய பயோதரங் களும் தகித்தன. கசிந்த கண்களைத் துடைத்துக்கொண்டு புத்திரியை எட்டிப் பார்த்தாள்.

“புள்ள சவுந்தரி!’

“உப்பிடியே ஒரு கண்டசீருக்கு யோசிச்சுக் கொண்டிருந்தால் இதுக்கு ஒரு முடிவில்லையே?”

“முடிவு வரும்”.

“உதென்ன கதை? சரி பிள்ளை, எழும்பிச் சோத்தைத்’ தின்னன்”.

“பொறுத்துத் தின்னலாம்.”

“பிள்ளை, முதல்ல இருந்த இடத்தை விட்டு எழும்பு.”

“எழும்புறன். சும்மா என்னைப் போட்டு அலட்டா தையுங்கோ”

“சொல்றதையும் செய்யாயாம். எழும்பு ராசாத்தி.”

முடுக்கி விட்ட பாவை போல் சலிப்போடு எழுந்து சென்றாள் சவுந்தரி.

முற்றாக உருக்குலைந்து போன புத்திரியின் கோலத்தைப் பார்த்த தாயானவளுக்குச் சித்தங்கலங்குவது போல் தலை அம்மியது.

‘ஒரு வரியமாக இந்தக் கோலங் கொண்டால் நான் என்ன செய்ய… ஆரிட்டைப் போய்ச் சொல்லி அழ? பெத்த வயிறு தாங்குதில்லையே…’

தாயின் மூளை குழம்பி விட்டது. இப்போது அவளுக்கு ஒரு கொள்ளை யோசனை.

சுவாம்பிள்ளையோ சாப்பிடுவது படுக்கிறது எழும்புவது என்று வீட்டுச் சோலிகளோடு நின்று கொள்கிறார். பெண்ணாய்ப் பிறந்தவளுக்குத்தானே பெற்றவளின் அருமை பெருமை தெரியும்.

அவள் இந்த ஒரு வருஷமாகப் பாஷையூர் அந்தோனி யார், இளவாலைக் கல்லறை ஆண்டவர், மடுமாதா கோயில் என்று அலைந்து தரிசித்து விட்டாள். ஆனால், எந்த நேர்த்திக் கடன்களும் சவுந்தரியின் கோலத்தில் ஒரு வித நல் மாற்றத்தையும் காட்டவில்லை.

அவளுக்குக் கோயில் குளத்தில் இருந்த நம்பிக்கையும் தளர்ந்து விட்டது. பின்பு சத்திரஞ் சாவடிகள் ப சித்த வைத்தியங்களையும் நாடினாள். அப்பவும் சவுந்தரி சுகப் பட்டதாகத் தெரியவில்லை ஒரு தாயானவள் எத்தனைக் கென்று அடித்துக் கொள்வது. இயே

“ஆ கடவுளே, நான் பெத்த என்ர குமர்ப்பிள்ளைக்கு இருந்தாப்போல என்ன கொடுவினை நடந்தது? நான் என்ன கறுமம் செய்தேன்?”

ஒரு நாள் இந்தத் தாய் வாய் புலம்பி ஒப்பாரியாக அழுதே விட்டாள்.

ஒடிந்து போன வேப்பங் கொப்பில் காகம் ஒன்று சுரைந்து கொண்டிருந்தது.

சுவாம்பிள்ளை நித்திரை முறிந்து எழுந்து பாயைச் சுருட்டித் திண்ணைச் சுவரோடு சாத்தி வைத்து விட்டு, சவுக்கத்தால் முகத்தைத் துடைத்துக் கொண்டு முற்றத் துக்கு வந்தார்.

“உதென்ன உங்கட போக்கு? பெத்த தேப்பன் அக்கறையில்லாமலிருந்தால் நாளைக்கு இந்தக் குமரை என்னெண்டு கரையேத்திறது?”

‘பொறுப்பில்லாத மனுசன்’ என்று மனங் கறுவிய மனைவி சீறி விழுந்தாள்.

“உண்ணாணையப்பா உனக்கு விசர். நான் என்ன சும்மாவே திரியிறன்? பிள்ளையின்ர அலுவலாத்தானே ஓடித்திரியிறன்”

“பிள்ளை ஆனவாகில தீன் ஊணில்லாமல் கிடந்து மாயுது. ஏதேன் ஒரு அலுவலைப் பாக்காமல் சும்மா ஓடித்திரிஞ்சாப்போல காணுமே?”

“இப்ப நீ என்னை என்ன செய்யச் சொல்றாய்? சும்மா அலட்டாமல் கிடல் போன கிழமை அந்தாளோட கதைச்சு அடுக்குப் பண்ணிப் போட்டுத்தான் வந்தனான்..”

“எந்தாளோட?”

“ராயப்பண்ணையோட தான்.”

“அம்மான் என்ன சொல்றார்?”

“‘பார்வை’ பாத்து நூல் ஓதிக்கட்டினால் சரியாப் போகுமெண்டுறார்…… குருசு மடத்தடி ஞானத்தைக் கொண்டு பாப்பிப்பம்…. ஞானத்துக்கும் ஆயுசு நூறு…. நாங்கள் பறைய ஞானமும் சொல்லி வைச்சாப் போல வருகுது… உவள் புள்ளைய வெளியால கூப்பிடு.”

குருசு மடத்தடியார் படலை திறந்து உள்ளே கால் வைக்க, புருஷன் பெண்சாதி பிணக்கு ஒருவாறு ஓய்ந்தது.

“நாங்கள் வேதக்காரர். உதுகளைச் செய்தால் அயலட்டையில் என்ன நினைப்பினம்?”

காதோடு வாயோச்சமாகக் கேட்டாள் மனைவி.

“நீ சும்மா இரு. எல்லாரும் உப்பிடித்தான் சொல் றவை. ஆனால், செய்யிறது இப்பிடித்தான்.

‘ஏதோ பிள்ளை சுகப்பட்டால் சரி.

மடத்தடியாருக்கு வழி விட்டு இருவரும் எழுந்து நின்ற போது அவர் சாடையாகச் சிரித்தார்.

சுடலைமுனி, வயிரவர் சாடை, மடத்தடி ஞானம் சடை விரிகோலமாக வந்த காட்சியே ‘நல்ல மாந்திரீகன்’ எனபதற்குச் சாட்சியாகப்பட்டது.

ஆள் நல்லெண்ணெய்க் கறுவல். நெற்றியில் ஒரு சதக்கணியம் சந்தனப் பொட்டு. காதில் மொட்டு விரித்த ஒரு சிதம்பரத்தம் பூ. வாய்க்குள் வெற்றிலைக் குதம்பல். கட வாயில் பச்சைக் கட்டுச் சேலம் பீடி. நாடகங்களில் பபூபன்’ வேஷம் போட்டுக் கொட்டகையைக் குலுக்கி யவர். திடீர்ப் பகிடிகள் விட்டு மகாஜனங்களை வயிறு குலுங்கச் சிரிக்க வைப்பதில் சமர்த்தர் என்பது பிரசித்தம்

சின்னமேளக் கச்சேரி, நாடகம், ‘வசுக்கோப்பு” கடுதாசி விளையாட்டு வாசிகசாலை, முச்சந்தி வம்பளப்பு என்பன அவர் பொழுதுபோக்கு பெண்கள் மயங்கும் நல்ல தேகவாகு. ஆனால், பிரமசாரி. மாந்திரீகம் தொழில். அதில் இவர் கை தேர்ந்த மதியூக தந்திரி என்று பிரசித்தம்.

இவர் பற்றிய பூர்வாங்கம் இப்படியாக இவள் காதி லும் அடிபட்டதுண்டு. இப்பொழுதுதான் நேரில் பார்க் கிறாள். ஆளைக் கண்டதும் அவளுக்கும் ஒரு நம்பிக்கை பிறந்துவிட்டது கேட்பானேன், இவளுக்கே ஒரு ஞானம் உதித்து விட்டது.

ஒறE வந்ததும் வராததுமாக மடத்தடியார் முற்றத்தில் நின்று சவுந்தரியை ஏறு கண் வைத்து எட்டிப் பார்த்தார்.

ஒரு புன்சிரிப்பு அவர் முகத்தில் மலர்ந்தது.

சுவாம் பிள்ளையை ஒரு தடவை விறைத்துப் பார்த் துக் கண் சிமிட்டி விட்டு வெளியேற, அவரும் ஞானத் தாருக்குப் பின்னால் ஊனமாண்டியாட்டம் நடந்தார்.

நடக்கும் போது மடத்தடி ஞானத்தார் சொல்கிறார்:

“‘பொடிச்சிக்குப் ‘பிச்சுப் பிடிச்சிருக்கு. நீர் அயல் மனுஷனெண்டபடியால் சுருக்கமாய்ச் செய்து தாறன். இனி ஒண்டுக்கும் யோசிக்காதையும். நான் எல்லாம் வெண்டு தாறன். ‘மடைக்கு ஆக வேண்டிய சாமான்களை அடுக்குப் பண்ணும். வெள்ளிக்கிழமை இரவு கிருத்தியம் செய்வம்”.

மடிக்குள் கிடந்த வல்லுவத்தைத் திறந்து, சாமான் வகையறாக்கள் எழுதிய துண்டைக் கொடுத்தார் மடத் தடியார்.

சுவாம்பிள்ளையருக்கு அப்பவே ‘புள்ள சவுந்தரி சுகப் பட்டுவிட்டாள்’ என்ற ஆதங்கம் உண்டாயிற்று.

மூன்றாம் நாள் வெள்ளிக்கிழமை.

குருசுமடத்தடி மாந்திரிகர் ஞானம் அவர்கள் நேரங் காலம் தவறாமல் உரிய காலத்துக்குச் சொல்லி வைத்த மாதிரி செக்கல்பட வந்து விட்டார். ப குசினிச் சார்வு மறைவுக்குள் சப்பாணிகட்டிக் குந்திய மடத்தடி ஞானத்தார், சாக்குத் தட்டியை நீக்கி வடக்குப் பக்கமாகப் ‘பொளிச்’சிட்டுத் துப்பிவிட்டு, செம்புத் தண் ணீரில் வாயலம்பியபின் ‘மடை’ப் படையல் பரப்ப அடுக்குப் பண்ணலானார்.

பூசணி மொட்டு முடியை மருவிக் குங்குமம் சாத்தி சந்தனக் குச்சிப் புகை அலை எழ அதன் மீது குத்தினார். வெள்ளரிப் பழத்தை எடுத்துப் பாறாங்கத்தியால் சரி பாதி யாக இரண்டாக வெட்டிப் பிளத்து இரு கன்னைகளிலும் பக்குவமாக வைத்துவிட்டு, மஞ்சள் குங்குமம் எடுத்துச் சாத்தினார். கற்பூரத்தைக் கொளுத்திப் பக்கத்தே வைத் தார். குப்பில் கிண்ணத்தில் சந்தனத்தைக் கரைத்துத் தனது நெற்றியிலும் மார்பிலும் பூசணி விழும்பிலும் தடவினார்.

இரண்டு தேங்காய்கள் கொடு வாக்கத்திப் புடங்கால் உடைக்கப்பட்டன. சாம்பிராணிப் புகையில் வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம், நெல்லிக்காய், பலாப்பழக்கட்டி, மாதுளம்பழம்-ஆகிய – பதார்த்தங்களை எட்டமாக வட்டம் காட்டிவிட்டு அடுக்கடுக்காகப் பரப்பினார்.

தைலப்புட்டி, பன்னீர்ச்தாடி இரண்டையும் பக்கத்தே பக்குவமாக வைத்துக் கொண்டார்.

குத்துவிளக்கில் தேங்காய் எண்ணெய் ஊற்றித் திரி களைப் பற்ற வைத்தார். செம்பு, மாவிலை, புதுப்பானை, புதுச்சட்டி, ஒரு குண்டுக்கோப்பை-ஆகிய பாத்திரங் –களை இடப்பக்கமாக அடுக்கினார்.

நெல்லு, அரிசி, பயறு, வரகு, சாமி, குரக்கன், உழுந்து, பனங்கட்டி, கற்கண்டு, சர்க்கரை ஆகிய தானிய – பட்சண வகையறாக்களை மருவி நாலு முழச் சவுக்கம் ஒன்றை விரித்து வைத்தார்.

வலப்பக்கமாக ஒரு பெரிய கெண்டைச் சேவற்கோழி அதன் தலை கொடுவாக்கத்தி முனையை மருவிக் கிடந்தது வலது தொண்டைக்குக் கீழே ஒரு பிரப்பந்தடியை மறை வாக வைத்துவிட்டு, சுவாம்பிள்ளையை உற்று முழிசிப் பார்த்த பார்வையில் சுவாம்பிள்ளையர் சற்றுப் பயந்தே போனார்.

சாவலின் தலை அறுப்பதைத்தவிர, சுமார் அரைமணி நேரத்துக்குள் சகல கிருத்தியங்களையும் கன கச்சிதமாகச் சாதித்துவிட்ட பெருமிதத்தில் நெஞ்சு நிமிர்த்தி, ஒரு தடவை கையை உயர்த்தி உதறித் தட்டிய மடத்தடி ஞானத்தார், கையில் உடுக்கை எடுத்துச் சுருதி லய வாலாயம் பண்ணலானார். ப உடுக்கை தட்டி நாதம் எழுப்பி, சுருதி சுத்தம் சேர்த்து ஆலாவர்ணம் செய்து களை கட்டும்போது. அங்கே சுவாம் பிள்ளை வீட்டாரைக் காணவில்லை.

மடத்தடி ஞானத்தாருக்குக் கோபம் பொங்கிக் கண் கள் செக்கச் சிவந்து சிலிர்த்தன.

“ஏய் சுவாம்பிள்ளை, பொறுத்த நேரத்தில் எங்க காணும் போட்டீர்? இஞ்சால வாருமப்பா.”

சத்தஞ் சாவடியைக் காணவில்லை.

ஏதோ எங்கோ ஒரு சந்தடி மடத்தடியார் காதில் நச்சிரமாய் விழுந்தது. க கண்ணறையான சாக்குத்தட்டியை மெல்ல நீக்கி உற்றுப் பார்க்க எத்தனிக்கையில் சவுந்தரி பத்திரகாளி போல் மடத்தடியார் முன் விரிசடையாக வந்தாள்

தனது கிருத்தியங்களால் சகலரையும் கலக்கி வைக்கிற மடத்தடி ஞானத்தார் அவள் கோலங்கண்டு உண்மையில்

நடுங்கிப் போய்விட்டார். Sande

“ஐயா மடத்தடியார், இது கூத்துக் கொட்டகை யில்லை; நான் சின்ன மேளக்காரியுமில்லை. தயவு செய்து மரியாதையாக எழும்பிக் கொண்டு போங்கோ. வயிறு வளக்கிறதெண்டால் வேற தொழிலைப் பாருங்கோ. குறை விளங்காமல் போங்கோ.”

தகப்பன் தாய் மட்டுமல்ல; மாந்திரீக மடத்தடி ஞானத்தாரும் அடிபட்ட கழுதைபோல் முழுசிக் கொண்டு அந்தரப்பட்டு எழுந்தார்.

முற்றத்தில் பாதியும் ஞானத்தார் முதுகில் மீதியுமாக மடப்படையல் சிதறிக் கிடக்கிற கோலத்தைப் பார்க்கச் சுவாம் பிள்ளையின் உடல் தீய்ந்து கொண்டேயிருந்தது.

கிராமத்து நாய்கள் படலைக்குப் படலையாக நின்று அம்மாறு போட்டுக் குரைக்கின்றன.

மடத்தடி ஞானத்தார் ‘பிச்சைவேண்டாம் நாயைப் பிடி’ என்ற கோலத்தில் குச்சொழுங் கைகளால் போய்க் கொண்டிருக்கிறார் போல் தெரிகிறது.

நேரம், நடுச்சாமம்.

வீடு மயான அமைதியாகக் கிடந்தது.

‘புள்ள சவுந்தரி –

“ஓய்.”

“சோறு சாப்பிட்டயோ?”

“ஓம்.”

கேட்டால் கேட்டதற்கு நறுக்குப் பதில் மறுமொழி யாக வேறு வார்த்தை பேசுவதில்லை. மகிழ்ச்சி, கோபம், மனஸ்தாபம் கொள்வதில்லை. முகத்தில் எந்த ஒரு சலனமும் இருப்பதாகக் காட்டிக் கொள்வதுமில்லை.

“அய்யோ, நான் என்ன செய்ய? விலைப்படுகிற என்ர குமருக்கு என்ன நடந்தது?”

பெற்ற வயிறு பகார் பற்றி எரிகிறது. சில வேளை தானாகவே இருந்தாற்போல் வாயிலும் வயிற்றிலும் நெஞ்சிலும் மூசி மூசி அடித்துக் கொள்வாள் கண்ணீர் கசிய — வயிறு குலுங்கத் தன்னாரவாரம் அழுது தீர்ப்பாள். போகாத கோயில் இல்லை; வையாத நேர்த்தி இல்லை. தாயானவள் இப்போ இரண்டு வருஷங்களாக இதே கோலம்.

எப்போதாவது சவுந்தரி தானாக வாய் திறந்தால், ‘ஓம்’, ‘இல்லை’, – ‘சரி’, வாய் அசைவுகள் மட்டும் அவளின் சம்பாஷணையாகவிருக்கும். நெருக்கி வெருட்டினால் ஒரே கண்டசீருக்கு அழுகை.

கனவு கண்ட ஊமை போல் அவள் தனக்குள் அழுந்து கின்றபோது ‘அதனை’ நினைத்து அவள் நெஞ்சு கமறும்.

ராயப்பு அம்மான் அன்று போனவர் தான்.

‘இதுக்கு இனி ஒரு பரிகாரம் காணவேணும்’

சுவாம்பிள்ளை மனைவி சகிதம் ஒருநாள் மண்டையைப் போட்டு உடைத்துப் பார்த்தார்.

பலன்?

‘ராயப்பு அண்ணையைக் கூப்பிட்டு, பிள்ளை சவுந்தரியோட ஒருக்காக் கதைப்பிச்சுப் பாப்பம். அப்படி யான தேவதொண்டர் சொன்னால் ஒருவேளை பிள்ளை மனம் திரும்பும்?’

இப்படியாகத் திட்டம் போட்டபோது, சுவாம்பிள்ளை முகத்தில் கிடந்த சலிப்பு கொஞ்சம் நீங்கிற்று.

“ராயப்பு அண்ணை ஒருக்கா வாய் வச்சால் போதும். ஊருக்சு நடக்காத கருமங்களும் நடந்தேறும். அவன் மனுஷனுக்கு அது கடவுள் குடுத்த வரப்பிரசாதம்”. என்றெல்லாம் மனைவிக்கும் சொல்லி மனந்தேறினார் சுவாம்பிள்ளை.

சவுந்தரியை ஒரு வழிக்குக் கொண்டுவர–அவளைச் சாந்தப்படுத்த அம்மானையே கூப்பிட வேணும் என்று அறுதியாக முடிவு எடுத்தேவிட்டார்.

“ஆனந்தம், ஓடிப்போய் நான் வரட்டாமெண்டு ராயப்பு அம்மானைக் கையோட கூட்டியா.”

மகனை அனுப்பிவிட்டு அம்மான் வருகையை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்தார், பிள்ளை.

‘அப்பு இப்பிடி ஒரு தற்குறியா?’

நீறு கக்கிய நெருப்பாகக் கிடந்த சவுந்தரியின் நெஞ்சு தகப்பனை நினைக்கவே எரிசரமாகக் குதறியது. இருந்தும் அவள் மௌனமாகவே இருந்தாள்.

மனைவிக்கோ இருந்துவிட்டுச் சபலம் தட்டும். இதுக்கு அவர் ‘விளக்கம்’ கொடுப்பார்.

“ராயப்பு அண்ணை இப்ப லேசுப்பட்ட ஆளில்லை. எதையும் சரிக்கட்டுகிற கெட்டித்தனம் உள்ளவர். அந்த மனுஷன் எத்தனையோ இக்கட்டான சங்கதியளை வலு சுளுவாக ஒப்பேத்தினவர். கன குமர்களையும் சீமான் கரை சேர்த்திருக்கிறார். அதுதான் கடவுளாப் பாத்து அந்தாளுக்குக் ‘கோயில் முகாமை’யும் கிடைச்சிருக்கு…”

அம்மானைப் பற்றிய தன் கணிப்புகளை இப்படி யெல்லாம் மனைவிக்கு வர்ணித்துவிட்ட புருஷனை நம்பி. இந்த மனிசியும் அம்மான் வரவையே எதிர் பார்த்துக் கொண்டிருந்தாள்.

‘ஆர்குத்தியும் அரிசியாக வேணும்’ என்பது தாயானவளின் குறிக்கோள்.

‘ராயப்பண்ணை பிள்ளையின்ர மனசை மாத்தி வைப்பார்’ என்ற திடமான நம்பிக்கை துளிர்த்த போது அவள் புருஷனுக்குச் சொல்கிறாள்.

‘கழுதைப் புண்ணுக்குப் புழுதி மருந்தெண்ட மாதிரி ராயப்பண்ணைனாலதான் பிள்ளையின்ர மனம் தேறக் கூடும். தேறினால், இந்த வரியம் பிச்சை எடுத்தாகு தல் மாதா கோயிலுக்கு ஒரு மூடை அரிசி அவிச்சு விருந்து குடுக்கிறது தான் என்ர திட்டம்…’

சவுந்தரியின் காதுகளில் இந்த வார்த்தைகள் இடியேறு விழுந்த மாதிரிக் கேட்டன.

கடல் குமுறி இரைவதுபோல் ‘ஓ’ வென்று குரல் வைத்து அழத் தொடங்கினாள் சவுந்தரி.

பாதுகாப்போட்டார் சுவாம்பிள்ளையும் மனைவியும் அடித்து விழுந்து பதறிக்கொண்டு ஓடிப்போய்ப் பார்த்தபோது சவுந்தரி விக்கி விக்கி அழுது ‘திக்’கிட்டுப்போய்க் கிடந்தாள்.

சுவாம்பிள்ளை மூளை கலங்கி ஒன்றும் புரியாதவராய் ஏங்கி விறைத்து மலாரடித்துப்போய் நின்றார்.

கடைசியாக அவர் மனைவியின் காதுக்குள் ரகஸ்யமாகச் சொல்கிறார்.

“நீ ஒண்டுக்கும் யோசியாதை. வயது வந்த பொம்புளப்புள்ளையளுக்கு இப்பிடி வாறது வழக்கம் தான். பிள்ளைக்கு ஏதோ சரியான பிச்சுப் பிடிச்சிருக்கு. எதுக்கும் ராயப்பண்ணை வரட்டுக்கும் பாப்பம்.”

இவளை மீறி அப்போது நெஞ்சு நீவி ஒரு பெருமூச்சு எழுந்தது.

‘ராயப்பண்ணை கொஞ்ச நேரத்துக்குள்ள வந்திடுவார் . அதுக்கிடையில் பிள்ளையின்ர மனசைத் தேற்றி விடுவம்’ என்ற ஆதங்கத்தோடு தாயும் தகப்பனும் ஆளையாள் மாறி மாறித் துருவித் துருவிக் கேட்கத் தொடங்கினார்கள்.

சவுந்தரியோ ஒன்றுக்கும் இறுங்கினதாகத் தெரிய வில்லை. என்றாலும், பெற்ற தோஷம் விடவில்லை. தாயானவளுக்குப் பெண் பிள்ளையைப் பெற முன்னும் சுமை; பெற்றபின்னும் சுமை சுமை நீங்காதசுமை, பாசம் செய்யும் கொடுவினை. சாவறிதியும் அவளுக்கு உத்தரிப் பிஸ்தலமாயினும் அதுவே இன்ப சாகரம்.

புதல்வியை அப்படி ஒரு வாஞ்சையோடு அணைத்துக் கொண்டாள்.

காபையனாக “பிள்ளை , இனி மவுனமாயிருக்காதை. மவுனம் ஒரு மரண தண்டனை. வாய் துறந்து பேசு ராசாத்தி…”

“சரி, இப்ப என்ன கேக்கிறியள்?”

“அ… இப்பிடி வாய் துறந்து கேள்…”

“சொல்லுங்கோவன்?”

“உன்ர விருப்பம்போல அந்தப் பொடியனையே கட்டித் தாறம்; செய்யன்?”

“வேண்டாம்!”

“அந்தப் பொடியனைக் கட்டப்போறனெண்டுதானே நெடுகலும் நாண்டு கொண்டு நிண்டனி?”

“ஓம்… அதுக்கு?”

“பேந்தேன் மறுக்கிறாய்; இப்ப அதைச் செய்யன்?”

“மாட்டன்”

“ஏன்?”

“விருப்பமில்லை.”

“விருப்பமில்லை’ யெண்டு உண்மையாத்தான் சொல்றியே?”

“ஓம்.”

“அறுதியா என்ன சொல்றாய்?”

“மாட்டன்”

“இதென்ன வெள்ளிடி?”

“அதொண்டும் வெள்ளிடி இல்லை”.

“ஒரு குமர்ப்பிள்ளை. ஏதேன் ஒரு கரையில சேரத்தானே வேணும்?”

“நான் என்ன தோணியே?”

“தோணியெண்டாக் கரை சேர்க்கலாம். இது அப்பிடியே”

“ஏன், இது சட்டமோ?”

“அப்ப, உனக்குப் பிடிச்சதையெண்டாலும் சொல்லு. எதெண்டாலும் எங்கட ராசாத்திக்கு நாங்கள் செய்து வைக்கிறம்.”

“எனக்கு ஒண்டும் வேண்டாம்.”

“ஒண்டும் வேண்டாமெண்டு போட்டு நெடுக இப்பிடி, இருக்க ஏலுமே?”

“ஏன், ஏலாதே?”

“உதென்ன ராசாத்தி உன்ர கதை?”

“என்ர கதையில என்ன?”

“எங்கட செல்லத்தின்ர நீரோசையைப் பாத்தாத் தானே பெத்த மனம் குளிரும்?”

“அதுக்கு…?”

“உனக்கு விரும்பினதைச் சொன்னால் போதும்”

“என்ன, கலியாணமோ?”

“பின்ன என்ன?”

“இனி எனக்குக் கலியாணம் வேண்டாம்!”

“இதென்ன கோதாரி…அப்ப, இப்பிடியே நீ கன்னி யாக முடைஞ்சு கொண்டு வீட்டுக்க நெடுகலும் கிடக்கப் போறியே?”

‘கன்னி…’

இந்த வாக்கு ஒரு பத்தினித்தனமான தாய் வாயில் மிகப் புனிதமாக வெளிவந்தபோது, சவுந்தரியின் நெஞ்சு கொலுக்கழன்று கோடை இடிபோல் அதிர்ந்தது.

‘அய்யோ, என்னைக் ‘கன்னி’யெண்டு சொல்லி என்ர மனச்சாட்சியையும் சாக் கொல்லுகினமே….?’

“என்ன பேசாமல் இருந்து குமையிறாய். வாயைத் – துறந்து ஒருமுற்றுச் சொல்வன் பிள்ளை.”

“ஒருக்காச் சொல்லிப் போட்டன் பேந்தென்ன?”

“அப்ப, கலியாணம் வேண்டாம்?”

“வேண்டாம்”

உள் மனக் கொதிப்பைக் காட்டிக் கொள்ளாமல் சாலம் பணணிச் சும்மா சிரித்து விட்டுக் கொஞ்சுவது போல் தாய் சொல்கிறாள்:

“பிள்ளை, அப்பிடிச் சொல்லாதையடா….ஊரவே நாக்கு வளைச்சுப் பகிடி பண்ணுவினம் நாச்சியார்.”

“நாக்கு வளைக்கட்டன், அதால எனக்கொண்டும் குறைஞ்சு போகாது….அதைப் பற்றி அக்கறையும்மில்லை.”

மகள் இப்போ சம்பாஷிக்கிறாள்.

“ஏன் ராசாத்தி உப்பிடி எடுத்தெறிஞ்சு பறையிறாய்? வயதும் வந்திட்டு தல்லேயடா?”

“நல்லா வரட்டுக்கு…”

பாசச் சுரங்கம் இதற்குப்பின் கொந்தளிப்பாகப் பரிணமித்தது.

“என்னடி புள்ள, உனக்கு என்ன பிடிச்சுக் கொண்டுது நான் இம்மட்டு நேரமா விடுத்து விடுத்துக் கேக்கிறேன். நீ எல்லாத்துக்கும் அடுத்து அடுத்து அல்லத் தட்டிக் கொண்டிருக்கிறாய்?”

“அப்ப, என்ன செய்ய?”

“நீ அந்த அலக்சாந்தப் பொடியனைத்தானே கட்டப் போறெண்டனி?”

“ஓ”

“இப்ப, அதையும் ஒன் வேண்டாமென்றாய்”

“குமரரெண்ட கோலமும் குலைஞ்சு போனால் பிறகு ஆர் தேடுவினம் – நல்லா யோசிச்சு ஒரு முற்றுச் சொல்லு – ராசாத்தி”.

“ஆ… என்னைப் பெத்த என்ர அம்மாதான் உங்களுக் குப் பாரமெண்டால் கழுத்தில் கல்லைக்கட்டிக் கிணத்துக்க தள்ளி – விடுங்கோ. நான் சந்தோஷமாகச் செத்துப் போறேன்…”

நெருப்பில் மிதித்தவள் மாதிரிக் குதறி, அடித்து வைத்து ஓ’வென்று அங்கம் பதறப் பெருங்குரலில் குமுறிய புதல்வியின் அலங்கோலத்தைப் பார்க்க, நொந்துபோன தாயானவள் சகிக்க முடியாமல் தவித்தாள். க்ஷண வேளைக்குள் ஆவேஷங் கொண்டவளாகப் பாய்ந்து புத்திரியைத் தாவி அணைத்து முகத்தோடு இணைத்து அழுத்திக் கொஞ்சின் தாய் கேருந் தொனியில் கமறி அழுதாள்.

“நான் பெத்த என்ர ராசாத்தி….என்ர செல்லக் கிளி…ஏன்ரா அப்பிடிச் சொல்றாய்? சுமந்து பெத்த என்ர முத்தாரத்தை நான் சாவறுதியும் வச்சுக் காப்பாத்துவனே…என் சவுந்தரமே இனி நீ அழாதையடா…”

அன்னையின் தேற்றரவான வார்த்தைகளும் அவளுக்கு ஆறுதல் அளிக்கவில்லை.

பெருங்குரல் வைத்துத் தொண்டை கேரப் பிரலாபித்த சவுந்தரியின் அழுகுரலும் அவளின் அக்கினி கக்குகின்ற வாக்கியங்களும்…

சிமிக்கிணாமல் படலை திறந்து அப்போது முற்றத்தில் கால்கள் பாவிக் கொண்டு வருகின்ற ராயப்பு அம்மான் செவிகளில் எரிசரமாக எதிரொலித்தன.

வந்தவர் அப்படியே சடாரென்று நின்று கொண்டார்.

முடிவில்லாத ஒரு சோகத்திலாழ்ந்து அழுது புலம்பு கின்ற சவுந்தரியையும் தாய் தகப்பனையும் வெகு அமைதியோடு நின்று சற்று நேரம் கண் குத்திப் பார்த்தார் அம்மான்.

அவர் நெஞ்சு கொலுக்கழன்ற கோபுரம் போல் இடியுண்டது. மனத்துள் கெம்பிய குமுறல் சர்வாங்கம் பூராவும் புரைந்து சிதறியது. உடல் பதறித் ‘துருதுரு’க்க மனம் குதறிக் கொண்டு மேலே அண்ணாந்து வானத்தைப் பார்த்தார்.

சவுந்தரியின் அழுகுரல் ஆவசமாகவே தொடர்ந்தும் கமறிக் கொண்டிருந்தது

வெட்டுண்ட கள்ளி மரத்திலிருந்து பால் துளிகள் வடிந்து திரைவது போல், அவள் கண்களிலிருந்து சாரை சாரையாகக் கண்ணீர் வழிவதை அவர் அவதானித்தார்,

நெஞ்சு திக்திக்’ கென்று பதறியது.

வந்த சுவடும் தெரியாமல் அம்மான் கோயிலை நாடி விரைந்தார்.

அவர் நடந்தாராயினும் அவரின் இதயகோளம் அவரினுள் அகோரித்துக் கொண்டேயிருந்தது.

“சவுந்தரி…”

நெஞ்சில் இடித்தமாதிரி எங்கோ பழக்கப்பட்ட ஒரு குரல் சற்று வீராய்ப்பாக அம்மான் காதில் கம்பீரித்துக் கேட்டது.

‘தாரடா அது?’

திரும்பிப் பார்த்தார்.

அவக்சாந்தன் சவுந்தரி வீட்டுப் படலைக்கு எதிரே சவுந்தரியை எதிர்கொண்டு நின்றான்.

அம்மான் உடல் தீய்ந்தது; அவர் திகைத்துப்போய் விறைத்து நின்றார்.

வெள்ளிகள் மேகத்தில் பிரகாசிக்கவாரம் பித்தன.

– தினகரன் 1960

– மகாகனம் பொருந்திய…, முதற் பதிப்பு: மார்ச் 1994, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் லிமிடெட், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *