புத்தாண்டு ஷெட்யூல்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 4, 2023
பார்வையிட்டோர்: 2,845 
 
 

மணி 12

‘விஷ் யூ ஹாப்பி ந்யூ இயர்.’

மகன் விக்கி, மகள் ஷாலினி இருவரும் உள்ளங் கைகளை அபயஹஸ்தமாய் நீட்டக் கைகளைத் தட்டிப் புத்தாண்டு வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொண்டாள் லோசனி.

உலகெங்கும் ஒலிக்கும் வாழ்த்துக்களுடன் அவர்கள் வீட்டு வாழ்த்தொலிகளும் எழுந்துக் காற்றோடுக் கலந்தன.

கணவர் ராகவன், இவர்களின் ஆரவாரங்களை ரசித்துவிட்டு அமைதியாக முறுவலித்தான்.

‘ஃப்ரிட்ஜ்’ திறந்துச் சாக்லேட் கேக் எடுத்து மூவருக்கும் தந்துவிட்டு அவனும் எடுத்துக் கொண்டான்..

“இந்தப் புதுக் கம்பெனீல நியூ இயர்க்கு லீவுதானேம்மா.?”

+1 படிக்கும் மூத்த மகன் விக்கி பளிச்சென்று கேட்டான்.

ஒரு கணம் தடுமாறிவிட்டாள் லோசனி.

“ம். லீவுதான்.”

சொல்லி முடிப்பதற்குள் “ஐயா, ஜாலி…!” என்ற மகிழ்ச்சிக் கூவலுடன் இரு குழந்தைகளும் உள்ளங்கைகளை விரித்துக் காட்ட, லோசனி உள்ளங்கைகளால் தட்டிக் கம்பெனி கொடுத்தாள்.

வழக்கமான ஷெட்யூல் பாதிப்பால் வருந்தியது லோசனியின் மனசு.

“ஈவினிங் போயிட்டு வாயேன்.”

மாற்று யோசனை சொல்லியது புத்தி.

புத்தி சொல்லியதைப் பதிவு செய்தாள்.

“லீவு தான்! இருந்தாலும் மதியத்துக்கு மேல் ஆபீஸ் போகணும்.”

டிக்ளர் செய்தாள் லோசனி.


லோசனிக்குப் புத்தாண்டு வந்தாலே பிரபுவின் நினைவு வந்துவிடும்.

கைவிட்டுப் போன பிறகும் மனம் விட்டுப் போகாத நினைவுகள்.

புத்தாண்டு என்றாலே முதலில் மனதில் புகுவது புத்தூர் பாலிடெக்னிக் அருகே சாலையோரம் வளைந்து பருத்து நின்று நிழல்பரப்பும் தூங்குமூஞ்சி மரம்தான்.

இந்தப் பக்கமாக எப்போது வந்தாலும் அந்த மரத்தடியில் சற்று நேரம் கார் நிறுத்தி அமர்ந்து விட்டுத்தான் பயணம் தொடர்வாள் லோசனி.

‘நாஸ்டால்ஜியா’.


புத்தாண்டன்று அனிச்சையாக அவளுடையக் கார் புத்தூர் வரும்.

கம்பெனியில் எக்ஸிக்யூட்டிவ் நிலையில் பெரியப் பதவியில் இருப்பதால் யாரும் அவளைக் கேள்விக் கேட்காத சுதந்திரம்.

மனம் போன போக்கில் போகும் துணிச்சல்.

தான் செய்வதே சரி என்கிற வரட்டுப் பிடிவாதம்.

15 ஆண்டுகளுக்குப் பிறகு, ரெகுலர் ஷெட்யூல் தவறி, மதியம் புறப்படுகிற நிலை.

’50 ஆயிரத்துக்கும் மேல் சம்பளம் அதிகம் தருகிறார்கள் என்பதால் புதுக் கம்பெனி மாறி இருக்க வேண்டாமோ!’ என்றுக் கூட இப்போது தோன்றியது அவளுக்கு.

ராகவன் பாசமுள்ள கணவர்தான். பொறுப்புள்ள தந்தைதான். இருந்தாலும் பிரபுவே உயர்வாகப்பட்டது லோசனிக்கு.


பிரபுக் காலமென்பது கல்லூரிக்காலம்.

தீவிர படிப்பாளி பிரபு.

நேசித்துப் படித்ததால் தேடித் தேடிப் படித்தவன்.

ஷேக்ஸ்பியராகட்டும், வேர்ட்ஸ்வொர்த் ஆகட்டும், எட்கர் ஆலன் போ’ வாக இருக்கட்டும்…

படைப்புகளை நான்காவது கோணத்தில் பார்க்கக் கூடிய இன்டலெக்சுவல்.

வகுப்பில் பேராசிரியர்களின் விரிவுரைகளுக்கு நடுவே, புத்திசாலித்தனமானக் கேள்விகளைக் கேட்டு அவர்களை வியப்பில் ஆழ்த்துவான்.

லோசனியின் ஃபேவரைட் அமெரிக்க எழுத்தாளர் ‘எட்கர் ஆலன் போ’

‘போ’ பற்றி பி ஜி படிக்கும் பொழுது அவனுடன் விவாதித்த போது தான் அவன் மேல் பிரமிப்பு வந்தது.

பிரமிப்பு காதலாய் உறுமாறியது.

ஒருப் புத்தாண்டு நாளில் புத்தூர் தூங்குமூஞ்சி மரத்தின் வளைவில் பிரபு உட்கார்ந்தபடி, கீழே நின்ற லோசனிக்கு ‘லவ்’ ப்ரபோஸல் செய்தது;

‘யுலிஸிஸ்’ தன் காதலிக்காக அவள் விரும்பிய மரத்தைக் கட்டிலாக்கி , அதைச் சுற்றிப் படுக்கையறையும், அதற்கேற்ப அரண்மனை நிர்மாணித்த ‘மித்’ பேசிக் கனாக் கண்ட நாள்;

லோசனி, முதல் முதலில் செய்த குழிப்பணியாரத்தை அவனுக்கு அந்த மரத்தடியில் வைத்துக் கொடுத்த நாள்.

கட்டை விரலும் சுண்டு விரலும் படிக்கும் பக்கங்களை அழுத்தி பிடித்திருக்க ;

விரிந்த புத்தகத்தின் கீழ்ப்பகுதியை மற்ற மூன்று விரல்களும் தாங்கியிருக்கப் பிரபு புத்தகம் படிக்கும் அழகே அழகு.

படிப்பது மட்டுமில்லை; கர்ஸீவ் வடிவத்தில் சிதைவின்றி எழுதும் ஆங்கிலம்;

முக்கியக் கருத்துகளை, பல வண்ணங்களில் அடிக்கோடிட்டிருக்கும் அழகு;

புத்தகங்களின் ஓரங்களில் குறித்து வைத்திருக்கும் மார்ஜினல் நோட்ஸ்;

அழகாய் பேசும் துணி நாக்கு ஆங்கிலம்.

இப்படி எத்தனையோ பிரமிப்புக்களைக் கொடுத்திருக்கிற பிரபுவை மறக்கத்தான் முடியுமா..?

நெருங்கிவிட்டது புத்தூர்.

சாலைகள் எல்லாம் வெறிச்சோடிக் கிடந்தன.

இரவு முழுவதும் கண் விழித்து விட்டு இப்போது தூங்குகிறார்கள்.

15 வருடத்திற்கு முன்னாலும் இப்படித்தானே இருந்தது.

‘இப்படிப்பட்ட தனிமையான நேரத்தை தானே எதிர்பார்த்துத்தானே இருவரும் இந்த மரத்தடிக்கு வந்தோம்.’

முதல் முறையாக மாலை நேரத்தில் அங்கு வந்த லோசனிக்கு ‘லவ் ப்ரோபோசல் நாளன்று மாலை குழி பணியாரம் செய்து கொண்டு போய் அவன் கையில் கொடுத்து சாப்பிட வைத்து ரசித்த அந்த நிகழ்வு நினைவுக்கு வந்தது.

புத்தூர் கூனல் மரம் நெருங்கி விட்டது.


ஏற்கெனவே அங்கே ஒரு கார் நிற்பதைப் பார்த்தாள். லோசனி.

‘மரத்தில் ஒய்யாரமாக சாய்ந்தபடி… ‘

‘யாரது? கூர்ந்து நோக்கினாள்.

பிரபுவின் உடல் மொழி நன்கு புரிந்தது லோசனிக்கு.

‘பிரபுதான். சந்தேகமேயில்லை!’

காரை எட்ட நிறுத்தினாள் லோசனி.


“எங்கேயாவது பிரபு கண்ணில் பட மாட்டானா?’

ஏங்கி ஏங்கிப் பதினைந்து வருடங்களாகத் திரிந்த லோசனியின் புத்தியில் அன்புக் கணவன் ராகவனும் குழந்தைகளும் வந்து நின்றனர்.

“மனம் போல போக்கில் இனியும் போகக் கூடாது!” என்றது புத்தி.

‘யு டர்ன்!’ எடுத்துத் திரும்பிளாள்.

அந்த மரம் மறையும் வரை ரியர் கண்ணாடியைப் பார்ப்பதைக்கூடத் தவிர்த்தாள் லோசனி.

இனி வரும் புத்தாண்டுகளை கணவனுடனும் குழந்தைகளுடனும் கொண்டாட முடிவு செய்து கொண்டாள்.

– விகடன்(02.01.23)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *