வெள்ளை அடிக்காத கல்லறை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: June 12, 2019
பார்வையிட்டோர்: 17,323 
 

பாதி இறக்கப் பட்டிருந்த கண்ணாடியின் வழியாக காற்று அவன் முகத்தில் பட படத்துக் கொண்டிருந்தது. முற்பகல் வேளையின் தென் தமிழகத்து சாலை உஷ்ணத்தை விரிந்த சாலையின் இரு புறமும் பரந்து கிடக்கும் வெளியின் காற்று சற்றே வெம்மை தணிக்க, காரின் பின் இருக்கையில் வெகு வசதியாய் சாய்ந்து அதிகப் பரபரப்பு இல்லாத இளைப்பாறுதலில் பயணத்தை ருசித்துக் கொண்டிருந்தான். எத்தனை வருடங்களுக்குப் பின் ?மனதில் உறைந்திருந்த வருடங்களை தேடி முகிழ்ந்த போது பத்து பதினைந்து – இல்லை பதினேழு வருடங்கள் அவன் பின் செல்ல வேண்டியிருந்தது; ஒரு குறிப்பிடத்தக்க இடைவெளிதான். முட்டிலே கட்டிய தாலியாக- அப்படித்தான் அந்த நகரத்தின் இருபது வருட இருத்தலை அப்பொழுதும் இப்பொழுதும் கூட அங்கீகரித்திருந்தான். இந்தப் பதினேழு வருடங்களில் இந்த நெடுஞ்சாலை நான்கு வழிப்பாதையாக தேச முன்னேற்றத்தின் வெளிப்பாடாக உரு மாறியிருக்கின்றது. அந்த உபயத்தில் சாலையில் முன்பிருந்த நான்கைந்து பெரிய மரங்கள் – அந்த நாட்களில் பேருந்துகளின் ஓட்டுநர் நடத்துனர்கள் இன்வாய்ஸ் கணக்கெழுதி பயணிகளின் எண்ணிக்கையை உறுதி செய்து கொள்ள நிழல் கொடுத்த அந்த மரங்கள் – காணாமல் போயிருந்தன. ஓட்டுனர் கணக்கெழுதும் பழக்கம் காணாமல் போனதைப் போலத்தான்.

விரையும் வாகனத்தின் வழியாய் பின் வாங்கி பறந்து மறையும் வெளியின் தரிசனத்தில் சுகித்து மகிழும் குழந்தமை ஆர்வத்தை இன்னமும் அவன் பொசுக்கி விடாமல் தக்க வைத்திருக்கிறான். சமயம் வாய்க்கும் போதெல்லாம் அதைத் தவற விடுவதேயில்லை. அதுவும் இதை போன்ற பழைய சுவடுகளின் தடம் தேடி ஒரு இனம் புரியாத தவிப்புடன் தொடரும் பயணத்தில் அதன்சுகமே தனிதான். சாலை அகலமாக்கப் பட்டதில் தன் தடமே இழந்து மாறியிருந்தது என்றுதான் சொல்ல வேண்டும். சற்று சிரமப்பட்டுதான் அவனுடைய பழைய சித்திரங்களை அவன் நினைவு கூற வேண்டியிருந்தது. அந்த இடத்தை கடந்த பிறகுதான் அதை அவன் கண்டு பிடித்தான். காரை நிறுத்தச் சொன்னான்; சற்று பின் வரச் சொன்னான். கண்ணாடியின் வழியாக பின்னால் பார்த்தான்; திருப்தியாகவில்லை. கதவைத் திறந்து கீழே இறங்கி பாட்டில் தண்ணீரைக் குடித்தவனின் பாதி வழுக்கையான தலையில் கறுப்பும் வெள்ளையுமாய் மீதியாயிருந்த முடிகளை காற்று தாலாட்டியது.

அங்கேதான்; ஒற்றையாய் நெடிது உயர்ந்து பச்சைப் பசேலென தன் கிளைகளையும் இலைகளையும் நாட்டியமாடச் செய்த வண்ணம் ஒரு ஒற்றை அரச மரம் ஆர்ப்பாட்டமான அழகுடன் கொலுவிருந்த இடம் அதுதான். அதன்சுவடு கூட தெரியாமல் அது வியாபித்திருந்த இடத்தில் “தேசிய நெடுஞ்சாலை ஆணையம்” என்கிற கம்பீர நாமம் தாங்கி பளபளக்கும் உலோகக் கம்பிகள், பிளாஸ்டிக் கூரை, தளச் செங்கல்கள் என ஒரு பேருந்து நிறுத்தம் சொறுகப் பட்டிருந்தது. சற்று தள்ளி ஊருக்குள் செல்லும் சாலையும் நெடுஞ்சாலையும் சந்திக்கும் முனையில் சரிந்த மண் சுவர் தாங்கி நிற்கும் ஓட்டுக் கூரையுடனான டீக்கடை இப்பொழுதும் நிற்கிறது. வெள்ளையடிக்கப் பட்ட அதன் சுவர்களில் மறைந்த தலைவியை இன்னமும் மறுக்க முடியாமல் வேறு வழியின்றி அம்மா என்று ஆதுர வேஷத்துடன் அழைக்கும் ஒரு அரசியல் வாசகம்; சற்று கீழே தள்ளி வண்ண மயமான நற்செய்தி விளம்பர சுவரொட்டி என்று எதுவும் மாறாமல். “ கம்ப்யூட்டர் எளிதில் கற்றுக் கொள்ள” என்கிற துண்டு விளம்பரம்தான் சேர்ந்து கொண்டிருக்கிற ஒரு மாற்றம். சுவர்களை ஆக்கிரமிக்கும் இந்த விளம்பர வன்புணர்வு மோகத்திலிருந்து இந்த தேசம் விழித்தெழ இன்னும் ஒரு நூற்றாண்டு காலம் ஆகலாம்.

அந்த நாட்களில் காலை இரண்டாவது பேருந்தில் வந்தால் இங்கு நிற்கும் பொழுது, ஓட்டுனர் தன் இருக்கையின் பக்கத்திலும், கீழும் திணிக்கப் பட்டிருக்கும் தினத் தந்தி, தின மலர் நாளிதழ்களை ஒரு ஹார்ன் ஒலி எழுப்பி விட்டு டீக்கடையின் பக்கமாக விட்டெரிவார். பக்கத்தில் சாலையில் உடம்பைப் போர்த்திய அழுக்குத் துண்டுடனும் வாயில் புகையும் பீடியுடனும் வந்து நிற்கும் கிராமத்தானிடம் எப்படியும் பகிர்ந்து கொள்ள அவருக்கு ஒரு செய்தி இருக்கும். இதற்குள் பேருந்துக்குள் நாலைந்து பால் கேன்கள், இரண்டு மூன்று காய்கறி மூட்டைகள் ஏற்றப்பட்டு அதைக் கொண்டு வரும் தேசத்தின் முதுகெலும்பான விவசாயிக்கும் சரக்கு கட்டணமாக ஐம்பது பைசா அதிகம் வசூலித்த நடத்துனருக்கும் வழக்கமான தாவா ஆரம்பித்திருக்கும். தலையில் கட்டிய முண்டாசும், இடுப்பில் இருக்கியிறுக்கும் நாலு முழ வேஷ்டியும் திறந்த மார்புமாய் மூட்டைகளை இருக்கைகளின் அடியில் பத்திரமாய் தள்ளிய படியே “ எங்க வயித்துல அடிக்காட்டி ஒங்களுக்கு கண் அடயாதுப்பா” என்று பொருமுவான். மூன்று நாள் தாடி, விரைத்து நிற்கும் காக்கிச் சீறுடை, கலைந்த தலையுடனும், கக்கத்தில் இடிக்கியிருக்கும் நைந்த தோலிலான பணப்பை, கைய்யில் டிக்கெட் புத்தகத்துடன், அந்த விவசாயியை தாண்டி முன்னேறி “ஏறியாச்சா? போகலாமா?“ என்று கேட்டுக் கொண்டே “ ஆமா இவர்ட்ட வாங்கித்தான் நான் எங்க ஆத்தாளுக்கு கொண்டுகொட்டப் போறேன்; கூறு கெட்டவங்க, விடியாம வந்து உயிரெடுக்றதுக்குன்னு” பதிலுக்கு விளாசுவான். இதற்குள்ளாக ஒரு முறை நேரம் காக்கும் பொறுப்புடன் ஓட்டுனர் ஹார்ன் எழுப்பி, பின் திரும்பி “என்னப்பா” என்றிருப்பார். தாவா அதிகமானால் நடத்துனரை விட ஓட்டுனர் வயதில் மூத்தவர் என்றால் அவர்தான் பஞ்சாயத்து செய்ய வேண்டும் என்பது எழுதப் படாத விதி. ஒரு வழியாய் சுப்ரமணியபுரத்தை விட்டு பேருந்து கிளம்பும். ஐம்பது பைசாவுக்கு அன்று மல்லுக் கட்டிய விவசாயி இன்னும் அரைக் கோவணத்துடனும், நிர்வாணமாகவும் எலிக் கறியும் மண் சோறும் தின்று தலை நகரில் போராடிக் கொண்டிருக்கிறான். காலம் மாறியிருக்கிறதா? இந்த தேசம் முன்னேறியிருக்கிறதா? தன்னுடைய ஓட்டுநர் பொறுமை இழப்பதை உணர்ந்தவனாய் காரில் ஏறி கதவை மூடினான்.

அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் காரின் வேகம் குறைந்தது. ஒரு வழிப் பாதையானால் என்ன? ஒன்பது வழிப் பாதையானால் என்ன? எங்களுக்குப் போகத்தான் எதுவும் மிச்சம் என்பதைப் போல சாலையின் ஒரு பக்கத்திலிருந்து எதிர் பக்கத்திற்கு, மத்தி தடுப்பு சுவரைத் தாண்டி துள்ளலும் ஓட்டமுமாய் ஒன்றையொன்று உரசிக் கொண்டு வாடிக்கையான கனைப்புடன் ஒரு வெள்ளாட்டு மந்தை கடந்து சென்றது. வெயிலுக்கு தலையில் முக்காடாய் தொங்க விட்டிருந்த துண்டுடனும், கைய்யில் நீண்ட கழியிடனும் அவைகளுடைய மேய்ப்பனும் சத்தம் கொடுத்த படியே சாலையை கடந்து சென்றான். கதவினூடாக தலையை நீட்டி “சீக்கிரம்பா” என்று முறு முறுத்த இவனுடைய ஓட்டுநரை எள்ளளவும் சட்டை செய்யாமல் அந்த மத்தி வயது மேய்ப்பன் கடந்து சென்றான். வாயில் வந்த உமிழ் நீரை குறுக்குச் சுவரில் உமிழ்ந்து விட்டு “ இந்த நாடு எங்க ஸார் உருப்படப் போது? எத்தன ரோடு போட்டு என்ன?” என்று பொறுமிய வண்ணம் காரை நகர்த்தினான். மூன்று நிமிட தாமதத்தை விட ஆடு மேய்ப்பன் கூட கண்டு கொள்ளாத அவனது சுயம் காயப் பட்ட கோபத்தில் அவன் தேசத்தையே சபித்தான். இது இந்த தேசத்தின் தலையெழுத்து. முற்றிலுமாய் அவனவன் நியாயங்களுக்காய் மாத்திரம் முன்னெடுக்கும் தீவிரத்தில் முழுத் தேசமும் பிறழ்ந்து கொண்டிருக்கிறது. இதன் கலாச்சாரச் செறிவு மிகப் பெரிய காடாய் மண்டியிருந்தாலும் அதன் மரங்களூடான இடைவெளியும் வேற்றுமையும் காத தூரங்களாய்.

அவன் இப்பொழுது போய்க்கொண்டிருக்கும் அந்த நகரத்தில்தான் தேசத்தின் ஒரு முண்ணனி நிறுவனத்தின் கிளையில் தன் பணி வாழ்வைத் துவக்கினான். மூன்று வருட பிரம்மச்சார்யம், திருமணம், இரண்டு குழந்தைகள், ஒரு வீடு, அன்னை, மாமனார், மாமியார் மரணங்கள் என வாழ்வின் நல்லது பொல்லாததுகளை முகர்ந்து தீர்த்து, வயது நாற்பதுகளின் மத்தியில், முதல் உத்தியோக உயர்வில் அந்த நகரை விட்டு இடம் பெயர்ந்தான். அதன் பிறகு இப்பொழுதுதான் வருகிறான். உறவுகளின் சிதிலத்தில் வாழ்வெனும் களத்தில் இப்படிக் காணாமல் போனது சவுகரியமா அல்லது சாபமா என்பது இந்த நிமிஷம் வரையிலும் அவனுக்கு தெரிந்திருக்கவில்லை. அதுவும் இரண்டு மூன்று நாட்கள் அலுவலக வேலையாகத்தான் இந்த வருகை. ஊரைக் காலி செய்து போகிற பொழுது, அவர்களின் கார் நகர எல்லையைக் கடந்த போது அவன் மகள் அழுதது இப்பொழுதும் நினைவில் திரும்புகிறது. பாசத்தில், நேசத்தில், பரிச்சயங்களில், பகிர்ந்து கொள்வதில் வாழும் மண்ணோடு மனிதர்கள் ஒன்றித்தான் விடுகிறார்கள். இவைகளெல்லாம் இனி இல்லை என்கிற வெற்றிடமே புலம் பெயர்தலின் ரணம். சொல்லில், செயலில், செல்வாக்கில் நிறைவாய் புறப்பட்டுச் செல்லும் போதே இவ்வளவு வலி என்றால், அனாதரவாய், அபலைகளாய் புறந்தள்ளப் பட்டு, துரத்தப் பட்டு அகதிகளாய் அலைந்து திரியும் மனிதக் கூட்டத்தின் வலியை நினைத்தால் – நித்தமும் தங்கள் இருத்தலுக்காய் மாத்திரம் நாட்களைத் துவக்கி நிறைவு செய்யும் விலங்குகளிலும் கீழாய் – எவ்வளவு பெரிய அவலம்? அறியப் பட்ட நாட்களிலிருந்து இப்பொழுதும் பூமியின் முகத்தில் எங்காகிலும் ஒரு மூலையில் சாபம் சுமந்தவர்களாய் ஏதாகிலும் ஒரு மனிதக் கூட்டம் வானமே கூரையாக அலைந்து திரிந்து கொண்டிருப்பது எத்தனை பெரிய சோகம்?

புற நகருக்குள் இவன் வாகனம் நுழைந்த போது அந்த நாட்களில் கோரிக்கையாக வைக்கப்பட்டு இப்பொழுது உருவாகி நிலைத்திருந்த மேம்பாலத்தை கடந்தான். வாழ்வில் எல்லாம் மாறுகிறதைப் போல இந்த நகரமும் மாறியிருந்தது. மாறாவிட்டால் நரகமாயிருக்கும். வெறீரென்று கிடந்த இடங்களெல்லாம் சிறு சிறு கடைகளாலும் கட்டிடங்களாலும் நிரப்பப் பட்டிருந்தன. தேச முன்னேற்றத்தின் அளவு கோலான இரு சக்கர வாகனங்களின் ஆக்ரமிப்பில் அந்த பிராதான சாலை காலை பரபரப்பில் விரைந்து கொண்டிருந்தது. காய்கறிச் சந்தைக்கு முன்னதாக வரும் அந்த டீ கடையில் அதே மாஸ்டர் இப்பொழுதும் இருக்கிறார். சற்று அழுக்கேறிய முண்டாபனியன், இடுப்பில் ஒரு சிவப்புத் துண்டு, நெற்றியில் சந்தனப் பொட்டுமாய், இடைப்பட்ட வருஷங்கள் ஏற்றிய முதுமை மாத்திரம் சேர்ந்து அதே அமைதியுடனும் முனைப்புடனும் இயங்கிக் கொண்டிருக்கிறார். இறங்கி ஒரு “ஹலோ” சொல்லலாம் என்றால் முன்னும் பின்னுமாக ஊர்ந்து வரும் வாகனங்களின் வரிசை அதை சாத்தியமாக்குவதாகத் தெரியவில்லை.

பழைய பேருந்து நிலையத்திற்கு முன்னதாக வரும் மூன்று சாலைகள் சந்திக்கும் போக்குவரத்து மைய்யத்தில் ஒரு தலைவரின் ஆளுயர வெண்கலச் சிலையை பிரதிஷ்டை செய்து இரும்பு அழிகளுக்குள் சிறை பிடித்திருந்தனர். இந்த தேசத்தின் புரிதலின், பண்பின், பொறுமையின் புது அடையாளமாய் மெளனமான மெளவ்டீகத்தின் சிறைக்குள். தலைவர்களின் சிலைகளை இப்படி பார்க்கிற பொழுதெல்லாம் இவனுக்கு உமட்டிக் கொண்டுதான் வருகிறது. ஒரு செம்புக்குள் அடங்க மறுத்து கங்கையாய் பிரவாகித்த பெரிய உள்ளங்களையெல்லாம் கவ்ரவிக்கிறோம் என்று சொல்லிக் கொண்டு கறை படுத்தும் கைங்கர்யமாய். “ஊருக்காக வாழ்ந்த உள்ளம் சிலைகளாகி” சிறை பட்டுப் போவார்கள் என்று கவியரசர் கனவிலும் நினைத்திருக்க மாட்டார். இல்லையென்றால் அவரது வரிகள் வேறு விதமாக அரங்கேறியிருந்திருக்கும்.

முன்னமே பதிவு செய்திருந்த தங்க வேண்டிய விடுதிக்கு வந்து சேர்ந்தான். வரவேற்பில் மத்தி வயது கறார் கணக்கருக்குப் பதிலாக வண்ணச் சீருடையில் இளம் பெண்மணி. சமீபத்தில்தான் முழுக் கட்டடமும் புதிதான வர்ணக் குளியல் முடித்திருப்பது போல ஒரு லேசான பெய்ன்ட் வாசனை. நிர்வாகமும் மாறியிருக்க வேண்டும்; வரவேற்பின் பின்னால் மாலையிட்டு சிறிய வண்ண வண்ண விளக்குகளுக்குள் வரிசை கட்டி நிற்கும் தெய்வ பிம்பங்களில்லாமல் ஒரே ஒரு இறை முகம். அதற்கும் மேலாக ஒரு பிரம்மாண்டமான நவீன ஒவியம்.

நேர்த்தியான அலங்கரிப்பில், மிதமான குளிரில், பயண சோர்வில் உடை மாற்றிக் கொள்ளும் முன்னர் படுக்கையில் சாய்ந்து மல்லாந்து சோம்பல் முறித்த போது பழைய நினைவுகளில் மனம் பனித்திருந்தததை உணர்ந்தான். எழுந்து புறப்படும் முன் தன் அலுவலகத்தை அழைத்து தன் வருகையை தெரிவித்தான். இவன் முகம் கழுவி புறப்படும் முன் அழைத்துச் செல்ல வாகனம் வந்திருப்பதாக வரவேற்பிலிருந்து தகவல் வந்தது. தான் கீழே வருவதாக தெரிவித்து விட்டு இறங்கி வரவும் கிளையின் தலைமை மேலாளர் அவனுக்கு முன் வந்து தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு ஒரு சிறிய பூங்கொத்துடன் கை குலுக்கி வரவேற்கவும் இவன் “நோ நோ ஃபார்மாலிடிஸ்” எனவும் அவர் “நோஸார்; வீ ஆர் பிரிவிலேஜ்ட்” என்று கூறி முதல் பரிட்சையில் தான் தேறி விட்டதை தனக்குள்ளேயே பாராட்டிக் கொள்வதை அவர் முக பாவனை காட்டிக் கொடுத்தது.

நகரின் பிராதான வீதி இன்னமும் கூட சிறுத்துப் போனதைப் போல. “கிரீடம் தலை முறை தோறும் நிற்குமோ” என்கிற வேத எச்சரிப்பை உறுதி செய்வது போல சில பழைய நிறுவனங்களின் கட்டிடங்களில் புதிய நிறுவனங்கள் இயங்குவதைக் கவனித்தான். எவ்வளவு கம்பீரமான கட்டிடம்? பிரிட்டிஷ் பேரரசின் மாட்சிமையை நினைவு கூறும் அதன் வாசல் படிக்கட்டுகளும், உயர்ந்த பெரிய அலங்காரத் தூண்களும். உள்ளே நுழைந்தவனுக்கு எல்லாம் அப்படியே தலை கீழாகவும் உறுமாரியிருந்ததில் மனதினுள் மெல்லிய அதிருப்தி படர்ந்தது. நவீனப் படுத்துவது என்ற பெயரில் அந்த பரந்த ஹாலின் கம்பீரமே சிதைக்கப் பட்டிருந்தது. அதன் உயர்ந்த கூரையிலிருந்து தொங்கி மெளனமான உதறலுடன் சுழலும் மின் விசிறிகளின் அழகே தனிதான். எல்லாம் பாழா அல்லது பழையது என்று தேற்றிக் கொள்வதா? நாலே நாலு பழைய உடன் பணி புரிந்தவர்கள் தவிர மற்ற எல்லாருமே புது முகங்கள்; இள வயது. நால்வரிடமும் சிறிது நேரம் சுக செய்திகளை பரிமாறிய பின் தான் வந்த தணிக்கை வேலையில் தீவிரமானான்.

மாலையில் வேலை முடித்து ஒரு குறிப்பிட்ட தூரம் வரை மட்டும் காரில் வந்து காரை திருப்பி அனுப்பி விட்டு, நடந்து சென்று நகரை முகர்வது என்ற ஆவலில் நிதானமாய் நடந்து கொண்டிருந்தான். நிறைவான மனதில் ஏதோ குறைவது போலவும் ஒரு கலவையான உணர்வுகளோடு அவன் சில இடங்களில் சில முந்திய நினைவுகளை திரும்பக் கொண்டு வர முயன்றான். சந்தையின் இரண்டாவது வாசலில் அந்த சிறிய தைய்யற்கடை இருந்தது. “பெரியார் வாசகர் மைய்யம்” என்ற சிறிய விளம்பரப் பலகையும் இருந்தது. ஆனால் கடையில் அந்தப் பழைய மெலிந்த உருவம்தான் இல்லை. தன் வரலாற்றுக் கடமையை யாரோ இன்னுமொரு நண்பனிடம் ஒப்படைத்துவிட்டு என்னவாகியிருப்பார்? இயற்கையுடன் கரைந்து விட்டாரா? கடையிலிருந்தவரிடம் விசாரித்த போது அதை உறுதி செய்தார். பிரமநாயகம் தன் கொள்கைப் பிடிப்புகளோடு அந்த சிறிய கடை ஒன்றைத்தான் தன் ஆயுள் கால சேமிப்பாக குடும்பத்திற்கு விட்டுச் சென்றிருந்தார். கடையை மாத்திரம் சுவீகரித்துக் கொண்ட அவருடைய வாரீசுகள் அவர் முழு மூச்சுடன் பின்பற்றிய கொள்கைக்கான மரியாதையாக, அடையாளமாக அந்த பெயர்ப் பலகையை அகற்றக் கூடாது என்கிற நிபந்தனையுடன் கடையை வாடகைக்கு விட்டிருந்தனர். மறைந்தவனின் நினைவுகளைப் பேணுவதற்கு – உடன்படாவிட்டாலும் – அவன் பாராட்டி வந்த கொள்கைளும் கூட உதவுகின்றன. அந்த வகையில் பிரமநாயகம் தன் கொள்கைகளின் ஆளுமையி(யா)ல் இன்னமும் வாழுகின்றார். ஆள் இருந்திருந்தால் நலம் விசாரித்து பழைய விவாதங்களில் மறுபடியும் நனையலாம். எதிராளியின் நம்பிக்கைகளை சிறிதளவும் காயப் படுத்தாமல் என்ன ஒரு ஆழமான நிதானமான வாதம்? முதல் முயற்சியே முட்டிக் கொண்டதில் மனதில் அவன் எழுப்பியிருந்த பழைய நினைவுகளின் மாளிகை பட படவென சரிவதைப் போன்ற ஏமாற்றத்துடன் அவன் நகர்ந்தான்.

சற்று தள்ளி கம்பீரமாய் உயர்ந்து நிற்கும் புனித வளனார் ஆலயத்தின் வாசலில் அந்த தாயார் அதே பழைய கள்ளிப் பெட்டியின் மேலமர்ந்து மெழுகு திரிகளை வரும் பக்தர்களுக்கு விநியோகித்துக் கொண்டிருக்கிறார். பரபரத்து முன்னால் போய் நின்றான். எந்திரமாய் இரண்டு மெழுகு திரிகளை எடுத்துக் கொடுத்தவர் இவன் கொடுத்த ருபாயை பெற்றுக் கொண்டு நிறைவோடு “ உள்ள போய் கொளுத்தனும் ராசா” என்று சொல்லிவிட்டு இவனுக்குப் பின் வரும் வாடிக்கையாளரை கவனிக்க ஆரம்பித்து விட்டார். அவன் ஒரு நிமிடம் தாமதித்து “ என்னை ஞாபகம் இல்லயா?” என்று கேட்க நினைத்தான். பீடத்தில் வத்திகளின் மெழுகு ஒளிர்ந்து பின் உருகி உருகி உயர்ந்து உறைந்து கிடப்பதைப் போல் இந்த தாயாரின் நினைவுகளில் எத்தனையோ பக்தர்களின் தானும் ஒருவனாக உறைந்திருப்போமோ என்று தனக்குள்ளேயே கேட்டுக் கொண்டே ஆலயத்தினுள் நுழைந்தான். முதுமை அந்தத் தாயின் விழிகளில் விரித்திருக்கும் திரையும் ஒரு காரணமாயிருக்கலாம். உள்ளேயிருந்து ஆர்கனின் கம்பீர அலங்காரத்தில் பரவிய குழுவினரின் பாடல் உள் மண்டபத்தை நிரப்பி வெளியில் பாய்ந்து வந்தது. மாலை திருப் பலிக்காக பெரிய மணி கம்பீரமாய் அறைந்து அடிக்க ஆரம்பித்தது. உள்ளே சென்று கொண்டிருந்த ஒரு சிறுவனின் கைகளில் மெழுகு வர்த்திகளைக் கொடுத்து விட்டு இரண்டாவது பக்க வாசலின் வழியாக வெளியேறினான்.

பிரமநாயகமும் மெழுகுவர்த்தி தாயாரும் எதிரும் புதிருமான அடையாளங்களாய். எதிரும் புதிருமானால் என்ன? எப்படியானாலும் ஏதாகிலும் ஒரு நம்பிக்கைதான் மனித வாழ்வை நகர்த்திச் செல்லுகின்றது. அப்படித்தான் அவன் வாழ்வின் மிக மிகக் குழப்பமான ஒரு சூழலில் அந்த ஏழைத் தாயார் வழியாக நம்பிக்கையின் வார்த்தைகள் அசரீரியாக இவனுக்குள்ளே நங்கூரமிட்ட சந்தர்ப்பத்தை இப்பொழுது நினைவு கூர்ந்தான். என்ன செய்யலாம்? எங்கு ஒளித்துக் கொள்ளலாம்? அல்லது ஓட்டத்தையே எப்படி முடித்துக் கொள்ளலாம் என்று தெரியாமல், புரியாமல் திகைத்திருந்த கலவரமான திகில் சூழலில், ஆலயத்திலிருந்து வந்த பாடகர் குழுவின் இசை இவனை ஈர்த்தபோது – அந்தத் தாயின் அருகில் நின்று அரை மயக்கத்தில் அதைக் கேட்டுக் கொண்டிருந்த போது – அந்த தாயார் இவனைப் பார்த்து கைகளில் இரண்டு மெழுகுத்திரிகளைக் கொடுத்து “ஏன்ய்யா வெளியவே நிக்ற? உள்ள போ; உள்ள போய் இதக் கொழுத்து” என்று இவனை உசுப்பித் தள்ளிய பொழுது சட்டைப் பைய்யிலிருந்த கடைசி இருபது ருபாயையும் கொடுத்துவிட்டு இயந்திரமாய் உள்ளே போனான். பாடகர் குழுவின் இசையும், காற்றில் அசைந்து ஒளிர்ந்து நடனமிடும் மெழுகின் ஒளி நிழல்களுக்கும் மத்தியில், இடது புறம் ஈனக் கோலமாய் அறையுண்ட சிலுவையிலிருந்து வடியும் இரத்தத்துடன் அந்த இறை மைந்தன் இவனைப் பார்த்து “எல்லாம் முடிந்தது” என்று சொல்லுவதைப் போலிருந்தது. திடும்மென சூழப் பட்ட அந்த அந்தர வெளியிலிருந்து அதே மயக்கத்தில் தன் அறைக்குத் திரும்பினான். புறப்படத் தயாராய் வைத்திருந்த பைய்யை ஒதுக்கிவிட்டு படுக்கையில் விழுந்தவனுக்குள் அந்த மெழுகுவத்தி தாயின் “உள்ளே போ” என்ற உரத்த சத்தம் மறு படியும் காதுகளில் ஒலித்த போது அவன் சற்று நிதானமாய் தன்னுள்ளே போனான். சிக்கல்களை சந்திக்கவும் எதிர் கொள்ளவும் வேண்டிய சிறிய ஒளிக் கீற்றை அசைந்தாடிய மெழுகுவர்த்திகளின் நிழலில் உணர்ந்தவனாய், அடை பட்ட வழிகளை சற்றே அகற்ற முடியும் என்ற சிறிய நம்பிக்கையுடன் கண்ணயர்ந்தான். காலையில் விழித்த போது அந்த வெளிச்சம் புதிதாய் தெரிந்தது. அதன் பின் நைந்து தொய்ந்த அந்த பழைய சேலையும் பரட்டைத் தலையுமான அந்தத் தாயின் தரிசனம்தான் அவன் கண்களையும் இருதயத்தையும் நிறைத்திருந்தது. இவ்வளவும் அவன் அந்த ஏழைத் தாயிடம் அன்றும் சொல்லவில்லை; இன்றும் சொல்லத் துணியவில்லை. இரண்டு மெழுகுதிரிகளுக்கு அவன் தரும் அந்த அபரிதமான தொகையை வாங்கிக் கொண்டு தன் இருதயத்தின் நிறைவை “நல்லா இருப்பப்பா; ஓஹோன்னு வருவ யேன் ராசா” என்று அன்று பல முறை வாழ்த்திய தாயே இன்று ஏன் என்னை மறந்தாய் என்று கேள்வி எழுப்ப அவனுக்கு மனதில்லை. அடைந்திருந்த பதில்களை இப்பொழுதின் கேள்விகள் அர்த்தமிழக்கச் செய்யலாம் என்ற அச்சத்திலா? எதுவோ? அந்த நேரத்தில் அந்த மெளனம்தான் சவ்கர்யமாயிருந்தது. நீண்ட இடைவெளிகளின் பின்னர் அந்த தரிசனத்தில் கண்கள் நிறைந்திருந்தாலும் மனம் தகிப்பதை தவிர்க்க முடியவில்லை. மிகப் பெரிய பாரமாக அழுத்தவில்லையென்றாலும் மெழுகுவர்த்தி தாயார் தந்த ஏமாற்றத்தில் மனம் சற்று கனமாகியிருந்தது. மெதுவாக நடந்தான். புழுதி கிளம்ப ஒரு சிறு காற்றடித்து அமர்ந்தது.

எதிர் திசையில் ஒரு மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் இவனைப் பார்ப்பது போல் இருந்தது. இவனுக்கு ஆர்வமில்லை. இனம் கானும் அக்கறையுமில்லை. அந்த வாகனம் இவனைக் கடந்து சென்று நிற்பது போல் இவனுக்குத் தெரிந்தது. திரும்பி சத்தம் எழுப்பிக் கொண்டு வந்த அந்த மோட்டார் சைக்கிள் இவனைத் தாண்டி நின்றது. வாகனத்திலிருந்து இறங்கியவன் இவனிடம் நெருங்கி ஒரு கைய்யால் சலாமிட்டு சிரித்து “ஸார்” என்றான். அவனுடைய பழைய பைக் மெக்கானிக். முற்றிலுமாய் மாறியிருந்தான். அந்த இளமை எங்கே? அந்த உடம்பு எங்கே? தலை புரளும் முடி எங்கே? “இல்ல – அடையாளமே தெரியல” என்று ஆரம்பித்தவனை “நீங்களுந்தான் ஸார்” எனவும், தெருவில் சற்று ஒதுங்கி இருவரும் தங்கள்பேச்சை துவந்தனர். நிற்கும் இடத்தை விட்டு சற்று தள்ளிதான் அவனுடைய கடை என்றாலும் நினைவே இல்லாமல் தாண்டி வந்து விட்டோம் என்பது அவனுக்கு உரைத்தது. தன்னுடய வாகனத்தை திரும்ப உறும விட்டுக் கொண்டு விடை பெற்றுச் செல்லும் பொழுதுதான் கால வெள்ளத்தில் அடையாளங்கள் தொலைந்திருப்பது அனைவருக்கும் பரஸ்பரமானது என்பது இவனுக்கு உரைத்தது.

இரவு உணவிற்கு பின் சிறிது நேரம் வாசிப்பு; சிறிது நேரம் தொ(ல்)லைக் காட்சி என்று அந்த இரவை உமிழ்ந்து விட்டு உறங்கச் சென்றான். காலையில் எழுந்த போதுதான் ஞாயிற்றுக் கிழமை என்பது நினைவில் வர படுக்கைக்குள் திரும்பவும் தலை புதைத்து விடுமுறையின் இலக்கணமான காலை உறக்கத்தை நீட்டித்தான். ஒரு மணி நேர சுகத்திற்குப் பிறகு திரும்பவும் எழுந்தவனுக்கு, அலுவலகத்தில் தான் இன்று வருவதில்லை என்று சொன்னதும், எங்காவது வெளியில் செல்லலாம் என்ற பொறுப்பாளரின் அழைப்பை மறுத்ததும் நினைவில் வந்தன. இந்த நாளை என்ன செய்யலாம்? வெகு நீண்ட இடைவெளிக்குப் பின் குடும்பத் தேவையோ அலுவலக அலட்டலோ இல்லாமல் ஒரு முழு நாள் கைய்யிலிருப்பது உரைத்ததும் கட்டிலிலேயே “ஓ ஐ ஆம் ஃப்ரீ” என்று “ஹோம் எலோன்” ஆங்கிலப் படக் குறும்பனை போன்ற குழந்தமை குதூகலத்தின் உச்சத்திற்கு சென்றான். “கிரேட்” அவன் வாய் அவனையுமறியாமல் முணுமுணுத்தது.

வெகு நிதானமான காலைக் காப்பியும் தொலைக் காட்சியுமாய் இந்த விடுதலையை எப்படிக் கொண்டாடுவது என்ற யோசனையின் நிமிஷங்களில் கரைந்தான். முந்திய நாள் அனுபவத்திற்கு பிறகு, இன்னமும் இரண்டொருவர் இருந்தாலும் பிரமாதமாக பழைய உறவுகள் நண்பர்களென்று எவரையும் சென்று பார்க்கும் நாட்டமில்லை. மெக்கானிக்கிடம் விடை பெற்ற பிறகு இவன் பங்கு பெற்றிருந்த திருச்சபையின் தீவிர உறுப்பினர் ஒருவர் இவனைக் கடந்து அதே சைக்கிளில், அதே வேகத்தில் சென்றும் “ஹூகும் – அவரும் ஏமாற்றமே தந்திருந்தார். காலம் அவரை வெகுவாய் கடித்திருக்க வேண்டும்; மிகவும் தளர்ந்திருந்தார். இயந்திரம் ஆகியது நாட்களா? மனிதர்களா? இரண்டுமேயும்தானா? அவனுக்குப் புரியவில்லை. கனவுகளை அடை காப்பதில் கூட ஒரு நிறைவு கிட்டலாம். அதில் எவ்வித எதிர்பார்ப்புகளும் இருப்பதில்லை. நினைவுகளை சுமந்து திரிந்து மறு படியும் நுகரப் பார்க்கும் பேதமையில் சில போது மிஞ்சுவது சூன்யம்தானா? “இந்த நாட்களைப் பார்க்கிலும் முன் நாட்கள் நலமாயிருந்தது என்று சொல்லாதே; நீ இதைக் குறித்து கேட்பது ஞானமல்ல” என்கிற வேத வசனங்களின் எச்சரிப்பு இந்த அடிப்படையில்தானா? புதிர் போலவும் புரிவது போலும்தான். நாளைக் கழிக்க என்ன செய்யலாம்? எங்கு செல்லலாம்? “ நாளும் பொழுதுமா இன்னும் படுக்கைலேர்ந்து எழுந்திருக்கலயா? தம்பீ அங்க என்னப்பா?”– அம்மா, புரண்டு கொண்டிருந்தவன் சட்டென்று எழுந்து நிதானமாய் தலையனையை முதுகுக்கு அண்டை கொடுத்து சாய்ந்தான். அசரீரியாய் கேட்ட குரல் – அம்மா? ஆற அமர அங்குலம் அங்குலமாய் மரணம் சிதைத்த அம்மா. நீடு துயில் அம்மாவுக்கு இந்த நகரத்தில் சம்பவிக்கும் என அவன் உடன் பிறந்தவர்கள் எதிர் பார்த்திருக்கவில்லைதான். அம்மா கல்லறையாய் காத்திருப்பது இங்கேதான். இந்த நகரத்தில்தான். போய் பார்த்தால் என்ன? சடங்காக சம்பிரதாயமாக அல்ல – எப்படி இருக்கிறது என்றாகிலும் பார்க்கலாமே. எப்படி கண்டு பிடிப்பது? முயற்சிக்கலாம்; புறப்பட்டான்.

ஆட்டோவை விட்டு இறங்கினான். நகருக்குள் நுழையும் நீண்ட நெடுஞ்சாலைக்கு இணையாகவே பரந்து விரிந்திருந்த இடுகாட்டின் முன்பாக, சாலையில் முன்பு இருந்தஎல்லா ஆக்ரமிப்புகளும் அகற்றப் பட்டு அந்த நீண்ட செவ்வகப் பரப்பை நகரின் ஒரு நிறுவனம் தத்தெடுத்து நடைப் பயிற்சி பாதையாகவும், சாலையோரப் பூங்காவாகவும் மாற்றியிருந்தது. இரண்டு மூன்று அணிகளின் கிரிக்கெட் ஆட்டம், இறகுப் பந்து விளையாடுபவர்கள் என மொத்தத்தில் உறங்குபவர்கள் முன்னால் வாழ்க்கை சவாலிட்டு விளையாடுவது போல களை கட்டியிருந்தது. மேற்கிலிருந்து இரண்டோ அல்லது மூன்றாவதோ வாசல் என்கிறதான மிக மிக மெல்லிதான புகை படர்ந்த ஞாபகம். அவன் எதிர் பார்த்திருக்கவில்லை. மைய்யானத்திலாகிலும் நகராட்சி மிக மிகப் பொறுப்புடன் தன் பணியை நிறைவேற்றியிருந்தது. “ஸி.எஸ்.ஐ திருச்சபை கல்லறை தோட்டம்” என்ற அறிவிப்பு பலகை அவன் தேடும் வேலையை எளிதாக்கியது. உள்ளே நுழைந்தான். நுழையும் போதே மனது கனப்பது போல; இல்லை வெறுமையானதாகவோ? உணர்வா? உறுத்தலா? சிறிதாய், பெரிதாய், க்ரானைட், பளிங்கு, தளச்செங்கல்கள், வெறும் சிமிண்ட், வர்ணப் பூச்சுகள், வெறும் வெள்ளை மாத்திரம் அடித்து என்று வித விதமாய் விரிந்த வரிசையில் கல்லறையிலும் வசதி வாய்ப்புகள்தான்; ஏற்றத் தாழ்வுகள்தான். ஒரே ஒரு ஒற்றுமை – எல்லாவற்றிலும் இடம் பெற்றிருக்கிற சிலுவைதான். கல்லறை என்பதின் அடையாளமாக சிலுவையா? கிருஸ்தவத்தின் அடையாளமாகவே ஆகிப் போன அந்த புனித சிலுவையை யதார்த்தத்தில் கல்லறைகள் மாத்திரம் சுமக்கின்றனவா? சர்ச்சைக்குரிய கேள்விகள் என்றாலும் இதுவும் கால ஒட்டத்தில் ஸ்தாபனமாய் உறைந்து போகிற எல்லா சித்தாந்தங்களின் முன்பும் வைக்கப் படுகிற கேள்வி மாதிரிதானா? அருகருகேயும் நெரிசலாகவும் முளைத்து நிற்கும் சிலுவைகள் கழிந்து போன வருடங்களின் எண்ணிக்கையை நினைவு படுத்தின. இவன் கவனம் செலுத்த வேண்டியது, வெள்ளை கூட அடிக்கப் படாமல் பராமரிக்கப் படாமல் இருக்கும் கல்லறைகளைத்தான். முதல் வருடாந்தரக் கூடுகையில் நினைவு கூற வருகை தந்ததுதான்; அதன் பிறகு பத்து வருஷங்களுக்கு மேலாகவும் இந்த நகரத்தில் ஜீவனோபாயம் கழித்திருந்தாலும் ஒரு முறை கூட எட்டிப் பார்த்திருந்ததில்லை.

ஒன்று, இரண்டு – அங்கே அடுத்த வரிசை, அந்தக் கடைசி, மறுபடியும் பாதையை ஒட்டிய முதல் வரிசைக்கு வந்து கண்களை மேய விட்டாலும் – ஊஹூம் – அவனால் அடையாளம் காண முடியவில்லை. கால்களில் உறுத்தும் சிறிய முட்களும், அந்த நகரத்திற்கேயுரிய தேறி மணலும், தலைக்குமேலே எகிறும் நண்பகல் வெயிலின் தகிப்பும் – அவன் சற்று ஒதுங்கி ஒரு மரத்தின் நிழலில் அடைக்கலமான போது இந்த தேடலின் உந்துதல் குழந்தமையா, மெளடீகமா, பைத்தியக்காரத்தனமானதா? எதில் சேர்க்கலாம்? அவனுக்கே தெரியவில்லை. ஆனால் கண்டு விட வேண்டும் என்கிற தவிப்பும் உறுத்தலும் தணிய மறுக்கிறது. ஒரு ஆங்கில மேற்கத்திய திரைப்படத்தின் உச்ச காட்சியில் வில்லன் புதையல் அடங்கியிருக்கும் கல்லறையை நோக்கி தாறு மாறாக வெறி மிகுந்த வேகத்தில் ஓடுவதை பிரமிப்பூட்டும் விதத்தில் காட்சிப் படுத்தியிருந்த கேமராவின் அசைவுகள் அவனுக்கு நினைவில் வந்தன. இப்பொழுது இவன் பின்னால் இன்றிகோவின் ஆர்ப்பாட்டமான இசையுமில்லை; முன்னால் காமிராவுமில்லை. இப்பொழுதும் அவனுடைய புதையல் அம்மாதான். இறைவன் மனிதனுக்கு தந்த அற்புதமான அட்சய பாத்திரம் அம்மா. தான் எங்கும் எப்பொழுதும் பிரசன்னமாக முடியாது என்பதால் இறைவன் அன்னையரை உருவாக்கினான் என்ற அந்த வார்த்தைகள்தான் எத்தனை ஆழம் மிகுந்தது? அர்த்தம் நிறைந்தது. மறு படியும் நிதானமாக அந்த மர நிழலிலிருந்து பார்வையை கூர்மையாக்கிய போதுதான் உள்ளே நுழைகிற இடத்திலிருந்து ஒரே கோட்டில் ஒரு எல்லையாய் உயரமான காங்கீறீட் தூண்கள் நிற்பதை கவனித்தான். அந்தத் தூண்களுக்கு அந்தப் புறம் இருக்கும் கல்லறைகளில் வேத வார்த்தைகளோ சிலுவையோ இல்லை என்பது புலப்பட்ட பிறகு, மறுபடியும் நிதானமாய் அந்தத் தூண்களின் முன்புறம் தேடிய போது பாதையிலிருந்து நாலாவது வரிசையில் நிதானித்தான்- அம்மா –
அம்மாவேதான்.

வலது புறத்தில் அநேகமாக சிதிலமாகி விட்டதும் இடது புறத்தில் அம்மாவினுடயதைக் காட்டிலும் சற்று சிறியதாகவும் எளிய பச்சை வண்ணம் பூசப்பட்டிருந்த இரண்டு ஆத்மாக்களின் உறைவிடங்களுக்கு மத்தியில் அம்மா உறங்கிக் கொண்டிருக்கிறாள். எல்லோரையும் போல சிலுவையை கல்லறையில் அவன் செங்குத்தாய் நிறுத்தியிருக்கவில்லை; மாறாக முழுக் கல்லறையின் பாதத்திலும் நீண்டு விரிந்த படுக்கை வசமாகத்தான் அம்மாவின் சிலுவை. தன்னுடைய இந்த வடிவமைப்பு அவனுக்கு நினைவில் வந்த பின்புதான் அடையாளம் காண்பது இலகுவானது. அவன் பயந்திருந்த அளவுக்கு சேதமாகியிருக்கவில்லை. இரண்டு சிறு செடிகள் இடது புறம் முளைத்திருந்தன. கல்லறயின் பின்னாலிருந்து உயர்ந்திருந்த முள்செடி கவிழ்ந்து நினைவுக் கல்லை மறைத்திருந்தது. அந்தக் கிளையை முறித்துப் போட்டான். ஆனால் நினைவுக் கல் முழுதும் வெளிறிப் போயிருந்தது. தேடித் தேடி தடவி, எழுதப் பட்டிருந்த வேத வசனத்தை உறுதி செய்த பிறகுதான் திருப்தியானான். ஆம், கர்த்தருக்குப் பிரியமான அம்மா அவரோடே சுகமாய் தங்கியிருக்கிறாள். அம்மாவின் பொன்னம்மாள் ஜான் என்ற நாமகரணத்தில் பொன் மட்டும் தெரிந்தது. எவ்வித படாபடமோ, ஆளுமை அலட்டலோ இல்லாத, போலித் தனமற்ற எளிமையான அம்மாவின் நினைவுக் கல் கிரானைட்டுக்குப் பதிலாக போலியாயிருந்ததால் எளிதில் வெளிறிப் போயிருந்தது ஏமாற்றம்தான். கண்டு பிடித்துவிட்ட அமைதியில் திருப்திதான் என்றாலும் இதை எப்பொழுது சரி செய்ய முடியும் என்ற தவிப்பில் மனம் தத்தளித்தது. தள்ளி வந்து இரண்டு மூன்று கோணங்களில் தன் அலைபேசியில் படமாக்கினான். தன்னைப் போய் மற்ற வேலைகளை பார்க்கச் சொல்லிவிட்டு முழுதுமாய் கட்டி முடியும் வரை அருகிலேயேயிருந்து மேற்பார்வையிட்ட சாமுவேல் வாத்தியார் நினைவு வந்தது. தானும் சகோதரனும் மற்ற சிலருமாய் வாசலிலிருந்து அந்த இடம் வரை பெட்டியை தூக்கிய பாரம் தோள்களில் இப்போது கனப்பது போல.

ஒரு அதிகாலை மூன்று மணியளவில், மருத்துவமனை ஸ்டூலில் அமர்ந்தவாறே அம்மாவின் படுக்கையில் தலை சாய்த்து தூங்கிப் போனவன் ஏதோ ஒரு அசைவில் விழித்த போது – அம்மாவின் கண்களில் ஒரு ஜோதி மயமான பிரகாசம் – இப்பொழுதும் அவன் கண்களை நீரால் நிறைக்கிறது. இவனும் அணையப் போகிறவரை நீங்காமல் உறைந்திருக்கும் அந்த பிரகாசம். அது அணையப் போகிற ஒளியின் தீவிரம் என்று புரியாமல் பார்த்துக் கொண்டிருந்த பொழுது, வழக்கமான பரிசோதனைக்கு வந்து கைநாடி பார்த்த செவிலியரின் முகநாடி மாறி அவர் பரபரப்புடன் மருத்துவரை அழைக்க ஓடியதும் இவனுக்கு புரிந்து விட்டது. மருத்துவர் வருவதற்குள் இவன் பார்த்துக் கொண்டிருக்கையிலேயே விழிகள் ஒரு பக்கம் தூக்க, இடுப்பின் ஒரு பக்கம் துடிக்க இறுதியாய் அம்மா விடை பெற்றுச் சென்றாள்.

அன்றிரவு அம்மாவுடன் அவன் மட்டும் தன்னந் தனியனாய்; அநேகமாக அந்த ஒரு வாரமாக அப்படித்தான். அம்மாவின் மூளைக்கு அவள் இரத்தம் செல்ல மறுத்தது. எப்பொழுதோ யாரும் சரியாய் கவனியாமல் விட்டிருந்த அந்தக் கோளாறு ஒரு ஆறு மாத கால அவலமான போராட்டத்திற்கு பின் கடைசி பதினாறு நாள் படுக்கையாக இந்த மருத்துவ மனையில். அவனுக்கு அழுவதற்கெல்லாம் அந்த இரவில் நேரமில்லை. மருத்துவருக்கு கை குலுக்கி நன்றி கூறினான். வீட்டிற்கு கொண்டுசெல்ல வேண்டிய ஃப்ளாஸ்க், தம்ப்ளர் இத்யாதிகளை ஒரு பைய்யில் அடைத்தான். மருத்துவமனை காவலாளியிடம் விசாரித்த போது ஒரு வாடகைக் காரின் நம்பரையும் அது நிற்கும் இடத்தையும் சொன்னான். காரை அழைத்து வந்து ஸ்ட்ரெச்சரில் இருந்து அம்மாவை கைகளில் சுமந்து, பின் இருக்கையில் தோளில் சாய்த்து, அப்படி தன் இறுதிப் பயணம் துவக்கிய அம்மா இறுதியாக இங்கு வந்து சேர்ந்தாள்.

அம்மா புதைக்கப் பட்டிருக்கிறாளா? இல்லை விதைக்கப் பட்டிருக்கிறாளா? வாழ்நாள் முழுதும் தூங்குகிறதும் ஆசிரியப் பணியிலிருக்றதுமான நேரம் தவிர, முழுதும் கிறிஸ்துவ ஆங்கில கோல்டென் பெல்ஸ் வரிகளையும் கீர்த்தணைகளையும் முணு முணுத்துக் கொண்டே தன் நம்பிக்கையை ஆணியடித்ததை போல் உரம் கொண்டிருந்த அம்மா, தன்னளவிலேயாகிலும் விதைக்கப் பட்டிருக்கத்தான் வேண்டும். புதைக்கப் பட்டதின் மூலம் மறுபடியும் விதைக்கப் பட்ட நம்பிக்கையில். மனித வாழ்வின் நிலையாமை, அம்மா என்கிற பாலம் சரிந்து போன பின் பிரம்மாதமாய் சந்திக்க மறக்கிற உறவுகளின் சிதிலம், சுழன்று வீசும் காலத் தென்றலில் கரைந்து மறையும் இழப்பின் ரணம் – இந்த நினைவுச் சின்னங்கள் அன்பையும் உறவையும் நீட்டிக்கின்றனவா? இல்லை நீர்த்துப் போக வைக்கின்றனவா? ஆவி பிரிந்து ஸ்தூலமாய் எஞ்சுவது சரீரம் மாத்திரம்; மிஞ்சுவது ஆத்மாவாக வாழ்வைத் தொடர்ந்து தேடும் தாகத்தில் மனிதன் விரித்துக் கொண்டிருக்கிற நம்பிக்கைகளும் வழிகளுமாய் மதங்கள். வழி வழியாய் அக்கறையற்ற சடங்காய் போனாலும் அல்லது அப்படியே மூழ்கி இறுகப் பற்றிக் கொண்டாலும், எப்படியானாலும் இந்தக் கல்லறைகளே ஒரு நம்பிக்கையா? அல்லது நம்பிக்கையின் கல்லறைகளா? நிலையற்ற மனித வாழ்க்கை இந்த நினவுச் சின்னங்களால் நிறைவுருமா அல்லது வெறும் மனித நிராசையின் அடயாளங்களாகவா? எழுந்து நின்றவன் உரைக்கும் வெயிலை உணர்ந்தவனாய் திரும்பி பாதையில் வந்து மரத்தின் நிழலில் ஒதுங்கினான்.

வித விதமாய் கம்பீரமாய் முழுவதும் கிரானைட், மார்பிள் என்று பளபளக்கும் கல்லறைகள் அவன் கண்களில் மறுபடியும் பட்டன. அதனுள்ளே உறங்கிக் கொண்டிருப்பவர்களுக்கு ஆவியும் ஜீவனும் இருந்த போது என்ன கிடைத்திருக்கும்? ஆவி பிரிந்து ஆன்மா கரைந்த மிச்சத்திற்கு கிடைத்திருக்கும் இந்த படாபடோபத்தைக் காட்டிலும் இந்த பூமியில் அவன் நாட்கள் மேன்மையாக இருந்திருந்தால் மரணத்தின் பின்னான இந்த தபர்தஸ்துக்கு ஒரு நியாயமோ அவசியமோ இருக்கலாம். எது எப்படியானாலும் இந்த பூமியில் ஒருவனின் நாட்கள் எவ்விதமாய் மலினப் பட்டிருந்தாலும் மரணத்திலும் அவன் அனாதரவாய் மிதிக்கப் பட்டாணானால் அந்த வாழ்வின் தேவைதான் என்ன? அர்த்தம்தான் என்ன? மரணமும் கூட ஒரு ஜீவனில் மகிமையாக வேண்டும். அப்படிப் பார்த்தால் அந்த மகிமைக்கு இந்த கல்லறைகளெல்லாம் ஒரு சான்றுதான்.

உதிர்ந்த ஆன்மாவின் நிரந்தர உறக்கத்திற்கு பின்னும் கூட அவன் வாழ்வின் மகிமையை பறை சாற்ற வேண்டிய நிர்ப்பந்தத்தில் சக மனிதன். பெற்றவன் உயிலிலே கோளாறே செய்திருந்தாலும் கூட “என்னமாய் இருந்தான் பாரு? இவனுக்கு என்ன குறைச்சல்? உருப்படியாய் ஒரு கல்லறை கூட பொருத்தமாகச் செய்யாமல்.” என்று ஊர் வாய் கோணாமலிருக்கச் செய்வது இந்தக் கல்லறைகள். இதனுள்ளே உறங்கிக் கிடப்பது உயிரற்ற சவங்கள் மாத்திரமே அல்ல; தூசி தட்டி பார்த்தால் ஒவ்வொன்றிலிருந்தும் கவின் மிகு காவியங்களும் கிடைக்கலாம்; கசப்பு மிகுந்த காடியாய் சோக கீதமும் இசைக்கலாம். உள்ளே புழுவும் பூச்சியும் அரித்து எலும்பாய் சிதைந்து சிதிலமானாலும் வெளியே வார்த்தைகளில் கம்பீரிக்கும் கட்டிடங்களாய் வாழ்கிறார்களா? அல்லது அப்படியொரு மயக்கமாகிலும். ஜனனமும் மரணமும் நிகழ்ந்து கொண்டேயிருக்கும் ஒரு ஊழிக் காலமாய் தொடரும் மனித வாழ்விற்கு கவித்துவமான அமரம் சேர்க்கும் பிரயாசமாகவும் இந்தக் கல்லறைகளைக் கொள்ளலாமா? வெயிலின் உக்கிரத்தில் அம்மாவின் கல்லறை மனதில் உசுப்பிய தாகத்தை உடலிலும் உணர்ந்தான்.

இரவில் கட்டிலில் உறங்குவது திரும்பத் தொடரும் வாழ்வென்னும் நம்பிக்கையிலென்றால், கல்லறைக்குள் உறங்குவது புதிதாய் து(ல)வங்கும் நித்தியத்தின் மேலான நம்பிக்கையிலா? அல்லது அந்த நியாயம் வேண்டியா? மனித நம்பிக்கையெனும் நெடுந்தடத்தில் தொடரும் ஆன்ம பயணம். இடையில் சற்று பத்திரமாய் இளைப்பாரும் சத்திரமாகவோ இல்லை வெறும் சாஸ்திரமாகவோ? எப்படிப் பார்த்தாலும் எல்லாக் கல்லறைகளும் தங்கள் தங்கள் மும்தாஜைக் கொள்ளயாடிய தாஜ் மகால்கள்தான். சில சமயங்களில் செய்தாக வேண்டும் என்கிற கட்டாய நிர்ப்பந்தங்களினால் உருப் பெற்றிருந்தாலும் கூட. பேரரசன் ஷாஜகானின் பிரேமையும் பிரிவுத் துயரமும் கட்டிடத்தில், கல்லறையில் ஒரு அழகான கவிதை காணச் செய்தது. மும்தாஜ் என்கிற மோகனத்தை ஒரு ஊழிக் கால தரிசனமாய் நுகர முயலும் வேட்கையாய். அழகென்பது உண்மையில் மாத்திரமா? உண்மையின் தரிசனம்தான் அழகா? புகழ் பெற்ற“ அழகென்பது என்றென்றைக்கும் உண்மையானது” என்கிற கவிஞன் கீட்ஸின் அமரத்துவ வரிகளுக்கு உருவகம் தருகிற உலக பொக்கிஷம்; அதுதான் அந்தக் கல்லறையின் மகோன்னதம். வேதம் சொல்லுகிற “அவனவனுக்கு அளிக்கப் படும் கிருபை வரங்களின் படியே” தங்கள் தங்கள் கல்லறைகளை சுமந்து நிற்கிறார்களா என்ன?

மண்ணோடு மண்ணாக மக்கிப் போயிருந்தாலும், சிதையில் தீக்கிரையாக்கி சுட்டு சாம்பாலாக்கி நீரில் கரைத்திருந்தாலும், விட்டுச் சென்ற நினவுகளையும் நிமிஷங்களையும் பிம்பங்களையும் கால வெள்ளம் மாத்திரமே கரைக்கின்றது. நீறு பூத்த நெருப்பாக அவ்வப்பொழுது கனன்று வரத்தான் செய்கிறது. நான்கு நாட்களும் ஓடியாடி அம்மாவின் தொடர்பான காரியங்களெல்லாம் உண்ணாமல் உறங்காமல் முடித்து, உடன் பிறப்புகள் விடை பெற்றுச் செல்லும் பொழுது சங்கிலியில் விடு பட்ட கண்ணியாக அம்மாவை நினைத்து கூக்குரலிட்டு கதறியதை அவன் இப்பொழுது நினைவு கூர்ந்தான். மரணம் மனிதம் அறிந்த நிச்சயமென்றாலும் அது அன்புக்குரியவர்களை அள்ளிச் செல்லும் போது அதை ஏற்க மறுத்து மனம் அரற்றத்தான் செய்கிறது. இப்படித் திரும்பிப் பார்த்தால் ஒவ்வொரு கல்லறையும் ஒரு வரலாற்றின் மெளன சாட்சிகளாய்த்தான் நிலை கொண்டுள்ளன. ஒரு சராசரி ஜீவனின் கல்லறையே நினைவுகளை இப்படி உசுப்பும் என்கிறபோது உலகெங்கிலும் உள்ள பல வரலாற்றுச் சின்னங்களின் சிதிலமே அவற்றின் கடந்து போன பழைய மகோன்னதங்களின் கட்டியமாய் மிளிர்வதில் ஆச்சரியம் ஒன்றுமில்லைதான்.

இந்த மண்ணின் மீது உலாவிய நாட்களில் ஒருவன் என்னவாய் எப்படியாய் மற்றவர்களோடு ஆணவமாய், அநாகரீகமாய், அசிங்கமாய் இடை பட்டிருந்தாலும் அவன் கல்லறை என்னவோ அவனை சத்தியவந்தனாகத்தான் கதை பாடுகின்றது. ஒருவனின் மரணத்தில் அவன் வாழ்வின் ஒளியின் பக்கங்களை மாத்திரம் நினவு கூர்வதுதான் நாகரீகம். மனித வாழ்வின் புரிதலின் ஒரு முதிர்ச்சி அது. இங்கே ஒரு எத்தன் உறங்குகிறான் என்று எந்தக் கல்லறையும் விளம்பரப் படுத்துவதில்லை. மாறாக இறந்தவனைச் சார்ந்தவர்களின் வேதப் புலமைகளினால்தான் அவன் அலங்கரிக்கப் பட்டிருக்கிறான். “ஒரு காரியத்தின் துவக்கத்தைப் பார்க்கிலும் முடிவே பிரதானமானது” என்ற வேதவசன வரிகளை இந்தக் கல்லறைகள்தான் கச்சிதமாய் நிறைவேற்றி முடிக்கின்றன. “ பரிமள தைலத்தைபார்க்கிலும் நற் கீர்த்தியும், ஒருவனுடைய ஜனன நாளைப் பார்க்கிலும் மரண நாளும் நல்லது. விருந்து வீட்டுக்கு போவதை பார்க்கிலும் துக்க வீட்டுக்கு போவது நலம்; இதிலே எல்லா மனுஷரின் முடிவும் காணப் படும்”. வாழ்வெனும் புதிர் முடிச்சவிழ்க்கப் படுகிற இந்த வேத வரிகளை நினைவு கூர்ந்தபடி, முட் செடிகளின் பின் புலத்தில், ஒரு சிறிய காற்று எழுப்பிய புழுதி மறைத்து விலகிய, அம்மாவின் அறியப் பெறுகிற அந்த வாசஸ்தலத்தை கடைசியாக ஒரு முறை தரிசித்து விட்டு புறப்பட்டான்.

முகமும் தலையும் கோதிச் செல்லும் உப்புக் காற்றும், ஈரமாய் குறுகுறுக்கும் பாதங்களை கழுவிச் செல்லும் அலைகளுடன் அரவமற்ற கடல் புறத்தில் கரையும் மனதிற்கு ஒப்பாக – சோகம் கூட ஒரு சுகமாக – ஒரு யோகியின் புணருத்ரானம் பெற்றிருந்தவனுடய கண்களில் அந்த போகி எதிர்பட்டான். நாற்பதுகளின் துவக்கம் மதிக்கத்தக்க அளவான மீசையுடன் மழிக்கப் பட்ட கருத்த முகம்; எண்ணை தேய்த்து வாரி விடப் பட்ட கற்றையான பிடறி மயிர் சரிய, அழுக்கென்று சொல்லமுடியாத இரண்டு பட்டன்கள் திறந்த சட்டை, இடுப்பில் இருந்த ஆர்ப்பாட்டமான லுங்கி சற்று தளர்ந்து, இரண்டு கைகளும் மடங்கிய நிலையில் தலையருகே – தமிழகத்தின் அந்தக் குடி மகனை மலத்திய அந்த சரக்கு பாட்டில் அந்த மயக்கத்தின் மெளன சாட்சியாய் அருகில். ஈக்கள் பாட்டிலை மொய்க்க ஆரம்பித்திருந்தன. எவ்வித அசைவுமற்ற நீடு துயில்தான். அவன் விழுந்து கிடந்த இடத்தில் அவன் தலை மாட்டில் இருந்த கம்பீரமான கல்லறை, வெகு அதிகமாய் பொறிக்கப் படும் “நல்ல போராட்டத்தை போராடினேன்; ஓட்டத்தை முடித்துக் கொண்டேன்; இது முதல் நீதியின் கிரீடம் எனக்காய் வைக்கப் பட்டிருக்கிறது” என்கிற பிரபலமான வேத வாக்கியம்தான். கல்லறையின் அருகில் போட்டி போடுவது போல் படுத்துக் கொண்டு எது போராட்டம் என்பதுதான் கேள்வி என்பது போல. அங்கிருக்கும் அத்தனை கல்லறைகளையும் அவற்றின் கம்பீரத்தையும் ஏகடியம் செய்வது போல கல்லறையே இல்லாத உறக்கத்தின் ஒத்திகையாய். வந்து சேர வேண்டிய இடத்தில் வாழ்வின் கொண்டாட்டமாய் போதையில் நிலையாமையை கலப்பதோ? இல்லை கலைப்பதோ? எல்லா உறக்கமும் ஒன்றுதான் என்று சவால் விடுவதைப் போல. இருக்கும் போதே கலைப்பதா? இல்லை கரைந்ததில் களைத்ததா? எதில் இவனுடைய உறக்கம் சேர்த்தி? கல்லறைக்குள் துயிலும் ஆவி பிரிந்த உறக்கத்தை – அந்த துயரத்தின் கவிதை வரிகளை ஏளனமாய் புறக்கணிக்கும் உயிருள்ள உறக்கமாய் – எந்த உறக்கத்திலும் மயக்கமில்லை என்கிற முழக்கமாய். எப்படியானாலும் கல்லறைகளின் மத்தியில் மிகப் பெரிய நகைமுரணாக, தெளிவாய், தேடித் தேடி வருத்தப் பட்டு பாரஞ் சுமந்த இவனுடைய சுமையை, துக்கத்தை , வருத்தத்தையெல்லாம் நொடிப் பொழுதில் பொசுக்கி விட்ட உண்மையாய் அந்த போதையின் நீடு துயில். உறங்குவது போலும் சாக்காடு; உறங்கி முழிப்பது போலும் பிறப்பு என்ற இலட்சிய புருஷனாய், வெகு அமைதியாய் ஒரு இயல்பாய் தாலாட்டும் காற்றில். வீதிகளில், சாக்கடை ஒரங்களில், சாராயக் கடைகளில் தம் மாண்பு குலைந்த இது போன்ற அவலங்களை அவன் எத்தனையோ முறை தரிசித்திருக்கிறான். ஆனால் கல்லறைகளுக்கு மத்தியில் – திடும்மென ஒரு எரிச்சல் பற்றிக் கொள்ள – இவனது மீள் நினைவுகளின் சோகம் எனும் சுகத்தை அந்தகுடிமகன் கேள்வி கேட்பது போல எவ்வளவு இயல்பாய்?

உள்ளே உறங்குபவர்களின் எல்லோருடைய வலியையும் வழியையும் இதற்குப் போய்த்தானா இவ்வளவும் என்பது போல. உள்ளே உறங்குபவர்களுக்கு வாழ்வெனும் போதை முடிந்து கைவரப் பட்டிருந்ததென்றால் இவன் தனக்குத் தானே சாராய போதையில் இலகுவில் அதை முடித்துக் கொண்டது போல. விழித்தெழுந்தால் ஒன்றும் குடி முழுகிப் போய் விடாது; உதறி விட்டு நாளை மறுபடியும் கூட ஒத்திகை தொடரலாம். உள்ளே இருப்பவர்களில் எத்தனை பேர் வதையாய் வலித்து மரணம் ருசித்தார்களோ தெரியாது. இவனோ போதையிலேயே வலியையும் மரணத்தையும் புறந்தள்ளுவது போல. – இவன் எதன் குறியீடு? ஜனனத்திலும் மரணத்திலும் கொண்டாட எதுவுமில்லை; விரும்பினாலும் விரும்பா விட்டாலும் அது தீர்மானிக்கப் பட்ட ஒன்று. ஆனால் வாழ்வெனும் விளையாட்டுதான் ருசிகரமானது; அதிலும் வாழ்ந்து முடித்த திருப்தியில் இளைப்பாறுதல் மேன்மையானது என்பதை சொல்லாமலே சொல்லும் மோன மயக்கம்; போதையின் கிறக்கம். அந்தக் குடிமகன் உணர்ந்திருப்பானோ என்னவோ? ஆனால் கல்லறையும் போதையும் சங்கமித்த தரிசனத்தில் இவனுக்கு கிடைத்த வெளிச்சம் இப்படி.

மெலிதாய் படர்ந்திருந்த துக்கம், அது தந்த சோர்வு, வெயில், வெறுமை, கிடைத்த வெளிச்சம், இத்தனைக்கும் மொத்தமாய் பொங்கி வந்த தாயின் கடைசி நாட்கள் என ஒரு விநோதக் கலவையாக விடுதி வந்து சேர்ந்தான். முகம் கழுவித் தெளிந்தவன் பசியாறி ஏசியின் இதமான குளிரில் ஞாயிறு பின் மதியத்தின் அனந்த உறக்கத்தில் ஆழ்ந்தான்.

கொம்புகளாய் முளைத்திருக்கும் சிலுவைகள் மேல் புரண்டு படுத்தது போல் – இவனா அல்லது அந்தக் குடிமகனா? கூட்டமாய் ஏதோ சுமந்து வருகிறது போல – வருகிறார்களா? – இல்லை ? – வருகிறவர்களுக்கு வழி விட விலகிய போது கால்கள் இடற, – இவன் பதறி படுக்கையிலிருந்து எழுந்து நிதானமாக முயற்ச்சித்தான். அலைபேசி நேரம் நள்ளிரவைத் தாண்டியிருந்ததை காண்பித்தது. மெலிதாய் தனக்குள்ளே நகைத்துக் கொண்டான்; அம்மா இன்னமும் தொடர்கிறாளா? இவன் தனக்குத் தானே சுமந்து கொண்டிருந்த நுகத்தின் வழித் தடங்களாய் காட்சிகள் கரைந்து கலந்து போயிருந்ததை உணர்ந்தான். எந்த நிலவரத்தில் எப்படியாய் நினைவு கூர்ந்தாலும் அம்மா ஒரு உன்னதனமான வெள்ளை அடிக்காத கல்லறைதான்; உள்ளும் புறமும் சுத்தமான பாத்திரம்தான்.

கரைந்த நினைவுகளில் மனிதர்களத் தேடி தேடிக் களைத்தானா என்ன? நாட்கள் மாத்திரம் அல்ல; பல சமயங்களில் நடந்து முடிந்த நாடகங்களும் கூட கலைந்து கரைந்து காணாமல் போகின்றன. ஒரு மாற்றாகவா அல்லது இயல்பாய் தற்செயலாகவா ஸ்தூலம் களைந்த உறவுகள் தேடிப் போனான்? சில சந்தர்ப்பங்களில் இப்படி நிஜங்களைக் காட்டிலும் நிழல்களில் குளிர் காய்வதில் ஒரு சுகமிருக்கின்றது. அம்மா நிஜமா? நிழலா? உயிரிலும் உள்ளத்திலும் ஊணிலும் உறைந்து ஒளிர்ந்திருக்கும் அம்மா அவனுக்கு நிஜமான நிழல்தான். அதனால்தான் அவள் காத்திருப்பதாக நம்பப் படுகின்ற அந்தக் கருவறையின் தரிசனத்தில், அந்த இழப்பின் சிலிர்ப்பில், அம்மாவில் அவன் மறுபடியும் உயிர்ப்படைந்தான் என்றுதான் சொல்ல வேண்டும். தொலைந்ததின், இழந்ததின் திட்டமற்ற தேடலில் காத்திருப்பின் இரகசியம் துலங்கியது போலும், தொடர்வது போலும்.

மறுநாள் மாலை அலுவலக வேலைகளை முடித்து இரயில் நிலயத்தில் இவன் கிளைமேலாளரிடம் கை குலுக்கி விடை பெற்று இரயிலில் அமர்ந்த போது மனம் வெறீரென்றிருந்தது. ஏனோ முந்தைய நாள் அனுபவங்களை அலுவலகத்தில் யாரிடமும் பகிர்ந்திருக்கவில்லை. அம்மாவின் நினைவுகள் தந்த இறுக்கமோ அதை நகையாடியது போன்ற கல்லறைக் குடிமனின் சித்திரமோ ? – எதுவென்று புரியாத கலவையில்.

வேஷங்கள் களைந்து மேடையின் முன்னால்பார்வையாளனாக அமர்ந்து ரசிக்கும் நடிகனாக – இந்த நகரின் நான்கு நாள் பயணத்தின் மீள் நினைவுகளும் சந்தித்த நிஜங்களுமாய் – ஹார்ன் ஒலியுடன் நகண்ட இரயில் அந்த நகரத்தின் ஒன்று, இரண்டு, மூன்று மற்றும் நகரம் விரிந்ததில் புதிதாய் முளைத்திருந்த நாலாம் இரயில் குறுக்கீடுகளையும் பின் தள்ளி நீண்ட ஹார்ன் ஒலியுடன் வேகமெடுத்து விரைந்து கொண்டிருந்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *