கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 13, 2023
பார்வையிட்டோர்: 4,577 
 
 

அங்கம் ஒன்று | அங்கம் இரண்டு | அங்கம் மூன்று

வீட்டு வாசலிலே ஹார்ன் அடித்துக்கொண்டு வந்து நிற்கும், நவீனமயமான அந்தப் புதுக்காரை வேடிக்கை பார்ப்பதற்காகக் கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தாள் துளசி. அக் காரின் முன் கதவை லாவகமாகத் திறந்து கொண்டு, ஒரு கம்பீர புருஷனும், அவனுக்குப் பின்னால், நாகரீகமான பாப் தலையோடு ஒரு சிறுமியும் இறங்கி வருவது தெரிந்தது.

அவன் பார்ப்பதற்கு, நவீன காலத்துத் தேவ புருஷன் போல் தோன்றினான். அவன்; தோளிலே, ஒரு கமரா தொங்கியது. அவன் கண்களும், முகமும் ஒளி வீசின. வாசல் வரைக்கும், தனக்கே உரிய மனிதப் பாங்கான ஆடம்பரத்தை விடாத தோரணையுடன் மிடுக்காக நடந்து வந்தவன். கதவருகே நிழலாக ஒதுங்கி நிற்கும் துளசியைப் பார்த்துவிட்டு, ஒரு புது விருந்தாளியாகத் தயங்கினான்.

துளசி இதையெல்லாம் பார்த்தவாறு, ஒரு கோடியில் மெய்மறந்து நின்றிருந்தாள். அவன் மீது தன் பார்வையைத் திணித்தவாறே, அவன் முகத்தை ஞாபகப்படுத்த முயன்று அது நினைவுக்கு வந்ததும் சிவந்து குழம்பிய முகத்தை நிமிர்த்தி, உணர்ச்சி வசப்பட்டுக் குரல் நடுங்க அவள் கேட்டாள்.

‘நீங்கள் நரேனண்ணா தானே? கடிதம் போட்டேனே! கிடைச்சுதா?’

இதற்குப் பதில் கூற, அவனுக்கு நீண்டநேரம் பிடித்தது. அவ்வளவு எளிதில் தன்னைக் காட்டிக் கொள்ள விரும்பாத, ஓர் உள்ளீடான தயக்கம், அவன் முகமெங்கும் படர்ந்து வியாபித்தது. சிறிது நேரம் இறுகிக் கனத்திருந்த மௌனத்திற்குப் பிறகு, அவன் திடீரென்று குரலை உயர்த்திக் கேட்டான்.

‘பெரியப்பாவைப் பார்க்கலாமா?’

அதற்கு எதிர்மறையாகத் தனது நிலையைப் பிரகடனப் படுத்துவது போல், அவள் தொடர்ந்து கேட்டாள்

‘அவரை மட்டும்தானா? இவ்வளவு தூரம் எதற்கு? நீங்கள் நினைத்தால், அந்தப் பெரிய வெளிச்சத்திலே, மாயக் கண்ணாடி கூடப் போட்டுக் கொண்டு, பார்க்கலாமே!

அவன் அசடுவழியச் சிரித்தான்.

‘நாங்கள் எவ்வளவு தூரம் சுற்றியலைந்து விட்டு வந்திருக்கிறோம் தெரியுமா?’

‘ஏன்…?’

உங்கள் வீடு, இல்லை கிராமம் நிழலுக்குள் மறைந்து போயிருக்கே…

‘நிழலுக்குள் தேடிக் கண்டு பிடிக்கிறது சிரமமா? இது என்ன இருட்டா? எனக்கு ஒன்றுமே விளங்கேலை’.

அவள் குரலை உயர்த்தி, உணர்ச்சியோடு கேட்டாள். ‘நான் தர்க்கம் செய்ய இஞ்சை வரேலை, இருந்தாலும் நீ கேட்டுவிட்டாய். நான் சொல்ல வேண்டியிருக்கு. நிழல் உன் கண்ணுக்கு உசத்தியாகவே படலாம். அதனாலே என்ரை ஒளிவட்டத்தை, உனக்கு வரைந்து காட்டுவதிலே லாபமில்லை என்று எனக்குப்படுகிறது. அப்படித்தானே?’

அவள் தலையாட்டிவிட்டு பேச்சை மாற்றினாள்.

‘அண்ணா! புது விருந்தாளி நீங்கள். உபசரிக்காமல் பேச்சைத் தொடர்ந்தேனே! எனக்கு மனவருத்தமாக இருக்கு, வாங்கோ, உள்ளே போகலாம்’.

அவளுடன், தன் மகள் பின்தொடர, உள்ளே வந்து சேர்ந்த நரேந்திரன், ஹாலில் சுந்தரம் இருப்பதைப் பார்த்து விட்டு, அவரருகே ஓடி வந்தான். பாசம் பொங்கக் குனிந்து அவரின் கைகளைப் பற்றிக் கொண்டு ‘பெரியப்பா’ என்று அன்பாக அழைத்தான்.

‘யாரது? தெரியேலையே!’

நரேந்திரன் இதற்குப்பதில் சொல்லுமுன், அவசரமாக குறுக்கிட்ட துளசி, உணர்ச்சி ஏறிய, பதட்டமில்லாத மெல்லிய குரலிலே சொல்லிக் கொண்டு போனாள்.

‘அப்பா! இது யார் தெரியுமா? எப்படிச் சொல்றது? நரேனண்ணாதான், லண்டனிலேயிருந்து வந்திருக்கிறார். இந்த ஒளிமழையில் நனைந்து, எங்கடை வீடு, இந்த ஊர் எல்லாமே சிலிர்த்துக் கொண்டிருக்கு, நம்புகிறீhகளோ, இல்லையோ?

‘என்ன? விளையாடுறியே? போன மாதம்தான் அவன் கடிதம் வந்ததே… அதற்குள் எப்படி வர முடியும்? இது அவனா? எனக்கு மறந்து போச்சுது முகம்’.

‘கப்பலில் ஏறத்துணிந்தவனுக்கு காலம் என்ன? இது அவரேதான். சரி சரி, இருந்து அப்பாவோடு கதையுங்கோ. நான் போய் தேத்தண்ணி கொண்டுவாறன்’ ‘வேண்டாம், இப்பதான் குடிச்சிட்டு வாறம்’

‘இது நாட்டுத்தண்ணீர்! கிணத்திலே, ஊற்றுத் தண்ணீர் எடுத்துப் போட்டாற் போல் இருக்குமா?’

அவன் சிரித்தான்.

‘நாட்டுத் தண்ணீர் என்று என்ன எழுதி ஒட்டியா இருக்கு, இப்ப கிணறு எந்த மூலையில் இருக்கு? நான் வாற போதுதான் பார்த்தேனே! எல்லா வீட்டிலேயும், தண்ணீர் தொட்டி என்ன கம்பீரமாய் முளைத்திருக்கு!’

‘அதுக்கென்ன செய்வது’ கலி மாற்றிக் கொண்டிருக்கு. இதுக்கு நானோ, நீங்களோ விதிவிலக்கு என்று சொன்னால், முடிந்துவிடுமா கதை இந்தக்கதை ஒரு காவியமாகத் திரும்ப வேணும் இதையெல்லாம் நினைத்து மனசு தாங்காமல், அழவேண்டிய கட்டம் நெருங்கிவிட்டதே அண்ணா! என்ன அப்படிப் பார்க்கிறியள்? ஓ! இது நீங்களா? தெரியாமல் விசாகனென்று நினைத்து என்னமோ புலம்பிவிட்டேன். அவன் எங்கே வரப்போகிறான். திசை திரும்பியவனில்லையா?’

அவன் இதையெல்லாம் கனவிலே கேட்கிற பிரமையுடன் பெருமூச்செறிந்தான். பின்னர் மன வருத்தமாகச் சொன்னான்.

‘அவனைப்பற்றி, இனிமேல் நினைக்க என்ன இருக்கு? நான் அவனை மறந்து, எவ்வளவோ நாளாச்சு. எனக்கு அவன் முகமே மறந்து போச்சு’

பிறகு அவன் கண்களை உயர்த்திச் சுந்தரத்தை ஆழ்ந்து நோக்கியவாறே, குரல் கம்மிக் கேட்டான்.

‘என்ன சொல்றியள் பெரியப்பா?’

‘நான் என்ன சொல்றது?’ அதுதான் துளசி எல்லாம் சொல்லிவிட்டாளே! எனக்கு எல்லாம் மறதியாக இருக்கு. உன்முகமே இன்னும் பிடிபடேலை. இது உன் மகளா? சந்தோஷம். என்ன தலைமுடி அப்படி இருக்கு’.

துளசி கைகொட்டிச் சிரித்தாள்

‘அப்பா! வெள்ளைக்காரன் இடத்திலே போய் இங்கிலீஷ் மண்ணைத் தின்று வளர்ந்தவனுக்கு, வேதம் கற்றுக் கொடுக்க நினைக்கிறது கூடப் பாவமில்லையா? அப்படிக் கேட்காதேங்கோ. எனக்கு என்னவோ செய்கிறது!’

‘வேதம் எல்லா இடத்திலேயும் நிரம்பியிருக்கு என்றான் நரேந்திரன்’

இதைக்கேட்டுக் கொண்டே, அவள் உள்ளே போய்ச் சிறிது நேரம் கழித்துத் தேனீரோடு திரும்பி வந்தாள். நரேந்திரனின் மகள், ஒரு காட்சி பொம்மை போன்றே முகத்தில் உணர்ச்சியின்றி, அங்கே நடக்கிற எல்லாவற்றையும், ஒரு வேடிக்கை மாதிரிச் சுரத்தின்றிப் பார்த்துக்கொண்டிருந்தாள். அவள் பார்வையினூடே, மனதைத் துளைத்துக் கொண்டு வந்து கலக்கும் கதிர்கள், அவளுக்கு ஒரு பிரமையைத் தோற்றுவிக்கும், கனவுப் பொய்யான காட்சி மயக்கங்களாகவே பட்டன. அதைக் கலைத்துக் கொண்டு, அவள் தன்னைச் சூழவுள்ள பிரகாசமான உலகை மட்டுமே, நினைத்துப் பார்க்கிற போது, துளசியும், அவள் வாழ்கிற இந்தச் சிறு கிராமமும், தனக்கு எட்டாத மறுதுருவத்தில், இருளில் மறைந்து போயிருப்பது போல், அவள் மனம் குழம்பினாள்.

அப்போது பார்த்து அவளைத் தனது தடத்துக்கே இழுத்து விட நினைப்பது போல், துளசி முகம் குளிர அவளைப் பார்த்துச் சிரித்துக் கொண்டே, தேனீர்க் கோப்பையை நீட்டினாள். மறுகையால், அவளின் கன்னத்தில் மெதுவாகத் தட்டி, ‘என்ன பெயர்?’ என்று அன்பாகக் கேட்டாள்.

‘டாடி’…! என்று திணறிய அவள் மேலே பேச வராமல், நரேந்திரனைப் பார்த்து விழித்துக் கொண்டிருந்தபோது, அவன் குறுக்கிட்டுச் ‘ஷியாமி…’ என்றான்.

இவளுக்குத் தமிழே வராது, வேண்டுமானால், இங்கிலீஷைவிட்டுப் பார், பளிச்சென்று பதில் சொல்லுவாள்.

‘பாவம் தமிழ்! நானும் அதைவிட்டுப் போனால் அனாதையாகி விடாதா? எனக்கு அது அவசியமில்லை. பதிலைத் தெரிந்து என்ன ஆகப் போகிறது. நான் நிரம்பக் கேட்டுத் தெரிந்து கொண்டவள். வாழ்க்கை முழுவதும் எனக்குப் பூரணமாகிவிட்டது. வெறும் சொல்லாலே, என்ன ஆகப் போகிறது? கேள்வியே வாழ்க்கையை மாற்றிவிடுமா? அப்படி மாற்ற முடிந்திருந்தால் எவ்வளவு சந்தோஷமாகப் பரம திருப்தியாக இருக்கும்’

என்று சொல்லிக் கொண்டிருந்தவள், குழறிக் கொண்டு வரும் அழுகையை அடக்க முடியாமல், தேம்பினாள்.

இதைப்பார்த்து மனம் கரைந்து போன சுந்தரம், நரேந்திரனின் பக்கம் திரும்பி, சோகத்தோடு கூறினார்.

‘நரேன்! அவள் மனதைக்கிளறாதே! பாவம் அவளை விடு. ரொம்ப நொந்து போயிருக்கிறாள்’

‘ஏன் பெரியப்பா! கல்யாணமாகவில்லையா?’

‘எல்லாம் ஆகிவிட்டது! இவள் தலையெழுத்து, விதியின் சாபம் என்று சொல்லுவாள். வாழ்க்கையை நம்பி இவள் ஏமாந்து போனாள். கீழே விழுந்துவிட்டாள். இப்ப என்ரை நிழலிலே, கொஞ்சம் நிமிர்ந்து நிற்கிறாள்!’

‘நிமிர்ந்த என் தலையிலே, ஒரு கீரிடமே முளைத்திருக்கு! முள்கீரிடமல்ல. வைரத்திலே இழைத்த கீரிடமல்லே!’

‘சரி! இனிமேல் பேச வேண்டாம். நேரம் போகிறது. எனக்கு வாற கிழமை பிளைட். நானும் இவளும் தான் வந்தோம். பெரியப்பா! உங்களுக்கு எண்பதாண்டு நிறையுதே. இதுக்கு என் வாழ்த்துக்கள், வாழ்த்து மட்டுமல்ல ஒரு பரிசும்கூடக் குடுக்கப் போறன். நான் எடுக்கப் போற இந்தப் போட்டோ சின்னம்தான். இப்ப நான் உங்களுக்குத்தரப்போற பிறந்தநாள் பரிசு, சரி வாங்கோ, வந்து இந்த ஜன்னலருகே என்னைப் பார்த்துக் கொண்டு அசையாமல் அப்படியே நில்லுங்கோ! கொஞ்சம் சிரியுங்கோ! ஆ.. அப்படித்தான். கையை ஆட்ட வேண்டாம்’

இன்னும் நாலைந்து அப்படியே எடுத்தான். துளசி அதைத் தூரத்தில் நின்று, வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுக்கு அதைப்பார்த்துச் சிரிக்க வேண்டும் போல் தோன்றியது. அவளையறியாமலே, ஓர் ஆவேச உணர்ச்சி வந்தது, அவள் உடம்பு முழுவதும் நடுங்கிக் கொண்டிருந்தது. அவன் அவளின் பக்கம் திரும்பினான்.

‘வா துளசி! உன்னையும் எடுக்கிறன். எங்கே ஷியாமியை அணைத்துக் கொண்டு கொஞ்சம் சிரியேன். இரண்டு பேரும் ஒரே ரத்தமாச்சே. என்ன வெட்கப்படுறியே? கிட்ட வா’

அவன் சொல்லுவதையெல்லாம் கேட்டவாறே, அவள் மனம் மரத்துப் போய், ஜடமாக நின்றிருந்தாள் தன்னோடு ஒட்டாமல், தன் உணர்ச்சிகளைக் கூடப் பகிர்ந்து கொள்ளாமல் ஒரு வேற்று மனிதன் மாதிரி, அவன் ஆடுகிற இந்த நாடகமும், பசப்பு வார்த்தைகளும் அவளுக்கு அவன் மீது, ஓர் தார்மீக கோபத்தையே வரவழைத்தாலும், அவனோடு தர்க்கிப்பதில் பலனில்லை என்பதை நினைத்து, அவள் தனக்குள்ளேயே, வெகுநேரமாய் குழம்பிக் கொண்டிருந்துவிட்டுப், பிறகு ஏதோ நினைத்துக் கொண்டு, அறிவு பூர்வமாய், அவனைத் திரும்பிப் பார்த்துக் கேட்டாள்.

‘இரத்த உறவு என்று சொன்னீர்களே! இதை நிலைநாட்டிக் கொள்ள, உண்மையாகவே என்ன சான்று இருக்கு? எனக்கோ, உங்களுக்கோ அது நினைவில்லாமல், ஒரு திரை கனமாய் விழுந்திருக்கே! அப்படிப் பார்க்கிறபோது, உயிரில்லாமல், இந்தப் போட்டோவே வெறும் நிழல். இது உயிரைக் காட்டுகிறதென்றால், நான் எப்படி நம்புவேன்? இந்தப் பொய்யை நானும் ஏற்க வேண்டுமா?’

‘துளசி! வெறும் அறிவாலே பலனில்லை. நீ படித்தவள் என்று எனக்குத் தெரியும். உன்னை மடக்கிப் பிடிக்க நான் விரும்பேலை. உன் இஷ்டம் ஆனால் ஒன்று மட்டும் கிடைச் சிருக்கு. நூறு வயது வாழப் போகிற பெரியப்பாவின் முகம். அது போதும் எனக்கு’ என்று அவன் ஒரு சகாப்தமே கண்டு விட்ட பெருமையோடு கமராவை இழுத்து மூடினான். அதைப் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு அவள் சொன்னாள்.

‘லண்டனிலே பெரிய என்ஜினியர் நீங்கள். நீங்கள் நினைத்தால் அப்பாவின் முகத்தைக் கொண்டு போய்ச் சிலையே வைக்க முடியும் என்ன?’

அவன் அசடு வழியச்சிரித்தான். அவளைப் புரிந்து கொள்வதே அவனுக்குக் கஷ்டமாக இருந்தது. தனது இயல்புக்கு ஏற்றவாறு அவள் முரண்பாடாகப் பேசுகிற போதெல்லாம், அதற்கு ஈடுகொடுத்துப், வளைந்து கொடுக்க முடியாமல், அவன் மிகவும் மன வருத்தமும், கவலையும் அடைந்தான். அவன் முகம் திடீரென்று கறுத்துப் போயிற்று.

அவன் இன்னும் பேசித் தெளிவுபடுத்துகிற நிலையிலேயே, தன்னை மறந்து நின்றிருந்தாள். அவள் கண்கள், அவனின் பார்வைக்கு வெகு தூரத்துக்கப்பால், வானத்தை ஊடுருவி, உயிர் காணும் பிரமையில், லயித்துப் போயிருந்தன. அதன் நடுவில், அவளே ஒரு தனி ஒளிப்பிழம்பாகி, நிற்பது

போல், அவள் குரல் கனமற்றதும், லேசானதுமான, மெல்லிய காற்றோடு கலந்து வந்தது. அவன் அதைக் கேட்டுக் கொண்டிருந்தான்.

‘நரேனன்ணா, என்னை மன்னித்து விடுங்கோ எனக்கென்ன கோபம்? உங்கள் எல்லோர் மீதும் எனக்கு அன்பு இருக்கு. நான் பேதம் கடந்து வந்திருக்கிறவள். கரையிலே நின்று கொண்டு வாழ்க்கையைத் தரிசித்தே பழக்கப்பட்டுப் போன எனக்கு, உங்களைக் கண்டபிறகு ஏதோ தடம்புரண்டு போன மாதிரி இருக்கு, அது எனக்கா, உங்களுக்கா என்று புரியவில்லை. இதை வாய்விட்டுச் சொல்கிறேனென்று வருத்தப்படாதேங்கோ. அது நீங்கள் தான். எனக்கு எதுவும் மறக்கேலை. கதவுத்திரை மறைவிலே ஒட்டி மறைந்து நின்று, நான் பாடுகிற போது, நீங்கள் கேட்டு ரசித்தீர்களே! அந்த நாளிலே, அது எனக்கு இன்னும் நினைவிருக்கு! அந்த நினைவொளியிலேயே, உங்களை இனம் கண்டு புல்லரித்துப் போன பெருமை எனக்கு மட்டும்தானா? உங்களுக்கு அது ஏன் வரேலை? உண்மையிலேயே மறந்து போனதா? அல்லது…’

அவன் கண்களைத் துடைத்துக் கொண்டான்

‘துளசி! உன்னுடைய மனவருத்தம் எனக்குப் புரிகிறது. நான் நீயாகப் போவதில்லை. காலம் எங்களை மாற்றிக் கொண்டிருக்கிறது. நான் உன்னை மறந்து போனது உண்மைதான்’ அவன் அதைச் சொல்லிக்கொண்டிருக்கும். போதே, இடையில் குறுக்கிட்டு அவள் கேட்டாள்.

‘அப்ப ஏன் இந்த நாடகம்? இந்த மண்ணையும், இந்த மண்னுடனேயே தங்கிவிட்ட எங்களையும் மறந்துபோன பிறகு அப்பாவை நினைத்துப் போட்டோ எடுக்க வந்ததே வெறும் நாடகமாய்தான் இருக்கு! இதில் வேடம் கட்டி ஆடுகிற தகுதிகூட எனக்கு இல்லை. வரமாட்டேனென்கிறது’

உனக்காக வருத்தப்படுகிறேன் துளசி, வாழ்க்கை தேவை என்று நினைத்தால், இப்படியெல்லாம் மாறத்தான் வேண்டியிருக்கு, உண்மையை மட்டும் நினைத்துக் கொண்டி ருந்தால், வாழ்க்கை எங்கே கிடைக்கப் போகிறது? ‘

‘வாழ்க்கை மட்டும்தான் என்று நினைத்தால் உண்மையொளி அவசியமில்லைத்தான். அது அணைந்து போன பிறகு, பொய்யிலே தூங்கி வாழ்ந்து முடிக்கிறவர்களைப் பற்றிப் பெருமை என்ன இருக்கு? நான் இனிமேல் ஒன்றும் சொல்ல விரும்பவில்லை. உங்கள் விருப்பம். நமக்குள்ளே பிரித்துவிடுகிற மாதிரி ஒரு கனத்த திரை விழுந்திருக்கே! அதை மட்டும் புரிந்து கொண்டால் போதும்’

அவன் புன்னகை செய்தான். பிறகு மகளின் தோளோடு கைபோட்டு, அணைத்துக் கொண்டு

‘இந்த அன்ரியிடம் சொல்லிவிட்டு வா’ என்றான் ஆங்கிலத்தில். அவள் பதில் சொல்லத் தயங்கினாள். தமிழ் அவள் வாயில் வராமல் இடறிக் கொண்டிருந்தது. துளசி அவளை விடுவித்து அன்புடன் தடவிக் கொடுத்து, முதுகில் தட்டிவிட்டுச்சொன்னாள்

‘எனக்குத் தமிழ் வேண்டாம், அன்பு இருந்தால் போதும்’.

நரேந்திரன் அதை ஆங்கிலத்தில் கொண்டு வந்து உரத்துச் சொன்னான். அந்தச்சிறுமி அதைக் கேட்டு விட்டுத் தலை ஆட்டினாள். புரிந்ததோ, என்னவோ?

– தொடரும்…

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *