”ஏங்க இத்தனை நாளும் சம்பளக் கவரை உங்க அம்மாகிட்டேதானே குடுத்தீங்க? நான் கல்யாணமாகி இப்பத்தானே வந்திருக்கிறேன், எங்கிட்ட கொடுத்தா உங்க அம்மா மனசு கஷ்டப்படும். வழக்கம்போல அத்தைகிட்டேயே குடுங்க”
புது மருமகள் நிலா, கணவனிடம் கூறியதை கேட்டுக்கொண்டு வந்த சாரதா கூறினாள், ”இருக்கட்டும்டி மருமகளே! இனி நீதான் எல்லாம் பார்த்துக்கணும். இனி அவன் சம்பளக் கவரை உன்கிட்டே குடுக்கிறதுதான் சரி”
தாயின் இந்த பதிலைக் கேட்ட சாரதாவின் இளையமகள் சுதா தாயை வினவினாள்,”ஏம்மா, அண்ணன் சம்பளக் கவரை உன் மருமககிட்ட
தாரை வார்க்குறியே…இனி எல்லாத்துக்கும் அண்ணிகிட்டே நாம கைகட்டித் தானே நிற்கணும்?”
”போடீ அறிவு கெட்டவளே…உங்க அண்ணன் கொண்டு வர்ற சம்பளத்தை வச்சு குடும்பச் செலவை சரிக்கட்ட நான் பாடாபடுவேன். இதுல புதுசா மருமக செலவு வேற,நமக்கு வேண்டியதைபுடுங்கிட்டு, நாம நிம்மதியா இருப்போம். இனி வந்தவ சுமக்கட்டும் பாரத்தை’’ என்ற
தாயை பயமாய் பார்த்த சுதா மனதிற்குள் நினைத்தாள்!
நாம போற வீட்டுல சம்பளக்கவரை தொடவே கூடாதம்மா’ என்று!
– தூத்துக்குடி வி.சகிதாமுருகன் (3-10-12)