பனங்காட்டுப் பத்திரம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 24, 2012
பார்வையிட்டோர்: 9,051 
 

ஆடி மாசக் காற்று ஈவு இரக்கம் பார்க்காது. சனங்கள் தெருவில் நடமாட முடியாது. ஊரிலுள்ள மண்ணையெல்லாம் முகத்தில் வீசியடிக்கும். ஊரையே ஒரு வழி பண்ணாமல் விடாது. எப் பேர்ப்பட்ட மரமாக இருந்தாலும் கூட, தலை கனத்துவிட்டால் மண்ணில் சாய்த்துவிடும். அப்பேற்பட்டது ஆடி மாசக் காற்று.

ஆனால், பனைமரம் அப்படியல்ல! எத்தகைய காற்று மழைக்கும் அசையாமல் நிற்கும். இன்றைக்கு வீசுகிற காற்றோ பனைமரத்தையே ஒரு கை பார்க்கிறது. பனங்காட்டுக் குருவிகளெல்லாம் தப்பித்தோம்… பிழைத்தோம் என்று ஓடுகின்றன. என்றைக்கும் இல்லாத ஒரு காற்று! தூக்கணாங் குருவிக்கூடுகளைத் தூக்கியெறிகிறது. தூரத்தில் தாய்க் குருவி ஒன்று, தன் குஞ்சைத் தேடியலைகிறது. தாய்க் குருவியின் அலறல் சத்தம், கருப்பையாவின் காதுகளில் விழுந்தது. பனைமரத்தின் உச்சியில் நின்று, கலயத்தில் வடிந்த கள்ளைச் சேகரித்துக்கொண்டு இருந்தார், கருப்பையா. உச்சிமரத்தில் இருக்கும்போதுதான், பாழாய்போனது ஞாபகத்துக்கு வருகிறது.

”எம் புருசன் உழைச்சு சம் பாரிக்கிற காசெல்லாம் வட்டி கட்டியே பாழாப்போகுது!” என்று, மருமகள் சொன்னது நினைவுக்கு வர, கருப்பையாவுக்கு நெஞ்சு அடைத்தது. நிதானங்கெட்டு விழுந்தால், கறி தேறாது.

”இந்த வேகத்துல ஏறுனா, கள்ள சாயங்காலந்தான் இறக்குவ! அட, என்னண்ணே மசமசன்னுக்கிட்டு… கொஞ்சம் சீக்கிரமா எறக்குவியா…” நிலைமை தெரியாமல் கத்தினான் ‘குட்டை’ சோமு.

ஊர் இளசுகளுக்கு ஒவ்வொரு காலகட்டத்திலும், ஒவ்வொரு பொழுதுபோக்கு. பங்குனி, சித்திரை முதல் ஆடி வரை மட்டும்தான் பனங்கள்ளு. மழைக் காலங்களில் பிள்ளையார் கோயிலில் சீட்டாடுவது, திருமுருகன் தியேட்டரில் படம் பார்க்கப் போவது, திருவிழாக் காலங்களில் கூத்து பார்க்கப் போவது… இப்படி சீஸனுக்கு சீஸன் மாறிக்கொண்டே இருக்கும். இது ஆடி மாசம். இன்னும் சில நாட்களில் பனங்கள்ளும் முடிந்துவிடும். கொஞ்சநஞ்சம் இறக்குற கள்ளு எல்லாமே இளசுகள் வயிற்றுக்குத்தான். அடுத்து வரும் மாசி, பங்குனியில் மறுபடி கள்ளு சீஸன் ஆரம்பிக்கும்.

இளசுகளுக்கு, சாயங்காலம் வீட்டுக்குப் போனால் குடிக்கக் கஞ்சி இருக்காது. குடிசையே பற்றி எரிந்தாலும் கவலைப்பட மாட்டான்கள். குடிக்கக் கள்ளு இல்லைஎன்றால்தான் ராத்திரி தூக்கம் வராது. பள்ளிக்கூடம் போகாமல் ஊர் சுற்றும் பொடிப் பயல்களும் இதில் சேர்த்தி. கருப்பையாவுக்கு இது ஒன்றும் புதிதல்ல. தினம் தினம் நடப்பதுதான். இதையெல்லாம் நினைத்து அவர் வருந்தியதே இல்லை. நேற்றிரவு வீட்டில் நடந்ததைத்தான் அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. மருமகள் சொன்ன சொல் ஒவ்வொன்றும் மனதுக்குள்ளேயே நிற்கிறது. ‘அப்படி என்ன பொல்லாததைக் கேட்டுவிட்டாள்?!’ எனக் கண்டுகொள்ளாமல் போக முடிகிறதா!

”என்ன கருப்பையா… முன்ன மாதிரி வேல செய்ய மாட்றியே? முன்னெல்லாம் நிமிசத்துக்கு ஒரு மரம் ஏறுவ. இப்ப என்னடான்னா… ப்ச்!” என்று உத்தண்டி சலித்துக் கொண்டான்.

”இருக்குறதக் குடிச்சிப்புட்டுக் கிளம்புங்க தம்பிகளா! அவனவன் படுற கஷ்டம், அவனவனுக்குத்தான் தெரியும். ஒரு நாளு மூக்கு முட்டக் குடிக்கலீன்னா உசுராப் பூடும்?” என்றார் கருப்பையா. உத்தண்டிக்குக் கொஞ்சநஞ்சம் ஏறிய போதையும் இறங்கிவிட்டது.

கருப்பையா வேலை முடிந்ததும், மரத்தடியில் உட்கார்ந்தார். உச்சிவெயில். பனங்காட்டுத் திடலெங்கும் இடுப்பளவு உயரத்துக்குப் புற்கள் வளர்ந்திருந்தன. நீலவானத்தில் வெள்ளை மேகங்கள் நகர்ந்துகொண்டு இருந்தன. கருப்பையா மரத்தையே பார்த்தபடி ஏதோ யோசித்தார். இடுப்பு பெல்ட்டில் உள்ள பீடியை எடுத்துப் பற்றவைத்துப் புகைவிட்டார். ‘நெலத்த வித்துப்புட்டுக் கடன அடைக்க வேண்டியதுதான்’ என நினைத்துக்கொண்டார். வெயிலின் உக்கிரம் அதிகரித்தது. உடல் வியர்க்க ஆரம்பித்தது. மனமில்லாமல் எழுந்து, சைக்கிளைத் தள்ளியபடியே நடந்தார்.

கருப்பையாவின் மூத்த பையனுக்குத் திருமணம் நடந்து, முழுதாக ஒரு வருடம் முடியவில்லை. அதற்குள் எல்லாம் மாறிப்போனது. காலம்தான் எப்படியெல்லாம் மனிதனை மாற்றுகிறது! நேற்றுவரைக்கும் இருந்த பனங்காட்டுக் கருப்பையா இன்று இல்லை. அந்தக் கலகலப்பு இல்லை; அந்தத் துணிச்சல், பலம், அந்த வாழ்வு இல்லை. பிறந்ததிலிருந்தே கறுப்புதான். கறுப்பு என்றால் சாதாரண கறுப்பல்ல, பனைமரக் கறுப்பு!

பனைமரம் மாதிரியே உயரம். வாட்டசாட்டமான திரேகம். பெரிய முறுக்கு மீசை. தலைமுடி மட்டும் வெள்ளையாக இல்லையென்றால், மனுஷனுக்கு வயசானதே தெரியாது. மாட்டுத் தோலில் இடுப்பு பெல்ட்டு. எந்த நேரமும் காவி வேட்டிதான். என்னதான் பார்ப்பதற்கு முரடனாகத் தெரிந்தாலும், உள்ளுக்குள் வெள்ளை மனசு. பனைமரம் ஏறுவதில் கில்லாடி. கண்மூடித் திறப்பதற்குள் இருபது மரம் ஏறி இறங்குவார். பனை ஏறுவது அவ்வளவு லேசுப்பட்டதில்லை. 25 வருட அனுபவம். மனிதனுக்கு இதைவிட்டால், வேறு பிழைப்பே தெரியாது.

பொழுது பளபளக்க எழுந்து, ஊர் முக்குட்டில் உள்ள சின்னதுரை டீக்கடையில் டீ குடித்துவிட்டு, சைக்கிளை மிதிப்பார். அந்த ‘கிரிக்… கிரிக்’ சத்தம் கேட்டு, பொழுது விடியப் போவதைப் படுத்திருக்கும் சனங்கள் அறிந்து கொள்வார்கள். வேகவேகமாகப் பனங்காட்டுக்குப் போனதும், சைக்கிளை மரத்தில் சாய்த்துவிட்டு மரம் ஏற ஆரம்பிப்பவர், காலை வெயில் முடிவதற்குள் 50, 60 மரம் ஏறி இறங்கிவிடுவார். அதன் பிறகு சுண்ணாம்புக் கலவையெல்லாம் சேர்த்துக் குடத்தில் ஊற்றித் தயாராக வைத்திருப்பார். எட்டு, எட்டரை ஆனால் போதும்… குடிக்க வந்துவிடுவார்கள். கள்ளச் சாராயம் குடிப்பவனுக்குக் கள்ளு குடிப்பவன் எவ்வளவோ மேல். கள்ளு குடித்துச் செத்ததாகச் செய்தி வந்ததில்லை.

மூத்த பையனுக்கு ஒரு மாதத்தில் திருமணம். ஆளைக் கையில் பிடிக்க முடியவில்லை. திருமண வேலையில் மும்முரமாக இருந்தார். பத்திரிகை அடிப்பதற்குப் பேரளம் கடைத்தெருவுக்குப் போனார். வழியில் நாகப்பன் வழிமறித்து, ”என்ன கருப்பையா, ஒன் பையனுக்குக் கல்யாணம் போல?” என்றார்.

”ஆமாங்க! அதுக்குதான் பத்திரிகை அடிக்கப் போயிட்டிருக்கன்!”

”கல்யாணச் செலவுக்குக் காசெல்லாம் சேத்து வெச்சிருக்கல்ல?”

”இல்லீங்க!”

”அப்புறம் எப்படி… யார் கிட்டயாவது கடன் கேட்டு இருக்கியா?”

”ஆமாங்க. நம்ம சுந்தரவேலு வாத்தியார்கிட்டதான் கேட்டிருக்கேன். வூட்டு நெலத்தோட பத்திரத்தை வெச்சுக்கிட்டுப் பணம் தரேன்னு சொன்னாரு!”

”பாத்துப்பா! கடன அடைச்சுப்புடுவில்ல? கஷ்டப்பட்டு அந்த நிலத்த வாங்கியிருக்க. கடன வாங்கிக் கல்யாணத்த முடிக்கிறேன்னு அப்புறம் மாட்டிக்கிட்டு முழிக்காத. நெதானமா யோசனை பண்ணிச் செய்யி! அவ்வளவுதான் சொல்வேன்!”

பேச்சை முடித்துக்கொண்டு நாகப்பன் கிளம்பினார். ஒன்பது பிள்ளைகளைப் பெற்றெடுத்து வளர்த்தவர். அனுபவம் பேசுகிறது.

கருப்பையா யோசித்தார். ”கடன அடச்சிர முடியுமா? ஆத்தா மகமாயி… உம்மேலதாம்மா பாரத்தப் போட்டிருக்கேன்” என்று திருமண வேலையைத் தொடங்கிவிட்டார். சில்லரை சில்லரையாக இன்னும் கொஞ்சம் கடன் வாங்கி, மகன் திருமணத்தை நல்லபடியாக நடத்தினார். அடுத்த மாதமே குடும்பத்தில் பிரச்னை ஆரம்பித்துவிட்டது. எல்லாமே பணம்தான். வாழ்க்கையே பணம்தான். பணம் இல்லாமல் வாழ முடியாது… வாழக் கூடாது!

‘ஏன்டா வாழணும்?’னு தோணும் ஒரு நேரத்தில். ‘பேசாம நாண்டுகிட்டுச் செத்துட்டா என்ன?’ன்னு தோணும். பிறகு, ‘சின்னப் பொண்ணு ஒண்ணு இருக்கே… அத யார் காப்பாத்துவா? சே… நாம என்ன அவ்வளவு கோழையா!’ன்னும் தோணும். இன்றைக்கு மருமகள் கேட்டதை மட்டும் கருப்பையாவால் ஜீரணிக்க முடியவில்லை. மனது வலித்தது.

பத்திரம் இருக்கிற தைரியத்தில் கடன் கொடுத்தவன் தைரியமாக இருக்கிறான். வாங்கிய கடனுக்கான வட்டி, அதுபாட்டுக்கு ஏறிக்கொண்டே இருக்கிறது. ஊரில் உள்ளவர்கள் ஆளுக்கொரு யோசனையாகச் சொல்கிறார்கள்.

”வட்டி ஏறிக்கிட்டேயிருக்கு. வூட்டுப் பத்தரத்த வாங்கிடு. அப்புறம் பனங்காட்டக் கொடுத்துக் கடன அடைச்சுப்புட்டு, மிச்சம் இருக்கிற காசுல நிம்மதியா சாப்புட்டுப்புட்டுத் தூங்குவியா..!” என்கிறான் ஒருவன். இன்னொருவனோ, ”இல்ல கருப்பையா! பனங்காட்டையெல்லாம் வித்துப்புடாத. வர்ற பங்குனி, சித்திரையில கள்ளு இறக்குனா, கடன அடைச்சுப்புடலாம். கொஞ்சம் பல்லக் கடிச்சிக்கிட்டு இரு!” என்கிறான். கருப்பையாவுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. பல யோசனைகளில் மூழ்கி நடந்தார். வீட்டுக்குப் போய், மனைவியிடம் பேசி ஒரு முடிவு எடுக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டார்.

இரவு… ”வாத்தியார்கிட்ட கடன் வாங்கி வருசம் ஒண்ணாவுது! வட்டி வேற ஏறிக்கிட்டே இருக்கு. அப்படியே வுட்டா, வாங்குன அசலைத் தொட்டுடும். அதனால, பனங்காட்ட வித்துப்புட்டு கடன அடச்சிரலாம்னு இருக்கேன்” என்றார் மனைவியிடம்.

”அத வித்துப்புட்டு நடுத் தெருவுல நிக்கணுமா? பெரியவனுக்குக் கல்யாணம் காட்சி முடிஞ்சிருச்சு. அடுத்து சின்னவன் ஒருத்தன் இருக்கானே, அவன் என்ன பண்ணுவான்? அட, அவன விடுங்க! சின்னப் பொண்ணு ஒருத்தி படிச்சிக்கிட்டு இருக்காளே, நாளைக்கு அவளுக்கு ஒரு கல்யாணம் காட்சின்னா எப்படி நடத்துறது?” என்றாள்.

”எல்லாஞ் சரிதான்! ஆனா, வேற வழியில்ல. சின்னவனுக்கு நான் சொத்துகித்து எதுவும் சேத்து வைக்கலீன்னாலும், அதைவிடப் பெரிய சொத்தா படிக்கவெச்சிருக்கேன். அவன் வேலைக்குப் போயி சம்பாரிச்சுத் தங்கச்சியக் கட்டிக்குடுப்பான். எனக்கு நம்பிக்கை இருக்கு. அதோட, என் ஒடம்பு ஒண்ணும் தேஞ்சி ஓஞ்சி போயிடல. எல்லாம் நல்லபடியா நடக்கும். நீ கவலைப்படாதே!” என்று சமாதானப்படுத்தினார்.

”வா கருப்பையா, என்ன காலங்காத்தாலயே வந்துருக்க? வட்டிப் பணம் கொடுக்க வந்திருக்கியா?” என்று வரவேற்றார் சுந்தர வேலு.

”இல்லீங்க… வூட்டுப் பத்தரத்த எங்கிட்டக் கொடுத்துப்புடுங்க. இனிமே வட்டி கட்டி என்னால சமாளிக்க முடியாது. பனங்காட்டுப் பத்திரம் கொண்டுவந்திருக்கேன். கேக்குறவங்களுக்குப் பனங்காட்டக் குடுத்துப்புட்டு, உங்க பணத்த எடுத்துக்கிடுங்க!” கருப்பையாவின் குரல் துவண்டு இருந்தது.

”என்ன கருப்பையா, நல்லா யோசிச்சுதான் இந்த முடிவ எடுத்திருக்கியா?” என்றார் சுந்தரவேலு.

”எனக்கு வேற வழியில்லீங்க!” என்று கரகரத்த குரலோடு வாத்தியாரிடம் பனங்காட்டுப் பத்திரத்தைக் கொடுக்கும்போது, கருப்பையாவின் கைகள் நடுங்கின. இதயத் துடிப்பு அதிகரித்தது.

”அப்ப சரி கருப்பையா! நெலத்துல ஏதாச்சும் எடுக்கணும் போகணுமுன்னா ரெண்டு மூணு நாளுல முடிச்சுப்புடு. நான் ஒரு வாரத்துல வேலி வெச்சுப்புடுவேன்!” என்றபடி வீட்டுப் பத்திரத்தைக் கருப்பையாவிடம் தந்தார் வாத்தியார்.

”ஒண்ணும் எடுக்க வேண்டியது இல்லீங்க. சாயங்காலம் மட்டும் ஒரு நடை போய் சித்த நெலத்தப் பாத்துப்புட்டு வந்துடுறேன். அவ்வளவுதான்!” எனத் தலைகுனிந்து நடந்தார் கருப்பையா.

பனங்காடு போய்ச் சேர்ந்ததும், அங்கே மீன் விற்கும் முனியாண்டி, ”என்னண்ணே! நிலத்தக் கொடுத்துப்புட்டியாமே? அண்ணி சொல்லுச்சு! ஏன்… உம்புள்ளைகிட்ட சொல்லி, கல்யாணத்துக்குப் போட்ட நகையைக் கேக்க வேண்டியதுதானே? நகைய பேங்க்குல அடகுவெச்சு பணம் வாங்கிக்கலாம். வட்டியும் கம்மிதான். அத வுட்டுப்புட்டு நிலத்த வித்திருக்கியே, உனக்குக் கிறுக்கா புடிச்சிருக்கு! காசு இன்னிக்கு வரும், நாளைக்குப் போகும்! ஆனா, நீ உசுரா நினைக்கிற பனங்காட்ட மறுபடி வாங்க முடியுமா? தப்பு பண்ணிட்டியேண்ணே!” என வருத்தப்பட்டுக்கொண்டான்.

”இல்ல முனியாண்டி! அதெல்லாம் வேலைக் காவாது! மருமகளாவது, நகையக் கொடுக் குறதாவது! இங்க இருந்தா நாங்க நகைய எடுத்து வித்துப்புடுவோம், இல்ல அடகு வெச்சுடுவோம்னு அவங்க அப்பா வூட்டுக்குக் கொடுத்து அனுப்பிருச்சு!” அதற்கு மேல் கருப்பையாவுக்கு வார்த்தை வரவில்லை.

முனியாண்டி விக்கித்தான். கருப்பையாவே தொண்டை கமறத் தொடர்ந்தார்… ”பனங்காடு போனா போய்த் தொலையுது! எனக்கு என்ன பயம்னா, நாளைக்கே ஒரு சண்டைன்னு வந்து, அந்தப் புள்ள எங்களை வூட்டை வுட்டு வெளியே போகச் சொல்லிட்டா, எங்க போறது? அதான் யோசிக்கிறேன்!”

”நல்ல கதையா இருக்கே! யாரு யாரப் போகச் சொல்லுறது? அந்த வூடு… நீ உழச்சுக் கட்டுனது. நீதான் கடன் வாங்கிக் கல்யாணத்தை முடிச்சிருக்கே. எதுவும் குழப்பிக்காத, வா, வூட்டுக்குப் போகலாம்!” என்றான் முனியாண்டி.

”இல்ல முனியாண்டி! சித்த நேரம் பனங்காட்டுத் தெடல்ல உக்காந்துட்டு வர்றேன். நீ கிளம்பு!”

”சரிண்ணே! இருட்டுறதுக்குள்ள வூடு வந்து சேரு!” என முனியாண்டி ஊர் நோக்கி நடக்கத் தொடங்கினான்.

காற்று வேகமாக வீசியது. பனைமட்டைகள் ஒன்றோடொன்று மோதிக்கொண்டு சலசலத்தன. பனங்காட்டுக் குருவிகள் கூட்டுக்குள் பம்மிப் பதுங்கின. கருப்பையாவின் சைக்கிள் பனைமரத்தில் சாய்ந்து கிடந்தது. கருப்பையா அதன் ஓரமாக அமர்ந்திருந்தார். அவர் பனையுடன் வெகுநேரம் பேசிக்கொண்டு இருந்தார். அவரின் மொழி அதற்குப் புரிந்தது போலும்! அவர் சொல்வதைக் காது கொடுத்துக் கேட்பது போல் தலையை அசைத்தது. அவரது ஏக்கத்தைப் புரிந்துகொண்டது; வலியை உணர்ந்துகொண்டது.

பனைக்கும் அவருக்குமான உறவாடல் எல்லயற்றுத் தொடர்ந்தது. அந்தி நேர மஞ்சள் ஒளி திடலெங்கும் படர்ந்தது. அது நாணல்களின் மேலும் விழுந்து, மிளிர்ந்தது. பார்ப்பதற்கு அது ஒருவித மயக்கத்தைத் தந்து, ஈர்த்தது. எவ்விதச் சலனமும் இல்லாமல், பெரிய வாய்க்காலில் நீர் ஓடிக்கொண்டு இருந்தது.

கருப்பையா, ஒரு பெருமூச்சுடன் எழுந்தார். சைக்கிளைத் தள்ளிக்கொண்டு ஊர் நோக்கி நடந்தார். கை விட்டுப் போனது, கை சேருமா?

மனம் கனவுகளை அசைபோட… வெளிச்சம் அகன்று இருள் கவிய… பூமி எப்போதும் போலவே சுழன்று கொண்டு இருந்தது.

– 05th மார்ச் 2008

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *