பக்ரீத் விருந்து

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 12, 2013
பார்வையிட்டோர்: 13,384 
 
 

“”வாப்பா எங்கே?” கேட்டுக் கொண்டே வீட்டிற்குள் நுழைந்தான் அன்வர்.
“”வந்ததும் வராததுமா ஏன் கேட்கிறே… பின்னால தோப்பிலே நிக்கிறாக…” என்று சொல்லிவிட்டு, வேலையில் மூழ்கினாள் ஸாலிஹா.
பக்ரீத் விருந்துஅன்வர் ப்ளஸ் டூ படிக்கும் மாணவன். வீட்டின் ஒரே பிள்ளை; வாப்பாவிற்கு செல்லப்பிள்ளை. அவன் என்ன கேட்டாலும், உடனே வாங்கித் தருவார். அவன் விருப்பப்படி தான் உணவு, உடை, வீடு, தோட்டம், அலங்காரம் எல்லாம். அன்வர் தோட்டத்தை எட்டினான்.
“”வாப்பா…”
“”என்னப்பா…”
“”ஆமா… உங்கிட்ட ஒண்ணு கேட்கணுமே!”
“”என்னப்பா…”
“”பக்ரீத்துக்கு இன்னும் எவ்வளவு நாள் இருக்குப்பா?”
“”இன்னும் மூன்று நாள் இருக்கு… ஏன் கேட்கிறே?”
“”பக்ரீத்துக்கு ஆடு அறுப்போமே… வாங்கியாச்சா?”
“”இன்னும் இல்லே… ரெண்டு நாள்லே வந்துரும்.”
“”வாப்பா…”
“”என்ன…”
“”இந்த வருஷம் பெருநாளைக்கு என்னோட பிரண்ட்சுங்களை வீட்டுக்கு கூப்பிடணும்.”
“”சரி… கூப்பிடலாம்.”
“”எல்லா பிரண்ட்சுங்களையும் கூப்பிடணும்.”
“”கூப்பிடலாம்… மொத்தம் எத்தனை பேரு?”
“”பத்து பேரு.”
“”சரி… எல்லாரையும் கூப்பிடுறோம்… சந்தோஷம் தானே?” கேட்டுக் கொண்டே முபாரக் தன் மனைவி ஸாலிஹாவிடம் வந்தார்.
“”ஏய் ஸாலிஹா… அன்வர் சொல்றதக் கேட்டியா?”
“”என்கிட்டே என்ன சொன்னான் கேக்குறதுக்கு; அவன் தன்னோட அருமை வாப்பாவத்தானே தேடிக்கிட்டு வந்தான்.”
“”சரி சரி… கோச்சுக்காதே… அன்வரோட பிரண்ட்சுங்கள பக்ரீத்துக்கு நம்ம வீட்டுக்கு கூப்பிடணுமாம். மொத்தம் பத்து பேராம்.”
“”உங்க செல்லப் பிள்ளை சொல்லிட்டான். அதற்கு, மறு பேச்சு உண்டா? செஞ்சிரலாம்.”
“”நிறைய பேருக்கு சமைக்க வேண்டி வரும்; அதனால, நம்ம சமயக்கார முஸ்தபாவை கூப்பிடலாம்ன்னு நெனைக்கிறேன்.”
“”கூப்பிடுங்க.”
“”வாப்பா…”
“”என்னப்பா?”
“”அவங்களெல்லாம் மட்டன் சாப்பிட மாட்டாங்க.”
“”சரி… சைவம் செஞ்சிரலாம்.”
“”இல்ல வாப்பா… அவங்களுக்கு மட்டன் வாசனையே பிடிக்காது.”
“”அவங்களுக்கு தனியறையில் வச்சிடுவோம்.”
“”நம்ம வீட்டில ஆடு அறுப்போம்ல. அது அவங்களுக்குப் பிடிக்காதுப்பா… அதனால…”
“”அதனால, ஆடு அறுக்க வேண்டாம்ன்னு சொல்றியா?” குறுக்கிட்டாள் ஸாலிஹா.
“”ஆமா…”
“”நான் நெனச்சேன். ஒரே பிள்ளைன்னு செல்லம் குடுத்து வளர்த்த லெட்சணம் பார்த்தீங்களா… ஆடு அறுக்க வேண்டாம்ன்னு சொல்றான். நாம நெனவு தெரிஞ்ச நாள்லேயிருந்து இத செஞ்சிட்டு வர்றோம். அதைச் செய்யக் கூடாதுன்னு இவன் சொல்றான். இதையும் கேட்டுக்கப் போறீங்களா?”
படபடப்புடன் பேசிய ஸாலிஹாவை, அமைதிப் படுத்தினான் முபாரக். “”கொஞ்சம் இரு… என்ன சொல்றான்னு பார்க்கலாமே!”
“”நீ என்னப்பா சொல்றே?”
“”பக்ரீத் அன்னிக்கு, ஆடு அறுக்க வேண்டாம்ப்பா…”
“”ஆடு அறுக்கறது நம்ம மார்க்கச் சட்டமில்லையா?”
“”பிரண்ட்சுங்க ஆசைப்படுறாங்க… அதனால, இந்த வருஷம் விட்டுறலாமே!”
“”பார்த்தீங்களா… அவனோட பிரண்ட்சுகளுக்காக நம்ம மார்க்கத்தையே விடச் சொல்றான்…” சீறினாள் ஸாலிஹா.
“”நீ கொஞ்சம் அமைதியா இரும்மா… நான் பேசிக்கிறேன்.”
“”என்னவோ செய்யிங்க,” கோபத்துடன் சமயலறை திரும்பினாள் ஸாலிஹா.
“”வாப்பா… என்னோட பிரண்ட்சுங்க எல்லாம் சுத்த சைவம். அசைவம் பார்த்தா அவங்களுக்கு அறவே பிடிக்காது. அதனால தான் ஸ்கூலுக்குக் கூட, “நான்-வெஜ்’ கொண்டு போறதில்லே தெரியுமா?”
“”அதெல்லாம் சரிப்பா… அதுக்காக நம்ம வீட்டில ஆடு அறுக்காம இருக்க முடியுமா?”
“”அன்னிக்கு அறுக்க வேணாம்… வேற நாள் வச்சிக்கலாமே!”
“”பிரண்ட்சுங் கள வேற நாளைக்கு கூப்பிடலாமே?”
“”இல்ல வாப்பா… அவங்க நாம பக்ரீத் பண்டிகையை எப்படி கொண்டாடு றோம்ன்னு பார்க்க வர்றாங்க.”
“”சந்தோஷமா வரட்டும். பக்ரீத் பண்டிகையின் ஒரு அம்சம், ஆடு அறுக்கறது. அதையும் சேர்த்து பார்க்கட்டுமே!”
“”ப்ளீஸ்ப்பா… ஆடு அறுக்கறத தள்ளி வையுங்களேன்.”
வழக்கம் போல் மகனின் கெஞ்சலுக்கு செவி சாய்த்தார் முபாரக்.
“”சரிப்பா… யோசிக்கிறேன். ஆனா, இப்பவே சொல்லிடாதே.”
“”தாங்ஸ்ப்பா!”
இமாமை எட்டினார் முபாரக்.
பரஸ்பர சலாமுக்குப் பிறகு இமாம் கேட்டார்…
“”என்ன விஷயமா வந்திருக்கீங்க?”
“”கொஞ்சம் பேசணும்.”
“”சொல்லுங்க.”
“”வர்ற பக்ரீத்துக்கு என்னோட மகன் கூட படிக்கிறவங்க வீட்டுக்கு விருந்துக்கு வர்றாங்க. அவங்க அசைவம் சாப்பிட மாட்டாங்க. அசைவத்தோட வாசனையே அவங்களுக்குப் பிடிக்காது. அதனால, என்னோட மகன் ஆடு அறுக்கிறத தள்ளி வைக்கச் சொல்றான். இப்ப நான் என்ன செய்ய?”
“”ஆடு அறுக்கறது… அது தான் குர்பானி கொடுக்கறது நம்மோட மார்க்கச் சட்டம். வசதியுள்ள ஒவ்வொரு முஸ்லிமும் அதைச் செய்யணும். அதை பக்ரீத் அன்னிக்கும் செய்யலாம். அதைத் தொடர்ந்த மூன்று நாட்களிலும் செய்யலாம். அதே போல, ஏழு பேர் சேர்ந்து கூட்டாகவும் செய்துக்கலாம்.
“”நீங்க இந்த வருஷம் கூட்டு குர்பானி திட்டத்திலே சேர்ந்திடுங்க. வீட்டில வெச்சி ஆடு அறுக்க வேண்டாம். இதை உங்க பையனுடைய வேண்டுகோளுக்காக மட்டும் செய்யல. உங்க வீட்டுக்கு வருகிற மாற்று மத புள்ளங்களுக் காகத்தான். அவங்க வந்து நம்ம பழக்கவழக் கங்கள, பண்டிகைகள பார்த்தாங்கன்னா பரஸ்பர நல்லிணக்கம் ஏற்படலாம். அதனால, அப்படிச் செய்யுங்க.”
“”ரொம்ப நன்றி. அப்படியே செய்யறேன்.” முபாரக் திரும்பி வீட்டிற்கு வந்து, “”அன்வர் எங்கே?” என்றார்.
“”இமாம் என்ன சொன்னாங்க? நீங்க என்ன செய்யப் போறீங்க?” ஆர்வமாய்க் கேட்டாள் ஸாலிஹா.
“”கொஞ்சம் பொறு… அவனும் வரட்டும்.”
“”என்ன வாப்பா?”
“”பக்ரீத்துக்கு நண்பர்கள வரச்சொல்லு. இந்த வருஷம் நாம ஆடு அறுக்கல. அதுக்கு மாற்று ஏற்பாடா கூட்டு குர்பானி திட்டத்தில சேர்ந்தாச்சி… சந்தோஷம் தானே?”
“”ரொம்ப தாங்ஸ்ப்பா,” வாப்பாவின் கன்னத்தில் முத்தமிட்டான்.
திரும்பி கோபமாக நிற்கும் அம்மாவின் கன்னத்திலும் முத்தம் தந்தான். நண்பர்களுக்கு தகவல் தர விரைந்தான்.
“”நம்ம இமாம்கிட்டே கேட்டுத்தானே செய்றீங்க?” சந்தேகத்துடன் கேட்டாள் மனைவி ஸாலிஹா.
“”அவங்க யோசனைப்படி செய்யறேன் புள்ளே!”
பக்ரீத்தின் அதிகாலை விடிந்தது.
அன்வரின் நண்பர்கள், வந்து சேர்ந்தனர். ஞானதாசன், முருகன், கணேஷ், அரவிந்த், விசு என ஆண்கள் ஒரு அறையிலும், சுந்தரி, மீனா, அஸ்வினி, மலர், ஜூலி என பெண்கள் இன்னொரு அறையிலும் இருந்தனர். தொழுகை நேரம் வந்ததும், அன்வர் நண்பர்களிடம் சொல்லிக் கொண்டு, வாப்பாவுடன் பள்ளி வாசலுக்கு விரைந்தான். நண்பர்கள் பள்ளிவாசலில் நடப்பதைப் பார்க்க மாடியின் பால்கனிக்கு வந்தனர்.
மக்கள் புத்தாடையுடனும், இறை நாமங்களுடனும் பள்ளிவாசல் நோக்கி நடந்தனர். புத்தாடையின் மணமும், அத்தரின் மணமும் கலந்து வீதியை நிறைத்திருந்தது. அரைமணி நேரத்தில், பள்ளி வாசலில் தொழுகை முடிந்ததும் மக்கள் தங்களுக்குள் வாழ்த்துக்களை பரிமாறினர், கைகுலுக்கினர், ஒருவரை ஒருவர் தொட்டுத் தழுவி ஆலிங்கனம் செய்தனர்.
பால்கனியில் நின்ற நண்பர்களிடம் அன்வர் வந்தான். நண்பர்கள் அனைவரும் அவனுக்கு, “ஹேப்பி பக்ரீத்’ என வாழ்த்து கூறினர். அன்வர் பதிலுக்கு, “சேம் டு யூ’ என்றான். நண்பர்களுடன் ஆலிங்கனம் செய்தான். நண்பிகளுக்கு மரியாதை தூரத்தில் நின்று வாழ்த்துக்கள் சொன்னான். தன் வீட்டிற்கு வந்ததற்கு நன்றி சொன்னான்.
வாழை இலையில் அனைவருக்கும் உணவு பரிமாறப்பட்டது. சமையக்கார முஸ்தபா சைவத்திலும் அசத்தியிருந்தான். சாப்பிட்டுக் கொண்டிருப்பவர்களிடம் வந்தார் முபாரக்.
“”புள்ளைங்களா… நல்லா சாப்பிடுங்க… வெட்கப்படாதீங்க. எங்களுக்கு அவ்வளவா சைவம் வராது. முடிஞ்ச வரைக்கும் வெச்சிருக்கோம்.”
“”இல்லே அங்கிள்… ரொம்ப நல்லாயிருக்கு,” அனைவரின் சார்பிலும் சொன்னான் அரவிந்தன்.
மாலையில் அனைவரும் வீடு திரும்பத் தயாராயினர். நண்பர்கள், முபாரக்கின் கால்களில் விழுந்து ஆசி வாங்க எத்தனித்தனர். முபாரக் அதை நாசூக்காகத் தவிர்த்து, அவர்களை ஆலிங்கனம் செய்து வழியனுப்பினார். நண்பிகள் ஸாலிஹாவிடம் சென்றனர்.
அவளும், அவர்களைத் தழுவி உச்சி முகர்ந்து அனைவருக்கும் ஸ்வீட்ஸ் பாக்கெட்டும், ஒரு பேனாவும் பரிசளித்தார் முபாரக். ஆண் நண்பர்களை அன்வர் அழைத்துப் போக, பெண் குழந்தைகளை ஸாலிஹாவும், வேலைக்கார முனியம்மாவும் காரில் அவரவர்களின் வீடுகளில் இறக்கி விட்டு வந்தனர்.
பள்ளிவாசல் அலுவலகம்…
“ப’ வடிவில் நிர்வாகிகள் கூடியிருந்தனர். தலைவர் லேசாக தொண்டையைக் கனைத்துக் கொண்டு பேசத் துவங்கினார்.
“”முபாரக் பாய்… உங்கள எதுக்கு வரச் சொன்னோம் தெரியுமா?”
“”தெரியலியே…”
“”நீங்க நம்ம மார்க்கத்தை அவமதிச்சிட்டீங்க!”
“”நானா… எப்படி?”
“”இந்த வருஷம் பக்ரீத் பண்டிகைக்கு ஆடு அறுக்கல. அதுவுமில்லாம, மாத்துமத புள்ளைங்கள வீட்டுக்கு கூட்டி வந்திருக்கீங்க. அந்தப் புள்ளைங்க உங்க வீட்டு பால்கனியில நின்னுகிட்டு நம்ம ஆட்கள கேலி பண்ணியிருக்காங்க… இதுக்கு என்ன பதில் சொல்லப் போறீங்க?”
“”அதுவா… விளக்கமாகவே நான் சொல்றேன். என்னோட மகன் பள்ளிக்கூட நண்பர்களோட இந்த பக்ரீத்தை கொண்டாடணும்ன்னு ஆசைப்பட்டான். அதே நேரத்திலே நண்பர்கள் சைவம் என்கிறதாலே வீட்டிலே ஆடு அறுக்க வேணாம்ன்னு சொன்னான். இதப் பத்தி நம்ம இமாம்கிட்டே யோசனை கேட்டேன். அவங்க யோசனைப்படி வீட்டில ஆடு அறுக்காம கூட்டு குர்பானியிலே சேர்ந்தேன்.
“”என்னோட பங்கு இறைச்சியை நம்ம ஏழை ஜனங்களுக்கு அனுப்பச் சொன்னேன்; அனுப்பிட்டாங்க. பால்கனியில புள்ளங்க நின்னு கேலி பண்ணல. ஹேப்பி பக்ரீத்துன்னு வாழ்த்துச் சொன்னாங்க. அது, உங்க பார்வையில தப்பா பட்டிருக்கு.”
பேசிக் கொண்டிருக்கும் போதே முபாரக்கின், மொபைல்போன் ஒலித்தது; எடுத்துப் பார்த்தார். அன்வரின் பள்ளித் தோழியிடம் இருந்து வந்த அழைப்பு…
“”ஒரு நிமிஷம்… இந்த அழைப்பு அந்தப் புள்ளைங்களிலே ஒரு புள்ளைகிட்டேயிருந்து தான். என்ன சொல்றாங்கன்னு எல்லாரும் கேட்கலாமே!” சொன்னவர், ஸ்பீக்கரை ஆன் செய்தார்.
“”அங்கிள்… நான் அஸ்வினி. பத்திரமா வீடு வந்து சேர்ந்துட்டேன். இதோ அம்மா பேசறாங்க.”
“”ஐயா வணக்கம்… நான் அஸ்வினியோட அம்மா. எம் புள்ளைய உங்க வீட்டுக்கு அனுப்ப யோசிச்சேன். ஆனா, நீங்க உங்க வீட்டு பொம்பளைங்களோட பத்திரமா திருப்பி அனுப்பியிருக்கீங்க. ரொம்ப நன்றி. உங்க வீட்டுக்கு வந்ததுல உணவை வீணாக்காம சாப்பிடுறது எப்படின்னு கத்துக்கிட்டு வந்திருக்கா. அடுத்த முறை எங்களயும் கூப்பிடுங்க. நாங்களும் சேர்ந்து வர்றோம். வர்ற பொங்கலுக்கு நீங்க எங்க வீட்டுக்கு குடும்பத்தோட வரணும்.”
“”சரிம்மா… வர்றோம்.”
“”எல்லாரும் கேட்டீங்களா? மத்த மதத்துக்காரங்கள அழைக்கிறது தப்பில்லே. அதனால, நல்லிணக்கம் ஏற்படும். சமீபத்தில, விநாயகர் சதுர்த்தி விழா நடத்துச்சு… அப்போ திண்டுக்கல் பள்ளிவாசல் சார்பா வரவேற்பு கொடுத்தாங்க. அதனால, அவங்க மதத்துக்கு துரோகம் செஞ்சிட்டாங்களா? இல்லையே!
“”நாம ஒதுங்கிப் போகப் போக நம்மைப் பத்தித் தெரியாம ஒரு இடைவெளி இருக்கதான் செய்யும். நாம அவங்களோட இணங்கிப் போனா, நாம அவங்களைப் பற்றியும், அவங்க நம்மள பற்றியும் புரிஞ்சுக்க முடியும். என் மகனோட விருப்பத்திற்காக மட்டும் இதைச் செய்யலை. இதில நம்ம சமுதாயத்துக்கான நன்மை இருக்குது, மனித நேயம் இருக்குதுன்னு நம்ம இமாம் சொன்ன காரணத்தாலத் தான் இதைச் செஞ்சேன்.”
“”வெல்டன் முபாரக் பாய். நல்ல அருமையான வேலை செஞ்சிருக்கீங்க. இனிமே எல்லாரும் அவங்க அவங்க மாற்றுமத நண்பர்களோட தான் பெருநாளைக் கொண்டாடணும்ன்னு ஊர்ச்சட்டமே போட்டுறலாம்ன்னு நெனைக்கிறேன். என்ன சொல்றீங்க?” தலைவர் நிர்வாகிகளைப் பார்த்துக் கேட்க, “”செஞ்சிரலாம் தலைவரே…” என அனைவரும் ஆமோதித்தனர்.
விளக்கமளித்த திருப்தியில் வீடு திரும்பினார் முபாரக். பக்ரீத் பண்டிகையை வித்தியாசமாகக் கொண்டாடின சந்தோஷம் நெஞ்சு முழுக்க நிரம்பிக் கிடந்தது.

– நவம்பர் 2010

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *