நாளை மற்றுமொரு நாளே…

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 10, 2023
பார்வையிட்டோர்: 3,037 
 

(1974ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம்-3 | அத்தியாயம்-4 | அத்தியாயம்-5

மூன்று பேர்கள் உட்காரக்கூடிய கட்டில் ஒன்றில் ஒருவர் மட்டும் உட்கார்ந்திருந்ததைக் கண்டதும் “வாங்கண்ணே, வாங்கண்ணே அங்கே போகலாம்” என்று துரிதப்படுத்தினான் முத்துச்சாமி. இடத்தை வேறு யாரும் கைப்பற்றிக் கொண்டு விடுவாரோ என்ற ஆத்திரத் தில் கந்தனை விட்டுவிட்டு வேகமாகக் கட்டிலருகே ஓடினான் முத்துச்சாமி. கந்தன் நிதானமாக அவனைப் பின்தொடர்ந்தான். முத்துச்சாமி கட்டிலில் போய் உட்கார்ந்துகொண்டான். கந்தன் அவன் அருகில் நின்று கொண்டு சுற்றுப்புறமிருந்த குழப்பத்தைத் துளாவி நோக்கிக்கொண்டே, “என்ன இன்னைக்கு இப்படிக் கூட்டம்?” என்றான். 

“இன்னைக்கு தெ.சோ.க. மாவட்ட மாநாடில்லே?” என்றான் முத்துச்சாமி. 

“அப்படீன்னா?” என்றான் கந்தன் உட்கார்ந்தவாறே. 

“தென்னக சோஷலிஸ்டுக் கட்சி” என்று மூன்று எழுத்துகளை விரித்தான் முத்துச்சாமி. “ஆமா, இன்னும் ஊரே எப்படிக் கொள்ளையடிக்கறதுண்ணு திட்டம் போட மாநாடு நடத்தறாங்க” என்றார் அதே கட்டிலில் உட்கார்ந்திருந்த மூன்றாமவர். 

“உனக்கு இந்தக் கட்சி கபடா எதுவும் உண்டா?” என்றான் கந்தன் முத்துச்சாமியிடத்து. 

“நான்லாம் தீவிரவாதக் கட்சி” என்றான் முத்துச் சாமி பெருமையோடு. 

மூன்றாமவர் முத்துச்சாமி பக்கம் திரும்பி. “ம.மு.க.வா?” என்றார். 

“இல்லை” என்றான் முத்துச்சாமி. 

“அவர் என்ன கட்சி சொன்னாரு, மாமூல் கட்சியா?” என்றான் கந்தன். முத்துச்சாமி பதிலளிக்கும் முன்னர் மூன்றாமவர், “இல்லல்லே, மக்கள் முற்போக்குக் கட்சி” என்று விளக்கினார். 

கடையைச் சேர்ந்த ஒரு சிறுவன் கந்தனின் முன் வந்து நின்றான். “ரெண்டு எரநூறு” என்றான் கந்தன். முத்துச்சாமி அவனிடத்து ஒரு ஐந்து ரூபாய்த் தாளை நீட்டினான், சாராயக் கடைச் சிறுவன் செல்லவும், சாக்கானாக்கடைச் சிறுவன் ரொம்பச் சிறுவன் – சிரித்துக்கொண்டே வந்து கந்தனிடம், “என்ன சாப்பிடுறீங்க?” என்றான். 

“ரெண்டு ஈரல் கொண்டு வா” என்றான் கந்தன்.

“ஒரு ரூபா தாங்க” என்றான் சிறுவன்.

முத்துச்சாமி பையிலிருந்து ஒரு ரூபாயை எடுத்துச் சிறுவ னிடம் தந்தான். 

“கந்தன் கிட்டேந்து ஒண்ணும் சில்லரை வாங்கிக்காதே, டேய் பாலு” என்று உரக்கக் கத்தினார் திருமூர்த்தி. 

சிறுவன் காதுகளில் அது விழவில்லை. முத்துச்சாமி கொடுத்த ஒரு ரூபாயோடு சாக்கனாக்கடைப் பக்கம் திரும்பி னான் சிறுவன். 

“ரத்தப் பொரியல் சாப்பிடுங்க; உடம்புக்கு நல்லது” என்றார் மூன்றாமவர், தன் முன்னால் இருந்த ரத்த வருவலைச் சுவைத்துக் கொண்டே. 

“அவ்வளவா டேஷ்ட்டா இல்லையே?” என்றான் முத்துச்சாமி. 

“இப்படிக் கொஞ்சம் ரத்தப் பொரியலே எடுத்துக்கிட்டு, இப்படி ஒரு பச்செ மொளகாத் துண்டோடு சேத்து வாய்ல போட்டு நல்லாக் கடிச்சுத் தின்னா ரொம்ப டேஷ்ட்டா இருக்கும்” என்று விளக்கினார் மூன்றாமவர், “உஸ், புஸ்” என்றுகொண்டே. அவர் முகமும் உடம்பும் ஒரே தொப்பலாக இருந்தது. 

“நீங்க கண்ட்டிராக்ட்காரரில்லே?” என்றான் முத்துச்சாமி அவரிடத்து. 

“ஆமாம், ஆமாம். கண்ட்டிராக்ட்காரன்தான்” என்றார் மூன்றாமவர். 

“என்ன ரொம்ப சலிச்சுப் பேசறீங்க?” என்றான் முத்துச்சாமி. 

“இந்தப் பசங்க கைலே நகரசபை போனப்பறம் சிரிச்சா பேச முடியும்?” என்றார் மூன்றாமவர், குரலைத் தாழ்த்திய வாறே. பிறகு அவர் விளக்கிய முறையிலேயே, ஒரு பெரிய மிளகாய்த் துண்டையும், கொஞ்சம் ரத்தப் பொரியலையும் சேர்த்து வாயிலிட்டு மென்றுவிட்டு “உஸ், புஸ்” என்று சத்தம் போட்டார். 

“ரொம்ப ஒறப்போ?” என்றான் முத்துச்சாமி அனுதாபத்தோடு. 

“இல்லேல்லே நுனி நாக்லே பட்டிரிச்சு” என்று விளக்கினார் கண்ட்டிராக்டர். சாராயக்கடைப் பையனும்,சாக்கனாக் கடைச் சிறுவனும் ஒரே நேரத்தில் தத்தம் சரக்குகளைக் கொண்டு வந்தனர். சாக்கனாக்கடைச் சிறுவன் முத்துச்சாமியிடத்து ஒரு ரூபாய் தாளை நீட்டி, “மொதலாளி வாங்க மாட்டேங்கறாரு” என்றான். 

“கந்தா வேணுங்கறதெச் சாப்பிடு. காசு, கீசு ஒண்ணும் தரக் கூடாது தெரியுமா?” என்றிரைந்தார் திருமூர்த்தி. கண்ட்டி ராக்டர் சாக்கனாக்கடைப் பையனைச் சமிக்கை செய்து தன்னருகே கூப்பிட்டு, “டேய் தம்பி, அந்த ரத்தப் பொரியல் லேந்து ரெண்டு பச்செ மொளகா எடுத்துட்டு வா” என்று விட்டு, சாராயக்கடைப் பையனிடத்து “ஒரு நூறு” என்று சொல்லிவிட்டு, இடது கையால் அவனிடத்து ஒரு ரூபாய்த் தாளைக் கொடுத்தார். 

“ஏற்கனவே ரொம்ப சாப்பிட்டிருப்பீங்க போலிருக்கே?” என்றான் முத்துச்சாமி அவரிடத்து. 

“அரை லிட்டர் குடிச்சாச்சு; ஒரு மசுத்தும் ஏறலே” என்று கொண்டே அவர் ஒரு ஏப்பம் விட்டார். 

கந்தன் இருநூறைக் காலி செய்துவிட்டு, ஒரு சிகரெட்டைப் புகைத்துக்கொண்டே, ஈரலைத் தின்றுகொண்டிருந்தான். முத்துச்சாமி சாராயத்தை இன்னும் தொடவில்லை. அவனது இருநூறும் இறுதியில் கந்தனுக்குத்தான் போய்ச் சேரும் என்று அவனுக்குத் தெரியும். கண்டிராக்டருக்கு நூறு வருகிறது. அதை எடுத்து ‘மடக்’கென்று குடித்துவிட்டுக் கண்களை மூடிக் கொண்டே “ஒரு மசுத்தையும் காணோம்” என்றுகொண்டே எழுகிறார். தள்ளாடி மேசையின்மீது லேசாகச் சரிந்து ஒரு காலி கிளாசை உருட்டிவிட்டு, தூக்கக் கலக்கத்தில் இருப்பது போல் நகர்ந்து, ‘குபுக்’கென்று கொஞ்சம் வாந்தியெடுத்து விட்டு, அதைப் பொருட்படுத்தாமல் மேலே செல்கிறார். 

சாராயக்கடையில் ஒரு இளம் பயில்வான் பரோட்டோ மாவைப் பிசைவதும், குத்துவதும், அணைப்பதும், அந்த மாவு உருண்டையை உடைக்க விரும்புபவன்போல் அதை ஒரு இரும்புத் தகட்டில் ‘படீர்’ என்று வீசுவதுமாக இருக்கிறான். அருகே ஒரு இரும்புத் தகட்டில் வெங்காயத்தைச் சுட்டு வறுத்துக் கொண்டிருக்கிறார் திருமூர்த்தி. கடை மானேஜர் – கண்ணாடி அணிந்த இளைஞன் – யாரும் அணுக முடியாதபடி, சட்டம் போட்டு அடைக்கப்பட்டிருந்த சிறு அறையில் ஒரு உயரமான இருக்கையில் கண்ணும் கருத்துமாகச் சாராய பரிபாலனம் செய்துகொண்டிருக்கிறான். வழக்கமாகப் பெண்களுக்கென்று ஒதுக்கப்படும், ஆனால் இன்று அவசர நிலையை முன்னிட்டு இருபாலார்க்கும் பொதுவாக்கப்பட்டுவிட்ட அறையில் தோட்டிகளும் தோட்டிச்சிகளும் சில்லரைத் தகராறும் இதர தகராறும் செய்துகொண்டிருக்கின்றனர். 

மூன்றாமவர் காலி செய்துவிட்ட இடத்தில் ஒரு கருப்புக் கண்ணாடிக்காரர் வந்து உட்கார்ந்து கந்தனோடு பேச்சு கொடுக்கிறார். 

“தம்பியெ எங்கேயோ பாத்த மாதிரி இருக்கே?”என் கிறார் அவர். 

“நான் தம்பியுமில்லே அண்ணனுமில்லே, தியாகராசன்” என்கிறான் கந்தன். 

“இல்லே, மொகம் பாத்த மாதிரி இருக்கு. உங்களுக்குத் தெருவு எது?” 

“பட்டமார் தெருவு.” 

“பட்டமார் தெருவா?” 

“ஆமா, பட்டமார் தெருத்தான். இப்ப எங்கிட்டே எதுக்குப் பேச்சுக் கொடுக்கறீங்க?” 

முத்துச்சாமி போதும் என்றுவிட்டான். கந்தனுக்கு மட்டும் மேலும் சாராயம் வருகிறது. 

“அண்ணே, இங்கே பாருங்கண்ணே” என்கிறான் முத்துச் சாமி கந்தனிடத்து. 

“எவன்டா இங்கே மானேசர்? நாங்க ரெண்டு ரூபாய்க்கு நாதியத்தாடா போயிட்டோம்? பத்து ஏக்கர் நிலம் சொந்தத் துலே இருக்குடோய். மூணு சோடி எருது இருக்கு. ஆமா, நாங்க ஒங்க கடேலே ரெண்டு ரூவாக் காசுக்குக் கடன் சொல்லிட்டுப் போக வரலே, மாநாட்டுக்கு வந்திருக்கோம் தெரியுமிலே” என்று ஒருவன் கத்துகிறான். 

“பாத்திங்களா? இத்தனை பேர் மத்தியிலும் ஒரு கச்சாராப் பண்ணாமே உக்காந்து இருக்கேங்களேன்ட்டுத்தான் ஒங்க கிட்டே வந்து உக்காந்தேன். ஒங்களுக்கு என்ன தொழிலோ என்கிறார் கருப்புக் கண்ணாடிக்காரர் கந்தனிடத்து. 

“பல்லு உடைக்கிறது.”

முத்துச்சாமி சிரிக்கிறான். 

மாநாட்டுக்கு வந்தவன் தொடர்ந்து இரைகிறான். 

“எரநூறு தா, மதியம் வந்து காசெத் தரேனா, அந்த ஆண்டி மானேசர் சத்தம் போடுவாங்கறானே? ஏண்டா மானேசா, ஒங்க மொல்லாளி ஒனக்கு என்னடா தர்றான்? மாசம் நூத்தம்பது தர்றானாடா? எங்க வீட்டு மாடு கன்னு மேச்சலுக்குப் போய்ட்டு வந்தப்பக் கட்டிப் போடு; நாஅந்த நூத்தம்பதத் தரேன். இல்லாட்டி எங்க வீட்டுப் பொம்பளெக சேலையைத் தொவைச்சுப் போடு; எரநூறு தர்றேன்.” வீராப்போடு அவன் எழுகிறான். கடைக்காரச் சிப்பந்தி ஒருவன் அவன் அருகில் சென்று, “சும்மா உக்காருங்கண்ணே” என்றுகொண்டே, அவனது தோள்பட்டையை அழுத்துகிறான். 

“உச், என்னெத் தொட்டாக் கையெ வெட்டிடுவேன்” என்றுவிட்டு உட்காருகிறான் கலாட்டாக்காரன். 

“என்ன, கல்லுடைக்கிறீங்களா?” என்கிறார் கருப்புக் கண்ணாடிக்காரர் கந்தனிடத்து. 

“ஒங்களெப் பாத்தா யாரும் அப்படிச் சொல்ல மாட் டாங்களே!” என்று தொடர்கிறார். 

“ஏன்யா, கல்லுடைக்கறவன்னா சில்க்குச் சட்டை போடக் கூடாதா?” என்கிறான் கந்தன். 

“போடலாம் போடலாம், தாராளமாப் போடலாம். ஒரு கல்யாணத்தைப் பண்ணிட்டு கொழந்தைக பெறந்த பிறகுதான் இருக்கவே இருக்கே பாடு.” 

“நாங் கல்யாணம் கட்டிப் பத்து வருசமாகுது.”

“அப்பக் கொழெந்தெக?” 

“ஏளுதான்.” 

“ஏழு குழந்தேங்களா?” 

“ஆமாம், அதுனாலேதான் என்னே ஒன் டாக்டர்கிட்டே கூட்டிட்டுப் போ. அவர் எனக்கு ஆபரேசன் செஞ்சாருன்னா அவருக்கு இருபத்தியஞ்சு ரூவா கெடைக்கும். உனக்கு அஞ்சோ பத்தோ கிடைக்கும். எனக்கு ஒரு முப்பது கெடைக்கும்; அதுலே நீயும் ஒரு பங்கு வாங்கிக்கெடலாம்” என்று கூறிக்கொண்டே கந்தன் எழுந்திருக்கிறான். கூட்ட நெருக்கடியில் சௌகரியத் துக்காக உடம்பைத் திருப்பிக் கொடுப்பதுபோல் கந்தன் உடலை அசைத்துக் கையை உயர்த்தவும், அவனது வலது முழங்கை கண்ணாடிக்காரரது முகவாய்க் கட்டையில் ‘டண்’ என்று விழுகிறது. “ஏன்யா நீதானே அந்தப் பள்ளிக்கூடப் பையனுக்குப் போயி ஆபரேசன் செஞ்சு வச்சது” என்று கந்தன் கேட்கவும், தொடர்ந்து கூச்சலிட்டுக் கொண்டிருந்த கலாட்டாக்காரன் ஒரு காலி கிளாசைத் தரையில் ஓங்கி வீசியெறிகிறான். 

“டே நான் யார் தெரியுமா? மலப்பட்டி ஆண்டித் தேவன் மகன் சுருளித் தேவனாக்கும்” என்றுகொண்டே, மூன்று நான்கு பேர்கள் தன்னைத் தடுத்து நிறுத்துவதை மீறிக் கொண்டு தள்ளாடியபடி வந்து கடை நடுவே நின்றுகொள் கிறான் கலாட்டாக்காரன். “நான் அந்த மானேசத்… யெக் கேக்கறேன், அவன் மாட்டேன்னு சொல்லுவானா பாப்பம்” என்று இரைகிறான் அவன். 

“கலாட்டாப் பண்ணாதே அண்ணே; பெறகு வருவோம். வா போகலாம்” என்கிறான் சமாதானப்படுத்துபவர்களில் ஒருவன். 

“அண்ணன் அருமே பெருமே அந்தப் பேப்பசங்களுக்குத் தெரியுமா?” என்கிறான் மற்றொருவன். 

“யாரய்யா அது?” என்று திருமூர்த்தி சாக்கனாக்கடை யில் இருந்த இடத்தில் எழுந்து நிற்கிறார். 

“கையை விடுங்கடா” என்று இரைகிறான் சுருளித் தேவன். நாலைந்து பேர் கடையை விட்டுத் தப்பியோடக் கடையின் வாசற்புறம் விரைகின்றனர். 

சுருளித் தேவன் இடுப்பிலிருந்த உறையோடு கூடிய கத்தியொன்றை எடுத்து, இடது கையால் உறையை உருவி வீசி எறிகிறான். உறை கந்தனின் முகத்துக்கு நேரே வரவும் கந்தன் சடாரென்று தலையைக் குனிந்துகொள்கிறான். குடிகாரன் கையில் கத்தியைக் கண்டதும் இன்னும் சிலர் அலறி அடித்துக்கொண்டு ஓடுகின்றனர். முத்துச்சாமியும் பதறி எழுகிறான். வலுவாக அவன் தோள்பட்டையைப் பற்றி அவனை உட்காரவைக்கிறான் கந்தன். 

கையில் கத்தியோடு மானேஜர் அறைப் பக்கம் நடக் கிறான் சுருளித் தேவன். ஒருவன் அவன் தோள்பட்டையைப் பற்றிக்கொண்டு, “இது ஆபத்தண்ணே” என்று எச்சரிக்கிறான். “ச்சூ, மாதர்சோத்” என்று அவன் கையை உதறிவிட்டு, சுருளித் தேவன் மானேஜா அறை முன் சென்று நிற்கிறான். மானேஜரும் இரண்டு பையன்களும் சாராய டிரம்களுக்குப் பின்னால் ஒளிந்துகொள்கின்றனர். 

“ஏண்டா மானேசா, ஒம் மொதலாளியெ எனக்குத் தெரியா தூன்ட்டா நெனெச்சே? எந்தக் காட்டுக்கள்ளன் வந்து எந்தக் காட்டுலே ஏலம் கேக்கறதுடா? அந்தச் செட்டியப் பய பணம் தரவுந்தானேடா இந்தத் திமிரு? அடுத்த வாட்டி இங்கே எந்தப்… மவன் ஏலங் கேக்றான்ட்டுப் பாத்திடறேன்” என்று கத்திக்கொண்டு சுருளித் தேவன் மானேஜர் அறையின் மரச்சட்டக் கதவை இழுத்து அசைக்கிறான். கதவு முறிபட ஆரம்பிக்கிறது. சுருளித் தேவனுக்குப் பின்னால் பூனை போல் வந்து அவனது வலது தோள்பட்டையில், கழுத்தையொட்டித் தன் கையைக் கத்திபோல் வைத்துக்கொண்டு, ஓங்கி ஒரு வெட்டு வெட்டிவிட்டு அருகே இருந்த கல் தூணுக்குப் பின் ஒளிந்து கொள்கிறான் கந்தன். சுருளித் தேவன் கீழே விழுகிறான். கத்தியைப் பிடித்துக்கொண்டிருந்த அவன் கையைக் காலால் மிதித்துக் கொண்டு கந்தன் அவன் முகத்திலும் முதுகிலும் நான்கு குத்து விட்டுவிட்டு அவனைத் தரையில் கிடக்க விடுகிறான். சுருளித் தேவனின் ஆதரவாளர்களில் ஒருவன் ஓடிவிட்டான்; மற்றொருவன் தப்பியோடத் தயாராக உள்ளவன் போல், வாசற்புறம் நின்றுகொண்டு உள்ளே என்ன நடக்கிறது என்று பார்த்துக்கொண்டிருந்தான். தரையில் கிடந்த கத்தியை எடுத்து மானேஜர் முன் வைத்தவாறே கந்தன், “தடியங்க யாரும் இல்லையா?” என்றான். “ஒருத்தன் ஏதோ மாநாட்டுக்குப் போயிட்டான்; இன்னொருத்தர் இனிமேத்தான் வருவாரு” என்றான் மானேஜர். 

ஒரு பத்து ரூபாய்த் தாளை எடுத்து மானேஜர் கந்தனிடத்து நீட்டினான். “பெறகு வாங்கிக்கிறேன்” என்றுவிட்டுக் கந்தன் நகர்ந்தான். அவன் கூடவே முத்துச்சாமியும் வெளியே வந்தான். 

“ஏன் அண்ணே, எதிராளி ஆயுதம் வச்சிருந்தா, பின்புற மாய்ப் போய்த்தான் தாக்கணும் இல்லையா ?” என்றான் முத்துச்சாமி. 

“எதிராளி ஆயுதம் வச்சில்லாட்டியும், முடிஞ்சா அவன் அசந்திருக்கப்பப் பின்னுக்கிருந்துதான் தாக்கணும்” என்றான் கந்தன். 

“அது கோழத்தனமில்லே?” 

“உம்” 

“ஏண்ணே ஒண்ணும் சொல்லாம இருக்கீங்க?” 

“இல்லே, அந்தத் திருமூர்த்தியெப் பத்தி நெனெச்சுக் கிட்டிருந்தேன்.” 

“இப்ப எங்கே போறோம் அண்ணே?” 

“இங்கே பக்கத்துலே வள்ளி லாட்ஜுக்கு.” 

“அங்கே என்ன?” 

“ஒரு சோலி இருக்கு.” 

“ரொம்ப நேரம் ஆகுமா?” 

கந்தன் சிரித்தான். 

“ஏண்ணே சிரிக்கறீங்க?” 

“ஒன்னாளு எந்தக் கொட்டகைக்கு வந்திருக்கு?” 

“பங்கஜாத் தியேட்டருக்கு.” 

“ஒரு மணிக்குப் பங்கஜா தியேட்டர்லே இருக்கணும் ஒனக்கு, அவ்வளவுதானே?” 

“ஆமாம் அண்ணே” என்றான் முத்துச்சாமி. இருவரும் நடந்தனர். 

வள்ளி லாட்ஜை அடைந்ததும், முத்துச்சாமியைப் பத்துப் பதினைந்து நிமிடங்களுக்குப் பிறகு பனிரெண்டாம் எண் அறைக்கு வரச் சொல்லிவிட்டு, கந்தன் மட்டும் லாட்ஜினுள் நுழைந்தான். மானேஜர் ஸ்தானத்தில் உட்கார்ந்திருந்த ஒரு இளைஞனிடத்து, “பனிரெண்டு கீழேதானே ?” என்றான் கந்தன். “யெஸ்” என்று தலையை அசைத்துவிட்டு, கந்தன் செல்ல வேண்டிய திசையை இளைஞன் காட்டினான். அறைகள் ஒரே வரிசையில் நின்றன. பதினொன்றாம் அறை வெளியே பூட்டப்பட்டிருந்தது. பனிரெண்டில் மின்விசிறி சுழன்றுகொண்டி ருந்ததைக் கந்தனால் கேட்க முடிந்தது. அந்த வரிசையில் அதுதான் கடைசி அறை. கதவைத் தட்டிக் கொண்டே, “சார்” என்றான் கந்தன். “யாரது?” என்று உள்ளேயிருந்து ஒரு குரல் கேட்டது. பிறகு கதவு திறந்தது. கதவைத் திறந்தது கைலியும் பனியனும் அணிந்திருந்த ஒரு நடுத்தர வயதுக்காரர். 

“யாரய்யா?” என்றார் அவர். 

“தெரிலே? நேத்து நைட்டு…” என்றான் கந்தன்.

“ஓ, நீயா? என்ன விஷயம்?” 

“முன்னாலே உள்ளே போங்க சொல்றேன்” என்றுவிட்டு, வழியில் நின்றுகொண்டிருந்த அவரையும் தள்ளிக்கொண்டு உள்ளே போகக் கூடியவனைப்போல் ஒரு அடி எடுத்து வைத்தான் கந்தன். 

“வா, வா” என்று கொண்டே அவனுக்கு வழிவிடும் வகை யில் உள்ளே சென்று கட்டிலில் கிடந்த மெத்தை மீது உட்கார்ந்து கொண்டார் அவர். கந்தன் அருகிலிருந்த நாற்காலியில் உட்கார்ந்துகொண்டான். அறையின் இரு கதவுகளும் நன்கு திறந்து கிடந்தன. 

“என்னப்பா விஷயம் இந்நேரத்திலே” என்று கேட்டுக் கொண்டே அவர் சிரிக்க முயன்றார். 

“நம்ம பொளப்பிலே கைவச்சிட்டிங்களே” என்றான் கந்தன் வருத்தத்தோடு. 

“யாரு?” 

“நீங்கதான் சார்.” 

“நானா, அதெப்படிப்பா? நான் ஒங்கூடப் பத்து நிமிஷம் கூடப் பேசியிருக்க மாட்டேனே?” 

“எங்கூடப் பத்து நிமிசம்தான் பேசினீங்க. ஆனா சரோஜா வோட நைட் பூரா பேசினீங்களே, அது போதாதா?” 

“இல்லேப்பா, செகண்டு ஷோ முடியறப்ப வந்துட்டேன்.” “சொல்லிச்சு, சொல்லிச்சு. ஆனா வெவரந் தெரியாத ஒரு சின்னப் பொண்ணு மனசை இப்படிக் கெடுத்திருக்கக் கூடாதுங்க.” 

“நான் என்னப்பா கெடுத்தேன்?” 

“சரி, சரிங்க; இப்ப ஒங்ககிட்டேப் பேசி என்ன ஆகப் போவுது? டிரஸ்ஸே மாத்திக்கிட்டுக் கிளம்புங்க” என்று சொல்லிக் கொண்டு கந்தன் எழுந்திருந்தான். 

“இப்ப எங்கப்பா போறது?” 

“அந்த வீட்டுக்குத்தானுங்க. நீங்களே வந்து சரோசா கிட்டே நேர்ல சொல்லிடுங்க.” 

“நான் வந்து என்னத்தைச் சொல்றது?” 

“உங்களுக்குப் பெண்டு பிள்ளைக இருக்கு; உங்களாலே அதெக் கல்யாணம் கட்டிக்க முடியாதுனு நீங்களே அது கிட்டேச் சொல்லிடுங்க.” 

“நான் ஒண்ணும் அதுகிட்டே அதெக் கல்யாணம் கட்டிக்கிடுவேன்ட்டு ஒண்ணும் சொல்லலேயே!” 

“இந்தா சார், எனக்குக் கெட்ட கோபம் வரும். அந்தப் பிள்ளையை சாதாரணமா நெனெச்சிறாதீங்க. பொன் கொடுத் தாலும் பொய் சொல்லாது. அதெல்லாம் ரொம்பப் பெரிய குடும்பத்துப் பொண்ணு. ஏதோ காலக்கோளாறு. சரி, இப்ப அதெல்லாம் எதுக்கு? குடிச்சுப்போட்டுச் சின்னப் பொண்ணுக கூட இருக்கேலே வாய்க்கு வர்றதே உளர்றவன்தான் ஆம்பிளே; அதுலே ஒன்னும் தப்பில்லே. ஆனா அதுக்காக சரோ பொய் சொல்லுதூனு மட்டும் சொல்லாதீங்க.” 

“அப்ப நான் வெறிச்சிலேதான் சொல்லியிருப்பேன்னு நீயே ஒத்துக்கிறே, இல்லே?” 

“அது எனக்குத் தெரியாதா, சாமி? இன்னைக்குக் காலேலே அது தகராறு பண்ண ஆரம்பிக்கவே எனக்கு விஷயம் என்னன்ட்டு வெளெங்கிரிச்சு. நானும் அதுகிட்டே எடுத்துச் சொன்னேன். வரவங்க போறவங்க வாய்க்கு வந்ததெல்லாம் ஆயிரத்தெட்டு சொல்வாங்க. அதெல்லாம் நம்பிறக் கூடாதுனு. அது கேட்டாத்தானே. ‘இல்லே, இல்லே இவர் மத்தவங்க மாதிரி இல்லே; உண்மைலே அவருக்கு எம் மேலே பிரியம் ஏற்பட்டிரிச்சு. நாளெக்கே ஸ்த்தர் கல்யாணத்துக்கு ஏற்பாடு செய்யறேனிருக்காரு’னு சொல்லிப் பிடிவாதம் செய்யுது.” 

கந்தன் சொல்வதை லேசான புன்முறுவலோடு கேட்டுக் கொண்டிருந்த மற்றவர் வாய்விட்டுச் சிரித்தார். 

“இந்தாங்க, இது சிரிக்கற விஷயம் இல்லை” என்று கந்தன் மிரட்டினான். 

“அதுக்கு நான் என்னய்யா செய்யணும்?” என்று மற்றவர் உரக்கக் கத்தினார். 

“யேய், என்ன சத்தம் போடறே? ஒரு சின்னப் பொண்ணு மனசக் கெடுத்திருக்கே; எம் பொளப்புலே மண்ணெப் போட்டி ருக்கே? இதுலே மிரட்ட வேறயா பாக்கறே?” 

“சரிய்யா, எதுக்கு இந்த வெட்டிப் பேச்செல்லாம்? இப்ப என்ன செய்யணுங்கறீங்க?” 

“இங்கே பாருங்க சார், இன்னைக்கு ஞாயித்துக்கிளமை. மணி பனிரெண்டாகப் போவுது. ஊருலே வேறே மாநாடு அது இதூனு நடக்குது. இந்நேரத்துக்குள்ளே சரோ என்ன சம்பாதிச்சிருக்கும்னு நெனெக்கிறீங்க? அம்பதுக்குக் கொறை யாம இன்னைக்குக் கெடெச்சிருக்கும். ஆனா என்ன செய்திட்டடிருக்கு தெரியுமா? ‘நான் அவருக்கு சத்தியம் செய்து கொடுத் திட்டேன்; யாரையும் வீட்டுக்குக் கூட்டியாரக் கூடாது’னு லந்து பண்ணிட்டிருக்கு. நீங்க வேறே ஒண்ணும் செய்ய வேண்டாம்; வீட்டுக்கு வந்து அதுகிட்டே விஷயத்தைச் சொல்லிடுங்க, அது போதும்”. 

“நான் சொன்னாக் கேட்டுக்குமா?” 

“கேட்டுக்கிறேங்குது. அவரே வந்து எம் மொவத்துலே முளிச்சு, குடிவெறிலேதான் அப்படிச் சொன்னேன்ட்டுச் சொல் லட்டும், அது போதூங்குது.” 

“சரி, சாயங்காலம் ஏழு எட்டு மணிக்கு வா; ரெண்டு பேருமாப் போகலாம்.” 

“ஏய்ன்யா, அதுக்குள்ளாற ஊருக்கு வண்டியெப் பாத்துக் கம்பி நீட்டிடலாம்னுதானே பாக்கறே? நீல்லாம் நாயமாச் சொன்னாக் கேட்டுக்கிடமாட்டே.” 

“டேய், சத்தம் போடாதே. எங்கிட்டே என்ன சீட்டுப் போடவா பாக்கறே?” 

“ச்சூ, மாதர் சோத்! ஏதோ பெரிய மனுஷன் மாதிரி தெரியறே, மரியாதயாப் பேசு; சீட்டு கீட்டுனே பல்லே உதித்திடுவேன்.” 

கந்தன் மற்றவரை நோக்கி ஒரு அடி எடுத்து வைத்தான். அப்போதுதான் முத்துச்சாமி அறைக்குள் நுழைந்தான். “என்னண்ணே தகராறு? இப்படிக் கலவரப்பட்டிருக்கே?” என்றான் கந்தனிடத்து. 

“இந்த ஆளு இருக்கானே இவன், நேத்து சரோஜாவோடெ தங்கினான். பாத்தா கண்ணியமான மனுஷனாத் தெரியாறா னேன்ட்டுப் பணத்தே அது கைலேயே கொடுத்திருங்கோன்னேன். இவன் அம்பது பேசிட்டு, குடி வெறிலே இருபதுதான் பேசி னேன்ட்டுத் தகராறு பண்ணிருக்கான். அவளே ஏதோ அசிங்கமாச் செய்யச் சொல்லிருக்கான்; அது மாட்டேங்கவும் அதை அடிச்சிருக்கான். அதெல்லாம் போகட்டும். சரோ வோடே செயினே வேறே காணோம். இப்பக் குடிவெறிலே எனக்கு ஒண்ணும் நெனப்பில்லேங்கிறான். வாய்யா போலீஷ் ஸ்டேஷனுக்குனா, எனக்கு டிபுட்டியெத் தெரியும், மந்திரியெத் தெரியும்னு கதைவுடறான்.” 

“ஆமாம் ஆமாம், இது டெர்லின் ரௌடி காலமாத்தான் போச்சு” என்று கந்தனிடம் கூறிவிட்டு முத்துச்சாமி, “சார், நீங்க போலீஸ் ஸ்டேஷனுக்குப் போயி ஒங்களுக்கு நெனெவிருக் கிறதே சொல்லுங்க; அதுதான் ஒழுங்கு” என்று மற்றவரிடத்துச் சொன்னான். அறைக்காரர் கந்தனையும் முத்துச்சாமியையும் மாறி மாறிப் பார்த்தார். 

திடீரென்று மின்விசிறி சுழல்வது நின்றது. கந்தன் நாற் காலியில் உட்கார்ந்துகொண்டான்; முத்துச்சாமி ஒரு வட்ட ஸ்டூலில் உட்கார்ந்து கொண்டான். யாரோ அறையை நோக்கி வரும் சப்தம் கேட்டது. காலடி ஓசை பதினொன்றாம் எண் அறைக்கு வந்ததும், அந்த அறை திறக்கப்படும் சப்தம் கேட்டது. பிறகு மீண்டும் ஒரு காலடிச் சத்தம். அறையைக் கடந்து, அறையினுள் சாதாரணமாக நோக்கியவாறே மானேஜர் இளைஞன் சென்றான். 

“இந்தாப்பா” என்றார் அறைக்காரர். 

“வாட் சார்?” என்று கேட்டுக்கொண்டே மானேஜர் ளைஞன் தலையை அறைக்குள் நீட்டினான். 

“நூறு ரூபாய்க்கு சேஞ்சு இருக்கா?” என்றார் அறைக் காரர். 

“ஓ, யெஸ்” என்றான் மானேஜர். 

உடைதாங்கிச் சட்டத்தில் தொங்கிக்கொண்டிருந்த ஒரு பேன்ட்ஸ் பாக்கெட்டிலிருந்து நூறு ரூபாய்த் தாளொன்றை எடுத்து மானேஜரிடத்து நீட்டினார் அறைக்காரர். அவன் விசில் அடித்துக்கொண்டே, ஒரு கையில் ரூபாய்த் தாளோடும், மறு கையில் ஒரு சாவிக்கொத்தைச் சுழற்றிக்கொண்டும், ஓட்ட மும் நடையுமாகக் கல்லாப் பெட்டியை நோக்கி நடந்தான். சிறிது நேரத்தில் அறைக்குத் திரும்பி வந்தான். “ஃபைவ் டென்ஸ் அண்டு டென் ஃபைவ்ஸ்” என்றுகொண்டே அறைக் காரரிடத்து, ஐந்து பத்து ரூபாய்த் தாள்களையும் பத்து ஐந்து ரூபாய்த் தாள்களையும் நீட்டினான். 

அதைப் பெற்றுக்கொண்டே அவர், ‘சரி’ என்று தலையை ஆட்டினார். அவர் ‘தாங்ஸ்’ சொல்வார் என்று எதிர்பார்த்த இளைஞன் அவருக்குப் பதில் தானே “தாங்ஸ்” என்றுவிட்டு, “கம்மிங் சார்” என்று சொல்லி விடையும் பெற்றுக்கொண்டு அறையை விட்டுக் குதித்துக்கொண்டு சென்றான். அறைக் காரர் கந்தனிடத்து ஐம்பது ரூபாயைக் கொடுத்தார். அதை எண்ணிப் பார்த்துப் பையில் போட்டுக்கொண்டு “வரேன் சார். இன்னைக்கி நைட்டு இங்கேதானே இருப்பீங்க?” என்றான் கந்தன். அறைக்காரர் எப்படியும் புரிந்துகொள்ளலாம் என்ற வகையில் தலையை அசைத்தார். கந்தனும் முத்துச்சாமியும் லாட்ஜை விட்டு வெளியே வந்து பங்கஜாத் தியேட்டரை நோக்கி நடந்தனர். 

“இது தப்புல்லே அண்ணே?” என்றான் முத்துச்சாமி. 

“இதுவும் தப்புத்தான்; எவளும் கைம்பெண்டாட்டிக்காரி சிக்கினா அவளே வளைச்சுப்போடப் பாக்கறதும் தப்புத்தான்.” 

“இல்லண்ணே, நான் அதெக் கல்யாணம் கட்டிக்கிட்டாலும் கட்டிக்கிடுவேன்.” 

“வண்டி வாங்கும்போது ‘ட்ரயல்’ பாப்பாங்க. அது மாதிரியா இப்போ?” 

முத்துச்சாமி முதலில் சிரித்தான். பிறகு கொஞ்சம் யோசித்து விட்டு, “இந்தச் சமுதாயத்துலே எத்தனையோ கொடுமைகள் நடக்குது” என்றான். 

“நாமும் கொஞ்சம் கொஞ்சம் கொடுமைகள் செய்ய லாங்கறே, இல்லே?” என்றான் கந்தன். 

“நாமா ஒண்ணும் கொடுமைகள் செய்யலே; சமுதாய அமைப்பு நம்மை அப்படிச் செய்ய வைக்கறது.” 

“உம்” 

“உதாரணமா – அண்ணே, கோவிச்சுக்காதீங்க – நீங்க செல தப்புப் பண்றீங்க இல்லே; அதுக்கெல்லாம் என்ன காரணம்?” 

“கொளுப்புதான்.” 

“இல்லண்ணே, ஒங்க வறுமைதான் காரணம்.” 

“பணம் சம்பாதிக்க வேறே வளியில்லையா? கட்டின பெண்டாட்டியெக் கூட்டிக் கொடுக்கணுமா? இல்லாட்டி ரௌடித்தனம் பண்ணணுமா?” 

“நீங்க நெனச்சா ஒங்களுக்கு வேலே கெடெச்சுடுமா? இல்லாட்டிச் சொந்தத் தொழில் பண்ண ஒங்ககிட்டப் பண மிருக்கா?” 

“கொஞ்சம் இருந்தது. அதிலே கொஞ்சத்தெ ஒருத்தன் தாப்பாப் போட்டான். மற்றதெ நானே அளிச்சிட்டேன்.” 

“சோலைப் பிள்ளையத்தானே சொல்றீங்க, ஒருத்தன்ட்டு.” 

“ஆமாம்.” 

“ஏன் அவன் ஒங்ககிட்டே தாப்பாப் போட்டான்?” 

“தம்பி, என்ன லூஸ்தனமாக் கேக்கறே? அவனுக்குப் பணம் வேண்டிருந்திச்சு; எங்கிட்டேந்து பிடுங்கினான். மீனாவெக் கட்டிக்கணும்னு எனக்கும் ஆத்திரம் இருந்திச்சு.” 

“அப்ப மனுசனே மனுசன் ஏமாத்தற சமுதாயம்தானே இது?” 

“ஆமாம், ஆமாம்.” 

“இந்த சமுதாய அமைப்பை மாத்தணும் அண்ணே.” 

“எப்படி? நாம இந்த சமுதாய – என்ன சொன்னே – அமைப்பா, அதை நாம் உண்டுபண்ணலையே! அதெ எப்படி நாம மாத்த முடியும்?” 

“அது மாதிரி மாத்தம் எல்லாம் மத்த நாடுங்கள்லே நடந்திருக்கண்ணே.” 

“எப்படி?” 

“நம்ம மாதிரி கஷ்டப்படறவங்கள்லாம் புரட்சி செஞ்சு சமுதாய அமைப்பை மாத்திச் சொரண்டலே போக்கிருக்காங்க.” 

“அப்படீன்னா?” 

“எது அப்படீன்னா?” 

“சுரண்டல்னு சொன்னயே அதான்.” 

“அதுவா? இன்னைக்கு உணவு, துணி, இன்னும் நம்ம தேவையெல்லாம் உண்டுபண்றது யாரு? தொழிலாளிங்கதானே?” “ஆமாம். ஆனா தொழிலாளிக்குத்தான் மொதலாளிங்க கூலி கொடுக்கறாங்களே?” 

“கூலி கொடுக்கறாங்கதான். ஆனா ஒரு நூறு ரூபாய்க்குத் தொழிலாளி உற்பத்தி செய்தான்னா, அவனுக்குக் கெடெக்கிறது நாப்பது ரூவாவோ, முப்பது ரூவாவோதான். மிச்சத்தெ மொதலாளிதானே கொள்ளையடிச்சிக்கிறான்?” 

ஆனா மொதலாளிதானே பணத்தைப் போட்டான்; அவன்தானே தொழிலாளிங்ககிட்டேந்து வேலை வாங்கறான்.” “மொதலாளிதானே மேற்பார்வை பண்றான்; தொழிலெ நடத்தத் திட்டம் போடறாங்கறேன்னே, இல்லையா?” 

“ஆமாம்.” 

“அதுக்கு ஒரு ஆளோ, ரெண்டு ஆளோ வேணும்தான். ஆனா, ஒரு பாக்டரி எதுக்கு அவனுக்கும், அவன் பெண்டாட்டி பிள்ளை குட்டிகளுக்கும் சொந்தமா இருக்கணும்? அவனும் ஒரு சம்பளத்தெ எடுத்துக்கிட்டுப் போகட்டுமே? அப்ப மொத லாளீன்னு ஒருத்தன் இருந்திக்கிட்டுத் தொழிலாளி உழைப்பை எல்லாம் பிடுங்கித் தின்னுட்டு இருக்கமாட்டனில்லையா?” 

“அப்ப பாக்டரி யாருக்குச் சொந்தம்?” 

“எல்லாருக்கும்தான், எந்தத் தனிப்பட்டவருக்கும் சொந்தமா இருக்கணுமா?” 

“தம்பீ,நீ ரொம்பப் படிச்சவன் மாதிரி பேசறே. எனக்கு என்னையே மாத்திக்க முடிலே; நான் எப்படி சமுதாயத்தை மாத்த முடியும்? குடிகாரப் பய ஏதோ ஒளர்றான்னுடுவாங்க…. இந்தா, இந்த ஓட்டல்லே மணியெப் பாரு.” 

“மணி ஒண்ணரை ஆகப் போகுது அண்ணே.” 

“சரி, வந்த காரியத்தெப் பார்ப்போம். கொஞ்சம் வேகமா நட.” 

“சொரண்டலே ஒளிச்சுத்தான் ஆகணும் அண்ணே.” 

“சரி சரி, போ,ஒளி. இன்னைக்குச் சொரண்டறவனெ ஒளிச்சா, நாளைக்குச் சொரண்ட இன்னொருத்தன் வருவான். அவ்வளவுதான். ஆனா கூலிக்காரங்க சம்பளம் கூடக் கேட்டுக் கூட்டம் போடறாங்களே, இல்லாட்டி வேலை நிறுத்தம் செய்ய றாங்களே, அது எனக்குச் சரீன்னு படுது.” 

“அப்ப …” என்று ஆரம்பித்தான் முத்துச்சாமி. 

“இந்தா தம்பி, எனக்குப் படிப்பு கிடிப்பு ஒண்ணும் கெடெ யாது, பள்ளிக்கூடத்துக்குப் போனா கார்லே வண்டிலே அடிபட்டிருவேன்ட்டு எங்கம்மா என்னைப் பத்து வயசுவரை வீட்டெவிட்டே வெளியே விட்டதில்லே.”

“உங்களுக்கு வாழ்க்கைலே லட்சியம் என்னண்ணே?” என்றான் முத்துச்சாமி. 

“அப்படீன்னா?” என்றான் கந்தன், 

“நீங்க வாழ்க்கைலே எதைச் சாதிக்கணூம்னு திட்டம் போட்டிருக்கீங்க?” 

கந்தன் சிரித்தான். “எந்தத் திட்டம் போட்டு சொர்ணத் தம்மா வயத்துலே வந்து பொறெந்தேன்?” என்றுவிட்டு மீண்டும் சிரித்தான். 

கந்தனும் முத்துச்சாமியும் தியேட்டர் முன் வந்து நின்றனர். படம் முடிய இன்னும் சில நிமிடங்கள் இருந்தன. இருவரும் தியேட்டருக்கு எதிரே இருந்த டீக்கடைக்குச் சென்று சம்சாவும் டீயும் சாப்பிட்டு விட்டு வரவும், ‘ஜன கண மன’ கேட்க ஆரம்பிக்கவும் சரியாக இருந்தது. ஏற்கெனவே சினிமா ரசிகர்கள் தியேட்டருக்குள் இருந்து முண்டியடித்துக் கொண்டு வெளியே வந்துகொண்டிருந்தனர். தியேட்டருக்கு இரண்டு கேட்டுகள் இருந்தன. இரண்டுமே தெருவைப் பார்த்து இருந்ததால் இரண்டு வாசற்கதவுகளையும், எதிர்ப்புறத்தில் நின்றுகொண்டு முத்துச்சாமியால் பார்த்துக்கொள்ள முடிந்தது. கார்களும் நடைவாசிகளும் ஜனநாயக முறையில் போட்டி போட்டுக்கொண்டு, இரைச்சல் இட்டுக்கொண்டு, முட்டி மோதிக்கொண்டு, ஒருவர் வழியை மற்றவர் மறித்துக்கொண்டு, பால் பேதங்களை மறந்து உரசிக்கொண்டு, ஏதோ தர்ம சங்கடத் திலிருந்து விடுபட்டுவிட்ட ஆறுதலோடு எல்லாரும் வெளியே பிதுங்கிக்கொண்டிருந்தார்கள். முத்துச்சாமி கண்களைத் தீட்டிக்கொண்டு பெண்கள் கேட்டையும், ஆண்கள் – பெண் கள் கேட்டையும் மாறி மாறிப் பார்த்துக்கொண்டிருந்தான். ஏதோ சலித்துப் போனவன் போல நின்றுகொண்டு கந்தன் ஒரு சிகரெட்டைப் புகைத்துக்கொண்டிருந்தான். முத்துச்சாமி யின் கண்களில் எதிர்பார்ப்பும் ஏமாற்றமும் மாறிமாறித் தோன்றி மறைந்தன. திடீரென்று “அதுதான் அண்ணே, அதுதான், அந்தக் கடைக்குப் பக்கம், அதோ அந்தப் பச்செச் சேலை கட்டிக்கிட்டுக் கைலே ஒரு கொளந்தெயோட, அதுதான் அண்ணே, அதேதான்” என்று கத்தினான். 

“கொளெந்தே தூங்கிட்டிருக்கில்லே?” என்றான் கந்தன். “அப்படித்தான் தெரியுது.” 

“கொளெந்தேங்களுக்குத்தான் சினிமா அருமை தெரியுது” என்றான் கந்தன், சிகரெட்டை வீசியெறிந்துவிட்டு அதைக் காலால் மிதித்தவாறே. 

கந்தன் விருட்டென்று கடைக்கு நடந்தான். குழந்தை யைத் தோளில் சாத்திக்கொண்டிருந்த அவள் எந்தப் பக்கம் திரும்பிச் செல்வது என்று இன்னும் தீர்மானிக்காதவள்போல் நின்றுகொண்டிருந்தாள்; அல்லது கூட்டம் கலையட்டும் என்று காத்துக்கொண்டிருந்திருக்கலாம். கந்தன் கடையில் பத்து பைசாவுக்கு வெற்றிலை பாக்கு வாங்கினான். கடைக்கு அருகே தரையில் பூ விற்றுக்கொண்டிருந்த ஒருத்தியிடமிருந்து இருபத்தைந்து காசுக்குப் பூ வாங்கினான். பூ விலையைப் பற்றி எல்லாம் கேட்கவில்லை. “கொடுக்கறதெக்கொடு” என்று விட்டு பூவைப் பூக்காரியின் கையிலிருந்து பிடுங்கிக்கொண் டான். குழந்தையைத் தூக்கிக்கொண்டிருந்த முத்துச்சாமியின் ‘ஆள்’ மெள்ள நகர ஆரம்பித்தாள். கந்தன் அவளிடத்து வேக மாகச் சென்று, “இந்தா, இதெப் பிடி” என்று வெற்றிலையையும் பூவையும் அவளது கையில் திணித்துவிட்டு, அவள் வாயைத் திறக்கும் முன், “கொளந்தெயெ இப்படித் தா” என்றுகொண்டே குழந்தையை அவள் பிடியிலிருந்து பிடுங்கித் தனது தோளில் சாத்திக்கொண்டு “சீக்கிரம் வா பிள்ளே, நேரமாகுது. இன்னும் சோறு தின்னலே” என்று கூறிக்கொண்டே வேகமாக நடந்தான். அவள் ஒரு கணம் தயங்கிவிட்டு, அக்கம் பக்கம் பார்த்து விட்டுத் தலையைக் குனிந்துகொண்டே, அவன் பின்னால் நடந்தாள். கூட்டம் குறைந்துவிட்ட ஒரு இடத்துக்கு வந்ததும், அவள் மெதுவாக,”எங்கே போறீங்க?” என்றாள். 

அவன் திரும்பிப் பார்க்காது, “ஏன் சிநேகிதன் ஒருத்தன் ஓம்மேலே உசிரையே வச்சிருக்கான், அவன்கிட்டே” என்றான். 

“யாரது?” என்றாள் அவள். 

“பின்னாலே வரான்” என்றான் கந்தன், மீண்டும் திரும்பிப் பாராது நடந்தவாறே. 

ஓட்டமும் நடையுமாகக் கந்தனின் பின்னால் வந்து கொண்டிருந்த அவள் கள்ளத்தனமாகத் திரும்பிப் பார்த்தாள். வேகவேகமாக அவர்கள் பின்னால் வந்துகொண்டிருந்த முத்துச்சாமியைப் பார்த்துவிட்டு, “அந்த நீலச்சட்டை போட்டிட்டு வராரே அவரா?” என்று கந்தனிடத்து மெதுவாகக் கேட்டாள். 

“ஆமாம்” என்றான் கந்தன். 

“அவரைப் பாத்துருக்கேன், பக்கத்துத் தெருதான்” என்றாள் அவள். 

முத்துச்சாமியையும் அவனது ‘காதலி’யையும் முத்துச்சாமி யின் நண்பன் ஒருவனது அறையில் விட்டுவிட்டுக் கந்தன் ஷேக் ராவுத்தர் கடையைப்பற்றி நினைத்தான். ஒரு முறை போலீஸ் லாக்கப்பில் இருந்தபோது அவனுக்கு அங்கிருந்து தான் பரோட்டாவும் கறிக் குழம்பும் வாங்கிக் கொடுத்தார்கள். அதிலிருந்து அவனுக்கு அந்தக் கடைமீது மோகம். ஊரிலேயே அந்தக் கடையில் கிடைப்பதுபோல் வேறெங்கும் பரோட்டா வும், கறியும், ராட்டையும் கிடையாது என்பது அவன் உறுதி. அந்தக் கடையை நினைத்தாலே கந்தனுக்கு நாக்கில் நீர் ஊறும். அடிக்கடி சென்றால் சலித்துவிடும் என்று எப்போதாவது தான் செல்வான். இப்போது அவனுக்கு ஷேக் ராவுத்தர் கடைப் பண்டத்தைத் தவிர வேறெதுவும் வாய்க்குள் நுழையாது என்று பட்டது. இன்னும் கொஞ்சம் ஊத்திக்கொண்டுவிட்டு, ராவுத்தர் கடையில் ஆறு பரோட்டாவும், நாலு வருவலும், இருந்தால் ஒரு கோழியும், மூன்று நான்கு மீன் துண்டுகளும் சுவைத்து உண்பதாகக் கற்பனை செய்துகொண்டே வேகமாக நடந்தான். கூரை வேயப்பட்ட ராவுத்தர் கடைக்கு வந்து சாப்பிட உட்கார்ந்ததும் தான் இரண்டு பரோட்டாவும் ஒரு வருவலும் கூட உருப்படியாகத் தின்ன முடியவில்லை என்பதைக் கண்டுகொண்டான். எவ்வளவுதான் தின்றாலும், வயிறு என்று ஒன்று இருக்கிறதா இல்லையா என்று வியக்கும் அளவுக்கு வழக்கமாகச் சிறுத்திருக்கும் அவனுடைய வயிறு சற்று முட்டி இருந்ததாக அவனுக்குப் பட்டது. வயிற்றின் வலதுபுறத்தை அழுத்திப் பார்த்தான். ஏதாவது கோளாறு இருந்தால், கட்டியாக ஒன்று வலதுகைப்புறம் படும் என்று ஹோமியோபதி டாக்டர் அவனிடத்துச் சொல்லி இருந்தார். ஒன்றும் தெரியவில்லை. சந்தேகம் வரவே, வயிற்றின் இடது புறத்தையும் அழுத்திப் பார்த்தான். ஒன்றும் உறுதியாகத் தெரியவில்லை. “உம்” என்று விட்டு மெல்ல நடை போட்டான். அவன் நினைவு சுப்பையா செட்டியாரைச் சுற்றி வந்தது. 

செட்டியார் சாவதற்கு ஒரு மாதம் முன்னால் அவரை அநேகமாக தினமும் பார்க்கும் சந்தர்ப்பம் கந்தனுக்கு ஏற்பட்டது.மீனாவுக்கு உடல்நலம் சரியில்லாமல் இருந்தது. வறட்டு இருமல் அவள் உயிரை வாங்கியது. அவளை தினமும் கந்தன் முனிசிபல் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்வான். காலை நேரத்தில் அவளோடு ஒருமுறை வெளியே செல்வதில் அவனுக்கு அப்போதெல்லாம் குஷி. அவன் கூடச் சென்றால் முனிசிபல் ஆஸ்பத்திரி டாக்டர் மீனாவை அதிக நேரம் காக்க வைக்கமாட்டார். அதன் பின்னே ஒரு இரகசியம் உண்டு, அதிருக்கட்டும். கந்தன் மீனாவோடு ஆஸ்பத்திரிக்குச் செல்லும்போதெல்லாம் மத்திய காய்கறிச் சந்தை வழியே போவான். ஒருநாள் காய்கறிச் சந்தையைக் கடந்து செல்லும் போது பல கடைகள் அடைத்துக் கிடந்ததைக் கந்தன் பார்த் தான். அங்கங்கே கடைக்காரர், சிறுவர்கள் நின்றுகொண்டு குசுகுசுவென்று பேசிக்கொண்டிருந்தனர். என்னவென்று கந்தன் விசாரித்தான். முந்திய நாள் இரவு மருந்துக் கடையில் விஸ்கி குடித்துக்கொண்டிருக்கும்போது சுப்பையா செட்டியார் திடீரென்று, “எல்லாருக்கும் பை பை” என்றுவிட்டு இறந்து போனார் என்றார்கள். செட்டியாருடைய வயிறு நாளுக்கு நாள் வீங்கி வந்ததைக் கவனித்திருந்த மீனா, செட்டியாருடைய வயிறு பலூன் மாதிரி பட்டென்று வெடித்துச் செட்டி யார் இறந்துவிட்டதாக நினைத்துக்கொண்டாள். அங்கு நின்று கொண்டிருந்த ஒரிருவரிடத்துப் பேச்சுக்கொடுத்ததில் கந்தனுக்கு ஒரு அனுதாபமான விவரம் கிடைத்தது. செட்டியார் சாவதற்கு மூன்று நான்கு நாட்கள் முன்பிருந்தே அவர் பேசினாலோ, தும்மினாலோ, வாய்வழியே மூச்சுவிட்டாலோ அல்லது வெறுமனே வாயைத் திறந்தாலோ அவருக்கு ஐந்தாறடி பக்கத்தில் யாரும் நிற்க முடியாதாம். அப்படி ஒரு பொறுக்க முடியாத துர்நாற்றம் அவர் வாயிலிருந்து அடித்தது. செட்டியாருடைய வயிறு அழுகிப்போய்விட்டது என்றார்கள். செட்டியாருக்குப் பண வசதி நிறைய உண்டு. ஆனாலும் எந்த வைத்தியரிடத்தும் செல்லவில்லை. “பார்க்க வேண்டியதெல்லாம் பார்த்தாய் விட்டது; இனிமேல் என்ன ? என்றுவிட்டார். கந்தன், செட்டியா ருடைய சாவைப்பற்றி விசாரித்துக்கொண்டிருப்பது மீனா வுக்குப் பிடிக்கவில்லை. அவள் கண்களில் நீர் துளிர்த்தது. “சரி வாங்க” என்று கந்தனை அவசரப்படுத்தினாள். 

சுப்பையா செட்டியார் பிரபல மொத்த காய்கறி வியாபாரி யாக இருந்தவர். மஞ்சுமலை வட்டாரத்தில் காய்கறி பயிர் செய்த எல்லாக் குடியானவர்களுக்கும் அட்வான்ஸ் கொடுத்து, நகரில் இங்கிலீஷ் காய்கறிகளின் விற்பனையைத் தனது ஏகபோக உரிமையாக்கிக்கொண்டிருந்தார். இங்கிலீஷ் காய்கறிகளில் உள்ள சத்தை மக்களுக்கு விளக்க, சந்தையில் நான்கு பிரசங்கி களை நியமித்தார். அவர்களது பிரசங்கங்களைக் கேட்டுவிட்டுக் கடைக்காரர்கள்கூட சிறு சிறு போஷாக்குப் பிரசங்கங்கள் நிகழ்த்துவது உண்டு. “இந்த முள்ளங்கியை எடுத்துக்கிட்டுப் போங்க சார்; அதுலே நிறைய பாதரசம் இருக்கு” என்பான் ஒருவன்.”அந்தப் பச்சைக் கோசுலே நிறைய சுண்ணாம்பு இருக்கு; எலும்புக்கு நல்லது” என்பான் மற்றொருவன். கடைக் காரர்களுக்குக் கற்பனை வளர வளர, பீட்ரூட்டில் அலுமினிய மும், காலிஃபிளவரில் கொஞ்சம் தங்கமும் தட்டுப்பட ஆரம் பித்தன. பொதுவாக நாட்டுக் காய்கறிகள் மாற்றாந்தாய்ப் பராமரிப்புப் பெற்றாலும், அவற்றுள் வாழைக்காய் மட்டும் விதிவிலக்காய் இருந்தது. (வாழைக்காயில் வெள்ளி இருப்ப தாகச் சொல்லலாமா என்று செட்டியார், மருந்துக்கடை முதலாளியைக் கேட்டபோது, முதலாளி கந்தகம் இருப்பதாகச் சொன்னால் நன்றாக இருக்கும் என்றார்.) இதற்கு மக்கள் வாழைக்காய் வாங்குவதைத் தடுக்க முடியாது என்பது மட்டும் காரணமாக இருந்திருக்க முடியாது. நகரைச் சுற்றி வாழைத் தோட்டம் போட்டிருந்தவர்களுக்குச் செட்டியாரின் அட்வான்சு சென்றிருந்ததும் காரணமாக இருந்திருக்கலாம். ஒரு காலத்தில் வெளியூர் ராவுத்தர் ஒருவர் ஊருக்குச் சற்றுக் தொலைவிலிருந்து பெரிய பெரிய வாழைக்காய்களைத் தருவிக்க ஆரம்பித்தார். செட்டியாரின் வாழைக்காய் வியாபாரம் படுத்து விடும் போல் இருந்தது. செட்டியார் தன்னிடம் அட்வான்சு வாங்கியிருந்த வாழைச் சாகுபடியாளர்களிடத்துப் போய் விரசினார். கிணறுகளை ஆழப்படுத்தி, பம்பு செட்டு வைத்து தண்ணீர் இறைத்தால் பெரிய வாழைக்காய்கள் கிடைக்கும் என்றார்கள், அவர்களில் சிலர். அதுபோதும் செட்டியாருக்கு. சந்தையில் தனது பிரச்சார இயந்திரத்தை முடுக்கிவிட்டார். பெரிய வாழைக்காய்கள், பம்பு செட்டு வாழைக்காய் என்றும், சிறிய வாழைக்காய்கள் கமலை வாழைக்காய் என்றும், பம்பு செட்டு வாழைக்காயில் மின்சாரம் பாய்ந்து அதில் உள்ள சத்து எல்லாம் அழிந்துவிடுவதாகவும், கமலை வாழைக்காயில் தான் சத்தும் ருசியும் அதிகம் என்பது போன்றதொரு பேச்சும் சந்தையில் அடிபடத் தொடங்கியது. இதற்குள் ராவுத்தர் ஒரு விபத்தில் இறந்துபோனார். அவருக்குப் பின் தலையெடுத்த அவர் மகன் சையதுக்கு வாழைக்காய் வியாபாரம் ரசமான தாகப் படவில்லை. தகப்பனாருக்கு வரவேண்டிய பணத்தை ரூபாய்க்கு பாதி, முக்கால் என்று வசூலித்து, சினிமாப் படம் எடுக்கச் சென்னைக்குச் சென்றுவிட்டான். 

செட்டியாருக்கு இங்கிலீஷ் காய்கறிகளில் மட்டும் மோகம் இல்லை, பொதுவாக இங்கிலீஷ் பழக்கவழக்கங்கள் என்றாலே பிடிக்கும். அவற்றில் முக்கியமானவை இரண்டு: (1) சிகரெட் பிடித்தல் (2) விஸ்கி அல்லது பிராந்தி குடித்தல். பொதுவாக இங்கிலீஷ்காரர்களுக்கு பிராந்தியைவிட விஸ்கிதான் பிடிக்கும் என்று ஒருநாள் மருந்துக்கடைக்காரர் சொல்லவும் (அன்று கடையில் பிராந்தி ஸ்டாக் இல்லை) பிராந்தியைக் கூடிய மட்டிலும் தவிர்த்தார். அவருக்கு ஒரு இங்கிலீஷ்காரியை ‘லவ்’ பண்ண வேண்டும் என்ற ஆசையும் கூட. அவர் விருப்பத் துக்கு இடந்தரக்கூடிய இங்கிலீஷ்காரி யாரும் நகரில் இல்லாத தால், ரயில்வே காலனிக்கு அருகே குடியிருந்த ஐரீன் என்னும் ஆங்கிலோ இந்தியப் ‘பொம்பளை’ ஒருத்தியைத் தரகர் அந்தோணியின் உதவியோடு சேர்த்துக்கொண்டார். காலனி யில் இருந்த ஆங்கிலோ இந்திய இளைஞர்கள், கல்யாணத் துக்கு முன்னால் தங்களது ஆண்மையைச் சோதித்துக்கொள்ள அவள் பெரிதும் உதவி வந்தாள். உலகம் காலனியில் அடங்கி விடவில்லை என்பதை உணர்ந்த ஐரீன் தலைமுடியைப் ‘பாப்’ என்றும் சொல்ல முடியாதபடி, இல்லை நீண்ட முடி என்றும் சொல்ல முடியாதபடி, ஒருவகையாக வளர்த்துக்கொண்டிருந் தாள். வீட்டில் இருக்கும்போதுதான் ஆங்கிலோ – இந்தியக் கோலத்தில் இருப்பாள்; வெளியே செல்லும் போது, முடியைக் கொண்டை போட்டுக்கொண்டு, சேலையும் சோளியும் அணிந்து கொண்டு இந்தியக் கோலத்துக்கு மாறிவிடுவாள். மிகவும் பிரயாசைப்பட்டு நன்றாகத் தமிழ் பேசக் கற்றுக்கொண்டிருந்தாள். 

செட்டியார் ஐரீனுக்கு மாதம் வீட்டு வாடகைக்கு அறுபது ரூபாயும், சாப்பாடு உடை இவற்றுக்கு நூற்றிருபதும், ‘இன்டியன்’ ஜின் (சாராயம்) அலவன்சு நூறும், இது தவிர வருடம் ஒரு முறை, கிறிஸ்துமஸ், புத்தாண்டு, ஈஸ்டர் பரிசுகள் ரூபாய் நூற்றுக்குக் குறையாமல் தரவேண்டும் என்றும், இவற்றுக்குப் பிரதியாக, ஞாயிற்றுக்கிழமைகள் தவிர மற்ற நாட்களில், செட்டியார் இரவு எட்டு மணியிலிருந்து காலை எட்டு மணி வரை ஐரீன் வீட்டில் தங்கலாம் என்றும் ஏற்பாடாகியது. வேறு சில சில்லறை நிபந்தனைகளும் இருந்தன. செட்டியார் பகல் நேரங்களில் ஐரீனைத் தொந்தரவு செய்யக்கூடாது, ஐரீனுக்கு உடல் நலம் சரியில்லை என்றால் செட்டியார் வைத்தியச் செலவை ஏற்றுக்கொள்வதோடு அக்காலங்களில் தன் வீட்டிலேயே படுத்துறங்குவது, குறைந்தபட்சம் ஐந்து வருடங்களுக்காவது இரண்டு தரப்பாரும் உடன்படிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்பன போன்றவை அவை. வாய் மூலமான உடன்படிக்கைதான் என்றாலும் உடன்படிக்கை யின் ஷரத்துகளுக்கு மூன்று காபிகள் தயாரிக்கப்பட்டு ஒன்று செட்டியார் கையிலும், இரண்டாவது ஐரீன் கையிலும், மூன்றா வது அந்தோணி கையிலுமாக இருந்தன. வேறொரு சிறு நிபந்தனையும் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று செட்டி யார் அந்தோணியிடத்துச் சொல்லவும், “என்ன மேன், என்னை உங்க நாட்டுப் பொம்பளேங்க மாதிரி நெனச்சிட்டியா?” என்று எரிந்து விழுந்தாள் ஐரீன். ஐரீனோடு பழகுவதன் மூலம் இங்கிலீஷ் கற்றுக்கொண்டு தானும் ‘தஸ் புஸ்’னு பேசலாம் என்று எதிர்பார்த்த செட்டியார், உண்மையில் சில நண்பர் களிடத்துத் தான் ஒரு இங்கிலீஷ்காரியிடத்து ‘ஆங்கில டிவிஷன்’ வைத்திருப்பதாகக் கூறி வந்தார். ஆனால் ஐரீனோ, செட்டி யாரிடத்து இங்கிலீஷ் பேசினாலே இங்கிலீஷின் புனிதத் தன்மை கெட்டுவிடும் என்று நினைத்தவளாய், அவரைத் திட்டுவதற்கு மட்டும்தான் இங்கிலீஷைப் பயன்படுத்தினாள். அவள் ஆரம்பத்தில் செட்டியாரை அழைக்கப் பயன்படுத்திய சொல் ‘Bugger’ என்பது. கோபத்திலும் சந்தோஷத்திலும் அவரை அந்தச் சொல்லாலே அழைத்ததால், அது கெட்ட வார்த்தையா இல்லையா என்று செட்டியாருக்கு விளங்கவில்லை. ஒருநாள் இரவு செட்டியார் அவளை லேசாகக் கொஞ்சிவிட்டு, சீக்கிரமே வாயைப் பிளந்துகொண்டு தூங்க ஆரம்பிக்கவும், அவள் கோபத் தோடு அவரைக் கன்னத்தில் குத்தி எழுப்பி, அவரிடத்து, “என்ன மேன், எங்கே போய் ‘பக்கர்’ வேலைசெய்திட்டு வந்தே?” என்று கேட்கவும் செட்டியாருக்குச் சந்தேகம் வந்தது. அடுத்த நாள் கொஞ்சம் இங்கிலீஷ் தெரிந்த ஒருவனிடத்து அந்தச் சொல்லுக்குப் பொருள் கேட்டார். ‘பெக்கர் என்றால் பிச்சைக்காரன்’ என்று அவன் சொன்னான். செட்டியாருக்குக் கோபம் பொத்துக்கொண்டு வந்தது. ஐரீனோடு சண்டைக்குக் கிளம்பினார். “நான் உனக்கு என்ன பிச்சைக்காரனா?” என்று வெகுண்டு எழுந்தார். ஐரீன் சிரித்துவிட்டு ‘பெக்கர்’ வேறு ‘பக்கர்’ வேறு என்று விளக்கினாள். ‘பக்கர்’ என்றால் என்னவென்று செட்டியார் கேட்கவும், “சரியான ஆம்பிளேன்டு அர்த்தம்” என்றாள் ஐரீன். இருந்தாலும் செட்டியாருக்குச் சந்தேகம் தீரவில்லை. அடுத்தமுறை அவர் அவருடைய வக்கீல் வீட்டுக்குச் சென்றிருந்த போது, அந்தச் சொல்லுக்குப் பொருள் கேட்டதோடு, அது ஒரு வசைச் சொல்லாக இருந்தால் அந்தச் சொல்லை வைத்தே நோட்டீசில் எதிர்க்கட்சிக்காரரைத் திட்டலாம் என யோசனையும் கொடுத்தார். வக்கீல் சிரித்து விட்டு, அச்சொல்லின் பொருளைச் செட்டியாருக்குக் காதோடு காதாகக் கூறினார். வக்கீலின் விளக்கத்தைக் கேட்ட செட்டி யாருக்கு ‘பக்கர்’ என்பது ஒரு வசைச் சொல்லாகவே படவில்லை. உண்மையில் ஐரீன் அந்தச் சொல்லை விட்டுவிட்டு, அவரை ‘பாஸ்டர்டு’ என்று அழைக்க ஆரம்பித்தபோது, அவருக்குக் கொஞ்சம் ஏமாற்றமாகவே இருந்தது. 

ஐரீன் தன் வசைச் சொல்லை மாற்றிக்கொள்ளப் பொருத்த மான தூண்டுதல் இல்லாமலில்லை. செட்டியாரோடு ஒரு மாதம் பழகவும் அவருடைய சொத்து, சுகம், வருமானம் இவை பற்றிச் சரியான கணக்கு அவளுக்குத் தெரியவந்தது. தன்னை ஏமாற்றிவிட்ட அந்தோணியை ‘பக்கர்’ என்றும், செட்டியாரை ‘பாஸ்டர்டு’ என்றும் மாறி மாறித் திட்டினாள். ஒருநாள் அவள் செட்டியாரிடத்து, ‘மிஸ் ஐரீனுக்கு நரம்புக் கோளாறு ஏற்பட்டதால், அவளது உடல் நிலை மிகவும் மோசமாக உள்ளது; அவளுக்கு ஒரு மாத காலம் பூரண ஓய்வு தேவை’ என்று ஒரு ஓய்வு பெற்ற ரயில்வே டாக்டரிடமிருந்து பெற்ற சர்டிஃபிகேட்டைக் காட்டிவிட்டு, டாக்டர், அவள் ‘இன்டியன் ஜின்’ சாப்பிடக்கூடாது; விஸ்கி அல்லது பிராந்தி தான் சாப்பிட வேண்டும் என்றும், பன்றிக் கறியோ மாட்டுக் கறியோ சாப்பிடக் கூடாது என்றும், சுத்தமான ஆட்டுக்கறி யும் தினமும் இரண்டு வேளை கோழி சூப்பும் தவறாது சாப்பிட்டு வர வேண்டும் என்றும், நிறையக் கனிவகைகளும் பாலும் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் கூறியிருப்பதாகச் செட்டியாரிடத்துத் தெரிவித்தாள். செட்டியார் அவள் சொல் வதை நம்ப மறுக்கவும், அவள் டாக்டரை வீட்டுக்குத் தருவித்தாள். மிகவும் பழசாகிவிட்ட டாக்டர் உடையில் வந்த அந்தக் கிழம், ஐரீன் கூறியதை எல்லாம் ஊர்ஜிதப்படுத்தியதோடு, அவளது நரம்புக் கோளாறுக்கு அவளது ‘பாரமூர்’ காரண மாக இருக்கலாம் என்றும், பேஷன்ட்டு பிழைக்க வேண்டு மென்றால் அவளை ஒரு ஆரோக்கிய வாசஸ்தலத்தில் கொண்டு போய் வைக்க வேண்டும் என்றும், அவளுக்கு அந்த அழுக் கடைந்த ஆடைகளும் மெத்தையும் ஆகாதென்றும், எல்லா வற்றுக்கும் மேலாக அவளுக்கு மன நிம்மதி மிக மிக அவசியம் என்றும் சிபாரிசு செய்தார்.

செட்டியாருக்கு ஐரீனின் சூழ்ச்சி புரியாமலில்லை. அவளை ‘கட்’ பண்ணிவிடுவதென்று முடிவு செய்தார். இரண்டு நாட்கள் ஐரீன் வீட்டுப்பக்கம் தலை காட்டாது இருந்தார். ஆனால் மூன்றாம் நாள் காலையில் அவருக்கு முன்னதாகக் காய்கறிச் சந்தைக்கு வந்துவிட்டாள் ஐரீன். செட்டியார் வரவும், ‘யூ பாஸ்டர்டு,’ ‘பக்கர்’, ‘யூ ரேப் ஆப் யுவர் மதர்’, ‘யூ ஃபக்கிங் ரோக்’, ‘மங்க்கி பேஸ்டு ஸ்கவுன்ரல்’ போன்ற, அவர் இரண்டு நாட்களாகக் கேளாத சொற்களை, ஐரீன் அத்தனை பேர் முன்னிலையிலும் செட்டியார் மீது பொழிந்துவிட்டு, இடை யிடையே அவரைத் திட்டிக்கொண்டே, கூடியிருந்தவர் களிடத்து நியாயம் கேட்டாள். நாலு பேர் முன்னிலையில் ஒரு பெண்ணிடமிருந்து வசவு வாங்குவதே மானக்கேடு, – அதுவும் இங்கிலீஷ் வசவு வேறே! செட்டியார் அவளை அவசர அவசரமாக அருகே இருந்த மருந்துக் கடைக்குக் கூட்டிச் சென்று, கடை முதலாளியின் முன்னிலையில் சமரசம் பேச முயன்றார். ஐந்து வருஷக் கான்ட்டிராக்ட்டுப்படி ரூபாய் பதினைந்தாயிரம் செட்டியார் கொடுத்தால் ‘கட்’ பண்ணிவிட முடியும் என்றாள் ஐரீன். செட்டியார் மூவா யிரம் தரத்தயாராக இருந்தார். அடுத்த நாள் ஒரு பொது நபரை வைத்து விவகாரத்தை முடித்துக்கொள்வதென்று இருவரும் முடிவு செய்தனர். (அந்தோணி ஜெயிலில் இருந்த தால், அநேகமாக சமரசப் பேச்சு வார்த்தைகளில் தன்னால் கலந்துகொள்ள முடியாதென்று தனக்குச் செய்தி அனுப்பி இருப்பதாக ஐரீன் தெரிவித்தாள்.) கடையைவிட்டு வெளியே செல்லுமுன்னர், கடை முதலாளியைக் கேட்டு செட்டியார் கணக்கில் ஒரு பாட்டில் விஸ்கி வாங்கிக்கொண்டாள் ஐரீன். செட்டியார் எதிர்ப்புத் தெரிவித்தார். “அதெல்லாம் மெடிக்கல் எக்ஸ்பென்ஸ், யூ ப்ளடி ஃபூல்” என்று கூறிவிட்டாள் ஐரீன். 

சமரசம் செய்து வைக்கச் செட்டியார் பொறுக்கி எடுத்தவன் தான் கந்தன். காலையிலேயே ஆள்விட்டு அவனைச் சந்தைக் கடைக்குக் கூட்டி வரச் செய்தார். அவனை மருந்துக் கடைக்கு அழைத்துச் சென்று தகராறை விளக்கினார். அவனை உற்சாகப் படுத்த விஸ்கி வாங்கிக் கொடுத்தார். எப்படியும் மூவாயிரத் துக்குள் முடித்துக் கொடுப்பதாகக் கந்தன் சொன்னான். இருவரும் ஒரு டாக்சியில் ஐரீன் வீட்டுக்குச் சென்றனர். 

ஐரீன் தன்னை மட்டுமல்லாமல் அவர்கள் உட்கார்ந்து பேச வேண்டிய அறையையும் அமர்க்களப்படுத்தி வைத்திருந் தாள். கையில்லாத பளபளப்பான ஒரு கவுன் அணிந்து, முடியைப் ‘பாப்’ செய்த மாதிரி வைத்துக்கொண்டு, ரௌஜ்ஜும் லிப்ஸ்டிக்கும் தீட்டி, ஆங்கிலப் படங்களில் வரும் ‘ஃபேஷன் கேர்ல்’ மாதிரி காட்சியளித்தாள். டாக்சி வீட்டுக்கு வெளியே நிற்கவும், வீட்டுத் திண்ணைக்கு வந்து இருவரையும் நாணத் தோடு சிரித்தபடியே, கைகூப்பி வணக்கம் சொல்லி வரவேற்றாள். செட்டியாருக்கு ஒரு கணம் சபலம்தான். உம், இதெல்லாம் நடிப்பு என்று அடுத்த கணம் புத்தி வந்தது. மூவரும் உள்ளே சென்றனர். வந்தவர்களை உள்ளே உட்காரச் சொல்லிவிட்டு, “மிஸ்டர் செட்டியார், இவரை எனக்கு அறிமுகப்படுத்தவில் லையே?” என்றாள். “இவர் என் ஃபெரண்டு, கந்தன். பெரிய பிசினெஸ் மேன். கொஞ்சம் முரடர்” என்றார் செட்டியார். 

“அப்படியா? குட் டு சீ யூ. நான் ஐரீன்” என்றுகொண்டே ஐரீன் கந்தன் முன்னால் வலக்கையை நீட்டினாள். கந்தன் அவளது ‘லோ – கட்’ கவுனின் நடுப்பாகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான். அதைப் புரிந்து கொண்ட ஐரீன் சற்றுக் குனிந்து, தன் கையால் கந்தனின் கையைப் பிடித்துக் கை குலுக்குவதுபோல் வருடினாள். 

*உண்மையில் ஆம்பிளேன்னா கொஞ்சம் முரடாகத் தான் இருக்கணும். புவர் செட்டியாருக்கு முரடாகவே இருக்கத் தெரியாது” என்று சிரித்துக்கொண்டே கூறியபடி, ஐரீன் தன் நாற்காலிக்குச் சென்று அமர்ந்தாள். செட்டியார் முழித்தார். 

“ஸ்டெல்லா, ஸ்டெல்லா” என்று ஐரீன் அழைக்கவும், ஒரு பத்து வயதுச் சிறுமி வந்து நின்றாள். 

“டீ ஃபார் தி ஜெண்டில்மென் அண்டு விஸ்கி ஃபார் மீ” என்றாள் ஐரீன் சிறுமியிடத்து. 

பிறகு செட்டியாரிடத்துத் திரும்பி, “மிஸ்டர் செட்டியார், உங்க ஃப்ரென்டே எனக்கு ரொம்பவும் பிடிச்சிடும் போல இருக்கு; ஜென்டில்மேனுக்கு ஜென்டில்மேன், முரடருக்கு முரடர்னு இருப்பார் மாதிரி இருக்கு” என்றாள்.

வைத்த கண் வாங்காமல் அவளையே பார்த்துக்கொண்டிருந்தான் கந்தன். 

ஐரீன், கந்தன் பக்கம் திரும்பி, “மிஸ்டர் கந்தன், உங்களுக்குத் தான் தொந்தரவு. அன்னெசசரி ட்ரபுல். எனக்கு மிஸ்டர் செட்டியாரோடே ஃபிரெண்ட்லியா இருக்கனும்னுதான் ஆசை. ஆனால் மிஸ்டர் செட்டியாருக்கு என் உசிரே விட அவர் காசுதான் பெரிசு” என்று வருத்தம் அடைந்தவள் போல் சொன்னாள். உள்ளே போயிருந்த சிறுமி ஒரு தட்டில் இரண்டு கோப்பை டீ, ஒரு பாட்டில் விஸ்கி, ஒரு கிளாஸ், ஒரு சோடா கொண்டு வந்து, ‘டீப்பாயில்’ வைத்துவிட்டு, டீ கோப்பைகளை எடுத்துக் கந்தனுக்கும் செட்டியாருக்கும் கொடுத்தாள். 

“நான் டீ, காஃபி எதுவும் சாப்பிடக் கூடாது; விஸ்கிதான் சாப்பிடனும்னு டாக்டர் சொல்லியிருக்கிறார். எங்க ‘பிளட்டு’க்கு அதுதான் ஒத்துக்குது” என்று கந்தனைப் பார்த்துச் சொல்லிக் கொண்டே விஸ்கி பாட்டிலைத் திறந்தாள் ஐரீன். கந்தனுக்கு ஆத்திரம் தாங்கவில்லை. “எனக்கும் விஸ்கியே கொடுத்திடுங்க” என்று கூறிவிடலாமா என்று தோன்றியது. 

பிறகு விவகாரம் பேச ஆரம்பித்தனர். ஐரீன் ஒரு ஃபைலை எடுத்துப் புரட்டி, அதில் ஒரு குறிப்பிட்ட தாளிலிருந்து அவளும் செட்டியாரும் செய்துகொண்ட உடன்படிக்கையின்படி ஷரத்துகளை ஒவ்வொன்றாகப் படித்துக் காட்டினாள். ஒவ்வொரு ஷரத்தை வாசித்த பிறகும் செட்டியாரைப் பார்த்து, “சரிதானே, மிஸ்டர் செட்டியார்” என்று கேட்டுக்கொண்டாள். செட்டியா ருக்குத் தலையை ஆட்டுவதைத் தவிர வேறு வழியில்லை. ஷரத்துகளை வாசித்துக் காட்டிய பிறகு, ஐரீன் அதே ஃபைலிலிருந்த ஒரு மெடிக்கல் சர்டிஃபிகேட்டை எடுத்துக் காட்டினாள். அதன் கீழேயிருந்த கையெழுத்தை நன்கு கவனித்துக் கொள்ளும்படி கந்தனிடத்துக் கூறிவிட்டு, மற்றொரு கடிதத்தை எடுத்து வாசித்தாள். அது ஆங்கிலத்தில் இருந்தது. மொழி பெயர்ப்பையும் தந்துகொண்டே அதை வாசித்தாள். அதில் டாக்டர் அவருடைய பேஷன்ட்டான மிஸ் ஐரீன் உயிர் பிழைக்க வேண்டுமானால் என்னென்ன சிகிச்சைகள் செய்யப் பட வேண்டும், என்ன முன்னெச்சரிக்கைகள் பின்பற்றப்பட வேண்டும் என்றெல்லாம் குறிப்பிட்டிருந்தார். அந்தக் கடிதத்தின் அடியிலிருந்த கையெழுத்தும் மெடிக்கல் சர்ட்டிஃபிகேட்டின் அடியிலிருந்த கையெழுத்தும் ஒன்றுதானா என்று சரிபார்த்துக் கொள்ளுமாறு கந்தனை வேண்டிக்கொண்டு, அவன் அருகே சென்று, அவன் முன் குனிந்து ஃபைலை நீட்டினாள். கட்டுப் பாடற்ற நிலையில் இருந்த கந்தன் எங்கேயோ பார்த்தான். செட்டியார் வாயைத் திறக்கவில்லை. ரௌடி போல் ஐரீன் நடந்துகொள்வாள் என்று அவர் எதிர்பார்த்திருந்தார். அவளோ சாந்த ஸ்வரூபியாக விளங்கினாள். ஐரீனைக் கோபப்படுத்த வேண்டும் என்ற நோக்கோடு, “ஒரு முக்கியமான நிபந்தனையை நீங்க மறந்திட்டீங்க” என்று ஆரம்பித்தார் செட்டியார். 

‘ஆமாம் ஆமாம், மறந்துட்டேன் மிஸ்டர் செட்டியார். ஒப்பந்தத்தைத் தயாரிக்கும்போதே இன்னுமொரு நிபந்தனை யைச் சேர்த்துக்கனும்னீங்க. எனக்கு அப்போ அது அவசிய மென்ட்டு தெரியலே பிறகு ஒங்க நாட்டுப் பெண்களைப் பத்தி – கொஞ்சம் மன்னிக்கனும் – தெரிஞ்ச பெறகுதான், மிஸ்டர் செட்டியார் அப்படி ஒரு நிபந்தனையைப் போடுவது நியாயம்தான்னு புரிஞ்சிக்கிட்டேன்” என்றாள் ஐரீன். 

“அது என்ன நிபந்தனை” என்றான் கந்தன். 

“கொஞ்சம் சொல்ல வெட்கமா இருக்கு” என்றாள் ஐரீன், நாணிச் சிரித்தவாறு. 

“பரவாயில்லை சொல்லுங்க” என்றான் கந்தன். 

“அதாவது இந்த காண்ட்ராக்ட் காலத்திலே எனக்கு மிஸ்டர் செட்டியாரைத் தவிர வேறொரு ‘லவ்வர்’ இருக்கக் கூடாது. சரிதானே, மிஸ்டர் செட்டியார்.” 

“ஆனா, நீங்க…” 

“உம், முடியுங்க மிஸ்டர் செட்டியார்.” 

“நீங்க பகல் நேரத்துலே நான் உங்க வீட்டுக்கு வரக் கூடாதுனீங்களே.” 

“ஆமாம், அது ஒரு கன்டிஷன்தானே?” 

“ஆனா?’ 

“ஆனா? உம், சொல்லுங்க மிஸ்டர் செட்டியார், உங்க மனசில் இருக்கிறதெ சொல்லுங்க.” 

சிறிது நேரம் முழித்துவிட்டுச் செட்டியார், “பகல் நேரங் களில் நீங்க எனக்கு விசுவாசமா இருந்தீங்கன்னு என்னால் நம்ப முடியவில்லை” என்றார். ஐரீனின் கண்களில் நீர் துளிர்த்தது. “எங்க நாட்டுக்காரர் ஒருத்தர் ஒரு பெண்கிட்டே இப்படிப் பேசியிருந்தா, அது ஷுவைக் கழத்தி அவர்மேலே வீசியிருக்கும். ஆனா உங்க நாட்டு வழக்கம் வேறெ; எங்க நாட்டு வழக்கம் வேறெ. என்ன செய்யறது? ஆனா நான் தப்புப் பண்ணியிருந்ததா நீங்க ப்ரூஃப் காட்டினீங்கனா, எனக்கு நீங்க ஒண்ணும் தர வேண்டாம்; நான் உங்களுக்கு ஐயாயிரம் ருபிஸ் டாமேஜா தர்றேன். என்ன சரிதானா, மிஸ்டர் கந்தன்?” 

மூவரும் சிறிது நேரம் பேசவில்லை. பிறகு ஐரீன் பேசினாள். 

“எனக்கு மிஸ்டர் கந்தனை இப்பத்தான் தெரியும். நீங்க ரெண்டு பேரும் ரொம்ப நாளாப் பழகினவங்க. அவர் ஒரு பெரிய பிசினெஸ்மேன். அவர் ஒரு ஜென்ட்டில்மேனாகவும் எனக்குத் தெரியுது. நான் கான்ட்ராக்ட்டுப்படி பதினைந்தாயிரம் கேட்கிறேன். மிஸ்டர் செட்டியார் மூவாயிரம் தரத்தயாரா இருக்கார். மிஸ்டர் கந்தன், உங்களுக்கு நியாயமாப்படற அமௌன்ட்டே சொல்லுங்க. மிஸ்டர் கந்தன் சொல்றபடி நான் நடந்துக்கிறேன்.” 

“எனக்கும் சம்மதம்” என்றார் செட்டியார். இருவரும் கந்தனைப் பார்த்தனர். 

செட்டியார் ஐரீனுக்கு ஐயாயிரம் ரூபாய் தந்துவிட்டு, உடன்படிக்கையை ரத்து செய்துகொள்ள வேண்டியது என்று கந்தன் தீர்ப்பளித்தான். செட்டியார் மூவாயிரம் ரூபாய் கொண்டு வந்திருந்தார். அதை அவர் ஐரீன் கையில் கொடுத்துவிட்டு, மீதி இரண்டாயிரம் ரூபாய்க்கு பிராமிசரி நோட்டு ஒன்று எழுதிக் கொடுத்தார். தொடர்ந்து மூவரும் நண்பர்களாக இருக்கவேண்டும் என்பதற்காக ஐரீன், செட்டியாருக்கும் கந்தனுக்கும் விஸ்கி ஊற்றிக் கொடுத்தாள். 

– தொடரும்…

– நாளை மற்றுமொரு நாளே…(நாவல்), முதல் பதிப்பு: 1974.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *