கலாட்டா காதல்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 10, 2023
பார்வையிட்டோர்: 2,564 
 

பாண்டியன் எனக்கு போனில் சொன்ன விஷயம் கேட்டதும் மனசு சங்கடப்பட்டது சங்கரனுக்கு தொழில் நட்டம் ஏற்பட்டு விட்டது என்றான். இப்பொழுதுதான் தொழிலை தனியாக தொடங்கினான், அதற்குள் இப்படி ஒரு நட்டம் வரும் என்று யாரும் எதிர் பார்க்கவில்லை. என்ன செய்வது? எல்லாம் விதி என்று விட்டு விடவும் முடியவில்லை. அவனை பார்த்து நாலு வார்த்தை ஆறுதல் சொல்ல வேண்டுமென்று வீட்டுக்கு வந்தால்….!

வீட்டுக்குள் யாரும் என்னை ‘வா வென்று கூப்பிடவில்லை, அவன் அண்ணன்மார்கள் இருவர் வேண்டா வெறுப்பாய் “உள்ளேதான் இருக்கிறான்” சொல்லி விட்டு சென்று விட்டார்கள். எனக்கு அவர்களின் கோபம் புரிகிறது கூட்டு வியாபாரத்திலிருந்து பிரிந்து தனியாக தொழில் செய்ய போனான். எல்லாம் போச்சு. ஹாயாக வீட்டுக்கு வந்து படுத்துக்கொண்டான். அப்பா அம்மாவும் சண்டை போட்டு போனவனை “வாவென்று” அழைத்து தங்க வைத்திருக்கிறார்கள். இது கண்டிப்பாய் அவன் அண்ணன்மார்களுக்கு பிடிக்காமல் இருக்கும் மனதில் எண்ணமிட்டவாறு மாடியில் இருக்கும் சங்கரன் அறைக்கு சென்றேன்.

பயல் சோகமாய் இருப்பான் என்று உள்ளே நுழைந்தவனுக்கு ஆச்சர்யம், கட்டிலில் ஹாயாக உட்கார்ந்து கொண்டு டி.வியில் கிரிக்கெட் மேட்ச் பார்த்துக்கொண்டிருந்தான். என்னை பார்த்தவன் வாடா..வா..சொல்லிக்கொண்டே டி.வி வால்யூமை மட்டும் குறைத்தவன், அங்கிருந்த நாற்காலியை காட்டினான்.

அவனுக்கு ஆறுதல் எப்படி சொல்லலாம் என்று யோசித்து கொண்டு வந்தவனுக்கு இவனது செயல்கள் ஆச்சர்யமாக இருந்தது. என்ன பேசுவது என்று தெரியவில்லை. எங்கடா உங்க அப்பா அம்மா.? .டி.வியை இப்பொழுது அணைத்தவன் அவங்க சேலம் வரைக்கும் போயிருக்காங்க, அப்புறம் என்ன விசேஷம்? பேச்சை திருப்பினான்.

நான் நெளிந்தேன் என்ன பேசுவது? கீழே உன் அண்ணனுங்க இரண்டு பேரை பார்த்தேன், சுரத்தே இல்லாம இருக்கற மாதிரி இருக்கு, பேச்சை ஆரம்பிக்க வேண்டுமே என்ன செய்வது, நேரடியாக அவனோட பிசினஸ் நட்டம் பண்ணிட்டியான்னு கேட்கமுடியுமா?

ஏன் ஏதாவது உனக்கும் அவங்களுக்கு பிரச்சினையா?

என் கேள்வி எதை நோக்கி என்பதை அவன் புரிந்து கொள்ளவில்லை, எப்ப என் கூட முறைக்காம இருந்திருக்காங்க, இப்ப முறைக்கறதுக்கு, சரி அதை விடு இப்ப என்ன சாப்பிடறே? காபி இல்லை கூலா கொண்டு வர சொல்லட்டுமா.

வேண்டாம், இப்பத்தான் சாப்பிட்டுட்டு வந்தேன், சம்பிரதாயமாய் சொல்லி விட்டு, அப்புறம் உன் பிசினஸ் எல்லாம் எப்படி போயிட்டிருக்கு?

பெரிய லாபம் இல்லை, இருந்தாலும் அப்படியே போயிட்டிருக்கு, அவன் சொன்னதை கேட்டதும் எனக்கு ஆச்சர்யம், அப்ப பாண்டி என்னமோ சொன்னான், உனக்கு பிசினஸ் “லாசாயிடுச்சு” அப்படீன்னு இழுத்தேன்.

கண்களை விரித்து என்னை பார்த்தவன் சொல்லிட்டாங்களா? உன் கிட்டயேயும் சொல்லிட்டாங்களா? முகம் சற்று கருத்தது.

நான் எழுந்து அவன் கைகளை பற்றிக்கொண்டு டேய் ‘ப்ரண்ட்ஸுல’ என்னடா ஒளிவு மறைவு, சரி மனசை தளர விடாதே.. நான் சொல்ல அவன் ஏதோ உன் மாதிரி நண்பர்கள்னாலதான் எனக்கு ஆறுதலா இருக்கு..கண்கள் இலேசாக கலங்கின.

அப்புறம் உங்க மாமா ஏதாவது சொன்னாரா? சுமித்ரா உன் கிட்டே ஏதாவது பேசினாளா? என் குரலை மெதுவாக வைத்து கொண்டு கேட்டேன். அவன் மாமா குமாரலிங்கம் அவனுக்கு தன் பெண்ணை தர தயாராக இருக்கிறார். சுமித்ரா அவரது பெண். ஆனால் சங்கரனுக்கு இப்படி ஒரு சிக்கல், அண்ணன்மார் களிடமிருந்து தனியாக பிரிந்து இப்பொழுதுதான் பிசினசில் இறங்கினான். அதற்குள் இப்படி ஒரு அசம்பாவிதம்.

தெரியலை, அவர் என்கிட்டே பேசறதும் இல்லை. சுமித்ராவும் பேச விருப்பமில்லை அப்படீன்னுட்டா.

யாருக்குத்தான் இவன் செய்தது பிடித்தது. அப்பாவுடன் மூன்று மகன்களும் கூட்டாக பிசினஸ் செய்து கொண்டிருந்த பொழுது கடைக்குட்டியான இவன் திடீரென்று தனியா பிசினஸ் பண்ணப்போறேன் பணத்தை பிரிச்சு கொடுங்க அப்படீன்னு சண்டை போட்டு வாங்கிட்டு போனான். இப்ப எல்லாத்தையும் தொலைச்சுட்டு நிக்கறான். அவன் அண்ணனுங்க, ஆளை விட்டா போதும், இவன் சகவாசமே வேண்டாமென்று ஒதுங்கறாங்க, இதுல இவனுக்கு பொண்ணை குடுக்கலாமுன்னு நினைச்சுகிட்டிருக்கற மாமாவுக்கு மட்டும் இவன் கூட பேசற விருப்பமிருக்குமா?

கிட்டத்தட்ட நான்கு மாதங்கள் ஒடியிருந்தது, வீட்டு வாசலில் கார் ஒன்று நிற்க என் பையன் எட்டி பார்த்து “சங்கரன் அங்கிள்”வந்திருக்காங்க, சப்தமாய் சொல்லிக்கொண்டே வந்தான். வாசலுக்கு வந்த நான் ‘வாடா வாடா’ என்று வரவேற்றேன். காயத்ரி இல்லையா? கேட்டுக்கொண்டே இருக்க, வந்துட்டேன் வந்துட்டேன், என்ன சங்கரண்ணே ரொம்ப நாளாச்சு எங்க வீட்டுக்கு வந்து,

அதை ஏன் கேட்கறம்மா, ஒரே பிரச்சினைகள், பிரச்சினைகள், உன் வீட்டுக்காரனுக்கு தெரியுமே, சொன்னாரு சொன்னாரு ஆனா நான் நம்பலே, உனக்கு தொழில்ல நஷ்டமாயிடுச்சுன்னு. அவள் நமட்டு சிரிப்புடன் சொல்ல..

நான் அவளை முறைத்தேன், அவனே மனசு கஷ்டத்துல இருக்கான் இப்ப போய் அவனை கிண்டல் பண்ணிகிட்டிருக்கறே.

யாரு நானா.? காயத்ரி என்னை பரிகாசமாய் பார்த்தவள் எனக்கு நேத்தே பத்திரிக்கை வந்துடுச்சு, சச்சு ஆபிசுல முதல் பத்திரிக்கை எனக்குத்தான் கொடுத்தா. அவர் உங்க வீட்டுக்காரர்கிட்ட பத்திரிக்கை கொடுக்கும்போது இந்த ‘செய்தியை’ சொன்னா போதும்னா.

எனக்கு ஒன்றும் புரியாமல் “என்ன நடக்குது இங்கே” என்று விழித்தேன். சங்கரன் என் தோள் மீது கைகளை வைத்து சாரிடா..உன் கிட்டே உண்மையை சொன்னா நீ எங்கப்பாவுக்கு ரொம்ப வேண்டியவன், எங்க அண்ணன்களுக்கு உன் மேல ரொம்ப நம்பிக்கை, அதனாலதான் இப்படி ஒரு டிராமா போட வேண்டியதா போச்சு..

இப்பொழுதும் அவன் சொன்னது எனக்கு புரியவேயில்லை. சொல்லிடறேன் இரு என்றவன் எனக்கு பிசினஸ் நஷ்டம் அப்படீன்னு நானே கிளப்பி விட்ட புரளி, அது மட்டுமில்லை, வேணும்னுதான் பிசினஸ்ல இருந்து கழண்டுக்கறேன்னு வெளியே வந்தேன்.

எதுக்கு அப்படி பண்ணே? என் குரலில் குழப்பம்

எல்லாம் எங்க மாமாவுனாலதான், நானும் சச்சுவும் கல்யாணம் பண்ணிக்கணும்னு முடிவு பண்ணி அவங்க அப்பா அம்மா எல்லாம் ஒத்து கிட்டாங்க, திடீருன்னு எங்க மாமா எனக்கு சுமித்ராவை கட்டி வைக்கணும்னு ஒத்தை கால்ல நிக்க ஆரம்பிச்சுட்டாரு. நான் சுமித்ரா கிட்டயே உண்மைய சொன்னேன். அவதான் நீ பெரிய பிசினஸ்மேன்னு உன்னைய சுத்தறாரு, நீ உங்க குடும்ப பிசினசுல இருந்து பிரிஞ்சு, அதை தொலைச்சுட்டேன்னு தெரிஞ்சா அப்புறம் உன் பக்கம் கூட வரமாட்டாரு அப்படீன்னு சொன்னா..

அப்படீன்னா… விழித்து கொண்டிருந்த என்னை பார்த்து சிரித்தவன் இந்தா என் கல்யாண பத்திரிக்கை, எனக்கும் சச்சுவுக்கும், வர்ற ஏழாம்தேதி கல்யாணம்.

பாவம் சுமித்ரா..உனக்கு ஐடியா சொல்லி அவ வாழ்க்கையை கெடுத்துட்டாளே..

விழுந்து விழுந்து சிரித்த சங்கரன் அவளுக்கு இந்த ஐடியாவை சொல்லிக் கொடுத்தவன் அடுத்த மாசம் அவளை கல்யாணம் பண்ணிக்க போற சுதாகரன். என்னோட பெரியம்மா பையன்..

“என்னடா நடக்குது இங்கே” வடிவேலு பாணியில் விழித்துக்கொண்டு நின்றேன்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *