நாங்கள் மனிதர்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 21, 2021
பார்வையிட்டோர்: 4,356 
 
 

(1997ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

இருள் மங்கை உலகை அரவணைத்திருக்க, மின்மினிப் பூச்சிகள் மட்டும் சின்னச்சின்ன வெளிச்சப் பொட்டுக்களாய் ஆங்காங்கே பறந்து கொண்டிருந்தன. இருட்டை வெறித்தவளாய், சன்னல் கம்பிகளைப் பற்றியபடி கற்சிலை போல், ஆடாது அசையாது நின்றிருந்தாள் சுமனா.

அவளது கண்கள் கண்ணீரை மழையெனப் பொழிந்து கொண்டிருந்தன. ‘ஹு…ம்’ இதயமே பிளந்து கொண்டதைப் போல், பெருமூச்சொன்று அவளிடமிருந்து வெளிப்பட்டது. சின்னஞ்சிறுமியாய் அவள் உலாவித்திரிந்த அந்த வளவு, சரத், கௌரி, பாத்திமா, கேசவன் அனைவரோடும் மாம்பிஞ்சு பொறுக்கியெடுத்து, உப்புத்தூவி உண்ட அந்த மாமரத்தடி, ஊஞ்சலுக்குப் பதிலாய் விழுதுகளை ஊஞ்சலாக்கித் தந்த ஆலமரம்… எல்லாமே… எல்லாமே… இன்று அந்நியமாகிப் போனதாய் ஓருணர்வு அவளது இதயத்தை அழுத்தியது.

கொடித்துவக்கு ஆரச்சியின் செல்வ மகள் சுமனா. தன் தோழர்களுடன் தோட்டந் துரவுகளிலும், ஓடைக்கரைகளிலும் துள்ளித் திரிந்ததைத் திமரென இடைநிறுத்திக்கொண்டது ஏனென்று புரியாது, கேசவனும், சரத்தும் வியப்புற்றவர்களாய், கௌரியின் வீட்டுக்குச் சென்றனர். பெரியவர்கள் பேசிக்கொண்டதிலிருந்து கௌரியும் பாத்திமாவும் கிரகித்துக் கூறியதன் மூலம், சுமனா இனித் தங்களோடு விளையாட வரமாட்டாள் என்பது மட்டும் அவர்களுக்குத் தெளிவாகப் புரிந்தது.

முழு ஊரும் ஆரச்சியின் வீட்டுக்குப் போய் விருந்துண்ட அந்த நாளில், அந்தச் சிறுவர்கள் யன்னலுக்கூடாக எம்பியெம்பி பார்க்க, பாதி நாணமும் பாதி ஆவலுமாகப் புன்னகைத்தது சுமனாவுக்கு இன்றுபோல் நினைவிருக்கிறது.

நண்பர்கள் ஐவரில் பாத்திமாவுக்கு விரைவில் திருமணம் முடிந்து, அவள் பக்கத்து ஊருக்குப் போய்விட, யௌவன மென்னும் வசந்தத்தை நுகர்ந்த சுமனாவும் சரத்தும் காதலால் கட்டுண்டனர்.

காலம் யாருக்காகவும் காத்திருக்கவில்லை. வடக்கில் போர் உக்கிரமடைந்தபோது, தெற்கில் கொடித்துவக்கு ஆரச்சி போன்றோரின் நடத்தையும் மாறத் தொடங்கியது. அன்று படையினரில் கணிசமானோர் உயிரிழந்ததை வானொலிச் செய்தியைச் செவிமடுத்துக் கொண்டிருந்த ஆரச்சி அறிந்து, பெரும் விசனமுற்றிருந்த வேளையில், வாசலில் கேசவனும் கௌரியும் வந்து நிற்பதைக் கண்டு அவரது முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தன.

“உம்பலா மொக்கடத ஆவே?” (நீங்கள் ஏன் வந்தீர்கள்)

நாங்கள் மனிதர்கள்

“நிக்கங் சுமனவ பலண்ட ஆவா” (சும்மா, சுமனாவைப் பார்த்திவிட்டுப் போகாலாமென்று வந்தோம்.)

“உம்பலாகே எவுன் அப்பே கொல்லோ மரணவா. அப்பி கொஹொமத உம்பலவ மே வளவ்வட்ட எண்டதென்னே, பலயல்லா, ஆயே மெஹெட்ட எண்ட எப்பா” (உங்கள் ஆட்கள் எங்கள் பொடியன்களைக் கொல்கிறார்கள். நாங்களெப்படி உங்களை இந்த வளவுக்குள் வரவிடுவது? போங்கள்; இனி இங்கே வரவேண்டாம்.)

ஆரச்சியின் வார்த்தைகள் உள்ளத்தைப் புண்படுத்த, அவமானத்துடன் தலைகுனிந்து வெளியேற முயன்றபோது, தடுக்க முற்பட்ட சுமனாவின் கன்னத்தை, ஆரச்சியின் வலிய கரம் பதம்பார்த்தது.

பழைய நினைவுகளில் ஆழ்ந்திருந்த சுமனாவை சுவர்க்கடிகாரம் நினைவுக்கு கொண்டுவந்தது. மெல்ல யன்னலை இழுத்து மூடிவிட்டு, கட்டிலில் சாய்ந்தாள். எனினும், தூக்கம் வரமறுத்தது.

சுமனாவின் வலதுகரம், மெல்லத் தன் வயிற்றைத் தடவிப்பார்த்தது. ‘குபுக்’கென மீண்டும் கண்ணீர் மடைதிறந்த வெள்ளமெனப் பாய்ந்தது. தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்வதற்காய்க் கீழுதட்டைப் பற்களால் அழுத்தினாள். அதற்கு மேலும் தாளமாட்டாமல், தலையணையில் முகம் புதைத்து விசித்தாள். ‘ஓ! சரத், நீங்கள் இப்படிச் செய்து விட்டீர்களே! உங்கள் உயிரைக் குடித்த குண்டு, என்னையும், உங்கள் சிசுவையும் இப்படி நிர்க்கதியாக்கி விட்டதே!’

இராணுவத்தில் சரத் சேர்ந்தது சுமனாவுக்குச் சற்றும் பிடிக்கவில்லை . எனினும், சரத்கூறிய சமாதானங்கள் அவளைச் சற்றே அமைதிப்படுத்தின. நீண்ட நாட்களின் பின் விடுமுறைக்கு ஊர்திரும்பிய சரத், இரண்டே தினங்களில் மீண்டும் முகாமுக்குச் செல்லப்போவதை அறிந்து, சுமனா வேதனையில் சுருங்கிப் போனாள். வழமையாக அவர்கள் இருவரும் சந்தித்துப் பேசும், பூவரசமரத்தடியில் சரத்தின் மார்பில் முகம்புதைத்துத் தேம்பினாள் சுமனா.

அவளைத் தேற்றவென இதழ்களில் முத்தமிட்டபோது, அவர்களிருவருமே தம் வசம் இழந்தனர். சுமனாவின் தலைமயிரை அன்போடு கோதிய சரத், அடுத்த முறை தான் வந்தவுடன் அவளை மணந்து கொள்வதாக உறுதியளித்தான்.

சரத் கூறியபடி வரவே செய்தான். எனினும் நன்கு மூடி, ‘சீல்’ வைத்த பெட்டிக்குள் பிணமாகத்தான் அவனால் வரமுடிந்தது. அழுதழுது அரற்றியவாறு, பலதடவை மயங்கி விழுந்தாள் சுமனா.

மேற்கொண்டு என்ன செய்வது என்ற வினா பூதாகரமாக உருவெடுக்க, சுமனாவுக்குப் பைத்தியமே பிடித்து விடும் போலிருந்தது. எங்கோ, சேவல்கூவும் சத்தம் கேட்டதும் விருட்டென எழுந்து நின்றாள். அரவம் எழுப்பாமல், மெதுவாக நடந்துபோய், ஆழ்ந்து உறங்கும் அன்னையைப் பார்க்கிறாள். கண்ணீரோடு, அவரது இருபாதங்களையும் மானசீகமாய்ப் பற்றி வணங்கியவளாய் பின்புறக் கதவைத் திறந்து கொண்டு வேகமாக நடந்தாள். அந்தக் கருக்கிருட்டு நேரத்திலும் எத்தகைய அச்சமுமின்றி நடந்த சுமனாவின் கால்கள், பௌத்த கோவிலும், பிள்ளையார் கோவிலும் எதிரெதிரிலுள்ள சந்தில், சற்றே தயங்கி விட்டுத் தன் பயணத்தைத் தொடர்ந்தன.

ஊரின் எல்லையிலிருந்த ஆழமான கிணற்றுக்குள் குதிக்க முற்பட்ட சுமனாவை, இரு வலிய கரங்கள் நீண்டு தடுத்தன. கோபத்தோடு திரும்பிய சுமனா, கேசவனைக் கண்டதும், அவனது இரு கரங்களுக்குள்ளும் முகம் புதைத்துக் கதறினாள்.

“சுமனா, சரத்தின் பிரிவு எங்கள் எல்லோரை விடவும் உன்னை அதிகம் பாதித்திருக்குமென்பது உண்மையே! ஆனாலும், அதற்காக, கணவனையும் இழந்துவிட்ட வயதான உன் தாயைத் தவிக்க விட்டு, நீ இப்படி…?”

“கேசவன் என்னைச் சாகவிடுங்கள். திருமணமாகாத நிலையில், சரத்தின் வாரிசைப் பெற்று, நான் ஊருக்கு முன் எப்படித் தலைகாட்ட முடியும்? நடத்தை கெட்டவள் என்ற பெயரோடு வாழ்வதா? அந்த அவமானத்தை விட… ஐயோ! சரத்! நீங்கள் என்னை இப்படி நிர்க்கதியாகப் போட்டுவிட்டு போய்விட்டீர்களே!”

“சுமனா உன் வயிற்றில் வளரும் சிசுவுக்காகப் பயந்து நீ சாகத் தேவையில்லை. நான்… நான்… இருக்கிறேன். உனக்காகநான் இருக்கிறேன் சுமனா!”

“கேசவன், நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? நீங்கள் தமிழர், நான் சிங்களப் பெண், சமூகம் இதை ஏற்குமா?”

“சமூகமென்ன சமூகம்! காலங்காலமாக இனத்தின் பெயராலும், மதத்தின் பெயராலும் ஒருவரை ஒருவர் கடித்துக் குதறிக் கொண்டு… சீச்சீ! நாங்கள் மனிதர்கள் சுமனா; மிருகங்களல்ல!”

“கேசவன்!” என்று ஆனந்தக் கதறலோடு அவனது மார்பில் முகம் புதைத்தாள் சுமனா. அவர்களுக்கு இப்பொழுது மொழியெதுவும் தேவைப்படவில்லை.

– தினமுரசு, ஜுன் 11, 1997, எருமை மாடும் துளசிச் செடியும் (சிறுகதைத் தொகுப்பு), முதற் பதிப்பு: மார்ச் 2003, தமிழ் மன்றம், கண்டி.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *