கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 21, 2021
பார்வையிட்டோர்: 5,112 
 

(1947ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

என் இருபது வருஷ உத்தியோக காலத்தில் நான் மனதாரச் செய்த அந்தத் தவறு ஒன்றுதான். அது சட்டத்துக்கு விரோதமான காரியமாக இருந்த போதிலும் அதை நான் என் மனச்சாக்ஷியின் ஆதரவுடன் தான் செய்தேன். அது ஒரு சாதாரணக் கடிதம்தான். ஆனாலும், அதிலுள்ள விஷயம் ஒரு குடும்பத்தையே நிலை குலையச் செய்யக்கூடியது. ஆகையால், அதை அந்த வீட்டில் கொண்டுபோய்ச் சேர்க்க எனக்குத் தைரியமில்லை. அதைக் கிழித்துத் தூள் தூளாகப் பறக்க விட்டு விட்டு மனதைச் சமாதானப் படுத்திக் கொண்டு நடந்ததேன்.

அக்கிரகாரத்துக்குள் நுழைந்ததும் நான் யாரைப் பார்க்கக்கூடாது என்று நினைத்துக் கொண்டு போனேனே. அந்த நபரை தான் முதலில் பார்க்க நேர்ந்தது . அவள் தான் அலமு. அவள் என்னைக் கண்டதும், “நாயுடு! காகிதம் இருக்கிறதா?” என் கேட்டுக் கொண்டே திண்ணைக்கு வந்தாள். பிறந்தது முதல் அவளை எனக்குத் தெரியும். அவள் குழந்தையாக இருந்தபோது நான் எத்தனையோ நாள் அவளை தூக்குச் சுமந்திருக்கிறேன்.

kalki1947-01-05_0025-picஅலமு கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லாமல் நான் காகிதக் கட்டைப் பார்ப்பதுபோல் சிறிது நேரம் பாசாங்கு பண்ணினேன். “அவரிடமிருந்து கடிதத்தையே காணேம்!” என்று அவள் மெதுவாகச் சொல்லிக் கொண்டாள். “காகிதம் நாளைக்கு வரும், அம்மா!” என்று சொல்லிக் கொண்டே நகர்ந்தேன்.

அவள் எதிர்பார்க்கும் கடிதம் தான் இனி மேல் அவளுக்கு வரப்போவதே இல்லையே! “பேதைப் பெண்ணே! உன்னுடைய ‘அவர்’ இனிமேல் எழுதமாட்டார்!” என்றது என் மனம்.

“போஸ்ட்மேன்! நீர் காகிதம் கொடுக்காமற் போனாலும், கொஞ்சம் கடலைச் சண்டல் வாங்கிக் கொண்டாவது போம்!” என்ற சொல்லிவிட்டு அவள் உள்ளே சென்றாள்.

அப்போதுதான் அன்று நவராத்திரி ஆரம்பம் என்பது என் ஞாபகத்துக்கு வந்தது.

சில வினாடிகளில் கனமான காகிதப் பொட்டணத்தைக் கொண்டு வந்து அவள் என்னிடம் கொடுத்தாள். நான் அதைப் பெற்றுக்கொண்டு, “வருகிறேன் அம்மா!” என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டேன்.

அந்தப் பெண்ணை அன்று மாலை கண்டது முதல் என் மனதைப் பெரிய பாரம் அழுத்தியது. உடனே என்னுடைய மனக் குரங்கு பின் நோக்கிப் பாய்ந்தது.

அந்தச் சம்பவம் நடந்து சமார் பதினைந்து வருஷங்களாக இருக்கும். அப்போது அலமுவுக்கு ஐந்து வயது. நவராத்திரி சமயம். ஒரு நாள் மாலையில் தபால் கொடுத்துக் கொண்டு வரும் போது கிராமத்துக்கு வெளியிலிருந்த ஒரு மரத்தடியில் அலமு அழுதவண்ணம் நின்று கொண்டிருந்தாள். “சின்னம்மா! என்ன சமாசாரம்?” என்று கேட்டேன்.

என்னைப் பார்த்ததும் அவள் அழுகையும் விசும்பலும் அதிகமாயின. சிரமப்பட்டுச் சமாதானப் படுத்திக் கேட்டதில், வலது காது ‘டோலக்’ எங்கேயோ விழுந்து போய் விட்டதாகவும் வீட்டுக்குப் போனால் அப்பா அடிப்பாரென்றும் சொல்லி மறுபடியும் தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தாள்.

“அப்பாகிட்டே சொல்லி உன்னைக் கோவிச்சக்காமே பாத்துக்கிறேன், வா!” என்ற அவளைத் தூக்கிக்கொண்டு அவன் தகப்பனார் ராமய்யரிடம் கொண்டு போய் வீட்டு, “சாமி! கோவிச்சுக்காதீங்க, ஒரு விடியம் ……!” என்றேன். அவர் ஒன்றும் புரியாமல் விழித்தார். “குழந்தையைக் கோபித்துக் கொள்ளவில்லை என்று சொன்னால் தான் நான் சொல்லுவேன்! அது ஒரு சாமானைக் காணமல் போக்கி விட்டது!” என்றேன் மறுபடியும்.

அவர் முகத்தில் கோபக்குறி தோன்றியது. இருந்தாலும் சமாளித்துக் கொண்டு, “என்னத்தைத் தொலைத்து விட்டாள்? சீக்கிரம் சொல்லும்!” என்ற அவசரப்பட்டுக் கேட்டார்.

அப்போது அலமு என் கையைப் பிடித்துக்கொண்டு தகப்பனார் முகத்தைப் பார்க்காமல் நின்றுகொண்டிருந்தாள். “ஒரு டோலக்கைக் குழந்தை தொலைச்சு விட்டது. உங்களுக்குப் பயந்து அழுதுக்கிட்டே இருந்தது. நீங்க ஒன்னும் சொல்லக் கூடாது!” என்றேன்.

சாமய்யர் வந்த கோபத்தை அடக்கிக்கொண்டு, “நல்ல பொண்ணு! தலைகால் தெரியாமல் குதிப்பானேன்?” என்று அங்கலாய்த்துக் கொண்டார்.

அலமு நன்றியறிதலுடன் என்னே ஒரு பார்வை பார்த்து விட்டு உள்ளே போய்விட்டாள்.

***

ராமய்யர் அந்தப் பள்ளிக்கூடத்தில் ஓர் உபாத்தியாயர். அவர் எந்த இடத்துக்கும் மாறுவதில்லை. நானும் மேலதிகாரிகள் தயவால் அந்த ஊரிலிருந்து மாறுதல் இல்லாமல் ஏற்பாடு செய்து கொண்டேன்.

நான்கு வருஷங்ளுக்கு முன் அலமுவுக்கு விவாகத்தை நடத்தினார் ராமய்யர். மாப்பிள்ளை ராமூர்த்திக்குப் பத்து வர்க்கங்கள் ஒருவருமில்லை. அந்த ஊர்ப் பள்ளிக்கூடத்துக்கு உபாத்தியாயராக வந்து சேர்ந்திருந்தான். அவனைத் தாஜா செய்து மாப்பிள்ளையாக்கிக் கொண்டார் ராமய்யர். அலமுவுக்கு இந்தக் கல்யாணத்தில் அபரிமிதமான சந்தோஷம். ராமமூர்த்தியின் அழகுதான் அதற்குக் காரணம். நான் அந்தச் சமயம் லீவிலிருந்த தால், ராமய்யருக்குக் கல்யாண விடியமாய் அதிக உதவி செய்ய முடிந்தது. கல்யாணச் செலவிற்குக்கூட ராமய்யர் என்னிடம் தான் சொற்பத் தொகை கடனாக வாங்கிக் கொண்டார்.

kalki1947-01-05_0026-picசிறிது நாட்களுக்குள்ளாகவே ராமமூர்த்தி தனிக் குடித்தனம் வைத்துக் கொண்டான். அலமுவின் குடும்ப வாழ்க்கை இனிமையாக ஓடிக்கொண்டிருந்தது.

சில நாட்கள் கழித்து ஒரு நாள் ராமய்யரை நான் தனியாகச் சந்திக்க நேர்ந்தது. கவலை தோய்ந்த முகத்துடன் காணப்பட்டார் அவர். விஷயத்தை விசாரித்தேன், “மாப்பிள்ளை ராணுவத்தில் சேரப் போகிறேன் என்று பிடிவாதம் பிடிக்கிறான், நான் எவ்வளவோ சொல்லியும் கேட்கமாட்டேன் என்கிறான். குழந்தை மிகவும் கவலைப் படுகிறாள்!” என்றார்.

ராமமூர்த்தி ரொம்பவும் பிடிவாதக்காரன் என்று எனக்குத் தெரியும். இம்மாதிரி விஷயங்களில் நாம் யோசனை சொல்லத் தகுதியில்லை என்று நினைத்துக் கொண்டு பேசாமல் போய்விட்டேன்.

ஒரு மாதத்துக்கும் ராமமூர்த்தி ராணுவத்தில் போய்ச் சேர்ந்து விட்டான். தனக்கு நூறு ரூபாய் சம்பளமென்றும், அதில் ஐம்பது ரூபாயை மாதா மாதம் அலமுவக்குக் குடும்பப் பணமாக அனுப்ப எற்பாடு செய்திருப்பதாகவும், தான் சந்தோஷமாகவே இருப்பதாகவும் அவன் அலமுவுக்குக் கடிதம் எழுதியிருந்தான். அவன் எழுதின முதல் கடிதத்தை நான் தான் அப்போது அலமுவின் கையில் கொடுத்தேன். அவள் முகம் சந்தோஷத்தைக் காண்பித்த போதிலும் அதில் பூரணப் பொலிவு இல்லை.

வருஷங்கள் பல ஓடி மறைந்தன. ஒழுங்காக மணியார்டரும் கடிதங்களும் வந்து கொண்டிருந்தன. ஏழை ராமய்யருக்கு ராமமூர்த்தியின் பணம் மிகவும் ஒத்தாசையாக இருந்தது.

வாழ்க்கைப் பாதை இன்பச் சோலை வழியாக மாத்திரம் போவதில்லை. பொட்டல் தரையிலும் வெட்ட வெளியிலும் போகத் தான் போகிறது. இன்பச் சோலை வழியாகப் போய்க் கொண்டிருந்த அலமுவின் வாழ்க்கைப் பாதை அன்று முதல் எல்லையில்லாத பாலைவனத்தினுடே போக ஆரம்பித்தது. அவள் இன்ப வாழ்க்கையின் முடிவைத்தான் அன்று மாலை நான் கிழித்து எறிந்த கடிதம் அறிவித்தது. ஆங்காங்கு அச்சிடப்பட்டு இடை இடையே கையெழுத்தினால் பூர்த்தி செய்யப்பட்ட அந்தக் கடிதத்தை நான் அகஸ்மாத்தாக வாசித்த போது என் மயிர் சிலிர்த்தது. “ரங்கூனில் ராணுவ முகாமில் யுத்த சேவை செய்துகொண்டிருந்த ராமமூர்த்தி திடீரென்று காலமானான்!” என்ற சமாசாரத்தைத்தான் அந்த உணர்ச்சியற்ற கடிதம் தாங்கியிருந்தது. அந்தக் கடிதத்தை ராமய்யரிடம் கொண்டு சேர்க்க எனக்குத் தைரியமில்லை!

***

அன்று இரவு தபாலாபீசில் காவலாகப் படுத்துக் கொள்வது என் முறை. தூக்கமே வரவில்லை எனக்கு. அலமுயின் கதியைப் பற்றி நினைத்து நினைத்தி என் மனம் புழுங்கிக் கொண்டே இருந்தது.

பாதி ராத்திரி இருக்கும். போஸ்ட் மாஸ்டர் அவசரம் அவசரமாக என்னை எழுப்பினார். “நாயுடு! ஓர் அவசரத்தந்தி இருக்கிறது. போய் உடனே பட்டுவாடா செய்து விட்டு வாரும்!” என்றார்.

எனக்குத் தூக்க மயக்கம். “தந்தி யாருக்கு சாமி?” என்றேன்.

“வாத்தியார் ராமய்யருக்கு! அவர் மருமகன் ஐந்து நாளைக்கு முன்னால் தவறிப் போனதற்கு இப்போதுதான் தந்தி வந்திருக்கிறது! கடிதம் எழுதியிருந்தால்கூட இதற்கு முன்னால் வந்திருக்கும்!” என்றார்.

அவருக்கு அன்று மாலை வந்த கடித விஷயம் தெரியாது, தெரிந்திருந்தால் நான் அதைக் கிழித்து எறிந்திருக்க முடியுமா?

“கடிதத்தைக் கிழித்தாயே, இப்போது தந்தியைக் கிழிக்க முடியுமா?” என்று கேட்டது என் மனம். இந்தத் துரதிர்ஷ்டச் சம்பவத்தை அறிவிக்கும் தூதனாக விதி என்னைப் பொறுக்கி எடுத்திருக்கும்போது அதற்கு விரோதமாக நான் என்ன செய்ய முடியும்? இல்லை யென்றால் ஐந்து நாட்களுக்கு முன் கொடுக்கப்பட்ட தந்தி இன்து ராத்திரியில் தானா வரவேண்டும்? எனக்குச் சரியான தண்டனைதான், வேறு வழியின்றி தந்தியை எடுத்துக் கொண்டு ராமய்யா வீட்டுக்கு ஒடினேன். ‘தந்தி’ என்ற வார்த்தையைக் கேட்டதுமே கை கால்கள் நடுங்க அவர் எழுந்து வந்தார். கையெழுத்தை வாங்கிக்கொண்டு தந்தியை அவர் கையில் திணித்தேன். ஒரே ஓட்டத்தில் ஆபீசுக்குத் திரும்பு வந்து விட்டேன், அவர் முகத்தைப் பார்க்கவே எனக்குத் தைரியமில்ல!

மறுநாள் ‘டாக்டர் சர்டிபிகேட்’டின் மூலம் ஒரு மாத ரஜாவில் சென்றேன். பிறகு அந்த ஊருக்கு வராமலேயே வேறு ஊருக்கு மாற்றிக் கொண்டேன். ராமய்யரையாவது அலமுவையாவது அப்பறம் நான் பார்க்கவேயில்லை. இப்போது ஒரு விஷயத்தைப் புதிதாக நான் கற்றுக் கொண்டேன். அதாவது, பிறர் கடிதத்தை வாசித்துப் பார்த்து நான் பச்சாத்தாபப் படுவதில்லை. நான் அலமு விஷயத்தில் பச்சாத்தாபப் பட்டதின் பயனாகத்தான் தந்தியைக் கொண்டுபோய்க் கொடுக்கும் தண்டனை எனக்குக் கிடைத்ததே! கண்ணன் காட்டிய வழி போல், காரியத்தைச் செய்ய வேண்டியது நாம்; முடிவைப் பற்றி நாம் ஏன் கவலைப்பட வேண்டும்?

– 05-01-1947

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *