துன்பம் சிலருக்கு மட்டும்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 22, 2022
பார்வையிட்டோர்: 2,189 
 

காட்டில் வளரும் மரங்களில் காய்க்கும் மரம்,காய்க்காத மரம் இருப்பது போல, வீட்டில் வாழும் மனிதர்களிலும் உழைத்து, காய்க்கும் மரம்போல் வாழ்பவர்களும்,உழைக்காமல், காய்க்காத மரம்போல் இருப்பதை அழித்து வாழ்பவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர்.

காய்க்கும் மரங்களான மா மரம் வெயிலுக்கு வாடி நின்ற வேளையிலும் எதற்குமே உதவாத, மண்ணின் வளத்தையே கெடுக்கும் சீமைக்கருவேல மரம், வெயில் காலத்திலும் வாடாமல் காற்றிலிருக்கும் ஈரப்பதத்தை ஈர்த்து வாடாமல் வாழ்ந்து விடும்.

நல்லவர்கள் வரவு இல்லாத நேரத்தில் சிக்கனமாக செலவு செய்து இருக்கும் சொத்துக்களைக்காப்பாற்றினாலும்,கெட்ட குணம் கொண்டவர்கள் சொத்துக்களை விற்றாவது ஆடம்பரமாக செலவழித்து, சுயநலமாக வாழ்ந்து விட்டு சந்ததிகளை துன்பத்தில் விட்டுச்சென்று விடுகின்றனர்.

குப்புசாமி காய்க்கும் மா மர குணம் கொண்ட மனிதர். கிராமத்து காட்டில் இரண்டு ஏக்கர் பூமி. அதில் சிறியதாக ஓடு வேய்ந்த வீடு. வாசலில் கயிற்றுக்கட்டிலில் உறக்கம். காலையில் பழைய சோறு,மதியம் சோளக்களி கீரை கடைந்த பருப்பு,இரவு ராகி ரொட்டி,சில நாட்களுக்கு ரேசன் அரிசியால் செய்த இட்லி,தோசை,நிலக்கடலை சட்னி,பொங்கலுக்கு மட்டும் புது துணி,லட்டு,முறுக்கு,பொன்னி அரிசி சோறு என உணவுத்தேவைகளுடன் அன்றாடத்தேவைகளை ஆடு,மாடு மேய்ப்பதால் கிடைக்கும் பணத்தில் சிக்கனமாக செலவு செய்யும் நிலை.

வானம் பார்த்த காட்டு பூமியில் விதைப்பது விதை சோளம் போக,அதிலிருந்து கிடைக்கும் தட்டு மாடுகளுக்கே தீவனத்துக்காக தேவைப்படுவதால் அதில் வருமானம் இல்லை. உறவுகளில் முய்,முறை,மருத்துவ செலவுகள் என அரைப்பவுனும்,காப்பவுனும் சேர்த்து மகள் திருமணத்துக்காக பின் நகையாக்கும் வறுமை. மகள்,மகன் படிப்புக்கு அரசு பள்ளியின் உதவி. சொத்து இருந்தும் நியாய விலைக்கடைக்கு மாதந்தவறாமல் செல்வதும்,அரசு மருத்துவமனையில் நோயிற்க்கான மாத்திரைகள் வாங்குவதுமான நிலையில் காலம் கடந்தது.

“அந்தக்காலத்துல எங்க தாத்தா நெறைய சொத்து வச்சிருந்தார். இருந்த சொத்த பராமறிக்க,

வெளையவைக்க கூலி வேலைக்கு ஆளுக வருவாங்க. வெளைச்சல்ல வர்ற வருமானத்துல பாதி கூலிக்கே போனாலும், மீதி பணத்துல தாத்தா குடும்பம் ராஜ வாழ்க்கை வாழ முடியுங்கிறதால, ஒரே வீட்டுல பொறந்த நாலு பொம்பள புள்ளைகளையும் அவங்க சம்மதத்தோடயே கல்யாணம் பண்ணி, ஒருத்திக்கு பத்துக்கொழந்தைகன்னு மொத்தம் நாற்பது கொழந்தைகளை பெத்துப்போட்டவர், ‘ஒன்னி வேலைக்கு கூலிக்கு ஆள் தேவையில்லைனு சந்தோசப்பட்டேன்’ னு பொழுதினிக்கும் அந்திம காலத்துல தாத்தாவே எம்படகிட்ட சொல்லுவார்” என தன் குழந்தைகளிடம் கூறுவார் குப்புசாமி.

அப்போதெல்லாம் கிராமங்களில் அதிக பெண்களைத்திருமணம் செய்வதும், அதிகமான குழந்தைகளைப்பெறுவதும் வீடு,தோட்டத்து வேலைக்காக என்பதாக இருந்ததே தவிர,அவர்களுக்கு சகல உரிமைகளையும் வழங்கி,படிக்க வைத்து வாழ வெளியில் அனுப்பி வைக்கும் பொது நலம் சிலரைத்தவிர பலருக்கு இல்லை.

விசேசங்களுக்கு கூட செல்லாமல்,கோவில் சுற்றுலா,உறவினர் வீடுகள் என எங்குமே அழைத்துச்செல்லப்படாமல் ஆடு,மாடு மேய்ப்பது,பூமியை பராமரிப்பது என தந்தையே தன் சுயநலத்துக்காக குழந்தைகளை ஏதுமறியாத கொத்தடிமைகளாக வைத்திருந்த நிலையும் கிராமத்தில் இருக்கத்தான் செய்தது.

ஒரு மனைவி சமைக்கவும்,ஒரு மனைவி ஆட்களிடம் வேலை வாங்கவும்,ஒரு மனைவி ஊர் உறவு விசேசங்களுக்கு சென்று வரவும்,கூடுதலான அழகுடன் மனதுக்கு பிடித்த மனைவி தனி வீட்டில் வெயில் படாமல் வேலையாட்கள் பராமரிப்பில், அரசருக்கு அந்தப்புரத்து ராணி போலவும் இருக்க,அந்த மனைவியை தனது சவாரி வண்டியில் அழைத்துக்கொண்டு ஜோடியாக சுற்றி, சுகபோகங்களை அனுபவித்து வாழ்ந்ததாக தாத்தா கூறுவதைக்கேட்க பொறாமையாகவும், அதேசமயம் பெற்ற குழந்தைகளையே சுய லாபத்துக்காக அடிமைப்படுத்தியதால் தாத்தா மேல் கோபமும் வரத்தான் செய்யும் குப்புசாமிக்கு.

ஒருவரின் சுயநலப்போக்கால் பாதிக்கப்படுபவர்கள் எதிர்க்கும் வரை, அல்லது நிராகரித்துச்செல்லும் வரை தவறு தவறாக வெளியில் தெரிவதில்லை என நினைப்பார்.

அடிமைகளாக வைத்திருந்த குழந்தைகளுக்கு தமது அந்திம காலத்தில் சொத்துக்களை சரிசமமாக பிரித்துக்கொடுத்ததில், தன் தந்தைக்கு இரண்டு ஏக்கர் மட்டும் அதுவும் காட்டு பூமியாக கிடைக்க, சிறப்பாக வாழ்ந்த குடும்ப வாரிசு இன்று வறுமையின் பிடியில்.

நல்ல வேளை தன் தந்தைக்கு தான் ஒரே குழந்தையென்பதாலும், தந்தை சொத்து பிரிக்க நேராது என்பதாலும், இந்த வாழ்க்கையை விட கீழ்நிலைக்கு போக வாய்ப்பில்லை என நினைப்பார்.

ஒரே மகன் என்ற போதிலும் தாத்தாவின் குணம் தந்தைக்கும் சிறிது இருந்ததால் நான்காம் வகுப்போடு பள்ளிசெல்வதை நிறுத்தி விட்டு காட்டு வேலைக்கும்,ஆடு மாடு மேய்க்கவும் படிப்பை நிறுத்துமளவுக்கு தனக்கு உடல் நிலை பாதிப்பு நாடகம் போட்டு, தன் மனதை மாற்றி விட்டதை இன்று நினைத்தாலும் அவர் மீது வெறுப்பு ஏற்படும் மனநிலை தனக்குள் ஏற்படுவதை உணர முடிந்தது.

தனக்கு ஒரு மகள்,ஒரு மகன் என்பதால் மகளுக்கு நகை போட்டு திருமணம் முடித்து விட்டு,மகனுக்கு பூமியை எழுதி வைத்து விட வேண்டுமென கருதியிருந்தார். மகள் படித்த உயர்கல்வியை, மகன் படிக்காமல் பாதியில் விட்டது மிகுந்த வருத்தத்தைக்கொடுத்தது.

படிக்கும் ஆர்வமிருந்தும் படிப்பதை தடுத்த தன் தாத்தா,தந்தைக்கு மத்தியில் தன் மகனை படிக்க வைக்க தன்னாலான அனைத்து முயற்ச்சிகளை மேற்கொண்டும்,விடுதியில் சேர்த்தும் படிக்காமலும்,காட்டு வேலையும் செய்யாமலும் இருக்கும் மகனை எண்ணி வருந்தினார் குப்புசாமி. யாராவது மகனை தூற்றிப்பேசினால் அவர்களுடன் பேசுவதையே விட்டுவிடுமளவுக்கு மகன் மேல் மகளை விட அதிக நம்பிக்கையையும்,பாசத்தையும் வைத்திருந்தார் குப்புசாமி.

மகள் படித்ததாலும், பார்க்க லட்சணமாக இருந்ததாலும் வசதியான இடத்திலிருந்து வரதட்சணை எதுவும் கேட்காமல் வரன் அமைந்ததில் சற்று ஆறுதலாக இருந்தது.

மருமகன் நல்லவர் என்று ஊரே சொன்னதாலும்,அதை நம்பி பெண்ணைத்திருமணம் செய்து கொடுத்து இரண்டு குழந்தைகள் பிறந்து அவர்களது உழைப்பில் அவர்கள் வாழ்ந்தாலும், பொங்கலுக்கு வந்த மருமகனுடைய பேச்சால், அவரையே மாமனார் குப்புசாமிக்கு பிடிக்காமல் போனது.

தன் ஒரே மகனை குடிகாரன் என பேசியதுதான். ‘ஊரில் தப்பு பண்ணறவங்க இல்லியா? வரதட்சணை வேண்டாம்னு சொன்னவரு, தன் மகன் பேரைக்கெடுக்கிறதால அவனுக்கு பொண்ணு அமையாமப்போனா, இருக்கிற ரெண்டு ஏக்கரா சொத்தையும் இப்படி குறுக்கு வழில அபரிக்க நெனைச்சுட்டாரோ?’ என்ற சந்தேகம் வந்து விட்டது. ‘சீக்கிரம் மகனுக்கு கல்யாணம் நடத்தி விட வேண்டும்’ என மனைவியிடம் அடிக்கடி கூறுவார் குப்புசாமி.

அதற்க்கு பின் மருமகனை விசேச நாட்களில் விருந்துக்கு அழைப்பதையும்,அவரை நேரில் சந்திப்பதையும் தவிர்த்தார்.

“என்ன குப்புசாமி. உன் மவன் என்ன பண்ணறான்னு உனக்கு கொஞ்சமாவது தெரியுமா? தெனமும் சாராயக்கட வாசல்லையே படுத்துக்கெடக்கறான். அவங்குடிக்கிறது மட்டுமில்லாம ஊர் பசங்களுக்கே வாங்கி கொடுத்து ஊரையுங்கெடுக்கறான். நேத்து நாம்பாத்து கேட்டதுக்கு எம்பட வயசுக்கு மரியாத கொடுக்காம ‘போடா வேலையப்பார்த்துட்டு’ன்னு கல்லெடுத்து வீசறான்.”

“…………”

“நீ எவ்வளவு நல்ல பேரு வாங்கினியோ அத ஊர்ல கெடுத்துப்போட்டான் உம்பட பையன். ஆனா உம்பட மருமகன் மாதர ஒரு நல்லவர உலகத்துல பாக்கறதே பெருசு” என தன் சக வயதுள்ள கருப்புசாமி சொன்ன போது, உயிர் உடலைவிட்டு சற்று பிரிந்து சேர்ந்ததாக உணர்ந்து வேதனையில் ஆழ்ந்தார். அதே சமயம் மருமகனைப்பாராட்டிதை எண்ணி மகிழவில்லை.

“அதெல்லாம் சின்ன வயசுல இருக்கறது தான். மத்தபடி அவன் நல்ல பையன்” என்ற குப்புசாமியை கோபத்துடன் ஏறிட்டார் கருப்புசாமி.

“இப்ப புரியுது. தப்பு எங்க ஆரம்பிக்குதுன்னு. உம்பட புள்ளைப்பாசந்தான் அவன் கெட்டதுக்கே காரணம். நீயே இப்படிப்பேசுனீன்னா அவனுக்கு தப்பு பண்ணறோம்கிற பயமே போயிடும். தப்பு சிறுசா இருக்கற போதே பெத்தவங்க கண்டிச்சிருக்கனம். நீ இப்படிப்பேசி எம்பட வாய மூடலாம். ஆனா ஊர் வாய மூட முடியாது.”

“……………..”

“நானே நேத்தைக்கு வரைக்கும் உம்பட பையன் மாரனுக்கு எம்பட பொண்ணு மாலதியக்கொடுத்து, உன்ன சம்மந்தியாக்கிக்கலாம்னு தான் நெனச்சிருந்தேன். ஆனா இன்னைக்கு வேற மாப்பிள்ளை பார்க்கலான்னு முடிவு பண்ணிட்டேன். இந்தக்காலத்துல குடிக்காதவனை விரல்விட்டு எண்ணியிறலாம். எப்பவாவது குடிக்கறவனுக்கு கூட பொண்ணக்கொடுக்கலாம். அதுக்காக குடிக்கறதையே தொழிலா வச்சிருக்கிறவனுக்கு கொடுக்க முடியாது” என கூறிச்சென்ற கருப்புசாமியின் பேச்சிலும் உண்மையிருப்பதாகப்பட்டது குப்புசாமிக்கு.

வீட்டிற்குச்சென்றவர் தன் மகனைப்பற்றி மனைவியிடம் பேசினார்.

“வேலைக்கே போகாம வேளாவேளைக்கு குடிக்கிறதுக்கு மாரனுக்கு பணம் ஏது? நீ ஏதாச்சும் கவரிங் நகையப்போட்டுட்டு தங்க நகைய வித்துக்கொடுத்தியா? ” என கணவன் கேட்டது தான் தாமதம் ‘ஓ’ என அழுத மனைவியை ஆறுதலாக அணைத்தவர், “சொல்லு சிங்காரி. என்னாச்சு?” எனக்கவலையுடன் கேட்டார்

குப்புசாமி.

“போன வருசமே தொழில் பண்ணோனும்னு நாங்கழுத்துல போட்டிருந்த நகையக்கேட்டான். நீங்க சத்தம்போடுவீங்கன்னு சொன்னதுக்கு,அதே மாதர கவரிங் வாங்கிக்கொடுக்கறேன். ஒரு மாசத்துல எடுத்துக்கொடுக்கறேன்னு சொன்னான்னு நம்பினேன். அப்புறம் வந்து இன்னொரு பத்து லட்சம் பணம் இருந்தாத்தான் தொழில் நடக்கும். தொழில் இல்லேன்னா ஆரு பொண்ணுக்கொடுப்பாங்கன்னு அழுதான்னு காட்டு பத்தரத்தையும் எடுத்துக்கொடுத்து, எம்பட பேர்ல நீங்க எழுதுனதால, அடமானத்துக்கு ஒருநாள் ஊருக்கு போறதா உங்க கிட்ட பொய் சொல்லீட்டு போயி கையெழுத்து போட்டனுங்க”.

“…………..”

“நீங்க நாம் பண்ணுன தப்புக்கு என்னக்கொன்னு போட்டுறுங்க. இப்ப காலைல ஒருத்தரு வந்து ஊட்டையும்,காட்டையும் ரெண்டு நாளுக்குள்ள காலி பண்ணுங்கன்னு சொன்னப்பதான், பெத்த பையங்கிட்டவே ஏமாந்துட்டோன்னு புரிஞ்சுதுங்க” என மனைவி கதறி அழுதபடி சொல்லக்கேட்ட குப்புசாமி அதிர்ச்சியால் மயக்கமடைந்தார்.

மருத்துவ மனையில் மருத்துவ செலவுக்கான தொகையை முழுவதும் தானே கட்டிவிட்டு,தமது வீட்டிற்கு தன் மாமனாரை அழைத்துச்செல்ல தனது காரில் ஏறச்சொன்ன மருமகனை தெய்வமாகப்பார்த்தார் குப்புசாமி.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *