தர்மத்தின் வெற்றி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: February 29, 2024
பார்வையிட்டோர்: 1,753 
 

(2002ல் வெளியான குறுநாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)  

வெகுகாலத்திற்கு முன் தெருவூர் என்னும் அழகிய குக்கிராமத்தில் நந்தகோபால் என்பவரும் அவருடைய மனைவி சுந்தரவல்லியும் வசித்து வந்தார்கள். 

அவர்கள் இருவருக்கும் பத்து வயது நிரம்பிய ஆனந்தன் என்னும் மகன் இருந்தான். இருவருக்கும் ஆனந்தன் ஒரே பிள்ளையாதலால் ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு எனச் செல்வச் செழிப்பில் செல்லமாக வளர்ந்து வந்தான். 

ஒருநாள் நந்தகோபாலுக்கு திடீரென மாரடைப்பு வரவே அகால மரணமானார். இதனைக் கனவிலும் கூட நினைத்துப் பார்க்காத அவரது மனைவி சுந்தரவல்லியும் மகன் ஆனந்தனும் கதி கலங்கிப் போனார்கள். 

காலஞ் செல்லச் செல்ல அவர்களிடம் இருந்த செல்வமும் குறைந்து வறியவர்களானார்கள். ஆனாலும் சுந்தரவல்லியோ தான தர்மம் செய்வதைக் குறைக்கவில்லை. 

அப்பொழுது ஆனந்தன் ஆறாம் வகுப்பில் கல்வி பயின்று கொண்டிருந்தான். அன்றும் வழமை போலவே மத்தியான வேளையில் பாடசாலை விட்டு வீட்டுக்கு வந்தான். புத்தகங்களை மேசையில் வைத்து விட்டு கைகால் முகத்தைக் கழுவிக்கொண்டு குசினிக்குள் சென் சாப்பிடுவதற்கு ஆயத்தமானான். அங்கே அவனுக்கு மாத்திரமே சாப்பாடு இருந்தது. வழமைக்குமாறாக அவனுடைய தாய்க்குரிய சாப்பாட்டைக் காணவில்லை. இதனை அவதானித்த ஆனந்தன் “அம்மா உங்களுடைய சாப்பாடு எங்கே?” என்றான். 

அதற்கு அவனின் தாய் “அது மகனே ஒரு கிழவர் பசியோடுவந்து சோறு கேட்டார். அதுதான் கொடுத்துவிட்டேன்” என்றாள். அதைக்கேட்ட ஆனந்தன் “தானம் செய்யத்தான் வேணும். அதற்காக உங்களுக்கே இல்லாமல் தானம் செய்திருக்கிறீர்களே” என்றவாறு அவனது உணவை உண்டுவிட்டு வெளியேறினான். 

இதேபோல் மறுநாளும் பாடசாலைக்குச் சென்று திரும்பினான் ஆனந்தன். அன்றும் வழமை போலவே கால், கை, முகத்தை அலம்பிவிட்டு குசினிக்குள் சென்று சாப்பாட்டைத் தேடினான். 

அவனுக்கு அங்கே அதிர்ச்சி காத்திருந்தது. அவனுக்காக அங்கே சாப்பாடு இருக்கவில்லை. ஆனால் அவனுடைய சாப்பாட்டுக் கோப்பையில் யாரோ சாப்பிட்டு முடித்திருக்கும் தடயங்களே தென்பட்டன. 

இதனைக் கண்ட ஆனந்தனுக்குக் கோபம் வரவே, அருகில் அறையில் இருந்த தாயை “அம்மா” என்றழைத்து, “எங்கே எனது சாப்பாடு?” என்று கோபாவேசமாக் கத்தினான். 

அதற்கு அவனது தாயோ எந்தவித பதட்டமும் இல்லாமல் சர்வ சாதாரணமான குரலில் “அது… இண்டைக்கு இரண்டு பிச்சைக்காரர்கள் பசிக்குது என்று கேட்டார்கள், அதனாலே இரண்டு பேருடைய சோற்றையும் கொடுத்து விட்டேன்” என்றாள். 

தாயின் பேச்சு ஆனந்தனுக்கு மேலும் கோபத்தை அதிகரிக்கச் செய்யவே, “தானம், தானம்… தானமும் மண்ணாங்கட்டியும். நாம் சாப்பிடாமல் தானம் செய்து செய்து நாமே பிச்சைக்காரராகப் போகிறோமேயொழிய எந்த விமோசனமும் இல்லை” என்று தாயைப் பார்த்துச் சொன்னான். 

இவனுடைய பேச்சைக் கேட்ட தாய் ஒரு புன்சிரிப்பொன்றை உதிர்த்தி விட்டு “எல்லாம் உனது நன்மைக்காகத்தான் செய்கிறேன்” என்றாள். 

இதைக் கேட்டதும் ஆனந்தனுக்கு கோபம் அதிகரித்தது. கண்கள் சிவப்பேறி கொவ்வைப் பழம் போல் இருந்தது. இருப்பிடத்தில் இருந்து மெதுவாக எழுந்து கொண்டான். “அம்மா தானம் செய்வதால் என்ன பலன் கிடைக்கும் என்று பார்த்து வருகிறேன். அதை அறியும் வரை நான் ஒரு போதும் வீட்டுக்குத் திரும்பப் போவது இல்லை. இது சத்தியம்” என்று கூறிக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறி கால் போன போக்கில் நடக்கலானான். 

மகனது போக்கைக் கண்ட தாய் எவ்வளவோ தடுக்க முயற்சி செய்தாள். அவன் அவை ஒன்றையும் பொருட்படுத்தவில்லை. தன் வழியே நடந்து கொண்டிருந்தான். 

நீண்ட காட்டுப் பாதையின் வழியே பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருந்தவனைப் பயம் பீடித்துக் கொண்டது. ஆனாலும் அவன் முயற்சியைக் கைவிடாமல் இரண்டில் ஒன்று பார்ப்பது என்ற திட சிந்தனையுடன் நடந்து கொண்டிருந்தான். 

அடர்ந்த காட்டுப் பகுதியின் நடுவே சென்று கொண்டிருந்த போது மாலைச் சூரியன் அஸ்தமனமாகிக் கொண்டிருந்தது. சூரியன் செந்நிறத் தீப்பிளம்பு போல காட்சியளித்துக் கொண்டிருந்தது. அந்த அழகிய காட்சியை வெகுவாக ரசித்தவாறு போய்க் கொண்டிருந்தான். 

சற்று நேரம் சென்றதும் வானம் திடீரென இருள் கவ்விக் கொண்டது. அந்த இருளினால் காட்டுப் பிரதேசமே இருண்டு கிடந்தது. இருளைக் கண்ட ஆனந்தனை மேலும் பயம் பீடித்தது. பயம் அதிகரிக்க அதிகரிக்க பசியும் அதிகரித்தது. சிறு குடலைப் பெருங்குடல் விழுங்கி விடும் போல் இருந்தது. 

இருளின் மத்தியிலே எங்கே போவது என்று திண்டாடினான். அந்த நேரம் பார்த்தாற் போல மிக அண்மையிலே சிங்கம் ஒன்று கர்ச்சிக்கும் ஒலி தெளிவாகக் கேட்டது. 

சத்தத்தைக் கேட்ட ஆனந்தன் பயந்து போனான். கை, கால், உடலெல்லாம் நடுநடுங்க ஆரம்பித்தது. நிலமையைச் சமாளித்துக் கொண்டு அருகில் இருந்த உயரமான மரத்தில் ஏறிக் கொண்டான். 

மரத்தில் இருந்த வண்ணம் ஆண்டவனே எனக்கொரு நல்ல வழியைக் காட்டு என்று மன்றாடினான். இறைவனைத் துதித்தான். 

சில மணி நேரங்களின் பின் சந்திரன் உதயமாகிக் காட்டு வழியே பவனியை ஆரம்பித்தது. நிலவொளியில் காட்டுப் பகுதியே பட்டப் பகல் போல் தோன்றியது. 

இன்னும் மரத்திலேயே இருப்பது நல்லதல்ல என்பதை உணர்ந்தான் ஆனந்தன். மரத்தில் இருந்து மெதுவாகக் கீழே இறங்கினான். நிலவொளியின் உதவியுடன் ஒற்றையடிப் பாதை வழியே நடக்கலானான். 

நீண்ட தூரம் நடந்த பின் களைப்பின் மிகுதியால் கால்கள் ஓரிடத்தில் தரித்து நின்றன. அவ்விடத்திலே நின்று கொண்டு என்ன செய்யலாம் என்று யோசித்தான். அப்பொழுது யாரோ கதைக்கும் சத்தம் மெதுவாகக் காற்றிலே கலந்து வந்தது. 

மீண்டும் உற்றுக் கேட்டான். அது மனிதக் குரல்களேதான். 

மெதுவாகச் சத்தம் வந்த திசையை நோக்கிச் சில அடிகள் வைத்தான். அப்போதும் அக்குரலொலிகள் கேட்ட வண்ணமே இருந்தன. அப்போதுதான் ஆனந்தனின் மூளை பலமாக வேலை செய்ய ஆரம்பித்தது. 

இந்த நடுக்காட்டில் எப்படி மனிதர்கள் வரமுடியும் ? இது மனிதர்களாக இருக்கவே முடியாது. அப்படியானால் அந்தச் சத்தம் ஒரு வேளை பேயாக இருக்குமோ….! 

பேய் என்று நினைத்ததும் ஆனந்தனுக்கு நடுங்கியது. ஆனாலும் இது நிட்சயமாக பேயாக இருக்கவே முடியாது. அது காட்டு மனிதர்களாகத்தான் இருக்கக் கூடும் என முடிவெடுத்தான். நெஞ்சைத் திடப்படுத்திக் கொண்டு சத்தம் வந்த திசையை நோக்கித் தொடர்ந்து நடக்கலானான். 

அங்கே ஒரு குகை தென்பட்டது. மெதுவாக அதனருகே காதை வைத்து, ஏதாவது சத்தம் கேட்கிறதா? என்று செவிமடுத்தான். அங்கேயே இருந்துதான் மனிதக் குரல்கள் கேட்டுக் கொண்டிருந்தன. 

குகையைச் சுற்றும் முற்றும் பார்த்தான். அதன் வாயிலைக் கண்டு பிடிக்க முடியவில்லை. இறுதியில் பற்றை படர்ந்து இருக்கும் இடம் ஒன்றை நோக்கினான். அங்கே ஒரு வழி தென்பட்டது. 

அதன் வழியாக மெதுவாக அரவம் எதுவுமே கேட்காத வண்ணம் அடிமேல் அடிவைத்து உள்ளே சென்று, எட்டிப் பார்த்தான். 

அங்கே விளக்குக் குப்பி ஒன்று எரிந்து கொண்டிருந்தது. அதனருகே இரண்டு பேர் கதைத்துக் கொண்டிருந்தனர். அவர்களின் தலைமயிர் வளர்ந்து முகத்தையே மூடி மறைத்துக் கொண்டிருந்தது. இதனால் அவர்கள் ஆண்களா! பெண்களா! என்று கூட அறிய முடியாமல் இருந்தது. அவர்களின் பேச்சின் ஒலியிலிருந்தே ஒருவர் ஆணும் மற்றவர் பெண்ணும் என்றும் அறியக் கூடியதாக இருந்தது. 

ஆனந்தன் சில நிமிடங்கள் ஆடாமல் அசையாமல் மெளனமாக நின்றவாறு அவர்களை நோட்டமிட்டான். அவர்கள் இருவரும் மரவுரி அணிந்திருந்தார்கள். அதை அவதானித்த பின்னே அது நிட்சயமாகப் பேய்கள் அல்ல, காட்டு மனிதர்கள்தான் என்பதை உணர்ந்தான். மேலும் உள்ளே முன்னேறிச் சென்று “அண்ணே” என்று அழைத்தான். 

அண்ணே என்று அழைத்ததுதான் தாமதம், இருவரும் விளக்கைக் கையில் ஏந்திய வண்ணம் ஆனந்தனை நெருங்கினர். ஆனந்தன் எதுவும் பேசாமல் மெளமாக இருந்தான். ஆனால் அந்தக் காட்டு மனிதனோ “என்ன தம்பி வேண்டும்?’ என்று கேட்டார். 

அதற்கு ஆனந்தனோ நடந்தவை எல்லாவற்றையும் எடுத்துக் கூறினான். இறுதியில் சாப்பிடுவதற்கு ஏதாவது தருமாறும், இரவைக்கு தங்குதவற்கு இடம் தருமாறும் கேட்டான். 

ஆனந்தனை இன்முகத்துடன் வரவேற்று, உணவளித்து, தங்குதவற்கு இடமும் கொடுத்தார். 

உயரமாக அமைக்கப்பட்டிருந்த “பரண்” ஒன்றின் மீது அந்த மனிதனும் ஆனந்தனும் படுத்துக் கொண்டனர். 

சில்லூறு வண்டுகளின் இரைச்சலும் தவளையின் ரீங்காரமும் ஆனந்தனுக்குப் புது அனுபவமாகவே இருந்தன. இதனால் அவனுக்குத் தூக்கம் வரவில்லை. நித்திரையின்றிப் படுத்துக் கிடந்தான். 

அப்பொழுது நள்ளிரவுக் குருவி ஒன்றின் கூக்குரலிசை கேட்டு ஓய்கிறது. அதைத் தொடர்ந்து ஆந்தையொன்று குகையினுள்ளே அலறுகிறது. 

அந்த ஓசையினிடையே “தொபார்’ என்ற சத்தம் கேட்டது. சத்தம் கேட்டதுதான் தாமதம் திடுக்கிட்டு கண்ணைத் திறந்தான். அங்கே குகையினுள்ளே ஒரு உறுமலுடன் புலியொன்று பாய்ந்து வந்து கொண்டிருந்தது. அப்பொழுது “அம்மா” என்றொரு குரல் கத்திக் கேட்டது. 

உடனே ஆனந்தன் பயத்தினால் பரணில் இருந்து கீழே எட்டிப் பார்த்தான். அப்பொழுது எரிந்து கொண்டிருந்த விளக்கு அணைந்து கொண்டது. ஆனால் புலியின் உறுமல் தொடர்ந்து கேட்டுக் கொண்டேயிருந்தது. பயத்தினால் ஆனந்தன் தனது அருகில் படுத்துக்கிடக்கும் காட்டு மனிதனை எழுப்பும் நோக்கில் பரணைத் தடவினான். அங்கே காட்டு மனிதனைக் காணவில்லை. 

அதன் பின்பு ஆனந்தனுக்கு தூக்கமே வரவில்லை. பேய்க் குகைக்குள் வந்து சிக்கிக் கொண்டோம். இனி எப்படி இதிலிருந்து தப்ப முடியும் என்று சிந்தித்தான். எப்போ பொழுது புலரும் எனக் காத்திருந்தான். 

பொழுது புலர்ந்தது. ஆனந்தன் பரணிலேயே இருந்த வண்ணம் குகையை ஒரு தடவை நோட்டமிட்டான். அங்கே இன்னொரு பரணில் அந்தக் காட்டு மனுசி தூங்கிக் கொண்டிருந்தாள். 

அப்பொழுது அவனது பார்வை தற்செயலாக பரணின் கீழே நிலத்தில் பதிந்தது. அங்கே நிலம் இரத்த வெள்ளமாகக் காட்சியளித்தது. அத்துடன் ஆங்காங்கே சில மனித எலும்புத் துண்டுகள் காணப்பட்டன. 

இவையெல்லாவற்றையும் கண்ட பின்புதான் இரவு பரணில் இருந்த காட்டு மனிதன் கீழே தவறி வீழ்ந்திருக்க வேணும், வீழ்ந்த அந்த மனிதனை குகைக்குள்ளே வந்த புலி சாப்பிட்டிருக்க வேண்டும் என்று உணர்ந்தான். 

இனியும் இங்கே நாம் தங்கியிருப்பது நல்லதல்ல, காட்டு மனுசி நித்திரையில் இருந்து எழும்பினால் நிலமை விவரீதமாகிவிடும். எப்படியாவது இங்கிருந்து செல்வதே நல்லது என எண்ணிக்கொண்டு காட்டுப் பாதை வழியே நடக்கலானான். 

நேரம் செல்லச் செல்ல வெயிலும் அதிகரித்தது. வெயிலின் சூடு ஆனந்தனின் காலைச் சுட்டெரித்தது. நடந்ததினால் ஏற்பட்ட களைப்பும், வெயிலினால் ஏற்பட்ட வறட்சியும் ஆனந்தனுக்கு தாகமாக இருந்தது. எங்கேயாவது சென்று கொஞ்சம் தண்ணீர் குடிக்கலாம் என்ற நோக்கில் நீர் இருக்கும் இடத்தைத் தேடி அலையலானான். 

தேடித்தேடி அலைந்து இறுதியில் ஒரு நீரோடையைக் கண்டான். 

தண்ணீரைக் கண்ட ஆனந்தத்தில் தண்ணீரைக் குடிப்பதற்காக நீரோடையில் இறங்கினான். 

சுட்டெரிக்கும் வெயிலில் நடந்து வந்ததனால் அவனுக்கு நீரில் இறங்கியது இதமாக இருந்தது. 

மெதுவாக இரண்டு கைகளையும் ஏந்தி நீரை அள்ளினான் பருகுவதற்காக. அப்பொழுது அந்த நீரோடையில் இருந்து ஒரு மெல்லிய குரல் ஒலித்தது. 

“யாரது இங்கே என் அனுமதி இல்லாமல் நீரை அருந்துவது?” 

ஆனந்தன் எதுவுமே பேசாமல் மெளனமாக நின்றான். 

”பயலே! பார்ப்பதற்கு அப்பாவி போல் இருக்கிறாய். நீ இங்கே ஏன் வந்தாய்?” மீண்டும் அவ்வொலி வந்தது. ஆனந்தன் சுற்றுமுற்றும் பார்த்தான். ஒருத்தரையுமே காணமுடியவில்லை. எனவே மெதுவான குரலில் “நான் ஆனந்தன். என்னோடு கதைக்கும் நீ யார்?” என்றான். 

“நானா! உனது காலடியில் கிடக்கும் சிப்பி. நீ வந்த விடயம் என்னவோ!” 

அப்போது தான் ஆனந்தன் உற்று நோக்கினான். அவனது காலடியில் நீருக்குள் ஒரு பெரிய சிப்பி கிடந்தது. உடனே அவன் சொன்னான். ”சிப்பியாரே! எனக்கு ஒரே தாகமாக இருக்கிறது. நான் கொஞ்சம் தண்ணீரைக் குடித்து விட்டு விளக்கமாகக் கூறுகிறேன்.” 

“சரி அப்படியே செய்” என்று கூறியது. ஆனந்தன் இரு கைகளாலும் நீரை அள்ளிப் பருக ஆரம்பித்தான். 

நீரைப் பருகி முடித்ததும், பெருமூச்சொன்றை விட்ட வண்ணம், “சிப்பியாரே, என் பெயர் ஆனந்தன். எனது அம்மா தானம் செய்து செய்தே பிச்சைக்காரி ஆகிவிட்டாள். ஏன் தானம் செய்கிறீர்கள் என்று கேட்டால். எல்லாம் உனக்காக என்கிறாள். அதுதான் கடவுளைச் சந்தித்து தானம், தர்மம் செய்வதனால் என்ன பலன் கிடைக்கும் என்று கேட்டு வரப்போகிறேன்” என்றான். 

அதற்கு சிப்பி, “நல்லது ஆனந்தன். நீ எனக்கு ஒரு உதவி  செய்ய முடியுமா?” என்று கேட்டது. 

“இயலுமானால் நிட்சயம் செய்வேன்’ 

“நீ கடவுளை சந்திப்பீரேயானால், நான் இவ்வளவு காலமும் மோட்சத்துக்குச் செல்லாமல் இப்படியே இருக்கிறேன். நான் எப்போ மோட்சத்துக்குச் செல்வேன் என்று கேட்டுவா” 

“ஆண்டவனைச்  சந்திப்பேனேயானால்  நிட்சயமாகக் கேட்டு வருவேன்” என்று கூறிக் கொண்டு மீண்டும் நடக்க ஆரம்பித்தான். 

முட்புதர்களையும் சிறிய மலைகளையும் தாண்டி வெகு தூரம் நடந்திருந்தான் ஆனந்தன். வெகு தூரம் நடந்து வந்ததனால் பசிக்களை அவனை வாட்டியது. அதனால் அவனுக்கு ஏதாவது சாப்பிட வேண்டும் போல் தோன்றியது. 

என்ன சாப்பிடலாம் என்று சிந்தித்தான். ஆனால் ஒன்றும் தென்படவில்லை. இறுதியில் பரந்து விரிந்து வளர்ந்து இருந்த ஒரு மா மரத்தைக் கண்டான். 

அதிலிருந்து சில பழங்களைச் சாப்பிடலாம் என்ற எண்ணத்தில் அம் மரத்தில் ஏறிச் சில பழங்களைப் பறித்துக் கொண்டு, மர நிழலில் அமர்ந்த வண்ணம் பழங்களை உண்ண ஆரம்பித்தான். 

அப்பொழுது அவனையும் அறியாமல் நித்திரை தூங்கி விழப் போனான். அந்த நேரம் பார்த்தாற் போல் அந்த மாமரம் பேச ஆரம்பித்தது. 

“தம்பி உன்னைப் பார்த்தால் நல்லவன் போல் தோன்றுகிறதே! ஏன் இந்தக் கொடிய மிருகங்கள் வாழும் காட்டிற்குள் வந்தாய்? நீ யார்? வந்த விடயமென்னவென்று அறியலாமா?” 

அதற்கு ஆனந்தன், “என் பெயர் ஆனந்தன். என் தாய் தானம், தர்மம் செய்தே பிச்சைக்காரியாகி விட்டாள். ஏன் தானம், தர்மம் செய்கிறாய் என்று கேட்டால் எல்லாம் உனது நன்மைக்காகத்தான் என்கிறாள். அது தான் தானம், தர்மம் செய்வதனால் என்ன நன்மை கிடைக்கப் போகிறது என்று கடவுளைக் கண்டு கேட்டுவரப் போகிறேன்” என்று கூறி முடித்தான். 

இதைக் கேட்ட மாமரம் ஆனந்தத்தால் ஒரு தரம் தன் கிளைகளை உசுப்பிக் கொண்டது. அந்த உசுப்பினால் சில மாம்பழங்கள் கீழே விழுந்தன. அதைப் பக்குவமாகப் பொறுக்கி உண்டான். 

அப்பொழுது அந்த மாமரம் மீண்டும் பேச ஆரம்பித்தது. 

“ஆனந்தன் எனக்கு ஒரு உதவி செய்ய முடியுமா?” 

“நிட்சயமாக” 

“நீ கடவுளைச் சந்திப்பீரானால் அந்தக் கடவுளிடம் கேள், நான் ஏன் இவ்வளவு காலமும் மோட்சமடையாமல் இப்படியே இருக்கின்றேன். எப்பொழுது மோட்சமடைவேன் என்று.” 

“கடவுளைச் சந்தித்தால், நிட்சயமாகக் கேட்டு வருவேன்” என்று கூறிக் கொண்டு மீண்டும் எழுந்து நடக்க ஆரம்பித்தான். 

சற்றுத் தூரம் நடந்து சென்றதும், பொழுதை இருள் கவ்வியதால் எங்கும் இருளாகக் காட்சியளித்தது. ஆனாலும் ஒருவாறு தட்டுத் தடுமாறி ஒற்றையடிப் பாதை வழியாகச் சென்று கொண்டிருந்தான். 

அப்பொழுது ‘உஷ்…’ என்றொரு விசித்திரமான சத்தம் கேட்டது. திடுக்கிட்ட ஆனந்தன் செய்வதறியாது சிலை போலத் திகைத்து நின்றான். அந்த இருளினிடையே உற்று நோக்கினான். அங்கே ஆடியசைந்த வண்ணம் இரு கண்கள் பளிச்சிட்டன. மீண்டும் உற்று நோக்கினான். 

அங்கே ஒரு பாம்புப்புற்று ஒற்றையடிப் பாதையை மறைத்த வண்ணம் இருந்தது. அந்தப் புற்றின் மேலே ஒரு பாம்பு படமெடுத்து ஆடிக் கொண்டிருந்தது. 

அந்தப் பாம்பு ஆனந்தனைப் பார்த்து, “எனது இராட்சியத்திற்குள் எனது அனுமதியில்லாமல் வருவது யார்?” என்று கேட்டது. 

அதற்கு ஆனந்தன், “என்னை மன்னித்து விடுங்கள். என் பெயர் ஆனந்தன். நான் தானம், தர்மம், செய்வதனால் என்ன நன்மை கிடைக்கும் என ஆண்டவனைக் கண்டு கேட்கப் போய்க் கொண்டிருக்கின்றேன். அந்த வேளையில் தவறுதலாக உன் வழியால் வந்து விட்டேன்” என்றான். 

இதைக் கேட்ட பாம்பு “ஆ….ஆ” என்றொரு அசட்டுச்சிரிப்பொன்றை உதிர்த்தவாறு, “நான்தான் நல்லபாம்பு என்று அழைக்கப்படும் நாகராஜா. இப்படிப்பட்ட உன்னைப் போல ஒரு பையனைத்தான் எதிர்பார்த்துக் கொண்டு இவ்வளவு காலமும் காத்திருக்கிறேன்” என்று கூறியது. 

பாம்பின் பேச்சைக் கேட்டதும் ஆனந்தனுக்கு நடுங்க ஆரம்பித்தது. ஆனாலும் பாம்பிடம் தன் பயத்தை வெளிக்காட்டினால் அது ஆபத்தில் முடியும் என்று நினைத்துக் கொண்டான். தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, ஒரு தடவை இருமித் தொண்டையைச் சரி செய்தவாறு, “நாகராஜா அவர்களே! ஏன் நீங்கள் என்னைப் போன்ற பையனை எதிர்பார்த்துக் கொண்டு காத்திருக்கிறீர்கள்? உங்களுக்கு என்ன வேண்டும்?” என்று கேட்டான். 

“தம்பி, நான் எவ்வளவோ காலமாக இந்தப் புற்றின் மீது தலை வைத்துக் கொண்டு காற்றைக் குடித்த வண்ணம் இருக்கிறேன். ஆனால், நான் எப்போ மோட்சத்துக்குப் போவேனோ தெரியாது. அதுதான் தம்பி நீ கடவுளிடம் போனால், ஒரு தடவை நான் எப்போது மோட்சத்துக்குப் போவேன் என்று கேட்டு வா.” 

“ஆ…. இது தானா? நான் ஏதோவென்று பயந்து விட்டேன். சரி நான் கடவுளைச் சந்தித்தால் நிட்சயமாகக் கேட்டு வருவேன்” என்று கூறிக் கொண்டு தொடர்ந்து நடக்கலானான். 

சற்றுத் தூரம் சென்றதும் ஒரு விசித்திரமான ஒலி கேட்க ஆரம்பித்து. ஆனந்தன் தன் காதுகளைக் கூர்மையாக்கிக் கொண்டு கேட்டான். “சல்… சல்” என்று கேட்கும் சலங்கை ஒலிச்சத்தம் அதிகரித்துக் கொண்டு வந்தது. 

அதைத் தொடர்ந்து ஆட்களின் “அய்யோ… குய்யோ” என்னும் நடமாட்ட ஒலியும் கேட்டது. 

இச் சத்தத்தைத் கேட்டதும் ஆனந்தனுக்கு நெஞ்சு “திக்….திக்….” என்று அடித்துக் கொண்டது. மேலும் தொடர்ந்து நடந்து செல்வது நல்லதல்ல என்று தோன்றியது. அருகே இருந்த விராலி மரப்பற்றைக்குப் பின்னால் பதுங்கிக் கொண்டான். 

நேரம் செல்லச் செல்ல சத்தமும் அதிகரித்தது. அப்பொழுதுதான் ஆனந்தன் அதை அவதானித்தான். அந்த ஒற்றையடிப் பாதை வழியாக சிலர் கையில் தீப்பந்தங்களுடன் அவன் இருக்கும் பக்கமாக வந்து கொண்டிருந்தனர். 

அந்தத் தீப்பந்த ஒளியிலே ஆனந்தன் அவர்களை உற்று நோக்கினான். அவர்கள் யாவரும் வேடர்கள் போலவே தோற்றமளித்தார்கள். கையிலே வில்லும் அம்பும் இருந்தன. அரையிலே புலித்தோல் அணிந்திருந்தனர். மேலங்கி ஒன்றுமே அணிந்திருக்கவில்லை. இதனால் கன்னங்கரிய முறுக்கேறிய உடம்பு வெளிப்படையாகவே தெரிந்தது. 

அப்பொழுது ஆனந்தன் “ஆ….” என்று வீரிட்டு அழுதவாறு சுருண்டு விழுந்தான். வலையால் வீசப்பட்டுக் கட்டுண்டு இருப்பதை உணர்ந்தான் ஆனந்தன். அவனைச் சுற்றிப் பலர் வில்லும் அம்புடனும் நிற்பதைக் கண்டான். அந்தக் கூட்டத்தில் இருந்த ஒருவன் ஆனந்தனை நெருங்கி, “நீதானே ஆனந்தன்?” என்றான். 

“ஆம்” என்ற பாவனையில் நடுக்கத்துடன் தலையை மேலும் கீழும் அசைத்தான். 

“நீ இன்று எமது மன்னரின் விருந்தாளியாகப் போகிறீர்” என்று கூறிக் கொண்டு ஆனந்தனை நோக்கினான். 

ஆனந்தன் நடுநடுங்கிய வண்ணம் அவனை நோக்கி, “நான் எந்தவித பாவமும் செய்யவில்லை. ஏன் என்னைக் கஸ்டப்படுத்துகிறீர்கள்”? என்றான். 

அதற்கிடையில் அவனோ கூட்டத்தினரை நோக்கி “இவனைத் தூக்கிச் செல்லுங்கள்” என்று கட்டளையிட்டான். 

அக் கட்டளையைக் கேட்டதுதான் தாமதம் நான்கு பேர் சேர்ந்து பல்லக்கொன்றைச் சுமந்த வண்ணம் வந்து ஆனந்தன் அருகே வைத்தனர். அதில் அவனைத் தூக்கி ஏற்றிக் கொண்டனர். 

பின்பு அப்பல்லக்கை நான்கு மூலைகளிலும் நான்கு பேர் சுமக்க, தீப்பந்தத்தின் உதவியுடன் பல்லாக்கு ஒற்றையடிப்பாதை வழியாகச் சென்று கொண்டிருந்தது. 

காடுகளையும் மலைகளையும் நீரோடைகளையும் தாண்டி, நீண்ட நேரப் பயணத்தின் பின்பு பல்லாக்கு ஓரிடத்தில் தரித்து நின்றது. 

அப்பொழுது காட்டுச் சேவல்களின் கூவுதல் சத்தமும், பூக்குடிச்சான் குருவிகளின் ஓசையும் தெளிவாகக் கேட்கவே ஆனந்தன் பொழுது புலர்ந்து விட்டதை உணர்ந்தான். 

பல்லக்கில் இருந்து இறக்கப்பட்டான் ஆனந்தன். 

அவனை அரையிலே மான் தோலுடுத்த, கையிலே வேலுடன் காணப்பட்ட இருவர் அழைத்துச் சென்றனர். 

ஒரு நீண்ட குகையினுள்ளே அழைத்துச் செல்லப்பட்ட ஆனந்தனுக்குப் பெரிய ஆச்சரியமாக இருந்தது. அந்தக் குகை முழுவதுமே மலையைக் குடைந்து சிற்பங்களாகச் செதுக்கப்பட்டு ஒரு அரச மாளிகைக்குரிய தோற்றமாகவே காட்சியளித்தது. 

உள்ளே ஒரு சிம்மாசனத்தில் ஒருவர் வீற்றிருந்தார். அவர்தான் அரசனாக இருக்க வேண்டும் போலிருக்கிறது என்று நினைத்துக் கொண்டிருக்கும் போது அவனை அழைத்து வந்தவன் அவரை நோக்கி, “மன்னா! நீங்கள் கூறியபடி அந்தப் பையனை அழைத்து வந்து விட்டோம்” என்று கூறினான். 

அதற்கு மன்னர் “நல்லது, அப்படியானால், நமது விருந்துக்கு ஆள் வந்து விட்டது. சரி நீ போ. நான் அவனைக் கவனித்துக் கொள்கிறேன்” என்றார். 

இதைக் கேட்ட ஆனந்தனுக்கு உடம்பெல்லாம் நடுங்கியது. அந்த அரண்மனையைச் சுற்றுமுற்றும் பார்த்தான். அங்கே ஒரு மூலையில் பெரிய சட்டிகள், பானைகள், கோடரி, கத்திகள் காணப்பட்டன. 

ஆனந்தனுக்குப் பயத்தினாலும் பசியினாலும் தூக்கம் வருவது போல் இருந்தது. இதை அவதானித்த மன்னர் அவனை அருகே அழைத்தார். 

ஆனந்தன் மன்னர் அருகே சென்று உடலைக் கூனிக்குறுக்கி நின்றான். 

“நீர் தானே ஆனந்தன்”. 

“ஆம்” 

“நீ மிகவும் களைப்பாய் இருக்கிறாய் போல் இருக்கிறது. முதலில் குளித்து விட்டுச் சாப்பிடு நான் உன்னை மீண்டும் சந்திக்கிறேன்” என்று கூறிச் சேவகனை அழைத்து, ஆனந்தனைக் கூட்டிப் போகுமாறு பணித்தார். 

குழந்தை ஒரு வெள்ளைக் குதிரையைக் கொடுத்தது. 

ஆனந்தன் நன்றி கூறிக் குதிரையைப் பெற்றுக் கொண்டு, மின்னல் வேகத்தில் குதிரையில் பயணமானான். 

காட்டுப் பாதையைத் தாண்டி தாண்டி பிரதேசத்தினூடாகப் பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருந்தான். 

ஐந்நூறு மீற்றர் உயரமான செங்குத்தான மலையொன்றின் மீது குதிரை ஓடிக் கொண்டிருக்கும் போது குதிரையின் கால் சறுக்கி, செங்குத்தான மலையின் வழியே அந்தரத்தில் ஆனந்தனும் குதிரையும் வீழ்ந்து கொண்டிருந்தனர். 

அந்தக் கணப் பொழுதில் மின்னலென வந்த இராட்சத கழுகு ஒன்று ஆனந்தனைத் தூக்கிக் கொண்டு பறந்து சென்றது. 

நீண்ட நேரம் பறந்த பின்பு, ஒரு பென்னம் பெரிய றொக்குப் பாறையின் மீது அமர்ந்தது. 

அமர்ந்த வண்ணம், பாறையையே பார்த்துக் கொண்டு சில நிமிடங்கள் ஒரு மந்திரத்தை ஜெபித்தது. அப்பொழுது பாறை “படார்” என்ற வெடிச் சத்தத்துடன் திறந்து கொண்டது. 

அதைத் தொடர்ந்து பறவை பாறையினுள்ளே பறக்க ஆரம்பித்தது. மீண்டும் பாறை மூடிக் கொண்டது. 

ஒரு விசித்திரமான மனிதர் முன்னிலையில் கொண்டு போய் இறக்கப்பட்டான் ஆனந்தன். பின்பு அவ்விராட்சத கழுகு பேச ஆரம்பித்தது. 

”ஆண்டவரே, இந்தப் பையன் எமது அனுமதியில்லாமல் இந்த இராட்சியத்திற்குள் வந்து கொண்டிருந்தான். உடனே அவனைப் பிடித்து இங்கே அழைத்து வந்தேன்.” 

“அப்படியா! பயலே அனுமதியில்லாமல் நீ ஏன் இங்கு வந்தாய்?” 

“ஆண்டவரே, நான் உங்களையே காணவந்தேன்”

“எதற்கு என்னைச் சந்திக்க விரும்புகிறாய்? உடனே அதை விளக்கமாக எடுத்துக் கூறு.” 

“ஆண்டவரே, எனது அம்மா தானம், தர்மம் செய்தே பிச்சைக்காரி ஆகிவிட்டாள். கேட்டால் எல்லாம் உனது நன்மைக்கே செய்கிறேன் என்கிறாள். தானம், தர்மம் செய்வதனால் என்ன பயன் கிடைக்கும் என்று கேட்கலாம் என்று வந்தேன்” என்றான். 

அதற்கு ஆண்டவர் “வேறு ஏதாவது கேள்வி கேட்க விரும்புகிறாயா?” என்று கேட்டார். 

“ஆம்” என்று தலையசைத்த ஆனந்தன், சிப்பி, மாமரம், நாகபாம்பு ஆகியவை கேட்டுவரச் சொன்ன சேதியைச் சொன்னான். 

இவற்றையெல்லாம் கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்த ஆண்டவர் “ஆனந்தன் நீ வீட்டுக்குப் போ. நீ அங்கே போனதும் தான தர்மம் செய்வதனால் என்ன பயன் என்பதை அறிவாய். அத்துடன் சிப்பியிடம் கூறு உன்னிடம் ஒரு முத்து இருக்கிறதாம் அதை நீ வெளியில் துப்பினால் மோட்சத்துக்குச் செல்வாய் என்றும், மாமரத்திடம் கூறு, உனது மரத்தடியில் ஒரு தங்கப் புதையல் இருக்கிறதாம். அதை வெளியில் எடுத்தால், நீ மோட்சத்துக்குச் செல்வாய் என்றும், அந்தப் பாம்பிடம் உன்னிடத்தில் ஒரு வைரம் இருக்கிறதாம். அதை வெளியே துப்பினால் நீ மோட்சத்திற்குச் செல்வாய் என்றும் கூறு” என்று கூறினார். 

அங்கிருந்து நன்றி கூறிக் கொண்டு மீண்டும் வீட்டை நோக்கிப் பயணத்தை ஆரம்பித்தான் ஆனந்தன். 

முதலில் பாம்பு இருக்கும் இடத்தை அடைந்தான். அங்கே பாம்பு புற்றின் மேலே தலையை வைத்த வண்ணம் அவனின் வரவுக்காகக் காத்துக் கொண்டிருந்தது. அந்தப் பாம்பிடம், “உன்னிடம் ஒரு வைரம் இருக்கிறதாம் அதை வெளியே துப்பினால் மோட்சம் அடைவாய் என்று ஆண்டவர் கூறினார்” என்றான். 

உடனே பாம்பு தன் வாயிலிருந்த வைரத்தை துப்பி விட்டுப் பறந்து சென்றது. ஆனந்தன் வைரத்தை எடுத்துக் கொண்டு மாமரத்தடியை நோக்கிச் செல்லலானான். 

அங்கே மாமரம் கனிந்த பல பழங்களுடன் ஆனந்தனின் வரவை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தது. ஆனந்தனைக் கண்டதும் ஆனந்தத்தினால் கிளைகளை ஒரு தடவை உசிப்பிப் பல பழங்களைக் கொட்டியது. அப்பழங்களை பொறுக்கி உண்ட வண்ணம் “மாமரமே, மாமரமே உனது அடியில் ஒரு தங்கப் புதையல் இருக்கிறதாம் அதை வெளியில் எடுத்தால் நீ மோட்சம் அடைவாய் என்று ஆண்டவர் கூறினார்” என்று சொன்னான். 

இதைக் கேட்டதும் வேருடன் மரம் சரிந்து விழுந்தது. அப்பொழுது அடியில் இருந்த புதையல் மேலே வந்தது. ஆனந்தன் புதையலை எடுத்துக் கொண்டு சிப்பியைத் தேடிப் பயணமானான். 

சிப்பியைக் கண்டு ஆண்டவன் சொன்னவாறு “உன்னிடம் முத்து இருக்கிறதாம் அதைத் துப்பினால் சிவபதம் அடைவாய்” என்றான். 

உடனே, சிப்பி தன்னுள் இருந்த முத்தை வெளியே துப்பி விட்டுச் சிவபதம் அடைந்தது. 

ஆனந்தன் அம்முத்தையும் எடுத்துக் கொண்டு வீட்டை நோக்கிப் பயணமானான். 

அங்கே…..

(இத்துடன் வேறு பகுதிகள் கிடைக்கவில்லை. உங்களிடம் இருந்தால் அனுப்பவும்.)

– தர்மத்தின் வெற்றி (சிறுவர் குறுநாவல்), முதற் பதிப்பு: மார்ச் 2002, பிரியா பிரசுரம், எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம், மட்டக்களப்பு, இலங்கை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *