தீபாவளியில் தேவ தரிசனம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 14, 2022
பார்வையிட்டோர்: 4,168 
 
 

(1944 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

சுந்தரஞ் செட்டியார் ஒரு துணி வியாபாரி . சிறுமுதலைக்கொண்டு ஆரம்பித்து, தம்முடைய நான் யத்தினாலும், விவேகத்தினாலும் நல்ல ஆஸ்தி சம்பாதித்தார். அவர் மனைவி மீனாட்சியம்மாள் தீவிர தெய்வபக்தி கொண்டவள். பழைய ஆசார ஒழுக்கங்களை ஏகாதசி விரதம் உள்பட மிக்க கண்டிப்பாய் நடத்தி வந்தாள். மத்தியானத்தில் சாப்பிடுமுன் வீட் டுக்கு வெளியே சென்று, காக்கை, குருவிகளுக்காக அரிசி இறைத்துவிட்டுத்தான் சாப்பிட உட்காருவாள் செட்டியாரும் தம் மனைவியை மிகவும் கௌரவித்து வந்தார். மனைவியின் பாக்கியத்தினால் தான் தம் வியாபாரம் சரியாக நடைபெற்று வந்ததாய் அவர் நம்பினார்.

‘ஜெய் சீதாராம் ! – சந்நியாசி உடை , முகத் தில் தேஜஸ், ஒரு கையில் தண்டம், ஒரு கையில் கமண் டலம், இவைகளுடன் நடு வயது கொண்ட ஒருவர். செட்டியார் வீட்டிற்குள் நுழைந்து இம்மாதிரிச் சத்தம் போட்டார்.

அன்று தீபாவளிக்கு முதல் நாள். செட்டியார் மனைவி இரு கை நிறைய அரிசியுடன் உள்ளே யிருந்து வந்து சந்நியாசியை எதிர்கொண்டு சென்றாள். “அரிசி வேண்டாம்! சமைத்த அன்னம் இருக்குமாயின் கொடுப்பாய் என்றார் பெரியார்.

‘ சமையல் முடிகிற சமயந்தான். அரை நாழிகை காக்க வேண்டும் ” என்று சொல்லி ஒரு பலகை போட்டு அமரச் சொன்னார். பிறகு அவர் அன்னம் வாங்கிக் கொண்டு, “அம்மணி! உனக்கு ஒரு குறைவுமில்லை. நீ புண்ணியவதி, பதிவிரதை. ஒரு மந்திரம் சொல்லு கிறேன். அதைக் கற்று நாளை கங்கா ஸ்நானம் செய்து ஜபிப்பாயானால், குடும்பத்தின் பெரியோர்களையும். சுவர்க்கவாசிகளையும், ரிஷிகளையும் காண்பாய். என்றார்.

மிகவும் தெய்வ பக்தி கொண்ட செட்டியார் மனை விக்கு ஆனந்தம் பொங்கிற்று. உபதேசம் பெற்றாள். மறுநாள் காலை பொழுது புலருமுன், எண்ணெய் தேய்த்து, தீபாவளி ஸ்நானம் செய்துவிட்டு, மந்திரத்தை ஆயிரத்தெட்டு தரம் சந்நியாசி சொன்ன முறைப்படி ஜபித்தாள். உடனே வீட்டில் பெரும் மங்கள கோஷம்; ஆசாரத்தில் பெருங்கூட்டம் : திவ்விய ஆசனங்கள்: அவைகள் மேல் ஆதித்திய ஒளி கொண்ட முகங்களுடன் பெரியோர்கள்.

தம் முப்பாட்டனாரும், செட்டியாரின் முப்பாட்ட னாரும். இன்னும் பலரும். இவர்களுடன் கையில் வேணு பிடித்தவர் ஒருவர் : அவர்தான் மோசக் காரக் கிருஷ்ணன். பக்கத்தில் வில்லை வைத்துக் கொண்டு ஒருவர்; அவரே ஸ்ரீ ராமன். அவர் பக்கத்தில் கிழவர் வசிஷ்டர் . கலப்பை ஒன்றைத் தூக்கிக் கொண்டு பலராமன். பெரிய கோடாலி ஒன்றைக் தோளின் மேல் வைத்துக்கொண்டு மற்றொரு ராமன். இன்னொரு பக்கத்தில் பீமனும், அர்ச்சுனனும், தர்ம புத்திரருங்கூட உட்கார்ந்திருந்தார்கள். இப்படி எங்கு நோக்கிலும் தேவர்களும் ரிஷிகளும், பாரத தேசத்தின் உன்னத புருஷர்களும். ஒரு சமயம் தரிசனம் காட்டின வர் மற்றொரு சமயம் மற்றொருவராகக் காணப்பட் டார். எள் போட்டால் கீழே விழாதபடி ஆசாரம் நிறையக் கூட்டம். இதைக் கண்ட மீனாட்சியம்மாள் ஆனந்த பரவசமாகி, ”நாராயணா ஓ!” என்று கூக் குரல் போட்டு மூர்ச்சையடைந்தாள்.

செட்டியார் மெத்தையிலிருந்து ஒரே குதியாய்க் கீழே குதித்து இறங்கினார். பார்த்ததும் அவருக்கு ஒன்றும் விளங்கவில்லை. ‘இதென்ன! வீட்டில் யாரோ வேஷம் போட்டுக்கொண்டு ஒரு கூட்டம் நிறைந்திருக்கிறது! இது யார் காரியம்? என்று யோசித்துக்கொண்டே சுற்றிப் பார்த்தார். செட்டியார் துணி வியாபாரியானபடியால் முதலில் வந்து கூடியிருக் கும் ஆட்களின் உடைகளைக் கவனித்தார். “ஓஹோ! இது ஒரு காந்திக் கூட்டம்’ என்று நிச்சயித்தார். எல்லாரும் கதர் உடுத்திருந்தார்கள். சிலர் மோட்டாக் கதர் ; சிலர் நைஸ் – கதர் ; சிலர் வெறுங் கதர் : சிலர் கரைபோட்ட கதர். ஆனால் எல்லாரும் கதர்தான்.

“ஐயன்மீர் ! நீங்கள் ஏன் இங்கே வந்தீர்கள்? போலீசார் ஆட்சேபிப்பார்கள் ” என்றார் செட்டியார். – கொல் என்று நகை கிளம்பிற்று. ‘நீங்கள் சிரிக்கலாம். நீங்கள் சிறைக்குப் போகத் தயார். நான் இல்லை என்றார் செட்டியார். “நீங்கள் வேறு எங்கேயாவது போங்கள். பக்கத்து வீட்டில் வக்கீல் ஐயர் இருக்கிறார். அங்கே போய் வேண்டிய ஆட்டம் போடுங்கள்” என்று மறுபடியும் சொன்னார்.

“குழந்தாய்” என்று சொல்லிக்கொண்டு ஒரு கிழவ னார் செட்டியாரை நெருங்கினார். இவர்தான் சுந்தரஞ் செட்டியாருடைய முப்பாட்டனார். “என்னை உனக் குத் தெரியவில்லையா? உன் தந்தை வாசுதேவனைப் பெற்ற தகப்பனார் சுந்தரம், என் அருமைக் குழந்தை ஆச்சே? ஏன் பயப்படுகிறாய்? என்று செட்டியாரை அணைத்துக்கொண்டு முத்தமிட்டார்.

“எல்லாம் சரிதான் பெரியோர்களே! ஆட்டம் நன்றாயிருக்கிறது! உங்கள் எல்லாருக்கும் சாஷ்டாங்க நமஸ்காரம். தயை செய்து வீட்டைவிட்டுப் போங்கள். இந்தக் கதர்க்கூட்டம் இங்கே வேண்டாம்? பண்டிகை தினம். போலீசார் வந்து தொந்தரவு செய்தால் நன்றாயிருக்காது” என்றார் செட்டியார். “அப்பனே. எதைக் கதர் என்று சொல்லுகிறாய்? இதைத் தவிர வேறு துணி எனக்கு ஏது? நான் பூவுலகத்தில் வாழ்ந்தபோது இந்தத் துணியேதான் கட்டினேன். எல்லாருக்கும் இந் தத் துணிதான். அப்போது சீமைத்துணியே ஊரில் இல்லையே! நாங்கள் என்ன செய்யமுடியும்? அந்தத் துணியுடன் தான் நான் சுவர்க்கம் போனேன். அங்கே துணிகள் கிழியமாட்டேன் என்கிறது. உன் மனைவி பதிவிரதை அவசரமாகக் கூப்பிட்டாள். வந்தேன் – என்றார் கிழவர்.

தீபாவளியில் தேவதரிசனம் 203 செட்டியாருக்கு ஒன்றும் விளங்கவில்லை. “இது ஏதோ மோசம்! இது ஒரு காங்கிரஸ்காரர் கூட்டம்! இல்லாவிட்டால் இப்படி எல்லாரும் கதர் உடுத்தி யிருப்பார்களா?’ என்றே மறுபடியும் நினைத்தார். முடிவில், முகஜாடையிலேயே நம்பிக்கை விளைக்கும் தருமபுத்திரரண்டை சென்று, தண்டனிட்டு நின்று. “ஐயா , தங்களைப் பார்த்தால் மோசம் செய்யமாட்டீர் என்று தோன்றுகிறது. உண்மையைச் சொல்லும். இது என்ன சமாசாரம்? ” என்றார்.

“மகனே. ஒன்றும் மோசமில்லை. நாம் பூவுலகத் தில் வாழ்ந்த காலத்தில், துணியென்றால், கைராட்டை நூலால் நெய்த கைத்தறித் துணிதானே? அதற்கு நீங்கள் கதர் என்று இப்போது பேர்வைத்துக்கொண் டிருக்கிறீர்கள். அப்போது நம்மிடையில் வேறு துணி ஏது? பாரத நாட்டிற்கு வேறு தேசத்திலிருந்து துணி வந்ததே கிடையாது. ஊரில் ஏராளமான துணி குவிந்து கிடந்தது. வெளி நாடுகளுக்குங்கூடக் கப்ப லேற்றி அனுப்பிவந்தோமே ! அந்தத் துணியையே நாங்கள் இப்போதும் உடுத்தி வருகிறோம். நீங்கள் ஏன் விட்டு விட்டீர்கள் ? நாட்டில் ரொம்பத் தரித்திர மாமே? என்றார் தருமபுத்திரர்.

பிறகு, செட்டியார் தைரியங்கொண்டு, ஒவ்வொரு வராக எல்லாரண்டையும் சென்று, தண்டம் சமர்ப் பித்து, அவரவர்கள் துணியைத் தொட்டுத் தொட்டுப் பரீட்சை செய்து பார்த்தார். ஸ்ரீராமன், பலராமன், கிருஷ்ணன், பரசுராமன். பீஷ்மர், அர்ச்சுனன் யாருடையதைப் பார்த்தாலும் சுத்தக் கதர்தான்.

“இதென்ன வினோதம் நான் ஏதோ காந்திதான் இந்தத் துணி கட்டு என்று கலகம் செய்கிறார் என்று பார்த்தேன்! இந்தக் கூட்டமெல்லாம் அதையே கட்டி யிருக்கிறார்களே என்று செட்டியார் மனதில் சிந்தித் துக்கொண்டே மனைவியைப் பார்த்தார்.

மீனாட்சியம்மாளின் ஆனந்த மூர்ச்சை, இன்னும் தெளிந்ததும் தெளியாததுமாக இருக்கையிலேயே, “போய் வருகிறோம்” என்று ஒரு சப்தம் கிளம்பிற்று.

செட்டியார் வீட்டு ஆசாரம் காலியாய்ப் போயிற்று.

நம்முடைய முன்னோர்கள் காலத்தில் உண்மையில் கதரைத் தவிர வேறு துணியே இருந்ததில்லை. அந்தத் துணியைத்தான் இன்னும் அவர்கள் சுவர்க்கத்திலும் உடுத்தி வருகிறார்கள் ; நாமும் என் உடுத்திப் பார்க்கக் கூடாது? தேசத்திற்கு அதனால் பழைய பெருமையும் வரும் என்றே எண்ண இடமிருக்கிறது.

– ராஜாஜி சிறுகதைகள், முதற் பதிப்பு: 1944, புதுமைப் பதிப்பகம், காரைக்குடி

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *