“என்னங்க.. என்னங்க.. ராத்திரி பூரா குழந்தை அழுகற சத்தம் கேட்டுச்சே.. என்னவா இருக்கும்?”
“என்ன.. குழந்தை அழுகற சத்தமா.. எனக்கு அப்படி ஒன்னும் கேக்கலையே..!”
“என்னங்க சொல்றீங்க? அப்பறம் எனக்கு மட்டும் எப்படி கேட்டுச்சு..?”, என்று பயந்தபடியே கேட்ட மனைவியை நானும் பயந்தபடியே பார்த்தேன்…
எனக்கு ஒரு பழக்கம்.. படுத்ததும் உடனே தூங்கிவிடுவது.. ராத்திரியில் என்ன நடந்தாலும் அது தெரியாது..
ஆனால்.. மனைவியின் பழக்கம்.. படுத்தவுடன் தான்… எல்லாவற்றையும் பற்றி அசை போடுவது.. அதில் நல்லது குறைவாகவே இருக்கும்… தேவையில்லாததை எல்லாம் யோசித்து.. தலைவலி வந்து… அதற்கு மாத்திரை போட்டு… தூங்கி.. விழித்து.. தூங்கி.. விழித்து… விடியும் போது மீண்டும் தலைவலியோடு எழுந்திருப்பதே பல நாள் பழக்கம்.. எனவே அழுகைச்சத்தம் கேட்டாலும் கேட்டிருக்கும்…
“இங்க பாருங்க.. இன்னைக்கு தூங்காம இருந்து அது என்னானு கண்டுபிடிங்க..”, என எனக்கு கட்டளை கிடைத்தது..
ஆனாலும் ‘மனைவி இடுவதே கட்டளை.. அந்த கட்டைளையே சாசனம்’ என்று என் மூளைக்கு யாரும் சொல்லித் தரவில்லை போல.. உடம்பு.. படுத்ததும் வழக்கம் போல அதிக குறட்டைச் சத்தத்துடன் தூங்கியதாய்.. அடுத்த நாள் எழுந்திரிக்கும் போது.. கோபமாய் கண்ட மனைவியிலிருந்து தெரிந்து கொண்டேன்…
“இன்னைக்கு கொஞ்சம் அதிகமா கேட்டுச்சுங்க.. அப்ப உங்கள நல்லா எழுப்பினேன்… ஆனா நீங்க தான் எருமமாடு கணக்கா… கொஞ்சம் கூட முழிக்க முயற்சிக்கல…”
‘பசங்க.. கோடை விடுமுறைக்கு ஊருக்கு சென்றுள்ளதால் நாங்க ரெண்டு பேரும் தான் வீட்டுல… பக்கத்து வீடுகளிலும் குழந்தைகள் யாரும் இல்ல.. ம்.. எப்படி அந்தச் சத்தம்.. பேய் பிசாசெல்லாம் இருக்காது.. அப்பறம் என்னவாக இருக்கும்…!!’ என்று மூளையை போட்டு குழப்பியதில் ஒன்று கண்டுபிடித்தேன்..
“சரி.. நான் இப்ப ஒன்னு சொல்றேன்.. நீ போய் தூங்கு பார்க்கலாம்..”
“என்னங்க சொல்றீங்க..? இப்பத்தானே எந்திருச்சேன்…”
“சும்மா தூங்கற மாதிரி முயற்சி பண்ணு.. போ..”, னு சொல்லி அந்த அறையில் அவளை விட்டு கதவைச் சாத்தினேன்..
பின் நான்கு நிமிடம் கழித்து.. வெளியே வரச் சொன்னேன்…
உடம்பு நடுங்கிக்கொண்டிருந்தது…
“என்னாச்சு…?”
மறுபடியும் எனக்கு அந்த அழுகைச்சத்தம் கேட்டுச்சுங்க…”
“ஹ்ஹி ஹி…”
“என்னங்க சிரிக்கறீங்க?”
“இங்க பாரு..”
“அட இது தானா அது…”
“ஆமா.. இந்த பொம்ம எப்பவுமே அழுதுக்கிட்டு தான் இருக்கு.. பழசுனு பசங்க தூக்கி போட்டாச்சு.. நைட்டு.. அமைதியான சூழ்நிலைல இதோட சத்தம் உனக்கு கேட்டிருக்கு.. அது அந்த பொம்மைக் குப்பைக்குள்ள இருந்துச்சு.. அத எடுத்துத்தான் இப்ப இங்க கதவுக்குப் பக்கம் வச்சேன்… புரிஞ்சுதா…?”
“சரிங்க”, என அசடாய் சிரித்தாள் மனைவி..
“இனிமே இந்த பொம்மை அழுகாது..”, எனச்சொல்லி அதன் வழுவிழந்த பேட்டரியை எடுத்து வீசியெறிந்தேன்…