தானாடி…சதையாடி…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 13, 2024
பார்வையிட்டோர்: 307 
 

(1990ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 

ராசம்மா, அம்மியில் துவையல் அரைத்துக் கொண்டிருந்த வேளை. அவள் அண்ணண் வைத்திலிங்கமும், அண்ணி வடிவம்மாவும், மல்லுக்காக சொற்களை ஆயுதங்களாய் வீசிக்கொண்டிருந்த சமயம். மாடுகளுக்காக தொட்டியில் தவிட்டை அள்ளிப் போட்டு, ஒரு பனை மட்டையால் குடைந்துக் கொண்டிருந்த தம்பி மயில்வாகனன், உலக்கையில் நெல் குத்திக்கொண்டிருந்த தங்கை ராணியை திட்டிக் கொண்டிருந்த நேரம்…..

சித்திரசேனன், தோளிலே தூக்குப் பை தொங்க, ஒரு கை டிரங்க் பெட்டியைப் பிடிக்க, உள்ளே வந்தான். ராசம்மா, அவன் பெட்டியை வாங்க வரவில்லை. குறைந்தபட்சம், கணவனின் வரவை அங்கீகரிக்கும் வகையில் எழுந்திருக்க கூட இல்லை.

வீட்டின் கொல்லைப்புறத்தில் குதிபோட்டுக்கொண்டு இருந்த எட்டு வயது மகனும், ஆறு வயது மகளும், அப்பாவைப் பார்த்து, துள்ளிக் குதித்தபடி உள்ளே தாவியபோது, ராசம்மா, அவர்களின் கைகளைப் பிடித்து, தன்பக்கம் இழுத்துக்கொண்டாள். இரு குழந்தைகளையும் இரு பக்கமும் அணைத்தபடியே கவரிலே தலைபோட்டு, அவனைப் பார்க்காதது மாதிரி பார்த்தாள்.

அவனை ‘வாங்க மாப்பிள்ளை’ என்று அதட்டலாகக் கூப்பிட்டாலும், அதில் அன்பை வைக்கும் ராசம்மாவின் அண்ணன் வைத்தியலிங்கம் கூட, ‘உம்’ என்று உருமினான். அதற்கு வாங்க என்று அர்த்தமா அல்லது போய்யா’ என்ற பொருளா என்பது புரியாமல், சித்திரசேனன் குழம்பினான். அதற்குமேல், அடியெடுத்து வைக்க முடியாமல் நின்றான்.

அந்தச் சமயம் பார்த்து, மைத்துனி ராணியின் உலக்கைச் சத்தம் பயமூட்டும்படியும், பயமுறுத்தும் படியும் ஒலித்தது. அவள் தன்னையே தலைகீழாகப் பிடித்து, உரலில் ஓங்கி இடிப்பதுபோல், சித்திரசேனன், தனது தலையை கையால் பிடித்துக் கொண்டான். இப்படி எல்லோரும், அவனை ஏளனமாகவும், இளக்காரமாகவும் பார்த்தபோது –

வைத்தியலிங்கத்தின் வடிவம்மா, கையில் ஒட்டிக்கொண்ட அரைகுறையான மஞ்சள் மசாலா கைகளோடு ஓடிவந்து, அவன் கையில் இருந்த டிரங் பெட்டியை ஒரு கையால் வாங்கி, தரையில் வைத்தபடியே, இன்னொரு கையால் அவன் தூக்குப்பையை வாங்கி, அதிலேயே தனது மசாலா கையை துடைத்தபடி, எல்லோரையும் திட்டினாள்.

“அண்ணாச்சி ஆறுமாசத்துக்குப் பிறவு மெட்ராஸ்ல இருந்து அரையாளா வாராவ. அவியகிட்ட வான்னு கேட்க வாய் வரமாட்டக்கோ? இதுதான் ஒங்க குடும்ப லட்சணம். நீங்க வாங்கண்ணாச்சி…. யார் பேசினா என்ன…? யார் பேசாட்டா என்ன…? நானிருக்கேன்.”

சித்திரசேனனுக்கு கொஞ்சம் சங்கடமாகத்தான் இருந்தது. எல்லோரையும் நோட்டம் போட்டுப்பார்த்தான். அவர்கள் என்னமோ, அவனை உள்ளே வரவிட்டதே பெரியது என்பது மாதிரி, அவனைப் பார்க்காமலே, அவன் அங்கே இல்லை என்பதுபோல் இருந்தார்கள்.

சித்திரசேனன், மனைவியின் பிடியை மீறி முண்டியடித்த, தனது குழந்தைகளை குறிப்பாகப் பார்த்தபோது, ராசம்மா விம்மினாள். இரண்டு கைகளிலும் பிடித்து வைத்திருந்த மகனையும், மகளையும் சித்திரசேனன் பக்கமாகத் தள்ளிவிட்டபடியே, “போங்க. ஒப்பாகிட்டே , நீங்க பட்டபாட்டைச் சொல்லுங்க…” என்று சொன்னபடியே முகத்தைத் திருப்பி, முன் நெற்றியைச் சுவரில் சாய்த்தபடி கேவிக் கேவி அழுதாள்.

சித்திரசேனன், குழந்தைகளை இரண்டு விலாப் பக்கமும் அணைத்தபடி, எல்லோரையும் தர்ம சங்கடமாகப் பார்த்தபோது, கவரிலே தலை போட்ட ராசம்மா, திடீரென்று முகத்தைத் திருப்பி, அவனை முகத்தால் முட்டப் போவதுபோல் நெருங்கினாள். இரண்டு பிள்ளைகளின் முதுகுகளிலும் இரண்டு கைகளால் பட்டுப் பட்டென்று சாதிவிட்டு –

பிறகு, மகன் ஆறுமுகத்தை, குனிந்து அவன் காதை நிமிர்த்தி பின்பகுதியைக் காட்டினாள். அதில் நகப் பதியல் இருந்தது. ரத்தச் கவடு மங்கி, காது ஒட்டுப்போட்டுதைக்கப்பட்ட சதைப் பகுதி போல் காட்டியது. ராசம்மா, மகனை விட்டுவிட்டு, மகளைத் திருப்பி, அவள் பிடரியைக் காட்டினாள். அது லேசாக வீங்கியிருந்தது. அம்மா, அடிப்பாள் என்று பயந்துபோய், இன்னும் முதுகை குனிந்து வைத்திருந்த ஆறுமுகம் பயல் நிமிர்ந்தான். அடக்கி வைத்த வார்த்தைகளை ஆவேசமாகக் கத்தினான்.

“அப்பாப்பா…. சித்தப்பா…”

“ஏல்….! எவனப்போயி சித்தப்பான்னு சொல்லுதே…. நடந்தத மட்டும் சொல்லுலே…”

அந்தப் பயல், நாய்மாமன் போல் குலைத்த தாய் மாமனை பயத்தோடு பார்த்துவிட்டு, தந்தையிடம் பாசத்தோடு சொன்னான்.

“அப்பாப்பா… அந்த துரை சித்தப்பா… தப்புத் தப்பு… படபடத்தான்… துரை… என் காதைப் பிடிச்சு… அந்தரத்துல அப்படியே தூக்குனாம்பா…. காது ரெண்டும் பிஞ்சுட்டுப்பா… என்கிட்டே வந்த தங்கச்சி தலையை வளைச்சுப் பிடிச்சு அடிச்சுட்டான். அம்மாவை வேற அரிவாளை எடுத்துட்டு வெட்டப் போனாம்பா. அம்மாவை கொல்றதுக்குன்னே அரிவாளை வச்சுட்டே இருந்தாம்பா.”

ராசம்மாவின் அண்ணன், துண்டை எடுத்து தூரமாய் எறிந்துவிட்டு, சித்திரசேனனை பேச்சாலேயே எரித்தான்.

“ஏன்…. அரிவாள எடுக்கமாட்டான்? இல்லாதவன் பொண்டாட்டி எல்லாத்துக்கும் மயினிதானே…? புருஷன் சரியாய் இருந்தால், பொண்டாட்டி இப்படியா சீரழிவாள்?”

சித்திரசேனனுக்கு சற்றே கோபம் வந்தது. அதேசமயம், மச்சானுக்கு கோபத்தை ஏற்படுத்தாத அளவுக்கான கோபத்தோடு கேட்டான்.

“நான் எதுல மச்சான் சரியாய் இல்ல?”

மச்சான்காரன் வைத்தியலிங்கம், சித்திரசேனனை நெருங்கினான். அண்ணன் அக்காவின் கணவனை அடிக்கப் போகிறானோ என்று பயந்து, தவிட்டைத் அலம்பியதம்பி எழுந்தான். உரலைக் குத்திய ராணி, உலக்கையை அந்தரத்தில் பிடித்தபடி யந்திரமாய் நின்றாள். ஆனாலும் மச்சான்காரன், சிறிது இடைவெளியில் நின்றபடியே கத்தினான்.

“என்ன கேட்கீரு? எதுல சரியில்லன்னா …. நீரு எதுலயுமே சரியில்ல… ஊர்ல விவசாயம் செய்து பிழைக்க கரி’ வலிச்சுப் போய் மெட்ராஸ் போனீரு . அங்கே போன பயலுக ஊருல சொத்து எடுக்கும்போது, நீரு ஊருல இருக்க சொத்த வித்து, கடையில் போட்டீரு. அதாவது பரவாயில்லே… ஒம்ம அம்மாக்காரி, தான் பேரில் இருந்த வீட்ட ஒமக்குத் தராமல்…. சின்ன மகனுக்கே கொடுத்துட்டாள்… பெத்த தாயோட ஓரவஞ்சனையை தட்டிக் கேட்க ஓமக்கு துப்பில்ல சரி, கட்டுன பொண்டாட்டியையாவது கையோட மெட்ராஸுக்கு கூட்டிப் போயிருக்கலாம். அவளையும் பிள்ளைகளையும் ஊர்ல விட்டுட்டு, மெட்ராஸைப் பார்த்து ஓடிட்டியரு. ஒம்ம தம்பி, என் தங்கச்சிய பேசின பேச்சையும், திட்டுன திட்டையும் ஒமக்கு லெட்டர் லெட்டராய் எழுதுனோம். ஒப்புக்கு வந்து அந்தப் பயகிட்டே பிச்சைக்காரன் மாதிரி கெஞ்சனியரே தவிர…. மிஞ்சல.”

இப்போது, தம்பிக்காரன், அண்ணணிடம் இருந்து வாய்ப் பொறுப்பை வாங்கிக் கொண்டான்.

“இப்படி நீரு… இடம் கொடுத்ததால்தான், என் அக்கா அந்தப் பயலுக்கு பயந்து வீட்டை பூட்டிட்டு இருக்க வேண்டியதாப் போச்சு…. நாங்க போய் கேட்கப் போனோம். ஒங்க ஊர்ப்பயலுவ… ஒண்ணாம் நம்பர் போக்கிரிப் பயலுவ… ஊர்விட்டு ஊர் வந்தா அதட்டப் போறீங்கன்னு எங்களை அதடறானுவ… ஒரு பொம்பளைய, ஒரு முழுத்த ஆம்புள அரிவாள் தூக்கிட்டு வெட்டப்போனது பெரிசாத் தெரியல….. என் அக்காவை, கிளியை வளர்த்து பூனைகிட்டே கொடுத்தது மாதிரி ஒம்மகிட்ட கொடுத்திட்டோம்.”

அண்ணன் – தம்பியரின் குரல்கள், எப்படி படிப்படியாக ஏறியதோ, அதுபோல் ராசம்மாவின் அழுகையும் கூடியது. விம்மல்கள், வெடிச் சத்தங்களாயின. தலைமுடி, தடம்புரண்டது. இதைப் பார்த்துவிட்டு தங்கைக்காரி ராணியும் அழுதாள். அது தான் சாக்கு என்றோ அல்லது இயற்கையாகவோ, உலக்கையை சுவரில் சாய்த்துவிட்டு அக்காவைக் கட்டிப் பிடித்து அழுதாள். அண்ணிக்காரியும், சுயத்தை இழக்கப் போவதுபோல் கைகளைப் பிசைந்தாள். இந்தப் பின்னணியில், மீண்டும் தவிடு கலக்கிய தம்பி, ”இந்த உடம்பை வச்சுட்டு எதுக்காக இருக்கணும்?” என்று தன்பாட்டுக்குச் சொன்னான். தனது உடம்பையும் ஏற இறங்கப் பார்த்துக் கொண்டான்.

சித்திரசேனனிடம் சினத் தீ மூண்டது. பச்சிளம் மகளின் வீங்கிய பிடரியைப் பார்க்கப் பார்க்க, அவன் முகுது நிமிர்ந்தது. சேதாரக் காதைக் காட்டிய மகனை நோக்க நோக்க, அவன் முகம் சிவந்தது. எல்லாவற்றிக்கும் மேலாக, அவனைப் பார்த்ததும் , ஏய் யார் வந்திருக்கா பாருங்க….. அப்பாடா அப்பாடா…’ என்று சொன்னபடியே , குழந்தைகளோடு முன்னால் வந்து நின்று வரவேற்கும் ராசம்மா , இப்போது அதுகளை விரட்டிவிட்டு, கணவனை ஓரம் சாய்த்துப் பார்த்தபடியே , உள்ளறைக்குள் போகிறாள். போகிற போக்கில் பார்த்தால், அவளது பளபளப்பான மிளகாய்ப் பழ மேனி, இப்போது வத்தலாகிப் போனது போன்ற தோற்றம்… கோலிகள் போன்ற கண்கள், தேய்ந்து போனதுபோல் கிடந்தன. மலை மேடான கன்னங்கள், பள்ளதாக்காய் காட்டின மனைவியை பார்க்கப் பார்க்க –

சித்திரசேனனுக்குள் ஒரு இந்திரசித் எழுந்தான். என்றாலும், அவனுக்கு எதிராக ஒரு லட்சுமணனும் மூளைக்குள் உருவானதால், அவன் உளறியும், இடறியும் பேசினான்.

“ஆனாலும்… முச்சந்தியில்… அவள் கிட்ட அசிங்மாய்…”

“எதுய்யா அசிங்கம்…? சொந்த பொண்டாட்டிய ஒருத்தன் அரிவாளை எடுத்துட்டு விரட்டுறான். அது அசிங்கமா தெரியல? அப்படி அரிவாளை எடுத்த கையை, வெட்டாமல் இருக்கிற நீரு பேடியிலயும் பேடி, பெரிய பேடின்னு அர்த்தம். உம்மால் ஒம்ம தம்பியை அடிக்க முடியாதுன்னு தெரிஞ்சுதான், நாங்களும் வரபோறோம். நீரு என்னடான்னா செத்த பிணமாய் நிக்கியரு… உடனே புறப்படும்….ஏன், செத்தவன் கையில் வெத்தல கொடுத்தது மாதிரி முகத்த வைக்கியரு? சரி…. ஒமக்கு இப்போ வேண்டியது தம்பியா….? பொண்டாட்டியா…?”

சித்திரசேனனின் இந்திரசித், லட்சுமணனை மயக்கிப் போட்டுவிட்டு, சூளுரைத்தான்.

“எத்தான்…..! இந்தத் தடவ அவனை விடப்போறதுல்ல…. இனிமேல், நான் அவனுக்கு அண்ணனும் இல்ல. அவன் எனக்குத் தம்பியுமில்ல…. சரி… எடும், வேல் கம்பை ….”

இன்னும், தொட்டியை குடைந்து கொண்டிருந்த தம்பி மயில்வாகனனை பார்த்து, அண்ணன் வைத்திலிங்கம் கத்தினான்.

“ஏல நீ பேடியா..?”

தம்பிக்காரன், தான் பேடியல்ல என்று அண்ணனுக்காவது நிரூபித்தால், அவனை எதிர்காலத்தில் பயமுறுத்த எளிதாக இருக்கும் என்பதுபோல், வேக வேகமாய் வீட்டுக்குள் ஓடி, ஒரு உருட்டை தடியை எடுத்துக் கொண்டான்.

அந்த வீட்டின் மூன்று பெண்களும் “அய்யோ … அய்யோ ….” என்றார்களே தவிர, அந்த புறநானூற்று வீரர்களை தடுக்கவில்லை.

கால, எம தூதர்கள் போல், அந்த மூவரணி, ஒரு வாய்க்கால் பாலத்தின் மேல் உட்கார்ந்திருந்தது. அதிக நேரம் காத்திருக்க அவசியமில்லை . எதிர்திசையில், சித்திரசேனனின் தம்பி துரை வந்தான். ஒரு சைக்கிளில் படுவேகமாக வந்தான். இரும்பைச் செதுக்கியது போன்ற உடம்பு. எப்போதும் கொதித்துக் கொண்டிருக்கும் கண்கள்.

சித்திரசேனன், தம்பியின் சைக்கிள் முன்னால் போய் நின்றான். உடனே துரையும் ஒரு காலை ஊன்றியபடியே சைக்கிளோடு நின்றான். “எப்பண்ணா வந்தே?” என்று சொல்லப் போனவன், அண்ணனின் தோரணையையும், அவனது மச்சான்கள் பற்களைக் கடித்துக் காட்டும் பகைப் பார்வையையும் பார்த்துவிட்டு பகைப்புலத்தை, நோட்டம் போட்டபடியே, உடம்பில் கழுத்துக்குக் கீழே அசைவற்று நின்றான். அண்ணனான சித்திரசேனன், சுக்கிரீவனாகி, தம்பியை வாலி போல் பாவித்துக் கொண்டான்.

“என் பொண்டாட்டிய…. எதுக்குல வெட்டப் போனே…? ஏல படபடத்தான்! ஒன்னத்தான்… கேட்கேன். பதில் சொல்லாமல் நீ நகர முடியாது.”

‘வெட்டுறதுக்கு அருவாள் தூக்கிட்டா… வெட்டுவனா?’

‘என் பிள்ளியள் எதுக்குல காத பிடிச்சி ரத்தம் வரும்படியா திருகுன?’

“என் பிள்ளியிளக்கூட திருவுறேன். உன் பிள்ளிய வேற – என் பிள்ளிய வேறயா… மயினி சொல்லிக் குடுக்குற கெட்ட கெட்ட வார்த்தைவள் ஒண்ணுகூட பாக்கியில்லாம, முட்டாப் பய புள்ளிய என் மேல ஏவி விட்டு துக…. ஏதோ கோவத்துல திருகிட்டேன். பிடரியில் அடிச்சுட்டேன். அதுக்காவ என் மனசு என்ன பாடு பட்டுது தெரியுமா? அப்புறம் வழியில் போன உன் பிள்ளியளுக்கு, கடல மிட்டாய் வாங்கிக்கூட குடுத்தேன். அம்மாக்காரி சொல்லிக் கொடுத்தது மாதிரி, அந்த மிட்டாயை என் மேல காறித்துப்பி எறியுதுக. நெசமாவே சொல்லபோனா, அண்ணன் – தம்பியை பிரிக்கிற உன் பொண்டாட்டிய, நெசமாவே வெட்டிப் போடணும். நான் அப்படி வெட்டாம விட்டதுக்கு நீ சந்தோஷப்படணும்.”

‘இதே மாதிரி ஒன் பொண்டாட்டிய நான் வெட்டிப் போடட்டுமா?’

‘உன் கொழுந்தியாள நீ என்ன வேணுமுன்னாலும் செய்துட்டுப் போ. உனக்கு இல்லாத அவமானமா எனக்கு…? கண்ணால் கண்டதும் பொய்யி… காதால் கேக்கறதும் பொய்யி… தீர விசாரிக்கிறதே மெய்யின்னு ஒரு சொலவடை இருக்கு… நீ படிச்சாதானே உனக்கு தெரியும்? இன்னும் கேட்பார் பேச்ச கேக்குற மிருகமாத்தான் இருக்கே?’

‘யாருல மிருகம்… இதுக்கு மேல பேசின கழுத்த கடிச்சி ரத்தத்த குடிச்சிடுவேன்.’

‘ஒன் கழுத்து இருந்தா தானே, அப்படி குடிக்கதுக்கு? நீ அண்ணனா பேசல… பங்காளியா பேசுற… நீ எத்தன தெம்மாடி பயவள் கூட்டி வந்தாலும் நான் கவலப்படல… வேணுமுன்னா பார்த்துபுடலாம்.’

மச்சான்காரன் வைத்திலிங்கம், சண்டைக்கு முன்னுரையாக, ஒரு கேள்வி கேட்டான்.

“என் தங்கச்சி, இவரு பொண்டாட்டியா? இல்ல… ஒன் பொண்டாட்டியால? இப்பவே எனக்கு தெரியணும்.”

“அட போய்யா… ஒனக்கு தெரியாதா அண்ணன் பொண்டாட்டி அரப் பொண்டாட்டி… தம்பி பொண்டாட்டி தான் பொண்டாட்டின்னு ஒரு சொலவடை இருக்கு.”

துரை, ஓரளவு பயந்தும், ஓரளவு இயல்பாகவும் விவகாரத்தை சாதாரணமாக ஆக்கப் போனான். அதற்குள், பெரிய மச்சான்காரன், அவன் சற்றும் எதிர்பாராத விதத்தில், துரையை மல்லாக்கக் கிடத்தினான். மைத்துனன் மயில்வாகனன், அவன் மார்பில் வலது காலை வைத்து ஆழப் பதித்தான். பிறகு, அதே பாத விரல்களால், அவனது மோவாயை கால் நகங்களால் குத்திக் குத்தி எதிரியின் முகத்தை மேலே மேலே நிமிட்டினான். துரை, மரண வலியில் துடித்தான். அதே சமயம், ‘என்னை விட்டுங்க’ என்று சொல்லப் போன வார்த்தைகளை கடித்துக் கொண்டான்.

நடந்ததை பார்த்துக் கொண்டு நின்ற சித்திரசேனனுக்கு, என்னவோ போல் இருந்தது. தம்பியை இடுப்பில் எடுத்ததும், தோளில் தூக்கியதும், நினைவுக்கு வந்தன. இவன் அடிக்கும் போதெல்லாம், அவனால் திருப்பிக் கொடுக்க முடியும் என்றாலும், தலைகுனிந்து செல்லும் அன்றைய தம்பி, அவன் நெஞ்சில் நிரலாடினான். ஒரு தடவை, தோட்டத்தில், கள்ளத் தேங்காய் பறித்ததாக தன் மீது குற்றஞ்சாட்டிய தெற்குத் தெருகாரப் பயல்கள் இரண்டு பேரை நோக்கி, தம்பி, அரிவாளோடு பாயந்ததும் நினைவுக்கு வந்தது. எங்க அண்ணாச்சி சம்மதிக்காம, நான் எந்த பெண்ணையும் கல்யாணம் பண்ண மாட்டேன்’ என்று அடிக்கடி சொன்னதும் கூர்மையாகக் குத்தியது.

சித்திரசேனன், மச்சான்கள் மீது பாய்ந்தான். பெரிய மச்சானை பிடரியில் இரண்டு போடு போட்டு தென் பக்கமாக உருட்டி விட்டான். தம்பியின் மார்பில் காலை அழுத்தியமைத்துனின் மார்பில் ஒரு குத்துக் குத்தி அவனை மல்லாக்க விழச் செய்தான்.

பிறகு, தம்பியை நிமிர்த்தி, தன்னோடு அணைத்துக் கொண்டான்.

– நிலவளம் 1990

– தராசு (சிறுகதைகள்), முதற் பதிப்பு: டிசம்பர், 2001, கங்கை புத்தக நிலையம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *