அறியாக் குழந்தை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 14, 2024
பார்வையிட்டோர்: 1,388 
 
 

(1944 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“அம்மா நான் கிட்டப் போனால் வெள்ளை மாடு முட்டவருகிறது. கறுப்பன் போனால் ஒன்றும் செய்யாமல் சும்மா நிற்கிறதே. இது ஏன் இப்படி?”

“அவன் அதனண்டை போய்ப் போய்ப் பழக்கம். அதனாலே அது சும்மா இருக்கிறது. உனக்குப் பழக்கமில்லை. அதனாலே முட்டுகிறது.”

“நானும் பழக்கம் பண்ணிக் கொள்ளுகிறேனே. அம்மா!”

“வேண்டாம். வேண்டாம். உனக்கு ஏன் அந்த வேலை? நீ விளையாடிக்கொண்டிரு. அவன் பறைப் பையன். மாடு மேய்க்க வேண்டும். இந்தா. போளி சாப்பிடு…”

சுப்பனுக்கு நாலு வயது. எதிர்பாராதபடி, வயதுக்கு மேலே பேசும் குழந்தை. தாய் தகப்பனுக்கு ரொம்பச் செல்லம். இரண்டு பெண் குழந்தைகளுக்குப் பின் பிறந்த முதல் ஆண் குழந்தை.

“அம்மா, போளி எதனால் செய்கிறது?”

“வெல்லம், பருப்பு, தேங்காய் எல்லாம் போட்டுச் செய்கிறது. சாப்பிட்டுப் பார்த்துச் சொல், நன்றாயிருக்கிறதா?”

“அம்மா. பறையன் என்றால் என்ன? கறுப்பன் ஏன் நம்ம வீட்டுக்குள்ளே வருவதில்லை? எல்லோரும் வருகிறார்களே?”

“அதப்படித்தான் குழந்தாய், அவன் பறையன்.”

“சொல்லம்மா! பறையன் என்றால் என்ன?”

“அதெல்லாம் உனக்குத் தெரியமாட்டாது. நீ போளி சாப்பிடு”.

“நான் சாப்பிடமாட்டேன். ஏன் கறுப்பன் உள்ளே வரக்கூடாது?”

“தொந்தரவு செய்யாதே . போ . அவன் எவ்வளவு அழுக்குடன் இருக்கிறான் பார். அவன் உள்ளே வந்தால் தீட்டாய்ப் போய்விடும்”.

“தீட்டு என்றால் என்னம்மா? மாட்டுச்சாணியா?”

“மாட்டுச் சாணி தீட்டல்ல. அவனுடம்பில் மண்ணும் சேறும் பார். அவன் குளிக்கிறதே கிடையாது. அவன் பறையன்..”

“அம்மா, நம்ம வீட்டிலே கறுப்பனைக் குளிக்கச் சொல்லட்டுமா?”

“இதென்ன விபரீதம்? சுப்பு போடா! நீ அவனோடு விளையாடாதே”.

“அவனோடுதான் விளையாடுவேன். அவனுக்கும் ஒரு போளி தா”.

“முடியாது. பறைப்பையனுக்குப் போளி தரவாவது? தந்தால் செய்த போளியெல்லாம் கெட்டுப் போகும். ஓடிப்போ. வாசலில் மாமா வந்திருக்கிறார். உன்னைக் கூப்பிடுகிறாராம். பார்.”

“இல்லை இல்லை. இன்னொரு போளி தா. பாவம். அவனும் சாப்பிடட்டும்.”

“முடியாது போ. இங்கேயே சாப்பிட்டுவிட்டுப் போ. அவனிடம் போகாதே.”

“அப்படியானால் எனக்கும் வேண்டாம்” என்று சொல்லிப் போளியைக் கீழே போட்டுவிட்டுப் புழக்கடைக்கு ஓடினான்.

“கறுப்பா! நீ பறையனா?”

“ஆமாம்.”

“நான் பறையனல்லவா?”

“சீ! நீ பாப்பான். நான் தான் பறையன்..”

“உனக்கு அம்மா இருக்கிறாளா?”

“ஓ! இருக்கிறாள்.”

“எங்க அம்மா மாதிரி இருக்காளா?”

“ஆமாம்!”

“உனக்கு போளி பண்ணித் தருகிறாளா?”

“போளியா! இல்லை. எங்க வீட்டில் போளி கிடையாது” என்று சிரித்துக்கொண்டே சொன்னான் கறுப்பன்.

“இன்று தீபாவளி. நாங்கள் எல்லாம் எண்ணெய் தேய்த்துக் குளித்தோம். நீ குளித்தாயா?”

“எங்கக் கிணற்றில் தண்ணீர் வற்றிப்போய் விட்டது. எண்ணெய்க்கு அப்பனிடத்தில் காசு எங்கே?”

“நம்ம வீட்டில் குளியேன்!”

“ஐயோ விடுவாங்களா உள்ளே?”

“நீ வா, கறுப்பா! குளித்துவிட்டு வந்தாயானால் வீட்டில் விடுவார்கள்.”

“ஐயையோ! உதைத்துப் போடுவார்கள்.”

“சீ. சீ! எங்கம்மா உதைக்கவே மாட்டாள்.”

இப்படிப் பேசிக்கொண்டிருக்கும் போது மாமா கிருஷ்ணய்யர், “அப்பா, சுப்பு இந்தா பட்டாசு” என்று சொல்லிக்கொண்டு வந்தார்.

உடனே சுப்பு ஒரு குதிகுதித்து மாமாவிடம் போய், அவர் தோள் மேல் ஏறி உட்கார்ந்தான். அவரும் அவனைக் கட்டியணைத்துப் பிறகு அவன் கையில் பட்டாசுக்கட்டைக் கொடுத்து, “சுடத் தெரியுமா?” என்று கேட்டார்.

“ஓ! தெரியும்” என்று சொல்லிக்கொண்டு பட்டாசுக்கட்டைத் திறந்து சரங்களைப் பிரித்து. “மாமா! இதில் பாதி கறுப்பனுக்கு அறுத்துக் கொடு” என்றான்.

“பறைப்பையனுக்கு என்னத்திற்குப் பட்டாசு? அவனைத் தீண்டாதே வா, உள்ளே போவோம் என்று சொல்லிவிட்டு, “பறைப்பயலே. உனக்கு என்ன இவ்வளவு கர்வம்? குழந்தைக்கு இவ்வளவு பக்கம் வருகிறாய். ஓடிப்போ தூர” என்று ஒரு அதட்டு அதட்டினார் மாமா.

கறுப்பன் ஓடி ஒதுங்கி நின்றுகொண்டான். ஆனால் அவன் கண் பட்டாசுக்கட்டின் மேலேயே இருந்தது. சுப்புவுக்கு உலகம் விளங்கவேயில்லை. அப்போது சுப்புவின் தாயாரும் வந்தாள்.

“உன் குழந்தையைப் பார் சாவித்திரி! பறைப் பையனுக்கும் பட்டாசு கொடு என்று தொந்தரவு செய்கிறான்” என்று சுப்புவை எடுத்து முத்தமிட்டார்.

“இந்தக் குழந்தை உண்டோ இல்லையோ, விபரீதம் அதை என்னவென்று சொல்லுவேன்?” என்று வெகு பெருமையோடு அவளும் சுப்புவை எடுத்து அணைத்து முத்தமிட ஆரம்பித்தாள். சுப்புவுக்கு உலகம் இன்னும் விளங்கவில்லை. கறுப்பன் மாட்டைப் பிடித்துக்கொண்டு வயலுக்குப் போய்விட்டான்.

அப்போது சுப்புவின் சின்ன அக்காள் பார்வதி. “பறையருக்கும் தீயருக்கும் புலையர்க்கும் விடுதலை” என்ற பாரதியாரின் பாட்டைப் பாடிக்கொண்டே வந்தாள்.

“அம்மா. பேபர் பார்த்தாயா? கோயில்களை எல்லாம் பறையருக்குத் திறந்து விடுகிறார்களாமே” – என்று கேட்டாள்.

“இது என்ன அவதியோ தெரியவில்லையே?” என்றாள் சாவித்திரி.

“உனக்குத் தெரியாதா, சாவித்திரி? உலகமே தலைகீழாகப் போகிறது” என்றார் கிருஷ்ணய்யர்.

-ராஜாஜி சிறுகதைகள், முதற் பதிப்பு: 1944, புதுமைப் பதிப்பகம், காரைக்குடி

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *