கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 12, 2016
பார்வையிட்டோர்: 8,084 
 
 

வீட்டுக்கு முன்னால் ஒரு பெரிய பலா மரம், தாராளமான முறையிற் காய்த்துக் கிடக்கிறது. பெரிதும் சிறிதுமான நிறையக்காய்கள் பலாமரத்தில் ஒட்டிக் கிடக்கின்றன. பெரிய காய்களுக்குப் பக்கத்தில் சிறிய காய்கள் ஒட்டிக்கொண்டவிதம்,தாய்க்குப் பக்கத்தில் தவழும் குழந்தைகளை ஞாபகப் படுத்துகின்றன.பலா மரத்தின் கிளையில் ஒரு குருவிக்கூடு தொங்குகிறது. தாய்க்குருவி, எங்கேயெல்லாமோ தேடிக்கொண்டுவந்த புழு பூச்சிகளைத் தன் குஞ்சுகளுக்கு ஊட்டுவதைப்பார்க்க அந்தக்குருவியின் தாய்ப்பாசம் மனத்தை நெகிழவைக்கிறது.தாய்க்குருவி கொடுக்கும் உணவைப் பங்குபோடும் குஞ்சுகளின் கீச்சுக் கீச்சு என்ற சப்தம் மகேஸ்வரியின் நித்திரையைக் குழப்புகிறது.

அதிகாலையில் சந்தைக்கு மரக்கறிகள் கொண்டுபோகும் பெண்களின் கலகலப்பில் அவள் தனது நித்திரையிலிருந்து எப்போதோ சாடையாக விழித்துவிட்டாள்.

கட்டிலில் எழும்பியிருந்து,இரும்புக் கம்பி போட்ட ஜன்னலுக்கப்பால்,குருவிகளின்; இந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவளின் குழந்தை,பிறந்து இரண்டுகிழமையான பிஞ்சுமண் மெல்லமாக அசைந்துகொண்டிருந்தது.அந்தக் குழந்தைக்கு அவர்கள் இன்னும் பெயர்வைக்கவில்லை. அவளின் கணவன் துரைராஜா,ஏதும் ‘மொடர்னாகப்’ பெயர்வைக்கவேண்டும் என்று சொன்னான்.

ஆனால் மகேஸ்வரிக்கோ,இறந்து விட்ட தனது தாயின் பெயரைத் தனது பெண் குழந்தைக்கு வைக்க விரும்பம். அவளின் தாயின் பெயர்,சிவமலர். அந்தப் பெயரைச் சொல்லித் தனது செல்ல மகளைக் கொஞ்சினாள்.

‘சிவமலர் என்ற பேரைக் கேட்க ரசிக்கிறதா?’ என்று அந்தச் சின்னப் பிறவியிடம் கேட்டுக்கொண்டு, சிவமலர் சிவமலர் என்று இரண்டு மூன்று தடவைகள் குழந்தையை அழைத்துப் பார்த்தாள்.

குழந்தைக்குப் பெயர்வைப்பதை,முப்பதாம் நாள் முடிவு கட்டலாம் என்று அவளின் கணவன் சொல்லியிருக்கிறான்.அவள் தனது குழந்தையை ஆசையுடனும் பாசத்துடனும் பார்த்துக் கொண்டிருந்தாள். குழந்தை மெல்லமாக அசைந்தது. குழந்தைக்கு நித்திரை கலைகிறது.கைகளை முறுக்கி, கால்களை உதைத்து நெழிகிறது. பாலுக்கு அழப்போகிறது என்று மகேஸ்வரிக்குப் புரிகிறது.; தாய்ப்பாலின் கனத்தில் தினவெடுத்த அவளின் முலைகள் நோகத்தொடங்கிவிட்டன.

குழந்தை பிறந்தால், ஒரு தாயின் உடம்பில் என்ன மாற்றங்கள் வரும்,எப்படியான வேதனைகள் வரும் என்று யாரும் அவளுக்குச் சொல்லிக் கொடுக்கவில்லை. அவளுக்கு அம்மா இல்லை. மகேஸ்வரி பிறந்து ஒருமாதத்திலேயே அவள்தாய் இறந்து விட்டாள். மூன்று ஆண் குழந்தைகளுக்குப் பின்னர் பிறந்த அருமை மகளை ஆசையாய் வளர்க்க முதல் அவள் வாழ்க்கை முடிந்து விட்டது.

மகேஸ்வரியை அவளது பாட்டியார் வளர்த்தாள்.

அவள் காணாத அவளின் தாயின் நினைவு வந்தால் ,மகேஸ்வரிக்குத் தாங்காத சோகம் வரும். அதிலும், இப்போது குழந்தை பிறந்து, அதனால் அவள் துயர் படும்போது தாயின் நினைவு அவளை மிகவும் துன்புறுத்தும். மகேஸ்வரி அதிகாலையில் தாயை நினைத்து அழுதுகொண்டிருக்காமல், தனது காலைக் கடன்களை முடித்துக்கொண்டு, குழந்தைக்குப் பால் கொடுக்க எழுந்தாள்.

அவர்களின் பாத்றூம் மூடியிருந்தது.மகேஸ்வரிக்கு மூன்று மைத்துனிகள்.அதில் ஒருத்தி உள்ளேயிருக்கலாம். முதலாவது மைத்துனிக்கு,இப்போது முப்பத்தைந்து வயது,இன்னும் திருமணமாகவில்லை.அந்த மைத்துனிக்கு, எப்போதும் ஏதோ ஒருவிதத்தில் சுகமில்லாமலிருக்கும். அவள் பாத்றுர்முக்கு உள்ளே போனால் கிட்டத்தட்ட ஒரு மணித்தியாலத்துக்கு வெளியே வரமாட்டாள்.இரண்டாவது மைத்துனிக்கு முப்பத்தி மூன்றவயது. ஆசிரியையாகவிருக்கிறாள்.அவளுக்கும் இன்னும் திருமணமாகவில்லை. பத்து மைல்களுக்கப்பாலுள்ள ஒரு பாடசாலையிற் படிப்பிக்கிறாள். காலை ஆறுமணிக்கு எழும்பி வெளிக்கிட்டு, பஸ் எடுக்கப்போவாள்.

மூன்றாவது மைத்துனிக்கு,இப்போது முப்பத்தியொரு வயதாகிறது. அவளுக்கும் இன்னும் திருமணமாகவில்லை.அவள் பக்கத்திலுள்ள நகரத்தில் உள்ள கம்பனி ஒன்றில், டைப்பிஸ்ட்,கணக்காளர் என்ற இருவேலைகளையும்,’மனேச்சர்’என்ற பெயரில் செய்கிறாள்.

இப்போது,அந்த வீட்டில் ஒரு ஆண்மகனும் இல்லை. மகேஸ்வரியின் துணைவன் துரைராஜா,இந்த வீட்டின் கடைசி மகன்.தனது தமக்கைகள் இன்னும் கல்யாணம் செய்யாமல் இருக்கும்போது அவன் சம்பிரதாயங்களுக்கப்பால்,மகேஸ்வரியைத் திருமணம் செய்து கொண்டான்.அதை அவனது தாயால் தவிர்க்கவும் முடியவில்லை,தாங்கவும் முடியவில்லை என்பது மகேஸ்வரிக்குத் தெரியும்.

மகேஸ்வரியின் சிந்தனைகள், இருள் பிரியாத அந்தக் காலை நேரத்தில் பல பக்கங்களுக்கும் அலைகிறது.அவள் பாத்றூமுக்குப்போகக் காத்;திருக்கிறாள். பழைய கிணறும்,பழைய பாத்றூமும் வீட்டுக்குத் துரத்தில் இருக்கிறது.கிணற்றடிக்குப்போய்ப் பல்விளக்கி முகம் கழுவ யோசித்தாள்.இன்னும் இருள் பிரியாததால் வெளிச்சமற்ற பகுதிகளுக்குப்போக அவளுக்குத் தயக்கமாகவிருந்தது.

தமிழர் விடுதலைப்போராட்டம், எத்தனையோ குடும்பங்களில் தாங்கொண்ணா வறுமையைத் தோற்றுவித்தால் வறுமைப்பட்ட மக்கள் வயிற்றுப் பிழைப்புக்கு ‘எதையும் செய்து’ பிழைக்க உந்தப் படுகிறார்கள். இயக்கத்தில் சேர்ந்தோர் பலர்,சேராதோர் பலர்,உழைப்புள்ளோர் பலர்,உழைப்பில்லாதோர் பலர் என்ற குழப்பமான கூட்டமாகச் சமுதாயம் மாறிவிட்டது.

காசுள்ளவர்கள் நாட்டை விட்டோடுகிறார்கள். காசில்லாதவர்கள் என்ன செய்வது?

வாழ வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தில்,அவர்கள் கட்டிக் காப்பாற்றி வந்த,பழைய பழக்கவழக்கங்கள்,சம்பிரதாயக்கோட்பாடுகள்,மானம் மரியாதை என்பன தறிகெட்டுச் சிதறுகின்றன.

ஓரு கொஞ்ச நாளைக்குமுன்,அந்த ஊரில் ஒரு கிழவியைக் கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டு,அவளின் நகைகளைத் திருடிக்கொண்டபோய்விட்டார்கள்.அவளின் குழந்தைகள் அத்தனைபேரும் அயல் நாடுகளில். இப்போது,வயதுக்கோ,தாய்மைக்கோ,பெண்மைக்கோ பெரிய மரியாதை; கிடையாது.

இப்போது நாடுபோகும் போக்கில்,பெண்கள் தனியாக இருப்பது அபாயமான விடயமாகிவிட்டது.மகேஸ்வரி இந்த வீட்டுக்கு வந்தபோது அவளுக்குப் பயமாகவிருந்தது.அவள் எப்போதும் ஆண்களின் துணையோடு வாழ்ந்தவள். அவளுக்கு மூன்று தமயன்கள், இருமாமாக்கள்,அவளின் அன்பான அப்பா,பாட்டி என்ற குடும்பத்தில் வளர்ந்தவள்.

அவள் துரைராஜாவைத் திருமணம் செய்தபோது அவளின் மாமியையோ, மாமியின் மனநிலையோ அவளுக்குச் சரியாகத்தெரியாது.

மகேஸ்வரிக்குத் திருமண ஆயத்தங்கள் செய்யப் பட்ட காலகட்டத்தில்,மகேஸ்வரியின் தகப்பன் கான்சர் வந்து,இன்றோ நாளையோ இறக்கும் தறுவாயில் இருந்தார்.தான் இறக்க முதல் தனது ஒரே மகளின் திருமணத்தைப் பார்க்க விரும்பினார்.

‘மூன்று தமக்கைகள் அடுப்புக்கற்கள் மாதிரி இன்னும் வீட்டில் இருக்கும்போது, கல்யாணம் செய்ய வேண்டும் என்று இவனுக்கு என்ன அப்படி

அவசரம்’ துரைராஜாவின் தாய் இடியாய் முழங்கினாள்.

அவனின் உழைப்பு அந்தப்பெண்களின் சீதனத்துக்குத் தேவையாகவிருந்தது.’இவன் உதவியில்லாமல் என்னவென்று இந்தப் பெண்களைக் கரையேற்றப்போகிறேன்?’ அவனின் தாய் கோபத்தில் வெடித்தாள்.

‘உங்கள் மகனுக்கு எவ்வளவு சீதனத்தை எதிர்பார்க்கிறீர்கள்?’ மகேஸ்வரியின் தகப்பனார்,தரைராஜாவின் தாயிடம் கேட்டார்.அவருக்கும் மூன்று மகன்கள் இருக்கிறார்கள், நல்ல உத்தியோகதிலிருந்துகொண்டு நன்றாக உழைக்கிறார்கள்.தங்கையின் சந்தோசத்துக்காக எதையும் செய்யத் தயங்காதவர்கள்.

மகேஸ்வரியின் குடும்பம் மிகவும் வசதியான குடும்பம்.துரைராஜாவால் இன்னும் பத்து வருடங்கள் உழைத்துத் தமக்கைகளக்குச் சீதனம் தேடவேண்டிய பணத்தை அவர் தனது மகளின் சீதனமாக அவனுக்குக் கொடுத்தார். துரைராஜா ஒரு பப்ளிக் ஹெல்த் இன்ஸ்பெக்டர்.மகேஸ்வரியின் தகப்பன் அவனின் மேலதிகாரி. துiராஜாவின் குடும்ப நிலை நன்றாகத் தெரிந்தவர்.அவர்கள் மகேஸ்வரிக்கு,அவளின் மாமியார் கேட்ட தொகையைவிடக்கூடத் தாராளமானக் கொடுத்தார்கள். தனது மகள் புகுந்தவிடத்தில் நன்றாக வாழவேண்டும் என்ற நம்பாசை அந்த மனிதனுக்கு.

மகேஸ்வரியின் திருமணம் நடந்து ஆறமாதத்தின்பின் அவர் இறந்து விட்டார்.அதன்பின், இலங்கைஅரசாங்கத்தின் ஷெல் தாக்குதலில், மகேஸ்வரியின் தமயன் ஒருத்தனும்,அவளை அன்புடன் வளர்த்த பாட்டியும் ஸ்;தலத்திலேயெ சிதறி அழிந்து விட்டார்கள்.அவர்கள் வீடும் பெரும்பாலும் அழிந்து விட்டது. அன்று,துரைராஜாவும் மகேஸ்வரியும் கோயிலுக்குப் போயிருந்தபடியாற் தப்பி விட்டார்கள்.அவள் அப்போது இரண்டுமாதக் கர்ப்பவதி.

மகேஸ் பழையவற்றை நினைத்து இப்போது பெருமூச்சு விடுகிறாள்.

பலா மரத்தில், தாய்ப்பறவை பறந்து போய்விட்டது. தாய்க்குருவியில்லாத நேரத்தில் அந்தக் குஞ்சுகளை யார் பராமரிப்பார்கள்?

அவளின் குழந்தை மெல்லமாக முனகியது. குழந்தை தனது தாயிடம் பால்கேட்கும் அறிகுறி தொடங்கி விட்டது.

மூடிக்கிடக்கும் பாத்றூம் எப்போது திறபடும் என்று அவளுக்குத் தெரியாது. இன்னும் சரியாக விடியவில்லை. தூரத்தில் இருக்கும்,கிணற்றுக்குப் பின்னால் சரியான அடர்த்தியான பனைவடலிகள் வளர்ந்து கிடந்தன. அவள் மெல்லமாக அந்தப் பழைய கிணற்றுப் பக்கம் போனாள். இருள் பிரியா நேரத்தில் அங்கு வந்தபோது,பயம் அவளை நடுங்கப் பண்ணியது. இருளிற் படிந்த பனைவடலியின் பின்னால் யாரோ அல்லது ஏதோ அசையுமாற்போல்த் தெரிந்தது. அவள் பயத்தில் அலறி ஓடமுயன்றபோது,நிலத்திற் கிடந்த கல்லில் அடிபட்டு விழுந்து விட்டாள். அவளின் சத்தம் கேட்டு, கதவு திறக்கப்படும் ஒலியும் யாரோ ஓடிவருவதும் கேட்டது. அவளுக்குக் கொஞ்ச நேரம் நினைவு தவறிவிட்டது போலிருந்தது.

அவள் கண்திறந்தபோது, தலையில் நோ, குழந்தை பசியில் அலறிக்கொண்டிருந்தது. எப்படி ஓடிவந்தாள்? அல்லது யாரும் அவளைத் தூக்கி வந்தார்களா என்பது அவளுக்கு ஞாபகம் வரவில்லை.

குழந்தை,வாயைச் நெழித்து,உதடுகளை அசைத்துத் தன் தாயின் பாலைத்; தேடுகிறது.

இரண்டு கிழமைக்கு ஒன்றிரண்டு நாட்கள் கூடிய வயதான அந்தப் பச்சை மண்ணுக்கு,தனக்கு என்னதேவை என்று தெரிகிறது.நேரத்துக்குப் பால் தேட அந்தப் பிஞ்சுமனத்தின் சிந்தனை வளர்ந்து விட்டது. கிணற்றடியில் விழுந்த அதிர்ச்சியில்,அவளுக்கு நெஞ்சு படபடவென அடித்துக்கொண்டது. நா வரண்டது. குழந்தையை அணைத்துக்கொண்டாள். குழந்தை தாயின் உடம்பின் சூட்டில் இதம் கண்டது.

அந்த வீட்டில் ஒருவேலைக்காரப் பெண்இருக்கிறாள். அவள் அதிகாலையில் எழுந்து, ஆசிரியையான மைத்துனி குளிக்கச் சுடுநீர் போட்டு பாத்றூமில் வைப்பாள். அதன்பிறகு, ‘மனேச்சர்’ மைத்துனிக்குச் சுடுநீர் வைபடும். கடைசியாக, தனது அறையைவிட்டுப் பெரும்பாலும் வெளியே வராத,’சுகமில்லாத’ பெரிய மச்சாளுக்குச் சுடுநீர் வைபம் நடக்கும். இதெல்லாம் முடிய, காலை பத்துமணியாகிவிடும்.

மகேஸ் குழந்தை பெற்றவள். அவளின் நிலை அவளுக்கே பரிதாபமாகவிருந்தது. அவளுக்கு என்ன தேவை என்று யாரும் கேட்பாரில்லை.

அவளின்; தாய்தகப்பன்,பாட்டி அத்தனை பேரும் பரம உலகம் போய்விட்டார்கள். அவளின் பாட்டியின் மரணத்தின்பின் கர்ப்பவதியான தன்மனைவியைத் துரைராஜா தன் வீட்டுக்குக் கூட்டி வந்தான்.’அம்மா உன்னை அன்பாகப் பார்த்துக் கொள்வாள்’ என்ற நம்பிக்கையை மகேசுக்கு அவன் கொடுத்தான்.

புதிய இடத்தில் அவளுக்குக் கிடைத்த,மாமியாராலும் மைத்துனிகளாலும் ‘தூரவைத்து’ நடத்தப்பட்ட தர்மசங்கடமான அனுபவங்களை அவள்,வார விடுமுறையில் வரும் கணவரிடம் சொல்வது கிடையாது. அவள் ஏதும் சொல்லி, அதை அவன் தனது தாய், தமக்கைமாரிடம் விசாரிக்கப்போனால் அதனால் வரும் விளைவுகளை அவளாற் தாங்கிக் கொள்ள முடியாது.

இருபத்தி ஒருவயதில் தாயாகித் தான் தனியாக அனுபவிக்கும் கொடுமைகள் கெதியில் மறைந்து விடும் அல்லது கால கெதியில்,தனது மாமியும் மைத்துனிகளும் அன்புடன் நடத்துவார்கள் என்று அந்தப் பேதை நம்பினாள்.

ஆனாலும், ‘நீங்க வேலை செய்யுற இடத்தில நாங்கள் ஒன்றாக வாழ ஒரு வீடு பார்த்து ஒரு வேலைக்காரியையும் வைத்துக்கொண்டால் என்ன?’ மகேஸ் தயக்கத்துடன் ஒரு நாள்த் தன் கணவனைக் கேட்டாள்.

‘மகேஸ், தமிழ்ப் பகுதிகளில் பல இடத்திலயும் சண்டை நடந்து கொண்டிருக்கு, பாதுகாப்பாக வாழும் நிலமை வரும்வரையும் அம்மாவோட இருக்கிறது நல்லது’ அவன் அவளுக்கு அன்புடன் ஆறுதல் சொன்னான்.

அவன் ஆண்மகன். பெண்களின் மனதை அறியத் தெரியாதவன்.அல்லது தெரிந்து கொண்டும் அதற்கேற்ப நடக்கத் தயங்குபவன்,அல்லது நேரமில்லாதவன்.

பலா மரத்துத் தாய்க்குருவி கூண்டைவிட்டுப் போய்விட்டதால், அந்தக் குஞ்சுகளும் மகேஸ்வரியின் குழந்தைபோல் வீரிடுகிறது.

மகேஸ்வரி,கிணற்றடியில் வீழ்ந்ததால் தலையிடிக்கிறது. வெளியில் ஒருகாயமும் இல்லை .ஆனால் முன்பக்கத்தில் சாடையான வீக்கம் தெரிந்தது.

அவளிடம் உறிஞ்சி எடுத்த பாலின் ருசியில் அவளின் குழந்தை நித்திரையாகிவிட்டது.

தலையடியின் தாக்கத்தை மறக்க,அவள் தனது அறையிலிருந்து, பக்கத்து பலாமரத்தின் இலையின் இடுக்குகளால் வரும் சூரிய ஒளியின் அழகைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.பக்கத்துத் தெருவிற் போய்க்கொண்டிருந்த ஒரு மாட்டு வண்டியிலெழுந்த புழுதி; சூரியவெளிச்சத்திற் படிந்து பல நிறங்களைக் காட்டிக்கொண்டிருந்தது.

வேலைக்காரப் பெண் தேங்காய் துருவுவது கேட்டது. மாமி, பட்டும் பொரியலும்,சம்பலும் செய்து மகள்மாருக்குப் பார்சல் கட்டிக்கொடுப்பாள். ‘சுகமில்லாத’ பெரிய மச்சாள் சிலவேளை மற்றவர்களுடன் சேர்ந்து சாப்பிடுவாள். சிலவேளைகளிற் தன் கதவைப் மூடிக்கொண்டு வெளியில் வராமலிருப்பாள்.

அவளுக்குக் கொஞ்சம்,’சாமிப்’ போக்கு என்ற மாமியார் யாரும் அவளின் மகளைப் பற்றிக் கேட்டாற் சொல்வாள்.அல்லது,’பெண்பிள்ளைகள், தானும் தனது அறையும் என்று அடக்கமாக இருக்கவேண்டும்’ என்றும் சொல்வாள்.

மாமியார் அவளின்,’இரட்டைக்கருத்திற்’ சொல்லும் பாரம்பரியப் பண்பாடுகள் பற்றிய விளக்கங்கள்,தனக்குக் கிண்டலாகச் சொல்லப் படுபவை என்று மகேஸ்வரிக்குத் தெரியும். மகேஸ் பாடசாலைக்குப்போகும் வழியில் துரைராஜாவைச் சந்தித்தாள். அவனுக்கு அவள் தனது மேலதிகாரியின் மகள் என்று தெரியாது. அவளுக்கு,அவன் தனது தகப்பனுடன் வேலைசெய்யும் அதிகாரிகளில் ஒருத்தன் என்று தெரியாது.

அவள் தனது பதினெட்டாம் வயதில் ஏ லெவல் படித்துக்கொண்டிருந்தாள்.அவன் வேலைக்குப் போகும் வழியில் அவனது மோட்டார்பைக்,பாடசாலைக்குப் போகும் அவளுக்கு எதிராக வந்து கொண்டிருக்கும்;.அதிகாலை நேரம் இருவர் கண்களும் ரகசியமாக,ஓரக்கண்ணாற் பார்க்கத் தொடங்கின.இவளின் கடைக்கண் பார்வையும் அவனின் குறும்புச் சிரிப்பும் புனிதமான காலை நேரங்களில் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டன. அவன் அப்போதுதூன் அந்த ஊருக்கு வேலையாகி வந்திருந்தான்.அவனுக்கு இருபத்திஆறுவயது. பல்கலைக்கழகப்படிப்பு முடிந்த கையோடு கிடைத்த முதல்வேலை அவனுக்கு. வீpட்டில் மூன்று முதுகன்னிகள் இருப்பது அவனுக்குத் தெரியாததல்ல.

இளம் பருவம் என்ன சாமியாரா காஷாயம் வாங்கிக்கொண்டு இமயமலையிற் தவமிருக்க?

கடைக்கண்கள் பேசி, கால்கள் மணலிற் படம்கீறி,உடம்பு நெழிந்து,பருவத்துடிப்பின் பாவமுத்திரைகள் பதம் பிடிக்க, பின்னர், உன்னை நான்,என்னை நீ என்று உள்ளம் சொரிந்து பொழிந்த மொழிகள்,புத்தகங்களுக்குள் வைத்துப் பரிமாற,காதல் தன்பாட்டுக்கு வந்து தொலைத்து விட்டது.

துரைராஜாவின் தாய்,மகன் தனது முதுகன்னிகளைக் ‘கரையேற்றவான்’ என்று எதிர்பார்த்திருக்க, அவன் தன்பாட்டுக்குக் ‘காதற் கடல் தாண்டிவிட்டான்’. அவன் அவனது தமக்கைகளுக்குப் பலகாலங்களுக்கு, உழைத்துக் கொடுக்க வேண்டியவை, மொத்தமாக மகேஸ்வரியின் தகப்பன் சீதனம் என்ற பெயரிற் கொடுத்தார். தனக்குத் தெரிந்த ஒரு நல்ல பையன், கவுரமான உத்தியோகத்தன் என்று,துரைராஜாவைத் தனது மகளை விரும்பியதை அவர் ஆசிர்வதித்தார்.

அவர் இறந்தபின். இரண்டுமாதக் கர்ப்பவதியாய்,வெட்கம் பரவிய முகத்துடன் மருமளாக மகேஸ், அவர்கள் வீட்டுக்கு வந்து சேர்ந்தாள்.

தமக்கைகளுக்கு முன் திருமணம் செய்துகொண்ட துரைராஜாவின் ‘சுயநலத்தை’ அம்மா அடிக்கடி சாடினாள்.

கடந்த பலவருடங்களாக அவனின்,அக்காமாருக்குப் பல மாப்பிள்ளைகள் பேசப் பட்டன. பல பிரச்சினைகளால் ஒரு கல்யாணமும் இன்னும் சரிவரவில்லை. அக்காமார். டாக்டர், எஞ்ஞினியர் மாப்பிள்ளைகளை எதிர்பார்க்கிறார்கள்.’அக்காமாருக்குப் பிடித்த மாப்பிள்ளைகள் இனித்தான் பிறக்கவேண்டும்’ ; ஒருநாள் அம்மாவின் நச்சரிப்புத் தாங்காமல் துரைராஜா பொரிந்து தள்ளினான்.

இயக்கத்தில், அல்லது இயக்கத்தால் இறந்த தமிழ் இளைஞர் தொகை என்ன?, இலங்கை இராணுவத்தால் அழிந்தோர் தொகை என்ன? இத்தனைக்கும் தப்பி கடல் கடந்தோர் தொகைதான் என்ன? இவர்களுக்கு நடுவில் அக்காமார் தேடும்,’உயர்ந்த உத்தியோக மாப்பிள்ளைகளைத்’ தேட அவனால் முடியவில்லை.

‘நாங்கள் தனியாகிப் போய்வாழ்வம்’ வீட்டில் நடக்கும் பிணக்குகளையுணர்ந்த பேதைப்பெண் மகேஸ்வரி பலநாட்கள்; கணவனிடம் முணுமுணுத்தாள்.அவன் இல்லாத நேரத்தில், அந்த வீட்டில் அவள்படும்பாட்டை அவள் அவனிடம் சொல்லவில்லை.

‘குழந்தை பிறக்கட்டும் அதுவரைக்கும் அம்மாவோடு இரு, பாதுகாப்பும், அத்தோடு குழந்தை வளர்ப்பது பற்றி அம்மாவின் புத்திமதிகளும் உனக்குத்தேவை’ அவன் அன்புடன் அவளைச் சமாதானம் செய்தான்.குழந்தை பிறந்ததும் அவன் இருகிழமைகள் லீவ எடுத்துக்கொண்டு வீட்டில் நின்றான். அவள் குளிப்பதற்குச் சுடுநீர் போட்டுக்கொடுத்தான். அவள் நேரத்துக்குச் சாப்பிடுகிறாளா என்று பார்த்துக் கொண்டான். அவள் அவனது அன்பில் திணறிப்போனாள். ‘நீ தாயில்லாப் பெண், நான்தானே உனக்குத் தாயும் தகப்பனுமாக இருக்கவேண்டும்?’ அவளைக் காதலுடன் அணைத்துக்கொண்டு அவன் பரிவுடன் சொல்வான்.

அவன் போய்விட்டான். வாரவிடுமுறையில் மட்டும்தான் இனிவருவான். அவள் தனது தேவையையும் குழந்தையுpன் தேவைகளையும் தன்னம் தனியே செய்கிறாள்.

‘பிள்ளை பிறந்து மூணு கிழமையாயப்போச்சு,இனியும் மற்றவர்களின்ற உதவியை எதிர்பார்க்ககலாமா?’ மாமி நேரடியாக மகேஸ்வரியைக் கேட்டாள்.

அதிகாலையில் எழுந்து தனது கடமைகளைப் பார்க்க எழுந்தாள் தலையிலடிபட்டுப் பெரிய வேதனையாகவிருக்கிறது. காலை நேரம் அந்த வீட்டுப்பெண்களெல்லாம் மிகவும் பிசியாக இருக்கும் நேரம்.

கேட் அடிபடும் சத்தம் கேட்டது.

இரண்டாவது மைத்துனி பாடசாலைக்குப் போகிறாள்.அவள் ஒரு பட்டதாரி, மகேஸ்வரியுடன் அதிகம் பேச்சு வைத்திருப்பதில்லை.அவளைப் பொறுத்தவரையில் மகேஸ் சமநிலையில் வைத்துப் பேசும் கல்வியறிவற்றவள்.

தனக்குப் பத்து வயது இளையவள், திருமணமாகிக் குழந்தைக்கும் தாயான நிலை தனக்கில்லை என்ற ஆதங்கத்தை மறைக்கப் பல காரணங்களை முன்னெடுப்பவள் மூன்றாவது மைத்துனியான ‘மனேச்சர்.

மாமியார் எப்போதும் ‘பிஸி’யாக இருப்பதாகப் பிரகடனப் படுத்திக் கொள்வாள். அவளுக்குக், கடைக்குப் போவது, கோயிலுக்குப்போவது,வேலைக்காரப் பெண்ணுக்கு உத்தரவு போடுவது என்பன மிகவும் ‘முக்கியமான’ விடயங்கள். மகேஸ்வரியுடன் பேசவோ, அவளின் குழந்தையுடன் அன்புடன் கொஞ்சவோ அவளுக்கு நேரம் கிடையாது.

‘வேலைக்குப் போற பிள்ளையளுக்குச் செய்யுறமாதிரி உனக்கும் செய்யவேணும் என்டு எதிர்பார்க்காதே’ மகேஸ்வரிக்கு,மாமியின் புத்திமதியிது!

இன்னும் சில நாட்களில் குழந்தை பிறந்து முப்பது நாட்கள் முடியப்போகிறது.

குழந்தைக்குப் பெயர்வைப்பது பற்றி,மாமியுடன் பேச மகேசுக்கு விருப்பம்.

‘உனக்குப் பேர் மகேசுவரி, அவன்ர பேர் துரைராஜா,இரண்டையும் சோர்த்து வை’. மாமி எடுத்தெறிந்துபேசினாள்.தான் தனது தாயின் பெயரைச் ‘சிவமலர்’ என்று குழந்தைக்கு வைப்பதாக மகேஸ்வரி சொன்னாள்.

‘மலரோ மாலையோ ,வைக்கிற பெயரில என்ன கிடக்கு? வாழுற கவுரவத்திலதான் வாழ்க்கை கிடக்கு’மாமியார் இவளை ‘ஒரு மாதிரி’யாகப் பார்த்துக் கொண்டு சொன்னாள்.

மாமியாரைப் பொறுத்தவரையில், காதற்திருமணம் செய்வது மிகவும் அகௌவுரமான விடயம். கௌரவமாகப் பேசிக் கல்யாணம் முடிக்க வக்கற்றவர்கள்தான்,;’காதற்’ கல்யாணம் செய்வார்கள். ஆனால், கேட்ட சீதனத்தை விட மகேஸவரி குடும்பம் கொடுத்ததைப் மாமி வட்டிக்குக்கொடுத்து பணம் சேர்த்துக் கொண்டிருக்கிறாள்.

‘பெட்டைப் பிள்ளையைப் பெத்துவிட்டாய்.அதையென்றாலும் கௌரவமாக வளர்க்கப்பார்’ மாமி குருரமாகச் சொன்னாள்.

மகேஸ்வரிக்கு மாமியின் தத்துவங்கள் புரிவதில்லை.

‘ பெரிய மச்சாளுக்கு என்ன சுகமில்லை?’ மகேஸ்வரி ஒருநாள் தனது கணவனைக்கேட்டாள்.

‘எனக்குத் தெரியாது, ஆனாலும், அவளுக்கு ஒரு காதல் இருந்ததொன்றும்,அது சரிவராததால் மனம் உடைந்து போனாள் என்று நினைக்கிறேன்.

அதுதான் அவள் மிகவும் ஏங்கிப் போய்,இப்படித் தனியாகச் சூனியத்தில் வாழ்கிறாள்’

இதெல்லாம் எப்போது நடந்தது என்று துரைராஜாவுக்குத் தெரியாது. அவன் பல்கலைக்கழகத்திற்குப் போனபின் வீட்டில் நடந்தவை அதிகம் தெரியாதவன்.

பெரிய மச்சாள் தனியாக இருந்துகொண்டு சிரிப்பாள். சிலவேளை சூனியத்தை வெறித்துப் பார்த்துக்கொண்டு நீண்டநேரங்களைச் செலவிடுவாள்.

தனது மகளுக்கு யாரோ சூனியம் செய்துவிட்டதாக மாமி ஏதோ கதையிற் சொன்னாள்.

சூனியமா?

மகேஸ்வரிக்குச் செய்வினை, சூனியம் என்பன தெரியாது.

பெரிய மச்சாள் அவளை விட வசதி குறைந்த ஒருத்தரை விரும்பியதாகவும்,மாமி அதனை விரும்பாதபடியால் அவர்களின் தொடர்பு அறுக்கப் பட்டதாகவும், அதன்பின் பெரிய மச்சாளின்,(விரக்தி) நிலைக்கு யாரோ,’சூனியம்’செய்துவிட்டதாக மாமி வேலைக்காரப் பெண்ணுக்கு ஒருநாள் சொல்லிக் கொண்டிருந்தாள்.

காலையிற் பட்ட அடியால். மகேஸ்வரிக்குச் சரியான தலையிடியும் அத்துடன் காய்ச்சலும் வந்து விட்டது. இரண்டு நாட்களுக்குப் பின் வாரவிடுமறையில் வீட்;டுக்கு வந்த துரைராஜா, அவனின் மனைவியின் நிலை கண்டு பதறிவிட்டான்.

‘பிள்ளை பிறக்கிறதென்டா சிம்பிள் ஆனவிடயமோ?’ மாமி முன்னுக்குப் பின் முரணாக எதோ உளறிக் கொட்டினாள். மகேஸ்வரி இரண்டொருநாட்கள் ஆஸ்பத்திரியில் வைத்திருக்க வேண்டியநிலை.

குழந்தையை வீட்டில் வேலைக்காரி பார்த்துக்கொண்டாள். வீட்டு வேலைக்காரி ஒரு இளம் பெண்.அவளுக்குக் குழந்தைகளைப் பார்த்த அனுபவம் கிடையாது. துரையப்பா வாங்கிக் கொண்டுவந்து புட்டிப் பாலைக் கரைத்துக் குழந்தைக்குக் கொடுத்தாள். எவ்வளவு கொடுக்கவேண்டும் எப்படிக் கொடுக்கவேண்டும் எத்தனைதரம் கொடுக்கவேண்டும் என்றெல்லாம் அவளுக்குத் தெரியாது. குழந்தை அழுதபோதெல்லாம் அவள் பால் கொடுத்தாள்.குழந்தை பாலுக்கு அழுகிறதா, நித்திரைக்கு அழுகிறதா அல்லது,நப்கின் நனைந்து விட்டது என்று அழுகிறதா அல்லது தாயின் அணைப்புக்கு அழுகிறதா என்றெல்லாம் அவளுக்குத் தெரியாது.

இருபத்து ஐந்து நாட்கள் அம்மாவின் பாலை உறிஞசிக் குடித்த ஆரோக்கியமாக வளர்ந்த இளம் குருத்து, குழந்தைகளைப் பார்க்கும் அனுபவமற்ற ; வேலைக்காரப் பெண் கொடுத்த பாலைக் குடித்தால், வயிற்று வலியாற் துடித்தது. குழந்தைக்குத் தொடர்ந்து கண்டபாட்டுக்கு மலம் போனது.

அவன் மனைவியுடன் வீடு வந்தபோது குழந்தை சோர்ந்து கிடந்தது. வீட்டுக்கு வெளியில் விடுதலைப்போரின் உச்சம் படுபயங்கரமாகவிருந்தது. அவசரகாலச் சட்டம் அமுல் நடத்தப் பட்டிருந்தது.அவசரத்துக்கு மருந்துவாங்கும் கடைகளில் மருந்தும் கிடையாது.

அன்று சனிக்கிழமை. இரவிரவாகக் கணவனும் மனைவியும் தங்கள் குழந்தையை அணைத்துக் கொண்டு அதைக் காப்பாற்றக் கடவுளை வேண்டிக் கொண்டார்கள்.

குழந்தையின் மூச்சு,அலறித் துடிக்கும் தாய் தகப்பன் அணைப்பில் அமைதிகண்டது.

ஞாயிற்றுக் கிழமை குழந்தை இறந்து விட்டது.

அன்பு பாசம், பண்பு என்பன சூனியமான அந்த வீட்டில் அந்தக் குழந்தை வளரக் கூடாது என்றோ என்னவோ அது பரலோகம் போய்விட்டது.

அன்றிரவு தனது தாய் சிவமலர் தனது குழந்தையைக் கொஞ்சுவதாகக் கனவு கண்டாள் மகேஸ்வரி.

துiராஜாவுக்கு,அவனின் மாமியார் சிவமலரைத் தெரியாது. அவனின் தாயை நன்றாகத் தெரியும்.

;’ அம்மா,மகேசையும் பிள்ளையையும் நீங்கள் கொஞ்சம் பார்த்து உதவி செய்திருக்கலாமே’ தன் துயர் அழுகையாய் வெடிக்கத் தன் தாயைக் கேட்டான் துரைராஜா.

‘ என்னடாப்பா, புதினமான கதை கதைக்கிறாய், தன் பாட்டுக்குப் புருஷன் புடிக்கத் தெரிஞ்ச பொம்புளைக்குத் தன்னையும் தன் பிள்ளையைப் பார்க்க யாரும் சொல்லிக் குடுத்திருக்கவேணுமோ?’தாய் தனது தோளில் முகத்தை இடித்துவிட்டு அவனை ஏளனமாகப் பார்த்து விட்டுச் சென்றாள்.

அவன் ஆச்சரியத்தில் சிலையாக நின்றான். மற்றவர்களுக்கு அன்பு செலுத்தத் தெரியாத ஒரு சூனியமான,உலகத்துக்குத் தன் மனைவியைக் கொண்டுவந்த குற்ற உணர்வில் அவன் தலை தாழ்ந்தான்.

குழந்தையையிழந்த மகேஸ் கம்பி போட்ட ஜன்னல்களுக்கப்பால், பலாமரத்திலுள்ள குருவிக் கூண்டைப் பார்த்துக் கொண்டிருக்கிறாள்.

தாய்ப்பறவை தனது குஞ்சுகளுக்குத் தீனி கொடுத்துக் கொண்டிருக்கிறது. மகேஸ் நீர் வழிந்த கண்களுடன் விம்முகிறாள்.

பெரிய மைத்துனி தனது சூனிய உலகத்தில் தனது அறையில் அடைபட்டுக் கிடக்கிறாள்.

மற்றவர்களால் புரிந்து கொள்ள முடியாத,பலதரப்பட்ட பரிமாணங்கள் கொண்ட சூனிய வெளிபோன்ற அந்த வீட்டில்; ஐந்து பெண்கள் வாழ்கிறார்கள்.

(யாவும் கற்பனையே)

– ‘நான்காவது பரிமாணம்’ பிரசுரம்-1993

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *