சிறு தீப்பொறி மூண்டு பெரு நெருப்பாக எரியும்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: மல்லிகை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 3, 2023
பார்வையிட்டோர்: 1,191 
 

(1974 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

சமையலறையிலிருந்து வந்த கூக்குரல்களால் தூக்கம் கெட்டுவிட்டது. சனியன்கள். தினமும் இதே சண்டைதான். மூன்றாம் வகுப்பில் படிக்கும் ரிஸான் ஸ்கூலுக்குப் போவதற்குப் பத்துச் சதம் கேட்டு உம்மாவிடம் அடம் பிடித்துக் கொண்டிருந்தான். தன் பேனாவை எடுத்து ரிஸான் சுவரில் படம் கீறியதால் முனை உடைந்து விட்டதாகக் கூறி றோனா சிணுங்கிக் கொண்டிருந்தாள். உயர் வகுப்பில் படிக்கும் ரிபாயாவின் குரல் மட்டும் கேட்கவில்லை. அவள் எப்போதும் அமைதிதான். கூச்சம் மிக்க சுபாவம் அவளுக்கு. எல்லோரும் ஸ்கூலுக்குப் போயானவுடன் ஒரு பிரளயம் ஓய்ந்த மாதிரி!

தூக்கம் கலைவதற்கு முன்னர் கண்ட கனவுகளை நினைவிற் கொண்டு வருவதற்கு சகீத் எவ்வளவோ போராடிப் பார்த்தான். முடியவில்லை.

‘கந்தூங்கினது போதும் புள்ளுே. இனி எழும்பு.’

துடைப்பத்தைக் கையில் எடுத்துக் கொண்டு முற்றத்தைத் துப்பரவாக்கப் போகும் போது உம்மா சொல்லிவிட்டுப் போனாள்.

ஒவ்வொரு காலைப் பொழுதின் விடிவிலும் அவனுக்கு வெறுப்பு. ஏமாற்றம்.

நம்பிக்கை வறட்சி. பேராதனையில் இருந்த நாட்களில் காலை நேரங்களில் ஏற்படும் தெம்பும் உற்சாகமும் இப்பொழுதில்லை.

முற்றத்தில் நின்று பல் விளக்கிக் கொண்டே அவன் சிங்கள ஸ்கூலுக்குப் போகும் பெட்டைகளைக் கவனிக்கத் தொடங்கினான். காலை நேரத்தில் அவன் மனசுக்குக் கொஞ்சம் சந்தோஷம் தரக்கூடிய பொழுது போக்கு இது மட்டுந் தான்.

தான் இரண்டு மூன்று வருடங்களாக அணிந்து இப்பொழுது அணிய முடியாதெனக் கருதி ஒதுக்கித் தள்ளியிருக்கும் நிறம் மங்கிப் போன சேட் ஒன்றை அணிந்து கொண்டு வாப்பா எங்கோ போவது தெரிந்தது. ஒரு வாரம் சவரக் கத்தியைக் காணாத முகம், பல வருடங்களாக பீடிப்புகையை ஆழமாக உறிஞ்சி அனுபவித்த தன் வடுக்களாக அவரது முகத்தின் இரு பக்கங்களிலும் இரண்டு குழிகள்.

அழுக்குத் துணிகளை எல்லாம் வாளிக்குள் திணித்துக் கொண்டு ஆய்ஷா கிணற்றுக்குப் போக ஆயத்தமாகிக் கொண்டிருந்தாள்.

மரவள்ளிக் கிழங்கு அவியலில் இரண்டு துண்டு. பேரீச்சம் பழத்துடன் ஒரு பிளேன்டீ. காலைச் சாப்பாடு முடிந்துவிட்டது. இன்னொரு வெற்று நாள் பூதாகரமாக அவன் முன்னே விரிந்து கிடந்தது.

உம்மா முற்றத்தில் பாயை விரித்து நெல் துளாவிக் கொண்டே கோழிகளை விரட்டிக் கொண்டிருந்தாள்.

ஒன்பதரைக்கும் பத்து மணிக்குமிடையில் தபால்காரன் வருவான். மூன்று வருடங்கள் பேராதனை என்ற கனவுலகில் ‘ஜே.பி.’ பஜாரில் அவனுடனிருந்து இப்பொழுது வெவ்வேறு இடங்களில் சிதறிப் போய் அவனைப் போல் வாழ்ந்து கொண்டிருக்கும் வெறும் பீ.ஏ.க்களிடமிருந்து கடிதங்கள் வரும்.

‘மொனவ கரன்டத மஹத்தயா? தாம கொட்ட உட நே.’ என்று கூறிச் சிரித்துவிட்டுத் தபால்காரன் போய்விடுவான்.

எல்லாம் புலம்பல் கடிதங்கள். சிலாபத்திலிருக்கும் அஸீஸ் மட்டுந்தான் எல்லா நம்பிக்கை வறட்சிகளுக்கும் மத்தியிலும் நம்பிக்கை வரக்கூடிய முறையில் ஏதாவது எழுதி அனுப்பியிருப்பான். ‘நீ இந்தப் படிப்புப் படிச்சதற்கு மூண்டு வருஷம் வீட்டில சும்மா இருந்திருந்தாலும் எங்களுக்கு இந்தக் கஷ்டம் வந்திருக்காது’ என்று அவனது படிப்புக்குச் செலவழித்து முறிந்துபோன வாப்பா கூறியதாகச் சென்ற வாரம் அவன் எழுதியிருந்தான். அவனும் தன்னைப் போலவே ரொம்ப வறுமைப் பட்ட குடும்பத்தில் பிறந்தவன் என்பதைச் சகீத் அறிவான். கெம்பஸில் எல்லோரும் அவனை ஒரு ஜோக்காரனாகத்தான் கருதினார்கள். ஆனால் ஜேம் பீரிஸ் மண்டபத்துக்கு முன்னாலுள்ள செடி மரங்களுக்கு அடியில் எத்தனையோ இரவு நேரங்களில் அவர்களிருவரும் அந்தரங்கங்களைப் பகிர்ந்து கொண்டபோது தன் குடும்பக் கஷ்டங்கள் பற்றியும் கல்யாண வயதை அடைந்திருக்கும் சகோதரிகளைப் பற்றியும் அவன் விஸ்தாரமாகச் சொல்லியிருக்கிறான்.

நண்பர்களின் கடிதங்களை வாசிப்பது அவனுக்கு ஒரு புளித்துப் போன அனுபவமாகி விட்டது. ஹந்தானையின் மேகம் மூடிய சிகரங்களுக்கும், மகாவலியின் கலங்கிய நீரோட்டத்துக்கும் மத்தியில் இராமநாதன் மண்டபத்தின் இன்ப உலகின் கனவுகளுடன் வாழும் ஜெஸீமா எழுதும் கடிதங்களும் எப்போதாவது வரும். அக்கடிதங்களை வாசிக்கும் போது எப்போதும் அவனுக்குச் சோகம் கலந்த சிரிப்பு வருவதுண்டு. இந்த வருடம் பைனல் பரீட்சையை முடித்துவிட்டு வீட்டுக்குச் சென்றால் அவனது இந்தச் சிரிப்புக்களின் அர்த்தங்களை அவளும் புரிந்து கொள்ளக் கூடும்.

இரண்டாமாண்டு மாணவனாகப் பேராதனையில் இருந்த காலத்தில் மிஸ் ஹுஸைனின் நட்பு அவனுக்குக் கிடைத்தது. பொருளாதார ரீதியில் ஏற்பட்ட நெருக்கடிகளையும், கஷ்டங்களையும் உள்ளத்தின் ஆழத்தில் எங்கோ புதைத்து விட்டு விஜேவர்தனாவின் கொமன் ரூமில் அவன் அவளுடன் கழித்த மாலைப் பொழுதுகள் தான் எத்தனை!

பின் எகனோமிக்ஸ் டியூட்டர் ஒருவருடன் அவள் நெருங்கிப் பழகத் தொடங்கியதால் அவன் அவளிடமிருந்து விலகிக் கொண்டான். இறுதியாண்டில் காலடி எடுத்து வைத்தபோது ஜெஸீமா முதலாண்டு மாணவியாக வந்து சேர்ந்தாள். அஸீஸின் வார்த்தைகளில் சொல்லப் போனால் ‘அவளது முகத்தைக் கடித்துத் தின்னலாம்’ மாவனல்லையிலிருந்து பல்கலைக் கழகத்துக்கு வந்த ஏனைய மாணவிகளிடமிருந்த பொது இயல்புகளான வெறுமையும், போலித்தன்மைகளும், வசீகரமற்ற வார்த்தையாடல்களும், ஜெஸீமாவிடம் இல்லாதிருந்தமையொன்றே அவனை அவள்பால் ஈர்த்தது. அவளை ‘ராக்கிங்’

செய்து “போட்டுக் கொள்ள வேண்டுமெனப் போட்டியிட்ட கதாநாயகர்களையெல்லாம் தான் வெற்றி கொண்டதை ஒரு பெருஞ் சாதனை என நினைத்து அவன் அப்போது பெருமைப் பட்டான்.

‘நேற்று நீ செய்த ஒரு காரியம் இன்றைக்கு முட்டாள் தனமாகத் தெரிந்தால் நீ குறுகிய காலத்தில் அதிக வளர்ச்சி அடைந்திருக்கின்றாய் என்று அர்த்தம்’ எனப் பிலோஸொபி தியாகராசா அடிக்கடி சொல்வான். அந்தவகையில் பார்க்கும் போது, தான் கூட இன்றைக்கு வளர்ச்சி அடைந்திருப்பதாகத் தான் படுகின்றது. பொய்மையின் நிழலில் மாயையுடன் இப்போது வேலையொன்றுக்காக அலையும் போதுதான் அவன் புரிந்து கொள்ள முடிகின்றது.

பல்கலைக் கழகத்தில் காலடி எடுத்து வைத்திருந்த நாட்களில் பொருளாதாரத்தைச் சிறப்புப் பாடமாகப் படித்து உயர் வகுப்பில் பட்டம் பெற்றுத் திட்ட அமைச்சுக்கு அல்லது மத்திய வங்கிக்கு அதிகாரியாகப் போக வேண்டுமென அவன் கனவுகள் கண்டு கொண்டிருந்தான். இரண்டாமாண்டுப் பரீட்சையில் பெற்ற குறைவான புள்ளிகள் காரணமாக புவியியல், பொருளாதாரம், அரசியற் தத்துவ ஞானம் ஆகிய பாடங்களைக் கொண்ட ஒரு பொதுக் கலைப் பட்டம் தான் அவனால் பெற முடிந்தது.

பாடசாலையில் மட்டுமல்லாமல் பல்கலைக் கழகத்திலும் அவன் ஒரு ‘இன்டலிஜென்ட் கேஸாக’ அங்கீகாரம் பெற்றிருந்தான். சீ.ஏ.எஸ். பரீட்சை எழுதியிருந்தாலும் சித்தியடைந்திருக்கலாம். பரீட்சைக் கட்டணம் நூறு ரூபா என்ற வார்த்தைகள் அவனை ரொம்பப் பயமுறுத்தியதால் அந்த எண்ணத்தையும் கைவிட நேரிட்டது. நண்பர்கள் கேட்டபோது அலட்சியமாக வேறெதுவோ காரணம் சொன்னதாக ஞாபகம். பணக்கஷ்டங்களை எல்லாம் நாசூக்காக மறைத்துக் கொண்டு ஏதும் குறைகளே இல்லாதது போல் மற்றவர்களுடன் கதைக்கும் பழக்கத்தை உம்மா லாவகமாகக் கையாள்வாள். அது அவனையும் தொற்றிக் கொண்டது.

சேர்மன் துரை சொல்லிய பாங்க் வேலை கூடிய சீக்கிரத்தில் கிடைக்கக் கூடும். அவர் எம்.பீ.யிடம் சொன்னால், அவன் ஒரு நாளும் அதைத் தட்டிக் கழிக்க மாட்டான். சேர்மன் மீது அவனுக்கு எவ்வளவோ வெறுப்பும் அசூசையும் இருந்த போதிலும், இம்முறை அவர் தன்னைக் கைவிட மாட்டார் என்ற ஒரு மெல்லிய நம்பிக்கை உள்ளத்தின் எங்கோ ஒரு மூலையில் தளிர்விடத்தான் செய்கிறது.

எத்தனையோ இன்டர்வியூகளுக்குப் போய்விட்டு அவரிடம் போய் அவன் சொல்லியிருக்கிறான். ‘நான் எம்.பீ. கிட்டச் சொல்லிப் பார்க்கிறன்’ என்று அவர் சொல்லிப் பார்த்த பல வேலைகள் எட்டாமல் போய்விட்டன. ‘அதுக்கு எல்லாம் சிங்கள ஆக்களயாம் எடுத்த. எம்.பீக்கு இதுக்கு லிஸ்ட் வர இல்ல. வந்தீந்தா செஞ்சீக்கலாம்’ இப்படி அப்போதைக் கப்போது ஏதாவது சாட்டுச் சொல்வதில் மட்டும் அவர் கெட்டிக்காரர் தான்.

அரசாங்கக் கூட்டுத்தாபன மொன்றில் வேலையொன்றுக்காக அந்தத் தொகுதியிலிருந்து சகீதும், பியசேன என்ற சிங்களப் பையனொருவனும் மட்டும் தான் இன்டர்வியூக்குப் போயிருந்தார்கள். அந்த வேலைக்கு ஜீசீ.ஈ. தகுதியே தேவையாயிருந்ததால், பியசேனாவுக்கு ஜீ.சீ.ஈ. தகுதி மட்டுமே இருந்ததனாலும், பட்டதாரியான அவனுக்கு நிறைய வாய்ப்புக்கள் இருந்தன. சேர்மன் துரையும் நிச்சயமாக அதைச் செய்து தருவதாகச் சொல்லி இருந்தார். அவரது வொக்ஸ் வாகன் காரில் மூன்று முறை அவர் அவனை எம்.பீ.வீட்டுக்கு அழைத்துச் சென்றார். வேலை கிடைத்தவுடன் முகைதீன் ஆண்டவர் பேரில் பால் கரைத்து பாத்திஹா ஓதுவதற்கு உம்மா நேர்த்திக்கடன் வைத்துக் கொண்டாள்.

ஒரு மாதத்துக்குள்ளேயே பியசேன உத்தியோகம் கிடைத்துப் போனது அவனுக்கு ஆச்சரியமாகவும் ஏமாற்றமாகவும் இருந்தது. சேர்மன் ரையிடம் அதைப் போய்ச் சொன்ன போது அவர் ரொம்பக் கவலைப் பட்டார். மனதுக்கு ஆறுதல் அளித்துக் கொள்வதுபோல் அவர் கடைசியாகச் சொன்னார்.

‘என்னமாயிருந்தாலும் மகன், அவனும் சிங்களவன். இவனும் சிங்களவன். ஜாதி ஜாதிக்குத்தானே இழுக்கும். நான் இதுக்கு என்ன செய்ய?’

‘சேமன் தொர கூடிய விதத்திலேம் சொல்லிப் பாத்தும். அந்த துவேஷக்கார நாய் இப்படிச் செஞ்சிட்டான்’

வாப்பா அன்றிரவு ரொம்ப வேதனையுடனும் கோபத்துடனும் உம்மாவிடம் சொல்லிக் கொண்டிருந்தார். ‘நாய்’ என்ற வார்த்தையைப் பாவித்தால் வாப்பாவுக்கு அடக்க முடியாத கோபம் வந்திருக்கின்றது என்று அர்த்தம்.

இரண்டு மூன்று நாட்களுக்குள்ளேயே அவன் அதை மறந்து விட்டான். பின்பு ஒரு நாள் ஜீ.ஏ.கியூ.நோட்ஸ் வாங்குவதற்காக பளீல் மாஸ்டர் அவனது வீட்டுக்கு வந்திருந்த போது சொன்ன ஒரு செய்தி அவனைத் திடுக்கிட வைத்தது. பியசேனாவிடம் இரண்டாயிரம் ரூபா வாங்கிக் கொண்டுதான் சேர்மன் அவனுக்கு அந்த வேலையை எடுத்துக் கொடுத்தாராம்.

அவனுக்கு அதைக் கேட்டதும் ஏதோ சில விஷயங்கள் புரிவது போலுமிருந்தது. புரியாதது போலுமிருந்தது.

சேர்மன் எவ்வளவு பக்குவமாக நடிக்கத் தெரிந்தவர். இந்த விசயத்தை அவன் வாப்பாவிடம் சொல்லவில்லை.சொல்லியிருந்தால் ஒரு வேளை அவர் அதை நம்பி இருக்கவும் மாட்டார்.

அதன் பிறகு இரண்டு மாதங்களாக அவன் துரையின் வீட்டுப் பக்கமே போகவில்லை. தன் மனச்சாட்சியின் உறுத்துதலுக்குப் பயந்தோ என்னவோ அவரே அவனை வரும்படி வாப்பாவிடம் சொல்லி அனுப்பியிருந்தார். வாப்பாவை திருப்திப் படுத்துவதற்காக அவன் மீண்டும் அவரின் வீட்டுக்குப் போனான். அப்போதுதான் பாங்க் வேலைக்கு விண்ணப்பிக்கும் படியும் தான் எப்படியாவது அதைச் செய்து தருவதாகவும் அவர் சொன்னார். விண்ணப்பம் அனுப்பி இந்த இருபதாம் திகதிக்கு மூன்று மாதங்கள். இந்த விஷயத்தில் அவரை நம்புவதா நம்பாமல் விடுவதா என்பதே அவனுக்குப் பிரச்சினை தான். இப்போது அவர் நடந்து கொள்ளும் பாணியிலிருந்து தன் குடும்பத்துக்கு உதவிசெய்ய வேண்டும் என்ற எண்ணம் அவரிடம் இருப்பது போல் தான் தெரிகின்றது. முந்தின வேலை கிடைக்காமற் போனது ஏதோ வேலையில் நல்ல சம்பளமென்றும் வாப்பா அடிக்கடி சொல்லிக் கொண்டிருக்கிறார்.

உம்மாவும் ஓட்டைவாய் தான். கிணற்றடி வம்பளப்பொன்றில் மகனுக்கு பாங்கில் வேலை கிடைத்து விட்டது மாதிரி அவள் கதைத்து வாய்க்கு வாய் மாறி ஒன்றிரண்டு போர் ‘எப்ப தொரே நீங்க பாங்குக்குப் போற’ என்று கேட்கத் தொடங்கி விட்டார்கள்.

‘என்னத்தெ புள்ளே ஒனக்கு இது மாதிரி யோசின’

அவன் திடுக்கிட்டுப் போனான். ஜாம் மரத்தின் கிளையொன்றைக் கைகளால் பற்றிக் கொண்டு தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டு, தான் இவ்வளவு நேரமும் சிந்தனையில் ஆழ்ந்திருந்தது, அப்போது தான் அவனுக்குத் தெரிந்தது.

உம்மா வெற்றிலைச் சாற்றைத் துப்பிய தோறணை எங்கோ போவதற்கு ஆயத்தமாவது போலிருந்தது.

‘ஆச பீபீம் கெணத்துக்குப் பெய்த்தீர, எண்ட தங்கப் புள்ளே, இத நெல்லுப்பாய கொஞ்சம் பாத்துக்கோ. நான் அக்கரக்க பெய்த்து, ஹமீது சாச்சாவ பாத்துட்டு ஓரல்பத்ல ஓடி வாரன். நல்லொண்டுக்கில் லாட்டீம், பொல்லாப்புக்காலும் போகோனுமமல்லென் புள்ளே’

முற்றத்தில் இரண்டு பாய்களில் உம்மா நெல்லைக் கிளறி விட்டிருந்தாள். ஒரு பாயின் அரைவாசி வரையில் கூரையின் நிழல் பரவியிருந்தது. வாசலில் வாங்கொன்றை இழுத்துப் போட்டு அவன் உட்கார்ந்து கொண்டான்.

அதற்குள் ஒரு கோழி வந்து ஆறுதலாக அங்கமிங்கும் பார்த்துவிட்டு சாவகாசமாக நெல்மணிகளை விழுங்கத் தொடங்கியது. ‘உஷ்ஷ்’ என்று ஒருமுறை கூவி அதை விரட்டிவிட்டான். முன்பெல்லாம் நெல்லுப் பாயைக் காவல் காப்பது ஒரு சுவையான பொழுது போக்குத்தான். உம்மா தருவாள் அதைத் தின்று கொண்டே நெல் தின்ன வரும் கோழிகளை அவன் ரொம்பத் தூரத்துக்கு விரட்டிக் கொண்டு போவான். இப்பொழுது அதையெல்லாம் நினைத்துப் பார்க்கும் போது சிரிப்பு வருகின்றது.

உசீ. ஒன்ன நரி தின்ன. சின்ன மகன் நெல்லப் பாத்து கொண்டீர சீத்துவம். நெல்லுப் பாயிகிட்ட கொஞ்சம் தண்ணீம் வைங்கோ. கோழிகள் விக்காம நெல்ல தின்னட்டு வெற்றிலைக் காவி படிந்த பற்களைக் காட்டிக் கொண்டு மரியம் அச்சும்மா முற்றத்தில் நின்று கொண்டிருந்தாள்.

இப்பொழுது இரண்டு மூன்று நாட்களாக சீட்டுக்காக கேட்டுக் கொண்டு மரியம் அச்சும்மா வந்து போகிறாள். உம்மா சொல்லியிருக்கும் கடைசித் தவணை இன்றுதான். இன்றும் காசில்லை. உம்மா வீட்டிலில்லாததும் நல்லதாகிப் போய் விட்டது.

‘உம்மா ஊட்ல இல்லியோ மவனே’

‘இப்பதான் உம்மா அக்கரக்கிப் போன’

‘சீட்டுக் காசு தரேண்டு சென்ன…. வெச்சிட்டு போனோ…….’

‘எங்க வெச்சீரோ எனக்கு தெரியல. ஆச்சும்ம பெய்திட்டு உம்ம வந்தொடனே வாங்கோ’

கிழவியின் முகம் வாடிப் போய்விட்டது. வெறுப்புடன் ஏதோ முணுமுணுத்துக் கொண்டு அவள் மஜீதுச் சாச்சாவின் வீட்டுக்குள் போவது தெரிந்தது.

உம்மா வாப்பாவுக்கும் தெரியாமல் ஓரிரு சீட்டுக்களுக்குச் சேர்ந்து முட்டை விற்று எடுக்கும் காசையும், சிக்கனத்தால் சேமிப்பதையும் கொண்டு பணம் கட்டுகிறாள்.

‘என்னத்தென புள்ளே இது ஓட கோவம். ஆசப்பிக்கு இதப் பள்ளீக் கந்துரி மாசத்துக்கு இருபத்தொரு வருசமாகுது. அவள எந்நாளேக்கிம் ஊட்டுக் கொள்ள வெச்சிக்கொளவோ? அவள்ல காதில கழுத்திலேம் ஒண்டுமில்ல. ஒந்ஹ வாப்ப சம்பாரிச்சி ஒதுகல செய்யங்காட்டீம், பாத்துக் கொண்டீந்தா உடிஞ்சிதான் போகும். இப்பிடி யொன்டுக்காலும் சேந்து கொண்டனதான் என்னத்தயாலும் செய்யலாம்’

தனது கையாலகாத் தனத்தை எண்ணிப் பார்த்து அழவேண்டும் போலிருந்தது.ஆயிசாவும் தான் எத்தனை ஆசைகளை அடக்கி வைத்துக் கொண்டிருப்பாள்.

பீடிக் கொம்பனிக்குப் போய் பத்திரிகைகளை ஓர் அலசல் அலசிவிட்டு வரும் வழியில் ஹனிபா மாஸ்டரின் மனைவியிடம் ஏதாவது புத்தகமொன்று வாங்கி வருவான். அதற்கிடையில் வழியில் சந்திப்பவர்களில் சிலர் கிண்டலாகவும், சிலர் உண்மையான அனுதாபத்துடனும், ‘இன்னும் ஒன்டும் சரிவர இல்லையா?’ என்று கேட்பார்கள். அலுத்துப் போன ஒரே பதிலை மீண்டும் மீண்டும் சொல்ல வேண்டும். குளித்துச் சாப்பிட்டு விட்டுப் படுத்தால் நாலரை மணிக்குத் திருப்பள்ளி எழுச்சி. பிறகு புளியமரத்தடியில் போய் உட்கார்ந்தால் வயதுப் பையன்கள் கிரிக்கெட் விளையாடுவதையும், ஆரச்சி மஹத்தாயாவின் தோட்டத்தில் சிங்களக் குமர்கள் குனிந்து கொண்டு புல் வெட்டுவதையும் தண்ணீர்க் குடங்களை எடுத்துக் கொண்டு கிணற்றுக்கு வரும் பெண்களையும், இராட்சத கவரை கொய்யாவொன்று படுத்திருப்பது போல தூரத்தில் தெரியும் ஹந்தானை மலைத் தொடரில் நிகழும் வர்ண ஜாலங்களையும் ஒரே நேரத்தில் கண்டு களிக்கலாம் இந்தப் புளிய மரத்தடியில் உட்கார்ந்து கொண்டுதான் அவன் பழைய நினைவுகளை மீட்டிப் பார்ப்பான்.

ராமநாதன் சோஷியலில் அவன் ஜெஸீமாவுடன் கதைத்த கதைகள்.ஜே.பீ ‘பஜாருடன்’ போய் ‘வசந்த மாளிகை’ பார்த்து விட்டு வந்து அதில் வரும் சில வசனங்களை உணர்ச்சி வசப்பட்டு நண்பர்களிடம் சொல்லி மகிழ்ந்த கணங்கள். யதார்த்த உலகை எட்டிப் பார்க்கக் கூடத் தயங்கிக் கற்பனை உலகமொன்றில் சிறகடித்துப் பறந்து சென்று வாழ்ந்த அந்த நாட்கள்….

கடைவீதிக்கு வரும்போது லேசாக மழை தூறத் தொடங்கியதால் அவன் தபாற் கந்தோருக்குள் போனான். வாரத்தின் சுவையான மலர்க் கதம்பம் இன்னும் வரவில்லைப் போலிருக்கிறது. போஸ்ட் மாஸ்டரிடம் கேட்டான். கடிதமொன்று போட வந்திருந்த பெண்ணொருத்தியுடன் அவன் கதைத்துக் கொண்டிருந்தான். சஹீத் கசெட்டைக் கேட்டது அவனுக்குக் கேட்கவில்லையாக்கும். கேட்டிருந்தாலும் அலட்சியம் செய்திருப்பான். தொழில் இல்லையென்றால் எல்லோரும் கொஞ்சம் இளக்காரமாகத் தான் பார்க்கிறார்கள்.

தேயிலைக் கடை ஜெலீல் நானா கூப்பிட்டு டீ கொண்ரோலருக்கு சிங்களத்தில் கடித மொன்று எழுதித்தரச் சொன்னார். கடிதத்தையும் எழுதி வாங்கிக் கொண்டு ‘தொரே நீங்க பீ. ஏ. படிச்சதுக்கு பிஸினஸ் செஞ்சீந்தா நல்லா சம்பாரிக்க இருந்தது’ என்று அவர் வழமையாகச் சொல்வார்.

வீட்டுக்குப் போகத் தொடங்கினான். படிக்கட்டுகளில் ஏறியபோது வாப்பாவும் கம்பளை பஸ்ஸில் வந்திறங்கினார்.

‘மவனே சேமன் தொர கம்பளேல கண்டு சொன்னாரு ராவக்கி ஒன்னை ஊட்டுக்கு வரச்செல்லி. ஏழு மணிக்கால பெய்த்து என்னத்தெ எண்டு கேட்டுவா

சாப்பிட்டுக் கொண்டே ஹாஜியாரின் எஸ்டேட்டை அரசாங்கத்துக்கு எடுத்தது குறித்து வாப்ப வருத்தத்துடன் சொல்லிக் கொண்டிருந்தார். துரிதமான மாற்றங்களை ஜீரணிக்க முடியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கும் வாப்பா போன்ற சென்ற தலைமுறையின் எச்ச சொச்சங்களுக்காக அவன் அனுதாபப் பட்டான்.

ஆட்டோகிராபைக் கையில் எடுத்துக் கொண்டு அவன் கட்டிலில் சாய்ந்து கொண்டான். கலையார்வமுள்ள ஒரு மாணவி மலரொன்றை வரைந்து அதற்குள் கவிதை ஒன்று எழுதியிருந்தாள். இன்று அதையெல்லாம் ரசிக்கும் மனநிலை இல்லை. எந்த விஞ்ஞான யுகத்திலும் தனிமனித முன்னேற்றம் பொலிடிகல்புல்லிலேயே தங்கியிருக்கின்றது.’ எனப் பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு மாணவன் எழுதியிருந்தான். இந்த வாசகத்தின் அர்த்தங்களை இப்பொழுதுதான் புரிந்து கொள்ள முடிகின்றது.

ஸ்கூல் விட்டு வந்த ரிஸான் ‘கறி சரியில்லை’ என்று கூறிச் சண்டை பிடிப்பது கேட்டது. கண்ணை மூடிக் கொண்டு அவன் தூங்க முயற்சித்தான்.

பலா மரத்தின் நுனியில் ஏறிக் கொண்டிருந்த பண்டாவுக்கு உம்மா சத்தமாக ஏதொ சொல்லிக் கொண்டிருந்ததனால் தூக்கம் கலைந்து விட்டது. குர் ஆன் பள்ளிக் கூடம் கலைவதற்கு முன்னர் பிள்ளைகள் சத்தத்துடன் ஸலவாத் தோதுவது கேட்டது. மணி நாலரை பிந்தி இருக்கும். ஐந்து மணிக்கு எழுந்தால் போதும். சேர்மன் துரை வீட்டுக்கு ஏழு மணிக்குத்தானே போக வேண்டும்.

‘ஆச பீபி. நானக்கு கொஞ்சம் தேத்தண்ணி ஊத்திக்குடு’

அவன் வாசலில் நின்ற கொண்டு சோம்பல் முறிப்பதைக் கண்ட உம்மா கூறினாள். முகத்தைக் கழுவிக் கொண்டு அவன் தேநீர் அருந்தினான்.

சேர்மனின் நீல நிற பொக்ஸ்வாகன் கார் கராஜில் நின்றது. அவன் வீட்டுக்குள் போனபோது அவர் வேறு யாருடனோ கதைத்துக் கொண்டிருந்தார். அவனை அவர் ஒருமுறை பார்த்துவிட்டு முகத்தைத் திருப்பிக் கொண்டு அங்கு

178

இருந்தவருடன் மீண்டும் பேசத் தொடங்கினார். முன்வாசலுக்கு நேரெதிரே இருந்த உள் வராந்தாவில் அவரது மகள் சிவப்பு நிற பஞ்சாபி அணிந்து கொண்டு ரேடியோவைத் திருப்பிக் கொண்டிருந்தாள்.

அவனுக்கு ஆத்திரமாகவும் வெட்கமாகவும் இருந்தது. தென்னாசியாவின் நகராக்கச் சிக்கல்களையும், மேற்கைரோப்பிய தேசங்களது பொருளாதாரங்களின் ஒப்பீட்டு வளர்ச்சிக்களையும், பாலை வனங்களின் அரிப்புக் காரணிகளையும், ஆபிரிக்காவில் உருவாகி வரும் புதிய அரசுகளின் அமைப்புக்களையும் அலசிப் படித்துப் பரீட்சையில் தேறிவிட்டு ஜமால்தீன் என்பதில் வரும் ‘ஜூ’வுக்கப் பதில் ‘ஐ’ போட்டுக் கையெழுத்து வைக்கும் இந்தச் சேர்மன் போன்ற ஜென்மங்களிடம் வந்து தலை குனிந்து நிற்க வேண்டிய அவல நிலைக்குள்ளாகியிருக்கும் தன் தலைமுறையின் தலை விதியை அவன் நொந்து

கொண்டான்.

‘ஹா மகன் இரீங்கோ நான் டக்கெண்டு வாரன்’

இப்பொழுது தான் அவனைக் கண்டது மாதிரி சேர்மன் சொன்னார். அவருடன் கதைத்துக் கொண்டிருந்தவர் அவனை ஒரு நாயைப் பார்ப்பது போல் பார்த்து விட்டு மறுபக்கம் திரும்பிக் கொண்டார்.

கண் முன்னால் சுவரில் தொங்கிக் கொண்டிருந்த புகைப் படத்தை அவன் நோட்டம் விட்டான். கிராமச் சங்கத் தலைவராக அவர் தெரிவு செய்யப் பட்ட தினத்தன்று எடுத்த போட்டோ அது. கழுத்து நிறையப் பூமாலைகள். அவருக்குப் பக்கத்தில் நீலச் சட்டை அணிந்து நின்று கொண்டிருப்பது வாப்பாதான்.

கதைத்துக் கொண்டிருந்தவர் ஒரு மாதிரியாக எழுந்து போய்விட்டார்.

‘இப்படி வந்து உக்காருங்கோ’

அவன் அவரருகில் போய் உட்கார்ந்து கொண்டான். டீப்போவில் வைத்திருந்த பக்கெட்டிலிருந்து ஒரு பிரிஸ்டலை எடுத்து அவர் பற்றவைத்துக் கொண்டார். அவன் ஆவலுடன் அவர் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான். சேர்மனானதன் பின்பு அவரது வயிறு முன்பிருந்ததை விடக் கொஞ்சம் முன்னுக்குத் தள்ளி இருந்தது.ரேடியோவை மூடுவதுடன் சிலிப்பர் சத்தமொன்று கிளம்பி தூரத்தில் தேய்ந்து அழிந்தது.

‘மகன் அந்த பாங்க் வேல விஷயமாகத் தான் நான் ஒங்களுக்கு வரச் சொல்லி வாப்பாகிட்ட பணிவிட அனுப்பின.’

179

‘ஒங்களுக்கிட்ட ஒரு விஷயம் சொல்லோணும். எப்பிடிச் சொல்ரேண்டு தான் எனக்குத் தெரியல்ல. அதச் சொல்லீம் ஏல. சொல்லாமே ஏல

‘இவன் எம்.பீ. தான் வரவர நஸரானியாகிக் கொண்டல்லென் போறன். அவனுக்கிட்டப் பெய்த்து ஒரு ஜாதியேம் செல்லேலாமயல்லென் ஈக்கு. எதெச் சென்னாலும் ‘சலகா பலமு சலகா பலமு’ன்டிறதல்லாம வேலையொன்டும் நடக்கிராப்ல இல்ல. எம்பிடீம் மகன் ரெண்டாலும் கைல வெச்சனத்தான் வேலையக் கிட்டவாக்கி கொல்லலாம். எல்லரும் இப்ப ரெண்டு மூணிண்டு குடுத்தல்லென் ஒவ்வொண்டும் செஞ்சி போர’.

சகீதுக்குத் தலை சுற்றியது. இரண்டாயிரம் ரூபா. நினைத்துப் பார்க்கவே முடியாது. இரண்டு ரூபா இல்லாததால் சர்டிபிகேட் பிரதி ஒன்று எடுக்க பேராதனைக்குப் போகவேண்டியதை இப்பொழுது மூன்று நாட்களாகத் தவணை போட்டாயிற்று.ஐந்து ரூபா சீட்டுக் காசுக்காக மரியம் ஆச்சும்மா இப்பொழுது நான்கு நாட்களாக அலைச்சல். இந்தக் கோலத்தில் இரண்டாயிரம் எங்கு தேடுவது. பீடிக் கோட்டாக்களை எடுத்து விற்றுக் கொண்டும், பியசேன போன்றவர்களுக்கு உத்தியோகம் எடுத்துக் கொடுத்துக் கொண்டுமிருக்கும் சேர்மன் துரையைப் போன்றவர்களுக்கு இரண்டாயிரம் ரூபா வெறும் ‘ரெண்டு தான்.

தீர்க்கமாக அவர் அவனது முகத்தைப் பார்த்தார். அவன் தலை குனிந்து யோசித்துக் கொண்டிருந்தான்.

‘மகன் இத நீங்க ஊட்ல கேட்டுட்டு பெறகு ஒரு தாக்கெல் செல்லுங்கோ. வாப்பா கிட்ட இதச் செல்ல ஏலாஹத்துக்குத் தான் நான் ஒங்களுக்கு வரச் சென்ன’

எழுந்து வரும்போது கால்கள் பின்னிக் கொள்வது போலிருந்தது. இவ்வளவு காலமும் இந்தத் துரையை இரட்சகனாக நம்பியிருந்த தன் முட்டாள் தனத்தை எண்ணி அவன் வருந்தினான். வாசலிலிருந்து அவன் திரும்பிப் பார்த்த போது போட்டோவில் துரைக்கு வலது பக்கத்தில் வாப்பா நீலச் சட்டை அணிந்து நின்றிருப்பது தெரிந்தது.

படிகளில் ஏறும் போதே வாப்பா இருமி இருமிக் காறித் துப்பும் சத்தம் தூரத்தில் கேட்டது. வீட்டுக்குள் போய் அவன் உட்கார்ந்து கொண்டதும் அவர் சமையலறைப் பக்கத்திலிருந்து வந்தார்.

‘என்னத்தென் செல்றாரு தொர?’

180

‘ஒண்டுமில்ல கிட்டத்தில வேல கெடச்சுமம்’.

‘அதுதான் அவரு ஒன்டில் எறங்கின ரெண்டில ஒன்டு பாக்காம உட்டுக் குடுக்கிற ஆள் இல்லே.’

அதன் பிறகு அவன் ஒன்றும் பேசவில்லை. பெயருக்குக் கொஞ்சம் சாப்பிட்டுப் படுத்துக் கொண்டான்.

சேர்மன் துரையின் மயிர்கள் அடர்ந்த கறுப்புக் கைகள் அவனது கழுத்தை நெரித்துக் கொண்டிருந்தன. அவன் திடுக்கிட்டு விழித்துக் கொண்டான்.

‘தூங்கினது போதும். புள்ளே இனி எழும்பு’

இன்றைக்கும் உம்மா துடைப்பத்தை எடுத்துக் கொண்டு போகும் போது சொல்லிக் கொண்டு போனாள்.

‘ஓ, இனித் தூங்கினால்லோ எழும்ப வேணும்’

அவன் போர்வையை நீக்கி விட்டு எழுந்து கட்டிலில் உட்கார்ந்து கொண்டான். உம்மா அவனை ஒரு மாதிரியாகப் பார்த்தாள். அவன் சொன்னது அவளுக்கு விளங்கி இருக்காது. ஏனெனில் தூக்கம் விழிப்பு என்ற வார்த்தைகளை கட்டிலுடனும், பாயுடனும் மட்டுந்தான் அவளால் தொடர்பு படத்திப் பார்க்க முடியும்.

– இதழ் 76 – ஆகஸ்ட் 1974, மல்லிகைச் சிறுகதைகள், முதற் பதிப்பு: ஜூன் 2002, மல்லிகை பந்தல் வெளியீடு, கொழும்பு.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *