சாமி கண்ண குத்திடுச்சு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 2, 2021
பார்வையிட்டோர்: 6,498 
 
 

போன ஞாயிற்றுக்கிழமை கோயில் கூட்டத்தின் போது சலசலப்பு கூடியிருந்ததது.

பதினெட்டாம் கட்டை கோய்ந்தசாமியைக் இந்தமுறை கரகப்பூசாரியாய் கூப்பிடலாமென்று தலைவர் சொன்னார். சேரா எஸ்டேட் மாரியம்மன் கோயில் தீமிதியை நல்லபடியா நடத்திக்கொடுத்தார்.பேசிய தொகைக்கு மேல அஞ்சி காசுகூட வாங்கலன்னு சேரா கோயில் தலைவர் சொன்னதாக தலைவர் சிபாரிசு செய்தார். “கரைக்டா டயத்துக்கு வந்திடுவார்,கொற வக்காம செஞ்சி முடிச்சிட்ட பிறகுதான் தொகையைக்கேப்பார்,” என்று மேலும் சொன்னார் தலைவர்.

“ வருஷா வருஷம் பாரிட் புந்தார்லேர்ந்து சாமிக்கண்ணு கரகப்பூசாரியத்தான கூப்பிடுவோம்.அவருக்கிட்ட என்னா கொறைய கண்டாரு தலைவரு? சொல்லட்டும்.ஏன் திடீர் பல்டி தலைவரே”.பக்கத்தில் அமர்ந்திருந்த காளிமுத்து அதற்கு ஆமோதிப்பதைப்போல் தலையை ஆட்டினார்.

“ மொத நாளு ஒபயம்,எல்லக்கட்டு,தீமிதி அன்னிக்குள்ள சாங்கியம் ,மறுநா சாமி ஊர்வலம், அப்புறம் மூனாநாளு இடும்பன் பூச எல்லாத்துக்கும் சேத்து அவரு பேசன தொக முன்னூத்து அம்பது வெள்ளி.அட்வான்ஸ் நூறு வெள்ளிய பேசி முடிக்கும்போது கண்டிசனா அதுக்கு மேக்கொண்டு காசு கொடுக்க முடியாது, கமிட்டியில முடிவெடுத்தாச்சின்னு சொல்லிட்டுத்தான் கையில காச வச்சேன். அப்போ ஆட்டுக்கடாயாட்டம் தலயாட்டிட்டு, தீமிதிக்கி மொத நாளு அம்பது கூடப்போட்டு கொடுத்தாலே ஆச்சின்னு ஒத்தக்கால்ல நின்னாரு.கொடுக்கலன்னா நான் வரமாட்டென்னு அடம்பிடிச்சாரு.மறு நா திருவிலா. அதுக்கு மொத நா இப்படி பண்ணாரு.

பெறவு நான் எவ்வளவோ நல்லபடிக்கு சொல்லியும் பாத்தேன், சண்ட பிடிச்சும் பாத்தேன்.மனுஷ அசரலியே.காச வச்சிட்டு பேசு இல்ல ந்தா நீங்க கொடுத்த முன் பணம் நூறு வெள்ளின்னு தூக்கி போட்டாரு.சாமி ஆடுற மனுஷன் இப்பிடி சுத்தவுடுராரேன்னு பதறிப்போயிட்டேன்.நான் இல்ல வாக்கு கொடுத்தவன், மானம் மாரியாதைய காவந்து பண்ணனுமேன்னு ஒடியாந்து தீமிதி பிலாஞ்சாவுல கொடுத்த அம்பது வெள்ளியும் அவருக்கிட்ட கொடுத்த பெறவுதான் ஆளு அசஞ்ஜாரு”.

“என்னா புது கதையா இருக்கு. திருவிலா முடிஞ்சு கணக்கு வலக்கு பாக்குற கூட்டத்துல நீங்க இத சொல்லலியே?”(சாமிக்கண்ண கூப்பிடப்போகும்போது அவர் எப்போதும் இருக்கும் வீட்டில் இருக்கவில்லை.அவருடைய மனைவி ‘ இன்னிக்கி அவரு அங்கருப்பாரு’ என்று கடுப்போடு சொன்னதும் புது எடத்துக்கு வந்து பாத்ததும் இங்கயும் ஒரு பொண்ணு கைக்குழந்தையோட வீட்டில் நடமாடியது தெரிந்தது.தண்ணி கொண்டுவந்து வச்சதும் அந்த பொண்ணுதான். இதை கூட்டத்தில் சொல்ல வேண்டிய அவசியமில்லை!)

“என்னாத்த சொல்ல.அப்படியே சொன்னாலும் கமிட்டி ஒத்துக்குமா? தீமிதி முடிஞ்சி வரவு செலவ பேசி முடிச்சபோ நாம திட்டம் போட்டதவிட செலவு கூட போயிடுச்சுன்னு கணக்கு வந்துருச்சி.இதுல நான் எப்பிடி கேக்க? எல்லாம் போட்டாச்சி…..திருவிலாவும் முடிஞ்சிபோச்சு.என்னத்த கேக்க ? மாரியாத்தா பத்துல போகட்டுமேன்னு வுட்டுட்டேன்.மேக்கொண்டு அவ பாத்து கொடுப்பான்னு கேக்குல”.
“ அப்புறம் ஏன் பெருசு படுத்திறீங்க.சாமிக்கண்ண கரகப்பூசரியா வந்த எந்த வருஷமாவது தீ எறங்குற நேரத்துல மல வந்துருக்கா? அப்பிடியே இருட்டிக்கிட்டு வந்தாலும், கலைஞ்சி போயிடுது.ஆத்தங்கறையில கத்தி மேல நின்னு வாக்கு கேட்டப்ப அதெல்லாம் ஒன்னும் வராம ஆத்தா பாத்துக்குவான்னு வாக்கு கொடுத்து, தின்னூரு கொடுத்தப்புறம், பொரண்டுகிட்டு வந்த மல பொறப்பட்டு போயிருலியா?அவரு எல்ல கட்டுனதுக்கு அப்புறம் எஸ்டேட்டுல யாருக்காவது கெட்ட விஷயம் நடந்திருக்கா? சத்திய வாக்கு தந்தாருன்னா தந்ததுதான்! மறு பேச்சு இல்ல.அம்பது வெள்ளிய கணக்குல எடுத்துக்கிறீங்க?”சிலர் அவர் சொல்வது சரியென தலையாட்டுவதாய் இருந்தது.

“அது சரி! வரமாட்டேன்னு உடும்புப்பிடியா நின்னப்ப, அந்த நேரத்துல எங்க போயி கரகப்பூசாரிய தேடுறது? எல்லா கோயில்லேயும் அதே நேரத்துல திருவிலா.போய் கெஞ்சனாலும் வரமாட்டாங்க.வாக்கு கொடுத்திட்டவங்க எப்பிடி வருவாங்க?கடசி நேரத்துல மென்னிய பிடிச்சத இன்னும் மறக்க முடியல.அப்படியே நெஞ்சுலியே நிக்குது. அதான் வாணாங்கிறன்.போன வருஷமே முடிவு கட்டிட்டேன்”.

“ நீங்க முடிவு பண்ணிட்டா, நாங்க எதுக்கு அப்புறம்? பிடுங்………..?”

“என்னா வார்த்த பேசுறாரு பாத்தீங்களா?”

“ச்சொம்மா இருங்க……நல்லத கெட்டத பேசி முடிக்கத்தான கூடியிருக்கோம்”.

“ எப்பியும் கூப்பிறவரியே கூப்பிடுவோம்.புதுசா யாரையாவது கூட்டிட்டு வந்தா புது வில்லங்கமெல்லாம் வராதுன்னு என்னா நிச்சயம்”?

“அதான் கமிட்டி எல்லாம் கூடியிருக்கோம்ல, ஓட்டுக்கு விட்டுப்பாப்பம்!என்னா நா சொல்றது?”

சாமிக்கண்ண கூப்பிடுவோம்னு ஒரு ஓட்டு கூட கை தூக்க, தலைவரு,” நீங்களே நடத்திக்கீங்கன்னு,” பேசாம எலுந்திருச்சி கெலம்பிட்டாரு.”ஒரு தலைவரு பேச்சுக்கு மதுப்பில்லேன்னா …… நான் எதுக்குத் தலைவரா இருக்கனும்?” அதற்குப்பிறகு அவரைச்சமாதானப்படுத்தி அழைத்து உட்கார வைத்து பேச வேண்டியதெல்லாம் பேசி முடித்தாயிற்று.

***

“அப்பா போன வருஷம் தீமிதி செலவுக்கு பத்து வெள்ளி தரேன்னு சொல்லிட்டு கடசீல ஒரு வெள்ளிய கொடுத்து ஏமாத்திட்டீங்க..இந்த வருஷமாவது கொடுங்கப்பா”.கோயில் வளாகத்தில் தீமிதியன்று புதுப்புது வியாபாரிகள் பிரசன்னமாகி விற்கும் பொருட்களின்மேல் அவனுக்கு பிரத்தியேக ஈர்ப்பு இருந்தது.குறிப்பாக முகத்தை கவர்ச்சியாகக் காட்டும் கூலிங் கிலாஸ் மீதும், சிகப்பு சப்பாத்து மீதும் அவன் அலாதியான பிரியம் கொண்டிருந்தான்.அவன் வகுப்பு நண்பன் போன தீமிதியன்று வாங்கி அணிந்து திரிந்தது அவனை வெகுவாக கவர்ந்திருந்தது.அதைப்போட்டு நடந்தால் தான் தன் நண்பனை விடக்கவச்சி¢யாக ரஜினியைப்போல் இருப்பது போன்ற பிம்பம் தோன்றி மறைந்தது.அதற்கான விலையை விசாரித்தபோது அவன் பத்து வெள்ளியெனச் சொல்லியிருந்தான்.அந்த ஏக்கம் இந்த தீமிதி வரை அவனைத்தொடர்ந்தது.

“போன வருஷந்தா தீமிதிக்கின்னு வச்சிருந்த அம்பது வெள்ளிய கரகப்பூசாரிக்கிட்ட அழுதாச்சே.அப்பறம் எங்கிருந்து நான் கொடுக்கிறது.காசு என்னா கித்தா மரத்துலயா வெலயுது?”(யாரு சொன்னது காசு கித்தா மரத்துல வெலயுலேன்னு?கித்தா மரத்துல காசு வெலயுலேன்னா நாட்டு முன்னேற்றமெல்லாம் எங்கேர்ந்து வந்துச்சாம்? ம்.. …..) மகளுக்கும் மனைவிக்கும் கூட தீமிதி செலவுக்கென தரவேண்டும் என்ற அவர் திட்டத்தில் மண் விழுந்ததும் அதனால்தான்.மனைவி பரவாயில்லை, பருவப்பண்ணாய் வளர்ந்து நிற்கும் மகள் நல்ல நாளும் பெருநாளுமாய் நல்ல துணி உடுத்தி தோழிகளோடு ஒய்யாரமாய் நடக்க கனவுகள் வளர்த்திருக்க மாட்டாளா என்ன?

“முருகா எதயும் வாயில எடுத்து வச்சிடாத. சாயங்காலமா சாமி ஊர்வலம் வருது.சாமிக்கி படச்சதுக்கு அப்புறம் சாப்பல்லாம். பொருத்துக்க!ஏங்க கொஞ்சம் பாத்துக்கோங்க……. “

“ பசிக்குதும்மா…. யம்மா?”

“ஒனக்கு எதாவது பாத்ததுக்கு அப்புறம் அதிசயமா பசி எடுத்திடும், வாயில வச்ச சாமி கண்ண குத்திடும்”.

“ யம்மா”

“அதோ பாரு முருகர் கையில வேலு, அந்த படத்துல பாரு சிவன் கலுத்தில நாகம். அந்த படத்துல பாரு காளியாத்தா கையில சூலம்.

கண்ண குத்திடும்.அப்புறம் எப்பிடி எப்பிடி குத்துதுன்னு நமக்கே தெரியாது. சாமி குத்தம் செஞ்சா நிச்சயமா குத்திடும்!”

“ஆமாம்மா நேத்து கோயில் தெடல்ல போட்ட படத்துல ரம்யா கிருஷ்னன் காளியா மாறி நாசர குத்தினிச்சே அது மார்ஸாம்மா?’

“தெரிதுல்ல…… சாமிக்குப்படைச்ச பெறகு, நம்ம வூட்ட தாண்டுன ஒடெனே எடுத்து சாப்பல்லாம். அது வரைக்கும் எச்சி படக்கூடாது.

எச்சி பட்டத சாமிக்கு படைக்கலாம்மா?”

***

தீமிதி முடிந்து இரண்டாம் நாள் சாமி ஊர்வலம் களைகட்டியிருந்தது.தோட்டத்தில் முக்கால்வாசி பேர் அங்குதான் இருந்தனர்.எஸ்டேட் லாரியில் ஏற்றியிருந்த ஜெனரேட்டர் மின்சார வெளிச்சத்தில் காளியாத்தா ஜெகஜோதியாய் காட்சி தந்தாள். சாமிக்கு ஒரு இருபது கெஜத்துக்கு முன்னால் சாமிக்கண்ணு கரகப்பூசாரி சலங்கை ஒலியும்,தவில் நாதஸ்வர ஓசையும், பஜனை கோஷ்டியின் பாடல்களை அமுக்கி,ஒரு வட்டத்துக்குள்ளேயே நிறுத்தியிருந்தது.

கரகப்பூசாரி தலையில் சுமந்திருந்த கரகத்தை ஆடி ஓய்ந்த நேரத்திலெல்லாம் வலது கையால் தள்ளி சுழல வைத்தார். அது உச்சந்தலையின் பம்பரம் மாதிரி ஆடியது.முகத்திலிருந்து வியர்வை சரம் சரமாய் ஓயாமல் நீர்க்கோடென விரைந்து கீழிறங்கியது.மார்பிலும் புஜத்திலும் பூசிய சந்தனம் கரைந்து கொண்டிருந்தது.குங்குமம் சிவப்பு தடயத்தையும் இழந்தவண்ணம் இருந்தது.கரகம் ஏற்றுவதற்குமுன் மேனியில் அடைஅடையாய் கோர்த்திருந்தது திருநீரு அடையாளத்தை மொத்தமாய் இழந்திருந்தது.வேட்டியை இறுகியிருந்த மஞ்சள் சால்வை முதற்கொண்டு வியர்வையால் நனைந்திருந்தது. அவர் சுற்றிச்சுற்றி ஆடும்போதெல்லாம் அவர் கழுத்தில் தொங்கிய தங்கச்சங்கிலியும்,நான்கைந்து விரல்களில் போட்டிருந்த பச்சைக்கல் பதித்த மோதிரமும் ஒளிக்கீற்றை வீசியது.

பத்து வெள்ளி வைத்த வீட்டுக்கு மட்டுமே கரகப்பூசாரி ஆடினார்.ஏற்கனவே துரை வீட்டில் ஆடியதற்கு அவருக்கு துரை ஐம்பது வெள்ளி வைத்திருந்தார்.அங்கே அவர் கரகம் மாதிரி சுழன்று சுழன்று சுழன்று ஆடினார்.கைவசம் உள்ள வித்தையெல்லாவற்றையும் கொட்டி ஆடினார்.கரகம் தலையில் இருந்தபடியே பின்னால் வளைந்து காசை எடுத்தார். வளைந்தபடியா கொக்கோ கோலா குடித்தார்.கரகத்தை தலையிலிருந்து இரு தோளுக்கும் மாற்றினார். முதுகுக்கு கொண்டு போனார்.கைவைக்காமலேயே!அங்கே களைத்தவர்தான் பிறகு ஆட்டத்தின் வேகம் குறைய ஆரம்பித்தது.கிராணி வீடுகளில் அவர் துரை வீட்டில் ஆடியது போன்ற வேகத்தைக்காட்டவில்லை.கொஞ்சம் சுதி குறைந்திருந்தது.லயத்துப்பக்கம் வந்தபோது தண்டல்கள் வீடுகளில் ஆடினார்.ஆனால் கிராணி வீடுகளில் ஆடியது போன்ற வேகம் காட்டவில்லை.மற்ற வீடுகளில் சற்று நேரம் ஆடுவதற்கு பத்து வெள்ளி இருந்தால்தான் ஆட்டத்தைக்காட்டினார்.இல்லையென்றால் சலங்கை ஓசையை ஜதியோடு முடித்துக்கொண்டு வீடுகளைத்தாண்டிப்போய்க்கொண்டே இருந்தார்.வீடுகளைக்கடக்கும்போதெல்லாம் அவர் கால்களில் சில பெண்கள் விழுந்து வணங்கினர்.ஒரு சில தாய்மார்கள் பயபக்தியோடு தங்கள் பச்சைக்குழந்தைகளை அவர் திருக்கைகளில் கொடுத்து திருநீறு வாங்கி ஆசீர்வாதம் பெற்றனர்.அவர் கைக்குப்போன குழந்தைகள் தன் முகத்தில் பீதியை நிறைத்து வீரிட்டு கதற ஆரம்பித்து மீண்டும் தாயின் கரங்களுக்கு வந்ததும் தான் பாதுகாப்பில் இருப்பதை உணர்ந்து தங்கள் அழுகையை விசும்பலோடு சன்னமாய் நிறுத்திகொண்டன. இடுப்பில் கட்டிய மஞ்சள் துணியில் காசு பொட்டலம் காங்காரு குட்டியாய் விம்மியிருந்தது.

“ பத்து வெள்ளி வச்சாதான் ஆடுவேன்னா.காசு இல்லாதவங்க என்னா பண்ணுவாங்க?”

“ ஆடனம்னா பத்து வெள்ளி வய்யு.இல்லன்னா சொம்மா இரு.”

“சம்பளத்துக்கு இன்னும் பத்து நாளு இருக்கே.நாலு நாளைக்கு முன்னாலதான் தீமிதி பிளாஞ்சா போட்டாங்க.அதுலதான் சம்பளத்து வரைக்கும் ஓட்டனும்.இதுல நான் ஆட்டத்துக்கு பத்து வெள்ளி வச்சிட்டேன்னா சோத்துக்கு சொருகுதாளம் போடவேண்டியதுதான்.”

ஆனால் தாவணி கட்டிய அழகான பெண்களைக்கடக்கும்போதெல்லாம் பூசாரி இலவச இணைப்பாய், தோளில் இறங்கிச்சரிந்து நெளிந்த முடியை கோதிவிட்டபின்,நின்று ஆடிவிட்டுத்தான் போனார்.அவர் முகத்தில் அப்போதெல்லாம் கூடுதல் தேஜஸ் ஏறியிருந்தது.

***

இரண்டாம் நாள் சாமி ஊர்வலத்துக்குப்பிறகு, மூன்றாம் நாள் இடும்பன் பூசை.மஞ்சள் நீர் ஆட்டமெல்லாம் முடிந்து மக்கள் கோயிலில் கூடியிருந்தார்கள்.பூசைஎல்லாம் முடிந்து கரகப்பூசாரி கொஞ்ச நேரம் ஆடவேண்டும்.வருஷா வருஷம் நடப்பதுதான்.அது முடிந்ததும்தான் விழாக்களை நிறைவுறும்.பூசை முடிந்து பந்தி முடித்துக்கொண்டு மக்கள் கலைந்துகொண்டிருந்தார்கள்.

“என்னாங்க கரகாட்டம் இல்லியா?”

“இல்ல.”

“ஏங்க?”

“ஒன்னுமில்ல..நேத்து கரகாட்டமெல்லாம் முடிஞ்சி களைப்பா இருக்கேன்னு கருப்பு பீரு வாங்கிட்டு வந்து சாப்பிட்டிருக்காரு.ரெண்டாவது போத்த தெறக்கும்போது, போத்த மூடி கண்ணுல அடிச்சிருக்கு.கண்ணுல லேசா ரத்தம் கூட வந்துடிச்சாம்.பூசாரிய பினாங்கு ஆசுபத்திரிக்கி அனுப்பிச்சிட்டாங்களான்”.

“யாம்மா …… சாமி கண்ண குத்திடிச்சாம்மா?”

– செப்டம்பர் 2008

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *