உறங்கம் தெளிந்தும் தெளியாத மந்த காலை நேரத்தில் தோன்றும் அக்கனவு, ஒரு கலவியின் உச்சம்போல, எப்போதும் இருக்கும் ஒரு நினைவின் பகற்கனவுபோல, தோன்றும் ஒவ்வொரு சமயமும் அதே அதிர்ச்சியுடன் விழிப்பு ஏற்பட்டு விடுகிறது. சில நேரங்களில் விழிப்புக்கு பின்னும் இது கனவு எனப் புரிவதற்கு சில நிமிடங்களேனும் ஆகிவிட்டிருக்கும். பிறகு அந்த தாக்கத்தின் அதிர்ச்சி நீங்க வேறு எதாவது வேலையில் தீவிரமாகக் கவனம் கொள்வது போல் செயல்படவும் வேண்டியிருக்கும். அப்படியும் அதிலிருந்து முழுமையாக வெளிவரமுடிவதில்லை என்பதை அன்றைக்கு இரவு தூங்கச் செல்லும் வரை உணர முடியும்.
அன்று காலையில் எழுந்த கூத்தையனுக்கு எப்போதும்போல நேற்றைய கனவில் தோன்றிய முகம் மிக பரிச்சயமானதும், மிக அன்னியமானதும் போலத் தோன்றியது. அதேவேளையில் குழப்பமாக அது இறந்துபோன வாசுகியின் முகமல்ல என்றும் பட்டது. பல நேரங்களில் இப்படி அனுமானிப்பது சலிப்பாகவும், அவஸ்தையாகவும் இருக்கும். கனவில் வந்தவளின் முகஅமைப்பு வேறுமாதிரியாக நீள்சதுரமாகவும், கீழுதட்டில் மச்சத்தோடும் இருந்தது. அவளை நெருங்கும் சமயத்தில் அது கனவு என்று தோன்றிய ஒரு கணத்தில் முழிப்புகொண்டு வெளிவர முடியவில்லை. அவளைப் புணர்ந்து உச்சம் கொள்ளும் சமயத்தில் காற்றில் அசைந்த அடுப்படி கதவு இருட்டில் அகோரமாக முனகியது. அக்கதவு பலநாட்களாக – அதுவும் பவானி ஊருக்கு போனபின், தாளில்லா கதவிற்கு முட்டுகொடுக்க மறந்துவிடுகிறது – அப்படியே உச்சத்தில் வாசுகி கொள்ளும் குரலாக தொடர்ந்து முனகுகிறது. அது அப்போது வேண்டுமென்றே முனகியதாக தோன்றிய ஒரு கணம் அதிர்ச்சியில் கால்களை உதறியபடி எழுந்தமர்ந்தான்.
அதே நினைவுகளுடன், தொடரும் நெஞ்சு படபடப்புடனும், தலைவலியுடனும் வீட்டிற்கு முன்னால் உள்ள வாய்க்காலை பார்த்தபடியே பல்துலக்கினான். தான் சிறுவயதாக இருந்தபோது வாய்க்காலாக இருந்தது இப்போது சாக்கடையாக மெல்ல மாறிவருவதை அனுமானித்தபடியே அதன் மீது சிறுகல்லைத் தூக்கி எறிந்தான். வளையங்கள் சுழலும் பம்பரத்தின் மையம்போல சுழன்றமர்ந்தது. கூரையில் ஒட்டடைகள் வெளித்திண்ணைவரை பரவி தொங்கி கொண்டிருப்பதை இப்போதுதான் கவனிப்பது போலப் பார்த்தான். சுத்தம் செய்யவேண்டும் என்று மனதில் தோன்றினாலும் செயல்படுத்த முடிவதில்லை என்பதை எண்ணியபடியே மீண்டும் ஒருவித அலுப்போடு கவனித்துக் கொண்டே பல்துலக்கினான்.
பின்பக்கமாகச் சென்று குளித்து ஈரத்துண்டோடு உள்ளே அடுப்படி வந்து ஓரமாய் இருந்த நீராகாரத்தை எடுத்து தட்டில் போட்டுக் கொண்டு, அடுப்படிக் கதவிற்கு முட்டுக் கொடுக்க வேண்டும் என்று பகலில் மட்டுமே நினைவில் வருவதை யோசித்தபடியே தொட்டுக்கொள்ள அவன் கடை ஊறுகாய் அட்டையிலிருந்து ஒன்றை பிய்த்துக்கொண்டு சாப்பிட ஆரம்பித்தான். பவானி இருந்தால் வேண்டா வெறுப்பாகவாவது எடுத்து வைப்பாள். கனத்த மெட்டி ஓசையுடனும், வளையல் குலுங்கல் ஓசையுடனும் அங்குமிங்கும் நடமாடுவதுபோல் மனதில் நிழலாடியது.
வளையத்தில் தொங்கிகொண்டிருந்த சட்டையும் வேட்டியும் அழுக்கடைந்திருந்தது தெரிந்தது. சட்டை அணிந்ததும் பாக்கெட் மேலும், மடித்துக் கட்டிய வேட்டியின் தொடைப் பகுதியிலும் அதிக அழுக்காகத் தெரிந்தது. கடை எண்ணெய் தினமும் பார்த்துப் பழகி சாதாரணமாகி விட்டிருப்பதை உணர்ந்தபடி சைக்கிளை எடுத்தான்.
வீட்டிற்கும் தெருவிற்கும் நடுவில் வாய்க்காலின் மேலிருந்த தென்னைமரப் பாலத்தில் சைக்கிளைத் தூக்கிக் கொண்டு நடந்து இந்தப் பக்கம் வந்தபோது அவன் வருவதை ஒரு விநாடி கவனித்து புன்முறுவலிட்டு தலையசைத்தபடி கடந்து சென்றான் செல்லையா. கூத்தையனின் கண்கள் வேறு எங்கோ நிலைகுத்தியிருப்பதை ஒரு பொருட்டாக அவன் நினைக்கவில்லை. அந்தச் சிரிப்பு தன்னைக் காயப்படுத்த வேண்டும் எனச் செய்யப்பட்டது என்று அறிந்திருந்தாலும் தன்னைப் பாதிக்காதது அவனைச் சங்கடப்படுத்தியது. பலசமயம் வாசுகி செய்திருக்கிறாள். அவளிடம் குளிர்ச்சியோடு கூடிய மண்ணின் மெல்லிய மணம் எப்போதும் இருந்தது. அது அவனை முகம் இளகவைத்து புரியா வெறுப்பில் தொடங்கி எப்போதும் களிவெறியில் முடிவதை எண்ணிக் கொண்டான்.
சைக்கிளில் ஏறிஅமர்ந்தபோதே அவன் சுமை தாங்காது திணறியது. இந்த சைக்கிள் அவன் அப்பா அவரின் இளவயதில் வாங்கியது. அவர் இறந்ததும் அவன் கைக்கு வந்துவிட்டது. நினைவிலும் கனவிலும் மிதந்து அவன் தலைகுனிந்து பின்னோக்கி ஓடும் ரோட்டை பார்த்தபடி வண்டியோட்டினான். நிறங்கள் மங்கி எப்போது வேண்டுமானாலும் தனித்தனியே தன்னை பிரித்துக் கொண்டு தற்கொலை செய்துகொள்ள தயாராக இருப்பதுபோல் இருந்தது. உன்னை சுமந்து செல்லமுடியாது என சொல்லும்படி வளைந்த முன்சக்கரம் ஆடியாடி மறுப்பு தெரிவித்தபடி சென்றது. மடப்புரத்தின் முக்கியக் கடைத்தெருவான மேலவீதியில் அவன் கடை இருந்தது. அவன் அப்பா காலத்திலிருந்து இருக்கிறது. தினமும் தவறாமல் வந்து கடையைத் திறந்து அமர்ந்துகொள்ளும் அவனுக்கு மாணிக்கம் மட்டுமே துணை. நாலு கடை தள்ளி அமைந்திருக்கும் வாடகை சைக்கிள் கடைக்குச் சொந்தகாரன். மனைவியை இழந்தவன்.
விஜயபுரத்திலிருந்து கொஞ்சம்போல சரக்குகள் எப்போதாவது கொள்முதல் செய்துவருவான். இருண்ட அவன் கடையில் முன்பக்கத்து பாட்டில்களில் சிலவகை மிட்டாய்களும், பின்பக்கத்து அலமாரி டப்பாக்களில் சீரகம், கடுகு, மிளகு, என்று எதாவது இருக்கலாம் என சிலசமயம் நினைத்துக்கொள்வான். பெரிய கூட்டம் ஏதும் வந்துவிடப்போவதில்லை. ஒருநாள் என்றும் கடைக்குவராத முட்டுத் தெரு மணி ஏதோ ஒரு அவசரத்திற்கு அவன் கடைக்கு வந்து விரலி மஞ்சள் கேட்டான். உள்ளே போனவன் ஏதோ மயக்கத்தில் மேலே பார்த்தபடி அங்கேயே நின்றுவிட்டான். காத்திருந்து அலுத்துபோன மணி திட்டிக்கொண்டே போனான். இப்படி ஏதோ வியாபாரம் ஓடிக்கொண்டிருந்தது.
வாசுகியை நினைக்கும் தோறும் அவன் உடல் இறுக்கம் கொள்வதை அறிந்திருந்தான். அவள் ஸ்பரிசத்தின் மென்மையில் ஒரு பெண்மையைக் கையாள்வது இத்தனை எளிதானதா என்ற எண்ணம் ஓடுவதைத் தவிர்க்க முடியவில்லை. போகத்தில் ஒவ்வொரு சமயமும் அவள் இளகுவது எந்த உண்மையை அறியும் பொருட்டு என்று கடையின் இருண்ட அறையில் அமர்ந்து யோசித்திருக்கிறான். உச்சத்தில் அவள் கண்களில் தெரிவது வெறிகொண்ட மிருகத்தின் கண்கள் என்பதை பிறகு உணர்ந்து பயந்திருக்கிறான். அச்சமயங்களில் அவள் உடல் கொள்ளும் நெளிவுகூட ஒரு திமிரும் மிருகத்தினுடையதுதான், ஆனால் போகத்தின் முடிவில் உருகிச் சமனமாகிவிடுவாள்.
இப்போதும் நினைவில் இருக்கும் ஒரு மழைநாளில்தான் அவளை திருமணம் செய்துகொண்டான். அதற்காக ஊரின் ஐதிகப்படி ஊறவைத்த அரிசியைத் தின்றிருப்பாள் என்ற கிண்டல்களை அவள் எதிர் கொள்ளவேண்டியிருந்தது. அம்மாவின் உற்சாகம் அன்று அவனுக்கு புதிராக இருந்தது. தன்னை பிரசவித்த கொஞ்சநாளிலியே காதுமந்தமாகி அதனால் அவளிடம் ஒரு நிரந்தர மெளனம் குடிகொண்டிவிட்டிருந்தது. அது உடைந்து உற்சாகமாய் பெருகுவதை வேடிக்கையாகப் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் திருமணத்திற்குபின் அந்த உற்சாகம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து முடிவில் வாசுகிமீது வெறுப்புடன் மீண்டும் மெளனம் கொண்டு விட்டதையும் கவனித்திருந்தான். அதற்கு வேறு காரணங்களும் இருந்தன. நாள் முழுவதும் வாசுகி அதிருப்தியில் வீடுமுழுவதும் அலைவதை அவள் கண்டிருக்கவேண்டும். அவளின் ஒவ்வொரு செயலிலும் அவனை இழிவுபடுத்தும் முயற்சியிருந்தது. அது போகத்தில் கிடைத்த திருப்தியின்மையைக் குறிக்கிறது என்ற உண்மையை நாளெல்லாம் அவன் மனம் ஏற்க மறுத்தபடியிருந்தது. அவளை வெறுக்கும் ஒவ்வொரு சமயமும் அது அவனை அவளிடம் நெருக்கத்தை அதிகரிக்கச் செய்தது. மேலும் மேலும் போகத்தை அதிகரிக்கச் செய்தது. அதனால் மீண்டும் வெறுப்பையே அவளுக்கு உண்டுபண்ணியது.
பள்ளிச்சிறுவன் ஒருவன் அவன்முன் நிற்பதை அப்போதுதான் அறிந்தான். ‘அண்ணே, இங்க் கொடுங்கண்ணே,’ என்று அழுத்திக் கூறிய தொனி, இரண்டாவது, மூன்றாவது முறையாக கேட்டதால் இருக்கலாம். சிறுவன் சென்றபின் மெல்ல அவனிடமிருந்து மீண்டும் அவன் மனம் விலகுவதைச் செய்வதறியாது நின்றபடியிருந்தான். மீண்டும் அதே முக்காலியில் அமர்ந்து எதிரே உள்ள சுவரைப் பார்க்க ஆரம்பித்தான்.
நாலுவீடுகளுக்குத் தள்ளியிருக்கும் சிவகுருவை நினைக்கும் தோறும் அவன் உதடுகள் வலிந்து கோணலாகி முகம் விகாரமடைவதை அவன் நினைத்தாலும் தவிர்க்கமுடியவில்லை. அவனின் அதீத உடல்மொழியும், பெரிதான சிரிப்பும், தடையற்ற பேச்சும் பெண்களை ஈர்க்கும் காரணிகள் என்று ராஜு சொன்னதை இப்போது ஏற்க ஆரம்பித்திருந்தான். சிவகுருவை நேரில் சந்திக்கும்போது அவன் கண்கள் இப்போதும் தாழ்ந்து வேறொன்றில் கவனம் செலுத்துவதுபோன்ற பாவனையை அவனையறியாமல் செய்தான். சிவகுருவிடம் வாசுகிக்குத் தொடுப்பிருப்பதை அறிந்து அம்மா அடைந்த அதிர்ச்சியை பாவனை காட்டி அவள் சொன்னபோது, சொல்ல முடியாமல் மெல்ல முடியாமல் அவனை நோக்கும் அந்த அடி பட்ட பார்வையே அவனை அதிகம் பாதித்தது.
அதை நேரில் கண்ட முதல்நாளில், அவன் கடைசென்றிருந்த சமயம், வீட்டைவிட்டு வெளியேறி தூரத்து உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டாள். மற்றவர்கள் பேசுவது கேட்க முடியாவிட்டாலும் தன் பேச்சு மற்றவர்களிடம் எடுபடும் என்று அவள் நினைத்தது தவறு என உணர்ந்தது அப்போதுதான். கண்களில் கண்ணீர் அவள் கேட்காமலேயே வந்தது. ’இந்த பொண்ணு வேண்டாம்டா உனக்கு,’ என்று கூறிய போது அவள் இயலாமை வாசுகியின் மீதான் அன்பையும் மீறி, அவனுக்குப் பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியது. சிறுவயதிலேயே கணவனை இழந்துவிட்டுத் தன் மகனுக்காவும் அவன் வாரிசுக்காகவும் அவள் உயிர் காத்திருப்பதை புரிந்துகொள்ள முடிந்தது.
விசயம் கசிந்த அடுத்தநாள் யாரும் எதிர்பாராத ஒன்றைச் செய்தாள் வாசுகி. விசமருந்தி வயிற்றைப் பிடித்தபடி கூடம் முழுவதும் உருண்டு இறந்து போனாள். அவனோ அவன் அம்மாவோ கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. மரணம் எல்லா அழுக்குகளையும் போக்கிவிடும் போல. உண்மை அல்லது பொய்யைத் தெரியாமலிருக்க அவள் செய்த தந்திரம் போல் அவர்களை ஊர்க்காரர்களின் பழிக்கு ஆளாக்கியது. இனிப்பை நெருங்கும் எறும்புகளைப்போல் வீடு முழுவதும் ஜனங்களாக, எங்கெங்கும் மனிதத் தலைகளாக நிறைந்திருந்தார்கள் உறவுகாரர்களின் கேள்விகளுக்குப் பதில் சொல்லி மாளவில்லை.
இறந்தபோது பாதிக் கண்கள் மூடியநிலையில் தூங்குவது போலிருந்தாள் வாசுகி. கூடத்தில் கிடத்தப்பட்டிருந்த அவளையே பார்த்தபடியிருந்தான். எந்நேரமும் எழுந்து வந்துவிடுவாள் என்றே அவனுக்கு தோன்றியது. வாசுகியின் இழப்பின் பாரம் நெடுநாள் மனதை அழுத்தியது. அவள் எப்படிப்பட்டவள் என்பதையும் தாண்டி, அந்த உறுத்தலுக்கு தான் காரணமோ என தோன்றியது. வெறுமையும், தனிமையும் கண்களில் திரையிட்டு மனதை மெளனமாக்கியது. அவன் அம்மாவைப் போல், அவனின் தொடர் மெளனம் அங்கிருந்து ஆரம்பித்ததாக நினைத்தான்.
மற்ற கடைகளில் விளக்கு ஏற்றப்பட்டிருப்பதை எப்போதும்போல் தாமதமாகக் கவனித்து விளக்கைப் போட்டான். வீட்டின் ஞாபகம் வந்தது. யாருமற்ற தனிமையின் இருப்பு அவன் வீட்டை மனதின் அந்தரத்தில் நிறுத்தியது. அதில் அந்த அடுப்படிக் கதவை நினைத்துக் கொண்டான். அக்கதவு தன் மனதிற்கு நெருக்கமானதாகவும், வெறுக்கத் தக்கதாகவும் ஒரே சமயத்தில் தோன்றுவதைப் புரிந்து கொள்ள முடியாமல் தவித்தான். பல சமயம் நெருக்கமாகப் பேசுவது போலவும், அமைதியாக உற்றுநோக்குவது போலவும் உணர்ந்து வந்தான். சரியாக இன்றாவது முட்டுக்கொடுக்க வேண்டுமென்று ஒவ்வொரு நாளும் நினைத்துக் கொள்வது வாடிக்கையாகி மறந்து போவது ஏனென்று அவனுக்கே புரியவில்லை.
அம்மாவின் தொடர் வற்புறுத்தலின் காரணமாக இரண்டாண்டுகளுக்குப் பின் பவானியை இரண்டாம் தாரமாக்கி வந்தபோது சிறு கோழிக்குஞ்சை அழைத்துவருவது போலிருந்தது. அவளின் கைகள், இடை, கால்கள் சின்ன குழந்தையினுடையது போலிருந்தாள். வறுமையில் எந்தவித எதிர்பார்ப்புமின்றி வந்திருந்தாள். நோயுற்றவளை நெருங்குவது போலிருந்தது அவனுக்கு. முலைகள் இல்லா அல்லது சின்ன குமிழ்கள் மட்டும் இருந்த அவள் நெஞ்சு அம்மியை எப்போது நினைவுறுத்தியது. அவளுடனான போகம் சுயவதையாக இருந்தது. பலசமயங்களில் அவனை அது சுயபோகத்திற்கு வெறுப்புடன் இட்டுச் சென்றது.
பவானியை வெளியே அழைத்துச் செல்ல அடிக்கடி சொல்லுவாள் அம்மா. அதிலிருக்கும் சங்கடம் அம்மாவிற்கு புரியாமலில்லை. எப்படியும் ஓர் அன்னியோன்யம் வந்து ஊர் வாயை மூடிவிட முடியும் என்று தோன்றியது. ஆனால் எந்த அன்யோன்யமும், எதிர்பார்ப்பும் நிறைவேறும் முன்பே பலவித உடல், மன வலிகளுடன் காலமானாள்.
அம்மா சொல்லும் ஏதாவது வார்த்தைக்குக் கோபம் கொண்டு அடிக்கடி பிறந்தவீடான புலிவலத்திற்கு சென்றுவிடுவாள் பவானி. கடைக்கு சென்றுவிட்டு மதிய இடைவேளையில் சைக்கிளிலேயே சென்று சமாதானம் கூறி அழைத்து வருவான். ஆனால் அம்மா இருக்கிறவரை அவனிடம் சண்டையிட்டதில்லை.. அம்மா போனபின் கொஞ்சநாளிலேயே அவனிடம் சண்டையிட்டுப் பிறந்தவீடு போய்விட்டாள்.
இரவு வீட்டிற்கு வந்ததுமே சாதம் வடித்து ஒரு ரசமோ, குழம்போ அலுப்புடன் செய்யவேண்டியிருந்தது. அவள் இருந்திருதால்கூட அவ்வளவுதான் செய்வாள். அலுப்பாவது இல்லாதிருக்கும். இன்றைய பனியும், குளிர் காற்றும், மழையும் அதை மேலும் அதிகரிக்க செய்தது. பழகிய இருட்டில் சரியாக கைவைத்து விளக்கை எடுத்து ஏற்றி வைத்தான். பாம்பு ஊர்வதுபோல இருட்டில் மின்னி ஓடிக்கொண்டிருந்த வாய்க்கால்நீர் விளக்கொளியில் தெரிந்தது. உலை வைத்துவிட்டு வந்து வெளியே நின்று பார்த்துக்கொண்டிருந்தான். அதற்குள் பத்துமணிக்கு மேல் ஆகிவிட்டிருந்தது ஜனநடமாட்டம் துளிகூட இல்லை.
இருட்டில் நாக்கை தொங்கப் போட்டபடி கைகளை அகண்டு விரித்து தலைவிரிகோலமாக ஒற்றை காலைத்தூக்கி நிற்கும் யட்சியை போன்று நின்ற கருவேலமரத்தைப் பார்த்தபடியே நின்றிருந்தான். மெல்லிய மட்கிய வாசனை ஒனறு எழுந்து வந்தது. அந்த மரம் தனனை விழுங்கிவிடக்கூடும் என்ற எண்ணம் தோன்றி மறைந்தது. தொங்கிக் கொண்டிருந்த மஞ்சள்நிறக் காய்கள் பிய்த்து தொங்கும் சதைப் பிண்டங்கள் போலிருந்தன. ஏன் தன்னைப் பயம் எப்போதும் பெரும் அலை ஒன்று மூடுவதுபோல தன்னை ஆட்கொண்டபடியே இருக்கிறது என்பது புரியவில்லை.
இருபக்கமும் தலையளவு உயர்ந்த செடிகள் அடர்ந்த ஒற்றையடிப் பாதையில் ஏதோ ஒரு அசம்பாவிதத்தை எதிர்பார்த்து மிக நீண்ட நேரம் செல்கையில் எதிர்பாராத இடத்தில் ஒரு பழுப்புநிறப் பூனை தன் மேல் பாய்வதாக முடியும். அப்படியே உதறியபடி எழுந்தமர்வான். அக்கனவு பவானியை கட்டியபின்னே ஆரம்பித்தது எனவும் ஊகிக்க முடிகிறது. அக்கனவை யோசிக்கும் சமயம் முடிவில் மியாவ் என்று கத்துவற்கு பதிலாக வாசுகியின் முனங்கலை வெளிப்படுத்துவதாக தோன்றும். பயத்தில் விழித்துக் கொள்ளும் சமயங்களில் அக்கதவருகே பூனை நின்றிருக்கும். கனவும் பயமும் எளிய பிணைப்பில் அவனை வைத்திருப்பதாக தோன்றும்.
மெல்லிய குளிர்காற்று இலைகளை அசைத்து அந்தபெரும் மரத்தின் இருப்பை அவனுக்கு காட்டியது. அதன் ஓரங்களின் வெளிச்சக் கீற்றுகள் பவானியின் அவள் கண் கருவளையத்தின் ஓரத்தில் தெரியும் வெளிச்ச கீற்றை நினைவூட்டியது. அவளை நினைத்ததும் இருட்டு நீரில் அமிலும் மீன்போல அவனை உள்ளே இழுத்துக் சென்றது. பயத்தில் அவன் கால் தொடைகள் நடுங்கின என்பதை சற்று நேரங்களித்து அறிந்துகொண்டான். அச்சமயங்களில் நெஞ்சில் பெரிய பாரம் அழுத்த நெஞ்சுகூடி உடைந்துவிடும் போலிருந்தது. இதற்குமுன்னால் இப்படி அனுபவித்ததேயில்லை. சமயங்களில் சிவகுரு தன்னை மறைந்திருந்து புன்சிரிப்போடு பார்ப்பதாய் தோன்றும்.
அவனுக்கும் பவானிக்கும் எத்தனை மனவேறுபாடுகள். அவளை உதாசீனப்படுத்துவதை அவள் அறிந்த கணம் மெல்ல அவன் கண்களில் நிழலாடியது. அந்த இடத்திலேயே அது பயமாக மாறுவது ஏனென்று புரியாதது மனவேதனையை அளித்தது. இத்தனைக்கும் அவள் தன்னை எதிர்த்துப் பேசியதில்லை சொல்மாறி நடந்ததில்லை என்பதை உணர்ந்தேயிருந்தான்.
இன்றிரவு உணவு உண்டபின் அடுப்படி கதவை பெயர்த்துவிட வேண்டுமென ஏதோ ஓரு கணத்தில் திடீரென முடிவெடுத்தான். பவானியால் மட்டும் எப்படி சரியாக கதவிற்கு முட்டுக்கொடுக்க முடிகிறது. அவள் இருக்கும் வரை கதவு கிரீச்சிடுவதே இல்லை. அது எதனால் என்பதை புரிந்து கொள்வதற்கு அவன் தனியாகப் படித்துவர வேண்டும் என தோன்றியது. அம்மா அடிக்கடி கூறும் ‘சூசமமா இருந்துக்கோடா,’ என்பது அந்த நேரத்தில் நினைவில் வந்து வெறுப்பை ஏற்படுத்தியது.
சிறுவருத்தத்துடன், மெல்லிய அதே அகோர கடைசி முனகலுடன் கழன்று வந்தது கதவு. ஆணிகளைக் கீழிலிருந்து நீக்கும்போதே அவள் இல்லாமல் கதவு எதற்கு என்று ஏனோ தோன்றியது. நெடுநேரம் உறுத்தலுக்கு பின்னால் வெளிவரும் ஏப்பத்தைப்போல மனதின் பெரும் பாரம் ஒன்று குறைந்ததை உடனே உணர்ந்தான்.
என்றுமில்லாத தொடர்ச்சியான ஆழ்ந்த உறக்கம் கொண்டான் அன்று. காலையில் மிக மெதுவாக எழுந்து சிறுபுன்முறுவலுடன் இருப்பதை கண்ணாடியில் பார்த்தபடி அங்குமிங்கும் சிறிது நேரம் உலாத்தினான். மெல்ல நடந்து சென்று பக்கத்தில் உள்ள சிறுவயதில் குளித்த ஐயன் குளத்தில் குளித்தான். உற்சாகம் ஏற்பட்டு குளத்தின் பாதிவரை நீந்திச் சென்றுவந்தான். பவானி உடலில் வீசும் பவுடரும் வேர்வையும் கலந்த கவுச்சி வாடையை நினைத்தபடி படியேறினான். வீடு வந்ததும் எண்ணை தடவி, பவுடர் பூசி, புதுத் துணி அணிந்து கொண்டு ஓரமாய் சாய்த்து வைத்திருந்த அடுப்படி கதவை அதே இடத்தில் வைத்து ஆணியால் முறுக்கிவிட்டு சைக்கிளை எடுத்துக்கொண்டு உற்சாகமாகக் கடைக்குப் புறப்பட்டான்.
– சொல்வனம், பிப்ரவரி 12, 2012