கொஞ்சமாவது பொறுப்பிருக்கா உனக்கு?

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 12, 2013
பார்வையிட்டோர்: 10,136 
 
 

காலை நேரத்தில் பள்ளிக்குக் கிளம்ப வேண்டிய பரபரப்பில், அலுவலத்திற்கு செல்ல வேண்டிய அவசரத்தில் வீடு களேபரமாக இருந்தது. மேகலையின் தம்பியும், தம்பி மனைவியும் வீடு முழுவதும் ஓடி ஆடிக் கொண்டிருந்தார்கள். அவர்களது ஐந்து வயது மகள் மஞ்சரி தன் பங்கிற்கு பள்ளி கிளம்ப அழிச்சாட்டியம் செய்து கொண்டிருந்தாள்.

காலை மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ்சில் வந்து இறங்கி இருந்தாள் அத்தை மேகலை. அவள் வெளி நாட்டில் இருந்து கொண்டு வந்து பரிசாகக் கொடுத்த ‘ஹாலோ கிட்டி’ பொம்மையுடன் விளையாட வேண்டும், அத்தையுடன் விளையாட வேண்டும். இதை எல்லாம் விட்டு விட்டுப் பள்ளிக்குப் போவதா? அவளது நியாயமான கோரிக்கையை யாரும் கண்டு கொள்ளவில்லை. கடைசிக் கணையாக பொம்மையை பள்ளிக்கு எடுத்துச் செல்வேன் என்ற அம்பையும் விட்டு அடம் பிடித்தாள். அவசரத்தில் இருந்த அம்மாவிடம் அநியாயமாக அடி வாங்கி அழுதவாறு தோல்வியைத் தழுவி குளிக்கப் போனாள்.

தம்பி மனைவிக்கு தன்னால் ஆன உதவி செய்ய எண்ணி சமையலறைக்குப் போனாள் மேகலை. அவள் அம்மா ஆட்சி செலுத்திய சமயலறையில் தம்பி மனைவி உரிமையுடன் வலம் வருவதைக் காண அவளுக்கு சகிக்க முடியாமல் இருந்தது. பல பொருட்களும் இடம் மாற்றி வைக்கப்பட்டு அவள் வளர்ந்த வீடே மேகலைக்கு அந்நியமாகப் போய்விட்டது வேதனையாக இருக்க ஒன்றும் புரியாமல் விழித்துக் கொண்டிருந்தாள்.

தம்பி மனைவி, “அண்ணி, இந்தாங்க காபி குடிங்க, இதோ இட்லி வெந்துடும்” என்றாள்.

“நீ வேலைக்கு வேற கிளம்பணுமே மல்லி, நான் ஏதாவது உதவி செய்யவா?” என்றாள் மேகலை.

“நீங்க டையர்டா இருக்கீங்க, ரெஸ்ட் எடுங்க அண்ணி. எனக்கும் உங்க தம்பிக்கும் வேற இன்னிக்கு லீவு தராம ஆபீசில கழுத்தறுத்திட்டாங்க. உங்கள சரியா கவனிக்க முடியலேன்னு கஷ்டமா இருக்கு. நீங்க உதவி செய்யறேன்னு சொல்றதக் கேட்க வருத்தமா இருக்கு. இன்னைக்கு அத்தை இருந்தா உங்களுக்கு நல்லா இருந்திருக்கும்”, என்றவாறு இட்லி குக்கர் விசில் கேட்டு மீண்டும் சமையறைக்கு ஓடினாள் மல்லி.

மேகலையின் அம்மா இறந்து ஐந்து ஆண்டுகள் ஓடி விட்டிருந்தது. அம்மா மறைவுக்கு வந்து போன மேகலை இப்பொழுதான் மீண்டும் இந்தியாவிற்கு வந்திருக்கிறாள். சென்ற முறை வந்த பொழுது தம்பிக்கு திருமணம் ஆன புதிது, குழந்தை பிறந்திருக்கவில்லை. முன்னறை சோபாவில் உட்கார்ந்து காபி குடித்த வண்ணம் தொலைக்காட்சி பார்த்த மேகலை அசதியில் சரிந்து தூங்க ஆரம்பித்தாள்.

மகளுக்குத் தலை வாரிவிட அங்கு வந்த மல்லி, “அண்ணி, தூங்கிடாதீங்க, சாப்பிட்டுட்டுத் தூங்கலாம், ஏங்க, ஏன் இவ்வளவு நேரம்? இங்க பாருங்க உங்க அக்காவுக்கு தூக்கம் வருது. பேச்சு கொடுத்திக்கிட்டிருங்க. இதோ சாப்பாட்ட மேஜை மேல வைக்கிறேன்”, என்று சொல்லியவாறு மஞ்சரிக்கு சடை பிண்ணத் தொடங்கினாள்.

அக்கா படிக்க வாரப் பத்திரிக்கைகளை கடையில் இருந்து அள்ளிக் கொண்டு உள்ளே நுழைந்த தம்பி, “சாப்பிட வா, அக்கா”, என்று சொல்லி, பத்திரிக்கைகளை அவளிடம் கொடுத்தான்.

“நான் அப்புறமா சாப்பிடறேன் தம்பி, கொஞ்ச நேரம் தூங்கறேன்” என்ற அக்காவை நன்கு புரிந்த தம்பி, “சரி, வா படுக்கையில படுத்துக்கோ” என்று சொல்லி படுக்கை அறைக்கு அழைத்துச் சென்றான். “அத்தை” என்று கூச்சலிட்டவாறு ஓடி வந்த மகளை “உஷ், கத்தாதே” என்று அடக்கினான்.

“ஏசி போடவாக்கா?”

“வேணாம் ஃபேன் போதும்” என்று சொல்லியவாறு தூங்கிவிட்ட அக்காவிற்கு போர்வையைப் போர்த்திவிட்டு, ஜன்னல் கதவைத் திறந்து வைத்துவிட்டு, அறைக்கதவை சாத்திக்கொண்டு சென்றான் தம்பி.

மீண்டும் மேகலை கண் விழித்த பொழுது சிறிது நேரம் அவளுக்கு எங்கு இருக்கிறோம் என்று புரியவில்லை. மின்சாராம் நின்று, மின்விசிறியும் நின்று லேசாக வியர்த்ததில் விழித்துக் கொண்டிருந்தாள். வீடே அமைதியாக இருந்தது. வெளியில் காகம் கரையும் ஒலி கேட்டுக் கொண்டிருந்தது.

சுற்றும் முற்றும் பார்த்தாள். அவளும் அவள் தங்கையும் அங்கு வளர்ந்த பொழுது பகிர்ந்து கொண்ட அதே படுக்கை அறைதான். அலமாரியில் அவள் கதைப் புத்தகங்கள், அவள் உபயோகித்த மேஜை, நாற்காலி எல்லாம் அப்படியே இருந்தது. ஆனால் இப்பொழுது அது மஞ்சரியின் அறையாக மாறிவிட்டிருந்த சாயலும் இருந்தது. பொம்மைகள், சுவரில் கார்ட்டூண் உருவப் படங்கள் என அறையில் புதிய அலங்காரங்கள்.

படுக்கைக்குப் பக்கத்தில் அவளுடைய கைபேசி, ஹாட்பேக்கில் உணவு, தண்ணீர், டவல், சோப்பு, பேஸ்ட், ப்ரஷ் என அவளுக்குத் தேவையானவற்றை கைக்கெட்டும் தூரத்தில் வைத்துவிட்டு, தம்பியும் மல்லியும் வேலைக்குச் சென்றுவிட்டது புரிந்தது. மஞ்சரியும் பள்ளிக்குச் சென்றிருப்பாள். கை பேசியில் மணி பார்த்தாள். காலை மணி பதினொன்றரை. தெருவில் ஆட்டோ போகும் ஒலி தேய்ந்து மறைந்தது. யாரோ இருவர் பேசிக்கொண்டே போனார்கள். அதைத்தவிர எங்கும் அமைதி. காகம் மீண்டும் கரைந்தது.

அம்மா இருக்கும்பொழுது வீடே கலகலப்பாக இருக்கும். தெருக்கதவை சாத்தியதே இல்லை. இவ்வளவு நேரம் தூங்கினால் அம்மாவிடம் இருந்து ஏகப்பட்ட திட்டு கிடைக்கும். இவளது பொறுப்பில்லாத தன்மையைச் சுட்டிக்காட்டியும், அம்மா வளர்ந்தபொழுது அதே வயதில் அம்மாவிற்கு என்னென்ன பொறுப்புகள் இருந்தது என்றும் சொல்லிக்காட்டுவார்கள். வழக்கமாக சொல்லும் உன் வயசில எனக்கு ரெண்டு கைகுழந்தைங்க போன்ற வசனங்கள்தான். இதுபோல நண்பகலில் விழித்து ஒருமுறை அம்மாவிடம் திட்டு வாங்கியது நினைவில் ஓடியது.

ஆண்டுத்தேர்வு முடிந்து கோடை விடுமுறைக்கு விடுதியில் இருந்து வீட்டிற்கு வந்திருந்தாள். இரயிலில் பயணம் செய்த பொழுது, அவள் தோழி அடைக்கலமேரி ஹிக்கின்பாதம்ஸில் வாங்கிய சிட்னி ஷெல்டனின் ‘ப்ளட் லைன்” புத்தகம் படித்துவிட்டு அதை பற்றி புகழ்ந்து பேசிக்கொண்டே வந்தாள். மேகலை வீட்டில் ஆங்கில நாவல்கள், திரைப்படங்களுக்குத் தடை. இப்பொழுதுதான் பல்கலை கழக நூலகத்தில் சில ஆங்கிலப் புதினங்கள் படிக்கிறாள். ஆனாலும் பாடங்கள் அதிகமாக இருந்ததால் கதைகளுக்கு அதிகம் நேரம் ஒதுக்க முடிந்ததில்லை.

அடைகலத்திடம் இருந்து அந்தப் புத்தகத்தை இரவல் வாங்கினாள் மேகலை. இரயிலில் படித்துக் கொண்டே வந்தாள். கதை மிக விறுவிறுப்பாக இருந்ததால் இரவு உணவை அவசர அவசரமாக சாப்பிட்டுவிட்டு, இதே படுக்கையில் குப்புறப் படுத்துக் கொண்டு தொடர்ந்து படித்தாள். அம்மா அப்பாவிடம் கூட சரியாகப் பேசவில்லை. அவர்களும் தொலைகிறது என்று விட்டு விட்டார்கள். இரவு மணி இரண்டு, மூன்று என ஓடிக் கொண்டே இருந்தது. கதையின் நாயகி எலிசபெத்தை கொலைகாரன் ஒரு மாளிகையில் கொலை செய்யத் துரத்துகிறான். மேகலைக்கோ திகில். அவளால் புத்தகத்தைக் கீழே வைக்க முடியவில்லை.

“என்ன இன்னமும் தூங்கலையா?” என்ற குரல் கேட்டு மேகலைக்குத் தூக்கி வாரிப் போட்டது. நெஞ்சு பட படவென அடித்துக்கொண்டது. திரும்பிப்பார்த்தாள். அப்பா கோபமாக முறைத்துப் பார்த்துவிட்டு விளக்கை அணைத்து விட்டுப் போனார். அவர் நகர்ந்ததும் இவள் ஓடி, ஒரு டார்ச் விளக்கைத் தேடி எடுத்து தலை முழுவதும் போர்த்திக் கொண்டு மீண்டும் போர்வைக்குள் தொடர்ந்து படித்தாள். மீண்டும் விளக்கைப் போட்டு அப்பாவிடம் திட்டு வாங்க பயம். கதையை படித்து முடித்த பொழுது விடிந்து விட்டது. வீட்டு வேலைக்கு வந்த சரோஜா கேட்டைத் திறக்கும் சப்தம் கேட்டு வெளிக்கதவைத் திறந்து விட்டாள்.

சரோஜா, “எப்பக்கா வந்தீங்க? என்ன அதுக்குள்ள எந்திரிச்சிட்டீங்க?” என்று ஆச்சரியத்துடன் கேட்டாள்.

“ராத்திரி எட்டு மணி வண்டில வந்தேன், படிச்சுக்கிட்டிருந்தேன், இன்னமும் தூங்கப் போகலை சரோஜா” என்று சொல்லிவிட்டு வந்து படுக்கையில் படுத்தவள் மீண்டும் விழித்த பொழுது ஏறத்தாழ இன்று எழுந்த அதே நேரம்தான்.

வெளியில் அம்மா தரையைத் துடைத்துக் கொண்டிருந்த சரோஜாவிடம் பேசுவது கேட்டது.

“சரோஜா, இத முடிச்சிட்டு கொஞ்சம் சின்ன வெங்காயம் தோல் உறிச்சுக் கொடுத்துடு”

“சரிங்கம்மா, அக்காவுக்கு இன்னமும் பரீட்சை முடியலையா?”

“ஏன் கேக்கிற? நேத்தே முடிஞ்சிடுச்சே”

“இல்லம்மா, அக்கா காலையில கதவத் திறந்து விட்டப்போ, ராவு முழுக்க படிச்சேன், இப்பத்தான் தூங்கப் போறேன்னு சொன்னாங்க”

“ஆமா, நீயும் உன் அருமை அக்காவும், ராத்திரி முழுக்க கதைப் பொஸ்தம் படிக்க வேண்டியது, விடிஞ்ச பிறகு தூங்க வேண்டியது. வயசுக்கேத்த பொறுப்பில்லை. சரி, நீ அங்க கொஞ்சம் நல்லாப் பாத்து தரையத் தொட, தம்பி காபியைக் கை தவறி கொட்டிடுச்சி. சக்கரைக்கு எறும்பு மொய்க்கும். ஊர்ல இருந்து ஐயாவோட தங்கச்சியும் அவங்க பேரனும் வருவாங்க. சின்னப்புள்ள ஜட்டி இல்லாம எங்க பாத்தாலும் மண்டி போட்டுப் போவான். எறும்பு கடிச்சிடப்போவுது,” என்று சொன்ன அம்மாவின் குரலில் கடுப்பு அதிகமாக இருந்தது.

அவர்கள் பேசுவதைக் கேட்டவாறு எழுந்திருக்க மனமில்லாமல் படுத்திருந்த மேகலை, அவள் அறையை நோக்கி வரும் அம்மாவின் காலடி சத்தம் கேட்டவுடன் துண்டையும் மாற்றுடையயையும் அள்ளிக் கொண்டு குளியலறைக்கு ஓடி கதவை சாத்திக் கொண்டாள். அம்மாவிடம் “பொறுப்பிருக்கா உனக்கு?” என்று திட்டு வாங்குவதை அப்பொழுதைக்குத் தவிர்த்தாள்.

இன்றும் அதே போல நண்பகலில் விழிக்கிறாள். விட்டத்தைப் வெறித்துப் பார்த்துக் கொண்டு படுத்திருந்தவள் மெதுவே எழுந்து முழங்காலைக் கட்டிக்கொண்டு சாத்தியிருந்த அறைக்கதவைப் பார்த்தாள். அம்மா கதவைத் திறந்து கொண்டு வந்து “எழுந்திரிக்கிற நேரத்தைப் பாரு, வயசாச்சே தவிர கொஞ்சமாவது பொறுப்பிருக்கா உனக்கு?” என்று திட்ட மாட்டார்களா என்று ஏக்கமாக இருந்தது.

அம்மா இனிமேல் வரவே மாட்டார்கள், அவளைத் திட்டவே மாட்டார்கள் என்ற உண்மை புரிந்த பொழுது தலையணையில் முகம் புதைத்து பொங்கிப் பொங்கி அழ ஆரம்பித்தாள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *