ஒரே மகன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 12, 2019
பார்வையிட்டோர்: 6,465 
 

என்னங்க! அத்தைக்கு பிடித்த வாழைத் தண்டு, சுண்டைக்காய் எல்லாம் வாங்கி வாங்க, நாளைக்கு அதுதான் சமையல் என்றாள் மருமகள் கீதா

மீனாட்சி, சுந்தரம் தம்பதியரின் ஒரே மகன். கிருபாகரன்,

தவமாய், தவமிருந்து திருவருளால் பெற்ற வாரிசனாதால் கிருபாகரன் எனப் பெயரிட்டு நன்கு படிக்க வைத்து, அருகிலேயே இருக்க வேண்டும் என நல்ல வேலைகளெல்லாம் வந்தும்
நிராகரித்து, நல்ல இடத்தில் கீதாவை மணமுடித்து பெண் பிள்ளை இல்லாததால், மருமகளையே பெண்ணாக பாவித்து, சுந்தரம் வேலைப் பார்த்தது போதும் என பணி ஓய்வு பெற்று, சொந்த வீட்டில் கூட்டுக் குடும்பமாய் வாழ்ந்தனர்.

யார் கண்கள் பட்டதோ, உழைப்பின் பலனை அனுபவிக்க சிலருக்கே வாய்ப்பு கிடைக்கும்.

ஓய்வு பெற்ற ஒரு வருடத்தில் சுந்தரம் மறைந்துவிட, சுமைகள் எல்லாம் கிருபாகரனின் தோளிலும், அம்மா பெறும் அப்பாவின் பாதி ஓய்வு ஊதியத் தொகையிலுமாகிப்போனது.

கிருபாவிற்கு இரண்டு குழந்தைகளும் மேற்கல்வி கற்பதற்கு தயாராகி கொண்டு இருக்க.. அம்மாவின் மருத்துவச் செலவுகள் இதர இல்லச் செலவுகள்..என திக்கு முக்காடிப் போனான்..

மகனின் இந்த நிலையைப் பார்த்து வருத்தமடைந்தாள், மீனாட்சி.

நல்ல வேலையெல்லாம் வந்த போது ஒரே பிள்ளை நம் கூடவே இருக்கட்டும் என அதிக பாசத்தினால் பிள்ளையின் எதிர்காலம் இப்படி ஆகிவிட்டதே! என மன அழுத்தமே அவளை நோயில் விழச் செய்தது, இதுவும் சுந்தரம் இருக்கும் வரை தோனவே இல்லை.

சொந்த வீட்டடைத் தவிர வேறு எதுவும் சேமிப்பில் இல்லை.

குடும்பம் நடத்தவே மிகுந்த சிரமப் பட்டான், அதனால் அவனும் வருத்தப்பட்டான். அப்பாவின் இழப்பு நிறைய பாடங்களை கற்றுக் கொடுத்துக் கொண்டு இருந்தன.

அப்பாவை இழந்து ஒரு வருடமே ஆகியிருக்கும்,

மீனாட்சியின் உடல் நிலை நிலையாகவே இல்லை.

பத்து நாட்களுக்குப் பிறகு , நாளைதான் ஆஸ்பிடலில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி வருகிறார்.

வந்தவுடன் லைஃப் சர்டிபைகேட் கொடுக்க அவர்களை வங்கிக்கு அழைத்துக் செல்லவேண்டும், அதன்பிறகு அம்மாவின் ஆசைப்படி குலத்தெய்வக் கோவிலுக்கு அழைத்துச் செல்லவேண்டும் என வாடகைக்கு கார் எடுத்து இருந்தான்.

வங்கியில் ஓய்வுத் தொகை குறைவாக கணக்கில் ஏறியிருப்பதை மேனஜரிடம் கேட்டறிந்தாள்..

இன்சூரன்சு பணம் பிடித்தம் ஆகி இருப்பதாகக் கூறிய பின்தான் ஞாபகம் வந்தது, கணவர் தம் பெயரில் செய்த இன்சூரன்ஸ் பற்றி சொன்னது.

மீனாட்சி, உன் பெயரிலே 5 லட்சம் ரூபாய்க்கு ஆயுள் காப்பீடு எடுத்துள்ளேன், எனக்கு பிறகு உனக்கு எந்த தொல்லையும் இருக்க கூடாது. உனக்குப் பிறகு இந்த தொகை அவனுக்கே கிடைக்கும், அந்த தொகையை முன்னிட்டாவது நம்ம பையன் உன்னைக் காப்பாற்றுவான். அதற்கு நான் வருடா வருடம் ரூபாய் 25000 தொகை செலுத்தி வருகிறேன் என்று அவர் கூறியதையும்,

அப்படி எல்லாம் என் பையன் இல்லைங்க! இந்த பணத்துக்காக எல்லாம் அவன் அப்படி மாற மாட்டாங்க! என்று இவள் கூறியதையும் நினைவுக் கூர்ந்தாள்.

உயிரோடு இருப்பதாக சான்றை வழங்கி விட்டு குலதெய்வத் தரிசனத்திற்கு சென்று பின் வீடு திரும்பினர்.

வீடு திரும்பியதிலிருந்து அமைதியாகவே இருந்தார். இதுவரை யாரும் அவரை இப்படிக் கண்டதில்லை.

சாப்பாடும் முன் போல் சாப்பிட பிடிக்கவில்லை எனக் கூறி சோர்ந்து உட்கார்ந்துக் கொண்டாள்.

பேரப்பிள்ளையோடு விளையாடும் பல்லாங்குழி ஆட்டம் கூட என்னால் உட்கார முடியலை எனக்கூறி மறுத்து விட்டாள்.

நாட்கள் நகர்ந்தன.. இந்தத் தாயின் அன்பைக் கண்டு காலம் கூட பொறாமைப் பட்டு பறித்துக்கொண்டது, அவள் உயிரை.

காரியங்கள் முடிந்து அம்மாவின் அறையை பார்த்தபோது,

மாத்திரைகள் சாப்பிடப் படமால் அப்படியே இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்து, அம்மாவின் இறப்பு சாதாரணமாக நிகழவில்லை, வலிகளை தாங்கி தனது உயிரை பிரித்து இருக்கிறாள், எனப் புரிந்துக் கொண்டான் அங்கே கிடைத்த கடிதத்தைப் பார்த்து.

கிருபா! என்னை மன்னித்து விடு!

எங்களின் அளவுக்கு மீறிய பாசத்தால் நீ படும் வேதனைகளை என்னால் காண முடியவில்லை. நீ என்னை நன்றாகத்தான் கவனிப்பாய்! இருந்தாலும் உனக்கு என்னால் ஒரு தொந்திரவும் வரக் கூடாது, தற்போது எனக்கான மருத்துவச் செலவுகளை விட உன் பிள்ளைகளின் படிப்புச் செலவு அவசியம், ஆகையால் உன்னை பிரிய மனமில்லாமல் பிரிகிறேன். எத்துனை ஜென்மம் எடுத்தாலும் உன் தாயாகவே வரவேண்டும் என ஆசைப்படுகிறேன், உங்கள் அனைவருக்கும் என் நல் ஆசிகள். என முடித்து இருந்தாள்.

வாசலில் யாரோ அழைக்க ,

இன்சூரன்சு முகவர் அம்மா பதினைந்து நாள் கழித்து வரச் சொன்னதாக வந்து இருந்தார்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *