குடும்பம்.com

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 23, 2012
பார்வையிட்டோர்: 12,791 
 

அதிகாலையில், சென்னை விமான நிலையத்தில் நிறுத்திச் சென்றிருந்த கார் கதவைத் திறந்து, டெல்லி குளிருக்கென அணிந்திருந்த கம்பளிக் கோட்டைக் கழற்றி ஸீட்டில் வைத்துவிட்டு, காரை ஸ்டார்ட் செய்தான் நிகில். நோட்புக் கம்ப்யூட்டரும், ஒரு செட் அவசர உடைகளும் அவனருகில் ஸீட்டில் அலுங்காமல் அமர்ந்திருந்தன. ஐ&பாடிலிருந்து பாலமுரளி இனிமையாக அவனை அணைத்தார்.

‘‘வாட் எ லவ்லி டே!’’ டெல்லி தலைமையகத்தில் காலாண்டுக் கூட்டம். அடுத்த காலாண்டுக்கான சேல்ஸ் புரொஜக் ஷன்ஸ், வியாபார உத்திகள், விற்பனை ஸ்ட்ராட்டஜி என்று ஸி.ஜி-&யும் பவர் பாயின்ட்டுமாக அசத்திவிட்டான். தெற்காசியத் தலைமை அதிகாரியான ஜிம் க்ளாரி அவனைப் பாராட்டியதுடன், உணவு சாப்பிடும் போது தயிர் சாதத்துக்கான ரெஸிபியும் கேட்டான்.

சென்ற மாதம் கோவாவில் நடந்த கான்ஃபரன்ஸ§க்கு, மனைவி பூமாவையும் உடன் அழைத்து வந்திருந்தான் நிகில். பூமாவைப் பார்த்து, ‘‘நீ நிகிலுடைய லிவ்&இன்னா?’’ என்று ஜிம் க்ளாரி

கேட்க, பூமா பலத்த சிரிப்புடன், ‘‘இல்லை, இல்லை… பெரும்பாலும் ஐ லிவ் அவுட்!’’ என்றாள். அது உண்மைதான்! பூமாவும் நிகிலும் அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து, தாலி கட்டி, உற்றார் உறவினர் சூழ மணமுடித்திருந்தாலும், மாதத்தில் ஐந்தாறு நாட்கள் சேர்ந்திருப்பதே அரிது. அவர்கள் தொழில் தேவைகள் அப்படி.

பூமாவின் நினைவும், பாலமுரளியின் ஐஸ் குரலும் சேர்ந்து நிகிலின் உடம்பில் இதமான சூட்டை ஏற்றின. வாழ்வில் அழகான பெண் மனைவியாகக் கிடைப்பது பெரிய விஷயமில்லை. ஆனால், பூமாவைப் போன்ற ஒரு இன்டெலக்சுவல் கம்பானியன் கிடைப்பது அரிது! மனைவி என்பவள் சமைக்கவும், படுக்கைக்கும் மட்டுமே என எண்ணும் கணவன்மார்களும், கணவன் என்பவன் குழந்தை உற்பத்திக்கும், சம்பாதித்து வசதிகளைப் பெருக்குவதற்கும் மட்டுமே என்று நினைக்கும் மனைவிமார்களும், பூமா, நிகில் திருமண வாழ்வின் படிமங்களையும், சம பங்கீட்டையும் பார்த்தால் வியந்து நிற்பார்கள்.

நிகிலும் பூமாவும் முதன்முதல் சந்தித்தது ஐ.ஐ.எம். அகமதாபாத்தில் சேர்ந்த பிறகுதான். பார்த்து, பேசி, பழகி, சேர்ந்து வாழ்வது என்று முடிவு செய்து, அழகாகத் திட்டமிட்டுத் தங்களுக்கான வேலையைத் தேர்ந்தெடுத்தார்கள். ஒரு மல்டிநேஷனல் நிறுவனம் தன் தெற்காசியக் கிளையை டெல்லியில் துவங்கிய போது, அதன் தென் பிராந்தியப் பொறுப்பை நிகில் சென்னையில் ஏற்றான். பூமா ஒரு ஹாங்காங் நிறுவனத்தில், மார்க்கெட்டிங் துறையில் சென்னை யில் சேர்ந்தாள்.

நிகில் தனது மாதச் சம்பளம் ஐந்து லட்ச ரூபாய் என்றபோது, “நெஜமாத்தான் சொல்றியா நிகில்? நானும் கிண்டி இன்ஜினீயரிங் காலேஜ்ல படிச்சு, 35 வருஷமா ரயில்வேல வேலை பாக்கறேன். நீ சொல்ற மாதச் சம்பளத்தை நான் மூணு வருஷத்துலகூட வாங்கினதில்லையேப்பா!’’ என்று பிரமித்தார் அவன் தந்தை. பூமாவுக்கும் நிகிலைப் போலவே நல்ல சம்பளம். ஆளுக்கொரு கார். 2,000 சதுர அடியில், ஏர்கண்டிஷன் செய்யப்பட்ட வசதியான ஃப்ளாட்.

தங்கள் அழகான வாழ்வை அசைபோட்டபடியே, நிகில் சாவி போட்டு வாயிற் கதவைத் திறந்தபோது, குப்பென ரோஜாப்பூ வாசனை அடித்தது. புஜ்ஜி கிளீனிங் சர்வீஸிலிருந்து வந்து, மதியம் வீட்டைச் சுத்தம் செய்துவிட்டுப் போயிருக்கி றார்கள்! தினம் தினம் கறி காய்க்கும், பாலுக்கும் கடைக்கு ஓடி, காஸ் தீர்ந்துவிட்டது, வேலைக்காரி வரவில்லை என்று அமர்க்களம் செய்யும் குடும்பத் தலைவர்களையும், தலைவி களையும் பார்த்து, நிகிலும் பூமாவும் நமுட்டுச் சிரிப்பு சிரிப்பார்கள். குடும்பம் என்பது, சுலபமான திட்டமிடலால் ஒழுங்காக நடக்கும் விஷயம்!

அரை பேன்ட்டுக்கு மாறி, நோட்புக்கை ப்ளக் ஆன் செய்துவிட்டு, ஃப்ரிஜ்ஜைத் திறந்தான் நிகில். பரோட்டா, குருமா, அவியல், உருளைப் பொரியல், வெண்டைப் பொரியல், சாம்பார், ரசம் என சென்ற ஞாயிறன்று அவர்கள் இருவரு மாகச் சமைத்து வைத்திருந்ததில், எதை இப்போது உண்பது என்று குழம்பி, பின்பு சோற்றை அளவாக எடுத்துத் தண்ணீர் தெளித்து, மைக்ரோஓவனில் வைத்துவிட்டு, அவியலையும் ரசத்தையும் வெளியே எடுத்தான்.

திடீரென அம்மா நினைவு வந்தது. சுடச்சுட சாதத்தில் வெங்காய வற்றல் குழம்பை ஊற்றிப் பிசைந்து, இவனுக்கும் அக்காள் நித்யாவுக்கும் உருட்டிக் கையில் போடுவாள். ஒவ்வொரு உருண்டை மீதும் ஒரு சுட்ட அப்பளத் துண்டு! அப்பா நடு நடுவில் தானும் கையை நீட்டுவதும், அம்மா தன் பெரிய கண்களை உருட்டி அவரைச் செல்லமாக முறைப்பதும் மறக்கக்கூடிய விஷயங்களா? இன்று சாப்பாட்டில் சத்தும், வெரைட்டியும் கூடிவிட்டது. வீட்டுச் சாப்பாட்டுக்கு அதிக மதிப்பில்லாமல் போய்விட்டது. ஆனாலும், சில குடும்ப அனுபவங்கள்..?

நிகில் சாப்பாட்டுத் தட்டுடன் மேஜையில் அமர்ந்தபோது, தொலைபேசி ஒலித்தது. அட… சொல்லி வைத்தாற்போல் அம்மா! ‘‘ஹாய், அம்மா! இப்பதான் உங்களை நினைத்துக்கொண்டேன். அப்பாவும் நீயும் எப்படி இருக்கீங்க?’’

அம்மாவின் குரலில் தயக்கம். ‘‘நிகில், ஒரு சின்ன பிரச்னை. அப்பாவுக்கு உடம்பு சரியில்லை!’’

‘‘என்னம்மா ஆச்சு அப்பாவுக்கு?’’ &பதறினான் நிகில்.

‘‘கொஞ்ச நாளாவே சாப்பாடு பிடிக்க லைன்னு சொல்லிக்கொண்டு இருந்தார். அஜீரணம்னு நினைச்சோம். ஸ்கேன் செய்ததில், கட்டி பெரிசாத் தெரியறதாம். மெட்ராஸ்ல ஸ்பெஷாலிடி ஆஸ்பிடல்ல அட்மிட் செய்யச் சொன்னா..!’’

நிகிலின் வயிற்றில் ‘சிலீர்’ என்ற தவிப்பு தோன்றியது. ஒரு சின்ன தலைவலி வந்தாலும் தாங்க மாட்டாரே அப்பா!

‘‘அம்மா, அப்பா தைரியமா இருக்காரா?’’

அம்மா ‘உம்’ என்று தயக்கத்துடன் இழுத்தாள். ‘‘நாளைக்கு ராக்ஃபோர்ட் டிலே கிளம்பறோம். ஸ்டேஷனுக்கு வர்றியா?’’

அப்பா மிகவும் எளிமையான, நேர்மையான, ஒரு சாதாரண மனிதர். தான் வேலைக்குப் போவதும், சம்பாதிப்பதும் மனைவியையும் குழந்தைகளையும் மகிழ்ச்சியாக வைத்துக்கொண்டு, சிரித்துப் பேசி, நிறைவாக வாழ்வதற்கே என்பது போல் அலட்டிக்கொள்ளாமல் வாழ்பவர்.

அப்பாவுக்கு எப்போதும் உறவினர், நண்பர்கள் என்று மனிதத் துணை வேண்டும். சந்தோஷம் வேண்டும். அதிக எதிர்பார்ப்பில்லாத வாழ்க்கையைச் சிரித்துக்கொண்டே வாழப் பழகிவிட்ட வருக்கு, இப்படிச் சொல்லாமல் கொள்ளாமல் வலி, நோய் என்று வந்தால், எப்படித் தாங்கிக்கொள்வார்?

தன் எங்கேஜ்மென்ட்களை பார்வையிட்டான் நிகில். ஸ்டேஷன் சென்று அப்பா, அம்மாவை அழைத்து வருவதில் பிரச்னை இல்லை. ஆனால், அன்று முழுவதும் மீட்டிங்குகள், மறுநாள் அதிகாலை பாங்காக் பயணம். மூன்று நாள் கழித்து டெல்லி திரும்பி, ஜிம் க்ளாரியைச் சந்தித்துவிட்டுதான் சென்னை திரும்ப முடியும். பல நாட்களுக்கு முன்பே திட்டமிடப்பட்ட இந்த மீட்டிங்குகளில் பங்குபெற, உலகின் பல திசைகளிலிருந்தும் வரு வார்கள். திடீரென மாறுதலும் சாத்திய மில்லை.

பூமாவின் ஷெட்யூலைப் பார்த்தான். நாளை காலை மும்பையிலிருந்து சென்னை திரும்புபவள், நாளை இரவே சிங்கப்பூர் செல்கிறாள். அவளுடைய அலுவலக புரொக்ராமும் மாற்றக்கூடியதாக இல்லை.

டின்னர் மீட்டில் நடந்த ஒவ்வொரு விஷயத்தையும் சிரிக்கச் சிரிக்க இன்ஸ்டன்ட் மெஸேஜ் செய்துவிட்டு, அவனுக்கு ஆயிரம் முத்தங்களையும், லட்சம் எலும்பை முறிக்கும் அணைப்புகளையும் அனுப்பிவிட்டு, பூமா இப்போது தான் உறங்கச் சென்றிருந்தாள். அவள் தூக்கத்தைக் கெடுத்துதான் ஆக வேண்டும்.

“உன்னைப் பத்தித்தான்டா கனவு கண்டுகொண்டு இருந்தேன். என்னை டைட்டா கட்டிக்கோடா!” என்று போனில் கொஞ்சியவள், நிகில் கூறிய விவரம் கேட்டு சரேலெனப் படுக்கையில் எழுந்து உட்கார்ந்தாள். ‘‘ஸாரி நிகில்! அப்பா, அம்மாவுக்கு இப்போ கட்டாயம் உதவி தேவை. ஒரு பத்து நிமிஷம் டயம் தா! நானே கூப்பிடறேன்!’’

சரியாகப் பத்தாவது நிமிடம் மெயில் வந்தது. ‘எல்லா ஏற்பாடுகளும் செய்தாகிவிட்டது. ஆஸ்பத்திரிக்குப் பொறுப்பாக அழைத்துச் செல்ல, உடனிருந்து டாக்டர்களுடன் பேச, வீட்டு நிர்வாகத்தைக் கவனித் துக்கொள்ள, நம்முடனும் உடனுக்குடன் தகவல்களைப் பரிமாறிக் கொள்ள என எல்லாம் செய்வதற்குத் தோதாக என் டேட்டா பேங்க்கிலிருந்து ஹேமா என்கிற நாற்பது வயதுப் பெண்மணியைத் தேர்ந்தெடுத்து, எல்லா விவரமும் அவளுடன் போனில் பேசிவிட்டேன். டபிள் எம்.ஏ. படித்தவள். வயதானவர்களின் சைகாலஜி அறிந்தவள். ஒரு நாளைக்கு ஆயிரம் ரூபாய் சம்பளம். இரவு தங்கும்பட்சத்தில் இன்னொரு ஐந்நூறு அதிகம் தரவேண்டியிருக்கும். நாளைக் காலை எட்டு மணிக்கு, ஹேமா நம்மை வீட்டில் சந்திப்பாள். புஜ்ஜி க்ளீனிங் சர்வீஸில் தினசரி சர்வீஸ§க்குச் சொல்லிவிடு. நாளன்னியிலிருந்து ட்ராவல்ஸில் ஒரு ஏ.ஸி. கார் டிரைவர் அனுப்பச் சொல்லலாம். ஏதாவது விட்டுப் போயிருந்தாலும், நான் நாளை சென்னையிலிருக்கும் சில மணி நேரங்களில் முடித்து விடுவேன். கவலைப்படாதே, நிகில்! நாம் நல்ல நிர்வாகிகள். நம்மால் எல்லாப் பிரச்னைகளையும் சமாளிக்க முடியும். நிம்மதியாய்த் தூங்கு!’

ரயில்வே ஸ்டேஷனில் உடம்பெல்லாம் குன்றி, நடை தளர்ந்து, முகம் வற்றி, அம்மா உதவியுடன் நடக்கும் அப்பாவைப் பார்த்ததும் நிகில் உறைந்துபோனான். ‘‘அப்பா” என்று அணைத்துக்கொண்டபோது, அவர் அவனுள் முழுவதுமாகப் புதைந்துபோனார். கடிதங்கள், போன் கால்கள், இ&மெயில்கள் சாதிக்க முடியாத உறவை, இந்த உணர்வுத்தொடல் தந்தது. முழுமையான பாதுகாப்பு உணர்வு, மனித நெருக்கம், அன்பின் வெளிப்பாடு… விர்ச்சுவல் அன்பு என்ற ஒன்று மட்டும் கிடையாது போலிருக்கிறது!

மறுநாள், எல்லாமே திட்டமிட்டபடி நடந்தது. காலையில் பூமாவைத் தொடர்ந்து, ஹேமா வந்தாள். பொறுப்பேற்றுக்கொண்டாள். நிகில் அலுவலகம் கிளம்பும்போது, அம்மா வெளிறிய முகத்துடன் அவன் அருகில் வந்தாள். ‘‘நிகில்… நீ, பூமா ரெண்டு பேரும் ஊருக்குப் போறீங்களா? எனக்கு பயமா இருக்குடா..!’’ என்றாள். அம்மா கண்களில் பயம்… பலம் தேடும், துணை தேடும், பரிவு தேடும் பயம்!

அம்மாவின் நடுங்கும் விரல்களைப் பற்றினான் நிகில். “பயப்படாதே அம்மா! ஹேமா நல்லா பார்த்துப்பா. நான் நாலே நாள்ல ஓடி வந்துடுவேன். இதோ பார், எப்போ பேசணுமோ, என் கூட இந்த மொபைல்ல பேசு. நானோ பூமாவோ, மணிக்கொரு தடவை உங்களை செல்லில் விசாரிச்சுக்கிட்டே இருப்போம்…” & அம்மாவின் கண்களை நேராகப் பார்க்கச் சக்தியின்றி, நிகில் காரில் ஏறினான்.

காரை ஸ்டார்ட் பண்ண முயன்ற நிகில், திடீரென ஸ்டீயரிங்கில் தலைசாய்த்து அழலானான். கம்ப்யூட்டர், செல்போன், டேட்டா பேங்க் எதிலும் அடங்காத ஒன்றுக்குப் பெயர் மனித உணர்ச்சி என்று தோன்றியது.

– 12th செப்டம்பர் 2007

Print Friendly, PDF & Email

1 thought on “குடும்பம்.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *