கவரிமான்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 11, 2021
பார்வையிட்டோர்: 1,757 
 
 

மகாலிங்கசிவத்தார் தன் பழம்பெரும் வீட்டு முன் விறாந்தையின் இடது பக்க மூலையில் அவருக்கெனப் போடப்பட்டுள்ள சாய்மனைக் கட்டிலில் தன் கால்களை அதன் இரு சட்டங்களிலும் பக்கத்துக் கொன்றாகத் தூக்கிப் போட்டபடி, கிழக்கீறுகள் விழுந்த தன் ஏறு நெற்றியில் வலது கையை மடித்துப் போட்டுக் கொண்டு உள்ளம் சோர்ந்து போய்க் கிடக்கிறார். வயிற்றில் போட்ட வலது கைப் பெருவிரல், ஏனைய விரல் மொழிகளை ஒவ்வொன்றாக அழுத்தி நெட்டி முறிக்கிறது. சுவர் மணிக்கூடு நடுநிசியை அறிவிக்கப் பன்னிரண்டு முறை அவரின் நெஞ்சுக் கூட்டுக்குள் எதிரொலித்து ஓய்ந்து போனது. வீட்டின் மின்சார விளக்குகள் நேற்றிரவே அணைக்கப்பட்டன. அரிக்கன் லாம்புமட்டும் விறாந்தை வளையில் தொங்கிக் கொண்டு, கழுத்தை உள்ளிழுத்து அழுது வடிகிறது.

அவர் படுத்திருக்கும் அந்த மூலையில் கும்மிருட்டு. அந்த இருளே அவருக்கு இப்போது அடைக்கலம் அளித்துள்ளது.

அவரது பரம்பரையிலோ, அவரது வாழ்க்கையிலோ இதுவரை நடக்குமென நினைத்திராத மாபெரும் ஒரு கொடூரம் நேற்றிரவு நிகழ்ந்துவிட்டது.

அவரது மூத்த மகள் தேவி அந்த ஊரிலே, அவரது நிலங்களிலே சிறுவயதில் கோவணத்தோடு சாணி பொறுக்கித் திரிந்த சண்முகம் என்ற கீழ்ச்சாதிப் பள்ளனோடு ஓடிப்போய் விட்டாளாம்.

அவரது நிமிர்த்திய நெஞ்சிலே எதிர்பாராதவகையில் விழுந்த அந்தப் பலமான அதிரடியினால் அது உள்ளுக்குள் கூனிக் குறுகிப் போச்சு. இதுவரை காலமும் கர்வத்தோடு ஆட்சி கொண்ட அவரது மாசுமறுவற்ற உயர் வேளாள மனம் அந்தப் படுதுரோகமான தாக்குதலினால் கொதித்தெழும் அவமான உணர்வுகளின் தகிப்பில் வெதுவெதுத்துப் போய்க் கிடக்கிறது.

அவருடைய மனைவி அன்னலட்சுமியம்மா வீட்டின் அறைக் கதவு நிலையில் தோளை விழுத்தி, தலையைச் சாய்த்து, இருகால்களையும் ஒன்றாக நீட்டி, மடிக்குள் இரு கைகளையும் ஊன்றியவாறு இருக்கிறாள். அவள் இமைகளை மூடித் திறக்கையில் கண்ணீர்த் துளிகள், கன்னங்களில் நிரைகட்டி விழுந்து வழிகின்றன.

அவள் இருந்திருந்து “ஐயோ” என்று மூச்சிளைக்கிறாள்.

இருவருக்கும் நேற்று முதல் ஊனுறக்கமில்லை.

மகாலிங்க சிவத்தார் அந்தச் சாய்மனைக் கட்டிலில் கிடந்து ஓய்வெடுக்க வில்லை. ஓய்வெடுப்பதற்காவும் அதில் கிடக்கவில்லை.

அவரது ஆழமான யோசனை நெற்றிச் சுருக்கங்களை குறட்டியெடுக்கின்றது. கண்கள் இருள் கப்பிய முகட்டுச் சந்துகளில், அந்தச் சகிக்கவொண்ணாத அவமானத்திலிருந்து மீட்டெடுக்கும் வழிதேடி அசைகின்றன.

அவரைப் பொறுத்தவரையில் அந்த ஊரில் பரம்பரை பரம்பரையாக பிசிறின்றிக் கட்டிக் காத்து வந்த உயர் வேளாளர்குலப் புனிதமும், குடும்பக் கௌரவமும், தனிச் சிறப்பும் அவர் விந்திலேயே உற்பவித்த சிறுக்கியின் சின்னத்தனத்தால் ஒரே நாளில் போச்சுது! போச்சுது!

அந்த ஈனப் பிறவி செய்த இழிசெயலின் விளைவுகளை அரவது மனம் கண்டிக்கின்றது; நெஞ்சு பொறுக்குதில்லை.

“சீ! தூ! தேவி என்ரை மகளா! அது தேவி இல்லை மூதேவி! எளிய நாய்ப் பிறப்பு!” உள்ளூர முட்டிக்குமைந்த அருவருப்புணர்ச்சிகள் முகச் சதைகளை வதைத்து உதடுகளை உழக்கிக் கொண்டு வார்த்தைகளில் உருவேறிப் பாய்ந்தன. அவர் தலையை நிமிர்த்திகைகளால் கட்டிற் சட்டங்களை இறுகப் பற்றிக் கொண்டு எழுந்தார்.

நெஞ்சு நொந்தது.

இனி அவர் தலை உயர்த்தி அந்த ஊர் வீதிகளில் எப்படி உலாவி வருவது? உவர் எத்தகைய திமிராக அந்த ஊரில் வாழ்ந்த மனிதர்! அந்த ஊரில் குறுநில மன்னனைப் போல் வாழ்ந்து அமரராகிவிட்ட அவரது தகப்பன் பஞ்சலிங்கத்தாரின் பெயரை நாக்குத் தெறிக்கக்கூறி அந்தப் பெருமையில் பூரித்து வாழ்ந்தவர். பஞ்சலிங்கத்தாரின் நிலங்களில் குடில் கட்டி வாழ்ந்து, உயர் வேளாளர் குடும்பங்களுக்கு அடிமை குடிமை வேலை செய்து வந்த கீழ்ச்சாதிப் பஞ்சமர் அவர் காட்டிய இடத்தில் குந்தி, அவர் கிழித்த கோட்டில் கும்பிட்டு விழுவார்கள். அவரின் முத்த மகன்தான் மகாலிங்கசிவத்தார். அவருக்குப் பின் மூன்று பெண்கள். அந்த நால்வருக்கும் பஞ்சலிங்கத்தார் தன் நிலபுலங்களைப் பாகப் பிரிவினை செய்ததால் மகாலிங்கசிவத்தாரின் ஆட்சிப்புலம் குறுகிவிட்ட போதும், எங்கள் தாத்தாவுக்கு ஒரு யானை இருந்தது எனக் கூறிக் கொண்டு நேற்றிரவுவரை மிடுக்கோடு வாழ்ந்து வந்தவர். அத்தகைய பெருமைக்குரிய மனிதனின் மூத்த மகள்தான் இந்த இழிசெயலைச் செய்து போட்டாள். அவளது அற்ப சுயநலம், அவரது பெருமைகளைச் சீர்தூக்கிப் பார்க்க விடாது. அவளது அறிவுக் கண்களில் மண் தூவி விட்டது.

அவரால் இந்த அவமானத்தை எப்படிப் பொறுத்துக் கொள்ள முடியும்? சமத்துவம் பேசுகிறவன் வாயால் நாலு நியாயம் சொல்வான். பறையனுக்குப் பூநூல் கட்டிய பாரதியின் படம் அவரின் வீட்டுச் சுவரிலும் தான் தொங்குகிறது. பாரதி அவரைப் போல் வாழ்ந்தவரா? அவன் ஓர் ஏழைப் பிராமணன். அவன் சாதிகளில்லை யென்றான். அவனுடைய பரம்பரையில் யாராவது கீழ்ச்சாதிக்காரனைத் திருமணம் செய்தார்களா?

தலையிடியும் காய்ச்சலும் தனக்குத் தனக்கு வந்தால் தான் தெரியும். மகாலிங்க சிவத்தார் படும் மன அவஸ்தைகளை அவரின் நிலையிலிருந்து சிந்திப்பவர்களுக்குத் தான் உணர முடியும்.

அவருக்குக் கண்களில் கண்ணீர் வரவில்லை.

உள்ளே உதிரமே கொட்டுகிறது.

“தேவி! உன்னைப்பெற்ற தகப்பனுக்கு இத்துணை துரோகம் செய்யலாமா?”

வாழ்க்கையின் சுகங்களை இந்தக் கீழ்ச்சாதிப் பள்ளனோடு வாழ்ந்தால் தான் அனுபவிக்க முடியுமா? காதலா? மண்ணாங்கட்டி. அவன் அந்தச் சண்முகம் ஒன்றுக்கும் வக்கில்லாத பயல். நீ காதலிக்க உன் சாதியில் ஒரு கோணங்கிதானும் கிடைக்கவில்லையா?

மகாலிங்கசிவத்தார் நெஞ்சு கொதிக்க மீண்டும் கட்டிலில் சாய்ந்து படுத்தார்.

“உவளை இனி உயிரோடு விட்டுட்டு நான் வாழவோ? நான் வேட்டியை உரிஞ்சு தலையில் சுத்திக் கொண்டல்லோ திரியவேணும். அந்த நாயோடை நீ எங்கையடி ஓடி ஒளிச்சிடுவாய்?”

சினத்தோடு பீறிய இந்த வார்த்தைகளை அவரது மனக்குமைச்சலின் வெறும் வெளிப்பாடென்று கருதிவிட முடியாது.

மகாலிங்கசிவத்தார் பக்கம் நியாயம் இல்லையென்று கூறிவிடலாமா? சமூகத்தில் காலங் காலமாக இருந்து வருகிற சாதிவேற்றுமைகள் பொய்யான வையா? குடும்பக் கௌரவம், குலப்பெருமையெல்லாம் வரட்டுக் கௌரவமா? தேவி தன் வாழ்க்கையைத் தீர்மானிக்கிற சுதந்திரத்தைத் தன் கையில் எடுத்தது எத்தனை மடைமைத்தனமானது? ஓர் உயர்குல வேளாளப் பெண்ணும், அவர்களின் வீட்டுக் கோடிகளில் நின்று கைகட்டிச் சேவகஞ் செய்த, சிரட்டைகளிலும், கைமண்டைகளிலும் எச்சிற் சோறு வாங்கிக் தின்று வளர்ந்த கீழ்ச்சாதியில் பிறந்த ஒருத்தனுடன் கூடி வாழ்வதைக் கற்பனை செய்து தானும் பார்க்க முடியுமா?

தேவி உண்மையில் ஒரு கோடரிக் காம்புதான். தகப்பன் திருமணம் செய்து வைப்பார் என்று இருபத்தெட்டு வருடங்கள் காத்திருந்தவள், கடைசியில் இப்படியா செய்ய வேணும். குலப் பெருமையில் சுகம் கண்டு வீழ்ந்தவர்களின் மனம்படும் துன்பங்கள் சொல்லுந்தரமன்று.

காதலுக்குக் கண்ணில்லையாம். சீ தூ! இப்படியா? ஒரு பெண்ணின் பருவ உணர்ச்சிகள் அவ்வளவு பெரிதா?

தன் சாதியில் மாப்பிள்ளை கிடைக்காவிட்டால் காலமெல்லாம் பொறுத்திருந்தால் என்ன? தலையா போய்விடும்?

“ஐயோ! எடிமூதேவி! எங்களுக்கேனடி இந்தப் பாதகத்தைச் செய்தாய்! முருகா!!” அன்னலெச்சுமியம்மா இருகைகளாலும் நெஞ்சில் அடித்துப் புலம்பினாள்.

“நீ சத்தம் போடாதையடி! நீ கவனமாயிருந்தால் அந்த நாய் இப்படிச் செய்திருக்குமா!”

அவர் மனைவியை அதட்டினார். இனி அழுது புலம்புவதால் ஒரு பயனுமில்லை யென்று அவருக்குத் தெரியும்.

அவரது சிந்தனை அறுந்தறுந்து முடிச்சுப் போட்டுக் கொள்கிறது. “எல்லாம் நான் விட்டபிழை! எத்தனை சம்பந்தங்கள் வந்தது! எத்தனை நொட்டையள் கூறி எல்லாத்தையும் தட்டிவிட்டன், சுத்தமான வேளாள மாப்பிள்ளை தேடின எனக்கு ஒரு கீழ்ச்சாதிப் பள்ளன் மாப்பிள்ளை . சீ! அவனும் படிச்சவன் தான். அந்த எளிய பள்ளு என்ரை மருமகனோ? நினைக்க அருவருக்குது. எனக்குப் பிறந்த அந்த மூதேவி சாதி வித்தியாசம் பார்க்கக்கூடாதெண்டு சொல்லிக் கொண்டிருந்தது. பள்ளனோடை ஓடத்தானாக்கும். மற்றது யூனிவர்சிட்டியில இருக்கு. அதுவும் பாரதிபாட்டுப் பாடுமோ? எல்லாரையும் சுட்டுப் பொசுக்கிப் போடுவன்!”

சிந்தனை அறும்போது அவரால் நெடிய மூச்சுத்தான் விடமுடிகிறது. அவர் நெஞ்சுப்பரப்பை கையால் தடவியவாறு மௌனமாகக் கிடந்தார்.

“மகாலிங்கசிவத்தாரின் மூத்த மகள் ஒரு கீழ்ச்சாதிப் பள்ளனோடு ஓடிவிட்டாளாம்” என்ற செய்தி ஊரில் எங்கும் பற்றிப் பிடித்தது. அந்த அவலச் செய்தி அறிந்து, அவருக்கும், அவரது மனைவிக்கும் உறவு முறையான அண்ணன், தம்பி, மாமன், மச்சான், அக்கா, தங்கை எல்லாரும் அந்த வீட்டுக்குப் படையெடுத்து வந்து விட்டார்கள். அவர்களில் பலர் இன்னும் அந்த வீட்டின் மண்டபத்திலும் அறைகளிலும் கிடந்து ஒரு நல்ல முடிவு காண நித்திரை விழித்துக் கிடக்கிறார்கள். அயலவரும், அவரது நண்பர்கள் சிலரும் விறாந்தை விளிம்பிலும், முற்றத்தில் தென்னை மரங்களின் கீழும் குந்தி இருந்து தம் மனக் கொதிப்புகளை பரிமாறிக் கொண்டிருக்கிறார்கள். நான்கு கார்கள் தேவியைத்தேடி நாலா பக்கங்களும் விரைந்தோடிக் கொண்டிருக்கின்றன.

மகாலிங்கசிவத்தாருக்காகப் பொலிசு படாதபாடு படுகிறது.

அவர் அந்த மூலையிருட்டில் ஒதுங்கிக் கிடந்தவாறு, வீட்டில் இருப்போர் எல்லோரையும் கண்களில் சோகம் கனக்கப் பார்த்துக் கொண்டிருக்கிறார். அவர்கள் பரிமாறிக் கொள்ளும் அபிப்பிராயங்கள் அவரின் காதுகளுக்கும் அம்புகளை நுழைக்கின்றன. அவரது இதயமோ “உன் மானம் போச்சுது! உன் மானம் போச்சுது!” என்று அவருடைய நெஞ்சக் குழிக்குள் ஓங்கி ஓங்கிக் குத்துகிறது. மகாலிங்கசிவத்தார் ஏதோவொரு தீர்க்கமான முடிவுடன் அந்தக் கட்டிலைவிட்டு எழுந்து, வேட்டியை அவிழ்த்து மீண்டும் இறுகக் கட்டிக் கொண்டார்.

“ஐயோ! நான் சாகப்போறன்! அந்தக் கீழ்சாதியைக் கொண்டு போட்டு என்ரை புள்ளையைக் கொண்டு வாருங்கோ!

அன்னலெச்சுமி அவரை ஏறிட்டு நோக்கி அடித்தொண்டையால் அழுது பரிதவித்தாள்.

அவருக்குச் சினம் உச்சிக்கேறியது.

“என்னடி சொன்னனி? உன்ரை புள்ளையைக் கொண்டு வாறதோ? இந்த வீட்டுக்கோ, அவளைப் பிடிச்சு மண்ணெண்ணை ஊத்திக் கொளுத்திப் போட்டுத்தான் நான் இந்த வீட்டிலை சோறு தின்பன் ஓ! ”

வார்த்தைகள் ஆவேசங் கொண்டு வெளிவர அவரின் கைகால்கள் நடுங்கின.

“இனி அவளை உயிரோடுவிட்டா, நாங்க உரிஞ்சு போட்டுத்தான் திரியவேணும் !”

அவர் போட்ட சத்தம் கேட்டு வீட்டுக்குள்ளிருந்து விறாந்தைக்கு வந்த அவருடைய தங்கச்சி ஒருத்தி கூறினாள்.

“அந்த நாய் இப்ப பிடிபட வேணும், சனியனை குத்திக் கிழிப்பன்” இது தேவியின் மாமன்.

“அவளை விடு, அவனுக்கு எத்தனைமுழ நெஞ்சு, வடுவா!”

“இதுதான் உந்தக் கீழ்ச்சாதியளுக்கு உரிமை யொண்டும் குடுக்கக் கூடாதெண்டு சொல்றது. அந்தச் சாதியை அந்தந்த இடத்திலை வைக்க வேணும்.”

“தேநீர்கடையளுக்கை போகவேணும் எண்டினம், கோயிலைத்திறந்து விடுங்கோ எண்டினம், பாராளுமன்றத்தில் இடம் வேணுமெண்டினம் இப்ப பாத்தியளே எங்கடை வீட்டுக்கை பொம்புளை எடுக்க வந்திட்டாங்கள். அப்பவே சொன்னம் எங்கடை மூதேசியளும் கேட்டுதுகளே”

“எங்கடை சாதியில் பிறந்த புதுசுகளுமெல்லே அதுகளோடை சேர்ந்து கொண்டு புது யுகம் படைக்கிறதெண்டு திரியுதுகள் தறுதலைகள்!”

அங்கே கூடியிருந்தவர்கள் தங்கள் மனக்கொதிப்புகளை, சப்பித் துப்பினார்கள்.

“ம் பொறுங்கோ! பொறுங்கோ !”

என்று மெதுவாகக் கூறிய மகாலிங்கசிவத்தார் வாசலடியில் கால் வைத்து மெல்ல முற்றத்துக்கு இறங்கினார்.

சந்தியில் தெருநாய்கள் குரைத்தன.

ஒரு கார் விரைந்து வந்து அவரது வளவுக் கேட்டுக்கு முன்னால் நின்றது. நாலைந்து பேர் அதிலிருந்து அவதிப்பட்டு இறங்கிக் கேட்டைத் திறந்து கொண்டு உள்ளே வந்தார்கள். அவர்களின் கைகளில் வாள், கத்தி, பொல்லு, பெற்றோல் என்பன இருந்தன.

மகாலிங்கசிவத்தார் சுறுசுறுத்து அவர்களை நோக்கி விரைந்தார்.

“சிவம்! நடராசா!”

“ஓம் ஐயா!”

“இங்கை வாங்கோ !”

அவர்களை ஒரு தென்னை மரத்தின் கீழ் அழைத்துப்போனார்.

“என்ன சொன்னமாதிரி எல்லாம்”

“ஓமண்ணை அவங்கடை கொட்டில்களுக்கும், தீ வைச்சம், கண்டவன் நிண்டவனுக்கெல்லம் வாள் வெட்டு, பொல்லடி, ஐஞ்சாறு பேருக்குக் கால் முறிஞ்சிருக்கும்!”

“அந்த எளியவன் சண்முத்தான்ரை தகப்பன் சின்னவனுக்கு?”

“கால் முறிச்சாச்சு! தாய்க்கும் கடும் பொல்லடி! எங்கடை வேலையை விடியக் கேள்விப்படுவீங்க!”

“எளிய நாய்களைப் பூண்டோடு சுட்டுப் பொசுக்கினால் தான் என்ரை ஆத்திரம் தீரும் நடராசா!”

“ஐயா உங்கடை இரத்தம் கொத்திக்கிறமாதிரித்தான் எங்களுக்கும் கொதிக்குது.!”

நடந்தவற்றைக் கேட்டு மனம் பூரித்த மாகாலிங்கசிவத்தார் இருட்டிலே அவர்களின் தோளைத்தடவி, “தம்பிமாரே, இது சரி, ஆனால் என்ரை சொத்தெல்லாம் அழிஞ்சாலும் பரவாயில்லை. எப்படியும் தேவியைப் புடிச்சு என்ரை கையிலை கொண்டு வந்து தாங்கோ! அவளை என்ரை கையாலை கொல்ல வேணும்!” அவர் குரல் கரகரத்துக் கண்கள் கலங்கின.

“ஐயா ஒண்டுக்கும் யோசிக்க வேண்டாம். அவளைப் பிடிக்கிறவரை நாங்க நித்திரை கொள்ளமாட்டோம்!” சிவம் உறுதியாகச் சொன்னான்.

“நீங்கள் எதுக்கும் பயப்படவேணாம். பொலிசிலை அவை ஒண்டும் பண்ணே லாது! நீங்க நினைக்கிறதைச் செய்யலாம்”

“எங்களுக்குத் தெரியும் ஐயா!”

“இப்ப என்ன மாதிரி?”

“நாங்கள் இப்பவே ஓரிடத்துக்குத் தேடிப்போறம். நீங்கள் போய்ப் படுங்கோ!” என்று நடராசா கூற எல்லோரும் மீண்டும் போய் காரில் ஏறிக் கொண்டனர்.

“அந்தப்பள்ளனை உயிரோடு மட்டும் விட்டுட்டு வரவேண்டாம்.”

மகாலிங்கசிவத்தார் தலையைத் தொங்கப் போட்டுக்கொண்டு அந்தச் சாய்மனைக் கட்டிலை நோக்கி நடந்தார்.

மூன்று மாதங்கள் சென்று விட்டன. மகாலிங்கசிவத்தாரின் முயற்சிகள் எதுவும் பலிக்கவில்லை.

தேவி கர்ப்பமாயிருக்கிறாளாம் என்ற செய்திதான் அவரின் காதுக்கு எட்டியது. எங்கே என்பது மர்மம். அவருக்கு ஒரே யோசனை, வெளியே சொல்லமுடியாத மனவதைப்பு, வெளியே செல்வதில்லை.

ஒருநாள் நடுச்சாமம். அந்தச் சாய்மனைக் கட்டிலுக்கு முன்னால் வீட்டு வளையில் மகாலிங்கசிவத்தார் தூக்குப்போட்டுத் தற்கொலை செய்து கொண்டார். அவர் இறுதியாக எழுதிவைத்த கடிதம் இது தான். “என் மரணத்துக்கு வேறு எவரும் காரணம் அல்ல. நானே தற்கொலை செய்து கொள்கின்றேன்.”

– குமரன் 1982 – விபசாரம் செய்யாதிருப்பாயாக (சிறுகதைத் தொகுதி)- விவேகா பிரசுராலயம் – முதற் பதிப்பு கார்த்திகை 1995

பெனடிக்ற் பாலன், யோ. (1939 - 1997) ஓர் எழுத்தாளர். இவர் கல்வித்துறையில் முதுகலைமாணிப் பட்டம் பெற்று உளவியல் விரிவுரையாளராகக் கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் 1984 முதல் 8 ஆண்டுகள் பணியாற்றிப் பின்னர் பிரதிக் கல்விப் பணிப்பாளராகப் பணியாற்றினார். இவர் பல சிறுகதைகளையும் நாடகங்களையும் எழுதியுள்ளார். இவரது 'விபச்சாரம் செய்யாதிருப்பாயா' என்ற சிறுகதைத் தொகுதிக்கு 1995 இல் சாகித்திய மண்டலப் பரிசு கிடைத்தது. இவரது நீயொரு பெக்கோ என்ற…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *