கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 7, 2012
பார்வையிட்டோர்: 13,488 
 

‘காவேரியில் குளித்தால், பண்ணிய பாவம் போகும்’ என்று யாரோ சொன்னார்கள். ‘சரி, காவேரியில் குளித்துவிட்டு வரலாம்’ என்று காசிக் குப் போனேன். அப்படியே உடம்பை துடைத்துக்கொள்வதற்காகத்தான் பக்கத்திலே இருந்த அந்தக் கிராமத்திற்குப் போனேன். அழகான கிராமம். கூடுவாஞ்சேரி என்று பெயராம்!

அந்தக் கிராமத்தில்தான் அந்தப் பெண்ணைப் பார்த்தேன். பத்மா என்று பெயர். வயது 23 இருக்கும். அந்த இளம் வயதில் முகத்தில் கவலையின் அடையாளச் சின்னங்களாக பல சுருக்கங்கள். குழி விழுந்த கன்னங்கள். ஒட்டி உலர்ந்த உடம்பு. கண்கள் உள்ளே செருகிக்கொண்டு விட்ட மாதிரி ஒரு தோற்றம். எவ்வளவு அழகாக இருந்தாள் அவள்!

என் பக்கத்திலே இருந்த அந்தக் கிராமத்து மணியக்காரரிடம், “யார் இந்தப் பெண்?” என்று கேட்டேன்.

“பெண்ணா இது? நடத்தை கெட்டவள்!” என்று இந்தியில் சபித்தார்.

“ஆஹா! நடத்தை கெட்டவளா? இங்கே இருக்குமே ஓர் உண்மைக் கதை!” என்று உற்சாகம் துள்ள, அவள் குடிசைக்குப் போனேன்.

“ஆப் இதர் ஈ கிராம் மே… வந்து ஹம் உண்மைக் கதை…” என்று இந்தியில் பேசத் தெரியாமல் திணறிய என்னைப் பார்த்து அவள் சிரித்தாள். “ஏன் சிரமப்படுகிறீர்கள்? தமிழிலேயே பேசுங்கள்?” என்றாள் அவள்.

“ஆஹா! தாங்கள் தமிழ்நாட்டுப் பெண்ணா?”

“இல்லை. தமிழ் வீட்டுப் பெண். இந்தி நாட்டுப் பெண்!”

“புரியவில்லையே?”

“தமிழ்க் குடும்பத்தில் பிறந்தேன் இந்தி குடும்பத்தில் மருமகளானேன். அதனால்தான் இந்தி நாட்டுப் பெண் என்றேன்.”

“ரொம்ப ஹாஸ்யமாகப் பேசுகிறீர்கள். எனக்குச் சிரிப்பாய் வருகிறது!”

“சிரியுங்களேன். என்னைப் பார்த்துதான் இந்த ஊரே சிரிக்கிறதே!”

“அதுபற்றி கேட்கத்தான் வந்தேன். இப்போது உங்களுக்கு ஏன் இப்படிப் பட்ட வாழ்க்கை?”

“எல்லாம் சமூகத்தின் கொடுமைதான். என் அப்பா, நயவஞ்சகர். என் அண்ணன், படுபாவி. என் தம்பி, திருடன். என் அம்மா, ஒரு மாதிரி. என் தங்கை பைத்தியம். அதனால்தான் நான் இப்படி ஆனேன்.”

என்னால் வியப்பு தாங்க முடியவில்லை. இப்படிப்பட்ட ஒரு குடும்பத்தில் பிறந்த இவள் மட்டும் எப்படி ஒரு நல்முத்தாக இருக்கிறாள்! சேற்றில் முளைத்த செந்தாமரையா?

“என்னை இஷ்டமில்லாதவருக்கு மணம் முடிக்கப் பார்த்தார்கள். ஆனால், நானோ பள்ளி வயதில் காதலித்தவ ரையே மணப்பது என்று தீர்மானம் செய்து பம்பாய் வந்து, அவரை இன்றுவரை தேடிக்கொண்டு இருக்கிறேன்.”

“அவரை நினைவிருக்கிறதா?”

“ஓ! எங்கு பார்த்தாலும் அவர் குரலை நான் கண்டுகொள்வேன். அவர் என்னைப் பார்த்துச் சொன்ன ‘அச்சா’வை என்னால் மறக்கவே முடியாது! பல வருடங்கள் கழிந்ததால் முகம் மறக்கலாம். அந்த ‘அச்சா’வை மறக்க முடியுமா?”

“உண்மைதான். சரி! இருந்தாலும் வாழ்க்கையில், வருமானத்திற்காக நீங்கள் மானத்தை விற்பது…”

“சமூகம் என்னை மானத்தோடு வாழவிட்டால்தானே? மானத்தை விற்கிறேன் என்று சொன்னால் போதும், அதை விலைக்கு வாங்க எத்தனை பேர் ஆவலோடு தயாராக இருக்கிறார்கள்! இந்த பாழும் சமூகத்தில் வேறு எப்படிப் பிழைப்பது? மூட்டை தூக்கியோ, பிச்சை எடுத்தோ பிழைப்பது கேவலம் இல் லையா? அதனால்தான் இப்படி… பாழும் சமூகம்!”

எனது இந்திப் புலமையைக் காட்டிக்கொள்ள, “அச்சா” என்றேன்.

உடனே அவள் “ஆஹா! அதே குரல்! அதே அச்சா! அதே அத்தான்” என்று கூவி எழுந்தாள்!

எடுத்தேன் ஓட்டம்!

(உண்மைக் கதையாக இருப்பதால் பெயர்களும், இடங்களும், நிகழ்ச்சிகளும், சம்பாஷணைகளும் சற்று மாற்றப்பட்டிருக்கும். மற்றபடி எல்லாம் உண்மை.)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *