கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 30, 2020
பார்வையிட்டோர்: 14,444 
 

வானத்தில், வெகு அபூர்வமாக, அந்த அற்புதக்காட்சி தென்பட்டது. பரபரப்பாக போய் கொண்டிருந்த நான் நின்று ரசித்தேன். மேக முயல்கள்!

குவியல் குவியல்களாக பாறைகள் போலவும், மற்றும் ஒழுங்கற்ற வடிவங்களாகவும், காணப்பட்ட மேகக் கூட்டங்களிலிருந்து சற்று விலகி இவைகள் காணப்பட்டன.

மேகச்சிதைவினால் இயற்கையாக தோன்றியிருந்த. இரண்டு முயல் வடிவங்கள்!

ஒன்று – நான்! மற்றொன்று – அவள்!

இப்படி கற்பனை செய்து கொண்டதில், உண்டான மகிழ்ச்சி நிலைக்கவில்லை. எது ஒன்றுக்கும், விரைந்து செயல் வடிவம் கொடுக்காமல், கற்பனையிலேயே காலம் கடத்தும் எனது தன்மையின் மீது, எனக்கு கோபம் வந்தது.

நானாகவும், அவளாகவும், முயல்களை உருவகப்படுத்திக் கொண்ட பின், ‘அவைகள் அழியாமல் இருக்க வேண்டுமே!’ என்ற ஒருவிதமான கவலை உடன் ஏற்பட்டது.

உற்றுப் பார்த்தேன்! முயல்கள் வடிவம் மாறாமல் நேர்த்தியோடு காற்றினால் மெதுவாக இடம் பெயர்ந்து கொண்டிருந்தன.

மீண்டும் வேகவேகமாக நடந்தேன்.

கல்யாண மண்டபம் கலகலப்பாக இருந்தது. உள்ளே நுழைந்தேன்.

யாரையோ எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்தாற்போல, தோற்றமளித்த மாமா, சற்று தூரத்தில் தென்பட்டதும், அருகில் போய், “சாரி மாமா! கொஞ்சம் லேட்டாயிடுச்சி! நான் செய்யக் கூடியது ஏதாச்சம் இருந்தா சொல்லுங்கோ!” என்றேன்.

என் கையில் கனத்த சூட்கேஸின் மீது மாமாவின் பார்வை ஒரு கணம் சென்று, “ஒன்னுமில்லேப்பா! அக்கா வரலே?” என்றார்.

“வருவாங்கோ!” என்றேன். பொய்!

அம்மா வரவில்லை. வர விருப்பம் இல்லை. நான் இங்கு வந்ததே கூட அம்மாவுக்கு தெரியாது.

கம்பெனி விஷயமாக போவதாக, ரயிலேறிவிட்டேன்.

‘கடைசி சந்தர்ப்பமாக ஏதேனும் வாய்ப்பு கிட்டதா?’ என்னும் உள்மனத்தின் உந்துதலாக இருக்கலாம்.

இந்து மணக்கோலத்தில் இருந்தாள். மணமகன் பிரபல ஹிந்தி சினிமா ஹீரோவைப் போல சிவந்த நிறத்தில் கம்பீரமாக இருந்தான். ஏகப் பொருத்தம் தான்!

இப்படிப்பட்ட மணமகனை தேடும் போது, நெருப்பை அவித்த நிறத்திலிருக்கும், என்னை எப்படி நினைப்பார்கள்?

நான் சிறுவனாக இருந்த வருடங்களில், இரு குடும்பங்களுக்கு இடையே நிலவிய, சிற்சில கருத்து வேற்றுமைகளினால், முற்றிலுமாகவே உறவு துண்டிக்கப்பட்டிருந்தது.

பின்னர், தாத்தாவின் இறுதிச் சடங்குகளில் கூடிய போது, அக்கா – தம்பி குடும்பங்களுக்கிடையே, மீண்டும் ஒருவாறு உணவுப் பாலம் அமையப் பெற்றது.

இதற்குப் பிறகு, அம்மாவுக்கு, தன் தம்பி குடும்பத்தின் மீது—சிறப்பாக இந்துவின் மீது—ஒரு அலாதியான நேசம் ஏற்பட்டிருந்தது.

இதனால், எனக்கு கனவுகள் எளிதாக இருந்தன.

மாமாவின் தரப்பிலிருந்து, சாதகமான சமிக்ஞைகள் இல்லாததுப் பற்றி, நான் ஆரம்பத்தில் கவலை கொள்ளாமல்தான் இருந்தேன்.

ஆனாலும், துருதிருஷ்ட்ட வசமாக, குறிப்பாக அத்தையின் ஊக்கத்தினால், உறவு ஒரு வழிப்பாதையாக தொடங்கியது.

இதனால் நிகழ்ந்த அமைதிப் போரில் எனது ஆசைகள் அனாதையின.

அம்மாவும், ‘ஏமாற்றம்’ அடைந்தாலும், ‘அப்படி ஒன்றும் தலையெழுத்தில்லை!’ என்பதாக ‘கௌரவம்’ காத்துக் கொண்டார்.

இந்து என்னைப் பற்றி, ‘என்ன எண்ணம் கொண்டிருந்தாள்?’ என்பதை, என்னால் கடைசிவரை, முழுமையாக அறிந்து கொள்ள இயலவில்லை.

நான் அவள் மேல் விருப்பம் கொண்டதை, அவள் எப்படி புரிந்துகொள்ளாமல் இருந்திருக்க முடியும்?

“நீங்க சிகப்பா இருந்திருந்தா, ஹீரோ போல இருப்பீங்க!” என்றாள், ஒரு சந்தர்ப்பத்தில்.

‘அப்பொழுது, அவள் கண்களில் தெரிந்தது, தோழமையா? கேலியா?’ என அடையாளம் கண்டு கொள்ள இயலவில்லை.

புற அழகின் மேல் அவள் கொண்ட ஆர்வம் அலாதியானது.

எதேச்சையாக திரும்பியவள், என்னைக் கண்டதும், புன்னகைத்தாள். சோகம் கலந்த புன்னகை! ஏன்? என்னவாயிற்று? என்ன சோகம் இருக்க முடியும், நிறைவான மணமகனின் அருகில் அமர்ந்து கொண்டு?

ஒரு பெரியவர் எதற்கோ எழுந்து போனதும், காலியான சேரில் அமர்ந்து கொண்டு, சூட்கேஸைக் கவனமாக மடியில் வைத்துக்கொண்டேன்.

கடிகாரத்தைப் பார்த்தேன். முகூர்த்த காலம் முடிவதற்கு இன்னும் கொஞ்சம் நேரம் தான் இருந்தது.

மாப்பிள்ளை என்னவோ ரகசியமாக. இந்துவின் காதருகே சொன்னான். அவளின் முகம் இன்னும் சிவந்து தலைகுனிந்தது.

இதைக் கண்டதும், எனக்கு ஏற்பட்ட உணர்வில், பொறாமை, கோபம், சுயபச்சாதாபம் ஏமாற்றம் எல்லாம் இருந்தது

ஏற்கனவே, இவ்வாறான கவலையுணர்வு, அவளின் திருமண அழைப்பிதழை, முதன் முதல் கையில் எடுத்ததும் ஏற்பட்டது! இது இரண்டாவது முறை! பார்வையை திரும்பிக்கொண்டேன்!

மாமா, இங்கிருந்து எழுந்து போன பெரியவரும் அடங்கிய, சிறு குழுவினருடன், சற்றுத் தள்ளி ஏதோ விவாதித்துக் கொண்டிருந்தார்.

இந்த சூழ்நிலையில், ஏதோ அசாதாரணம் இப்பொழுது எனக்குப் புரிபட்டது. என்னவாக இருக்கும்?

பக்கத்திலிருந்த ஜிப்பாக்காரரிடம், “என்ன லேட்டாயிட்டேயிருக்கு?” என்றதும், காத்திருந்தவர் போல, “எல்லாம் அன்பளிப்பு பிரச்சனை தான்!” என்று சிரித்தார்.

அவர் சிரிப்பு எனக்குப் பிடிக்கவில்லை. இருந்தாலும் விவர அறிய, “புரியலீங்களே!” என்றேன்.

“என்னா தம்பி! இதுகூட புரியலே?” எனத் தொடங்கி, ஏதோ நினைத்துக்கொண்டவராக, “ஆமா, நீங்க பொண்ணு வூடா? மாப்ள வூடா?”

“ஏன் கேட்கறீங்க? பொண்ணு வீடு தான்!”

“நீங்களாவது சொல்லக் கூடாதா? விரலுக்கு தகுந்த வீக்கம் வேணும், தம்பி! ஆபீஸர் மாப்ள வேணுமின்னா, அவுங்க இஷ்டத்துக்குத் தானே போவணும்?”

எனக்கு எல்லாம் புரிந்தாற் போல இருந்தது. மாப்பிள்ளை வீட்டார் கேட்ட சீர்வரிசையில், ஏதோ குறை! ‘அதை நிறைவு செய்தால் தான், மாப்பிள்ளை தாலி கட்டுவார்!’ என்பது சம்பந்தி வீட்டாரின் நிர்பந்தமாக இருக்கும்.

இப்படி ஒரு காட்சி, நான் பார்த்த நாடகத்திலோ, சினிமாவிலோ, நிகழ்ந்தது கவனத்திற்கு வந்தது. அதில் அந்த கதாநாயகி புரட்சி பெண்ணாகி, ‘இந்த மாப்பிள்ளை எனக்கு வேண்டாம்! பணத்துக்கே தாலி கட்டட்டும்!’ என வீர வசனம் பேசி, எழுந்துவிட , பந்தி விசாரித்துக் கொண்டிருந்த முறை மாப்பிள்ளை ஒருவன் அழைக்கப்பட்டு, திருமணம் முடித்து வைக்கப்பட்டது.

‘கடைசி சந்தர்ப்பம் காத்திருக்கிறது!’ என அந்த முறைப் மாப்பிள்ளைக்கும், அவனது உள்மனம் முன் கூட்டியே தெரிவித்திருக்குமோ? ‘இந்து அவ்வாறு வீரவசனம் பேசுவாளா?’ என ஒரு விநாடி ஏக்கப்பட்டேன்.

“என்ன, புரியுதுங்களா?” என்றார். தலையாட்டினேன்.

“ஆமா, நீங்க பொண்ணுக்கு என்ன வேணும்?”

சொன்னேன்.

‘எனக்கு திருமணம் ஆகவில்லை’ என்ற விஷயத்தை, அடுத்த கேள்வியில் தெரிந்து கொண்டு, “அடடே! ராஜாப் போல, முறைப் பையன் இருக்கீங்க! தங்கமான குணம்! ஏன் நீங்க கல்யாணம் பண்ணிக்கலே, இந்த பொண்ண?”

‘நான் எப்படிப்பட்டவன்?’ என்பது அவருக்கு தெரியாமலே, ‘தங்கமான குணம்!’ எனப் பாராட்டியது, ‘ஏற்புடையதாக இல்லை!’ என்று அறிவிற்கு தோன்றினாலும், உணர்வுபூர்வமாக பெருமிதம் அடைந்தேன்!

‘நானா மாட்டேன்னு சொன்னேன்?’ என சொல்ல தோன்றி அடக்கிக்கொண்டேன்.

இப்பொழுது, இன்னும் கொஞ்சம் சலசலப்பு அதிகமாகி, மணமகன், அந்தக் குழுவினரால் அழைக்கப்பட்டு, மிகவும் தயக்கி எழுந்து போனான்.

“என்ன, ஸ்கூட்டர் கேட்கிறாங்களா?” என்றேன், இந்துவை பார்த்துக்கொண்டே!

“அதெல்லாம் ஆயிருச்சி! பத்தாயிரம் ரொக்கம்! அதான் பாக்கியாம்!”

இந்து, ஒரு வினாடி கண்களை சந்தித்து விட்டு, பார்வையை விலக்கிக்கொண்டாள்.

இந்து இப்பொழுது சொல்லட்டும்: ‘இந்த மணமகன் வேண்டாம்!’ என்று.

பின்னர், காலமெல்லாம் இந்த கண்மணி, என் கண்ணுக்குள் வைத்து காப்பாற்றப்படுவாள்!

சொல்வாயா, பெண்ணே? என் இனிய இந்து சொல்வாயா?

இந்து தலைநிமிர்ந்தாள்.

வீர வசனம் பேசப் போகும், நாடகப் பெண் போல அல்லாமல், கண்ணீரைத் துடைத்துக்கொண்டாள்.

நீ ஏன் அழ வேண்டும்?

வேகமாக எழுந்து, விவாதித்துக் கொண்டிருந்தவர்களிடம் போனேன்.

உணர்வுகளை வெளிக்காட்டாமல், ஒன்றும் அறியாதவன் போல, மாமாவிடம், “மாமா, நேரமாகிக் கிட்டிருக்கே?” என்றதும், மாமா என்னை வெறித்துப் பார்த்தார்.

பின்னர், சம்பந்தியிடம், “பெரிய மனசு பண்ணுங்கோ! எல்லாம் சரி பண்ணிடறேன்!” என்றார்.

“ஏன்யா, அதையே சொல்லிகிட்டு? இப்ப நடக்க வேண்டியதுக்கு பாரு !”என்றார், அவர் காரமாக.

என்ன ஜென்மம் இவர்கள்?

இவர்களிடம், என் இந்து, எவ்வாறு வாழ்க்கை நடத்துவாள்?

கூடாது! இது கூடாது! இந்து என்றைக்கும் கலங்க கூடாது!

மாப்பிள்ளை கையை பிசைந்துகொண்டு, ஏதோ சொல்ல முற்பட்டு, தயங்கிக்கொண்டிருக்க, வேகமாக இந்துவின் அருகில் போனேன்.

இப்பொழுது, கூட்டத்தில் கேலிப் புன்னகைகளும், பொய்யான துடிப்புகளும், சற்று மேம்பட்டிருந்தாற்போல தோன்றியது.

மேளம், தொடர்ந்து வாசிக்கபட்டிருந்து, ஓரே கதம்ப ஓசை!

“இந்து! எழுந்து வா!” என்றேன்.

ஒரு விநாடி புரியாமல் விழித்து விட்டு, புரிந்ததும், திடுக்கிட்டாற் போல பார்வையால், “என்ன?” என்றாள்.

“ஒரு நிமிஷம் வா!” என்றதும், அவள் தோழியின் கையை விடுவித்து, தயக்கமாக எழுந்தாள்.

அநேகமாக அனைவர் பார்வையும் இப்பக்கம் படர, இந்துவை ஒரு மூலைக்கு அழைத்துச் சென்றேன்.

சம்பந்தி இப்பக்கம் முதுகைக் காட்டிக்கொண்டு, ‘முடியவே, முடியாது!’ என்பதாக, கைகைளை உயர்த்தி ஆட்டிக்கொண்டிருந்தார்.

இந்துவை அத்தனை நெருக்கத்திலும், அலங்காரத்திலும், மயக்கும் மல்லிகை மணத்திற்கிடையேயும், பார்த்ததில், ‘என்ன கேட்க வந்தேன்?’ என்பதே ஒரு விநாடி குழப்பமாகி, “இ..இ…ந்த பணவிஷயம் உனக்கு முன்னாடி தெரியுமா?” என்றேன்.

“தெ..தெரியும்!”

“பின்னே ஏன் தயார் செய்யலே?” என்றதும், அழத் தயாராக உதடுகள் கோண, ‘ஏன் கேட்டோம்!’ என்றாயிற்று.

அவசரமாக, “அழாதே! எல்லாம் பார்க்கிறாங்க! ஒனக்கு இந்த சம்பந்தத்துலே விருப்பம் தானே?” என்றேன்.

‘இல்லை!’ என்று சொல்லிவிடேன், பெண்ணே!

தலையாட்டினாள். “ம்!”

உன் அருமை கருதாது, ‘பணமே பிரதானம்’ என எண்ணும் இக்கூட்டத்தை, எப்படி விரும்புகிறாய் கண்மணி?

“மாப்பிள்ளை அவுங்க அப்பாவிடம் சொல்லக்கூடாதா?”

“அவரு சொன்னாலும், கேட்க மாட்டேங்கிறார்!”

நான் இரைச்சலாக, “நாய்கள்!” என்றதும் திடுக்கிட்டாள்.

“அவர் நல்லவர்! அவங்க அப்பாவிற்கு ரொம்ப பயப்படறார். வீட்டிற்கு தெரியாமல் இவரே பணம் குடுக்கறேன்னு சொன்னார்! நானும் அப்பாவும் தான் வேண்டா மின்னுட்டோம்! அப்பா கேட்டிருந்த எடத்துல, கடைசி நேரத்துல கெடைக்காம போயிடுச்சி! அதான், இவரும் இப்ப என்னை திட்றார்!” என்றார் மெலிதாக.

அங்கே இன்னும் குரல் உயர்ந்து கொண்டிருக்க, மேளம் ஒரு நிமிடத்திற்கு குறைவாக அமைதி பெற்று, யாரோ ஒருவரின் கட்டளையால், வாசிப்பை தொடர்ந்தது.

இந்த வழக்கின் நீதிபதி அந்தஸ்த்துக்கு, ஒவ்வொருவரும், போட்டியிட்டுக் கொண்டிருக்க…

“இந்த சம்பந்தத்தை யார் கொண்டு வந்தது?” என்றேன், எரிச்சலுடன்.

தயக்கமாக, “நான் தான்! இவர் என் காலேஜ் சீனியர்!”

காதில் தேள் கொட்டியது!

எனக்கு தெளிவாக புரிந்து விட்டது!

இங்கே புரட்சி வசனம் எதுவும் இல்லை!

நான் இந்துவின் முகத்தை ஆழ்ந்துப் பார்த்தேன்.

என் கண்களில் ஏமாற்றம் தெரிந்திருக்க கூடும்.

இந்து தலைகுனிந்து கண்ணீரை துடைத்துக்கொண்டாள்.

‘கடைசி சந்தர்ப்பமாக வாய்ப்பு கிட்டாதா?’ என்ற என் உள் மன எண்ணத்தின் பொருள் எனக்கு விளங்கிவிட்டது!

“சரி, போ, நான் சரி செய்யறேன்!” என்றேன், இயந்திரமாக.

போனேன். அவர்கள் இன்னும் கொஞ்சம் இடம் பெயர்ந்து, உரையாடலில் இடம் பெயராமல் இருந்தனர்.

“இவ்ளோவ் பேசறீயே? ஒன்ன இப்டி ஏமாத்னா, ஒன் பையன தாலி கட்ட விடுவியாய்யா?” என்று ஒரு நடுவரை நோக்கி சம்பந்தி எகிறிக்கொண்டிருக்க…

நான் கோபமாக, “போதும்! நிறுத்துங்க!” என்றதும், என் திசை திரும்பினார்.

“நான் குடுக்கறேன், பணத்தை! கட்ட சொல்லுங்க, தாலியை!” என்றதும், நம்பிக்கையுடன் பார்த்தார்.

சூட்கேஸை திறந்து, எடுத்து நீட்டினேன், கைகள் நடுங்க!

பிரச்சனை இவ்வளவு விரைவில் முடிவுக்கு வந்ததில், பார்வையாளர்கள் மத்தியில், ஏமாற்றம் இருந்ததாகப்பட்டது.

சம்பந்தி, என்னை மேலும் கீழும் பார்த்தவாறு, ‘ஏதோ போனால் போகிறது!’ என்பது போல, பெற்றுக்கொண்டார்.

மாமா என்னைப் பார்த்த பார்வையில், வெகு உயர்வான பாவங்கள் பல இருந்தன.

மாப்பிள்ளை அவமானகரமான நடையில் மனை நோக்கி போனான்.

அடுத்த சில நிமிடங்களில், எனது ஹீரோத்தன்மையின் பாதிப்பு, குழுமியிருந்தோர் மத்தியில் கொஞ்சம் குறைந்து, மணமக்கள் முக்கியத்துவம் பெற்று, பார்வைகள் அங்கு சென்றுவிட ….

‘இதெல்லாம், கனவா? நிஜமா?’ என்பதாக என்னை உலுக்கிக்கொண்டேன்.

பிரமை அல்ல! உண்மை! கண்முன் நிகழ்ந்து கொண்டிருக்கும் நிஜம்!

எனது செயலினால், சென்ற நொடி வரை, நான் அடைந்து கொண்டிருந்த, ஒரு வகையான உவகை, சட்டென அமிழ்ந்து போயிற்று! மனவெளியில் சூன்யம் தோன்றியது.

எனது மனப்படிவங்களில், ஏதேதோ மாறுதல்கள் ஏற்பட்டன!

திடீரென, ஏமாற்றமும், வியப்பும், பொறாமையும், என்னை ஆட்கொண்டன

விநாடியில் இரத்தம் முழுவதும் இழந்தாற்போல, பலம் குன்றிற்று!

மாமா… ‘ஆகவே ஆகாது!’ எண்றெண்ணிய நற்செயலை, நிறைவேற்றி வைத்துவிட்ட, இறைவனின் சந்திதானத்தில் நிற்கும் பக்தனை போல, பரவசமடைந்து காணப்பட்டார்!

இந்து, நன்றிப் பார்வையுடன் என்னை தேடுகிறாற் போல பட்டது.

மேளத்தின் ஒவ்வொரு அதிர்வும், என் இதயத்தின் மீது அறைந்து, எதிரொலிக்கப்படுவதாக துடித்தேன்.

நான், எனது கட்டுப்பாட்டிலிருந்து, கொஞ்சம் கொஞ்சமாக விடுபட்டுக்கொணடிருந்ததை, அதிர்ச்சியாக அறிந்து கொண்டு, அவசர அவசரமாக பதற்றத்துடன் வெளியேறத் தொடங்கினேன்.

யாரோ, என் தோளில் தட்டினாற் போல இருந்தது

யார்? ஏன்? என்று உணர்ந்து கொள்ள, அவகாசம் இல்லை!

யதேச்சையான ஒரு கோணத்தில், மாமா என்னை பார்த்துவிட்டிருக்ககூடும்!

என்னை நோக்கி, ஓட்டமும் நடையுமாக வந்தார்.

நான் விரைய, தனது கைகளால் எட்டி, என் கழுத்தருகே பற்றியவாறு, மூச்சிரைத்துக்கொண்டு…

“எ…எ… என்னப்பா போறே?”

எனக்கு, அவரை ஓங்கிய அறைய வேண்டும் போல, ஆத்திரம் வந்தது!

“இ…இ…இ… இல்ல மாமா! நான் போறேன்! என்னால தாங்க முடியலே! வார்த்தையை முடிக்கும் முன், அழுகை வந்துவிட, மாமாவும், வாய்பிளந்து அழ ஆரம்பித்தார்.

திணறலாக, “போ… போ… ங்க! யாராரோ பார்க்கறாங்க! வர்றாங்க! போங்க… போங்க!!”

“அழாதேப்பா! நம்ப கையில என்ன இருக்கு? அழாத! எல்லா ஆண்டவன் செயல்!” என்றார் முகம் பொத்திக் கொண்டே!

அவர் எதனை நினைத்து, ‘ஆண்டவன் செயல்!’ என்றார் என்று எனக்கு புரியவில்லை.

மாமாவை அழைக்க, யாரோ அருகில் வர, கைக்குட்டையை வாயில் புதைத்துக்கொண்டு, ஓட்டமாக வெளியேறினேன்

மாமா ஒரு முறை திரும்பி பார்த்துவிட்டுப் போனதாக, நான் அடக்க முடியாமல், கடைசியாக ஒரே ஒரு முறை, திரும்பிப் பார்த்தபோது தெரிந்தது.

‘கடவுளே! இந்த ஜென்மம் முழுவதும், நான் இந்துவை சந்திக்கும் சந்தர்ப்பம் தராமல் காத்து, காப்பாற்று!”

கம்பெனி முதலாளியின் இப்பணத்தை, ‘எப்படி உடனடியாக ஈடு செய்வது?’ என்னும் விஸ்வரூப கவலை மின்னலாய் தோன்றி மறைந்தது!

காற்றினால், கலைக்கப்பட்டு, முயல்கள் இப்போது, மறைந்து போய்விட்டிருந்தன.

வானம் முழுவதும் மேகங்கள் வெளிறி காணப்பட்டன.

– 1996 ஆண்டில், தினமணி தீபாவளி மலர் புத்தகத்தில் வெளியான கதை.

Print Friendly, PDF & Email

1 thought on “கலைந்த மேகம்!

  1. தற்போது திருமணங்கள் நிச்சயிக்கப்படுவது சொற்கத்தில் அல்ல மாறாக அழகு அந்தஸ்து பணம் போன்றவைகளால் மட்டுமே நிச்சயிக்கப்படுகிறது. இவற்றை மையக் கருத்தாக வைத்து கதையாசிரியர் அழகாக எழுதியுள்ளார். வாழ்த்துக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *