மதுரா போகும் வழி தனித்துவானது..சராசரிப் பெண்களைப் போல வீண் ஆசைகளுக்காகத் தன்னிலை மறந்த மயக்கமே ஒரு போதும் அவளுக்கு வந்ததில்லை, உலகம் எங்கே போகிறது? அது தலை கீழாக மாறினாலும் அவள் நிலை இது தான். இந்த நிலை தொடுதலின் உச்சக் கட்டமாக மனிதர்களை அறிந்து கொள்ள அது சந்தர்ப்பமாக அவள் கண் முன்னால் விடிந்த்து.
விடியலத் தேடி ஓடுகிறவளல்ல அவள். அது தானாகவே அவளின் காலடிக்கு வந்து சேரும். கொஞ்ச நாளாக முழங்கால் வலி அவளைப் பாடாய் படுத்துகிறது. வெறும் உடம்புக்குத் தானே என்று விட முடியவில்லை. தான் வேறு தன் சத்திய இருப்பு வேறு என்பதை யாரும் அவளுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கத் தேவையிலை. தானாகவே வந்த ஞானம்.அப்பாவின் போதனைக் கேட்டோ என்னவோ சின்ன வயதிலிருந்தே கொஞ்சம் ஞானக் கிறுக்குக்குத் தான் அவளின் பேச்சு வழக்கில் வரும்.
கல்யாணமான பின்பு இன்னும் கொஞ்சம் வேதாந்தியாகி விட்டாள் அப்படி வேதம் படிக்கவே அவளுக்கு அந்த வாழ்க்கை. எல்லாம் முடிந்து போனது இது வாழ்வின் இறுதிக் கட்டம் தலைக்கு மேலே குடை விரித்துக் காத்து நிற்கும் மரண தேவன். மரணம் எப்பவுமே வரலாம். வாழ்க்கை என்ற நீண்ட நெடுந் தொலைவுக் கனவு முடிய அது ஒரு பொன்னான சந்தர்ப்பம்
அவள் கிழக்கு வானம் வெளுக்க நின்று கொண்டிருந்தாள்.முழங்கால் வலி பிடுங்கி எடுத்தாலும் அதி காலை விடிந்தால் , கடைக்குப் போய் வருவாள். பக்கத்துக் கடை தான். நீண்டகாலப் பரிச்சயம் அவர்களோடு .அதுவும் சிங்களக் கடை. இதில் தமிழ் சிங்களம் எங்கே வந்த்து ?எல்லாம் இறை சக்தியே என்ற நினைவு மாறாமலே ,அவளின் அந்த வருகை இருக்கும். அவள் கால் நொண்டி வருவதைப் பார்த்து விட்டு ஒரு சமயம்அந்தக் கடைக்காரன் சொன்னார்.
“என்ரை மனுஷிக்கும் கொஞ்ச நாளாய் நடக்க முடியாமல் போச்சு சிகிச்சைக்கு ஒரு பிக்குவிடம் போய் வந்து இப்ப குணமாயிட்டுது”இதை அவர் சிங்களத்திலே சொல்ல பாண் வாங்க வந்திருந்த ஒரு முஸ்லீம் பெண்மணி அதை மொழிபெயர்த்து அவளுக்குக் கூறின போது அவள் கேட்டாள்.
‘எங்கை அந்தப் பிக்கு இருக்கிறார்?
அதை அவள் அவருக்குச் சொல்ல அவர் கூறினார்” நுககொடைக்குத் தான் போக வேணும் அதற்கு, ஓட்டோ வைத்திருக்கிற சுனிலைக் கேட்டால் அங்கை கூட்டிக் கொண்டு போவான் அங்கை போய் வர ஆயிரம் ரூபாய் பிடிக்கும்.
இந்தச் சுனிலின் ஓட்டோவில் தான் இப்போது அவள் அடிக்கடி போய் வருகிறாள்.பக்கத்துக் கடைக்குப் போய் வருவதென்றாலும் அவனைத் தான் கூப்பிடுவாள்.ஓட்டோவிலிருந்து சாமான் தூக்கி வைப்பது முதற் கொண்டு எல்லா உதவிகளும் செய்வான். அவன் அரைத் தமிழன் .சிங்கள மனுஷி .அவனின்
பிறப்பைப் பற்றி அவள் இது நாள் வரை கேட்டதில்லை. ஓர் ஊகம். மலை நாட்டுத் தமிழனாக இருக்கலாமென்று. எதுவாக இருந்தாலென்ன. அன்பு முக்கியம்.
மறு நாள் அதிகாலை ஆறரை மணிக்கு, சுனில் வந்து ஓட்டோவில் அவளை ஏற்றிக் கொண்டு அந்தப் பிக்குவிடம் போனான். நீண்ட தூரப் பயணமென்றாலும் வழி நெடுகக் காட்சிகள். வேலைக்குப் போகும் பெண்கள் வெறும் காட்சி பொம்மைகளாகவே தோன்றுவதாகப் பட்டது. இந்தக் காட்சி அழகை அவள் மறந்து வெகு நாளாகிறது. அழகென்பது அவளைப் பொறுத்த வரை இரண்டாம் பட்சம் தான். இப்போது இன்னும் வயதாகி விட்ட நிலையில் இதுவெல்லாம் புறம் போக்கு நிழலாகவே அவள் மனதோடு ஒட்டாமல் வெறும் கனவாகவே, தோன்றியது. எல்லாம் கடந்து போகிற ஞாபகங்கள் தாம் .
பிக்குவின் இடம் வந்து விட்டது. முழுவதும் சிங்களப் பிரதேசம் தான். எனினும் அவரின் வாழ்விடமே ஒரு தவச் சாலை போல இருக்கிறது. முன்னால் அழகான விகாரை. சுற்றிலும் அகண்ட விஸ்தாரமான காணியே பசுஞ் சோலையாக இருக்கிறது. அதைத் தாண்டி வந்தால், அவளும் அவள் போன்றவர்களும் வந்து அமர்வதற்கு, பெரிய ஹால். சுற்றிலும் இருக்கைகள் .சூழவும் நாற்காலிகளோடு வாங்குகளும் போட்டிருந்தார்கள்.
நல்ல வேளை1 நாற்காலிகளில் பாதி ஜனம் தான் கூடியிருந்த்து. அவள் இருக்கையில் அமர்ந்து கொண்டு, சுற்று முற்றும் பார்த்தாள். தூரத்தில் தடி விளக்குமாறோடு சிலர் தெரிந்தார்காள். அதில் சுனிலும் ஒருவனாகத் தோன்றினான். அவனுக்கு ஆயிரம் ரூபாய் கூலி கிடைக்க இருக்கிற மகிழ்ச்சியில், இழுத்துப் போட்டுக் கொண்டு செய்கிறான்.
அந்தப் பெரிய ஹாலில் சுவர் முழுவதும், புத்தரின் மோன நிஷ்டை படங்கள். அவற்றைப் பார்க்கிற போது, உள்ளார்ந்த உயிர் வெளியில், தானும் மிதப்பது போல் அவளுக்கு உணர்வு தட்டிற்று. சரியாக எட்டு மணிகுத் தான் பிக்கு வருவாராம். வரும் போது சுனில் சொன்னான்.அவர் எப்படியிருப்பாரோ? இன மத நல்லிணக்கம் கொண்ட ஒருவர் தானோ அவரும்?இதை பற்றி நினைக்கையில் உடம்பெல்லாம் புல்லரித்தது அவளுக்கு. அடிக்கடி இந்த வார்த்தைகள் பேப்பரில் வரும். அரசியல்வாதிகளுக்கே இது தாரமந்திரம். அதைச் சொன்னால் தான் வாக்குப் பெட்டி நிரம்பும். பிக்கு அவர்களுக்கு இது தேவையில்லாமல் இருக்கலாம்.துறவியாக இருந்தே இது ஒரு தவமாக வந்து அவருக்கு வாய்த்திருக்க்க் கூடும்.
அதையும் அவள் பார்த்து விட இருந்தாள். அவள் வந்து சேர்ந்த சிறிது நேரத்துக்குள் ஹால் நிரம்பி வழிந்தது..எல்லாம் சிங்கள முகங்கள் தாம். வந்திருந்த அநேக பெண்கள்,பாவாடை சட்டையுடனேயே தோன்றினார்கள். அவள் அதில் அவர்கள் முகங்களில் அழகு இருக்கிறதா என்று தேடினாள். .யாரும் அழகாய் படாதது ஒரு மாறுபடான செய்தியாய் அவளைக் குழம்பிற்று
முன்னொரு காலத்தில் அவளுக்கு வரன் பார்த்த சமயம், கொழும்பில் வேலை பார்க்கும் ஒருவன் வந்து கிட்டிய போது, யாரோ சொன்னார்களாம். கொழும்பிலே கொண்டு போய் உலாத்த முக்கியமாக அழகு வேணுமாம். ஆகவே அப்படிக் கூட்டிக் கொண்டு போக, அவள் சரி வராது என்று அவன் சொன்னதை நினைக்க, இப்போது இவர்களைப் பார்க்கையில் சிரிப்புத் தான் வந்தது. இவர்களும் கொழும்பில் தானே இருகிறார்கள். . இதையெல்லாம் பார்த்த பிறகுமா அவனிடத்தில்,இந்தச் சொல்லம்பு எறிந்து தாக்குமளவுக்கு இப்படியொரு ஞான சூனியம். அதை மறந்து விடுவம். பிக்குவின் முக தரிசனமானால் ஒரு வேளை எனக்கு இதையெல்லாம் புறம் தள்ளி மறந்து விடுமளவுக்கு, விமோசனம் கிடைக்கவும் கூடும்.
அதையும் பார்த்து விடுவோமே.. சரியாக எட்டு மணிக்கெல்லாம் தலைக்கு மேலே இருந்த இருந்த மின் விசிறி சுழல்வதைப் பார்த்து, விட்டு, எல்லோர் முகத்திலும் சந்தோஷக் களை கூடியது. பிக்கு வரப் போகிறார் என்பதற்கு அது தான் அறிகுறி என்று வரும் போதே, சுனில் சொல்லியிருந்ததால், அவளுக்கும் கொஞ்சம் பதற்றம் தான். அதிலும் முரண்பாட்டு அவஸ்தை சிங்கள தமிழ் வேறுபாடு கடந்த சம நிலை எளிதில் வராது என்பது அவளுக்கு ஒரு அறிவு மயக்கத்தை கொடுத்தது. அதையும் மீறி வாழ்ந்து வளர்ந்த சூழலில், தனது உண்மையான இருப்புக்கு வர அவளுக்கு வெகு நேரம் பிடித்த்து.
அவள் தன்னைச் சுதாரித்துக் கொண்ட போது, பிக்கு இருக்கும் அறையின் நுழை வாசல் கதவு திறக்கிற சத்தம் கேட்ட்து. இதோ! பிக்கு வந்து விட்டார்1 முதல் வரிசையில் அமர்ந்திருந்த பெண், முதலாவதாக எழுந்து போனதைத் தொடர்ந்து, கியூ விரைவாக நகரத் தொடங்கியது.. அறை வாசலினூடாக பிக்குவின் பின் புறம் மட்டுமே கண்களுக்கு வெளிச்சமானது, காவி உடை தரித்த பிக்கு. அவரின் முகம் இன்னும் பிடிபடவில்லை,
அவள் முறை வந்து எழுந்து போன போது, இனம் புரியாத நடுக்கம் கவ்வியது, பக்கத்தில் ஒரு மொழிபெயர்ப்பாளனாகச் சுனிலும் வந்து சேர்ந்திருந்தான்..உள்ளே ஏறி அமர வசதியான நீண்ட இருக்கை. அவள் அதில் ஏறி அமர்ந்து காலை நீட்டிக் காண்பித்த போது, உதய சூரியனாகப் பிக்குவின் முகம் தெரிந்த்து, இது வரை காணாத அதீத களையுடன் அவர் தோன்றினார். இளம் வயது பிக்கு தானெனினும் துறவு ஞானம் பழுத்த சம நிலையில் ஒளி பிரகாசமாகக் கடவுள் தரிசனத்தையே உளமறிய நேரில் காண்பது போல் அவளுக்குப் புல்லரித்தது .அவர் கையால் சிகிச்சை பெற நான் எவ்வளவோ கொடுத்து வைத்திருக்க வேண்டுமென்று மிகவும் ஆச்சரியத்துடன் அவள் நினைவு கூர்ந்தாள்.
அவரின் மேலான கருணை ததும்பும் அழகு முக தரிசனத்துக்கு முன்னால் இந்த உலகம் முழுவதும் மண்டியிட்டு வணங்கினாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. அவள் பார்த்துக் கொண்டிருக்க உண்மையில் அது தான் நடந்தது சிகிச்சை முடித்து போகும் போது அனைவரும் அவரை விழுந்து வணங்கி விட்டே போனார்கள். இந்த வணக்கம் அவளுக்கும் உரியதாயிற்று அவர் மருந்து தடவி பாண்டேஜ் கட்டின துரித வேகத்தைப் பார்த்து அவள் மலைத்துப் போனாள். அதுவும் நானொரு தமிழிச்சி என்ற பேதம் கூட மறந்து போய் அவர் விசுபரூபமெடுத்து உயர்ந்து நிற்கிற சிகர நிலைக்கு முன்னால் கரம் கூப்பி வணங்குவதைத் தவிர வேறு வழி தெரியவில்லை அவளுக்கு..சிகிச்சை முடிந்து முழங்காலில் பெரிய கட்டோடு அவள் குனிந்து வண்ங்கிய அழகு நெஞ்சைத் தொட்ட்து. தமிழ் சிங்களம் விட்டுப் போன அது ஒரு சம நிலை அதற்கு சாட்சி புருஷனாக அவரே இருந்தார்.
ஓட்டோவில் வீடு திரும்பி வரும் போது சுனில் கேட்டான்
‘எப்பிடி நல்லமே ?
“நீ ஒன்றைக் கேட்கிறியா இரண்டையுமா?
அதென்ன இரண்டு கணக்கு?“
“ஒன்று பிக்கு மற்றது சிகிச்சை, இரண்டும் தான் என்று சொல்ல வந்தேன் .மருந்து கட்டின பிறகு, கொஞ்சம் நோ குறைஞ்ச மாதிரி இருக்கு. அதிலும் பிக்கு தான் இன்னும் விசேஷம். கடவுளையே நேரில் கண்ட மாதிரி நான் பூரிச்சுப் போய் வாறன். பார்க்கப் போனால் இது வெறும் உடம்புக்கு மட்டுமல்ல, ஒரு சம நிலை வைத்தியமே அங்கை நடந்திருக்கு .மனசை சரி செய்ய “ என்றாள் மிகவும் பெருமிதமாகத் தலை நிமிர்ந்து. அவள் அதைச் சுனிலைப் பார்த்துச் சொன்ன போது, அவன் தூங்கி வழிந்து கொண்டிருந்தான். அவன் கொண்ட கவனம் வெறும் பாதை மீது தான் என்று புரிந்த்து. சாமானியர்களால் புரிந்து கொள்ளக் கூடிய விடயமா அது? அவளுக்குப் புரிந்ததென்றால் நிச்சயம் அவள் கடவுளின் வார்ப்புத் தான். அப்படி வெற்றி வாகை சூடிக் கழுத்தில் மாலையோடு வீடு திரும்பும் அவளை வரவேற்று வாழ்த்துச் சொல்ல, அந்த வழி நெடுகிலும் வானத்திலிருந்து தேவர்களே வந்து நின்று மலர் தூவி ஆசீர்வதிக்கிற மாதிரி , அவளுக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை .அது தன்னைப் போன்றவர்களுக்கு மட்டும் தான் என்று நினைக்கையில், கூடவே கவலையில் மனம் கனத்தது. .இந்தக் குறைபாட்டினை நிவர்த்த்தி செய்யப், பிக்கு போன்ற ஒருவரே இன்னும் வேண்டும் என்று, தீராத மனவருத்ததுடன் அவள் பெருமூச்செறிந்து நினைவு கூர்ந்தாள்.
– ஜீவநதி – கார்த்திகை மாத இதழ்