ஒருவனும் ஒருத்தியும்

0
கதையாசிரியர்:
கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 5, 2023
பார்வையிட்டோர்: 3,020 
 
 

(1951ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கதைமூலம்: லூயி கய்ல்லூ, பிரான்ஸ்

மச்சுப் படிக்கட்டு முற்றத்தில் இறங்கியது; அங்கே, அதாவது கடைசிப்படிக்கட்டில் உட்கார்ந்து கொண்டு, அன்று காலை முழுவதும் அவள் அழுது கொண்டிருந்தாள். அவள் ரொம்பவும் நெட்டை, ஒற்றை நாடி; முப்பத்தி ஐந்து அல்லது நாற்பது வயது இருக்கும். நீண்டு தொங்கும் குதிரை மூஞ்சி; அவள் தேகமே கோளாறு பிடித்த உடம்பாகத் தென்பட்டது. அவள் வாய் விட்டுத்தேம்பித்தேம்பி அழுதாள்; மனத்துக்குள்ளாகவே முனகினாள்; சுற்றிலுமுள்ளவர்களை வைகிற மாதிரி. அண்டை வீட்டுக்காரர்கள் பல தடவை அவள் பக்கம் போய் புத்தி சொல்லிப் பார்த்தார்கள். ‘வீட்டுக்குள்ளே போ; இப்படி அமக்களம் பண்ணாதே; இல்லாட்டா, இப்படி அழுது கொண்டிருந்தால், உனக்குத் தலைவலி வரும்; அதனாலே என்ன ஆகப் போகிறது?’ இந்த வார்த்தைகள் எல்லாம் அவள் காதில் பட்டதாகத் தெரியவில்லை. ‘இந்தக் கிழட்டுப் பிணங்களுக்கு வேறு வேலை இல்லை? என் இஷ்டப்படி செய்வேன்; இவர்களுக்கென்ன; எல்லாத்தையும் ஒரேயடியாகத் தொலைச்சு முழுகினாத் தேவலை’ என்று நினைத்தாள்.

சில சமயங்களில் தலையைக் கிராதியில் சாய்த்துக் கொண்டாள்; தூக்கம் பிடிக்காத பிரயாணி தூங்க முயலுவது மாதிரி. சில சமயம் முகத்தைக் கை வைத்து மூடிக் கொண்டு மனங்குமுறி அழுதாள்; ஓடைத் தண்ணீர் மாதிரி விரல் வழியாகக் கண்ணீர் பீறிட்டுக் கொண்டு வந்தது. சில சமயம் வாய் விட்டு ஏங்கினாள். சமயா சமயங்களில் மௌனப் பேய் பிடித்த மாதிரி வெறிச்சோடிய கண்களுடன் உட்கார்ந்திருந்தாள். பிறகு கன்னத்தை உள்ளங்கையில் ஏந்தி முழங்கையை முழங்காலின் மேல் ஊன்றி பிடித்து வைத்த சிலை மாதிரி வெகு நேரம் உட் கார்ந்திருந்தாள். அவர் ஆபீசிலிருந்து வரும் போது அவரைத் திக்பிரமையடிக்க வைக்க இந்த மாதிரி உட்கார்ந்திருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டாள். அவள் தன் மனத்திற்குள் நினைத்து நினைத்துப்பார்த்துக் கொண்ட வஞ்சத்தின் ஒரு அம்சமே இது. சண்டை இந்த மாதிரி திரும்பிய நிமிஷத்திலேயே இந்த நினைப்பு அவளுக்கு உதித்தது. எப்படியானாலும், ஞாபக சக்தியைக் கொஞ்சம் அவள் உபயோகித்தால் போதும். மாடிப்படிக்கட்டில் வந்து உட்கார்ந்து கொள்வதும் இது தான் முதல் தடவை என்பதல்ல. இது அவனுக்கு வெறி யூட்டியது; அது தான் அவள் விரும்பியதும். எப்படி இருந்தாலும் வேறு மாதிரியாக நடந்து கொள்ள அவளுக்கு வழியில்லை. ஆமாம். விட்டு விட்டு ஓடிப் போய் விடுவதாகப் பய முறுத்துவார்; நன்றாகப் பிய்த்து வாங்கி விடுவதாகப் பய முறுத்தவும் கூடும். கோபாவேசத்தில் வெளி வரும் பய முறுத்தல்களின்படி யெல்லாம் செய்ய மாட்டார் என்பது நிச்சயமாகத் தெரியும். அவர் என்ன செய்தாலும் விட்டு விட்டு ஓடிப் போகமாட்டார்; அடிக்கவே மாட்டார்; நித்தியம், நித்தியம் இவர்கள் இப்படித்தான்; இதே வழியில் தான் போய்க் கொண்டிருப்பார்கள். ஒரு வேளை அது தான் அவளை இப்படித் தறிகெட்டுக் கொதிக்கும்படி செய்திருக்கலாம்.

மாடிப்படி வழியாகப் போகிறவர்கள், வருகிறவர்கள் அவள் அருகாமையில் நெருங்குகிறபோது ஆச்சரியத்துடனோ அனுதாபத்துடனோ தோளை குலுக்கிக் கொண்டு சென்றார்கள். அவள் அவர்களைப் பார்த்ததாகக் கூடக்காட்டிக்கொள்ளவில்லை. வழி விட்டு விலகுவது போலப்பாவனை கூடச்செய்ய வில்லை. யாராவது அவள் பக்கம் விரைவாக மடமடவென்று சென்றால்,போகும்போது கைகளைமிதித்து விட்டால், அப்படியேதான், பிடித்து வைத்த சிலைமாதிரி தான் உட்கார்ந்திருப்பாள். ஒருவேளை, அவர்கள் அப்படி மிதிக்கக்கூடாதா என்று கூட அவள் விரும்பியிருக் கக் கூடும். மீண்டும் யாரோ ஒருவர் ‘எத்தினி நேரமாச்சு, மத்தியானமாச்சே; உள்ளே போகப்படாதா?’ என்றார். அவள் பதில் சொல்லவில்லை. ஏன் பதில் சொல்ல வேண்டும்? பதில் சொல்லிக் கொண்டிருக்கவா அவள் அங்கே வந்து உட்கார்ந்து கொண்டிருக்கிறாள். தன் நிலை பற்றி வருத்தப்பட்டுக் கொண்டிருக்க அங்கே உட்கார்ந்து கொண்டிருக்கிறாளா? அப்படி அல்ல. அவர்களுடைய இரக்கத்தில் அவளுக்குப் பொருளே இல்லை. அவள் அங்கே உட்கார்ந்த காரணம் எல்லாரும் பார்க்கவேண்டும் என்பதுதான்; அவளை எந்த நிலைக்குக் கொண்டு வந்து விட் டார் என்று அவர்கள் தெரிந்து கொள்ள; அவளை எவ்வ ளவு படுத்துகிறார் என்று எல்லோரும் பார்க்க; எல்லோ ரும் பார்த்து விட்டார்கள், அவர்களுக்கும் தெரியும் என் பதை அவர் தெரிந்து கொள்ள. அதுதான் அவள் விரும்பிய தெல்லாம்; அதாவது அந்த நிமிஷத்தில் விரும்பிய தெல்லாம். அதுதான் அவளுடைய யோ சனையில் முதல் அம்சம். அவர்கள் என்ன வார்த்தை. சொன்னாலும் அனுதாபப்பட்டோ இரக்கப்பட்டோ எந்த வார்த்தை சொன்னாலும் அவள் தேம்பித் தேம்பி அழுதாள்; அந்தத் தலையைச் சாய்க்க இன்னும் ஒரு நல்ல இடம் பார்த்தாள்; தலைக்கு என்ன சீவல் வேண்டிக்கிடக்கிறது?

சண்டை அதிகாலையில் ஆரம்பமாயிற்று. காலை எட்டு மணி முதலே அவள் அந்தப் படிக்கட்டில் உட்கார்ந்து கொண்டிருக்கிறாள். அந்த இடத்தை விட்டுப் போக வேண்டும் என்று தூண்ட அவளுக்கு வேறு நினைப்பே எழவில்லை. மணியும் பகல் பன்னிரண்டு அடிததது. இன்னும் சில நிமிஷங்களில் அவர் வீட்டுக்குத் திரும்ப லாச்சு. என்ன சொல்லுவார்; முந்தி மாதிரி, ஒரு வேளை ஏறெடுத்துக்கூடப் பார்க்காமலே மாடிக்குச் செல்வார். ஆனால் வீட்டுக்குள்ளே போய் தனியாக எவ்வளவு நேரந் தான் உட்கார்ந்து கொண்டிருப்பார். போன தடவை பதினைந்து நிமிஷம் கூட அவருக்கு அங்கே இருப்புக் கொள்ள வில்லை. அவளைத் தேடிக் கொண்டு வந்தார். இன்றைக்கும் அதே மாதிரி தான் நடக்கப் போகிறது.

அவர் கொதித்துக் கொண்டு கதவைப் படால் என்று சாத்திக் கொண்டு, ‘இந்த மாதிரிப் பைத்தியக் காரத்தனத்தை இனி மேல் சகிக்க முடியாது, இது தான் கடைசித் தடவை, கடோசித் தடவை’ என்று கருவிக் கொண்டு போனார். ஆனால் ஆபீசில் கோபம் ஆறியிருக் கும்; நினைத்துப் பார்க்கப்புத்தி தெளிந்திருக்கும்.

முற்றத்துக் கதவு திறந்தது; அவருடைய காலடிச் சத்தம் அவளுக்குத் தெரிந்தது. சதை கொஞ்சங்கூட ஆடவில்லை. பிடித்து வைத்த சிலை மாதிரி. அவள் உணர்வு முழுவதும் எத்தனையோ முறை கேட்டுப் பழ கிய அந்தக் காலடிச் சத்தத்தில் கவிந்து நிலைபெற்றது; தோற்றத்தில் புற உலக விஷயங்களுக்குச் செவிடாகி, உணர்வற்றிருப்பது போலத்தென்பட்டாள். சத்தம் நெருங் கியது; சீக்கிரத்தில அவர் கண்ணில் படுவார். இருந்தா லும் சலனமற்று இருந்தாள்; தலை சிறிது கிராதிக் கம்பி யில் சாய்ந்தபடி, கண்களை அரை வாட்டத்திற்கு மூடிக் காத்திருந்தாள்.

ஏறக்குறைய அவள்மீது விழுந்து விட்டார்; திடுக் கிட்டு நடுங்கிப் பின் புறமாகப் பாய்ந்தார்; பார்வைக்கு அப்பால் மறைந்தார். எவ்வளவு தெளிவாகத்தான் அவருக்குத் தெரிந்திருந்தாலும், அவருக்கு எதிர் பார்க்கத் தெரியாது. இந்த முறையும் எதிர்பாராத சமயத்தில் அவரைச் சிக்க வைத்தாள்.

அதிர்ச்சியில் மேல் மூச்சு வாங்கியது சிறிது நிதானப்பட்டது; க்ஷணம் சிறிது கண்களை மூடினார். அவர் கொஞ்சம் கனத்த சரீரி; நல்ல ‘கருக்காக’ மீசையும் உண்டு. வயது ஏறக்குறைய ஐம்பது. உடை ஏதோ ஒரு வற்றல் – குமாஸ்தா ரகத்தில். தலையில் பௌலர் தொப்பி அணிந்திருந்தார்.

‘இங்கே என்னபண்றே?’ என்று முணு முணுத்தார்; குரல் வரட்சிக் கோபத்தைக் காட்டவில்லை. அவள் பதில் சொல்லவில்லை.

அவருக்கு அச்சம் பிடித்தாட்டியது; இதயத்து ரத்தத்தை வரள வைத்தது. குடையைப் பிடித்திருந்த கை நடுங்கியது. எல்லை கடந்த தலை குனிவு, அவமானம், தன்மீது ஏற்பட்ட ஒரு துச்சமான நினைவு அவன்மீது படர் ந்துகவிந்தது. அவன்உணர்வில் தயை இடம்பெறவில்லை. அசையாமல் நடையருகில் நின்றான். வெளிப்பக்கமிருந்து வெளிச்சம் விழுந்ததினால், முகத்தின் பாவனை அவளுக் குத் தெரியவில்லை. குடை தூக்கிய கருத்த கனத்த உருவமாகவே அவளுக்குத் தென்பட்டது.

அவன் மறுபடியும் மெதுவாகக் கேட்டான்: ‘என்ன அங்கே பண்றே?’

அவன் சொல்லுவது ஏதோ ஒரு குழந்தையிடம் பேசுவது போல இருந்தது.

அவள் ஏறெடுத்துப் பார்த்தாள்; பார்வை பதிய வில்லை; பார்வை அவனையும் அவனைத் தாண்டியும் ஊடுருவிப் பாய்ந்தது. அந்த லயிக்காத கண்களின் ஈட்டிக் குத்து அவன் கண்களை மறுபடியும் திருப்பிக் கொண்டு கைகளை உதறிக்கொள்ளச் செய்தது.

அவனது கைக்குடை ஓட்டை உடசல் இரும்பு மாதிரி லொட பட சத்தத்துடன் கீழே விழுந்துருண்டது.

‘இங்கே எத்தினி நேரமாத்தான் உட்கார்ந்திருக்கே? வெகு நேரமாகத்தான் உட்கார்ந்திருக்க வேண்டும். புழுக்கச்சி முண்டெ’ என்று மனசில் எண்ணிக்கொண்டான், தோளைக் குலுக்கிக் கொண்டான்.

அப்படியா… ஓய்ச்சல் ஒழிவு கிடையா தா…… காலம் பர பூராவும் ….அவனும் அன்னிக்குக் காத்தாலே போட்டுண்ட சண்டெயப்பத்தி நெனச்சுத்தான் பார்த்தான்…. தன் மேலும் கொஞ்சம் பழிதான் என்று வருத்தப்பட்டுக் கொண்டான். ஆனால் அது தீந்து போயிருக்கும்னு அவன்…

‘நீ அங்கேயே தான் உக்காந்திருக்கப் போரியா?’

இதுக்கும் பதில் இல்லை.

குரல், கோபம் அவனை ஆட்படுத்துகிறது என்பதைக் காட்டியது; ஜாக்கிரதையாகத் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டான். ஏனென்றால் அந்த ஆவேசம் வந்து சென்று விட்டால் அப்புறப் அடித்துப் போட்ட மாதிரி அசதி.

‘சரி வா…மேலே போவோம் என்ன அசட்டுத் தனம்’ என்று முணு முணுத்தான்.

‘அசடு’ என்ற அந்த வார்த்தை மறுபடியும் கண் ணீட்டி கொண்டு குத்துப்படும்படி செய்வித்தது. அவ ளிடமிருந்து நிசாரமான ஏக்கம் பிறந்தது. ‘என்ன பிழைப்பு?’ ‘என்னத்திற்கு இந்தப் பிழைப்பு?’ இந்தச் சிக்கலை அடியோடு தீர்த்துக்கட்டி விட உறுதி கொண்டவள் போல அவனை ஊடுறுவிப் பார்த்தாள். ‘இந்த அடம் ஆகாது’ என்பது போலத் தலையை அசைத்தாள்.

‘சரி சரி உனக்கென்ன தான் வந்திருக்கு?’

இப்படிப் பேசவேண்டும் என்று அவன் நினைக்க வில்லை; ஆனால் நடந்தது நடந்தாச்சு; இனிமேல் உள்ளது; இதுவோ எதுவோ.

அவன் மச்சுப்படி ஏற ஆரம்பித்தான்; உடனே சடக் கென்று திரும்பினான்.

அவள் திடுக்கிட்டாள்.

‘குழந்தெ’

அவன் குனிந்து கொண்டு கேட்டான். அவன் சுவாசம் அவள் தலையில் அலையாடியது. குழந்தெ?

அதெப்பத்தி அவ கவலையே படலே. குழந்தையை மறந்து விட்டு இருப்பதும் அவள் போட்ட ‘பிளானில்’ ஒரு அம்சம். ஆனா அது மனசை இவ்வளவு படுத்தும் என்று அவள் நினைக்கவில்லை.

‘அவளெ என்ன செஞ்சே?’

அடிக்கப் போகிறார் என்று நினைத்தாள். ஆசைப் பட்டிருந்தாலும் அவளால் பதில் சொல்ல முடிந்திருக்காது. அந்தக் குழந்தை..அது மனசை இவ்வளவு வேதனை பண்ணும்னு அவ நெனக்கலெ.

‘வாயைத் திறந்து பதில் சொல்லப் போறியா இல்லியா?’

கோபம் கை மீறியது. உறுதியோடு மறுபடியும் இறங்கி வந்து அவள் முன் நின்று கொண்டான். அவள் தலையைக் கீழே போட்டுக்கொண்டாள்.

‘நீயோ, ஒம் மூஞ்சியோ’

கையிலிருந்த குடையை சுவரில் சாத்தினான். தொங்கப் போட்டு மறைத்து வைத்துக் கொண்டிருந்த அவளுடைய முகத்தைத் தடவிக்கொடுக்கக் குருட்டுத்தனமாகக் கைகளை நீட்டினான்.

‘ஏண்டி என்னை இப்படிச் சித்ரவதை செய்து கொல்லறே; இதெ எப்பத்தான் விட்டுத் தொலைக்கப் போறே…அட கர்மமே’ என்று மெதுவாக நயந்தான்.

அவனுக்கு மன உளைச்சல் சொல்ல முடியாதிருந்தது. அன்றொரு நாள் அவள் வீட்டை விட்டு ஓடிப்போன விவகாரம் அவன் ஞாபகத்துக்கு வந்தது. அவளைத் தேடாத இடம் எல்லாம் தேடி அலைந்த அலைச்சல்.. ஆற்றிலோ கிணற்றிலோ விழுந்து தொலைத்திருப்பாளோ என்று நினைத்துக்கொண்டு..

‘வாயைத் தொறந்து பேசேண்டியம்மா…’

அவளுடைய நாடியைத் தாங்கினான். அவள் உதறீத் தளளாமல் பேசாமலிருந்தாள். அவளுடைய முக வாய்க் கட்டையைத் தாங்கி முகத்தை நிமிர்த்தினான். அவனுக்கு மனசு இளகி வெள்ளப் பிரவாகமாக எடுத்தது.

‘ஏன் இப்பிடி இருக்கே?’ என்று கேட்டான். அவள் சற்று நிமிர்ந்தாள். உதடுகள் அழுகை முட்டப் பட பட வென்று துடித்தன. அவள் சற்றுக் குனிந்தாள்

‘எனக்குத் தெரியாது’ என்று அவள் சொன்னதாகவா அவன் காதுக்குக் கேட்டது?

‘என்ன சொன்னே?’

‘ஒண்ணுமில்லே’

திடீரென்று தன்மைகள் யாவும் மாறின.

‘ஒன்றுமில்லையா…? நிஜமா? பின்னையேன்? பின் ஏன் இப்படி அழும்பு பண்றே. இன்னிக்குக் காத்தாலே இருந்து என்ன செஞ்சுண்டிருக்கே தெரியுமா? குழந்தையை என்ன பண்ணினே?’

கோபாக்கிறாந்தனாக அவன் உறுமிக் கொண்டு அவ ளுடைய தோளைப் பிடித்துக் குலுக்கினான். எதிர்பாராத சமயத்தில் இந்தக் கோபப் பேய் அவனையே இப்படி ஒரு உலுப்பு உலுப்பி விடும்.

இந்த கர்ஜனைகள், வருத்தங்கள், இறக்கத்திலிருந்து நயத் தன்மை அதிலிருந்து மிருகத்தன்மை யாவும் அவர்களுடைய சண்டைகளின் பரிவாரங்கள்; அவை அடித்துப் போட்ட மாதிரி, சோர்ந்து கிடக்கப் பண்ணி விடும்.

அவளுக்கு வலிக்கப் பண்ணி விட்டான் ; அவள் எழுந்து தூர விலகிப் போய் நின்று, ‘அட மிருகமே’ என்றாள்.

மாடியில் எங்கோ ஒரு தட்டிலிருந்து குழந்தை தங்களிடம் இருப்பதாக ஒரு குரல் கொடுத்தது.

‘குழந்தை எங்களோடு இருக்கிறது. நீங்க கவலைப்பட வேண்டாம்: எங்களோடே சாப்பிடும்’ என்றது அந்தக் குரல்.

மனநிம்மதி பிறந்தும் அவனுக்கு உடனே பதில் சொல்ல முடியவில்லை. அண்டை வீட்டுக்காரர்கள் எல்லாம் கூடி நின்று கேட்கிறார்கள், பார்க்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள…

‘கேட்டியா?’ என்று கத்தினான்.

‘எனக்குச் செவியடச்சுப் போகல்லே’

அவள் சாத்தியிருந்த குடையை சூத்திரப்பாவை இயங்குவது போல கையில் எடுத்துக்கொண்டாள்.

‘சனியன்கள் எல்லாம் ஒரே முழுக்காத் தொலைஞ்சாத் தேவலை: சகிக்க முடியலே’

அவள் திரும்பினாள். முகத்தில் அழுகைக் குறி தெரிந்தது. ஆனால் இமையில் பொட்டு ஜலம் இல்லை.

‘சகிக்கலே, என்ன சகிக்கலே?’ என்றாள் அவள். அவளுடையமண்டைவெடித்து விடும்போலிருந்தது. அவனும் மௌன விரதம் பூண்டவன் போலப் பேசாதிருந்தான்.

‘சொல்றதைச் சொல்லுங்களேன், அப்பறம்?’

‘எனக்கு இந்தச் சண்டை போடரது சகிக்கலே’

‘அவ்வளவுதானா?’

‘ஆமாம்’

‘அப்படியான சண்டைக்கெல்லாம் நான் தான் காரணமாக்கும்?’ என்றாள் அவள்.

‘இல்லை: அந்தக் கறிக்கடைக்காரப் பயல்’

அவனுடைய பதில் அவனுக்கே கோமாளித்தனமாக இருந்தது. வாய் விட்டுச் சிரிக்க் வேண்டும் போலிருந்தது. ஆனால் அந்த விருப்பம் உடனே அகன்றது. ஏனென்றால் அவள், ‘என்கஷ்டம் உங்களுக்கு எங்கே தெரியப் போறது?’ என்றாள்.

அவள் தான் அப்படியே இல்லையே; அது தானே அவளுக்குப் பிரமாதமாகத் தெரிந்தது. இருந்தாலும்…

‘அதற்குக் காரணமில்லியே?’

அவள் ஏங்கினாள், ‘தெரியும் தெரியும்’ என்று முணு முணுத்தாள்.

அவர்களிடை மெளனம் திரையிட்டது. அமைதி நீடித்தது. நீடித்தது……அவர்கள் மேல் மாடியில் நின்று கேட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதை அவள் மறந்து விட்டாள்: தனக்கு ரொம்புப் பசிக்கிறது, அடுப்பில் பூனை, படுத்துக் கிடக்கிறது என்பதையும் அவள் மறந்து விட்டாள். அப்படி இருந்தும் சண்டை என்ற மோஹலாகிரி. அவளை மடியைப் பிடித்து இழுத்து விட்டது. அவளும் வலைக்குள் சிக்கினாள்: விழுகிறோம் என்று தெரிந்து கொண்டே சிக்கினாள். தன் கஷ்டத்தையும் தன் பாசத்தையும் எடுத்துப் பேச ஆரம்பித்தாள். அவன் மனத்தில் நிச்சயம் ஏற்படுத்த ஆசைப்பட்டாள்.

‘இதெல்லாம் எவ்வளவு அசட்டுத்தனம்: இத்தினி நேரம் வீணாச்சுன்னு உனக்குத் தெரியலியா. இந்த வைபவம் இல்லாமலேயே வாழ்வு சிக்கிக் கிடக்கலையா? ஏன்? ஏன்? கொஞ்சம் சொல்லேன்?’

அவள் தோளில் கையைப் போட்டுத் தன் புறமாக இழுத்தான்.

‘எல்லாம் ஓஞ்சுதா?’

அவள் தன்னுடைய கன்னத்தை அவன் கன்னத்தின் மீது வைத்துக்கொண்டு கண்ணீர்விட்டாள்.

‘இந்தா பாரு-பாரு அதெல்லாம் ஓஞ்சுதே’

அமைதியாக பாசங்கலந்து இருந்தது அவர்கள் நிலை. இந்த வார்த்தைகளை அவனிடமிருந்து வெல்லுவது தான் அவளது ஏக நோக்கம் போலிருந்தது. எல்லாம் அடியோடு மறந்தாச்சு.

‘ஹென்றி…’

அவன் அவளுடைய கன்னத்தைத் தடவிக் கொடுத்தான்.

‘வா போவோம்: இங்கேயே குடியிருக்கிறதா?’

அவள் அவனைப் பின் தொடர்ந்தாள்.

‘கொழந்தையைக் கூட்டிண்டு வந்துட்டா’

‘அவள் அங்கேயே இருக்கறதுதான் நல்லது’ என்றாள் அவள்.

உள்ளே எல்லாம் ஒரே அலங்கோலமாகக் கிடந்தது. விரித்த படுக்கை சுருட்டாமல் கிடந்தது. ஜன்னல் கதவும் சாத்திக் கிடந்தது. கும்மிருட்டின் நாற்றம் குமைந்தது.

தொப்பியைக் கழற்றி எங்குவைப்பது என்று சிறிது தடமாடி, நாற்காலிமீது குடைக்குப்பக்கத்தில் வைத்தான்.

அந்த அறையில் நடு மத்தியில் வந்து கைகளைப் புடலங்காய் மாதிரி தொங்கப் போட்டுக்கொண்டு நிற்பதைக் கண்டு, ‘அப்புறம்?’ என்றான்.

அவள் அழப் போகும் குழந்தை மாதிரி உதட்டைப் பிதுக்கினாள். நெற்றிப் புருவத்தைத் தடவிக்கொண்டாள். இன்னும் ஒரு ஆவர்த்தமா…?

‘உனக்குத் தலை வலிக்கிறதோ?’

‘உச்சி வெடிக்கிறாப்பிலே’

கேட்டு அவன் அதிசயப்பட்டு விடவில்லை. இப்படி ஏன் இவள் அழும்பு பண்ணி இதையெல்லாம் இழுத்து விட்டுக் கொள்ளவேண்டும்?

‘சரி: அதெல்லாம் மறந்தாச்சா?’

‘மறந்தாச்சே’ என்று மன நிறைவுடன் சொன்னாள்.

‘ஏன் இப்படிப் பண்ணினே? ஏன்?’ என்று பரிவோடு கேட்டான்.

‘நீங்கள் ஏன் இப்படிப் பண்ணினியள்?’

‘நானா?’

‘நாம ரெண்டு பேரு இருக்கமே? குத்தமெல்லாம் ஒரு பக்கமா…’ என்றாள் அவள்.

‘இதுதான் ரெண்டு பேர் குத்தமுமில்லியே’

‘அதனாலெதான்?’ என்றாள் அவள்.

‘என்ன? – இப்படியிருக்கா?’

‘ஒரு வேளை அப்படித்தான் வச்சுக்கோங்களே?”

‘எப்படியானாலும் மனசிலே குரோதமில்லியே?’

‘ஆமாம் இல்லியே’ என்று ஆவலுடன் பதிலளித்தாள் அவள்.

‘காலம்பர எப்படி ஆரம்பிச்சுதுன்னு ஒனக்கு ஞாபக மிருக்கோ. எனக்கில்லை. என்னமோ வார்த்தை: அதுக்கென்ன இப்போ: எனக்கு இப்ப மறந்தே போச்சு: அது முக்கியமில்லே: இன்னும் நமக்கு எத்தினி கஷ்டம்…’

அவனுடைய தர்க்கத்-தூணியிலுள்ள அஸ்திரங்களில் அது ஒன்று.

‘அதைத்தான் மறந்துடுங்களேன்’ என்றாள் அவள்.

அவர்கள் இருவரும் அணைத்திருந்த கைகளை விலக்கினர். நாற்காலியில் உட்கார்ந்து கொண்டான். பதில் சொல்ல ஆரம்பித்தான். கோபம் உள்ளிருந்து குமுற ஆரம்பித்தது.

‘நல்லாருக்கு நல்லாருக்கு: இண்ணக்கி காலம்பர பேப்பர்லே பாக்கலியோ?’

‘இந்தக் கூத்திலே பேப்பர்தான் மனசிலே இருக்கு மாக்கும்.’

என்ன கேள்வி !

‘சரி என்ன? அதுதான், அதைத்தான் சொன்னேன்?’

‘தெரியுமே…’

அவள் கர்ஜிக்க ஆரம்பித்தாள்:

‘சரி சரி தெரிந்து கொண்டா: இதெல்லாம் தெரிஞ்சுண்டா ஏன் இப்படி மாடிப்படியிலே உட்கார்ந்துண்டு அழுது வழிஞ்சு இன்னும் என்ன அழும்பு பண்ணினியோ? எல்லாப் பயகளும் நம்ம மண்டையைப் போட்டுண்டு உருட்டரப்போ?’

‘சும்மா தான் இருங்களேன்’

அவனுக்கே வாயடைத்துப் போச்சு. அதையெல்லாம் பற்றி யோசித்து அவளை ஏறிட்டுப் பார்க்கும் பொழுது அவளை வெட்டிப் போடலாமா என்று வந்தது. பெண்டாட்டியா? கொல்ல வந்த எமனாட்டமா? அப்பா…

‘இன்னிக்கி ஆகாரம் கீகாரம் எதுவும் உண்டா?’ என்று பையிலிருந்து கடிகாரத்தை உறுவினான்.

தலையை அசைத்துக் கொண்டு ‘மணி ஜாமத்துக்கு மேலாச்சு.’

‘கொஞ்சம் முட்டையைப் பண்ணி வைக்கிறேன். அது போருமா?’

‘ஏதோ போடு’

அவள் சமையலறைக்குள் மறைந்தாள். அவன் படுக்கையில் உடம்பைக் கிடத்திக்கொண்டு காத்திருந் தான். இத்தினிக்கும்… இவளை இப்படிப் பண்ணி வைக்கக் காலையிலே என்னத்தெச் சொல்லி வைச்சோம்…

நினைத்து நினைத்துப் பார்த்தான்: பிடிபடவில்லை. அவள் சமையலறையில் முட்டைகளை அடித்துக் கடையும் சப்தம் கேட்கிறது.

‘மார்ஸெலா?”

‘என்ன?’ அவள் வேலையைச் சிறிது நிறுத்தினாள்.

‘இன்னிக்கி காலம்பர நான் ஒங்கிட்ட என்ன வார்த்தையைச் சொன்னேன்…’

அவள் சிறிது நேரம் மௌனமாக இருந்து விட்டுப் பிறகு…

‘ஒண்ணுமில்லெ’

‘என்னமோ சொன்னனே. கொஞ்சம் சொல் லேண்டியம்மா?’

‘அதனாலெ என்ன ஆகப்போகிறது?’

‘தெரிஞ்சாத் தேவலை’ என்றான் ஒருநிமிஷம் கழித்து.

‘பிரமாதமாக ஒன்றுமில்லெ ‘

அவன் அப்புறமும் காத்திருந்தான். அவள் ஏன் சொல்ல விரும்பவில்லை?

அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. தவிரவும் அவ னுக்கும் ஞாபகத்துக்கு வரமாட்டேன் என்கிறது.

‘மார்ஸெலா உனக்கும் ஞாபகமில்லியோடியம்மா?’

‘நன்னா ஞாபகமிருக்கு’

‘அப்பொச் சொல்லேன்’

‘ஏனோ: மறுபடியும் பழையபடி தொசம் கட்டவா: ரொம்ப அசட்டுத் தனமாப்போச்சு’

அவள் சொல்லவே மாட்டாள் என்பதை அவன் புரிந்து கொண்டான்.

‘சரி உன் இஷ்டம் : இருந்தாலும்’ என்று முணு முணுத்தான்.

‘ஆமாம்.’ இப்படி ஓய்வதுதான் சரி.

– தெய்வம் கொடுத்த வரம், தமிழில்: புதுமைப்பித்தன், முதற் பதிப்பு: செப்டம்பர் 1951, ஸ்டார் பிரசுரம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *