தேவை ஒரு மாற்றம்!

0
தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 1, 2013
பார்வையிட்டோர்: 9,221 
 

“”சரி… நீ போயிட்டு வா. நான் இங்கியே பெரியம்மாவோட இருக்கேன். சாயங்காலம், நீ ஆபீஸ் முடிஞ்சு வரும்போது, அப்படியே என்னை வீட்டுக்கு கூட்டிட்டு போயிடு.”
“”சரிம்மா… நான் வர்றேன். லிப்டில் பாத்துப்போ. சாயங்காலம் பாப்போம்.”
என் மகன் நாராயணன், என்னை என் ஓரகத்தி வீட்டில், விட்டு விட்டு, அவசரம் அவசரமாக காரை கிளப்பிக் கொண்டே, தன்னுடைய வாட்ச்சை திருப்பித் திருப்பி பார்த்துக் கொண்டே ஓடினான்.
நாராயணனும், மருமகள் கோதையும் காலையில், 9:00 மணிக்கு முன், வேலைக்குக் கிளம்பி விடுகின்றனர். அதற்குள், குழந்தைகள் இருவரையும், ஓடு ஓடென்று ஸ்கூலுக்கு விரட்டி விடுகின்றனர். தினமும் காலையில், காலில் கஞ்சிதான். இவர்கள் அவசரத்தைப் பார்த்தாலே எனக்கு, பி.பி., எகிறி விடுகிறது. ஏற்கனவே வயது, 70 ஆகிவிட்டது. இன்னும் எத்தனை நாளைக்கு இதையெல்லாம் பார்த்துக் கொண்டு இருக்க வேண்டுமோ!
இந்த அரக்கப் பறக்கலிலிருந்து, ஒருநாள் விடுபட்டு இருக்கலாம் என்று தான், நாராயணனை, தி.நகரில் இருக்கும் அவனுடைய பெரியம்மா வீட்டில் என்னை விட்டு விட்டு போகச் சொன்னேன். என் மைத்துனர் போய்ச் சேர்ந்த பின், அவளும் இந்த, 75 வயதில் ஒண்டிக்கட்டையாய்த்தானே இருந்து வருகிறாள்.
தேவை ஒரு மாற்றம்!லிப்டிலிருந்து, முதல்மாடியில் மெதுவாக வெளியே வந்து, அதை ஒட்டியிருந்த அவளது பிளாட்டில் பெல் அடித்தேன்.
கம்பி கேட்டை பூட்டி வைத்து விட்டு, உள்ளே அண்ணி படுத்திருந்தது, வெளியில் இருந்தே தெரிந்தது. மெதுவாக, ஒவ்வொரு காலாய் விந்தி விந்தி வந்து, கேட்டில் தொங்கிய பூட்டைத் தடவித் திறந்தாள் அண்ணி. வயது என்னை விட ஏறிப் போயிருந்ததால், கண், கால் எல்லாமே அவளுக்கு, “ஸ்ட்ரைக்’ செய்து கொண்டிருந்தன.
“”என்ன அண்ணி… உடம்பு கிடம்பு சரியில்லியா? படுத்துகிட்டு இருக்கிறவளை தொந்தரவு செய்துவிட்டேன் போல இருக்கு.”
“”அதெல்லாம் ஒண்ணுமில்லே ஜெயம். வா… இங்கே வந்து எனக்கெதிர்லே ஒக்காரு. எப்பயாவது படுத்தா ஒடம்பு சரியில்லன்னு சொல்லலாம். எப்போதுமே படுத்துக்கிட்டிருந்தா… இதே தானே எனக்கு வேலை. எழுந்திருக்கிறது, ஒக்காறது, நடக்கறது, படுக்கிறதுன்னு, பொழுதை கழிச்சாகணுமே… இன்னும் எத்தனை நாளுக்கோ?” அலுத்துக் கொண்டாள் அண்ணி.
என்னுடைய பிரச்னையை எல்லாம் அண்ணியைத் தவிர, வேறு யாரிடம் சொல்லிக் கொள்வது? அதற்காகத்தானே வந்தேன்.
“”என்னடி ஜெயம்… எப்படி இருக்கே? எல்லாம் எப்படி போய்கிட்டுயிருக்கு?”
அண்ணியே கேட்டாள். “”என்னத்தை சொல்றது அண்ணி… வீட்டுல எப்பப் பார்த்தாலும், ஒரே சப்தம் தான். நாராயணனும், கோதையும் ஒண்ணும் இல்லாததுக்கெல்லாம் விவாதம் பண்றதும், குழந்தைகளை படி படின்னு துரத்திக்கிட்டே இருக்கிறதும், இதே வேலையாய் போச்சு தினமும். கொஞ்ச நேரம் அமைதியா இருக்கலாம்ன்னா முடியலே.
“”சும்மா உட்கார்ந்துகிட்டு இருக்கலாம்னாலும் விடமாட்டா. இந்த பாழாப் போற பொன்னாங்கன்னிக் கீரை மாதிரி, எதையாவது கொண்டு வந்து முன்னாடி வெச்சு, “அம்மா, இதை ஆய்ஞ்சு கொடுங்க…’ என்பாள். சின்னச் சின்ன வேலை ஏதாவது வந்துகிட்டே இருக்கும்.
“”வீட்டில யாராவது, எப்பப் பார்த்தாலும் வந்துகிட்டு, போய்கிட்டு தான் இருப்பாங்க. கோதையோட கலீக்ஸ், ஆபீஸ் பத்தி வம்பளக்க வருவாங்க! நாராயணனோட நண்பர்களும், ஒருநாள் விட்டு, ஒரு நாள் வந்துடுவாங்க. இந்த பேரப் பசங்க பண்ற ரகளைய, கேக்கவே வேண்டாம். கேரம், செஸ்ன்னு எப்பப் பார்த்தாலும், கூட்டம் சேர்த்துக்கிட்டு, ஒரே கும்மாளம் தான்.
“”எனக்கு எங்கியாவது ஓடிப் போயிடலாம்ன்னு இருக்கு அண்ணி… எங்க போறதுன்னு தான் தெரியலே. அதான், நாராயணனிடம், இன்னிக்கு ஒரு நாள் என்னை இங்கே கொண்டு வந்து விட்டுட்டுப் போப்பான்னு சொன்னேன்.”
நான் மூச்சுவிட ஓய்ந்தபோது, சிரித்தாள் அண்ணி.
அவளுடைய சிரிப்பில்… ஒரு பெரிய சோகம் இழையோடியிருந்ததை நான் கவனிக்கத் தவறவில்லை.
“”வாஸ்தவந்தாண்டி ஜெயம்… நீ சொல்ற மாதிரி, இங்கே யாருமே இல்லே. நான் மட்டும்தான். பசங்க எல்லாம், அமெரிக்கா, ஆஸ்திரேலியான்னு குடும்பத்தோட போயிட்டாங்க. இங்கே, ஒரே அமைதியாகத்தான் இருக்கு.
“”ஆனா, ஒண்ணு சொல்றேண்டி ஜெயம்… இந்த அமைதியை, ஒரு நாள் வேணும்ன்னா ரசிக்கலாம் நீ. தினம் தினம் தனிக்கட்டையா இங்க உக்காந்துகிட்டு, மோட்டு வளையப் பாத்துக்கிட்டு, ஒவ்வொரு நிமிடமும் நகந்துதா நகந்துதான்னு என்னையே கேட்டுகிட்டு இருக்கிறது, நிஜமாகவே நரகம் டீ…
“”செய்யறேன்னாலும் எனக்கு வேலை குடுக்கறதுக்கு யாரும் இல்லே. ஒத்தாசைக்கும் ஒருத்தரும் இல்லை; பேச்சு துணையும் கிடையாது.
“”குழந்தைகள் வெளையாடறாங்கன்னு சொல்றியே… அதையெல்லாம் பார்த்துகிட்டு, உக்காந்துகிட்டு இருக்கிறது எவ்வளவு பெரிய வரம்டீ… நீ நிஜமாகவே குடுத்து வெச்சவடீ ஜெயம்… என்னை மாதிரி, தனியா ஒரு நாள் இங்கே உக்காந்து பாரு நீ… உனக்கு பைத்தியமே பிடிச்சிடும்.”
அண்ணி, பொல பொலவென்று கொட்டித் தள்ளிவிட்டாள். யாரிடம் சொல்வது என்று, எவ்வளவு நாள் காத்திருந்தாளோ!
அன்றைய பொழுது முழுவதும், அழமாட்டாக் குறையாக, இதே ராகத்தை தான், திரும்பத் திரும்ப பாடிக் கொண்டிருந்தாள் அண்ணி. மாலையில், நாராயணன், என்னை வீட்டுக்கு கூட்டிப் போக வந்தபோது, வாசலிலேயே அவனுடைய வருகையை எதிர்பார்த்துக் காத்திருந்தேன்.
அண்ணியும், என்னுடன் கிளம்பி விட்டாள்.

– ஜி.பி. சதுர்புஜன் (டிசம்பர் 2012)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *