ஏனோ தெய்வம் சதி செய்தது!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 2, 2021
பார்வையிட்டோர்: 5,588 
 
 

சிவக்குமார் சிங்கப்பூர் வேலை நிமித்தம் வந்தபோது சாதாரண தினக்கூலி வேலை தான். ஊரில் நல்ல படிப்பு படித்திருந்தும் அதற்கான தகுந்த வேலை இரண்டு வருடம் தேடியலைந்து கிடைக்காததாலும், உற்றார் உறவினர் நண்பர்களின் வசை சொல்லை கேட்க சகிக்க முடியாமல்…., குடும்ப கடன் தொல்லையாலும்…., திருமணம் செய்து கொள்வதற்கு முன் சம்பாதிக்க வேண்டும் என்கிற வெறியாலும்…., இப்படி கூலி வேலைக்கு ஒப்புக்கொண்டு வந்தாகிவிட்டது.

ஆனால் அதிர்ஷ்டவசமாக அவன் ஆங்கில திறமை மற்றும் வேலையில் துரிதமாக, காசையும் நேரத்தையும் மிச்சப்படுத்தும்படியாக அவன் சுயசிந்தனையோடு வேலை செய்வதை பார்த்த அவன் மேலாளர் அவனை பாதுகாப்பு துறையில் படிக்க ஏற்பாடு செய்ய, அதை நல்விதமாக படித்ததும், சம்பள உயர்வு, நல்ல மேற்பார்வையாளர் பதவி, என வாழ்க்கையில் வசந்தம் வீசியது.

மூன்று வருடத்தில் வீட்டு கடனையடைத்து ஒரு சகோதரிக்கும் நல்விதமாக கல்யாணமும் செய்தாகிவிட்டது.

வேலையிடத்து பாதுகாப்பு துறையில் மேலும் படித்து இன்னும் பதவி உயர சம்பளமும் உயர ஆறாவது வருடத்தில் திருமணம் செய்து கொண்டான்.

ஆனால் மனைவியை சிங்கப்பூருக்கு அழைத்துவந்து குடும்பம் நடத்த முடியாத சூழ்நிலையில், இன்னும் நல்ல பதவி நல்ல சம்பளத்தில் வேறு வேலையை தேட, அதுவும் ஆறு மாதத்தில் கிடைத்தது.

புது கம்பெனியில் இரண்டு வருடம் கடினமாக உழைத்தபின் அவனை மெச்சும்படியாக, சிங்கப்பூரில் நிரந்தரவாசியாக கம்பெனி சிபாரிசு செய்ததில்… அந்த தகுதி கிடைத்ததில்…அதுவும் தன் மனைவிக்கும் சேர்த்து கிடைத்ததில், வாழ்வில் பொற்காலம் பிறந்துவிட்ட குதூகலத்தில் துள்ளினான் சிவக்குமார்.

உடனேயே மனைவி சுமதியை வரவழைத்து சந்தோஷமாக வாழலானான். இரண்டு வருடத்தில் சுமதி கர்ப்பமானாள். ஆறாவது கர்ப்ப மாதத்தில் அவளை தன் பெற்றோர் வீட்டிற்கு அனுப்பி வைத்தான்.

இந்தியாவிற்கு சென்ற சுமதி மருத்துவரை பார்க்கச் சென்றபோது தான் ஒரு அதிர்ச்சி காத்திருந்தது…

“சுமதி….உனக்கு ஆண் குழந்தைதான்…ஆணா பெண்ணான்னு சொல்ல தடையிருந்தாலும் சொல்றேன்….ஏன்னா…மனசை தேத்திக்கம்மா சுமதி….அந்த குழந்தைக்கு இரண்டு கண்ணுமே சுத்தமா வளரவில்லை….குழியா தெரியுது ஸ்கேனிங்ல…..இதப் பார்…” டாக்டர் சொல்லிமுடிக்கும் முன்னரே சுமதி மயக்கமடைந்தாள்.

இந்த செய்தியை உடனேயே சிவக்குமாருக்கு தெரியப்படுத்தியதும், அவன் தன் தலையில் இடிவிழுந்தது போல் உணர்ந்தான்….அதுவும் கோயிலில் சுமதிக்காக, பிறக்கப்போகும் குழந்தைக்காக வேண்டிக் கொண்டிருக்கும் போது கேட்டதில், சினிமாவில் காண்பிப்பதுபோல் கோயிலே இப்படியும் அப்படியும் ஆடுவதுபோல் உணர்ந்து…. ஓவென்று அழ ஆரம்பித்தான். கூடவந்திருந்த சகஊழிய நண்பன் அவனை அடக்குவதற்கு பெரும்பாடுபட்டான்.

அதன்பின் சுமதி யார்யார் என்னென்ன பரிகாரம் செய்ய வேண்டும், எந்தெந்த கோயில்களுக்கு சென்று நேர்த்திக்கடன் செலுத்த வேண்டும் என்று அத்தனையும் கண்ணீர் மல்க மனமுருக செய்தாள். வளைகாப்பு வைபவம் ஏனேதானோவென்று நடக்க, வந்தவர்கள் ‘வயிற்றிலிருக்கும் குழந்தைக்காகவாவது நன்றாக சாப்பிட்டு தைரியமாக இரு’ என்று அழுதவண்ணம் அறிவுரைகூறிச் சென்றனர்.

வேலைப்பளு காரணமாக வளைகாப்புக்கு வர இயலாத நிலையில், சிங்கப்பூரில் இருக்கும் அனைத்து கோயில்களுக்கும் செல்ல நினைத்த சமயம்…கோவிட்-19 கிருமி பெருந்தொற்று காரணமாக ‘என்னை…எங்களை பார்க்க வர வேண்டாம்!’ என்று அந்த கடவுள்களே ஏதோ கோபத்தில் மூழ்கியிருப்பது போல் வாசற் கதவுகளை தாழிட்டுக் கொண்டனர்!!.

தியானத்தின் மூலம் மண்றாடினான் நாள்தோறும்…..பசி வரவில்லை….தூக்கம் வரவில்லை…வேலையிடத்தில் கவனம் வரவில்லை…..அவன் வேதனையை அறிந்த மேலாளர் அவனை பயணக்கட்டுப்பாடுகள்பற்றி அறிவிப்பு வந்ததும் தாமதிக்காமல் அவனை இந்தியாவிற்கு அனுப்பிவைத்தார்.

சோகமே உருவாக தெரிந்த சுமதியை… குழந்தையை நல்லவிதமாக பெற்றுடுக்க இந்த நேரத்தில் உடலுறவு சிலமுறை அவசியம் என்று பெற்றோர் சொல்லுக்கு….அழுது புலம்பிய வண்ணம் அவர்கள் உடலுறவு கொண்டதை…. எந்த கதையிலும் சினிமாவிலும் பார்த்திருக்க முடியாது!

ஒரு மாதம் கழித்து சுகப்பிரசவத்தில் ‘கண்ணன்’ என ஏற்கெனவே பெயரை முடிவு செய்திருந்த அந்த கண்ணன்… என்ன மாயலீலை செய்வதற்காகவோ… பிறந்து…. அழுது…. அனைவரையும் அழ வைத்தான்.

“கண்ணா…கண்ணா” என்று சிவக்குமார் ஓலமிட்டு குழியாக இருந்த கண்களை அவன் முத்தமாறிப் பொழிந்த போது கண்ணன் ஏனோ முதல்முறையாக புன்னகைத்தது…..

ஆனால் அந்த புன்னகையில்… ‘ஏனோ தெய்வம் சதி செய்தது?’ என்பது தான் யாருக்கும் புரியவில்லை….. பெற்றோர் கள் அறிந்தும் எந்த பாவமும் செய்யவில்லை….இந்த பிஞ்சுக் குழந்தை?…அது என்ன பாவம் செய்தது?….. யாருக்கும் ஒன்றும் புரியவில்லை!

இன்னின்ன பாவத்திற்கு… ஜென்மஜென்மமாய் செய்த பாவங்களுக்கு இதுதான் தண்டனை என்று அந்த ஆண்டவன் ஒரு லிஸ்ட் கொடுத்தால்… மனித ஜென்மம் நல்ல புரிதலோடு… நிம்மதியாய்… சந்தோஷமாய் வாழ வழிவகுக்குமே?…சதி செய்து விளையாடுவது தான் நம்மைப் படைத்த ஆண்டவனின் முழுமையான திட்டமோ??!!….

“ஒன்னுமே புரியல உலகத்துல…என்னமோ நடக்குது…மர்மமா இருக்குது…” சிவக்குமாருக்கு இந்த சினிமா பாடல் பிடித்து போய்…பித்துபிடித்துபோய் பாடலானான்.

பின்னர் ஒரு நாள் தன் உயர்நிலைப்பள்ளி விஞ்ஞான ஆசிரியரை யதேச்சையாக பார்த்தபோது, கண்ணனைப்பற்றி அறிந்தபின் அவர் இந்த இரு விஞ்ஞான விதிகளை கூறிய போது தான் சிவக்குமாருக்கு பொறிதட்டியது….

‘ஆற்றல் அழிவின்மை விதி – ஆற்றலை ஆக்கவோ அழிக்கவோ முடியாது; ஆற்றல் ஒன்று ஒரு வகையில் மறையுமாயின் அதுவே பிறிதொரு வகையில் சேதமின்றி வெளித்தோன்றும்!’ (இது முற்பிறவி, ஜென்மங்களுக்கு சான்று)

‘நியூட்டனின் மூன்றாவது விசை விதி – ஒவ்வொரு விசைக்கும் அதற்கு சமமான எதிர்விசை உண்டு’ (இது கர்மவினைக்கு சான்று)

“நாம எவ்வளவோ பாவங்களை, அறிஞ்சும் அறியாமலும்…. காலம்காலமாய்….. சொல்லப்போனா…… ஜென்மஜென்மமா பண்ணிக்கிட்டு இருக்கோம். எல்லாமே நம்ம மனசாட்சிக்கு தெரியும்….. அது ஒரு சி சி டி வி (CCTV) மாதிரி….. நம்ம படைச்ச அந்த ஆண்டவனோட அது இணைஞ்சு இருக்கு…… நாம செஞ்ச பாவ புண்ணியங்களை கணக்கு பார்த்து…. எப்போ எப்படி கணக்கை தீர்க்கணும்னு அதுவே திட்டம் போட்டு செயல்படுத்துது. இதை மனித குலம் தீர்க்கமா புரிஞ்சுக்கிட்டு வாழறக் காலம் வரைக்கும்….. நம்ம வாழ்க்கை ஒரு புரியாத புதிர் மாதிரி தான் இருக்கும்.” விஞ்ஞான ஆசிரியர் விவரமாக சொன்னார்.

அவரின் இரு கைகளையும் பற்றிக்கொண்டு நெற்றியில் வைத்து வணங்கிய சிவக்குமார், “ஏனோ தெய்வம் சதி செய்ததுன்னு தான் குழம்பி….. அந்த ஆண்டவனையே சந்தேகப்பட்டு வெறுத்துப் போய் இருந்தேன்….. என் கண்ணை திறந்துவிட்டுடீங்க….ரொம்போ நன்றி சார்!” என்று கூறி, வாழக்கையில் முழுத்தெளிவு பெற்றவனாக நிமிர்ந்து நடந்தான்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *