”பாபு ! கார் கண்ணாடியை கொஞ்சம் இறக்குப்பா!”
”இதோ மேடம்…..!!!”
ஆழ்வார் பேட்டை சிக்னலில் பைரவியின் ஹோண்டா நின்று கொண்டிருந்தது!
ஒரு சின்னப் பெண் பரட்டைத் தலையுடன் , கையை நீட்டிக்கொண்டு வண்டுக்கண்களை உருட்டி
‘உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல ‘ என்று கானக்குயில் சுசிலாவை மிஞ்சும் குரலில் பாடிக் கொண்டே அருகில் வந்தாள் !
பைரவி பர்ஸில் இருந்து நூறு ரூபாய் நோட்டை எடுத்து அவள் கையில் வைத்து அவள் தலையைத் தொட்டு ஆசீர்வாதம் செய்தாள் !
”சே! தள்ளிப் போ குட்டி ! சிக்னல்ல காருக்கு நடுவில நசுங்கி சாகணமின்னு காலைலியே நேந்துகிட்டு வந்திட்டயா ? இன்னொரு தடவை இங்க உன்னப் பாத்தேன் ……”
அந்த டிராஃபிக் கான்ஸ்டபிள் பைரவியிடம் திரும்பி
”படிச்சவங்க நீங்களே கெடுக்கிறீங்களே …!!!! என்று தொடர்ந்தவன் அவளை அடையாளம் கண்டு கொண்டதும்
”சாரி மேடம்…. ! நீங்க பைரவி தானே ! இவங்கெல்லாம் சுத்த ஃப்ராட் மேடம்.. ! ஏமாறாதீங்க !!“
என்று சல்யூட் அடித்து விட்டு நகர்ந்து விட்டான்!
பாபு கார் கண்ணாடியைத் தூக்கி விட்டான் !
பைரவியின் கண்ணில் நீர் தளும்பி விழவா வேண்டாமா என்று யோசித்துக் கொண்டிருந்தது !!
பைரவி ! சங்கீத வட்டாரத்தில் அறிமுகப் படுத்த அவசியமில்லாத பெயர் !
பாரதீய சங்கீத சபாவில் ஒரு பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்டு திரும்பி வந்து கொண்டிருக்கிறாள்!
மனசெல்லாம் அந்த சின்னப் பெண் ! அவளது குயில் குரல் !
பாபுவுக்கு கொஞ்சம் புரிந்தது !
” அம்மா ! நீங்க அந்த பொண்ணுக்கு ரொம்பத்தான் இடம் குடுத்திட்டீங்க ! எப்படி கண்டு பிடிச்சு வந்தா பாருங்க ! ”
” விடு பாபு ! அந்த பொண்ணைப் பத்தி பேச வேண்டாமே ப்ளீஸ் !!! “
பாபுவுக்கு தெரியும் , பைரவியின் பதிலுக்கு காரணம் !
அவளுக்கு மதுமதியின் ஞாபகம் வந்திருக்கும் !!
”சாரி மேடம்…..! “
வீடு வருவதற்குள் அவள் மனதில் ஏதேதோ சிந்தனைகள் ! பழைய நினைவுகள் !
மனசு கடிவாளம் இல்லாத குதிரை மாதிரி தறிகெட்டு ஓடியது !
சண்டிக்குதிரை போல் முன்னாலும் பின்னாலும் வெறி பிடித்தது போல் அடங்காமல் திமிறியது !
***
இன்னும் பத்து நிமிடத்தில் கச்சேரி ஆரம்பம் ! எளிமையான தோற்றம் ! புன்சிரிப்பும் , தன்னம்பிக்கையும் தான் அவள் அணியும் நகைகள் !
பைரவியின் பக்கத்தில் புதிதாக பத்து வயது சிறுமி ! கூட்டத்தில் சிறு சலசலப்பு !
” பைரவியோட பொண்ணு போலிருக்கே ”
” இவ்வளவு பெரிய பொண்ணா ? அவளுக்கு ஒரு சிஷ்யை இருக்காளாமே ! அவளாயிருக்கும் !
” பைரவி மாதிரியே இருக்கா பாரு ! பொண்ணுதான் !”
சபா செக்ரட்டரி எல்லா யூகங்களுக்கும் முற்றுப் புள்ளி வைத்தார் .
” நம்முடைய சபா பாக்கியம் செய்திருக்கிறது ! கலைமாமணி பைரவியுடன் அவரது பெண் மதுமதி முதல் முறையாக மேடை ஏறுகிறார் !
நானும் உங்களைப் போலவே அவர்களின் பாட்டை கேட்க ஆவலாய் இருக்கிறேன் ! ”
சுருக்கமாய் முடித்துக் கொண்டார் !
‘ பதசரோஜா ‘ ….
பட்டணம் சுப்ரமணிய ஐயரின் நவராகமாலிகா வர்ணம் …..
கேதாரம் … சங்கராபரணம் … கல்யாணி.. என்று தாயும் மகளும் ஆரம்பத்திலேயே ரசிகர்களை கட்டிப் போட்டு விட்டார்கள் !
பாரதியாரின் ‘ சின்னஞ் சிறு கிளி ‘ மதுமதியின் குயில் குரலில் கொஞ்சியது !
பத்து வயது சிறுமியின் அபார ஞானம் அனைவரையும் வியக்க வைத்தது!
பைரவியின் வாழ்க்கையில் மறக்க முடியாத நாளாய் அது அமைந்தது!
***
பள்ளியில் சுதந்திர தினம் ! எட்டு வயசு பைரவிதான் அசெம்ளியில் பாடுகிறாள் !
எண்ணை தடவி படிய வாரிய பின்னல் சாட்டையாய் முன்னால் தொங்க , கதர் பாவாடையும் சட்டையுமாய் , கணீரென்று
” செந்தமிழ் நாடென்னும் போதினிலே ” என்று பாடும் போது எல்லோரும் மூச்சிலும் சக்தி பிறந்தது போல் நிச்சயம் தோன்றும் !!
பைரவியின் கண் முன்னால் மாற்றி மாற்றி மதுமதியும் , சற்று முன் பார்த்த பரட்டை தலை சிறுமியும் , எண்ணை தடவி வாரிய பைரவியும் மாறி மாறி வந்து போனார்கள் !
***
தலையே வெடித்து விடும் போல் இருந்தது ! வீடு வந்ததும் …‘ அப்பாடா ‘ என்றிருந்தது பைரவிக்கு !!!
பாபுவுக்கு தெரியும் பைரவி மனது படும் பாடு !
இருபது வருஷமாச்சு அவன் அம்மா கையைப் பிடித்துக் கொண்டு ஐந்து வயது சிறுவனாய் அந்த வீட்டிற்குள் நுழைந்து !!
சமையல்காரி மகனாகவே அவனை யாரும் நடத்தியதில்லை….
மதுமதியும் அவன் வயசுதான் !
அம்மா என்று கூப்பிட்டு பழகிவிட்டான் !
”தல வலிக்குதாம்மா? ! அம்மாவை சூடா ஒரு காப்பி போடச் சொல்லிட்டு போறேன் !! அம்மா!“ என்று கூப்பிட்டுக் கொண்டு சமையலறைக்குப் போனான் !
பைரவியின் அப்பா புகழ்பெற்ற சமஸ்க்ருத பண்டிதர் பத்மநாபன் ! திருவனந்தபுரம் பல்கலைக்கழகத்தில் இருக்கும் ஓலைச்சுவடி ஆராய்ச்சி மையத்தின் தலைமை பொறுப்பு !!
அம்மா பள்ளி ஆசிரியர்….
இரண்டு குடும்பத்திலும் இல்லாத சங்கீத ஞானம் பைரவிக்கு எப்படி வந்திருக்கும்!
மூன்று வயதிலேயே பாட்டைக் கேட்டால் தாளம் போட்டு ரசிப்பாள் !!
விளையாட்டாய் பாடுகிறாள் என்று பாகிரதி விட்டு விட்டாள் !
ஆனால் பைரவி மழலைக் குரலில் ‘ ‘ காத்தினிலே வரும் கீதம் ‘ என்று பாடினதைக்கேட்டு அசந்து விட்டாள் !
திருவனந்தபுரத்தில் புகழ் பெற்ற வித்வான் பரமேஸ்வர ஐயரின் சிஷ்யரான கோபிநாத்திடம் சேர்த்து விட்டாள் !
பைரவிக்கு பன்னிரெண்டு வயதில் பத்மநாபனுக்கு கொல்கத்தா பல்கலைக் கழகத்தில் சமஸ்கிருத துறையின் முதல்வராக வாய்ப்பு வந்தது !
இரண்டே மாசத்தில் பைரவி பெங்காலி மொழியில் ஓரளவுக்கு பேசக் கற்றுக் கொண்டாள் !!
கொல்கத்தாவின் கலாச்சாரம் அவளைக் கவர்ந்து இழுத்தது ! எல்லோருடைய வீட்டிலும் ரபீந்திரசங்கீத் !!!
துர்கா பூஜை !!! கடைசி நாள் !
உறவினர், நண்பர்கள் எல்லோருக்கும் விருந்து !
அங்குதான் முதலில் கௌதம் முகர்ஜி அறிமுகம் !
ரபீந்த்ர சங்கீதத்தைக் கரைத்து குடித்தவன் ‘ கஸல் கவுதம் ‘என்றே பெயர் !!
இரண்டு பேருக்கும் பேச நிறையவே இருந்தது !!
அடிக்கடி சந்திக்கும் சந்தர்ப்பங்கள் நல்ல நட்பை வளர்த்தது ! இரண்டு குடும்பங்களுக்கும் கூடத் தான் !!
‘கண்டேன் கண்டேன் , கண்டேன் சீதையை ‘ பாம்பே ஜெயஸ்ரீ யின் கந்தர்வ குரல் ! பாகேஸ்வரி ராகம் ! பைரவி தனிமையில் விரும்பி கேட்கும் ராகங்களில் ஒன்று !
பாட்டு முடிந்ததும் கைதட்டும் ஓசை !!
”வாங்க கௌதம் !! எப்போ வந்தீங்க….?”
“பாம்பே ஜெயஸ்ரீ சீதையைக் கண்டதுமே !!”
“பாகேஸ்வரி !! எனக்கு ரொம்பவும் பிடிக்கும் ”
”எனக்கும் !!…
”கௌதம்! எனக்கு இந்துஸ்தானி இசையைக் கத்துக்கணும்ன்னு ரொம்ப நாள் கனவு !!”
”எனக்கும் கர்நாடக சங்கீதம் கத்துக்கணும்னு……
”கனவா ??
இரண்டு பேரும் சிரித்து விட்டார்கள் !
”பைரவி ..! ‘மதுமதி ….!! …’ இந்திப் படம் பார்த்திருக்கியா? ‘
”இல்லை கவுதம் இதுவரைக்கும் இந்தி சினிமா ஒன்றுகூட பார்த்ததில்லை…… ! ‘
“அதில் இரண்டு அருமையான பாடல்கள்… ! பாகேஸ்வரியில் !
‘ஆஜாரே….பர்தேசி…..’
‘கடி கடி மோரா ‘….
லதா மங்கேஷ்கரின் மனதை மயக்கும் பாடல்கள் !!!”
அடுத்த வாரம் ஒருநாள்……
“பைரவி ! ஒரு ஸர்ப்ரைஸ் ! கையைக் காட்டு ….!!!
இரண்டு சினிமா டிக்கெட் !!
மதுமதி!!
அவனும் அவளுமாய்…. முதன் முதலில்…. தனியாய் …!!!!
அன்றைக்கு ராத்திரி அவள் தூங்கவே யில்லை!
‘ஆஜாரே ….’ என்று திரும்பத் திரும்ப காதில் ஒலித்துக் கொண்டே இருந்தது!
பாகேஸ்வரி….. நள்ளிரவில் காதலி காதலனுக்கு காத்திருக்கும் விரக தாபம் தொனிக்கும் ராகம் …..
***
பைரவி, பைரவி கௌதமானதற்கு துணை போன ராகம் !
மதுமதி அவர்களின் காதலுக்கு சாட்சி !!!
***
பத்மநாபனின் கடைசி நாட்களை சென்னையில் கழிக்க வேண்டும் என்று விரும்பினார் !
பைரவிக்கு சென்னையிலிருந்தால் நிறைய கச்சேரி வர வாய்ப்பிருப்பதாய் கௌதமும் எண்ணவே சென்னையில் கோட்டூர்புரத்தில் வீடு வாங்கி செட்டில் ஆகி விட்டார்கள்
பைரவி குரல் எல்லா சபாக்களிலும் ஒலிக்க ஆரம்பித்தது !
சிபாரிசு எதுவும் இல்லாமலே அவள் முன்னணி பாடகிகளில் ஒருத்தியாக முடிந்ததென்றல் அதற்கு முக்கிய காரணம் அவளின் அயராத உழைப்பும் சங்கீதத்தில் அவளுக்கு இருந்த பக்தியும் காதலும் , கௌதமின் ஆதரவும் அணைப்பும் தான் !!!
பைரவியைவிட மதுமதி கொடுத்து வைத்தவள் ! இயற்கையாய் அமைந்த சங்கீத ஞானம் !
அப்பா, அம்மாவின் வரமாக ! அம்மா சாதகம் பண்ணும்போதே கூட உட்கார்ந்து விடுவாள் !
ஆனால் பைரவியிடம் இல்லாத ஒரு குணம் மதுமதியிடம் !!!
பிடிவாதம் ! தான் செய்வதுதான் சரியென்ற வீம்பு ! சின்ன சின்ன விமர்சனங்களைக்கூட தாங்கிக் கொள்ள முடியாமல் கூட்டுக்குள் சுருங்கி விடுவாள் !
அம்மாவைத் தவிர வேறு யாரிடமும் பாட்டு சொல்லிக் கொள்ள மறுத்து விட்டாள் !!
இதில் தாத்தா பாட்டி செல்லம் வேறு !
அவர்களின் காலம் முடிந்தபின் அவளுடைய சுபாவம் இன்னும் மோசமானது !
சில நாள் அறையிலிருந்து வெளியே வரவே மாட்டாள் ! சில நாள் நிறுத்தாமல் சாதகம் செய்வாள் !
பைரவியும் கௌதமும் அசந்து போகும்படி சில ராகப் பிரயோகங்கள் இருக்கும் !
மொத்தத்தில் மதுமதி ஒரு புரியாத புதிராயிருந்தாள்!
மதுமதியிடம் தைரியமாய் பேசக்கூடியவன் பாபு ஒருத்தன் தான் !
அம்மா கோமதி கையைப் பிடித்து கொண்டு உள்ளே நுழைந்தவன் இன்று அவர்கள் கார் டிரைவர்….மதுமதிக்கோ உயிர் நண்பன்…..
பள்ளிக்கு கொண்டு விடும் வழியில் நிறைய பேசுவாள் !
‘பாபு! அப்பாவும் அம்மாவும் எங்கிட்ட நிறையவே எதிர்பார்க்கிறாங்களோன்னு தோணுது !
அவங்க லெவலுக்கு என்னால் ஒரு நாளும் வரமுடியாது ! எனக்கு அதுவே மனஅழுத்தமா இருக்கு !
ஒருவித குற்ற உணர்வு கூட இருக்கு ! எனக்கு எதிலையுமே மனதை செலுத்த முடியல…! “
”மது ! நீ அவங்களை சரியாக புரிஞ்சிக்கலைன்னு தோணுது !
அம்மா உங்கிட்ட எதுவும் எதிர்பார்க்கலை ! உன் மேல அக்கறை இருக்கக் கூடாதா ???
அம்மா இந்த உசரத்துக்கு வரதுக்கு எவ்வளவு போராடியிருப்பாங்க ???
எதுவுமே அவ்வளவு சுலபமாக கிடைச்சுடாது !!
சங்கீத ஞானம் உனக்கு இயற்கை குடுத்த வரப்பிரசாதம் !
அது உங்கிட்ட இருக்கிறவரை மற்றவர்களின் எதிர்பார்ப்புக்காக உன்னை மாத்திக்க அவசியமில்லை !
உன் பலம் எதுன்னு நீயே சீக்கிரம் புரிஞ்சுப்ப !!!
இப்போதெல்லாம் மதுமதியைப் பார்க்க நிறையவே ஆண் நண்பர்கள் வர ஆரம்பித்திருக்கிறார்கள் !
கிடார் , டிரம்ஸ் என்று இசைக்கருவிகள் வேறு!
மேலே பேண்ட் , டிரம்ஸ் , ராக் , பாப் . ஜாஸ் … மேல்நாட்டு சங்கீதம் ….என்று ஒரே சத்தம் !!!
பைரவி மதுவிடம் ஒரு நாள் கேட்டாள் !!
” அம்மா ! நாங்கள் மூணு பேர் சேர்ந்து ஒரு இசைக்குழு ஆரம்பித்திருக்கிறோம் ! இப்பத்தான் தொடங்கறோம் …
சமயம் வரும்போது நான் அவுங்கள உங்களுக்கு அறிமுகம் செஞ்சு வைக்கிறேன்….!
இன்னும் பெயர் கூட வைக்கல… ! அதான் சொல்லலை ! சாரி மாம் …!”
பைரவிக்கும் கௌதமுக்கும் அது ஒரு பிரச்சினையாகவே தோணவில்லை !
அவர்களே எல்லா வித சங்கீதத்தையும் விரும்பி ஏற்றுக் கொண்டவர்கள் தானே!
மது கொஞ்சம் கொஞ்சமாக அம்மாவுடன் பாடுவதை நிறுத்திக் கொண்டாள் !
அதிகம் வெளியில் போக ஆரம்பித்தாள் ! இப்போதெல்லாம் பாபுவை கூப்பிடுவதில்லை !
ஏதாவது ஒரு நண்பனுடன் போவது வழக்கமாகிப் போனது !
பைரவிக்கு ஆரம்பத்தில் அவள் மேல் கோபம் வந்தது! ஆனால் கௌதம் அவளை சமாதானப் படுத்தி விடுவான்!
” பைரவி! அவள் தனக்கு ஒரு அடையாளத்தைத் தேடிக்கொண்டிருக்கிறாள் !
உன்னுடைய புகழில் ஒட்டிக்கொள்ள அவள் தன்மானம் இடம் தராது !! கொஞ்ச நாள் அவள தனியா விடுவோமே…”
பைரவியின் மனதை கவலை அரிக்க ஆரம்பித்தது ! அவளுடைய மனோதர்மத்தை பாதிக்கவும் செய்தது ! அவளுடன் அதிக நேரம் செலவழித்திருக்கலாமோ ???
ஒரு நாள் மதுமதி அம்மாவிடம் சொன்னாள் ,
” அம்மா ! நான் கல்லூரி படிப்பை முடிச்சுட்டு அமெரிக்கா போக நிறைய யூனிவர்சிட்டிக்கு அப்ளிகேஷன்ஸ் வாங்கி விட்டேன் ! “
” அமெரிக்காவா ???”
” ஆமாம்மா ! உலகப் புகழ் பெற்ற நியூயார்க் இசைக்கல்லூரியில் ராக் இசை கத்துக்கலாம்ன்னு….”
” முடிவு பண்ணிட்டியா ???”
” ஆமாம்மா ! எங்க குழுவில இருக்கிற மூணு பேருமே போறோம் !!!”
” அப்பா கிட்ட எதுக்கும் நல்லா டிஸ்கஸ் பண்ணி முடிவெடு!”
” நிச்சியமா அம்மா ! அப்பா கண்டிப்பா ஒத்துப்பாரு !”
மது நியூயார்க் போய் மூணு மாசம் ஆகிவிட்டது !
‘மிகவும் புதுமயான அனுபவம் ‘ என்று மது ஃபோனில் கூறியபோது பைரவியும் கௌதமும் ரொம்பவே பெருமைப்பட்டார்கள்!!
மதுமதி கல்லூரியில் சேர்ந்து ஆறு மாசம் போனதே தெரியவில்லை!
வாரம் ஒரு முறையாவது கூப்பிட்டு விடுவாள் !
ஒவ்வொரு தடவையும்
‘ அம்மா…அப்பா.. நான் மிகவும் அதிர்ஷ்டசாலி…இதுபோல வாய்ப்பு யாருக்கும் கிடைக்காது..! ” என்று கூறும்போது பைரவி அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை!
கொஞ்ச கொஞ்சமாய் அவளிடமிருந்து ஃபோன் வருவது குறைந்தது !
ஒரு தடவை ‘ அம்மா ! நிறையவே எதிர்பார்ப்புகளும் சேலஞ்சும் உள்ள கோர்ஸ்.. எதற்குமே நேரமில்லை…!!’என்று சொல்லி வைத்துவிட்டாள் !
” மதுவிடமிருந்து ஒரு தகவலும் இல்லியே !
பைரவிக்கு லேசாக ஒரு கலக்கம் !
” பைரவி! உனக்கு தெரியாததா! அவள் ஒரு வருஷத்தில் கோர்ஸை முடித்து விடுவாள் ! இப்போ டெட்லைன் நிறையவே இருக்கும் ! “
ஒவ்வொரு தடவையும் கௌதம்தான் சமாதானப் படுத்துவான் !!
இப்போதெல்லாம் ஃபோன் பண்ணினாலும் எடுப்பதில்லை !
கௌதமுக்கும் லேசாக பயம் !!!
பாபுவுக்கு அவளுடைய இசைக்குழுவில் இருக்கும் கிரணின் வீடு தெரியும் !
” படிப்பு முடிஞ்சிடுச்சே ! இன்னும் ஒரு வாரத்தில வரேன்னு ஃபோன் பண்ணினானே ! மது ஒண்ணும் சொல்லலையா??”
பாபு தயங்கி தயங்கி பைரவியிடம் சொல்லி விட்டான் !
நிச்சயம் மதுவுக்கு எதோ நடந்திருக்கும் என்று பைரவியின் உள்ளுணர்வு சொன்னது !
”பொறுமையா இரு பைரவி ! கிரண் வந்தும் நானே நேரில் போய் கேட்டு விடுகிறேன் ! ”
பைரவி கொஞ்சம் சமாதானமானாள் !!
கிரணைப் போய் பார்த்தான் கௌதம் ! முதலில் சிறிது தயங்கிய கிரண் மெல்ல மெல்ல மனம் திறந்தான் !
அவன் சொன்ன விஷயம் கௌதமை அதிர்ச்சி அடையச் செய்தது !
”மதுமதியால கோர்ஸ முடிக்க முடியல அங்கிள்.. !
ஆரம்பத்தில ரொம்ப நல்லா பண்ணிட்டு இருந்தா !
ஒரு நாள் ப்ரொஃபஸருக்கும் அவளுக்கும் ஒரு சின்ன விவாதம்…
இரண்டுநாள் மது வகுப்புக்கே வரலை !
நானும் ப்ரேமும் எவ்வளவோ சொல்லியும் அதையே நினச்சு கொஞ்சம் கொஞ்சமா மனஅழுத்தத்துக்கு ஆளாய்ட்டா.. !
கடைசி செமஸ்டர் க்ளியர் பண்ண முடியல ! எங்களோட வந்துட்டு போன்னு சொல்லியும் கேக்கல !
”நான் ஒரு ஃபெயிலியர் ! அப்பா அம்மா முன்னாடி எப்படி நிப்பேன் !
எதுவும் சாதிக்காம திரும்பி இந்தியா வரமாட்டேன் ! ப்ளீஸ்டா !! அவங்க கிட்ட சொல்லிடாத ன்னு ரொம்ப கெஞ்சினா அங்கிள்.
”என்ன மன்னிச்சிடுங்க அங்கிள்.”
இந்த தடவை பைரவியை சமாதானப்படுத்தவே முடியவில்லை !
கிரணிடம் மதுமதியைப்பற்றி எல்லா விவரங்களையும் தெரிந்து கொண்டு கௌதம் உடனே கிளம்பி விட்டான் !
கையோடு மதுமதியைக் கூட்டிக்கொண்டு வந்து விட்டான்….
மதுமதியா இது ? பைரவி உடைந்து போனாள் !
”அம்மா !! என்ன மன்னிச்சிடு… ! என்னால் உங்களுக்கெல்லாம் அவமானம்!!
எனக்கு உலகமே இருண்டு போனது போல் தோணுது…! எனக்கு என்ன ஆச்சு ?? ஒண்ணுமே புரியல !!”
“மது ! நீ பழசெல்லாம் நினச்சு அநாவசியமா குழப்பிக்காத !
எப்போ வேணும்னாலும் செமஸ்டர் எழுதிக்கலாம் ! ஆனா மனசு நழுவிப் போனா பிடிச்சு நிறுத்தறது சுலபமில்லை !
அம்மாவைப் பத்தி நீ கவலைப் படாதே ! அம்மா மனோதைரியம் உள்ளவள். ! அவளால் இதை சமாளிக்க முடியும்…..
நீ உன்னைப் பாத்துக்கோ !”
” அப்பா !! உங்கள நினச்சு நான் பெருமப்படறேன்… !!”
பைரவி எந்த நிகழ்ச்சியையும் ஒப்புக்கொள்ளவில்லை !
அவளுக்கும் ஒரு ப்ரேக் தேவைப்பட்டது !
”பைரவிக்கு பாட முடியலயாமே தொண்டையில ஏதோ …… ! “
”கணவருக்கும் அவளுக்கும் ஒத்துக்கலயாம் ! விவாகரத்து … அது இதுன்னு ….”
”பொண்ணு போற போக்கு சரியில்லயாம் ”
”வீட்ட கவனிக்காம சபா சபாவா ஏறி இறங்கினா இப்படித்தான் !!”
பைரவிக்கும் இதெல்லாம் காதில் எட்டாமலில்லை! அதெல்லாம் பொருட்படுத்தும் மன நிலையில் அவள் இல்லை !
பாபுவின் பரிவும் , அம்மா அப்பா அரவணைப்பும் சீக்கிரமே அவளை பழைய மதுவாக்கியது !
”அம்மா ! நான் மறுபடி உன்னோட சேர்ந்து பாடப் போறேன் ! இசைக்குழு எல்லாம் மூட்டை கட்டி வைத்து விட்டேன் !!!”
”மது ! நீ என்னோட சேர்ந்து பாடு ! எனக்கும் சந்தோஷம் தான் !
ஆனால் ப்ளீஸ்டா ! ஆரம்பித்த இசைக்குழுவை நிறுத்தாதே !
உன்னுடைய கனவுக் குழந்தை!
எவ்வளவு சீக்கிரம் உன்னால் முடியுமோ , start again !!
ஒரு வருடம் போனதே தெரியவில்லை…..
மதுமதி அம்மாவை ஓடிவந்து கட்டிக்கொண்டாள் !
”அம்மா.. மகிழ்ச்சியான செய்தி…. ! அடுத்த வாரம் சனிக்கிழமை மாலை… ‘ சென்னை தியேட்டரில்’ எங்களுடைய இசைக்குழுவின் அரங்கேற்றம்…… ‘ !
உங்களுக்கு முதல் வரிசையில் இருக்கைகள் ரிசர்வ் பண்ணியாச்சு !!!
பை தி வே…. !!!!!எங்க குழுவுக்கு
‘Recharge ‘ என்று பேர் வைத்து இருக்கோம் !!
”எங்களது வாழ்த்துக்கள் மது !! மிக்க மகிழ்ச்சி…”
சனிக்கிழமை !
மதுமதி சீக்கிரமே கிளம்பி போய் விட்டாள் !
ரொம்ப நாளைக்கப்புறம் பைரவிக்கு தன்னை நன்றாக அலங்கரித்துக் கொள்ள ஆர்வம் வந்தது !
கருநீலத்தில் இளநீல பார்டர் போட்ட புடவையில் ,
முகமெல்லாம் புன்னகையுடன் கௌதம்…..பாபுவுடன்… அரைமணிநேரம் முன்னாலேயே அரங்கத்தில் இருந்தாள் !
சரியாக ஆறுமணிக்கு நிகழ்ச்சி ஆரம்பம் !
அரங்கம் நிறைந்திருந்தது !!!
மதுமதி ரொம்பவே உற்சாகமாய் இருந்தாள் !
“எல்லோருக்கும் வணக்கம்.. !!
எங்களுடைய முதல் முயற்சிக்கு இவ்வளவு ஆதரவு இருக்கும் என்று எதிர்பார்க்கவே யில்லை !!
Thank you one and all !! Before introducing our band we want to start our program with our signature song !
இந்த பாடலை என்னுடைய பெற்றோருக்கு சமர்ப்பிக்கிறேன் !!!
‘ ஆஜாரே ……’
அரங்கமே நிசப்தமானது !! மதுமதியின் தேன் குரல் எல்லோரையும் கட்டிப் போட்டது !!
பைரவி கண்களில் கண்ணீர் ! அழக்கூடாது என்று சிரமப்பட்டு அடக்கிக் கொண்டாள் !
கௌதம் கையைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டாள் !
***
பைரவி இப்போது கொல்கத்தாவில் !!
ராக்ஸி திரையரங்கில்….. ! கௌதமின் நெருக்கத்தில் !
மதுமதியாக திரையில் வைஜயந்ததிமாலா !!
‘ ஆஜாரே ….’ அவளுக்கு பிடித்த பாகேஸ்வரி ராகம் !!!
***
சின்ன பைரவி …. பள்ளிக்கூட நிகழ்ச்சியில் ……
‘ செந்தமிழ் நாடென்னும் போதினிலே ‘
எல்லோர் காதிலும் தேன் பாய்ந்தது !!!
***
திடீரென்று சிக்னலில் பார்த்த பெண் முகம் !!!!
அவள் என்ன ஆனாள்????
சந்தோஷமும் , பெருமையும் , துக்கமும் மாறி….மாறி ……
***
கரகோஷத்தில் அரங்கமே அதிர்ந்தது! தன் நினைவுக்கு வந்தாள் பைரவி !!!
” Our next song…….’ Raise up…….’
மதுமதி எழுந்து நின்று விட்டாள் !!! இனி வீழ மாட்டாள் !!!