எட்டாவது கடிதம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 18, 2022
பார்வையிட்டோர்: 5,265 
 
 

பரியம் வதை அந்தக் கடிதத்தை எதேச்சையாகத்தான் பார்த்தாள்.

அதுபோல மூன்று கடிதங்கள் வந்திருந்தன. பொதுவாக அவள் தன் கணவனுக்கு வரும் கடிதங்களைப் பார்ப்பதில்லை. இன்றும் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. கணவனின் மேஜை அறையில் ஏதோ தேடியவள் அந்தக் கடிதத்தைக் கண்டாள்.

மேலுறை திறந்திருந்த அந்தக் கடிதத்தின் மேலே எழுதப்பட்டிருந்த வரிகள் அவள் கவனத்தைத் திருப்பின. தன் கணவனின் பெயரை யாரோ குண்டெழுத்தில் எழுதியிருப்பது தெரிந்தது.

திருவாளர் இராஜசேகரன், கேசவநாத் கம்பெனி, சென்னை -1 பிரியம்வதை ஒரு விநாடி மௌனமாக நின்றாள். பிறகு துணிந்து கடிதத்தை எடுத்தாள். முதல்வரியே அவளைத் திடுக்கிடச் செய்தது. தன் கணவனைப் பெயரிட்டு அழைத்திருப்பதைப் படித்தபோது கடித் உள் விஷயங்களை அவளால் படிக்காமல் இருக்க முடியவில்லை.

“அன்புள்ள திரு. இராஜசேகரன் அவர்களுக்கு …. வணக்கம்.

என் முன் கடித்தத்தை அனுப்பாமல் இருந்திருக்கலாம். இங்கு ராஜு சௌக்கியம். அவன் உங்கள் நினைவாக இருக்கிறான். இந்தப் பக்கம் ஆபீஸ் வேலையாகத் தாங்கள் வருவதானால் இந்த ஏழை இல்லத்துக்கும் வருமாறு வேண்டிக் கொள்கிறேன். என் முன் கடித விஷயங்களையும் இங்கு நினைவூட்ட விரும்புகிறேன்.

இப்படிக்கு
சீதா’

கடிதத்தை ஒருமுறை படித்த பிரியம்வதைக்குக் கதை, நாவலின் ஏதாவது ஒரு பக்கத்தை தான் படிக்கிறோமோ என்று ஒரு கணம் தோன்றியது.

முன் கடிதத்தில் நினைவுப்படுத்தியுள்ள விஷயம் என்ன என்ற ஆவல் அவள் உள்ளத்தே உதயமாகியது. அடுப்பிலே பாலை வைத்து வந்திருந்ததையும் கவனியாமல் மேஜை இழுப்பறையில் தேடத் தொடங்கினாள்.

அதே சீதா எழுதிய கடிதங்கள் இரண்டு, மூன்று அகப்பட்டன. அந்தக் கடிதங்கள் அவளுக்கு மன வேதனையை தந்தன.

ஒருமுறை அவளுக்குச் சிரிப்பு வந்தது. ஒருமுறை உருக்கமான அந்த வரிகள் அவளுக்கு இரக்கத்தை அளித்தது.

எல்லாவற்றையும் கூட அவளுக்குத் தன் கணவன் மீது கோபம் கோபமாய் வந்தது. தன்னிடம் ஒரு வார்த்தைக் கூடச் சொல்லாமல் அவர் இவ்வளவு நாள் இருந்திருப்பார் என்பதை அவள் கனவிலும் நினைக்கவில்லை. என் இதயமே நீதானே என்று அவர் தன் நம்பிக்கையெல்லாம் அவளிடம் கொட்டியிருக்கும்போது இந்தச் சிறு விஷயத்தை மட்டும் அவர் மறைத்து வைத்திருப்பானேன்?

சிறு விஷயமா இது? ஒரு பெண் – இளம் பெண்ணாகத்தானிருக்க வேண்டும் – தன் கணவனிடம் உறவு கொண்டாடிக் கடிதம் எழுதுகிறாள். அதுவும் இவரிடம் பண உதவி கேட்டுக் கடிதம் எழுதுகிறாள். இதற்கு முன் உதவிய பணத்திற்கு நன்றி செலுத்துகிறாள். தன்னிடம் இவள் கதை சொல்லி இருந்தாலென்ன?

அவள் மனம் குழம்பியது. நிலைப்படியில் தலையை வைத்துப் படுத்துக் கொண்டு நேரம் போனதே தெரியாமல் ஏதோ சிந்தனை லோகத்தில் சஞ்சரிக்க முனைந்தாள். மாலை பால்காரன் பாலுக்கு சைக்கிள் மணியை அடித்தவுடன் தான் அவளுக்கு நினைவு வந்தது.

கலியாணமாகி இந்த நான்கு வருட காலத்தில் பிறந்தகத்திற்குப் போயிருந்த காலம் தவிர மீதி நேரங்களில் பிரியாதிருந்த அவர்கள் தாம்பத்ய வாழ்க்கை எத்தனை இன்பமாக இருந்தது? இப்பொழுது மட்டுமென்ன? இந்தக் கடிதம் ஏன் தன் கண்ணில் பட வேண்டும்? ஒரு பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தி அவரை ஏன் சிக்கலில் திளைக்க வைக்க வேண்டும்?

அவன் மெல்ல எழுந்துப் பால் பாத்திரத்தைக் கொண்டு வந்து பாலை வாங்கினாள். அவள் மனக் குளத்தில் சிறு சந்தேகக் கல் விழுந்து அதன் அமைதியைக் கெடுத்துக் கவலைக் கோடுகளை இதயக்கரை வரையில் மோதி மோதிப் போகும்படி செய்து விட்டது. கணவன் இன்னும் ஐந்து நாளைக்கு வர மாட்டார். வடக்கே சுற்றுப் பிரயாணம். சாதாரணமாக அந்தச் சற்றுப் பிரயாண நாள்கள் அவளுக்கு வேதனையை அளிக்கத் தவறியதில்லை. தனிமையான அந்த வீட்டில் பேச்சுக்கோ ஆள் யாருமில்லை. கொஞ்சிக் குலவுவதற்குச் சதங்கை ஒலிக்கும் குழந்தையா, குட்டியா?

அடுப்பில் வைத்திருந்த இரவுச் சாப்பாட்டுக்கான உலை நீரையும் இறக்கி வைத்துவிட்டாள் . விளக்கை ஏற்றக்கூட ஏனோ மனம் வரவில்லை . அந்தக் கடிதங்களையே திரும்பத் திரும்ப படித்துக் கொண்டிருந்தாள். கடிதங்கள் அனைத்தும் அவளைக் கணவனிடமிருந்து எங்கோ விலகிச் செல்லச் செய்வன போலிருந்தன. ஒவ்வொரு கடிதமும் அவள், தன் கணவனிடம் அதிக உரிமை கொண்டாடுவது போல் காட்டியது.

குழந்தை ராஜு- உடம்புக்கு மருந்து – உள்ளக் கவலைக்கு இதமான வார்த்தை – செலவுக்குப் பணம்…. இது தானே திரும்பித் திரும்பி எல்லாக் கடிதங்களிலும் ? பெயரைச் சொல்லி அழைத்து ஒவ்வொரு கடிதமும் ஆரம்பிக்கும் போது அவள் நெஞ்சு உடைந்து விடும் போல் இருந்தது.

‘ரேஷன் கார்டு அதிகாரியிடம் கணவன் பெயரைச் சொல்ல அவள் எவ்வளவு கூச்சப்படுவாள்! இவளோ…. எவ்வளவு சுதந்தரமாகக் கடிதமெழுதுகிறாள்!

காதலி, காதலி என்று நாவல்கள், கதைகள் கூறுகின்றனவே….. இவள் கணவனின் காதலியோ?

மனத்தைத் தேற்றிக் கொள்ள முயன்றாள்; முடியவில்லை. கடிதங்கள் நழுவிக் கீழே விழுமளவுக்கு உடலில் ஒருவித நடுக்கம் ஏற்பட்டது.

அந்தக் கடிதங்களை எடுத்துக் கசக்கி எரியும் நெருப்பில் வீசி எறிய வேண்டும் என்னும் ஆத்திரம் ஏற்பட்டது. ஆனால், எதிர்வீட்டு நாலு வயதுப் பாலகன் தன் குலுங்கும் நடையுடன் தன் தாயின் கரத்தைப் பிடித்துக் கொண்டு வந்து, “மாமியேன் அயறாம்மா?’ என்று மழலைச் சொல்லைக் கேட்டவுடன் தான் தன் நிலையை உணர்ந்துச் சமாளித்துக் கொண்டாள்.

மறுநாள் காலை இயந்திரம் போல் எழுந்து தன் வேலைகளையெல்லாம் கவனிக்கத் தொடங்கினாள். வாசலில் வண்டி வந்து நிற்கும் ஓசை கேட்டது. ‘கேம்ப் திட்டத்தை முடித்துக் கொண்ட கணவன் தான் வந்து விட்டாரோ என்று அறையில் இருந்தபடியே பார்த்தாள்.

ஏனோ அவளுக்கு மனத்தில் மறைந்திருந்த கோபம் பொங்கத் தொடங்கியது.

சாதாரணமாக மலர்ந்த முகத்துடன், கணவன் வரும்போது எதிர் கொண்டழைத்து, அவர் கொண்டு வரும் சூட்கேஸை கையில் வாங்கி வண்டிக்காரனுக்கு எவ்வளவு கொடுக்க வேண்டும்?’ எனக் கேட்டுப் புன்முறுவலுடன் – புது உற்சாகத்துடன் – விளங்குபவள் இன்று கணவனைக் காணக் கூடாது என்னும் வைராக்கியத்துடன் சமையல் அறையில் நுழைந்தாள்.

ஆனால், வண்டியினின்று இறங்கியவர் கணவரல்லர்; அவளது ஒன்று விட்ட பெரியப்பா !

பெரியப்பா என்றால் அவளுக்கு எப்பொழுதும் சந்தோஷம். கோபமே வராத முகத்துடன் சகஜமாகப் பழகும் சுபாவத்துடன் இருக்கும் அவருடன் யாரும் சுலபமாகப் பழகத் துணிவர். அத்துடன் பிரியம்வதை சிறுவயதில் அவர் வீட்டிலே வளர்ந்தாள். பணம் காசு புழக்கத்துடன் செல்வாக்காக அப்பொழுது அவர் குடும்பம் வாழ்ந்தது. குழந்தை இல்லை. பருவ மழைத் தொடர்ந்தாற்போல் தவறியதால் அவரது ஏராளமான நிலங்கள் காய்ந்துக் கட்டாந்தரையாகி விடவே, அவருக்கு ஐந்தாறு வருடங்களாகக் கஷ்டம்தான். எப்போதாவது பிரியம் வதையிடமே வந்து கைமாற்று வாங்கி போவார்.

ஏராளமான நிலங்கள் அவருக்கு இருக்கின்றன. காலக் கோளாறு என்று பிரியம்வதை வருந்துவாள். பெரியம்மாவுக்கு ஒரு குழந்தை பிறந்தால் அவர்கள் நல்ல குணத்துக்கு எவ்வளவு எடுப்பாக இருக்கும் என்றும் எண்ணுவாள்.

அவர்களைச் சொல்வானேன்? தனக்குக் கல்யாணமாகி நான்கு ஆண்டுகள் ஓடிவிட்டன. தன்னுடன் கலியாணமான கல்யாணிக்கு மூன்று குழந்தைகள்!

தன் கணவரோ, அவசரமென்ன பிரியே! இந்தக் காலத்தில் கலியாணத்தில் பெரியவாள் ஆசீர்வாதம் செய்யும் போது, மெதுவாகப் புத்திரபேறு அடையக் கடவாய்’ என்று தான் சொல்ல வேண்டும். இப்படித் தனியாக இன்ப வாழ்க்கை நடத்த முடியுமா?” என்று லேசாக – ஆசையாக அவள் தாடையைத் தட்டி விடுவான். அந்தத் தட்டல் அவள் உள்ளத்தே தாய்மை எண்ணத்தை அதிகப்படுத்தவே செய்யும்.

இந்தக் கடிதங்களைப் படித்த பிறகு தனக்குக் குழந்தை இருந்தால் கணவன் பூரண அன்பையும் இங்கு விட்டு எங்கு செலுத்த முடியுமென்று எண்ணுவாள்.

பெரியப்பா வண்டியினின்று இறங்கிச் சிறிது தாமதமாய் நிற்பதைப் பார்த்தாள். வண்டிக்குள் இன்னும் யார் ?

“ராஜு, வாடா! அந்தப் பையை நான் எடுத்துக்கிறேன். இறங்குடா கண்ணு!” என்று அவர் யாரையோ செல்லமாக அழைப்பது அவள் காதில் விழுந்தது.

நான்கு அல்லது ஐந்து வயதுச் சிறுவன் வண்டியினின்று தன் பிஞ்சுக் காலையும் கையையும் காட்டி இறங்க முயன்றான். பெரியப்பா அவனை மெல்ல இறக்கி விட்டார்.

பையன் ரொம்பவும் பழக்கப்பட்டவன் போல் வீட்டிற்குள் நுழைந்தான். காலில் அணிந்திருந்த செருப்பை ரேழி மூலையில் விட்டான். உள்ளே ஊஞ்சல் அருகே வந்து நின்றான். வண்டிக்காரனுக்குச் சில்லறை கொடுத்து விட்டுப் பெரியப்பா உள்ளே நுழைந்தார்.

“இது நம்ப வீடுதான்” என்றார் பெரியப்பா. ராஜு கிடுகிடுவென்று சட்டையின் மீது அணிந்திருந்த ஸ்வெட்டரைக் கழற்றினான். முற்றத்தில் வைக்கப்பட்டிருந்த பாத்திரத்தினின்று தண்ணீரை எடுத்துக் கால் கை அலம்பிக் கொண்டான். கையிலே கொண்டு வந்திருந்த சிறு பையினின்று பற்பொடியை எடுத்துப் பல்லைத் துலக்கினான்.

முகத்தைத் துடைத்துக் கொண்டு வந்து நின்றான். பெரியப்பாவும், பிரியம்வதையும் அந்தச் சிறுவன் செய்வதை வைத்த கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டு நின்றார்கள்.

இந்தச் சிறுவன் யார் என்று கேட்கும் பாவனையாகப் பிரியம்வதை பெரியப்பாவின் பக்கம் திரும்பினாள். வந்தவரை எப்போது கிளம்பினீர்கள்? என்ன செய்தி?’ என்று கூடக் கேட்காமல் அந்தப் பாலகனையே வைத்த கண் வாங்காது பார்த்துக் கொண்டிருந்தாள்.

“எல்லாம் அவன் அம்மா சொல்லிக் கொடுத்திருக்கிறாள். பாவம்.. இந்தச் சூட்டிகையான சிறுவனுக்கு நேர இருக்கும் இடைஞ்சல்களைப் பாரேன்” என்றார்.

பிரியம்வதை காபி தயாரிக்கச் சென்றாள். பெரியப்பா காபி சாப்பிடத் தயாரானார். காபியை ஆற்றிக் கொண்டே, “பெரியப்பா! இந்தப் பையன் ரொம்பவும் துறுதுறுவென்று இருக்கிறான். யார் வீட்டுப் பையன்? எங்கே அழைத்து போகிறீர்கள்?” என்று கேட்டாள் பிரியம்வதை .

பெரியப்பா ஒரு வாய் காபியைக் குடித்துவிட்டு. ‘குழந்தை இல்லையென்று சிலர் தவம் செய்கிறார்கள். ஜோடியாக விளையாட இன்னொரு குழந்தை பிறக்கக்கூடாதா என ஏங்குகிறார்கள். இந்தத் துரதிர்ஷ்டம் பாரேன். இவன் அம்மா ரொம்பவும் உடல் நலமில்லாமல் படுத்துக் கிடக்கிறாள். அவள் வந்து தங்கியிருக்கும் அவள் மாமா வீட்டிலே ஏழெட்டுப் பசங்கள். ஆரம்பப் பள்ளி ஒன்றில் ஆசிரியரான அவரால் தன் குழந்தைகளைக் காப்பாற்றவே முடியவில்லை. எலும்புருக்கி நோயுடன் தன் மருமகள் வேறு. அவர் திண்டாட்டம் பார்க்கச் சகிக்கவில்லை.

‘அத்தான் பிள்ளை மணி கல்யாணத்துக்குக் கும்பகோணம் போயிருந்தேன் அல்லவா? அப்போ இந்தப் பையன் வீட்டுக்குப் பக்கத்து வீட்டில் தான் மாப்பிள்ளை அழைப்பார் வீடு. உனக்குக் கூட கல்யாணக் கடிதாசு போட்டிருந்தானாமே !

“அது போகட்டும். இந்தப் பையனுடைய தாயார் தன் மகன் இப்படி இந்தக் கஷ்டப்படும் குடும்பத்தோடு குடும்பமாக இருந்தால் (மன்னேறாமல் போய்விடுவான் என்று படுத்த படுக்கையிலிருந்தே யார். யாரிடமிருந்தோ சிபாரிசு வாங்கிப் பட்டணத்துலே பாலமந்திரில் சேர்க்க ஏற்பாடு செய்திருக்கிறாள்.

“நான் பட்டணம் போகிறேன் என்று தெரிந்தவுடன் அங்கே விசாரித்துச் சேர்த்து விடுமாறு என்னைக் கேட்டுக் கொண்டாள்.

பாவம்….. இளம் வயது, களையான முகம். அவனுக்கு இத்தனை கஷ்டம் வர வேண்டாம்” என்றார்.

குழந்தை ராஜு கூடத்திலிருக்கும் ஒவ்வொரு படமாகப் பார்த்து முடித்துவிட்டுக் காலையில் வந்திருந்த தினசரிப் பத்திரிகையின் பக்கங்களையும் புரட்டிக் கொண்டிருந்தான்.

பிரியம்வதை ஏதோ யோசித்தாள். கிணற்றங்கரைக்கும் வாசலுக்கும் இரண்டு முறை நடந்தாள்.

ஒரு முடிவுக்கு வந்தவள் போல், “பெரியப்பா! நானொன்று சொல்கிறேன்…. கேட்கிறேளா?” என்று பீடிகை போட்டாள்.

பெரியப்பா நிமிர்ந்து உட்கார்ந்து கொண்டார். “என்ன இப்படிக் கேட்கிறாய்? நீ சொன்ன எந்த ஒன்றையும் நான் கேட்காமல் இருந்தது கிடையாதே. சொல்லு, சொல்லு…. ‘இன்னும் நாலு நாளைக்கு இருந்துட்டுப் போங்கோ’ என்பாய், அதானே?”

பிரியம்வதை சிரித்தாள். “அதுவும் தான். அத்துடன் இந்தப் பையனைப் பிடிச்சிருக்கு பெரியப்பா ! சமத்தாய் இருப்பான் போலிருக்கு. இவனை இங்கேயே விட்டுவிட்டுப் போயிடுங்களேன். நான் வளர்க்கிறேன். வெறிச்சோடிக் கிடக்கும் இந்த வீட்டிற்கு விளக்காக இவன் இருக்கட்டும். பேச்சுத் துணையில்லாத எனக்குப் பறவை போல் பேசட்டும். குதூகலம் இல்லாத இந்தப் பொழுதைக் களிப்புடன் கழிக்கச் செய்யட்டும்” – மேலும் மேலும் பேசினாள் பிரியம் வதை.

குழந்தை ராஜு, பிரியம்வதையின் பக்கம் திரும்பினான். அவனது அழகிய கண்கள் பிரியம் வதையின் இதயத்தினுள்ளே புகுந்து கொண்டே இருந்தன.

பிரியம்வதை பேச்சை நிறுத்திய பின் சிறிது யோசித்தாள். அந்தக் கடிதக் குவியல் அவள் கண்முன்னே நின்றது. முதல் இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு என்று தொடர்பாக எல்லாக் கடிதங்களையும் தேடி எடுத்துக் கணவரின் நடவடிக்கைக்கு ஒரு கற்பனை தேடிக் கொண்டாள்.

கற்பனை இதயத்தை அழுத்தியது; விசுவரூபம் எடுத்து முன்னின்று அவளைப் பயமுறுத்த முயன்றன. அமைதியைக் குலைக்கும் அந்தப் புது விளைவை எப்படியாவது நீக்கிக் கணவனைக் குடும்பத்தில் பற்று ஏற்படும்படி செய்ய வழி தேடினாள்.

குழந்தை ராஜு புதுப்பாலம் அமைப்பான் என்பது திண்ணம் எனப்பட்டது அவளுக்கு.

‘பெரியப்பா! அவரோ இப்பொழுது எதிலும் பற்றுதல் கொள்ளமாட்டேன் என்கிறார். ‘டூர் டூர்’ என்று அடிக்கடி வெளியூர் போய் விடுகிறார். இவருக்கு அந்தக் கம்பெனியில் ஏழு வருஷ சர்வீஸ் ஆகி இருக்கிறது. வெளியூர் வேலையினின்று உள்ளூர் ஆபீஸிலேயே மாற்றிக் கொண்டு இருக்க வேண்டாமா?

‘சிறு வயதிலேயே இந்தக் கம்பெனியில் வேலைக்குச் சோந்திருக்கிறார். கராச்சி, பெஷாவர் என்று அந்தக் காலத்தே சுற்றியிருக்கிறார். இப்போ … இந்தத் தாம்பத்யம்… பெரியப்பா ! உங்களிடம் சொல்வதிலே தவறில்லை. கல்யாணமாகி வருடம் ஒவ்வொன்றாக ஆக ஆக என்னமோ சூன்ய நிலையும் வெறுப்புமே அதிகமாகின்றன. இந்த ஊஞ்சலில் உட்கார்ந்து ஆடும்போது தொட்டிலிலே குழந்தையை ஆட்டும் நினைவு வந்துவிடுகிறது.

“பாலைவனத்திலே ஒரு பேரின்ப ஊற்றைக் காண ஆவல் உண்டாகிறது. அதனால், இவன் – இந்த ராஜு- சின்னராஜு – என்னிடமே இருக்கட்டும். முன்பின் அறியாவிட்டாலும் பாசத்துக்கு வருஷ மாசக் கணக்கு வேண்டுமா? இவன் இங்கு வந்தவுடனே என்னுள்ளத்தில் நிறைந்து விட்டான் பெரியப்பா! இவனை இங்கேயே விட்டு விட்டுப் போங்கள் பெரியப்பா!” என்று பிரியம்வதை கூறியபடி, சட்டென எழுந்து குழந்தை ராஜுவின் அருகே சென்று அவனைத்

தூக்கினான்.

அவன் மிரளவில்லை . கன்னங்குழிய, புது மாமியைப் பார்த்துச் சிரித்தான்.

“கண்ணா ….. ராஜு ! எங்கிட்டே இருக்கியாடா? உனக்குப் புதுச் சொக்காய் கொடுப்பேன். ஸ்லேட், பலப்பம் கொடுப்பேன். பட்சணம் கொடுப்பேன்.”

குழந்தை ராஜு, “சரி” என்றவன், “ஓ! எங்கம்மா எங்கிருந்தாலும் சமத்தா இருக்கணும்னு சொல்லியிருக்கா. அம்மாவைக் கெட்டிக்காரின்னு சொல்ல நானும் சமத்தா இருக்கணுமோல்லியோ?

பிரியம்வதை அவனைக் கட்டியணைத்து முத்தமிட்டாள். மாறி மாறி அணைத்துக் கொண்டாள்.

பிரியம்வதை இத்தனை உணர்ச்சியுடனும், மனம் விட்டும், படபடப்பாகவும் பேசியது பெரியப்பாவுக்கே வியப்பாயிருந்தது.

அவரும் மனத்தைத் திடப்படுத்திக் கொண்டு குழந்தை ராஜுவைப் பிரியம்வதையிடம் விட்டுச் சென்றார்.

இரண்டு நாள்கள் தன் மனத்துயரை மறந்திருந்தாள் பிரியம்வதை .

குழந்தை ராஜூவுடன் விளையாடுவாள். குலுங்கக் குலுங்க நகைப்பாள். ஒருமுறை விளையாட்டுக்காக அவள், “ராஜு! உனக்கு அப்பா இருக்காரே தெரியுமோ?” என்று கேட்டுவிட்டாள்.

குழந்தை ராஜுவின் கண்களில் கண்ணீர் தளும்பியது. முகம் சிறுத்தது. “எனக்கு அப்பா இல்லை மாமி!” என்றான் அவன்.

குழந்தையை வேறென்ன கேட்பது? இது கேட்டதே தவறென்று தோன்றியது அவளுக்கு.

அன்று மாலை விளக்கேற்றிவிட்டு வெளியே வந்து நின்றபோது தொலைவில் வண்டியொன்று வருவது தெரிந்தது. அவள் கணவன் இராஜசேகரன் வந்து கொண்டிருந்தான். நீண்ட பயணத்துக்குப் பிறகு இன்று திரும்பி வருகிறான். வியாபாரத்தில் பல தொல்லைகள். இதிலே வீட்டு நினைவுகள் வராமல் போகாது.

பிரியம் வதையின் மேல் அவனுக்கு உயிர் என்று சொல்லலாம். எல்லாப் புதிய தம்பதியும் கொஞ்ச காலத்திற்கு நகமும் சதையுமாக இருப்பார்கள். பிறகு தாம்பத்தியத்தில் ஒரு மாறுதல் தோன்றாமல் இராது. ஆனால், இராஜசேகரன் விஷயத்தில் அப்படியில்லை .

தன் கண்களுக்கு அழகாய்த் திகழும் பிரியம் வதையின் முகத்தையும், அதிலே தோன்றி மறையும் இளம் நகையையும், இளம் நகைப்பின் போது மின்னித் தெரியும் வெண் பற்களையும். அந்தப் பின்னல் லாகவமாக அவள் முதுகில் அசையும் அழகையும் அவன் ரசிப்பான்.

அவள் எதிரே இல்லாத வேளையில் கற்பனை செய்வான். சில சமயம் குழந்தையாவான். சில சமயம் சகோதரனாவான். சில சமயங்களில் தகப்பனாவான். பல்வேறு உருவங்களில் பிரியம் வதையுடன் பழகித் திளைத்து உறவு உற்சாகமாக இருக்க, குடும்ப வாழ்க்கை குதூகலமாகச் செய்ய, வாழ்க்கைத் தோணி தேன் நிலவில் மிதக்க வழி செய்து வந்தான்.

குழந்தை … பிரியம்வதை பிள்ளைப் பாசம் கொண்டு இராஜசேகரனுடன் வாதிப்பாள்.

“என்ன கண்ணு? உனக்கு உலகமே தெரியவில்லையே. கலியாணமாகி ஓர் ஐந்து வருஷமாவது நாம் தொந்தரவு இல்லாது இன்ப வாழ்க்கை நடத்தலாமே. நினைத்தபோது குழந்தைப் பெற்றுக் கொள்ளலாம். நம் தேசத்திலா அதற்குக் குறைவு? விவாகமும் – அதன் பின் யோசனையும்’ என்ற இந்தப் புத்தகத்தைப் படி” என்று ஒரு புத்தகத்தை நீட்டினான்.

பிரியம்வதை பொய் கோபம் பொங்கி எழ அந்த இடத்தை விட்டு அகலுவாள். இராஜசேகரனுக்கு என்ன தெரியும் ? குழந்தை இன்பம் தாய்க்கல்லவா தெரியும்!

இடையில் பிரயாணத்தில் பத்துப் பதினைந்து தினத்தைக் கழித்து விட்டு மீண்டும் திரும்புகையில் இருவருக்கும் ஒருவர் மேல் ஒருவருக்கு ஆசை பொங்கித் ததும்பும். அவள் வரப்போகும் முன்னர் கடிதம் வந்துவிடும்.

கசாமுசா என்று கிடக்கும் வீட்டை ஒழுங்குப்படுத்தி வைப்பாள். வண்டிவரும் நேரத்திற்கு வாசலில் தயாராய் நின்று வரவேற்பாள். பூத்துக் குலுங்கும் ஆசையும் பிரதிபலித்துக் கணவனை வரவேற்கும்.

இன்று ….

இராஜசேகரன் பயணத் திட்டம் சரியாக அமையவில்லை. அதனால் திரும்பி வரும் நாள் நிச்சயமாக அவனுக்குத் தெரியவில்லை . இந்த முறை திடீரென்று போய் நிற்போமே என்ற எண்ணத்துடன் வந்தான்.

வண்டியில் வருவது கணவன் என்றறிந்து பிரியம்வதை உள்ளே போய் விட்டாள். படுக்கையறையின் கட்டிலில் விரிக்காத படுக்கை இருந்தது. புழுதி நிறைந்திருந்தது. கொசுவலையும் அலங்கோலமாகக் கிடந்தது. தலையணைகளும் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்தன.

கணவனிடம் உடனே கடிதத்தைப் பற்றிக் கேட்டு முடிவைத் தெரிந்த பிறகுதான் மீதியெல்லாம் என்று அந்த ஏழாவது கடிதத்தை எடுத்துக் கையில் வைத்துக் கொண்டாள்.

சந்தேகத்தின் தாக்குதலால் வேதனையும், சோகமும் கலந்து முகத்திலே பொங்கி வழிந்தன.

இராஜசேகரன் கோட்டைக் கூடக் கழற்றவில்லை. அன்றைய நிலைமை அவனுக்கு விசித்திரமாகப் புலனாகியது. வீட்டிலே இருந்த வரவேற்பு ஏதோ புதுச் சூழ்நிலையை அவனுக்குப் புலப்படுத்தியது.

“பிரியூ…’ என்று கூப்பிட்டுக் கொண்டே அவன் பூட்ஸ் சரக் சரக்’ என்று ஒலிக்க, படுக்கையறைக்குள் நுழைந்தான்.

“என்ன உனக்கு? உடம்பு சரியாயில்லையா? சீக்கிரம் வந்து விடவேண்டும் என்றுதான் பார்த்தேன். இந்தப் பிசினஸே இப்படித்தான். என்னிலேருந்து உடம்பு?” என்று பிரியம் வதையைக் குனிந்து நோக்கினான்.

பிரியம்வதையின் முகத்தில் இராஜசேகரனால் புரிந்து கொள்ள முடியாத கடுகடுப்பிருந்தது. அவள் கையில் அந்த ஏழாவது கடிதம் இருந்தது.

கடிதங்களுக்கு இவள்தான் அத்தியாய நம்பரைப் போல் எண்கள் வரிசையிட்டிருந்தாள்.

பிரியம்வதையின் பேச்சும், அவள் குறிப்பிட்ட கடிதமும் ஒரு கணம் இராஜசேகரனுக்கு விளங்கவில்லை . வந்ததும் வராததுமாக ரயில் அலுப்பு தீர்ந்ததோ, தீரவில்லையோ அதையும் கவனிக்காமல் பிரியம் வதையின் குற்றச்சாட்டுக்கு அவன் பதிலளித்து அவளது கோபநிலையைத் தீர்க்க வேண்டிய நிலை அவனுக்கு ஏற்பட்டு விட்டது.

பிரியம்வதை நீட்டிய கடிதத்தை வாங்கிப் பார்த்தான். ஏற்கெனவே அவன் படித்ததுதான். அது வந்து இருபது நாள்களுக்கு மேலாயிருந்தாலும் புது நோக்குடன் அவன் படிக்கலுற்றான்.

“திரு, இராஜசேகரன் அவர்களுக்கு, வணக்கம்….

சென்ற மாதம் நீங்கள் அனுப்பிய முப்பது ரூபாய் பணம் கிடைத்தது. உங்களுடைய உதவிக்கு என்ன கைமாறு செய்வது? என் இதய பூர்வமான அன்பைத்தான் செலுத்த வேண்டும். இப்பொழுது படுத்த படுக்கையாயிருக்கும் என்னால் எழுந்திருக்கக்கூட இயலவில்லை. மாமாவின் நிலைக்கு அவர் எனக்குப் பணிவிடை செய்யும் பெரும்பாரத்தையும் அவர் மீது ஏற்றிவிட்டேன். மாமி – அவள் உலக மாமியைப் போலன்றி என்னைச் சொந்தக் குழந்தையை விட மேலாகக் காப்பாற்றுகிறாள்.

இந்த நான்கு வருடமாக நீங்கள் அவ்வப்போது அளித்து வந்த உதவியால் மாமாவுக்கு எத்தனையோ உபயோகம். கடிதத்தில் வார்த்தையால் எழுதி நான் நன்றியை எப்படித் தெரிவிப்பது?”

குழந்தை ராஜு உங்கள் நினைவாகவே இருக்கிறான். சித்தப்பா’ என்று தங்களைக் கூப்பிடுமாறு அப்போது சொல்லிக் கொடுத்தேன். அதையே அவன் மறக்காமல் கூப்பிட்டுச் சித்தப்பா யெப்பே வவ்வாமா’ என்கிறான். நீங்கள் ஒரு வருடத்திற்கு முன்புதான் வந்து போனீர்கள்.

நான் படுத்த படுக்கையாகிவிட்டேன். என் நெஞ்சில் எழும் ஆசைகள் ஆயிரமாயிரம். உங்களைப் பற்றி நீங்கள் ஒன்றுமே எழுதுவதில்லை. இந்தப் பக்கம் வரும்போது ஒருமுறை வந்தால் நலம்.

உங்கள் நன்றி மறவாத
சீதா”

இராஜசேகரன் கையினின்று அந்தக் கடிதம் நழுவி விழுந்தது. மனக் கண்முன் எழுந்த சம்பவத்தையும் நீர்த்திரை மங்கச் செய்து விட்டது.

‘இந்த நாடகத்தை நீங்கள் என்னிடம் சொல்லாமலே இருந்தீர்கள்’ – பிரியம்வதை எழுந்து நின்று கொண்டாள். கண்களில் நீர் ஆறாய்ப் பெருகியது.

“பிரியூ…” – ஏதோ சொல்ல வாயெடுத்த அவள் குரலை மேலெழ விடாமல், “ஆமாம்… உங்கள் பால்ய லீலை எனக்குத் தெரியாமலே போய்விடும் என்று நினைத்தீர்கள். அப்படியே மறைத்துப் பழைய பிரியத்தை வெளிக்குக் காட்டாமல் உள்ளத்திலேயே மங்க அடித்து விடலாம் என எண்ணினீர்கள். நான் தடையாய் வந்தேன். சிறு வயதுச் சிநேகத்தைப் பூர்த்தி செய்ய உங்கள் அபிலாஷையைப் பூரணமாக அடைய விடாமல் குறுக்கே நான் வந்தேன்! என்ன நாடகம்…

என் மீது ரொம்பவும் பிரியம் போல் நடித்தீர்கள். ஆனால், ஆபீஸ் பிரயாணத்தின் போது காதலியின் வீட்டிற்கு விஜயம்; அவளுக்குப் பொருளுதவி !

“என்னிடம் சொல்லியிருந்தால்தான் என்ன? ‘என் பிரியமே! உன்னிடம் என் அந்தரங்கத்தை ஒருநாளும் மறைக்கமாட்டேன்’ என்று கொஞ்சுவீர்களே… குழைவீர்களே! இது அந்தரங்கமில்லயா? இதுவே அந்தரங்கமில்லாவிடில் இன்னும் இதைவிட அந்தரங்கம் எவ்வளவு புகைந்துள்ளதோ?

“போதும்! உங்கள் குழந்தை வேண்டாம்’ எண்ணத்தின் மர்மம். அங்கே வளர்கிறான் ஒரு சிறுவன்; இங்கே குழந்தை வேண்டாம்! கடைசியாகக் கேட்கிறேன். இதயத்தில் ஒருவருக்குத்தான் இடமளிக்க முடியும். அவளுக்கே இடமளித்து என்னைப் பிறந்த வீட்டிற்குக் கொண்டு போய் விட்டு விடுங்கள். நான் காலமெல்லாம் இமவான் மகளைப் போல் தவஞ்…”

பிரியம்வதையின் கோபாவேச வார்த்தைகளை அணை கட்டித் தடுக்கும் முறையில் ‘பிரியம்வதை …” என்று கூவினான் இராஜசேகரன்.

‘என்ன இது குழந்தைத்தனமான பேச்சு ? முழுமையாகத் தெரியாத சமாசாரத்தைக் கொண்டு ஆழத்தின் முடிவு என்ன என்று அறிய முயலுகிறாயே…. கடிதங்களைத் தேடி எடுத்தாய்; வரிசைக் கிரமமாய் நம்பர் போட்டாய். படித்தாய். பழைய ரகசியம் கண்டுபிடித்தவள் போல் கத்துகிறாய். முழு விவரத்தையும் நான் கூறுகிறேன். சற்று அமைதியாய் இரு’ என்று கூறிய வண்ணம் இராஜசேகரன் பூட்ஸைக் கழற்றி வைக்க வாசல் ரேழிக்குச் சென்றான். அப்பொழுது தான் எதிர் வீட்டிலிருந்து மாமி” என்று கூப்பிட்டுக் கொண்டு ராஜு உள்ளே நுழைந்தான். இத்தனை நேரமாக அவன் எதிர்வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தான்.

இராஜசேகரன் ஒரு விநாடி நின்றான். பூட்ஸையும் கழற்றாமல் அந்த சிறுவனைப் பின் தொடர்ந்து, “பிரியூ… இந்தக் குழந்தை யார்? எங்கேயோ பார்த்தது போலத்தான் இருக்கிறது” என்றவுடன், விம்மிய வண்ணம் தலையணையில் முகம் புதைத்திருந்த பிரியம் வதை, “ஆமாம்… ஆமாம்… பார்த்தாற்போல் தான் இருக்கும். பழைய நினைவு வந்துவிடும். பேச்சை மாற்ற இந்த நாடகம். அப்பப்பா ! அவ்வளவு தூரம் ஆள் உள்ளே இருக்கிறீர்கள்!” என்றதும் இராஜசேகரனின் முகம் கடுகடுத்தது.

சிறுவன் ராஜு ஒன்றும் புரியாதவன் போல் விழித்தான். அவனுக்கும் இந்த மாமாவை எங்கோ பார்த்தாற் போலத்தானிருந்தது. குழந்தை யுள்ளம் கூச்சத்தால் வெளியிடத் தவித்தது.

இராஜசேகரன் சூட்டையும் கோட்டையும் கழற்றி விட்டு வேஷ்டி உடுத்தி மேஜையருகே வந்தான். மேஜை மீது பிரிக்கப்படாத ஒரு கடிதமிருந்தது. அதுவும் சீதாவிடமிருந்து வந்த கடிதம்தான். இதை மட்டும் பிரியம் வதை ஏன் படிக்கவில்லை என்ற எண்ணத்தோடு பரபரப்புடன் கிழித்தான். படித்தான். அவன் முகத்தில் உணர்ச்சிகள் மாறி மாறித்தோன்றின.

“பிரியம்வதை! இத்தனை கடிதங்கள் படித்தாயே, இந்தக் கடிதத்தையும் படித்திருந்தாயானால் ஒரு நிமிஷத்தில் என் மீது அபாண்டம் சுமத்த முயன்றதை மாற்றியிருப்பாய்… நான் படிக்கிறேன் கேள்” என்று அந்த எட்டாவது கடிதத்தைப் படிக்கலுற்றான்.

“எத்தனையோ உபகாரம் செய்து வாழ்க்கையை ஜீவனற்றுப் போகாது செய்த திருவாளர் இராஜசேகரன் அவர்களுக்கு, வணக்கம்.

முன்னரே இரண்டு கடிதங்கள் போட்டிருந்தேன். கிடைத்திருக்கலாம். துர்ப்பாக்கியவதியான என்னைத் தவிர யாவரும் வீட்டில் சௌக்கியம். என் உடம்பைப் பரிசோதித்துப் பார்த்த டாக்டர் டி.பி’ என்று கூறிவிட்டார். என் மாமாவாலும் ஒன்றும் செய்ய இயலாது. என் மாமிக்கும் அளவுக்கு மீறிக் குழந்தைகள் பிறந்து விட்டனர். அவராலும் ஒன்று செய்ய இயலாது.

குழந்தை ராஜு வேறு அருகில் இருந்தால் அவனுக்கும் நோய் தொற்றிக் கொள்ளும் என எச்சரித்து விட்டார் டாக்டர். அத்துடன் குழந்தை ராஜு முன்னேற வேண்டியவன். உங்களால் காப்பாற்றப்பட்டவன் அவன். நீங்கள் இருந்திராவிடில் அன்று நான் பிழைத்திருக்க முடியாது.

நான் பிழைத்திராவிடில் ராஜுவும் எங்கே பிறந்திருக்கப் போகிறான்? உங்கள் கைபிடித்த குலவிளக்கை நான் பார்த்ததில்லை. என்றென்றும் அவள் வாழ வேண்டும். உங்களைக் கணவனாகப் பெற்ற அவள் பாக்கியசாலி. அடுத்த வாரம் என்னைச் சென்னை சானிடோரியத்தில் சேர்க்க ஏற்பாடாகி இருக்கிறது. மாமாவுக்கும் ஒரு பளுவிட்டது; இந்த பூமிதேவிக்குத்தான் ஒரு பளு….

அத்துடன் ஒன்று சொல்ல மறந்துவிட்டேன். குழந்தை ராஜு பட்டணம் போகும் ஒருவருடன் அனுப்பிப் பால மந்திரில் சேர்க்க ஏற்பாடு செய்துவிட்டேன். ஆஸ்பத்திரியில் எவ்வளவு நாள் இருப்பேனோ தெரியாது. என்னை வந்து நீங்கள் பார்க்காவிடில் கூடப் பாதகமில்லை . பாலமந்திரில் வளரும் பாலன் ராஜுவை நீங்கள் அடிக்கடிப் பார்த்துக் கொள்ளுங்கள்.

உங்கள் உதவியை என்றும் மறவா
சீதா”

இராஜசேகரன் கடிதத்தை முடித்தான். அவன் கண்களில் நீர் துளிர்த்தது. சட்டென அவன் நினைவு அருகே இருந்த பாலகன் மீது வீழ்ந்தது. குழந்தை ராஜு, வாடா! நீ இங்கே எப்படிடா வந்து சேர்ந்தாய்?” என்று ராஜுவை வாரித் தூக்கினான்; அணைத்தான்: கொஞ்சினான்.

பிரியம்வதை ஒரு கணம் பேசவில்லை. குழந்தை ராஜு சீதாவின் குழந்தை. சரி.. சீதாவுக்கும் இராஜசேகரனுக்கும் எப்படித் தொடர்பு? செய்த நன்றி… உதவி என்கிறாளே அவள் . என்ன உதவி செய்தார் இவர் என்றறிய ஆவலுற்றாள். அதை அறிந்தால் தான் சந்தேகம் தீரும் போலிருந்தது.

இராஜசேகரன் அந்தக் குறையையும் வைக்கவில்லை. ராஜுவை அணைத்தபடியே, “அந்த நாளை என்னால் மறக்க முடியாது. பிரியம்வதை ! கல்யாணமாவதற்கு இரண்டு மூன்று வருடங்களுக்கு முன்பு நானும் சந்திரமூர்த்தியும் இணை பிரியாச் சிநேகிதர்கள். ஒன்றாகப் படித்தோம்; ஒன்றாகவே எங்களுக்கு வேலையும் கிடைத்தது.

“வேலை கிடைத்த ஆறு மாதங்களில் எங்களை லாகூரில் உள்ள ஆபீஸிற்கு மாற்றி விட்டனர். அங்கும் நாங்கள் சேர்ந்தாற்போலவே வசித்து வந்தோம். நண்பன் சந்திரமூர்த்திக்குத் திருமணம் நிச்சயமாகியது. திருமணத்திற்கு இருவருக்கும் சேர்ந்து லீவு கிடைக்கவில்லை. கல்யாணமாகிக் கூடவே மனைவியையும் புதுக்குடித்தனத்துக்கு அழைத்து வந்துவிட்டான் சந்திரமூர்த்தி.

“ஒன்றாகவே இருந்து வந்த இருவரும் பிரித்தோம். லாகூரில் தமிழர்கள் வசிக்கும் ஒரு பகுதியில் சிறு இடம் குடித்தனத்துக்குக் கிடைத்தது. அதே வீட்டில் நான்காவது மாடியில் ஒரு சிறு அறை எனக்குக் கிடைத்தது.

“சந்திரமூர்த்தியின் வாழ்க்கை இன்பமாக நடந்து வந்த சமயத்தில்தான் பாகிஸ்தான் தகராறு எழுந்தது. இந்தியப் பிரதேசத்தில் முஸ்லீம்களும், முஸ்லீம் பிரதேசத்தில் இந்துக்களுமாக ஒருவரை யொருவர் சகோதரர் என்ற எண்ணம் இல்லாமல் அடித்துக் கொண்டு மாண்டனர்.

“லாகூரிலே அந்த தீ வெகு உகரமாக பிடித்தது. சில தினங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்து வந்த அக்கிரமங்கள் பரவலாகி அதிகமாகிவிட்டன. நாங்கள் காரியாலயத்திற்கு உயிரைப் பிடித்துச் செல்வோம்.

“அன்று அந்தத் துக்க நாள். சந்திரமூர்த்தி கம்பெனி விஷயமாக லாகூரின் நான்கு மைல் தொலைவில் இருந்த ஓர் ஊருக்குச் சென்றிருந்தான். லாகூர் நகரம் அமர்க்களப்பட்டது. எங்கும் வெட்டு, குத்து, தீ வைத்தல்.

“எங்கள் பகுதியில் அட்டூழியம் அதிகமாயிருந்தது என்றறிந்தவுடன் நான் விரைந்தேன். அந்தத் தெருவிலே ஒரே தீனக்குரல். கட்டடங்கள் எரிந்தன. நாங்கள் இருந்த கட்டடத்து நான்காவது மாடியில் தீ. என் அறை அங்குதானே உள்ளதென்று நான் விரைந்தேன். என் அறையை அணுக முடியவில்லை.

“சந்திரமூர்த்தியின் மனைவி இருக்கும் இடத்தை அடைந்தேன். புகை சூழ்ந்திருந்த அந்த இடத்தில் சட்டென அவர்களைக் காண முடியவில்லை . சீதா’ என்று கூவிக் கதவை தட்டினேன். கதவு பிளந்துத் திறந்தது. சீதா நிறைமாத கர்ப்பிணி , ஊருக்குப் போக வேண்டும் என்று திட்டமிட்டு இருந்ததற்குள் கலகம் குறுக்கிட்டது.

“சீதா தரையில் படுத்திருந்தாள். கட்டடத்தைக் சூழும் புகையும், வெளியே கேட்கும் ஓலமும், கணவன் வராததும் உடல் உபாதையும் சேர்ந்து பாதி மயக்கத்தை அவளுக்கு அளித்து விட்டன. அவளைச் சொந்த சகோதரி போல் பாவித்து வாரி இரு கைகளிலும் தூக்கிக் கொண்டு படிக்கட்டு வழியாக இறங்கிச் சென்றேன்.

“நல்ல காரியம் செய்தேன். சமயத்தில் செய்தேன். நான் இறங்கிய மறுவிநாடி கட்டடம் முழுமையும் தீ பிடித்தது. யாரோ ஒளிந்திருக்கிறார்கள் என்று வெறிப் பிடித்த கூட்டம் அந்தத் தெருவையே தாக்கியது. நான் மெல்ல சீதாவைத் தூக்கிச் சென்று தென்னிந்திய டாக்டர் வீட்டுக் கதவை தட்டினேன். அவர் எங்களுக்கு முன்பே ஊரை விட்டு ஓடியிருந்தார்.

‘சந்திரமூர்த்தியைப் பற்றி அறிய எனக்கு மிகவும் ஆவல். எங்கே போய் விசாரிப்பது? நல்ல வேளையாக எனக்குத் தெரிந்த டாக்ஸிக்காரன் ஒருவன் உதவி புரிய முன் வந்தான். புகை நடுவே தீயிருப்பதைத் தெரிந்து கொண்டேன். முள்ளிலும் மணமிக்க ரோஜா அந்த டாக்ஸிக்காரன். அவனும் லாகூரை விட்டு வெளியேற விரும்புவதாகவும் நேரே காரோட்டிய வண்ணம் லாகூரை விட்டு பயங்கரமான மிருகத்தனம் புரிபவர்களின் எல்லையை விட்டுப் போக விரும்புவதாகவும் கூறினான்.

“அந்தச் சமயத்தில் எதையும் என்னால் எண்ண முடியவில்லை. நண்பன் சந்திரமூர்த்தியின் நினைவு நெஞ்சை விட்டு அகலவில்லை. இங்கோ சீதா மயக்கமுற்ற நிலையில் முக்கி முனகிய வண்ணம் இருக்கிறாள். அவளுக்கு எந்த நேரத்திலும் ஆபத்து நேரலாம். சந்திரமூர்த்தியைத் தேடிப் போனால் இங்கே பெரும் விபத்து நேர்ந்து விடும். அதனால் டாக்ஸி டிரைவரை வேகமாக ஓட்டச் சொன்னேன். இயற்கையாகவே டிரைவருக்கு இருந்த பயத்தில் கார் காற்றிலும் கடுகிப் பறந்தது.

‘ஆபத்தையெல்லாம் கடந்த இந்தியர்கள் அதிகம் வசிக்கும் பட்டணத்துக்கு வந்து சேர்ந்தோம். அங்கு ஆஸ்பத்திரியில் சீதாவைச் சேர்த்தேன். மிகவும் பலவீனமான நிலையில் இருந்த சீதா ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள். ஆஸ்பத்திரியில் சொந்தச் சகோதரியைப் பார்ப்பதுபோல் தினமும் போய்ப் பார்த்து வந்தேன். சந்திரமூர்த்தி நான் எதிர்பார்த்தபடியே எங்கோ விபத்தில் சிக்கிக் கொண்டான் என்ற தகவல் கிடைத்தது. அத்துடன் எங்கள் லாகூர் அலுவலகமும் நெருப்பிலே சாம்பலாயிற்று என்பதையும் அறிந்தேன்.

“தாங்க முடியாத வேதனை எனக்கு. அந்த நிலைமையில், அந்த இடுக்கண் சமயத்தில் நான் இனிய முகத்தோடும் உள்ளத்தோடும் இருந்திருக்காவிடில் இடிந்து போய் வாழ்க்கையில் தோற்றிருக்க வேண்டியதுதான். நல்லவேளையாக அப்படி நேரவில்லை. சீதாவின் உடம்பு கொஞ்சம் தேறும் வரையில் அங்கேயே இருந்தேன்.

“பிறகு சீதாவை அழைத்துக் கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் ஒரு கணம் விசாரப்பட்டேன். சீதாவுக்குப் பெற்றோர் இல்லையென்றும் மாமா வீட்டில் தான் அவள் வளர்ந்ததாகவும் மாமாவும் மிகவும் கஷ்டப்படுகிறார் என்றும் அறிந்தேன். அங்குதான் அவளைக் கொண்டு சேர்க்க வேண்டி வந்தது. அவ்வப்போது நான் ஏதாவது பணம் கொடுத்து உதவுவேன்.

‘இதுதான் நடந்தது. உன்னிடம் சொல்லாதது… நீ சந்தேகப்பட்ட உன் கணவனின் பூர்வாச்ரமக்கதை . நீ சந்தேகப்பட்டு என்னென்னவோ பேசி விட்டாய் என்று இராஜசேகரன் கூறுவதற்குள் பிரியம்வதை குறுக்கிட்டு, ‘நான் சந்தேகப்பட்டாலும் கணவன் கொண்டுள்ள பாசம் மனைவிக்கும் உண்டென்பதைக் காட்டிவிட்டேன் பாருங்கள். குழந்தை ராஜு சீதாவின் குழந்தை என்று முதலில் தெரியாவிடினும் அவனை இங்கே விட்டுவிட்டுப் போகுமாறு பெரியப்பாவிடம் வேண்டிக் கொண்டேன்.”

“ராஜு… ராஜு… என் செல்வம்… சுந்திரமூர்த்தியின் குழந்தையா?” என்று மாறி மாறி முத்தம் தந்தான் இராஜசேகரன்.

“நாளைக்கு தாம்பரம் சானிடோரியத்துக்குப் போய்ச் சீதாவைப் பார்த்து வருவோம். அவள் ஆசுபத்திரியில் சேர வந்திருப்பாள் ” என்றாள் பிரியம்வதை . அவள் முகம் மலர்ந்து பூரிப்புடன் விளங்கியது.

மறுநாள் குரோம்பேட்டை ஸ்டேஷனில் இறங்கிசானிடோரியத்திற்குச் சென்றனர் மூவரும்.

“கும்பகோணத்திலிருந்து சீதா என்ற பேஷண்ட் வந்திருக்கிறார்களே, எந்த வார்டு ‘ என்று வினவினான் இராஜசேகரன்.

பிரியவம் வதை பதிலை ஆவலுடன் எதிர்பார்த்தாள், சீதாவைக் காணும் அவாவினால்.

மெடிக்கல் ஆபீஸர் பதிவுப் புத்தகத்தை இரண்டு முறை புரட்டிப் பார்த்துவிட்டு. கும்பகோணம் சீதாவா? ஒரு வருஷத்துக்கு முன்பே விண்ணப்பம் கொடுத்திருந்தார்கள். பெட் காலியாயிருக்கிறதென எழுதிப் போட்டோம். இன்று வரை தகவல் இல்லை . அவர்கள் வரவும் இல்லை ” என்று பதில் கூறிவிட்டார்.

பிரியம் வதையின் கண்களினின்று நீர் தாரை தாரையாகப் பெருகியது. இராஜசேகரன் தொலைவில் போகும் மின்சார ரயிலைப் பார்த்தான்.

சீதா இனி வரவே மாட்டாள்… வரவே மாட்டாள் என்பது அவர்களுக்கு எப்படித் தெரியும்?

குழந்தை ராஜுவுக்கு பிரியம் வதைதான் இனி தாய் என்பது அவர்களுக்கு எப்படித் தெரியும்?

– மாந்தோப்பு மரகதம், சிறுகதை தொகுதி -7, முதற் பாதிப்பு: 2013, யாழினி பதிப்பகம், சென்னை 600108.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *