ஊறிய உணர்வுகள் வழிந்து ஓடுகின்றன

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: மல்லிகை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 3, 2023
பார்வையிட்டோர்: 1,586 
 
 

(1973ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

இரண்டு மாத விடுமுறைகளின் பின்னும் அவள் கந்தோருக்கு வந்தும் நேரத்துக்கு வரமுடியாமல் போய்விட்டது. ஏழு மணிக்கு அவளுக்கு வேலை ஆரம்பம் எனினும் அவள் பிந்தியது பற்றி மேலதிகாரி குறைபட்டுக் கொள்ளவில்லை. ‘பிள்ளை சுகமுடன் இருக்கிறதா’ என்று மட்டும் கேட்டுக் கொண்டார். அவள் ‘ஆம்’ என்றாள். ஒவ்வொருவரும் அவளிடம் வந்து சுகம் விசாரித்துக் கொண்டு சென்றனர்.

மன்னார் ரெலிபிறிண்டறில் இருந்து வரும் தந்தி நாடாக்களை ஒட்டிச் சரிபிழை பார்த்து அனுப்பும் வேலை அவளுக்குக் காத்திருந்தது. அவள் மன்னார் ரெலிபிறிண்டர் இருக்கும் இடத்தைப் பார்த்தாள். ரெலிபிறிண்டரை இயக்குபவளாக பத்மா இருந்தாள். மன்னார் ரெலிபிரிண்டருக்குப் பக்கத்தில் நுவரெலியா ரெலிபிரிண்டரும் இருந்தது. அந்த இடத்தில் லதாவும் மாலினியும் இருந்தார்கள். எட்டு மணிக்குத்தான் மன்னாரில் இருந்து தந்திகள் வர ஆரம்பிக்கும். படிகள் ஏறி வந்ததினால் அவள் மூச்சை இழுத்து விட்டுக் கொண்டு இருந்தாள்.

‘பெம்பிளைப் பிள்ளைதானே என்ன பெயர் வைத்திருக்கிறாய்’ என்ற கேட்டாள் பத்மா.

‘பாமா என்று பெயர் வைத்திருக்கிறேன். அவருக்கும் எனக்கும் பிடித்தமான பெயர்’ என்றாள் அவள்.

‘தனியப்பாமாவா? அல்லது……’

‘இல்லைப் பாமா தான். ஆர். பாமா’ என்ற சொல்லி மெல்லச் சிரித்தாள்.

‘என்ன ஆர்.பாமா’

‘இல்லையப்பா அவருடைய பெயரின் முதலெழுத்து ஆர் தானே’ என்றாள் அவள்.

எல்லோரும் சிரித்தனர்.

‘நீ இல்லாமல் கந்தோர் எங்களுக்கு அலுத்துப் போய் விட்டது. இனிக் கந்தோர் இனிக்கும்’ லதா.

‘என்ன கவ் அன் கேற் தானே பிள்ளைக்கு’ என்று கேட்டாள்டாலினி.

‘ஓமப்பா, என்ரை பிள்ளையும் அப்படித்தான்’ என்று கதிரையின் பின்னால் நின்று சொன்னாள் நந்தினி.

‘நந்தினி எட்டுக்கா உனக்கு வேலை?’ என்று பத்மா அவளைக் கேட்டாள்.

‘ஓம். எட்டு மணிக்குத் தான். மாத்தறை’ என்று சொல்லி விட்டு, மாத்தறையை நோக்கி மெல்ல நடந்தாள்.

‘சில பேருக்குப் பால் இருக்காது, உனக்கு எப்பிடி?’ என்றாள் பத்மா.

‘எனக்கு நல்லாய்ப் பால் வருகிறது. பத்தியத்திலை வெள்ளைப் பூடு கனக்கச் சேருகிற படியால் பால் நல்லா ஊறும். சிலவேளைகளில் கசிந்து உள்ளே நனைந்துவிடும். பால் கூட இருந்தால் ‘சக்’ பண்ணி எடுத்துப் போடுகிறன்.’

‘உங்களுக்கு எப்ப பார்த்தாலும் கதைதான். எட்டு மணியாகிவிட்டது. மன்னார் ‘லயின் சரி’ என்று சொல்லிக் கொண்டு ரெலிபிரிண்டருக்கு அருகில் வந்தார் ‘ரெஸ்ட்கிளாக்’ எங்கள் பகுதியை மேற்பார்வை செய்யும் மாஸ்டரும் வந்தார். அவரைக் கண்டதும் மாஸ்டர் மன்னார் சரி’ என்று ரெஸ்ட்கிளாக் சொன்னார்.

‘சரி சரி லயின் எப்படியோ தெரியவில்லை’ மாஸ்டர்.

‘இன்று தான் வந்ததோ? எப்படி சுகமாய் இருக்கிறதோ பிள்ளை’ ரெஸ்ட் கிளாக்.

‘ஓம் மாஸ்டர். பொம்பிளைப் பிள்ளை’ அவள்.

‘பால் குடிக்குதோ?’

ரெலிபிறிண்டர் வேலைசெய்யும் சத்தத்தில் ரெஸ்ட்கிளாக்கின் கேள்வி அவள் காதில் அரைகுறையாகத்தான் விழுந்தது. கேள்வி இருபொருள் படத்தான். எனினும் அவள் ‘பிள்ளை பால் குடிக்கிறதோ’ என்ற எண்ணத்துடனேயே வேலையில் ஈடுபட்டாள்.

***

மன்னார் ரெலிபிறிண்டர் தந்திச் செய்தி நாடாக்களை உமிழ்ந்து கொண்டே இருந்தது. அவளும் நாடாக்களை ஒட்டிக் கொண்டே இருந்தாள். பத்துப் பன்னிரண்டு தந்திகளை ஒட்டி முடித்து விட்டாள். நாரியில் கொஞ்ச நோ இருந்தது. கதிரையை இழுத்து கொஞ்சம் கிட்டப் போட்டுக் கொண்டாள். அதன் பிறகு ஒரு தந்தியை ஒட்டிச் சரியாய் இருக்கிறதா என்று பார்த்தாள். தந்தியின் விலாசத்தில் வீட்டு இலக்கம் இருந்தது. இலக்கம் வந்தால் ரெலிபிறிண்டரை இயக்குபவர் இலக்கத்தை திரும்பவும் அடித்திருக்க வேண்டும். அப்படி அடித்த இரண்டு இலக்கங்களும் சரியாக இருக்க வேண்டும். வித்தியாசம் இருந்தால் அதனைத் திருத்திக் கொள்ள வேண்டும். இலக்கம் 808 என்று இருந்தது. திருப்பி அடித்ததில் 88 என்று இருந்தது. ஆகவே அவள் குறிப்பை எழுதித் தந்தியைப் பத்மாவிடம் கொடுத்தாள். வந்திருந்த நாடாவை ஒட்டினாள். ஒட்டும் போதே அது தமிழ் தந்தி என்று தெரிந்து விட்டது. தந்திச் செய்தியில் ‘பிரசவத்துக்காக ராணி ஆஸ்பத்திரியில். உடனே வரவும் நாதன்’. படித்தவுடன் ‘என்னையும் இப்படித்தானே ஆஸ்பத்திரியில் நிப்பாட்டிப் போட்டு என்ரை மனுசனுக்கு தந்தி குடுத்திருப்பினம்’ என்று எண்ணினாள்.

இடுப்புவலி தொடங்கியதும் தாய் தன்னை ஆஸ்பத்திரியில் கொண்டுபோய் விட்டதையும், வாட்டில் மற்றவர்கள் போடும் கூச்சலையும் அவள் கண்டாள். மற்றவர்களைப் பார்க்கப் பிரசவம் என்றதும் ஒரு பயங்கரமானது என்று எண்ணினாள். இல்லை இது ஒவ்வொரு பெண்ணுக்கும் உரிய கடமை என்று அவளது மனம் அவளுக்குச் சொல்லியது. ஆகவே அவள் அந்தக் கடமையைச் செய்யக் காத்து நின்றாள்.

கந்தோரிலிருந்து எல்லா ரெலிபிறிண்டர்களும் வேலை செய்து கொண்டிருந்தன. ஒரே இரைச்சல். தந்திகள் வந்து கொண்டிருக்கும் நாடா முடிவதற்கான அறிகுறியாக சிவப்பு நிறமாக வந்து கொண்டிருந்தது. இதைப் பத்மா அவதானித்தாள். மாஸ்டர் கத்திப் புதிய டேப்பை வரவழைக்க முயற்சித்தார். ‘டேப் மாற்றப் படுகிறது. அதுமட்டும் அடிக்க வேண்டாம்’ என்று மன்னாருக்கு சமிக்ஞை கொடுத்துவிட்டாள் பத்மா. ரெலிபிறின்டர் வேலை செய்வது நின்று விட்டது. வந்து விழுந்திருந்த டேப்புகளை அவள் தந்திப் பாரத்தில் ஒட்டிக் கொண்டிருந்தாள்.

‘பத்மா நீ எப்படி பிள்ளைக்கு பாலை நிற்பாட்டினனீ’ என்றாள் மாலினி.

‘உமக்கு ஏன் உந்தப் பிரச்சினை?’ பத்மா

‘இல்லை சும்மா தான்’ மாலினி.

‘எனக்கும் தான் உந்தப் பிரச்சினை, பாலை எப்பிடி நிற்பாட்டுறது என்று தான். பிள்ளை குடியாமல் விட்டால் அல்லது குடுக்காமல் விட்டால் கொஞ்ச நாளிலை நின்று போடுமோ?’ என்று அவள் கேட்டாள்.

‘இறைக்கிற கிணறு தானே ஊறும்’ பத்மா.

டேப் போடும் ஆள் வந்து போட்டுவிட்டும் போனான். ‘இனி அடிக்கலாம்’ என்று பத்மா மன்னாருக்குத் தெரிவித்தாள். மன்னார் ரிெலிபிறிண்டர் வேலைசெய்யத் தொடங்கிவிட்டது. தந்திகளை ஒட்டிக் கொண்டே இருந்தாள். ‘பெண் குழந்தை தாயும் சேயும் நலம்’ என்று ஒரு தந்தி வந்தது. அது போகவேண்டிய இடம் திருகோணமலை. அவள் தந்தியைத் திருகோணமலை ரெலிபிரிண்டர் வேலைசெய்யும் இடத்திற்குச் சென்று அடிப்பதற்காக வைத்தாள். அது அவள் செய்யும் வேலையில்லை. அந்தத் தந்தியின் பால் ஏற்பட்ட வாஞ்சையினால் அவள் அப்படிய் செய்தாள். தான் பிள்ளை பெற்றபோது தந்தி பிந்திக் கிடைத்தது போன்று இந்தத் தந்திக்கும் நடக்கக் கூடாது என்று அவள் விரும்பினாள். தான் பிள்ளைப் பெற்றபோது தனக்கு ஏற்பட்ட கஷ்டங்கள் மகிழ்ச்சிகள் எல்லாம் நினைவுக்கு வந்தன. கால்களுக்கிடையிலிருந்து ‘அம்மா, அம்மா’ ஒரு புதிய குரல் கீச்சிட்டதை உணர்ந்தாள். அவள் நினைவிழந்தாள். கண்விழித்துப் பார்த்தபோது தான் வாட்டில் இருப்பதைத் தெரிந்து கொண்டாள். தொட்டிலில் அவள் பிள்ளை புழுவாய் நெளிந்தது.

‘அம்மா பிள்ளையைப் பார்ப்பம்’ என்று அவள் கேட்டாள். தாய் பிள்ளையைக் கிட்டக் கொண்டு வந்தாள். மூக்கைத் தடவிப் பார்த்தாள். கண்களை வருடிப் பார்த்தாள். கன்னத்தைக் காதை எல்லாவற்றையும் தொட்டுப் பார்த்தாள். தாயின் விரலின் ஸ்பரிசத்தை உணர்ந்த குழந்தை சிணுங்கியது. ‘மூக்கும் கண்ணும் சரியாக அவரைப் போலை. வாயும் காதும் என்னைப் போலை’

ஆஸ்பத்திரியில் மூன்று நாட்களுக்கு மேல் நிற்க வேண்டி வந்தது. நாலாம் நாள் காலையில் பிள்ளைக்குப் பால் ஊட்டத் தீர்மானித்தாள். குழந்தை பால் குடிக்க முடியாமல் கஷ்டப்பட்டது. அப்பொழுதுதான் நேர்கம் வந்தாள். அவளின் ஆலோசனைப்படி அதிகமாக இருந்த பாலை ‘சக்கர்’ மூலம் ‘சக்’ பண்ணி வெளியேற்றி விட்டு நிப்பிள் சின்னதானதும் குழந்தைக்குப் பாலூட்டினாள். பிள்ளையின் நாக்கும். உதடும் காம்பில் படும்போது அவளுக்கு உடம்பு புல்லரித்துக் கொண்டது.

நிசப்தம். அவள் சுய உணர்வு பெற்றாள். மின்சாரம் தடைப்பட்டிருந்ததை உணர்ந்தாள். மின்சாரம் நின்றதும் மாஸ்டர் தனது குறிப்புப் புத்தகத்தில் எட்டு நாற்பத்தி ஐந்து என்று குறித்து மின்சாரம் தடைப்பட்டது என்று எழுதினார். குறிப்புப் புத்தகத்தை மேசையில் வைத்துவிட்டு ‘ரெஸ்ட் கிளாக்’ இருக்கும் இடத்துக்குப் போய் ‘டெயிலி நியூஸ்’ஐ எடுத்துக் கொண்டு வந்து படித்தார். பின்பக்கத்தில் ‘கவ் அன் கேட்’ விளம்பரம் ஒன்று இருந்தது. அவள் அந்த விளம்பரத்தைப் பார்த்தாள். ஒரு குழந்தை கையை நீட்டி எதையோ கேட்பது போன்ற அழகான படமும் கவ் அன்ட் கேற் படமும் இருந்தது. ‘தனது குழந்தையும் அழகு வழிந்து இப்படித்தானே இருக்கும்’ என்று எண்ணினாள். மாஸ்டர் முன்பக்கச் செய்திகளைப் படித்து விட்டு பின்பக்கம் படித்தார். கண்ணுக்குள் கவ் அன்கேட் டின்னும் அவளது குழந்தையின் முகமும் மாறி மாறி அவளது மனக் கண்ணில் ஓடின. ‘இப்ப அம்மா பாலைக் கரைத்துப் போச்சியிலை கொடுக்கக் கூடும். என்ரை குஞ்சு குடிக்காமல் அழுது கொண்டு இருக்குதோ’ என்று அவள் யோசித்தாள். ‘இல்லை அப்பிடி அம்மா விட மாட்டா. பிள்ளை கட்டாயம் பால் குடிக்கும்’ என்று யோசித்தாள்.

‘சடசட’ எனச் சத்தம். மின்சாரம் வந்தது. மிசின்கள் இயங்கின.

‘எத்தினை மணித்தியாலங்களுக்கு ஒருக்கா பால் கொடுக்கிறனி’ பத்மா.

‘இரண்டு’ அவள்.

‘ஏழு மணிக்கே குடுத்துப் போட்டு வந்தனி’.

‘ஓமப்பா, போச்சிப்பாலை விரும்பிக் குடிக்காதாம். கடைசியிலை என்ரை பாலைத்தான் குடுத்துப் போட்டு வந்தனான். இப்ப பால் முட்டிக் கொண்டிருக்கிறது. கஷ்டமாய் இருக்கிறது

கதைத்துக் கொண்டிருந்தவள் நேரம் பார்க்க நிமிர்ந்தாள். மாஸ்டர் நடுப்பக்கச் செய்திகளைப் பார்த்துக் கொண்டிருந்தார். விளம்பரத்தைப் பார்த்தாள். குழந்தை தன்னையே பார்ப்பது போல் அவளுக்கு இருந்தது. அந்தக் குழந்தையாகவே அவளுக்குத் தெரிந்தது. குழந்தை தன்னிடம் பால் கேட்பது போல் இருந்தது. பாமா பால் குடிப்பதற்காகப் போச்சியின் நிப்பிளைப் பிடித்து உமிழ்ந்து குடிக்கும் என்று யோசித்தாள். முதன் முதல் பாமா முலைக் காம்பை உமிழ்ந்து பால் குடித்த நினைவு அவளுக்கு வந்தது. அவள் கண்களை மூடிக் கொண்டு முதன் முதல் பால் கொடுத்த அந்த நினைவை நினைத்துப் பார்த்தாள். உடம்பு புல்லரித்ததை உணர்ந்தாள்.

இரண்டு நிமிடங்கள் அப்படியே இருந்திருப்பாள். சட்டையில், நெஞ்சினடியில் நனைவது போன்ற உணர்வு. ‘என்ன செய்ய. மனத்தை அடக்கினால் பால் கட்டுப் படும்’ என்று எண்ணினாள். முடியவில்லை. தொடர்ந்து ஈரக் கசிவு சட்டையில் பரந்து கொண்டிருந்ததை அவள் அவதானித்தாள்.

‘மாஸ்டர் யாரோ வந்திருக்கினமாம் போய்ப் பார்த்துப் போட்டு வாறன்’ என்று சொல்லிவிட்டு எழுந்து நடந்தாள்.

அவள் நேரே தங்களின் இளைப்பாறும் இடத்தை நோக்கிச் சென்றாள். முகம் அலம்பும் கண்ணாடி பேசின் உள்ள அறைக்குள் சென்று கதவைச் சாத்திக் கொண்டாள். சட்டைப் பின்களை கழற்றினாள். பின்பக்கம் கையைக் கொடுத்து கொழுக்கியைத் தட்டினாள். ‘அப்பாடா’ அவளுக்குக் குழந்தைக்குப் பால் கொடுப்பது போன்ற உணர்வு ஏற்பட்டது. அந்த உணர்வுகளை ?

அவள் அனுபவித்துக் கொண்டு என் குழந்தை மாப்பால் குடிப்பதற்கு போச்சியின் றப்பர் முனையை இப்பொழுது இழுத்து உமிழ்ந்து கொண்டிருக்க நான் இங்கே என் குழந்தைக்கே என்று என் உதிரத்தில் உறிய பாலைப் பாழாக்குகிறேன். என் கையாலேயே இந்த அநியாயத்தைச் செய்கிறேனே! நான் பாவி நான் பாவி என்று எண்ணி, எண்ணிக் கண்ணீர் விட்டாள். கண்ணீரும் குழாயில் இருந்து ஓடவிடப்பட்ட தண்ணீரும் உணர்ச்சியில் ஊறி வழித்து விடப்பட்ட பாலும் கலந்து ஓடி வழிந்து கொண்டிருந்தது.

– இதழ் 66 – ஒக்டோபர் 1973, மல்லிகைச் சிறுகதைகள், முதற் பதிப்பு: ஜூன் 2002, மல்லிகை பந்தல் வெளியீடு, கொழும்பு.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *