கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 7, 2013
பார்வையிட்டோர்: 13,497 
 

“நீயா இருக்கிறதாலே எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டிருக்கே, இன்னொரு பெண்ணா இருந்தா வீட்டையே இரண்டு பண்ணிருப்பா. அவ்வளவு ஏன், உன் நிலைமைல நான் இருந்தா என்ன செய்வேன் தெரியுமா? சதா கொடுமை படுத்தும் உன்னோட மாமியாரை வீட்டை விட்டே துரத்திருப்பேன். அது முடியாட்டா தனிக்குடித்தனம் போயிருப்பேன் . நீ சுத்த வேஸ்ட்”, தன் தைரியத்தை தானே மெச்சிக்கொள்ளும் விதத்தில் ஆத்திரமும், ஆவேசமும் முகத்தில் தெரிய சொன்னால் ஜமுனா.

இதைக்கேட்ட அவளது தோழி உமாவுக்கு பொறாமையாகக்கூட இருந்தது. என்ன மனத்துணிவு?. நமக்குமட்டும் ஏன் அது வரமாட்டேங்கிறது.

“நீ சொல்வேடி ..உன் அளவுக்கு தைரியம் எனக்கு வரவே வராதுடி”, ஏக்கமாய் சொன்னாள் உமா.

“அப்படிசொன்னா எப்படி?. அனுபவி, தைரியம்கிறது வெளி இடங்களில் இருந்து வரதில்லை. நம்முள்ளேயே நாமே வளர்த்துக் கொள்ள வேண்டியது. புரியுதா?”.

“நீ படித்தவள், உனக்கு இப்படியெல்லாம் தோணுது, ஆனா ,எனக்…கு பயம்தானே வருது. அத்தையை பார்த்ததும் ஊஹீம், எனக்கு தைரியம் வராதுடி”.

“அப்படியில்லே உமா, வந்தவுடனேயே உன்னோட உரிமைகளை மாமியார் வீட்டில் நிலை நாட்டி இருக்கணும். சும்மா பயந்த பயந்து இடம் கொடுத்திட்டே. அவங்க கை ஒங்கிடுச்சு??. நீ அடிமை மாதிரி ஆயிட்டே”, எடுத்துச் சொன்னாள் ஜமுனா.

“என்னை அடங்கி இருக்கவே பழக்கப்படுத்தியது என் பெற்றோர். பெரியவர்களிடம் மரியாதை குறைவா பேசக்கூட என் நாக்கு வராது. நான் வளர்ந்த விதம் அப்படி”.

“இதைப்பாருடி, நான் உன்னை சண்டை போடச்சொல்லலை. பாடம் கற்பிக்கச் சொல்கிறேன்”, என்றாள் ஜமுனா.

ஜமுனாவின் ஆழ்ந்த அனுதாபமும், தீவிர நட்பும் நல்லதுக்கா? கெட்டதுக்கா என்று புரியாமல் குழம்பினாள் உமா.

“காலையில் எழுந்ததிலிருந்து, உன்னை எப்படி விரட்டிக்கொண்டிருக்காங்க உன் மாமியார். பொறுத்தது போதும், ஒன்னு அவளை விரட்டு இல்லே நீ வெளியேறு”, திடமாக சொன்னாள் ஜமுனா.

என்னதான் ஜமுனா தைரியம் கொடுத்தாலும், உமாவால் அப்படி செய்ய முடியாது.

“ஏன் ஜமுனா, அப்படின்னா நீ உன் மாமியாரை அடக்கி ஆண்டு கொண்டிருக்கேன்னு சொல்லு…கொடுத்து வைத்தவள் நீ”.

ஜமுனா பதில் சொல்ல வாய் திறக்கும்போது — தெரு கேட் திறக்கப்படும் ஒலி கேட்டது. ஜமுனா அவசரமாக எழுந்தாள். எதிர்த்திசையை பார்த்து பவ்யமாக நின்றாள். வந்தது ஜமுனாவின் மாமியார் தான்.

“ஏண்டி ஜமுனா, அங்கே போட்டதை போட்டப்படி வைச்சுட்டு இங்கே வந்து என்ன கதை அளந்துகிட்டு இருக்கே?. வெளியே நான் சித்தநான் போகக்கூடாதே, வீடு வீடா கிளம்பிடுவியே, போடி போய் வேலையைப் பாரு”, என்று சொல்லி விரட்டினாள்.

“இதோ போறேன் அத்தை”, பெட்டிப்பாம்பாய் எழுந்து ஒரு எதிர்ப்பக்கூட காட்டாமல் ஓட்டமாய் ஒடினாள் ஜமுனா.

உமாவுக்கு வியப்பாய் இருந்தது இத்தனை நாழி சவடாலா பேசிய ஜமுனாவா இது?. பெட்டிப்பாம்பாய் போறாளே. அப்படியென்றால்…தன் வாழ்க்கையில் நடக்க முடியாததை மற்றவர் வாழ்க்கையில், விரிசலை ஏற்படுத்தி ஊருக்கு உபதேசம் செய்யும் ஜமுனா போன்ற பெண்களை நினைத்து கோபப்படுவதை விட,அனுதாபப்படுவதுதான் முறை. அந்த சாத்தானின் வேதத்தை எண்ணி எண்ணி சிரித்தாள் உமா.

– தினமலர் – வாரமலர் – 11-1-2004

Print Friendly, PDF & Email

நெகிழ்ச்சி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 27, 2023

சகுனி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 27, 2023

கற்பனைக் கணவன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 27, 2023

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *