கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 7, 2013
பார்வையிட்டோர்: 14,823 
 

எரிச்சலோடு ஸ்கூட்டரை கிளப்பி வெளியேறினான் கவுசிக். போகும் வழியெல்லாம் புலம்பிக் கொண்டுதான் போனான். ச்சே என்ன பெண் இவள், வாழ்க்கையைப்பற்றி எதுவுமே தெரியாமல்
இருக்கிறாளே, அவளைச்சொல்லி குற்றமில்லை, கஷ்டம் என்றால் என்னவென்று தெரியாத பெரிய இடத்துப்பெண்ணை திருமணம் செய்தது நம் தவறு. திருமணம் ஆகி நான்கு மாதத்திற்குள்
எத்தனை வீடு மாறியாயிற்று.

இந்த வீட்டில் புகை போக்கி இல்லை, இதுல கிச்சனுக்குப் பக்கத்திலேயே பாத்ரூம், இருக்கு ,இதுல சாமான்கள் வைக்க லாப்டே இல்லை, இதல காற்று வரவேயில்லை…இப்படியே ஒவ்வொரு வீடாக மாறியாகிவிட்டது. வாழ்க்கையைப்பற்றிய நிதர்சனம் புரியலே. ஆபிசிலேகூட கவுசிக்கை கிண்டல் அடித்தார்கள் நண்பர்கள் .எதிலுமே திருப்தி இல்லாதவள். அவ அப்பாவிடமே சொல்லி எல்லா சவுரியங்களோடு ஒரு வீட்டை கட்டிகொடுக்கச் சொல்ல வேண்டியதுதானே, அதை விட்டு விட்டு நம் உயிரை வாங்குறாலே ….மழை வேறு பிடித்துக்கொண்டது. இதற்கு என்னதான் தீர்வு?

மறுபடியும் அலைய வேண்டியதுதான் எல்லா ஏரியாவையும் சுற்றியாகிவிட்டது. சிரிப்பாய் சிரித்தாயிற்று.

“என்னப்பா கவுசிக் தானா பேசிட்டு வர்றே, என்னாச்சு உனக்கு?”, நண்பன் நாராயணன் கேட்டான்.

“வேறென்ன, வீட்டுப்பிரச்சனைதான். இந்த வீட்டிலும் ஏதாவது குறை சொல்லிருப்பாள் அவன் மனைவி”, என்று கிண்டல் செய்தான் மனோகரன்.

“என் வேதனை உங்களுக்கெல்லாம் வேடிக்கையாபோச்சு, எல்லாம் என் காலமடா”, நொந்து கொண்டான் கவுசிக்.

சாயந்திரம் ஆபிஸ் முடிந்து கடைத்தெருவில் சுற்றிவிட்டு லேட்டாகப் போனான் கவுசிக், மனைவியின் புலம்பல் ஆரம்பமாகிவிடுமே என்று. வழக்கத்திற்கு மாறாக மாலினி காபியுடன் வந்தாள். அவன் அருகில், “என்னங்க டிரஸ் சேன்ஞ் பண்ணாமல் என்ன யோசனை?”.

“தலைவலி லேசா”.

“இந்தாங்க, காபியை குடிங்க சூடா. தலைவலி பறந்து போயிடும் “, என்று சொன்ன மாலினியை அதிசயத்துடன் பார்த்தான்.

“என்ன அப்படி பார்க்குறீங்க?”

“ஒண்ணுமில்லே”, ஏன் நாமாக எதையாவது பேசி வீடு பற்றி நியாபகப்படுத்தவேண்டும் என்று நினைத்தான்.

என்ன ஆச்சரியம்? வீட்டை பற்றி ஒரு வார்த்தை கூட மாலினி பேசவில்லை?அன்று முழுவதும் அவள் அப்பா அம்மா ஏதாவது சொல்லிருப்பாங்களோ? வேறு யார் என்ன சொல்லிருப்பார்கள். ஏனிந்த மாற்றம்?. மனதுக்குள் தவித்தான். அவனால் அந்த மவுனத்தை தாங்கிக்கொள்ள முடியவில்லை .இரவு படுக்கையறையில் …

“மாலினி ஒண்ணுகேட்பேன், கோபபப் படக்கூடாது என்ன சரியா?. கோபப்படாம பதில் சொல்லணும்”.

“என்னங்க கேளுங்க “.

“வீட்டை மாற்றனும்னு சொன்னியே, அதைப்பற்றி ஏன் பேசவே இல்லை “.

“அதுவா?. இன்னைக்கு மார்கெட் போனப்போ ஞானோதயம் ஏற்பட்டுச்சு எனக்கு, அதான் இந்த வீடே போதுமுன்னு திருப்தி ஆயிட்டேன்.”

“என்ன சொல்லுறே?”.

” ஆமாங்க, எனக்கு வெளி உலகமே தெரியாம வச்சுட்டாரு எங்கப்பா, எல்லா தேவையும் வீட்டுக்குள்ளே கிடைத்தது, அதான் வாழ்க்கையை பற்றிய யதார்த்தம் புரியல, நான் சௌகரியத்திலேயே வாழ்ந்திட்டதால, இது சரியில்லேன்னு சொல்லி உங்களையும் என்னையும் கஷ்டப்படுத்திகிட்டேன், இந்த ரோடு போடுற ஜனங்களை பார்த்தேன், வெயிலும் மழையும் நிறைந்த வெட்ட வெளியிலே வாழுறாங்க. போக்குவரத்து புகை மழைதண்ணியில பரவும் கொசுத்தொல்லை, துர்நாற்றம் அந்தரங்க விசயங்களையும் அவசரமா வர்ற இயற்க்கை உந்துதலையும், வெட்ட வெளியிலேயே கழிக்கவேண்டிய அவலம். இப்படி ஒரு சௌரியமும் இல்லாம, அந்த பெண்களால் எப்படி வாழ்க்கை மீது பற்றோடு வாழமுடிகிறது, எனக்கு ஒரு சின்ன அசௌகரியம் கூட தாங்கிக்க முடியவில்லேயே, வாழ்க்கையை அதோட போக்கிலேயே எடுத்து கொண்டு நல்ல விஷயத்தை மட்டுமே உள்வாங்கிகொள்ளும் அந்த பெண்களுடைய பண்பட்ட மனோபாவத்தில் ஒரு பங்கு கூட எனக்கு இல்லாமல் போனதை எண்ணிப்பார்த்தேன், சின்ன விஷயத்திற்கெல்லாம் அப்செட்டாகி, உங்களையும் கஷ்ட்டபடுத்திட்டேன், சாரிங்க நம்மைவிட கஷ்ட்டபடுபவர்களை பார்த்தா நம் வாழ்க்கை மேலானதுன்னு தெரிஞ்சுகிட்டேன்”.

அப்பாடான்னு பெருமூச்சு விட்டான் கௌசிக்

– தினமலர், பெண்கள்மலர், 17/12/2005

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *