இழை ஒன்று விடுபட்டுப் போகிறதா ?

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 23, 2013
பார்வையிட்டோர்: 10,331 
 
 

“ரவியின்ரை முகத்திலை இப்பத்தான் கொஞ்சம் களை கட்டியிருக்கு.”,

“ஒம், பாவம் அவன். இரண்டு பிள்ளையளோடையும் சரியாக் கஷ்டப்பட்டுப் போனான்”

கலியாண வீட்டிலிருந்த இரண்டு பேர் கதைத்துக் கொண்டிருந்த போது இடையில் புகுந்து “திரும்பக் கலியாணம் கட்ட மாட்டன் எண்டு நிண்டவனை மனம் மாத்திச் சம்மதிக்க வைச்சது நான் தான்.” எண்டு பெரிய பெருமையாய்ச் சொல்லிக்கொள்கிறா மாமி. எனக்கு அவர்களின் கதையைக் கேட்க எரிச்சல் எரிச்சலாய் வருகிறது.

அம்மாவை விபத்தில் இழந்த போது ஏற்பட்ட ரணத்தை விட அப்பாவும் எமக்கென இல்லாமல் போகப்போறார் என்பது பெரிய வலியாக இருந்தது. அன்று அம்மாவின் உடலின் மேல் விழுந்து கதறிய எனக்கும் தம்பிக்கும் “குஞ்சுகள், உங்களுக்கு அப்பா நான் இருக்கிறன். அழாதேயுங்கோ அப்பு” என்று அவர் சொன்னபோது அவரைக் கட்டிக்கொண்டு கதறினம். ஆனால் இப்படி ஒரு வருஷக் காத்திருப்பு முடிஞ்சவுடனே அவசரப்பட்டு அவர் தனக்கொரு சோடி தேட இன்னொரு கலியாணம் செய்வார் என்று யாருக்குத் தெரியும்.

ஒரு நாள் இரவு எல்லோருமாகச் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது திடீரென “பிரியா, சுதன் உங்கள் ரண்டு பேரையும் அப்பாவாலை தனிய வளக்க முடியாது. அது தான் நான் ஒரு கலியாணம் செய்வம் எண்டு நினைக்கிறன். அப்ப உங்களுக்கு ஒரு புது அம்மா கிடைப்பா” என்கிறார்.

எதிர்பாராத அறிவிப்பினால் நிலை குலைந்து “வேண்டாம்,” என தம்பி அழுத போது “அப்பா, உங்களுக்கு பாட்டி சமைச்சுத் தாறா தானே. பிறகு நான் வளர்ந்து சமைச்சுத் தருவன் அல்லாட்டி ரோசியின்ரை டாட் மாதிரி நீங்களும் சமைக்கப் பழகலாம். நாங்கள் எங்கடை வேலையைச் செய்வம். இனி ஒண்டுக்கும் உங்களைக் கஷ்டப்படுத்த மாட்டம். எங்களுக்கு அம்மா ஒண்டு தான். வேறை ஒரு அம்மாவும் வேண்டம்.” என நானும் பரிதவிப்புடன் சொல்கிறேன். அப்படி ஒரு கலியாணம் நடக்கக் கூடாது என மனம் பலதடவைகள் பிரார்த்தித்துக் கொள்கிறது. ஆனால் அவருக்கு எங்களுடைய அபிப்பிராயத்தில் எந்த வித அக்கறையும் இருக்கவில்லை. தான் ஏற்கனவே முடிவு செய்து விட்டது மாதிரி நடந்து கொண்டார். போதாதற்கு அது எங்களுடைய நன்மைக்காகத் தான் என்றும் சொல்லிக் கொண்டார்.

அடுத்த ஞாயிற்றுக்கிழமை ஒரு பெண்ணைக் கூட்டிக் கொண்டு வீட்டுக்கு வருகிறார். அவவைப் பார்த்த போது எனக்கு ஏனோ குமட்டுவது மாதிரி இருக்கிறது. தன்னுடைய குதி உயர்ந்த செருப்பை லாவகமாய்க் கழற்றி விட்டு எங்களைப் பார்த்து கண் அடிக்கிறா அவ. அப்பா எங்களைக் கூப்பிட்டு காட்சிப் பொருள்கள் மாதிரி அவவுக்கு முன்னால் இருத்தி எங்களுக்கு மட்டும் சொந்தமான சில பகிடிகளைக் கூட அவவுக்குச் சொல்லிச் சிரிக்கிறார். அவவின் பலத்த சிரிப்பொலி என் காதுகளை அதிர வைக்கிறது.

பின் அவவைக் கூட்டிக் கொண்டு போய் அவவின் வீட்டில் விட்டுவிட்டு வரும் போது அவ வாங்கிக் கொடுத்ததாக எனக்குப் பிடித்த ஸ்ரோபெரி சண்டே ஐஸ்கிறீமும் தம்பிக்குப் பிடித்த வனிலா மில்க் சேக்கும் கொண்டு வருகிறார். அன்றிலிருந்து எனக்கு ஸ்ரோபெரி சண்டே ஐஸ்கிறீம் ஏனோ பிடிக்காமல் போய் விடுகிறது.

திருமணப் பதிவு முடிந்த நாளிலிருந்து அப்பாவோடை தனிய இருக்கச் சந்தர்ப்பம் கிடையாதா என மனம் ஏங்க ஆரம்பிக்கிறது. ஒவ்வொரு இரவும் அப்பாவுக்கு தொலைபேசியில் இருப்பதே வாடிக்கையாகிறது. போதாதற்கு சில ஞாயிறுக் கிழமைகளில் தனது அறையில் அந்தப் பெண்ணுடன் கதவைப் பூட்டிப் போட்டு இருக்கிறார் அப்பா. எனக்கு ஒன்றுமே செய்ய முடியாத அளவுக்கு உடம்பு நடுங்குவதும், எப்ப அவ போவா என்று மணிக்கூட்டைப் பார்த்து பார்த்து கண்கள் பூத்துப் போவதும் தான் வழமையாகின்றது

”அம்மா செய்கிற மாதிரி இந்த முறையும் உன்ரை பேர்த் டே க்கு உனக்கு விருப்பமான இடத்திலை போய்ச் சாப்பிடுவோம், பிறகு மூவிக்கு போவோம்.” என்கிறார் அப்பா. “ அம்மா இல்லாமல் எனக்கு பேர்த் டே செலிபிறேற் பண்ண விருப்பமில்லை” சொல்ல முதல் கண் கலங்கி, குரல் உடைகிறது, அம்மா வந்து கண்ணுக்குள் நிற்கிறா. நான் அழுவதைப் பார்த்ததும் தலையைத் தடவிக் கொடுக்கிறார் அப்பா. “பிரியா, நீ சந்தோஷமாய் இருக்கிறதைத் தானே அம்மா விரும்புவா இல்லையே, பிளீஸ், மாட்டன் என்று சொல்லாதை. பிறகு எனக்கும் கவலையாயிருக்கும்” என்கிறார்.

பிறகு என்னுடைய பிறந்த நாள் அன்றும் அவவையும் கூட்டிக் கொண்டு வீட்டுக்கு வருகிறார். வெளியில் போக என வெளிக்கிட்ட நான் சட்டையைக் கழற்றிப் போட்டு நான் வரவில்லை என அழுகிறேன். “சரி, உனக்கு வெளியிலை போறது விருப்பமில்லாட்டில் நாங்கள் அதை வீட்டிலை கொண்டாடுவம்” என்று அப்பா சொல்ல அவ கேக்கும் செய்து மட்டன் புரியாணியும் செய்கிறா. எனக்கு எதையும் சாப்பிடப் பிடிக்கவில்லை. தலையிடிக்குது என்று சொல்லி விட்டு அன்று நாள் பூராவும் என் அறையினுள் அடைந்து கிடக்கிறேன். அம்மா இறந்த போது இருந்த வலியிலும் அதிகமாக மனசு வலிக்கிறது. அழுது அழுது கண்கள் எரிகின்றன.

கலியாணத்துக்கு நாள் குறிக்கப் பட்டதும் “ பிரியா, சுதன் அப்பாவுக்கு வாற மாதம் கலியாணம் நடக்கப் போகுது. அதுக்கு உடுப்பு எடுக்கப் போகவேணும், இரண்டு பேரும் போய் வெளிக்கிட்டுக் கொண்டு வாங்கோ, போவம்.” என்கிறார். நான் வர மாட்டேன் என பிடிவாதமாக மறுத்து விடுகிறேன். தம்பி மட்டும் அப்பாவுடன் கூடப் போகிறான். பின்னர் உடுப்புகளுடனும் கூட அவவுடனும் வீட்டுக்கு வந்தவர் கதையோடை கதையாக “இனி நீங்கள் யசோவை ’அம்மா’ என்று தான் கூப்பிட வேணும்” என்கிறார்.

அதைக் கேட்டதும் எனக்குச் சரியான ஆத்திரமும் கவலையும் வருகிறது. “எனக்கு அம்மா இல்லை, அவ எங்களைத் தனியாய் விட்டிட்டு போயிட்டா, நான் வேறை ஆட்களை அம்மா என்று கூப்பிட மாட்டன்” என சத்தமாய்க் கத்துகிறேன். “பிரியா, யசோவுக்கு சொறி சொல்லு. இது என்ன உன்ரை பழக்க வழக்கம்?” என்று அவரும் பதிலுக்கு கத்துகிறார். நான் என்னுடைய அறைக்குள் போய் இருந்து அம்மாவை நினைத்து பெரிதாகக் கத்தி அழுகிறேன். உடம்பெல்லாம் நடுங்குகிறது. மனம் துடிக்கிறது. “எல்லாம் விட்டுத் தான் பிடிக்க வேணும். சும்மா அவளைக் கடியாதே” என பாட்டி அப்பாவுக்கு ஆலோசனை சொல்கிறார்.

கலியாண வீட்டுக்கு சில தினங்களுக்கு முன்பாக வீட்டு வந்த யசோ தான் சமைக்கப் போவதாகச் சொல்லிச் சமைக்கிறா. வழமை போல நான் ஒரு சீனி வத்தாளங்கிழங்கையும் கோழியுடன் சேர்த்து ரோஸ்ற் பண்ணிய காய்கறிகளையும் செய்து சாப்பிடப் போன போது “பிரியா, உது என்ன சாப்பாடு, நான் மினக்கெட்டு நூடில்ஸ் செய்து வைத்திருக்கிறன். அதைச் சாப்பிடு ” என்கிறா யசோ.

“எனக்கு இது தான் விருப்பம். அம்மா என்னை இது சாப்பிட விடுறவ. இதைத் தான் நான் சாப்பிடப் போறன்” என உறுதியுடன் சொல்கிறேன் நான். ”சரி அது முந்தி, இப்ப நான் தான் அம்மா. உன்ரை நல்லதுக்குத் தான் சொல்லுறன். வளர்கிற பிள்ளை நீ, வடிவாய்ச் சாப்பிட வேணும், உதை வைச்சிட்டு கொஞ்சம் நூடில்ஸ் எடுத்துச் சாப்பிடு பார்ப்பம்” பொரிந்து தள்ளுறா அவ.
“எனக்கு அம்மா இல்லை எண்டவுடனே யாரும் எனக்கு அம்மாவாக ஏலாது. நான் என்ரை அம்மாவோடை எதைச் செய்தனோ. அதைத்தான் செய்வன்” என்று நான் சொல்ல அப்பாவுக்கு சரியான கோவம் வருகிறது. “பிரியா, அவ கேட்கிறதுக்காக தன்னும் கொஞ்சம் சாப்பிடு” என அதட்டலாகச் சொல்லி எனக்கு முன்னால் அவர் வைத்த நூடில்ஸ்சை கையால் தட்டி விட்டு நான் எழும்ப பூகம்பம் வெடிக்கிறது.
“நான் சொன்னதிலை என்ன பிழை?” என அவ அழுகிறா. “தாய் இல்லாப் பிள்ளைகள் என்று கொஞ்சம் கண்டிப்பில்லாமல் இருந்தது தான் இதுக்கெல்லாம் காரணம். யசோ யூ டோண்ற் வொறி. நான் பாத்துக் கொள்கிறேன் ” என அவவைத் தட்டிக் கொடுக்கிறார் அப்பா. பிறகு என் அறைக்குள் வந்து நின்று முழங்குகிறார். அதன் பின் அவரும் நானும் முகம் கொடுத்துக் கதைப்பது நின்று போகிறது.

கலியாண அமளி எல்லாம் முடிந்து ஒரு வாரமாயிற்று. பாடசாலையால் வீட்டுக்கு வந்த போது வரவேற்பறையில் இருந்த நயகார நீர்வீழ்ச்சிப் படம் மலையின் கீழ் உள்ள ஓடையில் சில மான்கள் தண்ணீர் குடிக்கும் இன்னொரு படத்தால் பிரதியீடு செய்யப்பட்டு சோபாக்கள் எல்லாம் வேறு விதமான ஒழுங்கில் மாற்றி வைக்கப்பட்டிருந்தன.
”பாட்டி, யார் இதெல்லாம் மாத்தினது?” வந்ததும் வராததுமாய்க் கோபமாய்க் கேட்கிறேன் நான். “ஏன், நான் தான் மாத்தினது.” கொஞ்சம் இறுமாப்புடன் சொல்கிறா யசோ. ”எனக்கு இது பிடிக்கேல்லை” காரமாய்ச் சொல்கிறேன் நான்.
“நானும் இந்த வீட்டிலை தானே இருக்கிறன், அதோடை அடிக்கடி இப்படி மாத்தினால் தான் வீட்டைப் பாக்க நல்லாயிருக்கும். புதுசுக்கு இசைவாக்கப்படப் பழக வேணும்” இரட்டை அர்த்த்த்தில் சொல்கிறா அவ.

“அம்மா, ஒரு நாளும் தன்ரை இஷ்டத்துக்கு இப்படி ஒண்டும் செய்கிறதில்லை. எங்களையும் கேட்டுத் தான் எதையும் —————-” சொல்ல முடிக்க முன் அழுகை பீரிட்டுக்கொண்டு வருகிறது.

”பிரியா, இங்கை வா” பாட்டி கூப்பிடுறா. பாட்டியைக் கட்டிக்கொண்டு அழுகிறேன். “ பிரியா, இனி நீ சின்னப்பிள்ளை இல்லை, பத்து வயசாச்சுது. நிலைமையை கொஞ்சம் விளங்கிக்கொள்ளு. அப்பாவும் பாவம் தானே, அம்மாவை நினைவு படுத்திற விஷயங்கள் வீட்டிலை குறைஞ்சால் அவருக்கும் கொஞ்சம் ஆறுதலாயிருக்கும்……………………………..”

அவ சொல்லி முடிக்கவில்லை, எனக்கு பாட்டியிலும் ஆவேசம் வருகிறது.

“எனக்கு என்ரை அம்மாவின்ரை நினைவுகள் வேணும். அதை அழிக்க நான் விடமாட்டன். அம்மா இருந்த வீடு அம்மா வைச்சிருந்த மாதிரித் தான் இருக்க வேணும். அல்லது இந்த வீட்டிலை நான் இருக்க மாட்டன்.” சின்னப் பிள்ளை மாதிரி கத்தி அழுகிறேன் நான்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *