பகையும் – பாசமும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 22, 2023
பார்வையிட்டோர்: 1,857 
 

(1966ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

உந்தி இரவை எதிர்கொள்ளும் தருணம், சம்பங்கித் தைலமும், வாசனைப் பொடியும், நருமணம் வீசும் மஞ்சளும் பூசி நீராடிவிட்டு, ஸ்நான அறையிலிருந்து வெளிவந்த சம்யுக்தையைக் கண்டு வியப்புற்றவாறு அலங்கார மஹாலுக்கு அழைத்துச் சென்றாள் தோழி சம்பாவதி. 

அங்கே ராணியின் வருகைக்காக,ஆடை, அணிகலன்களோடு காத்திருந்த வஸந்தமாலை, சம்யுக்தையை எதிர் கொண்டு வந்து கைலாகு கொடுத்து அழைத்துச் சென்று பாலாடை நிறப் பட்டுப் பாவாடையும், செம்பட்டு ரவிக்கையும் பொன்னிழை யோடிய நீலத் தாவாணியும் அணிவித்தாள். 

நவமணிகள் பதித்த கிரீடமும், வைடூரிய திலகமும், மாணிக்க மணிகளாலான காதணிகளும், நாசிக்கு வைரமணி பதித்த மூக்குத்தியும் அணிவித்தாள். மரகதப் பச்சைகள் மலிந்த தோள்வளைகளும், ரத்ன கங்கணங்களும், முத்து மாலை களும் பூட்டினாள். செந்தாமரை இதழ்களை நினைப்பூட்டும் கண்களுக்கு அஞ்சனம் தீட்டினாள்! 

ஜாதியும், சம்பகமும், முல்லையும் மகிழ மலரும் கலந்த பூச்சரத்தை தலையில் சூட்டினாள். 

செம்பஞ்சு குழம்பினால் பாதங்களில் சித்திரம் வரைந்து அழகு செய்தாள்! 

பின்புறம் காலடிச் சத்தம் கேட்டுத் திரும்பினாள் வஸந்த மாலை ! 

பிருதிவி மன்னர் வந்து கொண்டிருந்தது கண்டு வஸந்த மாலையும், சம்பாவதியும் திரை மறைவை நாடிச் சென்றார்கள். 

ஆஸனத்திலிருந்து எழுந்து இரண்டடி முன் வந்து மன்னரை எதிர் கொண்டாள் சம்யுக்தை. அழைத்துச் சென்று ஆசனத்தில் அமரச் செய்து விட்டு, கண்டதும் கல கல வென்று இன்னுரை பேச விழையும் கணவன், இன்றேன் குரலே கொடுக்கவில்லை என்ற கலவரத்துடன் அவர் முன் மண்டியிட்டு அமர்ந்து “பிராணேசுவரா என்ன சமாசாரம்?” என்று கலவரத்தோடு வினவினாள். 

பிருதிவி ஒன்றும் பதில் சொல்லாமல் சிந்தனையிலாழ்ந் திருப்பதைக் கண்ட சம்யுக்தை கவலை மேலிட, மறுபடியும் பிருதிவியின் மனத் துயருக்குக் காரணம் வினவினாள். 

இப்பொழுது பிருதிவி மன்னருடைய கண்கள் சம்யுக் தையின் முகத்தைப் பார்த்தன ! 

அன்புக் கணவனை ஆசையோடு பார்க்கும் அஞ்சன விழி களும், நெற்றிப் பொட்டும் பிருதிவியின் நெஞ்சை வெதுப்பின. மிகுந்த ஆற்றாமையுடன் அவள் முகவாய் பற்றி,”அன்பே, உன்னை நான் கவர்ந்து வந்து மணந்து கொண்ட போது, ஒரு மகத்தான எழிலோவியம் நாசமாகிவிடும் என்பதை அறிந் திருந்தேனானால்…” என்றான். 

“பிராணபதி என்ன சொல்லுகிறீர்கள் ?” என்று கிலி பிடித்த குரலில் வினவினாள் சம்யுக்தை. 

“என்ன சொல்லுகிறேன், இந்த பிருதிவியின் மீது வைத்த பிரேமையை-உன் தந்தைக் கிஷ்ட…” 

சம்யுக்தை சட்டென்று பிருதிவியின் வாயைப் பொத்தி, “கேட்கத் தகாத மொழிகளைக் கேட்கும் வண்ணம், தங்களுக்கு நான் செய்த அபசாரம் என்ன அரசே?” என்று கேட்ட போது சம்யுக்தையின் கண்கள் கலங்கி நீர் கரையிட்டன. 

பிருதிவி தன் ஆருயிர் மனையாளை அன்புடன் தழுவி, “சம்யுக்தா, என்ன அநியாயம் பார். உன் தந்தை என் மீது படையெடுத்து வருகிறாராம்” என்றான். 

“வரட்டுமே! இது நாம் எதிர்ப்பார்த்ததுதானே பிராணபதி?”  

“அவர் மட்டுமாக வரவில்லை. முகம்மது கோரியின் துணை யுடன் வருகிறாராம்…” 

“அட அவதியே! இரண்டாம் முறையாகவும் தோற்று ஓட ஆசை கொண்டு வந்தால்…”

“என்ன உளருகிறாய் அர்த்தமில்லாமல் ! ஜயசந்திரரோடு, பெயர் கொடுக்க விரும்பாத சில ராஜபுத்திர அரசர்களும் சேர்ந்திருக்கிறார்கள். இந்த தைரியத்தால்தான் மறுபடியும் எதிர்க்கத் துணிந்திருக்கிறான் முகம்மது!…ஊம் அன்பே போரைக் கண்டு-மரணத்தைக் கண்டு அஞ்சி நடுங்குபவன் நானன்று! ஆனால் பெற்ற குழந்தையின் கோர முடிவுக்குத் தந்தையே காரண பூதமாகும் அதிசயத்தைக் கண்டுதான், எனக்கு வியப்பும் வேதனையும் உண்டாகிறது! உள்ளபடி சொல்லுகிறேன்; அவருடைய போக்கு இவ்வளவு அரக்கத் தன்மை வாய்ந்ததாக இருக்கும் என்பதை அறிந்திருந்தேனானால்?”

”உம், அறிந்திருந்தால்!” என்று திருப்பிக் கேட்டாள் சம்யுக்தை. 

இதுவரையிலும் அவளிடம் காணப்படாத ஒரு அசாதாரண துணிவும், துடுக்கும் கண்டு ஒரு கணம் திகைத்தும் போனார் பிருதிவி ! 

இது வரையிலும் மண்டியிட்டு அமர்ந்திருந்த சம்யுக்தை ‘சிங்’ கென்று எழுந்து நின்றாள்! கண்களை உருட்டி விழித்து துக்கமும், கோபமும் குமுறும் குரலில் “பிராணபதி. என் உள்ளம் அறிந்த அன்பரான தாங்களே – இவ்வாறு என்னை வேறு படுத்திப் பேசும் போது, ஜயசந்திரருடைய பகை மையை நினைத்து ஆச்சரியப்பட என்ன இருக்கிறது?” என்று கேட்டாள். 

பிருதிவியின் வாய் ‘ஜயசந்திரர்!’ என்று முனகியது! ‘அட ! தந்தையென்று குறிப்பிட்டுச் சொல்லக் கூட வாயெ ழாத அளவுக்குப் பாசம் அறுபட்டு விட்டதே?’ என்ற சிந்தனை அவரை ஆட்கொண்டது. 

சம்யுக்தை சொன்னாள்: “அன்பே, தாங்கள் நினைப்பது சரி. என் தந்தையின் முரட்டு குணம் எனக்கு நன்றாக தெரியும். அவர் தங்களுடன் போர் தொடுப்பார் என்பதும் அறிவேன். ‘போர்’ என்று மூண்டால் வெற்றி, தோல்வியைப் பற்றி வரையறுத்துக் கூறவும் முடியாது. ஆதலால் ஒரு நாள் வாழ்வாக இருந்தாலும், கருத்தொருமித்த தாம்பத்திய வாழ்வு வாழ ஆசைப்பட்டே தங்களுக்கு-அதாவது தங்கள் உருவத்திற்கு மாலையிட்டேன்! 

“ஓராண்டுக்கு மேலாகத் தங்களுடன் இன்ப வாழ்வு வாழ்ந்து விட்டேன். போதும்; போரில் வெற்றி பெற்றால் வாழ்வோம், இல்லையேல், சமரிட்டு, வீர சுவர்க்கம் புகுந்து விடுதலை வாழ்வு வாழ்வோம்! என் மீது வைத்திருக்கும் பரிசுத்த அன்பினால், என் மரணத்தை நினைத்து மாய்கிறீர்கள்! 

“இந்த உடலழகு, சுகபோகம் எல்லாம் அழிவை அடைய வேண்டியவை. நமது ஒன்று பட்ட தாம்பத்ய அன்பு அழியாச் சுடராகத் திகழுமல்லவா? 

“அந்த இறவாத புகழை அடையவே விரும்பினேன்! போதும். துயர நினைவும் பேச்சுகளும் போதும் வாருங்கள், இன்று முழுமதி நிலவு. நமது உணவும் நித்திரையும் நிலா முற்றத்தில் ஏற்பாடு செய்யச் சொல்லியிருக்கிறேன்! ஜாதி மல்லிகையின் மணமும், தேனிலவும், நாமும் இன்று கூடி மகிழ்வோம்! அடுத்த முழுமதியைக் கண்டது யார், நம்மைக் கண்டது யார்?” என்று துளிக் கூடக் கவலையின்றி அச்ச மின்றி உரைத்தாள் அந்தப் பேரழகி ! 

ஐயசந்திரருடைய பாசறையினுள் மெழுகுவர்த்தியின் வெளிச்சம் மங்கலாகத் தெரிந்தது! 

அவரது பார்வைக்கு எதிராக அப்பொழுது தான் உதித்து வரும் பூரண சந்திரனுடைய பிரகாசம் அவருடைய மனதைக் கிளறியது. 

படுக்கையில் கிடை கொள்ளாமல் எழுந்து குறுக்கும் நெடுக்குமாக உலாவினார். கூப்பிடு தூரத்தில் தெரியும் போர்க்களத்தின் மீது சென்று தோய்ந்து அவருடைய பார்வை கடைசி நேரத்தில் வாளும் கையுமாக பிருதிவியைச் சுற்றிச் சுற்றி வந்து, அண்டி வரும் தாக்குதல்களை சமாளித் துக் கொண்டு வீராவேசத்துடன் பாய்ந்து வந்த தம் மக ளுடைய உருவெளி தென்பட்டது! 

உயிரைத் துரும்பாக மதித்து, இணையற்ற வீரத்துடன் பகைவர்களின் முன்பு போர் புரிந்த சுத்த வீரன் பிருதிவியின் வீர உருவமும் நிழலாடியது! 

நிலைகுத்திய பார்வையின் முன், அருமைப் பெண் சம் யுக்தையின் தீரமும், பிருதிவியின் பால் அவள் வைத்திருந்த தெய்வீகப் பிரேமையும், சாவகாசமாக அப்பொழுது தான் நினைத்துப் பார்ப்பவர் போலத் தென்பட்டார்! 

தனது கண்ணெதிரில் பிருதிவி வாளுக்கு இரையானதும் அதைக்கண்ட சம்யுக்தை சிரித்த முகத்துடன் சாவை வரவேற்பவளாகத் தன்னை மாய்த்துக் கொண்ட காட்சியும், அவர் நினைவின் முன் ஓடி வந்து நின்றது! 

அதோ தனது அருமை மகள். அழகின் அரும் வடி வினள். கன்னோசியின் தவப்பயனாகப் பிறந்த செல்வி, சம்யுக்தை சரியான ராஜபுத்திர ரமணி ! மானம் பெரிதென்று கருதிய ஐயோ, என்ன காரியம் செய்தேன்? 

ஈன்ற குழந்தையின் வாழ்வை… அவளையே நாசம் செய்த நானும் ஒரு தகப்பனா? 

ஆ! போர் முடிந்ததும் பகைமையும் மடிந்து விட்டது போலும்! ஆண்மையும், மானமும், துணிவும் ஒருங்கே அநியாயமாக கொன்று அமையப்பெற்ற பிருதிவியை விட்டேனே! 

வெட்கம்! அவமானம்! ஒரு சிற்றரசனைக் கொல்ல, பத்து சிற்றரசர்களின் உதவி, இஸ்லாமியனான முகம்மது கோரியின் உதவி வேண்டி இவ்வளவு பேருமாக பிருதிவியை எதிர்க்கச் சென்றோம் ! 

ஒரு தனி அரசனுக்கெதிரில் பத்து எதிரிகளா! அட்டா சுத்த வீரனான பிருதிவி என் எதிர்ப்பைக்கண்டு அஞ்சியிருக்க மாட்டான்! நகைத்திருப்பான்! அதுவும் வீரம் செறிந்த நகைப்பு ! 

இந்த மாதிரி ஒரு நினைவு பளிச்சிட்டதும், கல கல வென்று யாரோ நகைப்பது போன்ற பிரமை ஏற்பட்டு திடுக்கிட்டு சுற்றும் முற்றும் பார்த்தார்! 

மெய்க் காவலர்கள். வாயிற் காப்பவர்களைத் தவிர வேறு யாரையும் காணவில்லை. வெண்துகில் முக்காட்டுக்குள் மிளிரும் மதிமுகமும், மருண்ட விழிகளுமாக சம்யுக்தையின் தோற்றம் தம் முன் தெரிவதைக் காணச் சகிக்காமல் கை களால் கண்களை மூடிக் கொண்டு ஆசனத்தில் வந்து பொத் தென்று விழுந்தார். 

கட்டிளங் குமரியாகத் திகழ்ந்த மகளையிழந்து விட்ட துக்க உணர்ச்சி பக் கென்று பற்றிக் கொண்டது அவர் நெஞ்சில்! 

மகப் பேரின்றி தான் மனம் நொந்ததும். அதன் பிறகு சம்யுக்தையை அருமையும், பெருமையுமாக பாராட்டி வளர்த் ததும் அவளது மதலைப் பருவம், பாலிகைப் பருவம், பெதும் பைப்பருவம் – அதன் பிறகு, அவள் பூரண வளர்ச்சியடைந் தவளாக சுயம்வர காலத்தில் தென்பட்ட தருண யௌவனமும் ஐயோ…ஐயோ, என் கண்மணி…நீ இறந்துவிட்டாய் என்று நான் அழவில்லை ; மாசற்ற பதிபக்தி, அஞ்சாமை, மான உணர்ச்சி இவற்றின் உறைவிடமாகத் திகழ்ந்த…… 

அருகில் யாரோ வந்து நிற்பது போல உணர்ந்து தலை தூக்கிப் பார்த்தார். 

“மகாராஜ், முகம்மது தங்களைப் பார்க்க உத்தரவு கேட்கிறார்” என்றான் மெய்க்காவலன். 

“நான் யாரையும் பார்க்க விரும்பவில்லை, தூங்கி விட்ட தாக சொல்லு” என்று சொல்லி வாய் மூடுமுன்பு. 

“அடடா ! ஏனப்படி ? இன்றிரவு உம்மால் தூங்க முடியுமா? முடியவே முடியாது! அதற்காகத்தான் ஏதாவது பேசி பொழுதைக் கழித்து விடலாம்” என்று சொல்லிவிட்டு அருகிலிருந்த ஆசனத்தில் அவனாகவே அமர்ந்து கொண் டான் முகம்மது. ஜய சந்திரருக்குக் கோபம் பொங்கியது. அழைப்பின்றி வந்து, அனுமதியின்றி உள்ளேயும் புகுந்து, ஆசனமும் தேடி அமர்ந்து கொண்ட எடுப்பைக் கொண்டு பொருமியவராக “இந்த நேரத்தில் உங்களை எதிர் பார்க்க வில்லை…” என்றார் ஜயசந்திரர். 

“ஏன் எதிர்பார்க்கிறீர்கள்?…எதிர் பார்த்து நடக்க வேண்டிய-ஆக வேண்டிய காரியம் முடிந்து விட்டது! இனிமேல் முகம்மது கோரியின் தயவு எதற்கு, இல்லையா, ஜய சந்திரரே!” விஷமச் சிரிப்புடன் வார்த்தைகளை உதிர்த்தான் முகம்மது. 

ஜயசந்திரருடைய உள்ளம் விரிந்தது, விழிகள் மலர முகம்மது கோரியை உற்றுப் பார்த்தார்! அந்த முகத்திலே ஒரு ஏளனம், ஒரு குரூரம், ஒரு வஞ்சகம் எல்லாம் இழை களாகப் பின்னிக் கிடந்தன ! 

முகம்மது வஞ்சக மனப்பான்மையின் ஒரு கோடியையும் கண்டு விட்டார் ஜயசந்திரர். தாம் எத்தகைய பெருந்தவறு செய்து தனக்கும், தனது ஜன்ம பூமிக்கும் கேடு விளைவித்துக் கொண்டோம் என்று புரிந்து கொண்டார்! 

அவருடைய நாக்கு பேசும் சக்தியை இழந்து விட்டது போல அசைவற்று விட்டது. கண்கள் இமைக்கவில்லை. நீண்ட நேரத்து மௌனத்திற்குப் பிறகு முகம்மது தனது குரலை எழுப்பி, “அரசே எந்த ஒரு காரியத்தையும் செய்யத் தொடங்கு முன்பு அதன் பலா பலன்களை யோசித்துப் பார்த்து அதன் பிறகு செயல் புரிய வேண்டும் என்பதை எடுத் துரைக்க உமது அவையில் மந்திரி யாருமில்லையோ?” என்று வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போலக் கேட்டான். 

ஜயசந்திரர் பதிலெதுவும் கூறாததால் கனைத்து தொண் டையைச் சரிப்படுத்திக் கொண்டு, “ஜயசந்திரரே, இப்படிப் பட்ட ஒரு வீரனை, சுந்தர ரூபம்படைத்த ஒரு குமாரியை அழித்து நீர் கண்ட…” என்றான். 

ஜயசந்திரர் இடைமறித்து “இதோ பாருங்கள்! இனி எனக்கு ஒன்றும் சொல்ல வேண்டாம். நமக்கும் மகப் பேறு கிட்டுமா என்று ஏங்கிய பின்பு எனக்குப் பிறந்த குலச் சுடர் அவள். எனக்கு உள்ள முரட்டுப் பிடிவாதம் அவ்வளவும் அவளுக்கு மிருந்தது! 

“பிருதிவியை மணக்கக் கூடாது என்றேன். என் உத்த ரவை முரட்டுத்தனமாகப் புறக்கணித்து விட்டு, எனது பகை வன் பிருதிவியையே அவள் விரும்பி மாலையிட்டாள்! அரசாளும் மன்னனுடைய ஆக்கினையை, பெற்ற தந்தையின் கட்டளையை மீறி, தந்தையின் விரோதியை மணந்து கொண்டு வாழ நினைத்த பெண் வாழ்வைக் குலைக்க வேண்டும் என்று குலைக்கவில்லை. முதல் காரணமாக, நானாகப் பார்த்து மணம் செய்து தராத என் மகளைத் தூக்கிச் சென்று மணந்து கொண்ட பிருதிவியின் செருக்கை அழிக்கவே போர் தொடுத்தேன்! பிருதிவி அழிந்தான். அதனால் என் குழந்தையும் உயிர் துறந்தாள்! 

“இனியென்ன?’டில்லி, ஆக்மீர் எனக்கு’ என்று கேட்கப் போகிறீர்கள். அடுத்து கன்னோசியையும் கைவசமாக்கிக் கொள்ள நினைக்கிறீர்கள்! முகம்மதுகோரி, ‘உங்கள் இனிமை யான தோழமைப் போர்வைக்குள்’ இவ்வளவு நயவஞ்சக உருவம் மறைந்திருக்குமென நான் நினைக்கவில்லை…” என்றார். 

“ஜயசந்திரரே, அர்த்த மற்ற இந்த சம்பாஷணை இப்போது அவசியமில்லை. நீங்கள் கொஞ்ச நாளைக்கு நிம்மதியாக இருங்கள்…” 

“அப்படியென்றால்?” 

“அதற்கு அர்த்தம் பிறகு சொல்லுகிறேன் !…” 

“வேண்டாம், உங்கள் இஷ்டம் எதுவோ அதைச் செய்யுங்கள். எனக்கு உறக்கம் வருகிறது…”

“உறக்கம் வருகிறதா? ஆச்சரியம் தான்! அழகு தேவதையாக ஒளிர்ந்த பெண்ணை பலி கொடுத்து விட்டு எப்படி உறக்கம் வரும்? ஐயோ பாவம், ஏதோ ஆத்திர மேலீட்டால், மருமகன் மீதுள்ள பகைமையால் சொந்த மகளுடைய அழிவையும் சிந்திக்காமல்…” 

ஜயசந்திரருக்கு அதற்குமேல் பொறுக்க முடியவில்லை, இடத்தை விட்டு எழுந்து வெளியே வந்தார். 

நிலவொளியும், காற்றும் அவருக்கு இனிமை யளிக்க வில்லை, தொலைவில் தெரியும் சமர்க்களத்தினூடே பார்வை யைச் செலுத்தினார். 

வயிற்றை அள்ளிப் பிடுங்கியது அவருக்கு! கண்கள் நீர் ஊற்றுகளாக மாறின! “என் கண்ணே, போர்க்களத்தில் மாண்டுவிழவா உன்னைப்பெற்று வளர்த்தேன்?” என்று அலறியது அவருடைய பெற்ற வயிறு ! 

“மூர்க்கனுடைய வயிற்றில் பிறந்த பாவத்திற்கு, செருக் களத்தில் வீர சுவர்க்கம் புகுந்த கணவனைப் பின்பற்றி விட்டாய்! இனி எனக்கென்ன வேண்டும் ? டில்லியும், ஆக் மீரும் ஆள்வோர் கன்னோசியையும் எடுத்துக் கொள்ளட்டும்! 

“ஆ! பகைமையின் கொடுமை எவ்வளவு மூர்த்தண்ய மானது ! பெற்ற குழந்தையையும், பிறந்த நாட்டையும் கூட லட்சியம் செய்ய வில்லையே அது ? அது? 

“பகைமை தனக்குரிய செயலை முடித்ததும் இந்த குமுறல் ஏன்? பாசம் தான் ஏன்?” 

ஆயிரக்கணக்கான உயிர்களைப் பலிகொண்ட போர்க் களத்தில் மரண தேவதை புரியும் கோரத் தாண்டவத்தைக் காண சகியாதவராகத் தமது கூடாரத்தின் பின்புறமாகச் சென்றார். 

எங்கே போனால்தானென்ன? ரம்பம் போலத் தமது மனதை அறுக்கும் பிள்ளைப் பாசத்தை துணிக்க வழி?

– உயிரின் அழைப்பு, முதற்பதிப்பு: 1966, சாரதி பிரசுரம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *