கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 29, 2016
பார்வையிட்டோர்: 15,127 
 
 

மகாதேவன் என்னுடைய நண்பன். நான் மதுரையில். அவன் சென்னையில், மேற்கு மாம்பல வாசி. சமீபத்தில் கண்புரைக்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டான். வலது கண், சர்க்கரை நோய் இல்லை என்பது ப்ளஸ் பாயிண்ட்.

கண்களை இடுக்கிக் கொண்டுதான் சிஸ்டத்தில் வேலை செய்வான். நாட்டுடைமையாக்கப்பட்ட வங்கியில் உதவி மேனேஜர். கை நிறைய சம்பளம். அதற்கு ஏற்றாற்போல அசுர வேலை. காலையில் வங்கி தொடங்குவதற்கு அரைமணி நேரம் முன்பே செல்ல வேண்டும். வங்கியைச் சுத்தம் செய்து, குடிநீர் பிடித்து வைத்து, இருக்கைகளையும், மேஜைகளையும் துடைத்துச் சுத்தம் செய்ய வரும் பணியாளருக்கு உதவியாக வங்கியைத் திறந்துவிட வேண்டும். அதேபோல் இரவு மேனேஜர் புறப்படும்வரை இருந்து வங்கியைப் பூட்டிவிட்டுக் கிளம்ப வேண்டும்.

இரு முகங்கள்முகம் சுளிக்காமல் மூன்றாண்டுகளாக அதைச் செய்து வந்தான். வேறொருவராயிருந்தால் மாற்றல் வாங்கிக் கொண்டு பறந்திருக்கக் கூடும். அதனாலேயே மேனேஜருக்கு மகாதேவன் மீது தனி அபிமானமுண்டு.

வங்கியில் எல்லா பரிவர்த்தனைகளும் கம்ப்யூட்டர் மூலமே நடந்தது. எனவே முழுநேரமும் சிஸ்டத்தை முறைத்துப் பார்த்தவாறே வேலை செய்ததால் அவன் கண்கள் பாதிக்கப்பட்டுவிட்டன!

மகாதேவனுக்கு பரோபகாரச் சிந்தனை வேறு. அநேகமாக எல்லாப் பெண் ஊழியர்களும் ஏதோ ஒரு காரணத்தைக் கூறி அவனிடம் வேலையைச் சுமத்தி விடுவார்கள். தன்னுடைய வேலையை ஒதுக்கி வைத்துவிட்டு அவர்கள் கூறும் வேலைகளை முதலில் செய்து முடிப்பான். வங்கி வேலை நேரம் முடிந்தபின் அவனுடைய வேலையைச் செய்து முடிப்பான்.

ஒருநாள் லீவு போட வேண்டுமென்றாலும் அவனுக்கு டென்ஷன்தான். நீண்ட விடுமுறையில் போவது மாதிரி மேனேஜர் நடந்து கொள்வார். “அது என்னவாயிற்று? இது என்னவாயிற்று?’ என்று ரெவ்யூ செய்வார். பதட்டப்படாமல், சளிக்காமல், பொறுமையாக பதில் கூறுவான். அதனாலேயே அவன் லீவு போடுவதைத் தவிர்த்துவிடுவான்.

வங்கிப் பணிகள் அவனால் நடப்பது மாதிரி நடந்து கொள்வான். அவனிடம் உதவியைப் பெற்றுக் கொண்ட பெண் ஊழியர்கள் அவனைப் பரிகாசமும் செய்வார்கள். அவற்றையெல்லாம் ஒருபோதும் சீரியசாக எடுத்துக் கொள்ள மாட்டான். வெகு இயல்பாக எடுத்துக் கொள்வான்.

“”சாரோட ஒய்ஃப் ரொம்ப ரொம்பக் கொடுத்து வெச்சவங்க…” என்று பெருமூச்சு விடுவார்கள்!

“தான் பணி ஓய்வுபெற்ற பின்னும் இந்த வங்கி என்றும்போல் இயங்கத்தான் போகிறது’ என்கிற பிரக்ஞை மகாதேவனுக்கு இல்லாததுதான் ஆச்சர்யமான விஷயம்! என்றென்றும் வங்கியைத் தாங்கிப் பிடிக்கப் போவது போல பணியாற்றினான்!

அதிக நாள் லீவு போட முடியாததால் அவன் கண் சிகிச்சையைத் தள்ளிப் போட்டுக் கொண்டே இருந்தான். கடைசியில் பணி ஓய்வுத் தேதியும் நெருங்கிவிட்டதால் ஓய்வு பெற்ற பின் நிம்மதியாகச் செய்து கொள்ளலாம் என்று தீர்மானித்து விட்டான். அப்படித் தீர்மானித்ததும் மனதில் இருந்த பாரம் இறங்கிவிட்டதைப் போல உணர்ந்தான்.

அவனுடைய பணி ஓய்வுநாள் வந்தது. அன்று சனிக்கிழமை. வங்கிப் பணி அரைநாள்தான். எனவே மாலை வடபழநியில் உள்ள மூன்று நட்சத்திர ஓட்டலுக்கு எல்லோரும் சென்றார்கள். மகாதேவன் பார்ட்டிக்கு ஏற்பாடு செய்திருந்தான்.

மகாதேவனின் மனைவியும் வந்திருந்தாள். அப்பா மட்டும் முதுமை காரணமாக வரவில்லை. அதோடு அவர் ஆசாரப் பேர்வழி. வெளியில் எதுவும் சாப்பிட மாட்டார். மனைவியை இழந்து இருபது வருடங்களுக்கு மேலாகிவிட்டது. மனைவியின் நினைவு அவரை விட்டு அகவலில்லை என்பதைப் பல விஷயங்களில் காண முடிந்தது.

மகாதேவனின் தயாள குணம் பற்றியும், பரோபகாரச் சிந்தனை பற்றியும் பேசினார்கள். மேனேஜர் தன் பங்குக்கு புகழாரம் சூட்டிவிட்டு, “”பணி ஓய்வு பெற்றுவிட்டதால் வங்கியை

மறந்துவிட வேண்டாம். எப்போதும்போல சக நண்பர்கள் சந்தேகங்களைக் கேட்கும்போது உதவ வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.

மகாதேவனுக்கு பெரிய வெள்ளிக் குத்துவிளக்கு ஜோடியைப் பரிசளித்தார்கள்.

அவனுடைய மனைவிக்கு அதில் அவ்வளவு சந்தோஷம்!

வீட்டில் ஒரு துரும்பைக்கூட நகர்த்தாதவர் அலுவலகத்தில் அவ்வளவு செய்ததாகக் கூறியதைக் கேட்டதும் ஆச்சரியம் தாங்க முடியவில்லை!

விடைபெற்றுக் கொண்டு மகாதேவன் மனைவியோடு காரில் இல்லம் திரும்பினான்.

கண் அறுவை சிகிச்சை நடந்து நான்கு மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டபோது நான் சென்னை செல்லத் தீர்மானித்தேன்.

சென்னையில் என்னுடைய புரொகிராம் பற்றி நண்பனிடம் பேசினேன். அவனுக்கு அவ்வளவு சந்தோஷம். அவன் வீட்டிலேயே வந்து தங்கிக் கொள்ளலாம் என்றான். மனைவி ஒரு அலுவலக டிரையினிங் புரொகிராமுக்காக பெங்களூரு போயிருப்பதாகவும், போய் ஒரு வாரமாகிவிட்டது, இன்னும் ஒரு வாரத்தில் வந்து விடுவாள் என்றும் கூறினான்.

நான் ஓய்வூதியர் நலச் சங்கத்தின் மதுரை கிளையின் பொறுப்பாளராக இருந்தேன். செயற்குழுக் கூட்டத்திலும், பொதுக்குழுக் கூட்டத்திலும் கலந்துகொள்ள வசதியாக ஓட்டலிலேயே தங்கினேன்.

அன்று மகாதேவனை கைப்பேசியில் தொடர்புகொண்டு அவன் வீட்டிற்கு வருவது பற்றிக் கூறினேன். அவன் அடுக்குமாடிக் குடியிருப்பில் வீடு வாங்கிய பின் நான் அங்கு சென்றதில்லை. எனவே இடம் பற்றி விசாரித்து எப்படி வரவேண்டும் என்று கேட்டேன்.

“”மாம்பலம் ரயில் நிலையம் வந்து மேற்கு மாம்பலம் படிக்கட்டுகளில் இறங்கி அருகிலிருக்கும் பிள்ளையார் கோயில் பக்கத்தில் நில். நான் வண்டியில் அழைத்துப் போகிறேன்” என்றான்.

“”உனக்கெதற்கு சிரமம்… நான் ஆட்டோ பிடித்து வந்து விடுகிறேன்” என்றேன்.

அவன் கேட்கவே இல்லை!

“”என்னுடைய காரை வெளியே எடுத்து ரொம்ப நாளாகிவிட்டது. ஒரு சேஞ்சுக்கு நானே வருகிறேன்” என்று உறுதியாகக் கூறி விட்டான்.

நான் காலை டிபன் முடித்துக்கொண்டு சர்க்கரை, முட்டி வலி மருந்துகளை எடுத்துக் கொண்ட பின்தான் கிளம்பினேன்.

மின்சார ரயிலில் எழும்பூரில் ஏறினேன். கூட்டம் அதிகமில்லை. உட்கார இடம் கிடைத்தது. ஓரோர் சமயம் நிற்பதற்கே இடமிருக்காது. மற்றவர்களின் மூச்சுக் காற்று வெப்பத்தையும், வாய் ஊத்தை நாற்றத்தையும் அனுபவித்துக் கொண்டுதான் பயணிக்க நேரிடும்!

மின்சார ரயிலில் பயணம் செய்தே வெகுநாட்களாகி விட்டது. அதிலும் இப்படி உட்கார்ந்து பயணம் செய்து நாளாகிவிட்டது.

ஒவ்வொரு ஸ்டேஷனிலும் நிற்கும்போது பெயர்ப் பலகையைப் பார்த்துக் கொண்டே இருந்தேன். மாம்பலம் வந்ததும் இறங்கி மெதுவாகப் படிகள் ஏறி இறங்கினேன். முட்டி வலி என்பதால் இரண்டு, மூன்று இடங்களில் நின்று நின்று நடந்தேன்.

மகாதேவன் அடையாளம் சொன்ன இடம் வந்ததும் அவனுக்குத் தகவல் தெரிவித்தேன். பத்து நிமிடங்களில் வந்து விடுவதாகவும் அங்கேயே காத்திருக்கவும் சொன்னான்.

நான் பக்கத்துத் தெருவில் சற்று தூரம் நடந்தேன். பழக்கடைகள் எதுவும் தென்படவில்லை. தூரத்தில் பழ வண்டியொன்று நிற்பது தெரிந்தது.

வாழைப்பழம், ஆப்பிள் வாங்கிக் கொண்டேன். நண்பனின் அப்பா பழங்களைச் சாப்பிடுவார் என்கிற நம்பிக்கை.

நிற்க முடியாமல் மூடியிருந்த ஒரு கடையின் முகப்பிலிருந்த ஒட்டுத் திண்ணையில் ஓரமாக உட்கார்ந்து கொண்டேன். நண்பனின் கார் அந்த வழியாகத்தான் வர வேண்டும்.

கிட்டத்தட்ட இருபது நிமிடங்களுக்கு மேல் ஆனது. நண்பன் இரு சக்கர வாகனத்தில் வந்தான். கையை அசைத்து அங்கேயே நிறுத்தினேன்.

“”கார் ஸ்டார்ட் ஆகவில்லை… அதான்” மோட்டார் பைக்கில் பின் பக்கம் ஏறி உட்கார முயன்றேன். முட்டி வலியால் வலது காலைத் தூக்கிப் போட முடியவில்லை. நண்பனிடம் சொல்லிவிட்டு ஒருபக்கமாகவே உட்கார்ந்து விட்டேன்.

எங்கெங்கோ சந்து பொந்துகளிலெல்லாம் நுழைந்து கடைசியாக அடுக்குமாடிக் குடியிருப்புக்களின் முன் வண்டியை நிறுத்தினான். வண்டியை உள்ளே நிறுத்திவிட்டு மாடிப்படிகளில் ஏறினோம்.

எனக்கு முட்டி வலி “விண் விண்’ என்று தெறித்தது! எழும்பூரில் படிக்கட்டுகள். மாம்பலத்தில்… இப்போது வீட்டுப் படிக்கட்டுகள். சொல்ல முடியாத வேதனை!

வீடு விசாலமாக இருந்தது. பெரிய ஹால். பெரிய பெரிய படுக்கை அறைகள். மாடுலர் கிச்சன். டைனிங், பூஜை அறை… அதைத் தாண்டி சர்வீஸ் வெராண்டா!

பணமிருந்தால் வசதிகளும் அபரிமிதமாகக் கிடைக்கின்றன. வசதிகளைப் பெருக்கிக் கொள்ளும்போது பணமும் கரைகிறது.

சோபாவில் உட்கார்ந்ததும் அமுங்கிப் போனேன். அவ்வளவு சொகுசு!

நிறையப் புத்தகங்கள் இரைந்து கிடந்தன. ஒவ்வொரு புத்தகத்திலும் வாசித்த தேதி, பக்கங்களின் எண் ஆகியவைகள் குறிப்பிட்ட துண்டுச் சீட்டு செருகப்பட்டிருந்தது. நாவல், சிறுகதை, கவிதை, கட்டுரை, மொழிபெயர்ப்பு என பலவகை நூல்கள் இருந்தன.

“”ரிடையராகி விட்டேன். பொழுது போக வேண்டும். புத்தக வாசிப்புதான் எனது பொழுதுபோக்கு, உனக்கே தெரியும். இரண்டு மாதங்களுக்கு முன் புத்தகக் கண்காட்சிக்குச் சென்றபோது அள்ளிக்கொண்டு வந்துவிட்டேன்”.

மகாதேவனுக்கு சொல்லும்போதே மகிழ்ச்சி பொங்கியது!

“”இதோ பார், நீ இப்பொழுதுதான் கண் ஆபரேஷன் செய்து கொண்டிருக்கிறாய்… ஒரேயடியாகப் படித்து கண்களுக்கு ஸ்ட்ரெயின் தராதே”

“”டாக்டரைப் போலவே பேசறே”

“”கண் முக்கியமில்லையா, அதான்”

“”பென்ஷனில் மாதம் ஆயிரம் ரூபாய்க்கும் குறையாம புத்தகம் வாங்கப் போகிறேன்”

“”நல்ல விஷயம்தான்… அதோட கண்களையும் காப்பாற்றிக் கொள்ள வேண்டும், இல்லையா?”

“”சரி விடு… இதோ இங்க கிடக்கற புத்தகங்களெல்லாம் நான் படித்துவிட்டவை… நீ போகும்போது வேண்டியதை எடுத்துப்போ”

சொல்லிவிட்டு உள்ளே சென்றவன் சிறிய எவர்சில்வர் பிளேட்டில் ஏதோ கொண்டு வந்து நீட்டினான்.

“”ஒய்ஃப் ஒரு வார டிரையினிங் முடித்துவிட்டு வந்தபோது பெங்களூரிலிருந்து வாங்கி வந்தாள். அங்கே இது ரொம்ப ஃபேமஸ்ஸாம்”

வாங்கிக்கொண்டே, “”அப்ப ஒய்ஃப் வந்தாச்சா?” என்றேன்.

“”வந்துவிட்டு அடுத்த ஒருவார டிரையினிங்குக்காக புறப்பட்டுப் போய் விட்டாள்”

“”அப்பா எங்கே?”

“”உள்ளே இருக்கிறார்… இதோ கூப்பிடுகிறேன்”

“”இரு, நாமே அவர் இருக்குமிடத்திற்குப் போகலாம்”

“”அவரோட அறைக்கு யார் வருவதையும் அவர் விரும்புவதே இல்லை… நானே ஓரிரு தடவைகள்தான் போயிருக்கிறேன் என்றால் பார்த்துக்கொள்”

எழுந்தவன் உட்கார்ந்து விட்டேன்.

“”அப்பா… என்னோட மதுரை நண்பன் வந்திருக்கான்… உங்களைப் பார்க்கணுமாம்” என்று உரக்கச் சொன்னான்.

சற்று நேரம் கழித்து அவர் வெளியே வந்தார்.

வற்றிப்போன ஒடிசலான திரேகம். கண்ணாடி கிடையாது. வயிறு ஒட்டி உடல் பூராவும் ஏகச் சுருக்கங்கள். முதுமைதான் எவ்வளவு மாற்றங்களைக் கொண்டு வந்து விடுகிறது!

எழுந்து அருகே சென்று, “”நமஸ்காரம்” என்றவாறே பழங்கள் அடங்கிய கவரை நீட்டினேன்.

அதைத் தொட்டுவிட்டு, “”தாங்ஸ்” என்றபடி மகாதேவனை வாங்கிக் கொள்ளச் சொன்னார்.

“”அப்பாவுக்கு எண்பத்தேழு வயது”

அவர் சமையற்கட்டு பக்கமாக மெதுவாக நடந்தார்.

“”அப்பா ரொம்ப நன்றாகச் சமைப்பார்… காபி, டீ போடுவார், தெரியுமா?”

நான் அதற்கு பதிலேதும் சொல்லவில்லை.

“”என் ஒய்ஃப் இல்லை இல்லையா… அவர்தான் தினமும் சமையல்… காபி… டீ எல்லாம்”

அவன் பேச்சு எனக்கு என்னவோபோல் இருந்தது. ஜீரணிக்க முடியவில்லை.

“”இவ்வளவு பெரியவரைப் போய் சிரமப்படுத்துவது சரியா, மகாதேவா?”

“”என்ன பண்ணுவது… எனக்கு எதுவுமே தெரியாது”

“”அதற்காக அவரை வேலை செய்யச் சொல்லலாமா?… நாம்தான் வயதானவர்களுக்கு ஒத்தாசையாக இருக்க வேண்டும்”

“”உனக்கு எல்லாமே தெரிகிறது… சொல்கிறாய்… உன்னைப்போல் வர்ற போது பழங்கள் வாங்கி வரத் தெரியாது எனக்கு… எங்கேயாவது போகும்போது வெறும் கையோடுதான் போய் நிற்பேன்… ஒய்ஃபே திட்டுவாள்”

நான் பதிலேதும் சொல்லவில்லை.

“”ஒரு தடவை அதிசயமாய் வாங்கிக் கொண்டு போனவன் வெட்கப்பட்டு கூச்சத்தோடு அதைக் கொடுக்காமலேயே கொண்டு வந்து விட்டேன், தெரியுமா?”

“”ரொம்ப லட்சணம்”

“”அப்பா, எங்களுக்கு டீ போட்டுத் தர முடியுமா?” என்று உரத்த குரலில் சொல்லிக்கொண்டே சமையற்கட்டு பக்கம் நடந்தான்.

மகாதேவனின் செயல் எனக்கு எரிச்சலூட்டியது. வயதானவரை – தள்ளாதவரைப் போய் டீ போட்டுத் தர முடியுமா என்று எப்படிக் கேட்கத் தோன்றுகிறது?

“”மகாதேவா, எனக்கு டீ வேண்டாம் வா இப்படி” என்று அவன் கையைப் பிடித்து இழுத்தேன்.

அதற்குள் அவரே இரண்டு கைகளிலும் டபராவிற்குள் தம்ளர் ஆட ஆட டீயை எடுத்து வந்துவிட்டார்.

ஓடிச்சென்று வாங்கிக் கொண்டேன்.

“”நீங்கள் சிரமப்பட்டு எங்களுக்கு டீ போட்டுத் தருவது மனதைச் சங்கடப்படுத்துகிறது”

“”இது எனக்கொரு சிரமமே இல்லை”

கண்களைச் சிமிட்டி சிரித்துக் கொண்டே சொன்னார். பொக்கை வாய்ச் சிரிப்பில் அவர் முகம் கள்ளங்கபடமற்றுப் பிரகாசித்தது!

நண்பனின் மீது கோபம் கோபமாக வந்தது. எரிச்சல் மண்டியது. அவனைப் பார்க்கவே பிடிக்கவில்லை!

மனம் குமைந்தது!

டீயை அருந்த மனம் ஒப்பவில்லை. ஆனாலும் ஆத்மார்த்தமாக, வாஞ்சையோடு, யாரும் சொல்லாமல் அவரே தயாரித்துக் கொடுத்ததை உதாசீனம் செய்ய மனம் மறுத்தது!

சஞ்சலப்பட்டவாறே டீயை எடுத்து உறிஞ்சினேன். டீ அருமையாக இருந்தது. அவ்வளவு மணம்!

மேற்கொண்டு அங்கு உட்கார இருப்புக் கொள்ளவில்லை. மனம் கனமாகி என்னவோ செய்தது!

மகாதேவன் பெரியவரைப் போய் சமைக்கச் சொல்வதும், டீ போட்டுத் தரச்சொல்வதையும் நினைத்து நினைத்து மருகினேன்!

பெரியவர் தள்ளாடித் தள்ளாடி அவரது அறையினுள் நுழைந்து கொண்டிருந்தார்!

எழுந்து நடந்தேன்.

“”வராமலேயே இருந்திருக்கலாம்” என்று உள்மனம் முணுமுணுத்தது. படிகளில் இறங்கினேன்!

– பெப்ரவரி 2015

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *