7 | 8
பென்னட் தன்னிடமிருந்த ஷூமன் நாட்குறிப்புகளைப் பிரித்துப் பார்த்தார். கிட்டத்தட்ட நாற்பது வருடங்களாக தனது வாழ்வை நாட்குறிப்புகளில் சேர்ந்து வைத்திருக்கும் ஒரு கலைஞன் என அவருக்குத் தோன்றியது. கிளாராவுடன் இணைந்த பிறகு எழுதப்பட்ட நாட்குறிப்பும் ஷூமன்னின் சிறுவயதில் எழுதப்பட்டது மிக விரிவாக இருந்தன.
‘பாரிசின் ஆபரா அரங்கத்தின் முதன்மை வயலின் கலைஞர் ஸ்மித் எங்களைப் பார்க்க வந்திருந்தார். பெர்லின் பில்ஹார்மானிக் குழுவினர் நடத்தும் மென்டல்சன் மாஸ்டர் கிளாசுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட பத்து நபர்களில் ஒருவர். தன்னுடைய வாத்தியத் திறமை முழுவதையும் பெருமிதத்துடன் கிளாராவிடம் இசைத்துக் காட்டினார். கிளாராவை விட குறிப்பிடத்தக்க மேதை என அவனுக்கு நினைப்பு..அடேயப்பா எவ்வளவு திமிர்?’
காற்றில் ஆடிய மெழுகுச் சுடர் பென்னட்டின் வாசிப்புக்குத் தடையானது. இன்னும் ஐம்பது பக்கங்களே இருந்தன என்றபோதும் பிளாக்பாரஸ்ட் கடிகாரக்குயில்கள் காலை மணி ரெண்டு என அறிவித்துவிட்டன. ஷூமன் நாட்குறிப்புகளைப் படித்து முடிக்கும்வரை செய்யும்படியான வேலை என எதுவும் பென்னட்டுக்கு இல்லை. புதிதாக ஏதேனும் அழைப்பு வந்தாலும் அடுத்து மூன்று மாதங்களுக்கு எந்த இசை நிகழ்ச்சிகளும் ஒத்துக்கொள்ளக் கூடாது என முடிவெடுத்திருந்தார்.
ஷூமன் கிளாரா இருவரின் அந்தரங்கத்துள் நுழைவது போலத் தோன்றினாலும் தனதாக்கிக்கொண்டது போல நெருக்கம் உண்டானது. பென்னட்டின் நெருங்கிய நண்பராக இருந்தாலும், இசை வழியாக அந்தரங்களைப் பகிர்ந்து கொண்டிருந்தாலும், நாட்குறிப்பில் வெளிப்படும் ஷூமன் விசித்திரமானவர். கோபக்காரர், காதலன் எனும் முகங்களைத் தாண்டி ஷூமன் ஒரு எழுத்தாளராகவும் பரிமளித்திருப்பார் எனத் தோன்றியது. ஜெர்மன் இலக்கிய உலகோடு அவருக்கு இருந்த பரிச்சயம் நேர் பேச்சில் வெளிப்படாதது. குறிப்பாக ஜீன் பால் மேல் அவருக்கு இருந்த பரிச்சயம் இசை தொடர்பானது என பென்னட் இதுவரை நினைத்து வந்தார். நாட்குறிப்புகளில் ஜீன் பாலின் இலக்கிய நாவல்களைப் பற்றி சிறுவயது முதல் ஷூமன் கொண்டிருந்த பற்று மிகத் தெளிவாக விளங்கியது.
‘மிக மோசமான பனிப்பொழிவுக்குப் பின்னான நிசப்தமான இரவில் இதை எழுதுகிறேன். மதியம் முதலே மனசு முழுவதும் ஜீன் பாலைச் சுற்றி வருகிறது. ரைச்சரில் வந்த செய்தி உண்மையாக இருக்கும் பட்சத்தில் ஜீன் பால் இறந்து இன்றோடு நான்கு நாட்கள் ஆகின்றன. என்ன ஒரு அற்பமான உலகம்? நெப்போலியனின் அரசியல் நிகழ்வுகளை விடவா சில்லறைத்தனமான செய்தி இது? ஜெர்மன் ஜெர்மன் எனக் கூப்பாடு போடுகிறார்களே, அந்த மொழியின் சாத்தியங்களை முன்னெடுத்து சென்றவரல்லவா அவர்? வாழ்வின் அனர்த்தங்கள் பெருகிக்கொண்டே இருக்கிறது. நாம் விழிமூடி அதை ரசித்துவருகிறோம்.’
பதினைந்து வயதில் ஷூமன் எழுதியிருப்பது அவரது ஐம்பதாவது வயதிலும் ஒத்துப்போவது எத்தனை வேடிக்கை. மனிதனின் சில்லறைத்தனங்களுக்கு அற்ப மோகங்களுக்கு அளவேயில்லாமல் இருக்கிறது. துரும்பு போல அவற்றின் சாயம் கலையிலும் படியும் துர்பாக்கிய நிலைமை இன்றிருக்கிறது. ஷூமன் இதற்கு மாற்றாகப் பிறந்தவர், அழகில்லாத பருப்பொருட்களை உன்னதத்துக்கு ஏற்றிச் செல்லக்கூடிய வரத்துடன் பிறந்தவர். நினைக்க நினைக்க பென்னட்டால் துக்கத்தைத் தாங்க முடியவில்லை. பெரும் பிரவாகத்தை தனது தோளில் ஏற்றுச் செல்லக்கூடிய வலிமை கலைக்கு உண்டு. சொல்லமுடியாதவைகளை உணர்த்தியும், அள்ள முடியாதவைகளை படிமங்களாக மாற்றியும் தனது கற்பனையால் உந்திச் செல்லும் திறமை. அலங்காரங்களுக்காக அல்ல, தன்னை முன்னிறுத்த அல்ல, உயிர்ப்பிடிப்பை உணரவும், அண்டமென்னும் ஆகப்பெரிய புத்தகத்தின் அடிக்குறிப்பாக வேணும் நாம் இருக்கவேண்டும் எனும் பேராசை. பெருவெளியையும் பிரம்மாண்டத்தையும் அளப்பதற்கு இருக்கும் ஒரே கருவியையும் நாம் பாழ்படுத்திக்கொண்டிருக்கிறோம் என தனக்குள் நொந்தார் பென்னட்.
‘கிளாரா – இக்குறிப்பை எழுதி முடித்ததும் உன்னைத் தேடி வருவேன். ஐந்து குழந்தைகள் பெற்ற பின்னும் என்ன இது குழந்தைத்தனம் என எண்ணக்கூடாது. எவ்வளவு பெரிய காரியத்தில் நீ இருந்தாலும், (பியானோ பயிற்சி செய்துகொண்டிருந்தால் கூட!) நடை துணையாக என்னுடன் வரவேண்டும். அப்போது உனது காதில் ரசமாக சில காதல் பாடல்களைப் பாடுவேன். முதல்முறை முத்தம் பெற்ற உனது காதுமடல்கள் சிலிர்த்தது போல இன்றும் சிலிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் மேலும் சில காதல் கவிதைகளை எனது குரலில் கேட்க அந்தக் காதுகள் தயாராக இருக்க வேண்டும், ஜாக்கிரதை. உனக்கு பிடிக்கும் பட்சத்தில் இந்த மாலைப்பொழுது கழியும் விதத்தை நான் சொல்லி நீ அறியவேண்டியதில்லை..’
படிக்கப் படிக்க ஷூமன் தனது கொந்தளிப்பான நாட்களில் நாட்குறிப்புகளும் இசையும் சரிசமமாகப் எழுதியிருக்கிறார் என பென்னட் உணர்ந்தார். இசை மட்டும் போதவில்லையா? கிளாராவை கண்டபின்னால் மிக அதிகமாக எழுதியுள்ளார். காதல், திருமணம், ஷூபர்ட், மென்டல்சன், பிராம்ஸ் என தன்னை பாதித்த எல்லாவற்றைப் பற்றியும் எழுதியுள்ளார். தன்னைப் பற்றிகூட மிக நுண்மையான விமர்சனங்களை எழுதியுள்ளது பென்னட்டை ஆச்சர்யப்படுத்தியது. ரகசியங்களே இல்லாத உறவு என நினைத்திருந்தார். ஆனால் கிளாரா அறியாத மனக்கிலேசங்கள் கூட இதில் இருக்கக்கூடும்.
சிதறுண்ட இக்குறிப்புகளில் வெளிப்படும் ஷூமன் தான் நிஜமானவரா? புறவய ஆளுமையின் நிழல்களை பதிவு செய்ய கலை இலக்கிய ஊடகங்களை மனிதன் ஏன் தேர்ந்தெடுக்கிறான்? தனது கவசத்தை மீறிய மனவிகாரங்களுக்கு ஆவணமாக படைப்புகளை உண்டாக்கலாம். அது இருள் முனகும் பாதை. அதன் முணுமுணுப்புகளை கைவிளக்காக கொண்டவனுக்கு அந்த நிழல்கள் மனவிகாரங்கள் அல்ல. அவை உண்மையான ஆளுமை. ஷூமன்னின் சிம்பொனிகள், பியானோ கன்சர்டோக்களில் துயரம், இழப்பு, காதல் என வெளிப்படுபவை தான் அவரது ஆளுமையை தீர்மானிக்கிறது என்பதில் பென்னட் உறுதியாக இருந்தார். அதை ஆனந்தப் பெருமிதத்தோடு அரவணைப்பவர்கள் ஷூமன் எனும் கலைஞனின் உறுமல்களைப் புரிந்தவர்கள். அவர்களில் தானும் ஒருவன் எனும் பெருமிதமும் கவலையும் பென்னட்டை நிலைகுலையச் செய்தன. ஷூமன்னின் நிராகரிப்பில் தனக்கும் ஒரு பங்கிருப்பதை போன்ற குற்ற உணர்ச்சி.
திடுமென கிளாராவின் நிலைமை அவருக்குப் புரிந்தது. எல்ப் நதியின் சிறு முணுமுணுப்பை அறிய முற்பட்டவனின் அலறல்களைச் சகிக்க முடியுமா? அகங்காரம் கொண்டவள், ஐரோப்பிய கலைஞர்களின் சிம்மாசனத்தில் செருக்கோடு அமர்பவள் என முட்டாள்தனமாக நினைத்திருந்தேனே எனத் தன் மீதே வெறுப்பு கூடியது. தேவாலைய கற்சிலைக் காரிகை மடோனாவைப் போல சரிந்து விழுந்தவனின் துயரத்தை தாங்கி நின்றவள் கிளாரா என்பதை பென்னட் உணர்ந்தார். பாதரச நீர்கோடின் பாவனையில் தொட்டு விலகி முன்னகரும் விதத்தில் ஷூமன் – கிளாரா உறவு இருந்திருக்கிறது. அதைப் புரியாத முட்டாள்கள் கிளாராவை பிராம்ஸுடன் இணைத்து இன்பம் கண்டிருக்கிறார்கள்.
ஷூமன்னின் மனநலம் குறித்து கிளாரா எழுதிய முதல் பதிவில் அவளது மனஓட்டம் படித்து பென்னட் திகைத்தார்.
‘ஷூமன் உறங்கி இருபது மணிநேரங்களுக்கு மேல் இருக்கும். கடைசியாக அவர் தூங்கியது எப்போது என நினைவில்லை. போன வாரம் ஒரு இசைப்பாடல் உருவாக்கி எனக்கு இசைத்துக் காட்டினார். பயிற்சி என்பதை விட்டுவிட்டதால் அவரது வாசிப்பில் இருக்கும் சிறு பிழைகளை பொருட்படுத்துவதில்லை. ஆனாலும் உள்ளத்தை உருக்கும் பாடல். நிறைய இசையமைத்தாகிவிட்டது என அவர் கூறும்போது, இந்த வருடம் மட்டும் நூற்றி அறுபது பாடல்களுக்கு மேல் எனக் கூறினேன். என் ஷூமன் கணக்கு வைத்துக்கொள்வதில்லை. இசைக்குறிப்புகளைத் தொகுப்பது கூட இல்லை. இந்த நாட்குறிப்பில் எழுதுவதைக் கூட நிறுத்திவிட்டார். என்டேனிச் போகவேண்டும் எனும் குறிப்பு எழுதி வைத்ததற்குப் பின் எதுவும் எழுதுவதில்லை. ஆனால் நாட்கணக்கில் இசைக்குறிப்புகளோடு உட்கார்ந்திருக்கிறார். தொடர்ந்து பல கனவுகளில் சிக்கிக்கொண்டு வெளிவரமுடியாமல் தவிக்கிறேன் எனச் சொல்வது எனக்குப் புரியவில்லை. என்ன மாதிரியான கனவுகள் காதலரே! என்னிடம் எப்போதாவது சொல்ல முயற்சி செய்யுங்கள்..மிகப் பிரத்யேகமான கணங்களில் அவரிடம் பேசுவதற்காக முயற்சி எடுப்பதும் வீணாகிறது. ஒரே ஒரு நோட் கனவு முழுவதும் கேட்டுக்கொண்டே இருக்கிறது, நீ பேசும்போதும் அவற்றை உணர்கிறேன் என மீண்டும் மீண்டும் சொல்கிறார். அவரது நிலைமைக்காக நான் இசைப்பயணங்கள் போவது குறைந்துவிட்டது. எப்போதாவது பிராம்ஸ் வரும்போது என்னை வற்புறுத்தி பியானோவில் உட்கார வைக்கிறான்.’
நேரம் போனதே தெரியவில்லை. பக்கம் பக்கமாகப் படித்து முடித்தத்தில் பெரும் மன அழுத்தம் உருவானது. விடியலின் முதல் வெளிச்சம் ஜன்னல் வழியாக மெலிதாக நுழையத் தொடங்கியது. அதன் முதல் ஒலிகளை பறவைகள்தான் கொண்டு வருகின்றன. ராபின் பறவை பென்னட் அருகே இருந்த ஜன்னலுக்கும் ஆப்பிள் மரத்துக்கும் இடையே விருட் விருடென பறந்துகொண்டிருந்தது. அதன் அலகுகளில் சேர்ந்திருந்த நீர்த்திவலைகள் ஜன்னலில் சேர்ந்திருந்தன. பென்னட் அதன் அலைச்சலைப் பார்த்தபடி உட்கார்ந்திருந்தார். தூங்காத இரவுகளை எதற்காகவேனும் காணிக்கை ஆக்கவேண்டும் என எப்போதும் அவர் நினைப்பதுண்டு. இல்லாவிட்டால் இந்த இரவுகளுக்கு அர்த்தம் இல்லை. ஆண்டவரே, ஓயாது பறந்துகொண்டே இருக்கும் ராபின் பறவைக்காக இந்த விடியலை சமர்ப்பிக்க வேண்டுகிறேன் எனும் நினைப்புடன் தனது அறையை விட்டு கீழிறங்கினார்.
(முற்றும்)
பிரமிள் எழுதிய ‘நான்’ எனும் கவிதையிலிருந்து இக்கதைக்கான தலைப்பு எடுக்கப்பட்டது. ராபர்ட் ஷூமன்னின் தவிப்புடன் கச்சிதமாக பொருந்திப் போகிறது. எத்தனை முறை படித்தாலும், கலைக்கும் கலைஞனுக்குமான உறவைத் தாண்டி மனிதனுக்கும் இருப்புக்கும் உண்டான தொட்டு விலகும் உறவைப் பேசி ஷூமன்னுக்காகவே எழுதியது போலத் தோன்றியது.
‘தளமற்ற பெருவெளியாய் கூரையற்று நிற்பது’ அவரது கலை மட்டுமல்ல, கலைஞனும் தான்.
ஆரீன்றாள் என்னை?
பாரீன்று பாரிடத்தே
பாரீன்று
உயிர்க்குலத்தின்
வேரீன்று வெறும்வெளியில்
ஒன்றுமற்ற
பாழ்நிறைத்து
உருளுகின்ற கோளமெலாம்
அன்று பெற்று விட்டவளென்
தாய்!
வீடெதுவோ எந்தனுக்கு?
ஆடும் அரன் தீவிழியால்
மூடியெரித்துயிரறுத்த
காடு
ஒத்துப் பேய்களன்றி
ஆருமற்ற சூனியமாய்
தளமற்ற பெருவெளியாய்
கூரையற்று
நிற்பது என்
இல்!
யாரோ நான்? – ஓ! ஓ! –
யாரோ நான் என்றதற்கு
குரல் மண்டிப்
போனதென்ன?
தேறாத சிந்தனையும்
மூளாது விட்டதென்ன?
மறந்த பதில்
தேடியின்னும்
இருள் முனகும் பாதையிலே
பிறந்திறந்து ஓடுவதோ
நான்!
– ஜனவரி 2013