மனித நேயக் கடவுள்

0
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 5, 2017
பார்வையிட்டோர்: 8,136 
 

களக்காடு பேருந்து நிலையம். மூன்று வரிசை கொண்ட பயணிகள் இருக்கை. மாலை நேரம் என்பதால் பள்ளிக்கூடமே திரண்டு அங்குதான் நின்று கொண்டிருந்தது. கசமுச கசமுச என மாணவர்களின் சத்தம்.

70 வயதிருக்கும் அவருக்கு. புது வேட்டி சட்டை. ஆனால் நன்றாக அழுக்காகியிருந்தது. இருக்கையில் அமராமல் தரையோடு தரையாய் கிடந்தார். வாயில் கோழை வடிந்து கொண்டிருந்தது. அவரைச் சுற்றி சிறுநீர் கழித்திருந்த தடம் ஆறுபோல கிடந்தது. யாரும் அவரைக் கண்டுகொள்ளவில்லை. அவரும் யாரையும் கண்டுகொள்ளும் நிலைமையில் இல்லை.

“”என் உயிர வாங்குறதுக்குண்ணே பஸ் ஸ்டாண்டுக்கு வரும்போல, மூத்திரம் வேற போய்வைச்சிருக்கு, யோவ்… யோவ்… எந்திரிய்யா, இங்க வந்து அசிங்கம் பண்ணி வைச்சிருக்க” என்று துப்புரவு பணி செய்யும் அம்மா கத்த, பெரியவர் தலையைத் தூக்கிப் பார்த்துவிட்டு படுத்துக் கொண்டார். அவர் குடித்திருப்பதற்கான வாடையும் தெரியவில்லை. இரண்டு, மூன்று நாள்கள் சாப்பிடாமல் கிடந்தவர் போலிருந்தார்.

மனித நேயக் கடவுள்அந்த அம்மா அவர் படுத்திருந்த இடத்தை மட்டும் விட்டு, விட்டு மற்ற இடங்களைப் புலம்பிக்கொண்டே பெருக்கியது.

நான் காவலர் பணியில் சேர்ந்து ஒன்றரை ஆண்டுகள்தான் ஆகியிருந்தது. பணியின் காரணமாக களக்காடு பேருந்து நிலையத்துக்கு, எனது சக நண்பருடன் வந்திருந்தேன். பள்ளி மாணவர்களை பேருந்தில் ஒழுங்காக ஏறச் சொல்வதும், படிக்கட்டில் பயணம் செய்யாமல் பார்த்துக் கொள்வதும்தான் எனது பணி.

நானும் எனது சக நண்பரும் அந்தப் பெரியவர் கிடந்த கோலத்தைப் பார்த்து, அவரை எழுப்பிப் பார்த்தோம் பயனில்லை.

“”டே சுப்பு சார் வாறாரு, வாடா போய் பாத்துட்டு வரலாம்” என்றான் சக நண்பன்.

தொப்பியை தலையில் வைத்து இருவரும் சல்யூட் அடிக்க, பதிலுக்கு அவர் தலையாட்டி விட்டு,

“”என்னப்பா, பஸ் ஸ்டாண்ட் டியூட்டியா?”

“”ஆமா சார்”

“”சார் அங்க ஒரு வயசான தாத்தா படுத்து கிடக்காரு, யாருன்னே தெரியலை. யாருன்னு விசாரிக்கணும்மா சார்?”

“”அட போங்க தம்பி, கொஞ்ச நேரம் கிடக்கும். பிறகு எவனாவது வந்து கூப்பிட்டு போயிடுவான். இதெல்லாம் இங்க சகஜம் தம்பி. அவன அவன் வீட்டுல கொண்டுபோய் சேத்தா மட்டும் நம்ம சம்பளத்தை கூட்டியா குடுக்க போறாங்க…”

பொறுப்பற்ற அவரது பேச்சு என்னை வெறுப்பேற்றியது. இருந்தாலும் லேசாக சிரித்தேன்.

“”சரி தம்பி வாறேன். எதாவது பிராப்ளம்னா உடனே கால் பண்ணுங்க” என்றார்.

அடுத்து மஞ்சுவிளை பேருந்து வர, பள்ளிக்கூட மாணவர்கள் பேருந்து நிற்பதற்குள் முன்னே ஓட,

“”ஏலே! நில்லுங்கடா” என்று பிரம்பைக் காட்ட, எல்லோரும் நின்றனர். பேருந்திலிருந்து பயணிகள் இறங்குவதற்கு முன்பே, அவர்களை இறங்கவிடாமல் உள்ளே நுழைந்தனர்.

நான் பேருந்தின் பக்கவாட்டில் பிரம்பால் அடிக்க, கூட்டமே என்னைத் திரும்பிப் பார்க்க, “”இறங்கிறவங்களுக்கு வழி விடு” என்றேன். பயணிகள் இறங்கிய பின் அனைவரும் ஏறினார்கள். பேருந்து கிளம்பிச் சென்றது.

“”இங்க பாரு நண்பா! இந்த பஸ்சுல ஏறி இறங்குவதெல்லாம் அவர்களுக்கே தெரியணும். நாளைக்கே நாம இங்க இல்லன்னா, முந்தியடித்துட்டுதான் ஏறப்போறாங்க”.

“”அதென்னமோ உண்மைதான். இருந்தாலும் நாம இருக்கும் வரைக்கும் நல்லபடியா பஸ் ஏத்தி விடுவோம்” என்றேன்.

அடுத்து லெபன் ஏட்டையா வர, மூவரும் பேசிக்கொண்டே பஸ் ஸ்டாண்டுக்குள் செல்ல, “”தம்பி, யார் இந்தப் பெரியவரு?”

“”தெரியல, ஏட்டையா ரொம்ப நேரமா கிடக்காரு, பேச்சு கொடுத்தா பேச மாட்டேங்கிறாரு”

குனிந்து அந்தப் பெரியவரின் கையைப் பிடித்து தூக்கி, “”தாத்தா.. தாத்தா…” என காதருகில் ஏட்டையா சத்தம் போட “”ஹா… ஹா…” என்பதைத் தவிர வேறேதும் பேசவில்லை.

“”இந்த ஆளப் பார்த்தா செத்து போயிடுவாரு போல இருக்கு, பேசக் கூட கெதி இல்ல… மீண்டும் தாத்தா எந்த ஊரு… எந்த ஊரு…” என கேட்க ஏதோ முணுமுணுத்தார். ஏதும் கேட்கவில்லை.

“”ஏட்டையா, அவரோடு சட்ட பையில ஏதோ இருக்கு பாருங்க…” பாக்கெட்டில் அவர் கைவிட அதிலொரு பர்ஸ் இருந்தது. திறந்து பார்த்தார். ஒரு பத்து ரூபாய் நோட்டும் இரண்டு இருபது ரூபாய் நோட்டுமிருந்தது. அதை வெளியில் எடுத்தவுடன், பெரியவரின் கை அதைப் பறிக்க வேகமாக வந்தது.

“”நாங்க ஒண்ணும் உங்க பைசாவ கொண்டு போக மாட்டோம். நீங்க எந்த ஊரு சொல்லுங்க…”

“”கடம்போ… கடம்போ…” என்றார். எனக்கேதும் புரியவில்லை. ஏட்டையா, “”கடம்போடு வாழ்வா” என்றதும், “”ஆமா” என்று தலையசைத்தார். உங்க பேரு “”ஆறுமுகம்” என்றார். அவரது சட்டைப் பையில் பர்சை வைத்துவிட்டு, தள்ளி வந்து “”கடம்போடுவாழ்வுல ப்ரண்ட் ஒருத்தன் உண்டு” என செல்போனில் நம்பரைத் தேட ஆரம்பித்தார். சிறிது நேரத்தில் “”ஹலோ, நான் லெபன் பேசுறேன். ஒரு சின்ன ஹெல்ப்…” “”என்னடா சொல்லு…” “”உங்க ஊருல ஆறுமுகம்னு ஒரு பெரியவர தெரியுமா?”

“”தெரியும்டா, விநாயகர் கோயில் தெரு…”

“”ஓகே. டா… அவங்க வீட்டு மொபைல் நம்பர் வாங்கிக்கொடு” என்று கூறி போனை கட் செய்தார்.

“”ஏட்டையா, இங்க கடம்போடுவாழ்வு போறவங்க யாராவது இருக்காங்களான்னு கேட்போமா?”

“”சரி! கேளு”

“”தம்பி, கடம்போடுவாழ்வு போறவங்க யாராவது இருக்கீங்களா…?” என கேட்டேன்.

“”சார் இவங்க ரெண்டு பேரும் அந்த ஊருதான்” என ஒரு சிறுவன் கை காட்ட…”

“”நாங்க இல்ல சார்… இல்ல சார்” என இருவரும் பயப்பட்டனர். அவர்களில் ஒரு சிறுவன் தோள் மீது கை போட்டு “”தம்பி, இந்த தாத்தாவ அவங்க வீட்டுல இறக்கிவிட்டா மட்டும் போதும். வேற ஒண்ணும் பண்ண வேண்டாம்” என அழைத்து வந்தேன்.

அதற்குள் ஏட்டையா ஆட்டோ பிடித்துக்கொண்டு வந்தார். ஆட்டோகாரர், “”சார் அங்க போனா பைசா தராம ஏமாத்திடுவாங்க”.

“”ஏ! போப்பா, இந்த தாத்தாவ இறக்கி விடு பைசா தருவாங்க… நான் போன்ல பேசிட்டேன். ஒருவேளை தரலன்னா பஸ் ஸ்டாண்ட் வா நான் தாரேன்” என்றார் ஏட்டையா.

தாத்தாவின் கையைப் பிடித்து மேலே தூக்கி, ஏட்டையா கோயிலுக்கு மாலை போட்டிருப்பதைகூட பொருள்படுத்தாமல் மூத்திர வாடையடிக்கும் வேட்டியை மடித்துக் கட்டிவிட்டபோது, ஒரு கணம் என் உடல் சிலிர்த்தது. அந்த தாத்தாவை ஆட்டோவில் ஏற்றி, அவருக்கு இருபுறமும் சிறுவர்களை அமர்த்தி, “”தாத்தாவ முன்னால சாய விட்டுறாம பிடிச்சிக்கப்பா” என அனுப்பி வைத்தோம். தலையில தொப்பி வைத்து ஏட்டையாவுக்கு ஒரு ராயல் சல்யூட் அடிக்க வேண்டும் போலிருந்தது. எந்தப் பிரதிபலனும் பாராமல் அவர் செய்த இந்த உதவி, என்னை மிகவும் கவர்ந்தது.

ஒரு வாரம் கழித்து ஒரு கேஸ் விசயமாக கடம்போடுவாழ்வு ஊருக்குப் போக வேண்டியிருந்தது. அந்த ஊருக்குச் சென்றுவிட்டுத் திரும்பும்போது, “”ஏட்டையா, போன வாரம் ஒரு தாத்தாவ ஆட்டோல ஏத்தி விட்டோமே, அவர் என்ன ஆனாருன்னு பாத்திட்டு வருவோமா” எனக் கேட்க, வண்டியை விநாயகர் கோயில் தெரு விட்டார். தாத்தாவின் வீட்டைக் கண்டுபிடித்தோம்.

ஓரளவு வசதியான வீடு, கறுப்புநிற கேட், ஆறுமுகம் பவனம் 1988 என எழுதியிருந்தது. மதில்மேல் பூந்தொட்டிகள் இருந்தன.

கேட்டைத் திறந்து உள்ளே சென்றதும், ஓர் அம்மா “”வாங்க சார்.. வாங்க சார்..” என வரவேற்க

“”ஏம்மா! இங்க ஆறுமுகம்னு ஒரு வயசான தாத்தா இருந்தாரே எங்கம்மா…”

“”உள்ளே இருக்காரு” என கூட்டிப் போனார். அவரைப் பார்த்ததும் ஒரு கணம் அதிர்ந்து போனேன். ஒரு பாயில், கால்களில் சங்கிலி கட்டப்பட்டு கிடந்தார்.

“”ஏம்மா! இப்படி கட்டி வச்சிருக்கீங்க?”

“”கட்டி வைக்கலன்னா, இவரு ஓடிருவாரு… கொஞ்சம் மண்டைக்கு சரியில்லாதவரு” என்று சொல்ல,

“”சரிம்மா… கொஞ்சம் தண்ணீர் கொண்டு வாங்க”, அந்த அம்மா உள்ளே செல்ல,

ஏட்டையா அந்த தாத்தாவை எழுப்பினார். “”அய்யா… அய்யா…”

லேசாக கண் திறந்து “”யாருப்பா…”

“”என்ன தெரியுதா…” எனக் கேட்க,

ஏட்டையாவின் முகத்துக்குப் பக்கத்தில் வந்து “”தெரியுது சாமி நீங்க தான ஆட்டோவுல ஏத்தி விட்டிங்க”

“”அது சரி… ஏன் வீட்டை விட்டு ஓடி போறீங்க…”

“”அது லூசு சார்” என்றாள் அந்த அம்மா.

“”இவதான் லூசு. இவ புருசன் லூசு. என்ன கட்டி வச்சி சித்ரவதை பண்ணுறாங்க, பாருங்க. இவங்கதான் பைத்தியம். இது வீடா… சுடுகாடு” என பெரியவர் பேசிக்கொண்டே போக, ஒருவர் உள்ளே வந்து

“”சார் வணக்கம் சார். நான்தான் ரவி, அவரோட பையன்”.

“”உங்கப்பாவ ஏன் இப்படி கட்டி வச்சிருக்கீங்க..?”

“”சார் எங்கப்பான்னா எனக்கு உயிர் சார். அவர்தான் கடவுள். என்ன வளர்த்து ஆளாக்குனது அவருதான். ஏன்னு தெரியல சார் வீட்டை விட்டு ஓடுறாரு, அதான் கட்டி வச்சிருக்கேன்.”

“”ஓ.கே! நல்லா பாத்துக்கோ!” என இருவரும் கிளம்பினோம்.

போகும் வழியில், “”வணக்கம் சார், நல்லா இருக்கீங்களா” என ஒருவர் கேட்க…

“”நல்லாயிருக்கேன்”.

“”என்ன விசயமா எங்க ஊருக்கு வந்தீங்க…”

“”அது ஒண்ணுமில்ல… இந்த ஆறுமுக தாத்தாவ பாக்க வந்தேன். அவரென்ன பைத்தியமா?”

“”இல்ல சார் அவரு நல்லா தெளிவாதான் இருக்காரு. அவரு பேருல நிறைய சொத்திருக்கு. அதான் அவரு எங்கேயும் போயிர கூடாதுன்னு, அந்த ரவி பய கட்டி வச்சிருக்கான்.”

“”அப்படியா கதை! எங்கப்பான்னா எனக்கு கடவுள், உயிர்னு சொன்னான்”.

“”எல்லாம் பொய் சார்”.

“”ஓகேப்பா வாரேன்” என கிளம்பினோம்.

ஏட்டையா மௌனமாகவே இருந்தார்.

அடுத்த வாரம் அந்த ஊரில் கோவில் கொடை விழா. இரவு நேரம் ஊரே கோயிலில் கூடியிருந்தது. லெபன் ஏட்டையாவுக்கும், எனக்கும் அங்குதான் டியூட்டி. பைக்கில் என்னை ஏற்றிக்கொண்டு ஆறுமுக தாத்தா வீட்டுக்கு வந்தார்.

தாத்தாவைத் தவிர வேறெவரும் இல்லை. கதவைத் திறந்தார். தாத்தாவின் கால் சங்கிலியை அவிழ்த்தார். வண்டி புறப்பட்டது. இருவருக்கும் இடையில் தாத்தா.

தாத்தாவை அவரது ரூமில் தங்க வைத்தார். தாத்தா கையெடுத்துக் கும்பிட்டார். மறுநாளே கோவையிலுள்ள தனது நண்பரின் ஆசிரமத்திற்கு கொண்டு போய் விட்டு விட்டு வந்தார்.

சொத்துக்காக கட்டி வைத்து சித்ரவதை செய்யும் ரவியைச் சட்டமோ, காவல்துறையோ எதுவும் செய்துவிடப் போவதில்லை. ஏதாவது கேட்டால் என் அப்பா என உரிமை கொண்டாடுவான் என்பதை அறிந்து.

அந்த தாத்தாவின் கால் விலங்கை உடைத்து, அவரைக் கரை சேர்த்த லெபன் ஏட்டையா, என்னைப் பொறுத்தவரையில் கடவுள்தான். இதனால் அவருக்கு ஒரு ரூபாய்கூட லாபமில்லை.. இருந்தாலும் மனிதநேய அடிப்படையில் அவர் செய்த உதவி பெரிது.

“”கடவுள்கள் பூமியில் வாழத்தான் செய்கிறார்கள்; லெபன் ஏட்டையா வடிவில்” என புரிந்து கொண்டேன்.

– மலர் (எ) மாணிக்கம் (மே 2015)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *