ஆயிரமாயிரம் இரவுகள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 4, 2013
பார்வையிட்டோர்: 11,323 
 

என்னைவிட மோசமான கணவன் இந்த உலகத்தில் யாரும் இருக்க முடியாது. சதைக்குள் சென்று தலை நீட்டிக்கொண்டிருக்கும் முள்ளை நெருடி நெருடிப் பார்ப்பது போல, என்னை நானே வருத்திக்கொண்டிருந்தேன்.

ஹரிணி, விநய், நான் – மூவரும் மெயின் ரோட்டை நோக்கி நடந்துகொண்டிருந்தோம். நான் ஹரிணியிடமிருந்து கொஞ்சம் விலகி விலகி நடக்க, அவள் என்னிடம் வந்து சேர்ந்துக்கொண்டேயிருந்தாள். யாரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. கொஞ்சம் நடந்ததும் ஹரிணி ‘நீ போய் அம்மாவுக்கு துணையா இருடா கண்ணா’ என்று விநயிடம் சொன்னாள். ‘ம்’ என்று சொல்லிவிட்டு விநய் அப்படியே நின்றான். நானும் ஹரிணியும் நின்றோம்.

‘தாங்க்ஸ்…’ என்றான் விநய். ‘ஓ! தாங்க்ஸ் சொல்ற அளவுக்கு பெரிய ஆள் ஆயாச்சா?’ என்று ஹரிணி அவன் கன்னங்களை தொட்டாள். தொட்டதும் அவன் பின்னகர்ந்துக் கொண்டான். வயது பதினொன்றா? பனிரெண்டா?. ‘இல்ல, காலைலேர்ந்து அம்மா மனிக்காக நிறைய பேர் கிட்ட கேட்டாங்க. கிடைக்கல. ரொம்ப பயந்துட்டாங்க’ என்றான். நான் அவனைப் பார்த்து ஏதாவது சொல்ல முயற்சித்து முடியாமல் புன்னகைத்தேன். என் கை அனிச்சையாக என் தோளிலிருந்து தொங்கிய பையை தொட்டுப் பார்த்தது. பணக் கத்தை லேசாக வெளியே பிதுங்கிக்கொண்டிருந்தது.

‘நீங்க கொண்டு வர்ரதுக்குள்ள ரெண்டு அங்கிள்ஸும் பணம் கொண்டு வந்துட்டாங்க. உங்களுக்கு ஃபோன் பண்றதுகுள்ள நீங்க இங்க வந்துட்டீங்க’ என்றான். ‘இட்ஸ் ஓகே கண்ணா. பரவால’, ஹரிணி சொல்லிவிட்டு, ‘நீ போ.’ என்றாள். அவன் ‘இம்’ என்று தலையசைத்து விட்டு, விடுபட்டு ஓடுவது போல ஹாஸ்பிட்டல் நோக்கி ஓடினான்.

தோளில் இருந்து மிகவும் அபத்திரமாக பை தொங்கிக் கொண்டிருந்தது போல எனக்குப் பட்டது. அப்படியே விட்டுவிடலாமா, இல்லை கக்கத்தில் வைத்துக் கொள்வதா, இல்லை…

‘அஹெம்’ என்று தொண்டையைச் செருமினாள் ஹரிணி. காட், நாங்கள் இருவரும் தனியாகி விட்டோம். என்ன பேசுவது அவளிடம். எப்படி பேசுவது?

நான் அவள் பக்கம் திரும்பாமல் நடக்கத் துவங்கினேன். இரண்டு அடிகளுக்குப் பின் தன் வலது கையை என் இடது கைக்குள் வளையமென மாட்டிக்கொண்டாள். அவளை திரும்பிப் பார்த்ததும், பளிச்சென சிரித்தாள். ஒரு சின்னப் பொட்டு முகத்தை எவ்வளவு அழகாக்கி விடுகிறது!

மெயின் ரோடு வந்தது. ஒரு ஷேர் ஆட்டோ எங்களை கவனித்துக் கிட்டே வந்து ‘தட் தட் தட்’ என்று உறுமியது.

‘சரண்! ஷாப்பிங் போலாமா? தி.நகர்?’

நான் விழித்தேன். ஆட்டோக்காரன், ‘ஏறுங்க மேடம்’ என்றான். ஹரிணி ‘வா’ என்று சொல்லிவிட்டு ஏறப்போனாள். ‘வேண்டாம்’ என்பது போல கையைப் பிடித்து லேசாக இழுத்தேன். ‘ப்ச். வா சரண்’.

எதிர் எதிரே வைக்கப்பட்ட இரண்டு டிரங்க்கு பெட்டிகள் மீது கொதறப்பட்ட இரண்டு மெத்தைகள் அலட்சியமாக கிடந்தன. கார் ஒரு வாரமாக மெக்கானிக் ஷெட்டில் இருப்பது நினைவுக்கு வந்தது. நான் ஒரு முட்டாள்.

நானும் ஹரிணியும் எதிர் எதிரே உட்காருகையில் எங்கள் கால் முட்டிகள் இடித்துக்கொண்டன. என் நீளமான கால்கள் எனக்கு கூச்சத்தை தந்தது. பையை எடுத்து மடியில் வைத்துக்கொண்டு கால்களை கொஞ்சம் மறைத்துக் கொண்டேன். ஹரிணி புடவை முந்தானையை முன் இழுத்து கையால் பிடித்துக்கொண்டு, கால் மேல் கால் மாற்றி போட்டுக்கொண்டாள்.

எனக்கு மின்னலென ஒரு எண்ணம் தோன்றியது. பேசாமல் பேங்க்குக்கு போய் இந்த பணத்தை மீண்டும் போட்டுவிட்டால் என்ன? குழந்தையின் சிரிப்பு போல மனதில் ஒன்று தோன்றி உடனே செத்து மடிந்தது. ச்சே. எடுத்தாயிற்று. அவ்வளவு தான்.

‘திரும்ப ஐ.சி.ஐ.சி.ஐ போய் பணத்த போட்டுடலாம்னு தானே யோசிக்கிறே?’ ஹரிணி சிரித்துக்கொண்டே கேட்டாள். எனக்கு சிரிப்பு வந்துவிட்டது. இல்லையென்று தலையசைத்தேன். என்னவோ ஒரு வார்த்தை சொல்லுவாளே, என்னை திட்ட. என்ன அது. அது தான் நான், சத்தியமாக அது தான்.

‘அசமஞ்சம்’ என்றாள். யா! அசமஞ்சம். அசமஞ்சம்.

அசமஞ்சகள் தாம் கொஞ்சமும் யோசிக்காமல் இப்படி அவசர அவசரமாக பணம் எடுக்கும். விஜயின் நிலைமை பார்த்து கொஞ்சம் அதிகமாக உணர்ச்சிவசப்பட்டு விட்டேன். சின்னப் பையன்.எங்கள் இருவரின் அக்கௌண்ட்டிலும் அவ்வளவு பணம் இல்லை. நான் என்ன செய்ய? நொடியில் இந்த எண்ணம் தோன்ற, ஹரிணியிடம் விஷயத்தை அவசரமாக சொல்லி, இழுத்து வந்து, கையெழுத்து வாங்கி..

பேங்க்கிற்கு போனதும் தான் எனக்கு மண்டையில் உறைத்தது. என்ன செய்து கொண்டிருக்கிறேன் நான்? ஹரிணி முகத்தில் எதுவும் காட்டிக்கொள்ளவில்லை. உள்ளுக்குள் உடைந்து போய்விட்டாளா? கொஞ்சம் யோசித்திருக்கலாமோ? எதுவும் பேசாமல் அமர்ந்துவிட்டு வந்தேன். ஹரிணியே எல்லாம் பேசினாள். நான் ஒரு முட்டாள், அசமஞ்சம், எல்லாம்.

‘எங்களுக்கு குழந்தை பிறக்காது மேம்’ – ஹரிணி பேங்க்கில் தெளிவாக நிதானமாக சொன்னது ஈட்டியாக நெஞ்சில் பாய்ந்திருந்தது. அந்த பெண் அதிகாரி ஒரு நொடி திகைத்து விட்டாள். ‘ஏன் இந்த ப்ளான்ல போட்ட பணத்த இவ்வளவு சீக்கிரமா எடுக்குறீங்க?’என்று கேட்டதோடு அவள் நிறுத்திக்கொண்டிருக்க வேண்டும். பின் இரண்டு லட்சத்தை எடுத்து தரும் வரை அவள் பேசவேயில்லை.

ஹரிணி என் கண்களுக்கு முன்னால் கையை இப்படியும் அப்படியும் அசைத்தாள். கவனம் கலைந்து அவளைப் பார்த்தேன். தொடைகளின் மீது வலது கையை ஊணி அதனால் முகத்தை தாங்கியிருந்தாள். நான் பார்த்ததும் அவளது வலது புருவம் ‘என்ன?’ என்று கேட்க, அவள் கண்கள் சிரித்தன. கடவுளே, இந்தப் பெண் எத்தனை அழகு!

‘இறங்கணும்’ என்றாள்.

இறங்கி சில்லறையை கொடுத்து விட்டு அவளிடம் வந்தேன். தி.நகர் ஜெகஜ்ஜோதியாக இருந்தது. ‘ஹரிணி, பையில பணம் இருக்குமா. ரிஸ்க்’ என்றேன்.

‘ஒண்ணும் ஆகாது வா. டெக்ஸ்டைல் இந்தியாவா? போத்தீஸா?’

‘என்ன வாங்கப்போறோம்?’

‘உனக்கு எதாச்சும் வாங்கலாம். ஷர்ட்.. ஷூஸ்.. எதாச்சும்’

நான் அவளையே பார்த்தேன். ‘வா’ என்று ‘வா’வையும் என்னையும் இழுத்தாள்.

கடையினுள் நுழையும் வரை என்னை இழுத்துக்கொண்டே சென்றாள். இரண்டாம் மாடிக்கு லிஃப்ட்டில் சென்றோம். லிஃப்ட்டில் என் முகத்தை பார்த்தேன். செத்துப் போயிருந்தது.

‘முதல்ல, ஷர்ட்ஸ். ஓகே? நீ இங்க நில்லு’. இருகைகளாலும் என்னை பிடித்து கண்ணாடி பக்கத்தில் நிற்க வைத்து விட்டு மளமளவென இயங்கினாள். கையில் ஏழெட்டு சட்டைகளுடன் வந்தாள். என் மீது வைத்துப் பார்ப்பது, உதடு சுழிப்பது, புருவம் உயர்த்தி ‘நைஸ்’ என்பது, ‘ஓகேவா?’ என்று கேட்பது..

தோளிலிருந்து தொங்கிய பையை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு அமைதியாக நின்றுகொண்டிருந்தேன். பையில் பணம் வந்ததிலிருந்து பாரம் ஏறியிருந்தது.

கடை முழுக்க சுற்றினோம். ஹரிணி பேசிக்கொண்டே இருந்தாள். எங்கிருந்தோ ஒரு டெடி பேர் பொம்மையை உருவி முகத்துக்கு நேரே நீட்டி ‘உனக்கு வேணுமா? என்றாள். பின்னாலிருந்து முதுகில் தட்டினாள். ‘வெரைட்டியே இல்ல’ என்றாள். ‘ஏஸி போட்டிருக்காங்களா இல்லயா சரண்?’ ‘இதே மாதிரி நம்ம ஒண்ணு வாங்கினோம்ல?’ ‘அந்த ப்ரவீண் பக்கா ஃப்ராடு. நான் சொன்னேன்ல அப்பவே?’ ‘நாளைக்கு லீவா?’ ‘ஐயோ, இன்னிக்கு செம காமெடி நடந்தது தெரியுமா?”ஒரு ப்ளேசர் வாங்கலாமா’?

இது ஒரு சீஸா விளையாட்டு. நான் கீழே போகும் போது மேலிருந்து ஹரிணி சிரித்தும் பேசியும் என்னை மேலெழுப்புவாள். நான் எழுந்ததும் அவள் விழுவாள்.

சிக்கனமான புன்னகையுடன் அவளையே பார்த்துக்கொண்டிருப்பது தவிர வேறென்ன நான் செய்ய முடியும்?

முக்கால் மணி நேரம் கடந்தது. கீழிறங்கி வந்ததும் இரண்டு பெரிய பையில் பொருட்களை திணித்துத் தந்தார்கள். ‘எய்ட் தௌசண்ட் செவண்ட்டி சார்’.

நான் பர்ஸ் எடுக்க எத்தனிக்கும் போது, ஹரிணி தடுத்தாள். ‘பேங்க்கிலேர்ந்து எடுத்த பணம் இருக்குல்ல சரண். அதுலேர்ந்து கொடுத்துரு’ என்றாள். கடவுளே.

‘ஹரிணி.. வேண்டாம்மா..’

‘அய்யய்யே. எடு சரண்.’ ‘சரியான அழுமூஞ்சிய கட்டி வெச்சிட்டாங்க’

ஹரிணி என்னை இழுத்துக்கொண்டு ஓரமாக கிடந்த நாற்காலியில் அமர்த்தினாள். நான் பையில் இருந்து ஒரு கட்டு எடுத்தேன். பிரித்து, ஒன்பது ஆயிரம் ரூபாய் நோட்டுகளை எடுத்தேன். ஹரிணி வெடுக்கென பிடுங்கிக்கொண்டு எண்ணிப் பார்த்தாள். ‘குட் பாய்.’ சிரித்தாள். ‘விட்டா இந்த முழு பணத்துலயும் உனக்கு எதாச்சும் வாங்கிக் கொடுப்பேன் சரண்’ என்றாள். எனக்கு என்னவோ செய்தது. அவள் கைகளை பிடிக்க முயன்று வேண்டாம் என விட்டு விட்டேன்.

இந்த இரவு இனி என்னாகும் என எனக்குத் தெரியும். ஆட்டோவில் திரும்புவோம். அந்தப் பெரிய ஃப்ளாட் எங்களை அமைதியாக உள்வாங்கிக் கொள்ளும். ‘போய் குளிச்சிட்டு வா’ என்று என்னை தள்ளுவாள். மணக்க மணக்க சமைப்பாள். பேசிக்கொண்டே சாப்பிட்டு முடித்து விட்டு, மொட்டை மாடிக்கு செல்வோம். ஏதாவது படம் பார்ப்போம். பின் படுக்கையில் விழுவோம். என்னைக் கட்டிகொண்டு கொஞ்சம் நேரம் அழுதுவிட்டு, விடிகாலை வரை என் காதில் கிசுகிசுத்தபடி தூங்கிப் போவாள்.

கவுண்ட்டரில் நின்றுக்கொண்டிருந்த ஹரிணி, திரும்ப நான் பத்திரமாக இருக்கிறேனா என்பதைப் போல பார்த்தாள்.

என்னை விட கொடுத்து வைத்த கணவன் உலகில் வேறு யாரும் இல்லை என்று தோன்றியது. அவளைப் பார்த்து புன்னகைத்தேன்.

(அலுவலகத்தில் நடந்த 200000 கதைப் போட்டிக்காக எழுதியது- மே 2009)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *