கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 30, 2021
பார்வையிட்டோர்: 14,599 
 
 

போக்குவரத்தின் நெரிசல் அதிகமாக இருந்ததாலும், தனது போசைக்கிளின் பிரேக் மேல் அவ்வளவாக நம்பிக்கை இல்லாததாலும், இறங்கி ஓரமாக தள்ளிக் கொண்டு நடந்தார் விநாயகம்.

ஆற்றுப் பாலத்தின் மேல் தள்ளிய போது, ஸ்டாண்ட் போட்டு நிறுத்திவிட்டு இரும்புக் கிராதிகள் மேல் கையூன்றி பாலைவனமாய் மணல் வரிகள் கொண்ட காவிரியைப் பார்த்தார். இதென்ன நதியா, மைதானமா? எப்படி இருந்த காவிரி ஏன் இப்படி வாடிப் போனாள்? பெருமூச்சின் வெளிப்பாடு. மனம் கலங்கியது.

இரண்டு கரைகளையும் அணைத்துக் கொண்டு , நுரைத்தபடி தாளலயத்துடன் பாய்ந்தோடி… பார்க்கிற படைப்பாளிகளின் மனங்களில் எல்லாம் கதையாக, கவிதையாக, கட்டுரையாக எவ்வளவு தந்த காவிரி! சின்ன அழுக்குத் தேக்கத்தில் துவைத்து உலர்த்தப்பட்ட வெள்ளைத் துணிகள் வரிசையாகத் துடித்துக் கொண்டிருந்தன.

விநாயகம் தன் மேல்துண்டால் நெற்றியில் பொடித்த வியர்வைத் துளிகளை ஒற்றிக் கொண்டு, மீண்டும் சைக்கிளைத் தள்ளினார்.

மலைக்கோட்டைக்கு எதிரே சென்ற பரபரப்பான வீதியில் பிரிந்த அல்லிமால் தெருவில் தனது கடையின் வாசலில் ஓரமாக சைக்கிளை நிறுத்தினார். அதில் மாட்டியிருந்த மஞ்சள் நிற ஜவுளிப் பையிலிருந்து சாவி எடுத்து எண்கள் போட்ட எட்டு மரப்பலகைகளையும் தொட்டுக் கொண்டிருந்த குறுக்கு இரும்புப் பட்டையின் இரண்டு பக்கங்களிலும் பூட்டுகளைத் திறந்தார்.

பட்டையைக் கழற்றிக் கீழே போட்டுவிட்டு ஒவ்வொரு பலகையாகக் கழற்றினார். நான்கை இந்தப் பக்கமும், நான்கை அந்தப் பக்கமுமாகச் சார்த்தி வைத்துவிட்டு, குனிந்து கடையின் வாசல்படியைத் தொட்டு உதட்டில் வைத்துக் கொண்டு கண்மூடி ஏதோ சுலோகம் உச்சரித்தார்.

உள்ளே வந்தார். சுவாமிப் படத்தில் காய்ந்திருந்த பூச்சரத்தை நீக்கிவிட்டு, கொண்டு வந்திருந்த புதிய சரத்தை இலை பிரித்தெடுத்து மாட்டினார். இரண்டு ஊது பத்திகளைக் கொளுத்தி, ஆட்டி அணைத்து, படத்தின் இடுக்கில் சொருகினார்.

பழைய துணி எடுத்து ஒவ்வொரு ராக்கிலும் இருந்த புத்தக வரிசைகளை மேலாகத் தட்டினார். முக்கியமான புத்தகங்கள் மட்டும் இருந்த கண்ணாடி பீரோவைத் துடைத்தார். பிறகு தரையில் ஒரு பக்கமாய் போட்டிருந்த மரப் பலகை மேல் தன் துண்டால் தட்டிவிட்டு சம்மணம் போட்டமர்ந்து குள்ளமான கணக்கு மேஜையை தன் பக்கம் இழுத்துக் கொண்டார்.

நேற்றைக்கு உறுப்பினர்கள் திருப்பிக் கொடுத்த புத்தகங்கள் ஒரு பக்கம் இருக்க… அவற்றை பக்கத்தில் இழுத்து வைத்துக் கொண்டார். நோட்டுப் புத்தகத்தைப் புரட்டினார். ஒரு நூலில் கட்டி வைத்திருந்த பென்சிலை எடுத்தார். பாக்கெட்டிலிருந்து கண்ணாடி எடுத்தணிந்து கொண்டு ஒவ்வொரு புத்தகமாகப் பெயர் பார்த்து நோட்டில் வரவு வைக்க ஆரம்பித்தார்.

புதுமைப்பித்தனின் அன்று இரவு.

அடடா! என்ன ஒரு எழுத்தாளான்! நவீன சிந்தனையை அந்தக் காலத்திலேயே வசீகரமாகச் சொன்னவராயிற்றே.

விநாயகம் அந்தப் புத்தகத்தைப் புரட்டி அதில் தனக்குப் பிடித்த ஒரு பகுதியைப் படிக்கத் துவங்கினார். இது இருபதாவது தடவையோ, முப்பதாவது தடவையோ…

மூன்று நாள் தாடியைப் புறங்கையினால் பலமாகத் தேய்த்துப் பிறகு சிக்குப் பின்னிப் பறந்து கொண்டிருந்த சிகையைக் கோதி விட்டுவிட்டு, உள்ளே நுழைந்தார் வி.பி. அரைமணி நேரத்துக்கு மேல் உட்காரக் கூடாது அவனிடம் இருக்கிறதை வாங்கிக் கொண்டு கடைசி பஸ் புறப்படுமுன் புறப்பட்டுவிட வேண்டும்’ என்ற வைராக்கியத்துடன் மனசு தனது நாட்டத்தின் பலன் காயா, பழமா என்பது பற்றி அலமந்தது. சற்று அழுக்குப் பிடித்த நீண்ட கதர் ஜிப்பா, கரையோரத்தில் கால்பட்டு கிழிந்த வேஷ்டி, கீழே விழுவோமா வேண்டாமா என தோளில் தொத்திக் தொங்கும் கதர் மேல் வேஷ்டி அவருக்கு தேச பக்தர் என விலாசம் ஒட்டின.

இந்த வர்ணனையைப் படித்ததும் விநாயகம் வழக்கம் போல தன்னை ஒருதரம் பார்த்துக் கொண்டார். கதர் ஜிப்பா, கரையோரம் கால் பட்டு கிழிந்த வேஷ்டி, தோளில் தொத்திக் கொண்டு மேல் வேஷ்டிக்குப் பதிலாக மேல்துண்டு! அதுதான் மாற்றம். புத்தகத்தில் அடுத்த வரியாக குதிகாலடியில் அர்த்த சந்திர வட்டமாகத் தேய்ந்து போயும் விடாப் பிடியாகச் சேவை வைராக்கியத்துடன் மிளிரும் மிதியடி…’ என்பதைப் படித்துவிட்டு கடைவாசலில் தான் விட்டிருந்த செருப்புகளைப் பார்த்தார்.

புதுமைப்பித்தன் எப்போது எப்படி தன்னைப் பார்த்தார் என்று எப்போதும் போல இப்போதும் ஆச்சரியம் ஏற்பட்டது. புத்தகத்தை வரவு செய்து விட்டு, அடுத்த புத்தகத்தை எடுத்தார்.

சுந்தரராமசாமி – ஒரு புளியமரத்தின் கதை.

உடனே சாக்லேட்டைப் பார்த்த குழந்தையின் குதூகலம் ஏற்பட்டுப் புரட்டினார்.

ஆசாரிப்பள்ளம் ரோட்டில் ஜோசப்பின் லாண்டிரியைத் தாண்டி ஏறத்தாழ ஒரு மைல் செல்கிற போது புதியபாதசாரி ஒருவனுக்கு ரோடு அந்த இடத்தில் முடிவடைகிறதோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துவது ராணித் தோட்டத்தின் பிரம்மாண்ட வாசல் தான். எதிர்முகமாக முன்னேறிக் கொண்டிருப்பவனுக்கு ராணித் தோட்டத்தின் அகண்ட நுழைவாயிலும் அதையொட்டி வடபுறம் செங்குத்தான மலையில் ராக்ஷஸக் குழுந்தைகள் மாக்கோலம் போட்டு விளையாடியதைப் போல காட்சி தரும் கருங்கல் மதிற்சுவரும்தான் புலப்படும். வாசலையொட்டி தென்புறம் தெரிவதெல்லாம் ராக்ஷஸ மரமொன்று; அதை அடுத்து மரங்கள் ; மரக்காட்டம் ரோடு முடிவடைந்து விட்டது என ஏமாந்து நிற்கிறவன் இயற்கையாகவே அவனைத் தாண்டி முன்னேறும் பஸ்ஸைக் கவனிக்கிறேன்.’

மூடிவைத்து விட்டு, அந்த ஆசாரிப்பள்ளம் ரோட்டில் இப்போதுதானே நின்று ராணித் தோட்டத்தின் அகண்ட நுழை வாயிலையும், கருங்கல் மதிற்சுவரையும் பார்ப்பதாகக் கற்பனை செய்து கொண்டார்.

அடுத்த புத்தகத்தை எடுத்தார்.

ஆதவன் – இரவுக்குப் பிறகு வருவது மாலை.

ஒரு அற்புதமான எழுத்தாளர் மறைந்து விட்டாரே என்று அவருக்குள் துக்க அலை ஒன்று பொங்கியது. புரட்டி அவர் வழக்கமாகப் படிக்கும் அந்த வசனப் பகுதிக்கு வந்தார்.

“காதல் மிக அழகானது – நமக்கு அது கிடைக்கும்பட்சத்தில்”.

“எப்போது அல்லது எங்கே அது கிடைக்கும்.”

“எப்போதும் எங்கு வேண்டுமானாலும் யாருக்கு வேண்டுமானாலும் கிடைக்கக்கூடும். அதே சமயத்துல எல்லாருக்கும் கிடைத்து விடுவதில்லை. கிடைத்தவர்கள் பலர் அதை உணர்வதில்லை.உணர்ந்தவர் பலர் அதைப் பெறுவதில்லை .”

“கடவுளைப் பற்றி ஆஸ்திகர்கள் சொல்வது போல அல்லவா இருக்கிறது”.

“ஆமாம். இரண்டுக்கும் ஒற்றுமைகள் உண்டு.”

“கடவுள் வழிபாட்டை ஒரு ரொமான்டிக் எஸ்கேப்பாகச் சொல்பவர்கள் இருக்கிறார்கள். அல்லது ஏதோ ஒன்றுக்காக ஸப்ஸ்டியூட்டாக….”

“மிகவும் சர்ச்சைக்குரிய விஷயம்.”

விநாயகம் புத்தகத்தை மூடி வைத்து விட்டு இந்த வசனங்களை அந்த இளைஞனும், இளைஞியும் எந்த முகபாவனை வைத்துக் கொண்டு பேசியிருப்பார்கள் என்று கற்பனையில் ஆழ்ந்தார்.

“சார், நூறு ரூபாய்க்கு சில்லறை இருக்கா?”

பக்கத்து பெட்டிக் கடைப் பையன் வந்து அவர் கற்பனையைக் கலைத்ததில் எரிச்சல் ஏற்பட்டது. இல்லை என்பதை தலையாட்டலிலேயே தெரிவித்து விட்டு மற்றொரு புத்தகத்தை எடுத்தார்.

விநாயகம் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்றால் அதற்குக் காரணம் ஆக்ஸிஜன் இல்லை. இந்தப் புத்தகங்கள்தான் அவருக்குப் புத்தகங்கள் மேல் அதீத ஆர்வம், மாறாத வெறி, தீராத காதல் என்று எத்தனை அடைமொழி கொடுத்து சொன்னாலும் அது அவரின் நிஜ உணர்வில் கால் பாகத்தையே வெளிப்படுத்தியதாகும்.

பள்ளி நாட்களில் ஒரு தமிழ் வாத்தியார்தான் அவருக்குப் படிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தினார். விநாயகத்திற்குள் விழுந்த தீப்பொறி பற்றிக் கொண்டது. பண்டிகைக்குப் புதுத் துணி எடுத்துத் தரவேண்டாம். அந்தக் காசைக் கொடுத்து விடுங்கள் புத்தகம் வாங்கிக் கொள்கிறேன் என்று வீட்டில் அடம் பிடித்தவர். வீட்டுக்கு வருகிற உறவினர்கள் உனக்கு விளையாட என்ன பொம்மை வேண்டும்? என்ற போது புத்தகம் வாங்கித் தாருங்கள்’ என்ற கேட்டவர். பழைய புத்தகக் கடையில் பொட்டலம் மடிக்க எடைக்குப் போடப்பட்ட புத்தகங்களை இவர் எடைக்கு வாங்கி வந்து விடுவார். எந்த ஊருக்குப் போனாலும் எல்லோரும் இங்கே கோவில் எங்க இருக்கு, சினிமா தியேட்டர் எங்க இருக்கு என்று விசாரிக்க இவர் மட்டும் புஸ்தகம் விக்கிற கடை எங்க இருக்கு?’ என்று விசாரிப்பார்.

இப்படிக் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்ந்த புத்தகங்கள் வீட்டின் ஓர் அறையை அடைத்துக் கொள்ள…. அடிக்கடி வீடு மாற்றும் அப்பா திட்டித் தீர்ப்பார். தாம் நடத்தும் பலசரக்குக் கடையில் பொட்டலம் கட்டிப் போட்டு விடு என்பார்.

இந்த விஷயத்தில் விநாயகத்திற்கும் அப்பாவுக்கும் அடிக்கடி சண்டை நடக்கும். விநாயகம் தன் புத்தகங்களை யாருக்காவது இரவல் கொடுத்தால் ஒரு நோட்டில் பெயர், கொடுத்த தேதி எழுதி வைத்து விடுவார். ஒரு வாரம் பார்ப்பார். திரும்ப வரவில்லை என்றால் தேடிச் சென்று, பாதிதான் படித்திருக்கிறேன் என்றாலும் கேட்காமல் பிடுங்கிக் கொண்டு வந்து விடுவார். வாங்கிச் சென்ற புத்தகத்தில் யாராவது பிடித்த பகுதியை அடிக்கோட்டிருந்தாலோ, படித்த பக்கத்தின் நினைவுக்கு மூலை மடக்கியிருந்தாலோ கோபப்பட்டு கண்டபடி திட்டுவார். அடுத்து அந்த நபரின் பெயர் புத்தக இரவல் கும்பலின் பட்டியலில் நீக்கப்பட்டு விடும். ஒரு சமயம் வாங்கிச் சென்ற ஆசாமி அட்டை கிழிந்து விட்டது என்ற அலட்சியமாகச் சொல்ல, அவர் சட்டையைப் பிடித்துச் சண்டைக்குப் போய்விட்டார்.

அப்பா இறந்த பிறகு அவரின் பலசரக்குக் கடையை நிர்வகிக்கும் பொறுப்பு விநாயகம் மேல் விழுந்தது. அப்போது வீட்டில் இவரும், இவரது மனைவியும், இவரின் ஒரே மகள் ஆனந்தியும் தான்.

பத்துப் பைசாவுக்கு மிளகு, கால் ரூபாய்க்குப் பொட்டுக் கடலை என்கிற சில்லறை வியாபாரத்தில் இவரால் படிப்பதற்காக நேரம் ஒதுக்க முடியாமல் போக… கடையை இழுத்து மூடி விட்டார்.

அப்புறம் பிறந்த யோசனைதான். இந்த வாடகை நூல் நிலையம். பாரதியாரை அவருக்கு ரொம்பப் பிடிக்கும் என்பதால் பாரதி வாடகை நூல் நிலையம் என்று போர்டு மாட்டினார். பலசரக்குக் கடையின் ராக்கைகளை, தச்சன் கொண்டு புத்தக ராக்கைகளாக மாற்றி, தம்முடைய சேகரிப்புகளைக் கொண்டு வந்து வைத்து, மேலும் புதிதாகப் புத்தகங்கள் வாங்கிப் போட்டார்.

இது துவங்கி இருபது வருடங்களாகிறது. ஐந்தாறுக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள். இருந்தாலும் லாபம் கொடுக்கிற தொழில் இல்லை இது.

விநாயகத்திற்கு மனைவி காலமாகி, மகளுக்கு நான்கு வருடங்கள் முன்பு திருமணமாகி இப்போது தனியாளாக இருப்பதால் தேவைகள் குறைவு. எந்த காலத்திலும் அவர் அதிக வருமானத்திற்கு ஆசைப்பட்டதில்லை.

வாழ்க்கையில் அவருக்குப் பிடித்த விஷயம் நினைத்த போதெல்லாம் நினைத்த புத்தகத்தைப் படிப்பது. அதற்கு அனுமதிக்கும் இந்தத் தொழில் திருப்தியாகி விட்டது. அதனால் எத்தனையோ பேர் ஏதேதோ தொழில் செய்ய ஆர்வமூட்டியபோதெல்லாம் கண்டிப்பாக அந்த யோசனைகளை நிராகரித்து விட்டார்.

ஆனால்… விநாயகத்திற்கு தன் மருமகனை சமாளிப்பதுதான் இப்போது பெரிய பிரச்சனையாக இருக்கிறது.

தீர விசாரித்து, பக்கத்திலேயே இருக்கிற ஸ்ரீரங்கம் என்பதால் மகளை அடிக்கடி பார்த்து வரலாம் என்கிற சொகரியமெல்லாம் யோசித்து சந்தோஷப்பட்டுத்தான் ஆனந்தியைக் கட்டிக் கொடுத்தார்.

ஆனால் ஆனந்தி இந்த நான்கு வருடங்களில் புருஷனோடு இருந்த நாட்களை விட அப்பாவோடு இருந்த நாட்கள்தான் அதிகம். மருமகன் சிவராமுக்கு நிரந்தர வேலை இல்லை. உழைக்கிற ஆர்வமும் இல்லை. மனைவியைக் கன்னத்தில் அறைந்து அப்பா வீட்டுக்கு அனுப்பினால் இரண்டாயிரத்தோடு வருவாள், இடுப்பில் உதைத்து அனுப்பினால், ஐயாயிரம், சூடு போட்டு அனுப்பினால் பத்தாயிரம் என்று ஒரு கணக்கு வைத்திருக்கிறான்.

விவாகரத்து வாங்கிக் கொடுக்கச் சொல்லி ஆனந்தி பல தடவை கேட்டு விட்டாள். ‘இந்தத் தடவை திருந்தி விடுவார், பொறுமையாகப் போகலாம் என்று இவர்தான் நம்பிக்கை வார்த்தை சொல்லி அனுப்பிக் கொண்டிருக்கிறார். இந்தப் போக்குவரத்தில் ஆனந்தி தற்சமயம் இவரோடு இருக்கிறாள்.

மருமகனின் புதிய கோரிக்கை என்ன வென்றால்….

கால் காசுக்குப் பெறாத இந்தப் புத்தகக் கடையை காலி செய்து மருமகன் பெயருக்கு மாற்றி விட வேண்டுமாம். அவர் இங்கே ஜட்டி, பிரா விற்கிற ரெடிமேட் கடை ஆரம்பித்து பொறுப்பாகத் தொழில் நடத்தி ஆனந்தியைக் கண்கலங்காமல் பார்த்துக் கொள்கிறாராம்.

இன்றைக்குக் காலையில் கடைக்குப் புறப்பட்ட போது கூட, வீட்டில் ஆனந்தி இந்தப் பேச்சை எடுத்த போது, விநாயகம் தீர்மானமாகச் சொல்லி விட்டார்.

“இதோ பாரும்மா, எங்கிட்ட சொத்துன்னு இருக்குறது அந்தக் கடை மட்டும் தான். என் காலத்துக்கப்புறம் அது உனக்குத்தான் வந்து சேரப் போகுது. புத்தகத்தை எல்லாம் பப்ளிக் லைப்ரரில் போட்டுட்டு நான் செத்தப்புறம் உன் புருஷனை அங்க எந்த கடை வேணுமானாலும் வெச்சி நடத்தச் சொல்லு.”

“அதுக்கில்லைப்பா. அந்த இடம் பஜார்ல முக்கியமான இடம். பக்கத்துப் பக்கத்து கடைக்காரங்க ஆயிரக் கணக்கு வியாபராத்துல சம்பாதிக்கிறாங்க. ரெடிமேட் கடை வெச்சா எப்படியும் மாசம் ஆறாயிரம், ஏழாயிரம் சம்பாதிக்க முடியும்னு இவர் சொல்றார். வாடகைக்கு விட்டாக் கூட ஒரு லட்சம் அட்வான்சும், மூவாயிரம் வாடகையும் தரத் தயாரா இருக்காங்களாம். நீங்க பண்றது முட்டாள் தனமாம்.”

“எல்லாம் எனக்குத் தெரியும்மா. லாபத்தையும் வருமானத்தையும் பார்த்திருந்தா நான் இத்தனை வருஷம் இதை நடத்திட்டிருக்க மாட்டேன் ஆனந்தி. இது மக்கள் சேவைக்காவும், என் சந்தோஷத்துக்காகவும் செய்துட்டிருக்கேன். எவ்வளவு பேருக்கு அறிவு விருத்திக்கு உதவுது தெரியுமா? தமிழ்ல டாக்டர் பட்டத்துக்கு அராய்ச்சி பண்ற எக்கனை மாணவர்கள் தேடி வந்து அவங்களுக்கு வேண்டிய புத்தகங்களை எடுத்துப் போறாங்க தெரியுமா? எங்கேயும் தெரியுமா?”

“தெரியும்ப்பா ஒவ்வொரு புஸ்தகமும் உங்களுக்கு ஒரு புள்ளை மாதரின்னு நல்லாத் தெரியும். இந்த மனுஷனுக்குத் தெரிய மாட்டேங்குதே!”

“அவருக்குத் தொழில் நடத்தற ஆர்வம் எல்லாம் கிடையாதும்மா. எத்தனை தடவை எவ்வளவு கொடுதாச்சு. எல்லாத்தையும் சீட்டுக் கட்டுல தோத்தாச்சு. புதுசா தோக்கறதுக்குப் பணம் வேணும். பணம் எதாச்சும் ஏற்பாடு பண்ண முடியுமான்னு பார்க்கறேன்.”

“வேணாம்ப்பா. அங்க போய் அடி, உதை வாங்கி நரகவேதனை படறதுக்கு நான் இங்கேயே இருந்துடறேன். இதான் எனக்கு நிம்மதியா இருக்கு.”

என்னதான் ஆனந்தி வெறுப்பில் அப்படிச் சொன்னாலும் அதெப்படி அவளைக் கணவனோடு சேர்த்து வைக்காமல் இருக்க முடியும்?

ஒரு பத்தாயிரம் ஏற்பாடு செய்து கொடுத்தனுப்பினால் மாப்பிள்ளை சமாதானமாவார். எப்படி ஏற்பாடு செய்வது.

கடையில் உட்கார்ந்து கொண்டு யோசனையில் ஆழ்ந்த விநயாகத்தற்குத் தாம் ஐம்பதாயிரம் ரூபாய்க்கு ஆயுள் இன்ஷ்யூரன்ஸ் எடுத்து பணம் கட்டி வருவது நினைவுக்கு வந்தது. அதில் கடன் போட்டு எடுத்துத் தரலாமே. இன்ஷ்யூரன்ஸ் ஏஜெண்ட் ஆறுமுகம் லால்குடியில் இருக்கிறார். அவரிடம் சொன்னால் எல்லா ஏற்பாடுகளும் செய்து விடுவார்.

விநாயகம் யோசனையில் இருக்கும் போது, “என்ன மாமா, பலமான யோசனை?” என்று குரல் கொடுத்தபடி உள்ளே வந்தான் சிவராம். சலவை வேட்டி, சலவை சட்டை ஜவ்வாது மணத்தது.

“வாங்க மாப்பிள்ளை, உக்காருங்க.”

புறங்கையால் மீசையைத் தள்ளி விட்டபடி தன் கர்சீப்பை போட்டு, அதன்மேல் அமர்ந்தான். அவன் முகம் கிட்டே வந்த போது சிகரெட் நாற்றம். விநாயகம் இருமினார்.

“என்ன மாமா, யோசனை செஞ்சீங்களா?”

“என்ன சாப்பிடறீங்க? ஜில்லுன்னு மோர் கொண்டு வரச் சொல்லட்டுமா?”

“தொழில் ஆரம்பிக்க கை கொடுங்க மாமா? மெயின் தெருவுல நம்ம சொந்தக் கடை சும்மா இருக்குறப்ப ஸ்ரீரங்கத்தில் அட்வான்ஸ் கொடுத்து கடை எடுக்கறது முட்டாள் பண்ற வேலை மாமா.”

“இங்க கடை சும்மா இல்லையே மாப்பிள்ளை.”

“நானும் பல தடவை ஜாடை மாடையா சொல்லிட்டேன். ஆனந்தி மூலமாவும் சொல்லிவுட்டுட்டேன். இது ஒரு தொழில்னு உக்காந்து பண்ணிட்டுருக்கீங்களே… நாலு பாக்கெட் சிகரெட் வாங்கி வெச்சிக்கிட்டு வியாபாரம் செஞ்சாலாவது கொஞ்சம் காசு பார்க்கலாம். இந்தக் காலத்துல எவன் படிக்கிறான் இலக்கியமும், நாவலும்! வீட்டுக்கு வீடு டீ.வி . வந்துடுச்சு . ஆயிரத்தெட்டு சேனல் வந்துடுச்சு. பேப்பர் படிக்கிறதுக்கே நேரம் இல்லை. நீங்க சேர்த்து வெச்சிருக்கிற இந்த செல்லரிச்ச புத்தகத்தை எல்லாம் எவன் படிக்கிறான்?”

“உங்களுக்குத் தெரியாது மாப்பிள்ளை. அதுக்குன்னு ரசனை உள்ள கூட்டம் தனியா இருக்குது.”

“அப்ப எனக்கெல்லாம் ரசனை இல்லைய?”

“புஸ்தகம் படிக்கிற ரசனையைச் சொன்னேன்.”

“சரி, இப்ப உங்களுக்கு இதில் என்னதான் வருமானம் வருது?”

“ஐந்நூறு , எழுநூறு வருது.”

“பேத்தலா இல்லையா? இதே வரிசைல பத்து கடை தள்ளி புதுசா ஒரு பேப்பர் ஸ்டோர்ஸ் வந்திருக்கு. ஒரு லட்சம் அட்வான்சாம். மூவாரயிரம் வாடகையாம். ரெண்டு வட்டி கணக்கு பார்த்தாலும் லட்ச ரூபாய்க்கு மாசம் ரெண்டாயிரம் வட்டி வரும். வாடகை சேர்த்தா அஞ்சாயிரம் வருமானம் வரும். கடையைக் காலி பண்ணி ஒப்படைச்சிட்டு வீட்ல சும்மா உக்காந்திருந்தாலே அஞ்சாயிரம் வர வாய்ப்பிருக்கிறப்ப எதுக்கு இப்படி பைத்தியக்காரத்தனம் பண்றீங்க மாமா?” “மாசம் அஞ்சாயிரம் எனக்கு அவசியமில்லையே மாப்பிள்ளை .”

“உங்களுக்கு வேணாம்னா எல்லாருக்கும் வேணாமா? எனக்கு வேணுமே. உங்க ஒரே பொண்ணுக்குச் சேரப் போற சொத்து தானே இது.

“வாஸ்தவம். ஆனா அதுக்கு நான் சாகணும் மாப்பிள்ளை .”

“நீங்க உயிரோட இருக்கிற வரைக்கும் உங்க மாப்பிள்ளையும், பொண்ணும் சுகப்படக்கூடாதா? என்ன மனசு இது?”

“அப்படி யாராச்சும் நெனைப்பானா? என் பொண்ணைக் கட்டிக் கொடுத்துட்டேன். அவளை சுகமா வெச்சிக்க வேண்டியது என் மாப்பிள்ளையோட பொறுப்பு. அதுக்கு ஓரளவு உதவிட்டேன். இன்னும் கொஞ்சம் உதவுறேன். ஆனா நான் சாகற வரைக்கும் இந்தக் கடைல நான் இந்தத் தொழில் தான் செய்ய விரும்புறேன். மாப்பிள்ளை என்னைக் கட்டாயப்படுத்தாதீங்க.”

சிவராம் கொஞ்ச நேரம் முறைப்பாகப் பார்த்தான்.

“என்னமோ உதவுறேன்னு சொன்னீங்களே…”

“ஒரு பத்தாயிரம் ஏற்பாடு பண்ணித்தர்றேன். ஸ்ரீரங்கத்திலேயே ஒரு கடை பாருங்க மாப்பிள்ளை.”

வேறு திசை பார்த்தபடி, கொடுக்கறதைச் சீக்கிரம் கொடுத்தா சௌகரியமா இருக்கும்” என்றான்.

“என்னோட இன்ஷ்யூரன்ஸ் பாலிசி மேல கடன் போட்டுத்தான் எடுத்துத் தரப்போறேன். லால்குடில ஏஜெண்டைப் பார்க்கணும். கடைப் பையன் ரெண்டு நாளா வரலை. அவன் வந்ததும்….”

“நான் பாத்துக்க மாட்டேனா மாமா? அந்தளவுக்கு கூட பொறுப்பு இல்லாதவனா உங்க மருகமன்? நோட்ல பதிவு பண்ணிட்டு புக்கு தரணும். வர்ற புக்கை பதிவு பண்ணி வைக்கணும். என்ன, கம்பசித்திர வேலை? நீங்க இப்பவே போய்ட்டு வாங்களேன். இங்க இருக்கிற லால்குடி போய்ட்டு வர்றதுக்கு நாள், நட்சத்திரம் பார்க்கணுமா?”

விநாயகம் தலையசைத்து துண்டை உதறி தோளில் போட்டுக் கொண்டு புறப்பட்டார்.

மாலை ஐந்து மணிக்குத்தான் லால்குடியிலிருந்து திரும்ப முடிந்தது. பஸ் பிடித்து மெயின் கார்ட் கேட் வந்து, போஸ் ரோட்டில் வீட்டுக்குக் காய்கறி, பழம் வாங்கிக் கொண்டு தம் கடையை நோக்கி நடந்தார். மாப்பிள்ளையை வீட்டில் சாப்பிடச் சொல்ல வேண்டும். தங்கச் சொல்ல வேண்டும். இரவு சாப்பாட்டுக்குப் பிறகு சும்மா நடந்துட்டு வரலாம் வாங்க’ என்று கூட்டிக் கொண்டு காவிரிப் பாலத்திற்கு வந்து மென்மையாக அவரின் தவறுகளைச் சுட்டிக்காட்ட வேண்டும்.

அவர் மனத்தில் எதிர்காலம் பற்றி என்னதான் திட்டம் இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஒரு டீ.வி. கடை வாசலில் பத்து டீ.வி. பெட்டிகளில் ஒரு பெண் செய்தி வாசித்துக் கொண்டிருக்க…. வெளியே இருபது முப்பது பேர் நின்று பார்த்தார்கள். இவரும் நின்றார்.

நாளை நமது தேசத்தின் ஐம்பதாவது சுதந்தர தின விழா நாடெங்கும் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

சட்டென்று விநாயகத்தின் உடலெங்கும் ஒரு சிலிர்ப்பு ஓடியது. விநாயகம் ரொம்ப வருடங்களாக சுதந்தர தினத்தன்று முழுக்க மெயினம் அனுஷ்டித்து வருகிறார். அன்றைய தினம் காலையில் வீட்டில் செய்தித் தாள்கள் படித்து விட்டு, மகாத்மா காந்தியின் சத்திய சோதனை புத்தகத்தை எடுத்து வைத்துக் கொண்டு உட்கார்ந்து விடுவார்.

பல வரிகளுக்கு கண்கள் கசியும், நிறுத்தி அடையாள் விரல் வைத்துப் புத்தகம் மூடி சுதந்தரப் போராட்ட நிகழ்வுகளை யோசித்து மனத்திற்குள் பதறுவார்.

சுதந்திரம் கிடைத்தபோது அவர் பத்து வயதுச் சிறுவன். ஆனந்தியிடம் பலமுறை சொல்லியிருக்கிறார். இன்னும் பத்து வருஷம் முன்னாடி பொறந்து காந்தியோட சுதந்தர போராட்டத்தில் ஒரு வீரியமான இளைஞனாக நான் கலந்துக்க முடியாம போச்சேன்னு ஒரு வருத்தம் இருக்கும்மா. நாட்டோட விடுதலைக்கு நான் எதுவுமே செய்யலையே…’

அஹிம்சை வழியில் வந்த சுதந்தரம் என்றாலும்… எத்தனை உயிர்ச் சேதங்கள்! வேதனைகள்! ரத்தச் சிதறல்கள்! நினைத்தாலே உடம்பெல்லாம் நடுங்கும் ஜாலியன் வாலாபாக் சம்பவம் ஒன்று போதாதா? எத்தனை ஆவேசக் கவிதைகள்! எத்தனை புரட்சி பேச்சுக்கள்! மதம், மொழி, இனம் எல்லாம் தூக்கி வைத்துவிட்டு எத்தனை கோடி பேர் ஒற்றுமையாக ஓரணியில் திரண்டார்கள்!

விநாயகத்திற்கு, டீ.வி. பெண் யார் எங்கே கொடி ஏற்றுவார் என்ற சொல்கிற செய்தி எல்லாம் முக்கியமாகப்படவில்லை. விலகி மெதுவாக நடக்கத் துவங்கினார். உள்ளம் ஏனோ கனத்துப் போனது.

தமது கடையைச் சமீபித்தார். இலேசாகத் தலை சுற்றியது. நடப்பதை நிறுத்தி மேல் துண்டால் முகம் துடைத்துக் கொண்டு நடந்து கடைக்கு வந்தவர்… திகைத்துப் போனார்.

சிவராம் கடையில் நின்று உத்தரவிட்டுக் கொண்டிருக்க, இரண்டு தச்சர்கள் புத்தக ராக்கைகளைக் கழற்றிக் கொண்டிருந்தார்கள். கடையில் ஒரே ஒரு புத்தகம் கூட இல்லை.

பதறிப் போய், “மாப்பிள்ளை, இதெல்லாம் என்ன?” என்று கத்தி விட்டார் விநாயகம்.

சிவராம் புன்னகைத்து பாக்கெட்டிலிருந்து சிகரெட் எடுத்து நிதானமாகப் பற்றவைத்து, “மாமா, இதமாகச் சொன்னா நீங்க கேக்கலை. அதான் அதிரடி நடவடிக்கை எடுத்துட்டேன். இந்தக் கடை உங்கப்பா உங்களுக்கு விட்டுட்டுப் போனது. நியாயமா தாத்தா சொத்து பேத்திக்கு வரணும். இங்க என் இஷ்டப்படி கடை வைக்கப் போறேன். சம்மதம்னா வாழ்த்துங்க. சம்மதமில்லைன்னாலும் கோர்ட்டுக்குப் போய்க்கங்க கேஸ் போட காசு வேணும், மறந்துடாதீங்க!” என்றான்.

விநாயகத்திற்குப் பதற்றத்தில் உடல் முழுதும் நடுங்கியது.

“அடப்பாவி! புஸ்தகம் எல்லாம் என்னடா செஞ்சே?”

“எடைக்குப் போட்டுடலாம்னுதான் நினைச்சேன். திருப்பி நீங்க வாங்கிட்டு வந்துவிடுவீங்களேன்னு… அதோ பாருங்க….”

எதிர்ப்புறம் சற்றுத் தள்ளி இருந்த ஒரு காலிமனையின் மூலையைச் சுட்டிக்காட்ட… அங்கே கறுப்பாக ஒரு சாம்பல் மலை இருந்தது. இலேசாக புகை வந்து கொண்டிருந்தது.

விநாயகம் அலறியடித்துக் கொண்டு அங்கே ஓடினார். ஒரு புத்தகத்தின் ஒரு பக்கம் கூட மிச்சமில்லாமல் எழுத்தெழுத்தாய் எரிந்து முடிந்திருந்தது. விநாயகத்திற்கு ரத்தம் கொதித்தது. ஆவேசமாக மறுபடி கடைக்கு ஓடி வந்தார். சிவராமின் சட்டையை ஆக்ரோஷமாகப் பிடித்து உலுக்கி கத்தினார், “டேய்! நீ எவ்வளவு பேரை அவமானப்படுத்திட்டே தெரியுமாடா? பாவி! சண்டாளா! உன்னை ….” என்று பரபரத்தவர் கண்களில் தச்சனின் உளி கண்ணில் பட… பாய்ந்து எடுத்தார்.

முற்றிலும் நிதானமிழந்த நிலையில், என்ன செய்கிறோம் என்று யோசிக்க அவகாசம் இல்லாமல்…

மத்திய சிறைச்சாலை. நூலகப் பகுதியில் புத்தகம் படித்துக் கொண்டிருந்த விநாயகத்தை வார்டன் அழைத்தார்.

“உங்க பொண்ணு உங்களைப் பார்க்க வந்திருக்கா”

விநாயகம் பார்வையாளர் பகுதிக்கு வந்தார். அங்கே நின்றிருந்த ஆனந்தியை முகம் பார்க்க இயலாமல் அமைதியாக நின்றார்.

அதிகாரி அனுமதியுடன் அவள் கொண்டு வந்திருந்த சில புத்தகங்களை அவரிடம் நீட்டினாள்.

“அதே கடையில் அதே வாடகை நூல் நிலையம் ஆரம்பிச்சிருக்கேன்பா. பேர்தான் மாத்திருக்கேன். விநாயகம் வாடகை நூல் நிலையம்!”

விநாயகம், வழிந்த கண்ணீரைப் புறங்கையால் துடைத்துக் கொண்டு பெருமிதத்தோடு அவளைப் பார்த்தார்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *