தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 31, 2017
பார்வையிட்டோர்: 9,339 
 
 

“அழகுன்னா என்ன..? நீங்க என்ன பதில் சொல்லுவீங்க? நல்லா இருக்கறதுன்னா..? சுந்தரமா இருக்கறதுன்னா..? இல்ல பூவப் போலன்னா..? இல்ல..? பெண்ணைப்போலன்னா..? நான் என்ன சொன்னேங்கறீங்களா..? அழகுன்னா..? பனித்துளி விழற காலநேரத்தில் பச்சப்புல்லு படர்ந்துகிடக்கற மைதானத்தில.. அரளிச்செடியோட இலையில கெட்டியா பிடிச்சுகிட்டு இருக்கற நீர்த்துளிகள்தான் அழகு…’ நான் சொன்ன பதில் அவனுக்கு திருப்தியா இல்ல.. பதில் சரியில்லை என்று தலையை ஆட்டினான். நான் மறுபடியும் சொன்னேன்..’ தங்கநிறத்தில் ஜரிகை போட்ட புடவையில சிகப்பு கலர்ல ப்ளவுசும் போட்டுக்கிட்டு, கண்ணுக்கு ரம்மியமா ஒரு இளம்பொண்ணு.. முன்ன பின்ன தெரியாதவ.. அவ கோயில்ல சாமியப் பாத்துட்டு நெத்தியில சுருள்ற முடியையும் ஒதுக்கிவிட்டுகிட்டு குங்குமப்பொட்டையும் வச்சுகிட்டு, கோயிலுக்கு பக்கத்துல இருக்கற அரசமரத்து கிட்ட மெல்ல நடந்து வந்துகிட்டு இருக்கறா.. அவளோட இடது கையில பிரசாதம் இருக்குது.. வேகமா அடிக்கற தென்றல் காற்றில பறக்கற புடவைய அவ தன்னோட வலது கையால ஒதுக்கறதுக்கு முயற்சி செய்யறா.. பவளம் மாதிரி இருக்கற அவளோட உதடுகள்ல அஸ்தமிக்கற மாலை நேரத்து சூரியனோட வெய்யில் பட்டு அரும்பற வியர்வைத்துளிகள்.. இத பாக்கறப்ப உங்களுக்கு என்ன தோணும்..? இதும் அழகுதான்..’ அவனுக்கு இதுவும் பிடிக்கவில்லை. மறுபடியும் தலையை ஆட்டினான். எனக்கு கோபம் வந்தது.

அப்புறம் எத நீங்க அழகுன்னு சொல்றீங்க..?

அவன் கேட்டான்.

நான் சொல்றேன்..

அழகுஅவன் சொல்ல ஆரம்பித்தான்..

************************

“”நான் ஆட்டோ ஓட்டறவன்னு உங்களுக்கு தெரியும் இல்லையா..? இன்னிக்கு காலையில நான் ஒரு டிரிப்புக்கு போனேன். இடத்த சொல்லணுமா..? இடத்தில என்ன விஷயம் இருக்கு..? ஆட்டோவில வந்தவங்க “இதோ வந்துட்டேன்..’ன்னு சொல்லிட்டு, ஒரு வீட்டுக்குள்ள போனாங்க.. நான் பக்கத்தில இருந்த ஸ்கூல் கிரவுண்ட்ல ஆட்டோவ நிறுத்திட்டு காத்துகிட்டு இருந்தேன்.

பக்கத்தில இருந்த அந்த ஸ்கூல்ல இருந்து பசங்களோட சத்தம். இன்டர்வெல்போல இருக்குது. சின்ன பசங்க.. ஓடிப்பிடிச்சுகிட்டும், தள்ளிவிட்டுகிட்டும், சிரித்து பேசிக்கிட்டும், விளையாடிகிட்டும் இருந்தாங்க.. இதுக்கு இடையில தூரத்துல இருந்து ரெண்டு சின்னப் பசங்க இன்னொருத்தனோட ரெண்டு கையையும் பிடிச்சுகிட்டு கூட்டிகிட்டு வந்தாங்க. அவனோட ஒரு கண்ணு முழுசாவும், இன்னொரு கண்ணு பாதி மூடியும் இருந்தது. அந்த ரெண்டு கண்ணுலயும் பார்வ இல்லன்னு பார்க்கறப்பவே தெரிஞ்சுகிடலாம். அந்த கண்ணுல்ல கருவிழியே இல்லாம இருந்துச்சு. பாதி மூடியிருந்த கண்ணு ரெண்டும் வெள்ளையா இருந்துச்சு.

அந்த பசங்கள்ல ஒருத்தன் ஆட்டோவோட முன்பக்கம் இருந்த கண்ணாடியை கையால வேகமா அடிச்சு சத்தம் உண்டாக்கினான். அப்புறம் அவன்கிட்ட சொன்னான்.

ஆட்டோ… ஆட்டோ

அவன் வலது கைய ஆசயா நீட்டி, மெல்ல ஆட்டோவ தடவி பாத்தான்.. அப்புறம் மெதுவா சொன்னான்.

ஆட்டோ.. ஆட்டோ..

அவன் மறுபடியும் ஆட்டோவோட பின்னாடிப்பக்கத்த கையால மெதுவா தடவிகிட்டே சொன்னான்.

ஆட்டோ.. ஆட்டோ..

நான் ஆட்டோவில இருந்து வெளிய இறங்கினேன். என்ன பார்த்தவுடனே அவன அப்படியே விட்டுவிட்டு அந்த ரெண்டு பசங்களும் ஓடிப்போனாங்க. பயந்துகிட்டுதான். நான் அவன் கிட்ட அதட்டலா கேட்டேன்.

பேரு என்ன..?

சத்தம் வந்த திசய நோக்கி ஷேக் ஹாண்ட்ஸ் கொடுக்கறதுக்காக அவன் ரெண்டு கையயும் நீட்டினான். நான் அவனோட கைய பிடிச்சுகிட்டு மறுபடியும் கேட்டேன்.

உன் பேரு என்ன..?

ராகுல்..

எத்தனாங் கிளாஸ்?

ரெண்டாங் கிளாஸ்..

நான் அவனோட வலது கைய மறுபடியும் ஆட்டோ மேல் வச்சிட்டு சொன்னேன்.

ஆட்டோ..

அவன் மெல்ல தடவிகிட்டே சொன்னான்.

ஆட்டோ.. ஆட்டோ..

அவனோட ஆட்டோவோட ரிப்ஃலெக்டர்ல பட்டு அவன் அதை மெதுவா சுத்திகிட்டே கேட்டான்..

இதென்ன..?

ரிப்ஃலெக்டர்..

ரிப்ஃலெக்டர்ன்னா என்ன..?

ரிப்ஃலெக்டர்ன்னா ராத்திரி நேரத்தில எதிர்ல வர்ற வண்டிக்கெல்லாம் நம்ம வண்டிய தெரிஞ்சுக்கறதுக்காக வச்சிருக்கிற ஒரு ஏற்பாடு. எதிர்ல வர்ற வெளிச்சத்த வாங்கி இது ரிப்ஃலெக்ட் செய்யும். அப்ப அவுங்களுக்கு நம்ம வண்டி வர்றது தெரியும்.

இப்படில்லாம் சொன்னவனுக்கு இதெல்லாம் புரியுமா..? நான் யோசிச்சிட்டு ஈசியா அவன் புரிஞ்சுக்கற விதத்துல சொன்னேன்.

அழகுக்காக வச்சுக்கறது.

அழகுன்னா என்ன..?

அவன் களங்கம் இல்லாமல் மெல்ல சிரிச்சுக்கிட்டே கேட்டான்.. நான் யோசிச்சேன்.. அழகுன்னா..?

அழகுன்னா..? என்னோட கண்ணில கண்ணீரு வந்துடுச்சு. ஏன்னு எனக்கு தெரியல. அவன்கிட்ட தோத்ததினாலயா..? இல்ல.. அவனுக்குப் புரிய வக்க முடியாததானாலவா..? எனக்கு தெரியல.. நான் அவன என்னோட சேர்த்துவச்சு கட்டிகிட்டேன். அவனோட தலையில் மெல்ல வருடிவிட்டுகிட்டே யோசிச்சேன்.. அழகுன்னா..? அவனுக்கு என்ன பதில் சொல்றது..? எனக்கு இதுவர பதில் தெரியல… நேத்து முழுக்கவும் யோசிச்சேன்.. இன்னமும் யோசிச்சுகிட்டுதான் இருக்கேன்..’.

அவன் சொல்லி முடித்தான்.

அழகுன்னா என்ன..? உங்களுக்கு தெரியுமா..?

– சிதம்பரம் இரவிச்சந்திரன் (ஜூன் 2016)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *