அய்யாசாமி – ருக்கு சாவுத் தீட்டு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 11, 2020
பார்வையிட்டோர்: 5,613 
 
 

காலாங்கார்த்தாலே எனக்கு கனவிலே ரயில் வந்தது, விடியற்காலையிலே நாய்கள் ஊளையிட்டது ருக்கு, அப்படி இருந்தால் என்ன சொல்லுவா ருக்கு?.

ம். ரயில் நின்றதா? ஓடியதா? என கேட்டாள் ருக்கு.

அது ஞாபகம் இல்லை என்றவர். நின்றால் என்ன? ஓடினால் என்ன? என கேட்டார்.

தீட்டு செய்தி வரும் என்பார் என் மாமியார் என்றாள் ருக்கு.

நம்மாத்திலே யாரு உடம்பிற்கு முடியாமல் இழுத்துண்டு இருக்கா? என கேட்ட ருக்குவிடம்

யாரு?என் மாமா தான், மூனு வருஷமா சீரியஸா இருக்கார்.டிபியோட என்றார் அய்யாசாமி.

மூனு வருஷமா சீரியஸா இருக்க, அவர் என்ன டிபி பேஷன்டா? இல்லை டிவி சீரியலா? என ருக்கு சொல்ல.

எங்காத்து மனுஷான்னா எப்பவும் உனக்கு இளக்காரம்தான்,

தெருவிலே இருந்த ஒரு கிழம் அபஸ்வரம் தாத்தா அவரும் போயாச்சு? வேற யார்? என யோசித்தார் அய்யாசாமி.

ஒரு வேளை கோடியாத்து பாட்டியாக இருக்குமோ, என்று அய்யாசாமி் சொன்னதும்,

அது அத்தனை சீக்கிரம் போயிடுமா? என்ற ருக்குவிடம்.

என்ன ருக்கு, அதுக்கு தொன்னூறைக் கடந்து இருக்கும்

அது ஆத்திற்கு வந்த மாட்டுப்பெண்ணை பண்ணிண சேட்டைக்கு அத்தனை சீக்கிரம் போயிடுமா? என்றாள்.

அப்போ அந்த பண்ணையராத்திலே ஒரு மாமா இருப்பாரே, அவரோ? உடம்பிற்கு முடியாமல் இருக்கார் என்று போஸ்ட் ஆபிஸில் பேசிண்டா,

உங்க ரயில் கனவை வச்சு யாரையெல்லாம் மேலே பார்ஸல் அனுப்ப பார்க்கிறேள்?

அதுவும், ரத்த சம்பந்தம் உள்ள பந்து, தாயதிக்காரளுக்குத்தன் இதைச் சொல்லுவா, நீங்க நினைக்கிறவா எல்லாருக்கும் அப்ளிகேபுள் ஆகாது.

எல்லோரும் ஒரு நாள் போகத்தான் வேண்டும், யார் முதலில் போகிறார்கள் என்பதுதான் வாழ்க்கையில் புதிர், என்ற ருக்கு,

போய் வடாத்தை மூனாவது நாள் காய்ச்சலுக்குப் போடுங்கோ, ஞாபகமாக காக்கா விரட்ட நம்ம கல்யாணத்திலே நீங்க போட்டுண்டு நின்னேளே ஜோக்கர் மாதிரி, அந்தக் கறுப்புக் கோட்டை எடுத்துப் போடுங்கோ,ஒரு காக்கையும் கிட்டே வராது, என சொல்லி மொட்டை மாடிக்கு அனுப்பினாள்.

நிலைபோன் ஒலிக்க, எடுத்த ருக்கு, அப்படியா? அச்சோ!! எப்போ? எனக் கேட்டு என பரிதாபப்பட்டாள்.

இந்த பிராமணன் கனவு கண்டதும் போதும், எதிர் பார்த்த மாதிரியே செய்தி வந்திடுத்தே!

ஐயோ பாவம், அந்த பத்மா, இனி என்ன பண்ணுவாளோ வருமானத்திற்கு? என கவலைப்பட்டவள்,

யன்னா! சீக்கிரம் வாங்கோ, நாம பத்மா வீட்டிற்கு போகனும்,

ஏண்டி என்னாச்சு? இப்போ, பத்மா வீட்டு வேலைக்கு வரலியா?

இல்லைன்னா,அவள் வளர்த்த பசு மாடு காலையிலே இறந்துடுத்தாம், இப்போதான் அழுதுண்டே சொன்னாள் பாவம்.

நீங்க பேங்க் போயி இருபதாயிரம் ரூபாய் எடுத்துண்டு வாங்கோ, அவளுக்கு கொடுக்கனும், அது அவளுக்கு தற்போதைக்கு கொஞ்சம் ஆறுதலா இருக்கும் என்று கிளம்பிப் போய் கொடுத்து விட்டு ஆறுதல் சொல்லித் திரும்பியவள் அய்யாசாமியையும் ஸ்நானம் பண்ணச் சொன்னாள்.

ஏன்? என கேட்டதற்கு,

இத்தனை நாள் நாம சாப்பிட்டது, அதோட பால்தான்னா, ரத்த சம்பந்தம் இருக்கே, நமக்கு தாய் மாதிரி இல்லையோ?! என்றாள் ருக்கு.

Print Friendly, PDF & Email
பா.அய்யாசாமி தந்தை பெயர்: கி.பாலசுப்ரமணியன். பிறந்த ஊர்: சீர்காழி. நான் 15/10/1969 ஆம் ஆண்டு சீர்காழி எனும் ஊரிலே பிறந்தவன் என்னுடைய இளங்கலை இயற்பியல் படிப்பினை பூம்புகார் பேரவைக் கல்லூரியிலே 1989 ஆம் ஆண்டு முடித்து , தற்போது முதுகலை தமிழ் படித்துக்கொண்டு இருக்கின்றேன். தில்லி, உத்தர் பிரதேஷ் ,சென்னை என பல இடங்களில் பணிபுரிந்து தற்போது மயிலாடுதுறையிலே வசித்துக் கொண்டு இருக்கின்றேன்.2015 ஆம் ஆண்டு முதல் என்னை ரோட்டரியில்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *