அம்மா சொன்ன “கதை”

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 12, 2013
பார்வையிட்டோர்: 7,223 
 

வழக்கம்போல உணவருந்தும் அறையில் இரவு உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். பிள்ளைகள் அனைவரும் அப்பாவுடன் உட்கார்ந்து சாப்பிட ஆரம்பிப்போம். அம்மா பரிமாறுவார்கள். ஏதாவது கதை பேசியவண்ணம் சாப்பாடு நடக்கும். சிலசமயம் பேச்சு எங்கு அராம்பித்தது எங்கு முடிகிறது என்று தெரியாத அளவிற்கு எங்கெங்கோ சென்று எங்கேயோ முடிந்திருக்கும். வழக்கமாக அப்பாவிற்கு விரைவில் சாப்பிட்டு முடித்துவிடும் பழக்கம் (அம்மா அதை விவரிப்பது, “சாப்பாட்ட அள்ளி வீசிட்டு போறாங்க”). கையில் கிடைக்கும் அந்த வாரம் வெளிவந்த வார இதழ்களில், குமுதமோ ஆனந்த விகடனோ ஏதோ ஒன்றை எடுத்துக்கொண்டு படுக்கை அறைக்குப் போய் விடுவார்கள்.

அங்கு சென்றவுடன் பத்திரிக்கையில் வந்த தலையங்கத்தைப் படித்துக்கொண்டு வானொலி கேட்பார்கள். யாராவது ஒருவர் தனனா…தனனா…தன… தன ..னானனா….ஆ…ஆ…னானா… என்று பத்து நிமிடத்திற்கு தனனா…தனனா…தன… மட்டுமே பாடிக்கொண்டிருப்பார். ஒருவழியாக அவர் முடித்ததும் வயலின்காரர் வந்து அவர் பாடிய தனனா…தனனா…தனவையே மீண்டும் வயலினில் வாசிப்பார். இப்படியே ஒரு பாட்டை அரைமணி நேரம் ஒருவருக்கொருவர் மாற்றி மாற்றிப் பாடியும் வாசித்தும் கொள்(ல்)வார்கள். எங்களுக்கு அறுவை தாங்காது.

அப்பா படுக்கை அறைக்குக் கிளம்பியதும் அம்மாவும் எங்களுடன் சேர்ந்து சாப்பிடுவார்கள். சாப்பாட்டு மேஜைக்கு அருகில் மற்றொரு சிறிய மேஜை இருக்கும். அதில் தோசைப்பொடி, சர்க்கரை, ஊறுகாய் போன்றவை இருக்கும். அதில் நாங்கள் ஒரு சிறிய ட்ரான்சிஸ்டரை வைத்து தேன்கிண்ணம் கேட்டவாறு பேசியபடியே இன்னமும் அரைமணி நேரம் தொடர்ந்து கொறித்துக் கொண்டிருப்போம். இந்த நேரங்கள் வாழ்க்கையில் மிகவும் இனிமையான, அருமையான நேரங்கள் என்பது அப்பொழுது எங்களுக்குத் தெரியாது. அம்மா ஏதாவது ஒரு கதை, வாழ்வில் நடந்த சம்பவங்கள் என்று சொல்லிக் கொண்டிருப்பார்கள். சமீபத்தில் தங்கையிடம் பேசிக்கொண்டிருந்தபொழுது தங்கை இதைப் பற்றி சொன்னது ..”அம்மா சொன்னெதெல்லாம் கதையில்லை…அவை வாழ்க்கைப் பாடங்கள்”.

நான் சொல்லும் காலம் சென்னையைத் தவிர தொலைக்காட்சி என்னும் நோய் தமிழகத்தில் மற்ற ஊர்களுக்குப் பரவி இன்னமும் மக்களை பாதித்திருக்காத நேரம். மற்ற ஊர்களில் தொலைக்காட்சிப் பெட்டி வாங்கியவர்களும் வீடியோ டெக் வாங்கி அதில் ஏதாவது ஒரு கேசட்டை வாடகைக்கு எடுத்து போட்டுப் பார்த்துக்கொண்டிருந்த காலம். பிள்ளைகள் யாருக்காவது முக்கிய தேர்வுகள் நடக்கும் ஆண்டு என்றால் படிப்பைக் காரணம் காட்டி இந்த தொல்லையே வேண்டாம் என்று தொலைக்காட்சிப் பெட்டி வாங்காமல் தவிர்த்துவிட்ட வீடுகளில் எங்கள் வீடும் ஒன்று. டேப் ரெகார்டரில் பாட்டு போட்டுக் கேட்பதைவிட வானொலியே வசதியானது என்று கருதி வானொலியே நடைமுறை வாழ்க்கையில் கோலோச்சிக் கொண்டிருந்தது.

அன்று தேன்கிண்ணத்தில் ஏதோ ஒரு சிறப்பு நிகழ்ச்சி. கேள்வி பதில் நேரம் போல ஒரு நிகழ்ச்சி நடந்தது. அறிவிப்பாளர் நேயர்களிடம் மூன்று பாடல்களை ஒலிபரப்பப் போவதாகவும், அந்த மூன்று பாடல்களுக்கும் உள்ள ஒற்றுமை என்ன என்பதை நேயர்கள் கண்டுபிடிக்க வேண்டும் என்றும் சொன்னார். விடை தெரியாவிட்டாலும் பரவாயில்லை, பாடல்களை விளம்பரங்களுக்கிடையே ஒலி பரப்பிய பின்பு “என்ன கண்டு பிடித்துவிட்டீர்களா நேயர்களே?” என்று ஒப்புக்கு ஒரு கேள்வியைக் கேட்டுவிட்டு பதிலையும் அவரே சொல்லி விடுவார். இப்பொழுது போல விடை சொல்ல நிலையத்தை தொலைபேசியில் அழைப்பது, குறுஞ்செய்தி அனுப்பி குலுக்கல் போட்டியில் கலந்து கொள்வது போன்ற கலாச்சாராம் இல்லாத நேரம்.

முதல் பாடலாக கர்ணன் படத்தில் இருந்து “மகாராஜன் உலகை ஆளலாம், இந்த மகாராணி அவனை ஆளுவாள்” பாடல் ஒளிபரப்பானது. நாங்களும் உணவு, அரட்டை இவைகளுக்கிடையில் பாடலைக் கேட்டுக் கொண்டிருந்தோம். இது போன்று பாடல்கள் ஒலிக்கும் பொழுது அம்மா அதனுடன் சம்பந்தப் பட்ட செய்தி ஏதாவது நினைவிற்கு வந்தால் எங்களுடன் பகிர்ந்து கொள்வார்கள். அப்பொழுதெல்லாம் பாடல்களை வானொலியில் கேட்க வேண்டும். இல்லை படத்தில் பார்த்திருக்க வேண்டும். இவை இரண்டும்தான் அப்பொழுது இருந்த நிலைமை. அதனால் படம் பார்க்காதவர்கள் பாடல் காட்சியைப் பற்றி நாமே ஒரு கற்பனையை மனதில் வளர்த்துக் கொள்ள வேண்டியிருக்கும். பெரும்பாலும் பழைய பாடல்களின் கதி இதுதான்.

இது போல நான் கற்பனை செய்து வைத்திருந்த சில பாடல்களை முதன் முதலில் திரையில் பார்த்த பின்பு அது என் கற்பனையில் இருந்து முற்றிலும் வேறுபட்டு ஏமாற்றம் தந்ததும் உண்டு. அது போல ஏமாற்றம் தந்த பாடல்களில் ஒன்று “கிழக்கு வெளுத்ததடி கீழ்வானம் சிவந்ததடி” என்ற பாடல். சில சமயம் ஒரு சில பாடல்களின் வரிகளைக் கேட்டபின்பு அம்மாவிடம் அது பற்றி மேலும் விசாரித்து தெரிந்து கொள்வதும் உண்டு. “வளர்ந்த கலை மறந்து விட்டாள்” போன்ற கதையைப் பின்னணியாக உள்ள பாடல்கள் இது போன்று ஆர்வத்தை வளர்த்து அம்மாவை நச்சரிக்க வைக்கும்.

கர்ணன் படப்பாடல் முடிந்து “பாலும் பழமும்” படத்தில் இருந்து “தென்றல் வரும் சேதி வரும் திருமணம் பேசும் தூது வரும்” என்ற பாடல் ஆரம்பமானது. உடனே அம்மாவிற்கு அதைப்பற்றி ஒரு செய்தி நினைவுக்கு வர எங்களுக்கு அந்தப் பாடல் காட்சியை விவரித்து சொல்ல ஆரம்பித்தார்கள். அந்தப் பாடல் காட்சியின் விளக்கம் இதுதான். கதாநாயகிக்கு அடுத்த நாள் திருமணம். முதல் நாள் இரவு பால்கனியில் விடிந்தால் வரப் போகும் திருமண நாளை நினைத்து மகிழ்ச்சியுடன் பாடிக் கொண்டிருக்கிறாள்.

உடனே என் கற்பனையும் விரிந்தது. கனவு போன்ற கருப்புவெள்ளை படக் காட்சி, இரவு நேரம், முழு நிலவு, மொட்டை மாடி, சிலு சிலு வென்று வீசும் காற்றில் கதாநாயகியின் புடவை பட பட எனத் துடிக்கிறது. தென்னங் கீற்று ஒன்றனைப் பிடித்துக் கொண்டு புன்னகையுடன் பாடுகிறாள் கதாநாயகி. பின்பு அங்கிருந்து ஓடி மலர்க்கொடி ஒன்று படர்ந்திருந்த தூணைப் பிடித்துக் கொண்டு பாடுகிறாள், பிறகு அங்கிருக்கும் ஒரு ஊஞ்சலில் ஆடியவாறு பாடுகிறாள்….

அம்மா கதையைத் தொடர்ந்தார்கள். கதாநாயகி பாடி முடித்ததும், இருட்டில் ஒரு உருவம், முகத்தைக் கைக்குட்டை போன்ற துணியால் மறைத்துக் கட்டிக்கொண்டு பால்கனியின் கைப்பிடி சுவர் ஏறிக் குதிக்கிறது. கத்தியுடன் கதாநாயகியின் அறைக்குள் நுழைகிறது. அந்த உருவத்தைப் பார்த்து கதாநாயகி வீரிட்டு அலறுகிறாள். இதை சொல்லி முடித்து விட்டு, சாப்பிட்டு முடித்திருந்த அம்மா மேஜையை விட்டு சாப்பிட்ட தட்டு, கரண்டி முதலியவற்றை சேகரித்துக் கொண்டு சமையலறைக்கு கிளம்பினார்கள். இப்படி உச்ச கட்டத்தில் அம்மா நடையைக் கட்டவும், நாங்கள் ஆர்வம் மேலிட அம்மாவிடம் “பிறகு என்ன ஆச்சும்மா?” என்றோம். அம்மா விட்டேத்தியாய், “அது யாருக்கு நினைவிருக்கு. சின்ன வயசுல பார்த்த படம். ரொம்ப நாள் ஆச்சா மறந்து போச்சு” அசட்டையாக சொல்லிவிட்டுப் போய்விட்டார்கள்.

நொந்து போன நாங்களும் வேறு வழி இல்லாததால், அரட்டையைத் தொடர்ந்தோம். அறிவிப்பாளர் இதற்குள் வேறு ஏதோ ஒரு பாடலை மூன்றாவதாக ஒலி பரப்பி முடித்துவிட்டு, என்ன நேயர்களே பாடல்களுக்கிடையே உள்ள ஒற்றுமையைக் கண்டு பிடிக்க முடிந்ததா? என்று கேட்டார். நாங்கள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டோம். எல்லா பாடலும் சுசீலா பாடிய பாடல்களாக இருக்குமோ? சிவாஜி நடித்த பட பாடல்களாக இருக்குமோ? யார் இசை அமைத்தது, யார் இயற்றியது? போன்ற கேள்விகள் மனதில் ஓடியது.

அறிவிப்பாளர் தொடர்ந்தார். ஒலிபரப்பிய இந்த மூன்று பாடல்களுமே படத்தில் இடம் பெறாத பாடல்கள் என்பது உங்கள் விடையாக இருந்தால் உங்கள் விடை சரியான விடை.

சமீபத்தில் அறிந்துகொண்ட மேலதிகத் தகவல்: பாலும் பழமும் படத்தின் கதாநாயகியாக நடித்த சரோஜாதேவி அவர்கள் அந்தப் படத்தின் மற்றொரு நாயகியான சவுகார் ஜானகிக்கு இந்தப் பாடல் காட்சி கொடுக்கப் பட்டதை கேள்விப்பட்டு எதிர்ப்பு தெரிவித்தால் திரையிடுவதற்கு முன் சவுகார் ஜானகி நடித்த இந்தப் பாடல் காட்சி படத்திலிருந்து நீக்கப் பட்டதாம்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *