கறுப்புப்பூனை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 5, 2023
பார்வையிட்டோர்: 2,685 
 

(2012ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

உலுக்கி எழுப்பினாற்போல், திடுக்கிட்டுப்போய் எழுந்த மேகநாதனுக்கு அந்த ஓலம், நாடி நரம்புகளையெல்லாம் ஊடுருவி, விதிர்விதிர்க்கச் செய்யும், வேதனையாக இருந்தது. அவனால் தாங்கவே முடியவில்லை . கடந்த ஒரு வாரமாகவே இப்படி அடிவயிற்றிலிருந்து பிளிறிக்கொண்டு எழும் இந்த அவலம், ஒரு பூனையின் ஓலம் என்றால் நம்பவா முடிகிறது? எல்லாம் சபிக்கப்பட்ட அந்த ஞாயிற்றுக்கிழமையில்தான் நடந்தது.

விடுப்பு நாளானதால் ஹாய்யாக கட்டிலில் படுத்துக்கொண்டு பத்திரிகை படித்துக்கொண்டிருந்தான் மேகநாதன். திடீரென்று மீனாட்சி அலறினாள்.

“என்னங்க, பூ – பூனை, கறுப்புப்பூனைங்க,” என்ற மீனாட்சியின் அலறலை முதலில் புரிந்து கொள்ள முடியவில்லை. சற்று நிதானத்துக்குப் பிறகு, ஓடி வந்து பார்த்தால், “அட, ஒரு பூனை. வெள்ளிப்பூண் போல் கண்கள் ஒளிர, குப்பென்ற கறுப்பு நிறத்தில் கறு கறுவென்று ஒரு பூனை, நட்ட நடு ஹாலில் நின்று கொண்டு,” “எங்கே வந்தாய்?” என்பதுபோல் முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தது.

மேகநாதனுக்கு ஆச்சரியம் இம்மட்டு அம்மட்டல்ல. திடீரென்று எங்கிருந்து முளைத்தது இந்தப் பூனை? “வாசல் கூட்டிட்டு உள்ளெ நுழைஞ்ச எம்பின்னாலேயே இதுவும் நுழைஞ்சிருக்கு போல,” என்று விளக்கம் சொல்லக்கூட பொறுமையில்லை மீனாட்சிக்கு. “என்னங்க, வேடிக்கை பாத்துக்கிட்டு நிக்கிறீங்க? கறுப்புப்பூனை பூனை குறுக்கே போனாலே அபசகுனம், அதிலயும் இது கறுப்புப்பூனை, நடுவீட்டுக்குள்ளே வந்து நிக்குது? அடிச்சு விரட்டாம் மேலயும் கீழயும் பாத்துக்கிட்டு நிக்கிறீங்களே?” என்று மீனாட்சி பதற, அப்பொழுதுதான் நிதர்சனம் உறைத்தது மேகநாதனுக்கு.

“ஹேய், சீ, போ, போ,” என்று ஓடி ஓடி விரட்ட, படு சமத்தாய் வெளியே ஓடிவிட்டது பூனை. பிறகுதான் தொடங்கியது தொல்லை. காலை இல்லை, மாலை இல்லை, நினைத்த நேரமெல்லாம், எப்பொழுது கதவு திறக்கப்படுகிறதோ, அப்பொழுதெல்லாம் காத்திருந்தாற்போல் குபீரென்று வீட்டுக்குள் பாய்ந்துவிடும் பூனை.

உடனே மீனாட்சி இதற்காகவே வேலை மெனக்கெட்டு கடைக்குப்போய் வாங்கி வைத்திருந்த மூங்கில் கம்பை எடுத்து விரட்டத்தொடங்கிவிடுவாள்.

மேகநாதனுக்கு எரிச்சல் எரிச்சலாய் வந்தது. இவ்வவளவு ஜனங்கள் வாழும் இந்த அடுக்குமாடி வீடுகளில், இது என்ன நம்மை மட்டும் குறி பார்த்து, கணக்காய் நம்முடைய வீட்டுக்குள் மட்டும் பாய்ந்து வருகிறது? மீனாட்சிக்கும் கவலையாகப்போய்விட்டது? ஏழு மாத கர்ப்பிணியாக வயிற்றில் குழந்தையைச் சுமந்துகொண்டு இப்படி பூனையை விரட்டியது தப்போ?

அந்த கரிசனத்தில் அன்று மியாவ், என்ற சத்தம் கேட்டதும், பால் கலக்கி ஒரு தட்டத்தில் ஊற்றிக் கொண்டு, கதவை முக்கால் பாகம் மூடிவிட்டு, வாசலுக்கு வெளியே கொண்டுபோய் கொடுத்தாள். பாலை திரும்பியும் பார்க்கவில்லை பூனை. கதவை எப்பொழுது முழுதாகத் திறப்பாள், என்று காத்திருந்தாற்போல், சடாரென்று உள்ளே பாய்ந்துவிட்டது. அந்த நேரம் பார்த்து வயிற்றில் குழந்தை உதைத்தது மீனாட்சிக்கு வலித்தது. பார்த்தால் வீட்டுக்குள் பூனை சர்வ சாதாரணமாக நடமாடிக் கொண்டிருந்தது. பாலையும் குடிக்காமல், இந்த கருமம் பிடித்த கறுப்புப்பூனைக்கு இங்கென்ன வேலை?” போ, போ, என்று விரட்டியே விட்டாள்.

மேகநாதன் ஒருமுறை இந்தோனீஷியாவுக்குப் போனபோது அங்குள்ள உணவகத்தில்தான் பரிமாற வந்த மீனாட்சியை சந்தித்தான். அங்கிருந்த ஒருவாரமும் அந்த உணவகத்திலேயே மேகநாதன் உணவுண்டான். பழக்கமும் ஒரு வாரம்தான். கஷ்ட ஜீவனத்தில் வாழும் ஒரு இந்திய வம்சாவளிப் பெண் மீனாட்சி சிங்கப்பூருக்கு வரக் கொடுத்து வைத்தாள்.

வேடிக்கை என்னவென்றால் சிங்கப்பூருக்கு வந்த பிறகுதான் மேகநாதன் சர்ச்சுக்குப்போகிறவன் என்பதே அவளுக்குத் தெரிய வந்தது.

மறுப்பே சொல்லாமல் மீனாட்சி மதம் மாறினாள். ஆனாலும் வீட்டில், ரெபேக்கா, என்றழைத்தால் அவள் பதில் பேச மாட்டாள். வேறுவழியின்றி “மீனு” என்ற ஏகாந்த விளியிலேயே அழைத்த பிறகுதான், அவள் திரும்பிப் பார்ப்பாள். குழந்தை உருவான நாளிலிருந்தே பல கவலைகள், மேகநாதன் வீட்டில் யாருக்குமே இவளைப் பிடிக்கவில்லை. போயும் போயும் சோற்றுக்கடையில் மங்கு கழுவறவளைப் பாத்து கூட்டீட்டு வந்திருக்கானே? கிண்ணென்ற உடம்பழகைக்கண்டு பிள்ளை மயங்கிட்டானே? கேவலம் ஒரு கிராம் பொன்னுக்குக்கூட வக்கில்லாக் குடும்பமா எனக்கு சம்பந்தி? என்று மேகநாதனின் தாய் எஸ்தருக்கு வெறுப்போ வெறுப்பு,

“வந்த ஏழாம் மாசமே வயிற்றிலும் ஏழுமாசமாம்,” என்று மேகநாதனின் அக்காமார்களுக்கும் கூட, மீனாட்சியைக்கண்டாலே இளக்காரம்தான். இந்த லெட்சணத்தில் இந்தோனீஷியாவிலிருந்து இங்கு வந்து பிரசவம் பார்க்குமளவுக்கு, மீனாட்சியின் குடும்பத்துக்கு வக்கில்லை என்பதற்காக வயிற்றுக்குழந்தை வளராமலா இருக்கும்?

நடுத்தர வயது கடந்த அனுபவமுள்ள ஒரு பணிப்பெண்ணை மேகநாதன் வீட்டு வேலைக்குத் தேடிக்கொண்டிருந்தான். ஏஜன்சியில் சொல்லிவைத்தும் ஒன்றும் ஒழுங்காக அமையவில்லை .

இந்த நேரத்தில் தான் கறுப்புப்பூனையின் அழிச்சாட்டியம் வேறு எருதுப்புண்ணாய் வலித்தது. மீனாட்சிக்கிருந்த உடல் உபாதையில் அடிக்கடி மருத்துவமனையில் தங்கவேண்டி வந்தது. இந்த முறையும் கால் வீக்கமும், ரத்தசோகைக்காகவும் , ட்ரிப்ஸ் ஏற்றப்பட்டு கிடந்த மனைவியைப் பார்த்து விட்டு, வீட்டுக்குள் நுழைந்த மேகநாதன் கவனிக்கவில்லை.

ஆனால் தாலி கட்டின மனைவியைப்போல், அவன் பின்னாலேயே நுழைந்து, நடுஹாலில் படுத்தாற்போல் உட்கார்ந்துகொண்டு, வெள்ளிப்பூண் போல் மின்னிய கண்களால் அவனை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தது பூனை. எதையுமே கவனிக்கும் நிலையிலில்லை மேகநாதன்.

மேகநாதன் சோகித்துப்போயிருந்தான். மருத்துவர் சொன்ன சேதியில், மனமெல்லாம் அவ்வளவு சூன்யமாக இருந்தது. நினைவெல்லாம் மீனு, மீனு, என்றே அரற்றிக்கொண்டிருந்தது. மீனாட்சி மிகவும் பலவீனமாக இருந்தாள். அதைவிட ரத்தப்பற்றாக்குறையும். சுகப்பிரசவம் சாத்தியம் தானா, என்பதே சந்தேகமாக இருந்தது.

மேகநாதன் வீட்டிலிருந்து யாருமே மீனுவைப் பார்க்க வரவில்லை. மனைவியைப்பார்க்க அவர்கள் வராதது கூட அல்ல ரணம். ஒரு போன் போட்டுக்கூட அவர்கள் விசாரிக்கவில்லை. அதுதான் அவனுக்குப் பெரும் வேதனையாக இருந்தது. சீதையை ராமன் கொண்டுபோனால் என்ன? ராவணன் கொண்டுபோனால் எனக்கென்ன? என்பது போல் அவர்களின் அலட்சியம், அவனுக்குள் ஆத்திரத்தையே வரவழைத்தது. தான் நேசித்த ஒரு பெண்ணை மணப்பதென்ன அவ்வளவு பெரிய குற்றமா? தேவை இல்லை, யாருமே தேவை இல்லை, என் மனைவியை நானே பார்த்துக்கொள்வேன் என்ற வீம்போடுதான் அன்றிரவு அவன் படுத்துக்கொண்டான்.

செவியில் நாராசமாய் ஏதோ முழங்க, சட்டென்று கண் விழிக்க முடியவில்லை . மீண்டும் வழக்கமான அந்த நாராசம் கேட்டும், உறக்கம் முழுசாகக் கலையவில்லை . அதற்குள் தூக்கம் மாபாரமாய்க் கண்ணை அழுத்த, காலையிலிருந்து அலைந்த அலைச்சலில், மேகநாதன் சட்டென்று தூங்கிப்போனான்.

மியாவ் என்று மீண்டும் அன்றைய சுப்ரபாதத்தில்தான் கண் விழித்தான். மேகநாதனால் அவன் கண்களையே நம்ப முடியவில்லை. கொட்டக்கொட்ட விழித்துக்கொண்டு கட்டிலின் கீழ் தரையில், அவன் கண்படும் எதிரில், கம்மென்று படுத்துக் கிடந்தது பூனை. அதற்குப் பக்கத்தில் ஏதோ சுருள் சுருளாய் கிடக்க, கிட்டப்போய் பார்த்தால் மூன்று குட்டிப்பூனைகள். சகலமும் தூக்கி வாரிப்போட்டது அவனுக்கு.

அட, பூனை பிரசவித்துக் கிடக்கிறதா? கடைசியில் வீட்டையே பிரசவ இடமாக நாறடித்துவிட்டதே? மீனாட்சி கூட வீட்டிலில்லை. இந்த நேரத்தில் நான் வீட்டை சுத்தம் செய்வேனா? இதற்கு பிரசவம் பார்ப்பேனா?. என்ன கருமாந்தரம் இது, கடைசியில் இது வீட்டுக்குள்ளேயே குடித்தனம் வேறு தொடங்கிட்டதே? பாய்ந்தெழுந்து கதவைத் திறந்ததுதான் தாமதம். இவன் கோபம் உணர்ந்தாற்போல், ஒரே பாய்ச்சலில் வெளியே ஓடிவிட்டது பூனை.

இந்தக் குட்டிப்பூனைகளை வைத்துக்கொண்டு என்ன செய்வதென்றே தெரியவில்லை மேகநாதனுக்கு வந்த கோபத்தில், குசினியில் கிடந்த அரிசிச் சாக்கில், பேப்பரால் பூனைக்குட்டிகளை அள்ளிப்போட்டுக்கொண்டு, நேரே போய் மின்தூக்கிக்குப் பக்கத்தில் வைத்துவிட்டு வந்துவிட்டான். தேய்த்த்த் தேய்த்து கைகளை கழுவிக்கொண்டு, பரக்கப்பரக்கக் குளித்துவிட்டு மருத்துவமனைக்குப் போனால், மீனாட்சி கட்டிலில் இல்லை. பரிசோதனைக்காகக் கொண்டுபோயிருந்தார்கள், அப்பொழுதுதான் மருத்துவர் வந்தார்

வயிற்றுக்குள் குழந்தையின் பொசிஷன் தலைகீழாக மாறிவிட்டதால், அறுவை சிகிச்சை செய்துதான் குழந்தையை எடுக்கமுடியும், அதனாலென்ன? பயப்படவேண்டாம், சிசேரியன் என்பது இப்பொழுதெல்லாம் ரொம்ப சர்வ சாதாரணம்?

மருத்துவர் சர்வ சாதாரணமாய் சொல்லிவிட்டுப்போய்விட்டார். அடி வயிற்றில் வெட்டுக்கிளிகள் பறந்தன மேகநாதனுக்கு. நார்மல் பிரசவத்துக்கே இவள் பலவீனமாக இருக்கிறாள். இதில் அறுவை சிகிச்சை என்றால் இவள் தாங்குவாளா? உதவிக்குக்கூட ஒரு நாதியில்லை. அறுவை சிகிச்சைக்குப்பிறகு, இவளை பொறுப்பாய் யார் பார்த்துக்கொள்வது? பல கவலைகளில் மேகநாதன் நிலைகுலைந்து போனான். “என்னங்க,” என்று, வெளிறிய மீனாட்சியின் முகத்தைப்ப்பார்த்து, ஒண்ணுமில்லேடா! என்று அவளை சகஜமான நிலைக்குக் கொண்டுவர மிகவும் பாடுபடவேண்டியிருந்தது. அன்று முழுவதும் மனைவியுடனேயே , மருத்துவமனையில் தான் கழித்தான்.

இரவும் மருத்துவமனைக்கு வெளியிலேயே சிகரெட்டைப் பிடித்துக்கொண்டு, படுத்துக் கிடந்தான். மறுநாள் இரவுதான் வீடு திரும்பினான். என்ன ஆச்சரியம். பூனையை எங்குமே காணவில்லை. வரும்போதே மின்தூக்கியின் அருகில் விட்டுவிட்டு வந்த பூனைக் குட்டிகளைத் தேடினான். அந்த சுவடே காணவில்லை.

நல்ல தூக்கத்திலிருந்த போது பிளிறிக்கொண்டு வந்த அந்த ஓலத்தில் சப்தநாடியும் நடுங்க திடுக்கிட்டு எழுந்த மேகநாதனால் நம்பமுடியவில்லை . அது பூனையின் ஓலமேதான். ஆனால் இப்படி ஒரு மரண ஓலத்தை அவன் தன் வாழ்நாளிலேயே கேட்டதில்லை. அப்படியென்றால் பூனை தன் குட்டிகளைப் பார்க்கவே இல்லையா?

அய்யோ, மின்தூக்கியின் அருகில் தானே போட்டுவிட்டு வந்தேன், பூனைக் குட்டிகள் என்ன ஆயிற்று? பதறிப்பதறி மின் தூக்கியின் சுற்று வட்டாரமெல்லாம் தேடினான். ஒருவேளை கூட்டுகிற பங்களாதேஷ் பையன் சாக்கோடு அள்ளி குப்பைத்தொட்டியில் போட்டுவிட்டானா?

நினைப்பே நெஞ்சைச்சுட, மேகநாதானுக்குக் கண்ணீரே வந்துவிட்டது, என்ன செய்வேன்?

பஞ்சமா பாதகத்தை செய்துவிட்டேனே? மீனட்சி இருக்கும் நிலையில் குட்டிகளைத் தாயிடமிருந்து பிரித்து, வீணாக ஒரு பூனையின் சாபத்துக்கு ஆளாகிவிட்டேனே, என்று நினைக்க, நினைக்க, தாங்கமாட்டாது அழுதுவிட்டான். வாய்விட்டு சொல்லக்கூட நாதியில்லையே? யோசிக்க யோசிக்க, அம்மாவின் ஞாபகமே வந்தது.

பெற்ற தாயிடம் பேச என்ன கௌரவம் வேண்டிக்கிடக்கிறது, பேசாமல் அம்மாவையே தேடிப்போனான். எஸ்தராலும் நம்பவே முடியவில்லை .

மேகநாதனால் கோர்வையாகப் பேசக்கூட முடியவில்லை. “அம்மா, அம்மா, நான் பாவிம்மா”, என்று அவன் அரற்ற, விஷயம் தெரிந்தபோது, எஸ்தருக்கு அது ஒன்றும் பெரிதாகப்படவில்லை. முறைத்துக் கொண்டுபோன மகன் வந்ததே பெரிய விஷயம், என்று தேற்றினாள். அன்று மகனை வீட்டுக்கு அனுப்பாமல் தன்னுடனேயே தங்க வைத்துக்கொண்டாள். மகனுடன் சென்று மறுநாள், மீனாட்சியைப் பார்த்து வந்தார். 2 நாட்களுக்குப்பிறகு சொந்த வீட்டுக்குத் திரும்பிய மேகநாதனை அன்றிரவும் நள்ளிரவுக்குமேல் அந்த ஓலம் திடுக்கிட்டு எழுப்பியது. வியர்த்து வியர்த்து, அன்றிரவைக் கழித்தான்.

இப்பொழுதெல்லாம் பூனையின் ஓலத்தைக் கேட்டுக்கேட்டு துக்கம் திகட்டியது. உச்சி சிலிர்த்து சிலிர்த்து, விறைப்புக் கண்டது. அன்று மதியம் மீனாட்சிக்கு அறுவை சிகிச்சை நடந்தது. மேகநாதன் குழந்தையைப் பார்க்கவே நடுங்கினான். அம்மா எஸ்தர்தான் மகிழ்ச்சியில் கூவினாள்.

“ஆண்குழந்தை, அப்படியே உன்னையே உரிச்சு வச்சிருக்குடா,” என்ற போதும் அவன் குழந்தையைக் கையில் ஏந்திக்கொள்ளவில்லை.

“கண், காது, கை, கால் விரல்கள், எல்லாம் சரியா இருக்காம்மா,” என்று நடுங்கிக்கொண்டெ கேட்க, எஸ்தருக்கு கோபமே வந்து விட்டது.

“என்னடா, உளறறே!” என்று திட்டியபோது கூட, பித்துப் பிடித்தாற்போலிருந்த நிலையிலிருந்து அவனால் மீளவே முடியவில்லை.

நல்லவேளை, இந்த உளறலைக் கேட்க, மீனாட்சிக்கு நினைவு திரும்பவில்லை. அம்மாவை மருத்துவமனையில் விட்டுவிட்டு, மீனாட்சியின் துணிகளை எடுக்க வீட்டுக்கு வந்தபோது, மின் தூக்கியிலிருந்து வெளியே வந்தவன், அப்படியே ஆச்சரியத்தில் நின்றுவிட்டான்.

எந்தப் பூனைக்குட்டிகள் செத்துப்போயிருக்குமோ என்று தினம் தினம் செத்துப்பிழைத்துக்கொண்டிருந்தானோ, சாட்சாத் அதே பூனைக்குட்டிகளை, அங்கிள் லிம்மின் வீட்டு வாசலில் கண்டபோது அவன் கண்களையே அவனால் நம்ப முடியவில்லை.

மின்தூக்கியின் எதிரில் குடியிருந்த அங்கிள் லிம்மின் மனைவி, அந்த மூன்று பூனைக்குட்டிகளுக்கும் தட்டத்தில் ஏதோ சூப் போன்ற உணவைக் கொடுத்துக்கொண்டிருந்தாள். ஆவலோடு பூனைக்குட்டிகள் நக்கி நக்கி சாப்பிடுவதை, லிம்மின் மனைவியோடு மேகநாதனும் மெய்ம்மறந்து பார்த்தான். அப்படியானால் பூனைக்குட்டிகள் சாகவில்லை. எந்த கூட்டுகிற பையனும் குப்பைத்தொட்டியில் கொண்டுபோய் போடவில்லை.

“ஆமாம், ஒரு கறுப்புப்பூனை இங்கெல்லாம் சுற்றிக்கொண்டிருந்ததே?” “அட, அதுதான் இதுகளோட அம்மா, அதுவும் அடிக்கடி ஜன்னல் வழியா குதிச்சு வந்துட்டுப்போவுதே,”

“அப்படியா?”

இப்படி ஒரு ஆசுவாசம் வாழ்நாளில் மேகநாதனுக்கு ஏற்பட்டதில்லை. ஆக இனி ஒருபோதும் பூனையின் சல்லியம் அவனுக்கு இருக்காது என்ற நினைப்பே, பெரிய நிம்மதியைத் தந்தது. அன்றிரவு நிம்மதியாகத் தூங்கப்போகிறோமே என்ற மிதப்பில் சீக்கிரமே வீட்டுக்கு வந்துவிட்டான். குளித்து சாப்பிட்டுப் படுத்த உடனேயே தூங்கியும் போனான். அடித்து உலுக்கி எழுப்பினாற்போல் தூக்கம் கலைந்தபோது வாராது வந்த மாமணியாய் அதே நாராசம், அதே பூனையின் ஓலம்.

மேகநாதனுக்கு ஒரு கணம்தான் கனவு ஏதாவது காண்கிறோமா, என்ற சம்சயம் கூட ஏற்பட்டது. ஆனால் கனவல்ல, நிஜம் என்பது போல், மீண்டும் அதே ஓலம். பூனையும் குட்டிகளும்தான் ஒன்றுகூடியாச்சே? பிறகும் ஏனிந்த ஓலம்?

அதற்கு மேலும் தாங்கமாட்டாது கட்டிலிலிருந்து எழுந்தவன் விடுவிடுவென்று வெளியே வந்து பார்க்க, இவனைக் கண்டதும் குடுகுடுவென்று பூனை ஓடியது.

அந்த நள்ளிரவிலும் கறுகறுவென்ற அந்த கறுப்புப் பூனையின் வெள்ளிப்பூண் கண்களின் மதாளிப்பு அவனைத் திகைக்க வைத்தது. இன்றைக்கு என்ன வந்தாலும் உனக்காச்சு, எனக்காச்சு? எனும் வீரத்தோடு, இவனும் விடாப்பிடியாக பூனையின் பின்னாலேயே போக, எதிரே வந்த மிஸ்டர் லிம் என்னவென்று கேட்க, மேகநாதனால் சொல்லக்கூட முடியவில்லை. ஆனால் அவராகவே சொல்கிறார். “என்ன? பூனையின் கத்தலால் தூங்கமுடியவில்லையா? அட, அது என்ன செய்யும்? இணை தேடி அலையும் போது கத்தாமல் வேறு என்ன செய்யும்?

அதுகூட பாவம், இரவில் தானே அலைகிறது? மனிதனுக்கே துணை வேண்டியிருக்கும்போது, பூனையும் ஒரு ஜீவிதானே? மேகநாதன் ஸ்தம்பித்துப்போனான். அட, கடைசியில் இதுதான் விஷயமா? இது தெரியாமல் எப்படியெல்லாம் தவித்துப்போனோம்!.

அடுத்தகணமே சிரிப்பும் வந்துவிட்டது. சிரித்துக்கொண்டே வீடு திரும்பியவனுக்கு நினைக்கவே வெட்கமாக இருந்தது. மறுநாள் மருத்துவமனைக்குள் நுழைந்தபோது, மாமியாரும் மருமகளும் அந்நியோன்யமாகப் பேசிக்கொண்டிருக்க, முதன் முதலாக குழந்தையை ஆசையோடு கையில் ஏந்திக் கொண்டான்.

இப்பொழுதும் பூனையின் ஓலம் இரவில் கேட்கிறதுதான். ஆனால் அதற்குப் போட்டியாக குழந்தையின் வீறிடலும் இருக்க, குழந்தைக்குப்பால் கொடுத்துக்கொண்டிருக்கும் மீனாட்சிக்குத்தான் மேகநாதனைப் பார்க்கவே வெட்கமாக இருந்தது.

– சூரிய கிரஹணத்தெரு, முதற் பதிப்பு: 2012, பழனியப்பா பிரதர்ஸ், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *